தமிழ்த்தேனீ

மாலைகள் மலைகளாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. சிவா ஒவ்வொரு மாலையாக வாங்கி  வைத்துவிட்டு அடுத்தவர் மாலை போட அனுமதிக்கிறான். அவர்  பெயர் என்னவோ சின்னசாமி ஆனால் வியாபார  உலகிலே அவர்தான்  பெரியசாமி.  பெரிய  மனிதர்  ,அவர்  நின்றால் வியாபார  உலகமே நிற்கும்   நடந்தால்தான்   உலகமே நடக்கும். சமீபத்தில் அவர் வியாபாரத்தில் இந்தியாவிலேயே முதல்  இடத்தைப் பிடித்து  இந்தியாவின் முதல் பணக்காரராக  அறிவிக்கப்பட்டார் .   அப்படிப்பட்ட   சின்னசாமி  லேசாக தலையைத் திரும்பிப் பார்த்தார்.

அவர் சற்றே தலையைத் திருப்பினால் என்ன பொருள், வேகமாகத் திரும்பினால் என்ன பொருள்  நிமிர்ந்து பார்த்தால் என்ன செய்யவேண்டும், சற்றே  கண்களை மூடித்திறந்தால் அதன் விளைவு எப்படி இருக்க வேண்டும் அந்த  விளைவுக்கு  என்ன செய்ய வேண்டும்   என்றெல்லாம்  ஒரு அகராதியே  எழுதி அதை  தினமும் படித்து  மனப்பாடம் செய்து வைத்து  அதன்படியே  இம்மியும் பிசகாது நடக்கும் அந்தரங்க காரியதரிசி சிவா  .

சிவா  சின்னசாமியிடம்  காரியதரிசியாக வந்து சேர்ந்து  20 வருடங்கள்  ஓடிவிட்டன. நல்ல  நாணயமான நம்பிக்கையான அவருடைய அந்தரங்கம் மொத்தம் அறிந்த ஒரே மனுஷன்.   அப்படிப்பட்ட   சிவாவை அழைத்து “டேய் குளிருதுடா அந்த ஏசீயைக் கொஞ்சம் குறை”  என்றார்  சின்ன சாமி .

  அவனும்  இவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான் .அவன் பார்வையில் ஒரு கனமான அழுத்தம்.. என்ன  ஆச்சு?  ஓ வீடு முழுவதும்  சென்ட்ரலைஸ்ட்  ஏசீ   அதுனாலே  யோசிக்கறானோ!

“டேய் சிவா  என்னடா ஆச்சு என்ன யோசிக்கறே”  என்றார்  சின்ன சாமி.

சிவாவின் கண்களிலிருந்து  கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“ என்னடா  ஆச்சு  சொல்லிட்டு அழு  என்ன ஆச்சுன்னே சொல்லாமே அழுதா  என்ன  அர்த்தம் “ என்றார்  எரிச்சலாக.

“ உன்னோட  பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லேன்னு சொன்னியே எப்பிடி இருக்கா” என்றார்.

சிவா உதட்டைப் பிதுக்கி மீண்டும் அழ ஆரம்பித்தான்.

“ஏண்டா  அவளுக்கு உடம்பு சரியில்லேன்னா  டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போக வேண்டியதுதானே  இங்கே  நின்னு அழுதுகிட்டிருந்தா  சரியாயிடுமா  சரி  போ போயி அவளைக் கவனி  அம்மாகிட்ட  சொல்லி பணம் வேணுன்ம்னா  வாங்கிக்கோ “ என்றார்

ஆனால் அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான்

பக்கத்தில் இருந்த  மனைவி  பாருவிடம் “ இவனுக்கு  கொஞ்சம் பணம் குடுத்து  அனுப்பிட்டு  நீயாவது அந்த  ஏசீயைக் கொஞ்சம் குறையேன்  எனக்கு குளிருது  “ என்றார்

“பாரூ  உன்னைத்தான் சொல்றேன்  என்றார் . அட  நான் சொல்றதையே காதிலே வாங்காம   என்னையே பாத்துகிட்டு இருக்கே  . உன்னோட  பேரு பார்வதி அதைச் சுருக்கி  பாரூன்னு செல்லமா கூப்பிட  ஆரம்பிச்சதிலேருந்து இப்பிடித்தான்  பாருன்னு கூப்பிட்டா  பாத்துகிட்டே இருப்பே”  என்றார்  பெருமையுடன் .

என்ன இது யாருமே  காதிலே வாங்க மாட்டேங்கறாங்க  அவருக்கு கோவம் கோவமாக வந்தது.  அவரோட   மதிப்பு என்னா  , அவர் போகாத   வெளிநாடு இல்லே    எங்கே போனாலும் ரத்தினக் கம்பள வரவேற்பு, என்னா மரியாதை, அவனவன்  வாயை பொத்திகிட்டு  மரியாதையா  தூர  நிப்பான், அப்படிப்பட்ட  அவர் சொல்லியும் கேக்காம  இருக்காங்களே .

அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் ஒரு முறை  பார்த்தார் . அட எல்லோருமே  ஏதோ மௌனமா இருக்காங்களே . ஆமாம் என்ன  நடந்து போச்சு.  அது சரி  அவருக்கு மட்டும் சொல்லவே இல்லையே  ஒரு வேளை மரியாதையினாலேயா  அல்லது  பயத்தினாலேயா  ,

அது என்னான்னே  தெரியலையே , அவருக்கு  எப்போதுமே மறைத்து வைப்பது பிடிக்காது  எல்லாமே வெளிப்படையா பேசணும் என்பார்

சரி  நாமே எழுந்து போய் ஏசீயைக் குறைச்சிட்டு  அப்புறம் பாக்கலாம் என்ன ஆச்சுன்னு  என்று  எழுந்தார்! எழுந்திருக்க  முடியவில்லை  கை கால்களை அசைக்க  முடியவில்லை

இதென்ன  மூச்சு திணறுகிறது  என்ன இது அவருடைய  மூக்கிலே  ஏதோ அடைத்துக் கொண்டிருக்கிறது.   தும்மல் வருகிறது. ஆனால் தும்ம முடியவில்லை, இருமல் வருகிறது , ஆனால் இரும முடியவில்லை , உள்ளே இருக்கும் சளி வெளியே போனால்தானே   இருமல் நிற்கும்.

“ஏசீயைக் குறைங்கடா  எத்தனை முறை சொல்றது  “ என்று கத்தினார் , யாருக்கும் காதிலே விழவில்லை

அவர்  குளிர்சாதனக் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறார்.  அவரைச் சுற்றி  எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள் .

“ எப்போ பாடியை  எடுப்பாங்க”  என்று யாரோ கேட்து  அவர் காதில் விழுகிறது

மாலைகள் மலைகளாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன

சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.