தேசிய தமிழ் காவலர்!
பவள சங்கரி
சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் – இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது.
நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு பொற்றாமரை குழுவினர் மற்றும் நண்பர்களின் பாராட்டு விழாவும் ஒரு குடும்ப விழா போன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகள் ‘எழுத்துச் சித்தர்’ திருமிகு. பாலகுமாரன், திருமிகு.சிவசங்கரி, திருமிகு. திருப்பூர் கிருஷ்ணன், திருமிகு.கவிக்கோ ஞானச்செல்வன், திருமிகு ஹெச்.ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சகோதரிகள் குமாரி அஞ்சனி – அஸ்வினி ஆகியோரின் இனிமையான வீணை இசையுடன் இனிதே ஆரம்பித்தது இந்த விழா. ‘வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்’ என்று கலைவாணியை காட்சியில் நிறுத்தி, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடர்ந்து வாழ்த்தி, ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என மிக அழகானதொரு இசை வேள்வியை நிகழ்த்தி அனைவரையும் இசையில் மெய்யுருகச் செய்தனர். வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் பொற்றாமரை அமைப்பு இம்முறை இக்கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்துள்ளார்கள்.
மாதமொரு இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில், திரு ம.வெ. பசுபதி அவர்கள் அருமையாக ஆசாரக்கோவை பற்றியும், கவிதை உறவு ஆசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் ‘சொந்தமாய் ஒரு சொர்க்கம்’ என்ற தலைப்பில் உறையாடியதைத் தொடர்ந்து தலைவர் தலைமையுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.
தலைவர் தமது தலைமையுரையில் குறிப்பிட்ட சில சுவையான செய்திகள்:
தாம் மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அந்த மக்களுக்காக பாடுபடப்போகிறாரா அல்லது பிறந்த மண்ணுக்காகப் பாடுபடுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய பிரதேசம் என் புக்ககம் என்றாலும் நான் பிறந்த மண்ணான என் தாய் வீடாம் தமிழகத்தை எந்நாளும் மறவேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.
வாயால் நாம் உண்ணுவது அனைத்தும் வயிறைச் சென்று அடைந்து அங்கிருந்தே உடல் முழுவதிற்கும் சக்தி பெறுகிறது. வாய் நினைத்ததாம், தானின்றி வயிறுக்கு உணவேதும் கிடைக்காது என்ற மிதப்பில் தன்னை இறுக்கி மூடிக்கொண்டதாம். வயிறும் எந்த வேலையுமின்றி அமைதியாய் இருந்ததாம். இறுதியில் உடல் முழுவதும் வலுவிழந்து போனதாம். அந்த வகையில் கால் பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ள எனக்கு வாய் என்றும் துணை நின்றால் நம் பணிகள் சிறக்கும் என்பது உறுதி என்றார்.
பிராந்திய கட்சித் தலைவர்கள் மட்டுமே தமிழை வளர்க்க முடியும் என்ற எண்ணங்களை உடைத்தெறிந்து தேசியத் தலைவர்களும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்தும் வகையில் தாய் மொழியான தமிழ் மீது மட்டற்ற பற்று கொண்டு அதற்காகவே தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை அர்ப்பணித்துக்கொண்டுள்ள மாபெரும் தேசியத் தலைவர், தமிழ்வேள் இல.கணேசன் அவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர் என்பதில் ஐயமில்லை. மதுரையில் பூத்த பொற்றாமரையை சென்னையில் மலரச்செய்த மாபெரும் தலைவர் தமிழ்வேள் இல.கணேசன் அவர்கள். அன்று முச்சங்கம் கொண்டு தமிழ் வளர்த்தனர் பாண்டியர். இன்று பொற்றாமரைகொண்டு தமிழ் வளர்க்கும் தமிழ்வேள் இல.கணேசன் ஐயா அவர்களுக்கு தற்போது கிடைத்திருப்பது ஒரு சிறு அங்கீகாரமே. தமிழ்த்தாயின் அருட்பார்வையோடு அவர் மென்மேலும் பல்வேறு சிறப்புகள் அடைய வல்லமை வாழ்த்துகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான உயர்திரு இல. கணேசன் அவர்கள் பசுமைசூழ் தஞ்சை வளநாட்டில் பிப்ரவரி 17, 1945 ஆம் ஆண்டில் பிறந்தவர். ‘ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின்’ பிரச்சாரகராகவும், கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றிப்பின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்பட்டவர்.
தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த பதவிக்கு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான திரு இல.கணேசன் அவர்களை கட்சித் தலைமை தேர்வு செய்ததையடுத்து இல.கணேசன் கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று மாநில சட்டமன்ற செயலாளரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அவருடைய செயல்பாடு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பேருதவியாக அமையும் என்பதோடு பா.ஜ.க.வின் நிரந்தரமான வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. “காவிரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’ என்று தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்தது தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையளிக்கக்கூடிய செய்தியாகும்.
திரு இல.கணேசன் அவர்கள் பதவியேற்றவுடன், ‘ தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நலன், மொழிக்காக குரல் கொடுக்க எனது வாழ்வில் முன்னுரிமை அளித்து வருகிறேன். காவிரிப் பிரச்சனையில் தமிழகக் கட்சிகளுக்கு உள்ள அக்கறை, உணர்வை பாஜகவும் பிரதிபலித்து வருகிறது. காவிரிக்காக தமிழக அரசு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாஜக துணை நிற்கிறது. மாநிலங்களவையில் பேச வாய்ப்புக் கிடைக்குமானால் காவிரி விவகாரத்தை நிச்சயமாக எழுப்புவேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய வனத் துறை அமைச்சராக இருந்த போது பிரகாஷ் ஜாவடேகர் முன்னெடுத்த முயற்சிகளை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து மேற்கொள்வேன். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று உறுதியளித்துள்ளது வரவேற்பிற்குரியது. இதைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் இதை உறுதி செய்து, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க தாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு, இந்த விவகாரத்தை அரசியலாக்கும் வகையிலோ, ஆதாயம் தேடும் வகையிலோ பாஜக எக்காலத்திலும் ஈடுபடாது என்றும் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவது தொடர்பான சட்ட விவகாரங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த வகையில் தமிழ் நாட்டின் எதிர்காலம் பட்டொளி வீசும் என்ற நம்பிக்கையும் உடன் வருவதும் நிதர்சனம்.
வாழ்க பாரதம்!
மகிழ்ச்சி! நல்ல பதிவு.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அருமையான பதிவு நன்றி வணக்கம்