குறளின் கதிர்களாய்…(142)
–செண்பக ஜெகதீசன்
இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். (திருக்குறள்: 1040 – உழவு)
புதுக் கவிதையில்…
எதுவுமில்லை என்றுசொல்லி
எதுவும் செய்யாமல்
சோம்பியிருப்பவனைப் பார்த்து
விளைநிலம் என்னும் நல்லவள்,
சிரிப்பாள்-
தரிசாய் இருந்து…!
குறும்பாவில்…
இல்லை எதுவுமென்னும் சோம்பேறியைப் பார்த்து,
நல்லவளாம் விளைநிலம் ஏளனமாய்
நகைப்பாள் தரிசாய்க் கிடந்து…!
மரபுக் கவிதையில்…
நிலத்தில் வேலை செய்யாமல்
–நித்தம் சோம்பலில் இருந்துவிட்டு,
நலமே வாழ்வில் இல்லையெனும்
–நல்லது தெரியா சோம்பேறி
நிலையைப் பார்த்து நகைத்திடுவாள்
–நிலமெனும் நல்ல பெண்ணவளும்,
மலடாய் ஒன்றும் விளையாத
–மண்ணாம் தரிசு முகத்தாலே…!
லிமரைக்கூ…
நிலத்திலிறங்கி செய்வதில்லை வேலை,
இல்லையெனுமிச் சோம்பேறியைப் பார்த்து நகைத்தே
காட்டுவாள் நிலமகள் தரிசுமுகமாம் பாலை…!
கிராமிய பாணியில்…
பாடுபடு பாடுபடு
நெலத்தில எறங்கிப் பாடுபடு,
சும்மாயிருந்து ஒறங்காத
சோம்பப்பட்டு அழியாத…
சோம்பேறியா இருந்துப்புட்டு
இல்லயிண்ணு அழுதாலே,
அவனப்பாத்து நல்லவளாம்
மண்ணுமாதா சிரிப்பாளே
மனம்போலச் சிரிப்பாளே…
அதால,
பாடுபடு பாடுபடு
நெலத்தில எறங்கிப் பாடுபடு,
சும்மாயிருந்து ஒறங்காத
சோம்பப்பட்டு அழியாத…!
