இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (214)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிப்பதுதான் அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின் முக்கிய கடமையென்பது அனைவர்க்கும் பொதுவான கருத்து என்றே எண்ணுகிறேன். அதேசமயம் மக்களின் நாட்டுக்கான அரசியல் அபிலாஷைகள் ஒரு பொதுவான, பரஸ்பர புரிந்துணர்வுடன் அனைத்து மக்களுடனான நல்லிணக்கணத்தை விட்டு விலகி பிரிவு மனப்பான்மையின் அடிப்படையில் செல்ல விழையும்போது உண்மையான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் எத்தகைய வடிவை எடுக்கவேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றது.
சர்வதேச நாடுகளுக்கான பயணங்கள் மிகவும் இலகுவாக்கப்பட்டதால் உலகின் எல்லைகள் சுருக்கப்பட்டுவிட்டதைப் போன்ற ஒரு நிலையே இன்று காணப்படுகிறது. இதனால் பொருளாதாரத்திலும், வாழ்க்கை தரத்திலும் வசதியுள்ள நாடுகளாகக் கருதப்படும் மேலைத்தேச நாடுகளை நோக்கி படித்துப் பட்டம் பெற்ற பலர் நகர்வது சகஜமான ஒரு நிகழ்வாகி விட்டது. அது மட்டுமின்றி இத்தகைய பட்டம் பெற்றவர்களின் பற்றாக்குறையினால் இவர்களைத் தேடி தமது நாடுகளில் பணிக்கு அமர்த்துவதில் பல முன்னணி மேலைத்தேச நாடுகள் ஈடுபட்டு வந்தன.
இது ஒருபுறமிக்க,
அரசியல் நிலையற்ற பல நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்குநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் தீவிரமடைந்ததால் அந்நாட்டிலிருந்து அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. அதேசமயம் அகதிகள் எனும் போர்வையால் பயங்கரவாதச் செயல்களை முடுக்கிவிட சில பயங்கரவாத அமைப்புகள் தமது உறுப்பினர்களை ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவச் செய்தது மட்டுமின்றி பல பயங்கரவாதச் செயல்களை முடுக்கி விட்டுமுள்ளன, விளைவாக பல மேலைத்தேசநாடுகளின் மக்களின் மனதில் பலகாலமாக நிலவிவந்த வெளிநாட்டவரை நோக்கிய பரந்துபட்ட ஆதரவான ஒரு நிலமை மாறி துவேஷ மனப்பான்மை கூடிக்கொண்டு செல்லும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பல குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட தேசியவாதக் கட்சிகளின் தலைவர்கள் இப்பிரிவினைத் துவேஷத்தை கூட்டும் வகையில் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்லும் நிலையை நாம் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கெதிரான சர்வஜன வாக்கெடுப்பு முடிவு , பிரான்ஸில் வெளிநாட்டவருக்கெதிரான தேசியவாதக் கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பு, ஜெர்மனியிலும் அதேபோல வெளிநாட்டவருக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் தேசியவாதக் கட்சியின் வளர்ச்சி, ஆஸ்ட்ரியா, இத்தாலி போன்ற நாடுகளில் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் இனத்துவேஷ பிரச்சாரத்தின் வேகமான வளர்ச்சி என்பன இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக அமைகின்றன.
இத்தகைய ஒரு நிலையில் தான் அடுத்தமாதம் எட்டாம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறப் போகிறது. அந்தத் தேர்தல் கூட இதுவரை அமெரிக்கத் தேர்தலில் கண்டிருக்க முடியாத மாற்றங்களை உள்ளடக்கி இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. 2008ம் ஆண்டு ஒபாமா அவர்கள் அமெரிக்க நாட்டின் முதல் கறுப்பு இன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது அமெரிக்க ஜனநாயகத்தில் எனக்கு ஏற்பட்ட அபரிதமான நம்பிக்கை எட்டு வருடங்களில் ஆட்டம் கண்டிருக்கிறது. ஒரு கறுப்பு ஜனாதிபதியைத் தெரிவு செய்யுமளவிற்கு மிகவும் பரந்த புரிந்துணர்வையும் தெளிவான அரசியல் அணுகுமுறையையும் எடுத்துக் காட்டிய அதே அமெரிக்க ஜனநாயகம் இன்று குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அவர்களைத் தெரிவு செய்யுமளவிற்கு பிரிவினை அரசியலுக்குள் தம்மைப் பிணைத்துக் கொண்டதன் காரணம் தான் என்ன ?
