-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. காயத்ரி அகல்யாவின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இந்த வண்ணப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு எம் நன்றி!

dancing-girls

மனிதர்களை மென்மையானவர்களாகவும் மேன்மையானவர்களாகவும் மாற்றவல்லவை நுண்கலைகள். அதிலும், உலகாளும் இறைவனே உவந்தாடும் இந்த ஆடற்கலையோ கலைகளின் உச்சமாய்க் கருதிக் கொண்டாடப்படுவது!

இதமாய்ப் பதமெடுத்து, நயமாய்க் கைகளில் அபிநயம்பிடித்து ஆடும் இந்த ஆரணங்குகளைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ?

என் வருணனையை இத்தோடு முடித்து, இப்படம் பற்றித் தம்கவிதையில் கருத்துப்பகிர நம் கவிஞர்களை அழைக்கிறேன்!

*****

”கண்ணுக்கு விருந்தாகும் ஆடலும், கருத்துக்கு விருந்தாகும் பாடலும் நம்மிரு விழிகளாகும். ஆட்டத்தில் நாட்டம்வைத்து நாட்டை இழந்தோர்கூட நானிலத்தில் உண்டு!” என்று கவின்கலைகளின் பெருமை பேசுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

….ஆடலும் பாடலும் இரு கண்கள்
ஒன்றையொன்று சார்ந்த கலைகள்
பாடல் செவிக்கு விருந்து
நாட்டியமோ கண்ணுக்கு விருந்து
நாட்டியம் என்றாலே பரத நாட்டியமே
தொன்றுதொட்டு வந்த கலை அம்சமே
நாட்டியத்தில் பல வகை உண்டு
மாநிலத்திற்கு,மாநிலம் வேறுபடுவதுண்டு
நாட்டியதிலே கண்கள் பேசும்,கையும்,காலும்,அபிநயம் பிடிக்கும்
காட்சியின் தன்மைகள் பாவத்துடன் ரசிகர்கள்முன் தோற்றமளிக்கும்
[…]
சப்த நடன மங்கையர்களின் நாட்டியம் மனதினை பரவசமூட்டும்!
நாட்டியத்திற்காக தன் நாட்டையே பரிசாக அளித்தவருண்டு
நாட்டியத்திற்கு அடிமைபட்டு,தவவலிமை, செல்வத்தையும் இழந்தவருண்டு
நாட்டியக்கலையே அவனியில் தெய்வாம்சம் கொண்டது எனக்கூறுவர்
பாடலுடன், இசையும் அதற்கேற்ற நாட்டியத்தையும் சிறந்ததாக கருதுவர்!

*****

கண்ணனின் லீலைகளைக் கண்ணுக்கு நிறைவாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் இந்தக் காரிகையரின் நிருத்தியம், பார்ப்போரைப் பரவசப்படுத்துவது நிச்சயம் என்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

பாடலின் பொருளை
ஆடலில் காட்டும்
அழகு கலையே நாட்டியம்
கைகள் முத்திரை காட்டும்
தாளங்களை பாதங்கள் காட்டும்
பாவத்தை முகத்திலும் கண்களிலும்
வெளிக்கொணரும் நிருத்தியம்
கைவழி முத்திரையையும்
கண்வழி மனமும்
முகம் வழி பாவமும்
உடல் அசைவுகளால்
மங்கையவள் முன்னின்று ஆட
மற்றவர்கள் பின் பற்றி ஆட
கண்ணனின் லீலைகளை
ஓரங்க நாடகமாகவே நடத்தி
தொன்மைக்கலைகளை
தொய்வில்லாமல் நிகழ்த்துகிறார்
 

*****

தாண்டவக்கோனாகிய ஆண்டவன் ஆடிய ஆட்டத்தை அரிவையரும் எல்லை தாண்டாது ஆடினால் உடலும் உள்ளமும் நலம்பெறும்; வாழ்வும் வளம்பெறும் என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம்.

ஆண்டவன் ஆடிய ஆட்டமிது
ஆடுவர் இவரிதைக் கூட்டமாக,
வேண்டுமிக் கலையெலாம் உளம்சிறக்க
வாழ்வில் என்றும் வளம்பெருக,
தூண்டுத லாகும் உடல்நலத்தில்
துணிவும் வந்திடும் வாழ்வினிலே,
தாண்டிட வேண்டாம் எல்லையதை
தருமே கலையிது நலவாழ்வே…!
 