இதற்கு நாம் பல காரணங்களை ஆதாரமாக்கலாம் .
எட்டு வருடங்களில் ஒபாமா அவர்களால் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவைகள் நிறைவேற்றப்படாமை.
ஓபாமாவின் மீதான எதிர்பார்ப்புகள் கொடுத்த ஏமாற்றம்.
பொதுவாக அரசியல்வாதிகள் என்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பு.
மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையிழப்பு.
தமது அதிருப்தியை வெளிக்காட்ட வேறுவழியில்லை எனும் விரக்தி.
இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்குமிடையிலான ஒரேயொரு ஒற்றுமை இதுவரையிலான அமெரிக்க தேர்தல் சரித்திரத்தில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களில் கருத்துக் கணிப்பில் அதிகுறைந்தவர்கள் இவர்கள் இருவருமே என்பதுவே. இனத்துவேஷம் என்று கணிக்கப்படக்கூடிய பல விடயங்களை தனது கொள்கைகளாகப் பிரகடனம் செய்து அதற்கு அவரது கட்சி உறுப்பினர்களிடையே அமோக ஆதரவு பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள். அனைத்தையும் விட மிக முக்கியமான அவரது குறைபாடு பெண்களின் மீது அவர் கொண்டிருக்கும் தாழ்வான அபிப்பிராயமே ! ஆணாதிக்கத்தின் உச்சத்தில் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தக் கூடிய விதத்தில் அவரது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. சுமார் 11 வருடங்களின் முன்னால் ஒரு பேட்டியின் போது தன்னுடைய செல்வாக்கினால் தாம் விரும்பும் எந்தப் பெண்ணையும் தம் வசமாக்கலாம் எனும் கருத்தில் அவர் கூறியது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கருத்தைக் கொண்டுள்ள ஒருவர் உலகின் மிகப்பெரிய செல்வாக்குள்ள ஒரு நாட்டிற்குத் தலைவராகும் தகைமை உடையவரா என்பதுவே அமெரிக்க வாக்காளர்களின் முன் உள்ள கேள்வி. அவரால் தகாத வகையில் தரக்குறைவாக தீண்டப்பட்டதாக பல பெண்களால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அதேசமயம் திருமதி ஹிலரி கிளிண்டன் அவர்கள் மீது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் மின்னஞ்சல்களை பாதுகாப்பற்ற வழிகளில் அனுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளிண்டனின் மனைவி எனும் வகையில் ஜனாதிபதிப் பதவி ஏதோ தமது ஏகபோக குடும்பச் சொத்து எனும் வகையில் அவர் நடந்து கொள்கிறார் என்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.. இருப்பினும் திருமதி ஹிலரி கிளிண்டன் தான் இருவரில் தகுதி வாய்ந்தவர் என்பது பெரும்பான்மையோரின் எண்ணம் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. கருத்துக் கணிப்புகளின்படி திருமதி ஹிலரி கிளிண்டன் அவர்களே ஜனாதிபதியாகும் வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி எனும் சரித்திரப் பிரசித்தியை திருமதி ஹிலரி கிளிண்டன் தட்டிக் கொள்ளப் போகிறாரா ? இல்லை அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி இதுவரை அமெரிக்கா கண்டிராத வகையில் இதுவரை அரசியலிலேயே ஈடுபடாத வெளிநபரான திரு டொனால்ட் ட்ரம்ப் சரித்திரப் புத்தகத்தில் இடம் பெறப் போகிறாரா எனபதற்கு காலம்தான் விடை பகரும்.
எது எப்படி இருப்பினும் இது அமெரிக்க அரசியலில் ஏன் உலக அரசியலிலே ஒரு சுவையான (சுமையான?) காலகட்டம்தான்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்