*****

”பதுமையாய் அரங்கில் ஆடிக் காண்போர் இதயங்களை வெல்லும் புதுமைப் பெண்ணே! அகந்தைகொண்டு உன்னை வீழ்த்தவரும் ஆணவக்கரங்களையும் வெல்லும் ஆற்றல் உன் வளைக்கரங்களுக்கு வேண்டும்” என்று நல்லுரை நவில்கின்றார் முனைவர் மா. பத்ம பிரியா.

புதுமைப் பெண்ணே!
சூதாட்டுக் களத்தில் பந்தயப் பொருளானாலும்
சூதாடிகளை வாதாடியவள்
மாயமான் சதி வலையில் வீழ்ந்து போனாலும்
நெருப்பைச் சுட்டெரித்த நெருப்புக் கனலி
இந்திரப் பார்வையில் இல்லற வாழ்வை இழந்து
கௌதமர் கட்டளையில் கற்சிலையானாலும்
இராம பாதங்களுக்குப் புனிதமானவள்
ஒற்றைக் காற்சிலம்பால் கொண்டவனை இழந்தாலும்
ஒய்யார சபையிலே வாதாடி வாகை சூடியவள்
ஊா்த்தவத் தாண்டவத்தில் விட்டுக் கொடுத்தாலும்
அா்த்தநாரீஸ்வரின் பாகமானவள்
வளையவரும் பெண்ணே!
வீழ்ந்து விடாதே கண்ணே!
வாழ்க்கை சுழற்சி வட்டத்தில்
உயிர்ச்சுழற்சியோ உன்னிடத்தில்
ஆணவக்கரங்களை
வளைக்கரங்களால் வீழ்த்தும் வித்தை
வஞ்சியே உன் சதுராட்டத்தில்!
 

***** 

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

அனைத்தும் ஆட்டத்துள்
அடங்குவது உலகாமோ . . .?
ஆடுமது ஆட்டமெல்லாம்
மாதவளின் ஆட்டம்
கூடுமது கூட்டமது
உடனாடும் கூட்டம்
மாதவளின் ஆட்டமதில்
மாதவனின் தோற்றம்
கைமொழியோ கனிமொழியோ
கவிதைநிகர் கலைமொழியோ
உடனாடும் குழுமாதர்
உடல்மொழி உரைப்பர்
தடம் மாறா ஆடலுடன்
பாடலுமே இசைக்கப்
பன்னுதமிழ் இன்னிசையால்
பாரோரே இரசிக்க
மங்கையவள் முன்னாட
பின்னாடும் மதிமுகங்கள்
கையசைவில் கவிபாடும்
குழலசைவே துதிபாடும்
ஆட்டமதின் நாயகியாய்
ஆடுமிவள் தெளிவாக
ஆடும் பரம்பொருளாம்
ஆதிசிவன் தன்ஆட்டம்
ஆதிகேசவனின் ஒயிலாட்டம்
ஆதிசக்தியவள் நெறியாட்டம்
அனைத்தையும் படைத்து
ஆடலுடன் காட்டியதால்
ஆதிபிரம்மத்தின் வழியாமோ?
ஆதிமாயை தொழிலாமோ?
அனைத்தும் ஆட்டத்துள்
அடங்குவது உலகாமோ?
அடங்காத மனமதனை
அடக்குவதும் அறிவாமோ?
அறியாத நிலையறிந்து
அதுவாக ஆவதுவே
அத்வைதம் உரைத்ததுவே
ஆடலில் உரைத்தாலே
அனைவர்க்கும் போதுமன்றோ!

*****

ஆனந்தக்கூத்தனின் ஆட்டத்தை,
”ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே” என்று ஆனந்தமாய் வருணிக்கின்றார் திருமூலர். 

நாவுக்கரசரோ,
”குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீரும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே” 
என்று நெகிழ்ந்து பேசுகின்றார்.
 

ஆடவல்லானின் ஆட்டம் நின்றால் இவ்வுலகே ஆட்டம் கண்டுவிடும் என்கிறது சைவசித்தாந்தம்!

மேடையில் இம்மங்கையர் ஆடுவது அந்த ஆடவல்லானின் ஆனந்த நடனத்தையே; அவன் இடப்பாகமிருக்கும் அம்பிகையின் அருள்நடனத்தையே. அவர்களும் இவர்களும் வேறுவேறல்லர் என்று அத்வைதம் பேசும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. நக்கினம் சிவத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.