நலம் .. நலமறிய ஆவல் – (27)
நிர்மலா ராகவன்
அநாவசிய பயம்
சமீபத்தில் நவராத்திரி விழா ஒன்,றில் என்னிடம், `உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்ற கோரிக்கை விடுத்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு தயக்கத்துடன், “எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறது!” என்று கூறிய லேகா நாற்பது வயதுகூட நிரம்பாதவள்.
“என்ன பயம்?” என்று கேட்டேன். அன்று அவளுடைய பத்து வயது மகள் நாட்டியம் ஆடுவதாக இருந்தது.
“அவளுக்கு ஒப்பனை செய்வதில் ஏதாவது கோளாறு ஆகிவிடுமோ என்றுதான்!” என்றாள்.
அவளுடைய முன்கதை தெரிந்திருந்ததால், `இதற்கெல்லாம் ஒரு பயமா!’ என்று சிரிக்கத் தோன்றவில்லை.
வெளிநாட்டில் இருந்த ஒருவருக்கு மலேசியாவிலிருந்த லேகாவை மணமுடித்திருந்தனர் அவள் பெற்றோர். தட்டிக் கேட்க யாருமில்லாததாலோ, என்னவோ, அவளை வதைத்தார் கணவர். அவர் அகால மரணம் எய்தியதும், மாமியார் பலவாறாக வதைக்க ஆரம்பித்தாள். அவளை உயிருடன் கொளுத்த முயன்றாளாம். எப்படியோ தப்பித்து, மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு வந்து அடைக்கலம் புகுந்தாள்.
ஆனால் அங்கேயும் நிம்மதி கிடைக்கவில்லை. `கல்யாணமான பெண், கணவன் இருக்கிறானோ, இல்லையோ, அவன் வீட்டில்தான் நிரந்தரமாக இருக்க வேண்டும்,’ என்ற பத்தாம்பசலிக் கொள்கை கொண்டவர்கள் அவளுடைய பெற்றோர். `சுயநலம் பிடித்தவள்! உன் தங்கையின் நிலையை யோசித்துப் பார்த்தாயா?’ என்று ஓயாது பழித்தாள் தாய்.
சமீபத்தில் லேகாவின் தங்கைக்குக் கல்யாணம் நடந்தது. அதில் பிறருடன் கலந்துகொள்ள அவளுக்கு அனுமதி இல்லையென்று பலவாறாக இழித்துப் பேசினார்கள். அழுவதைத் தவிர லேகாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
என் சிறுவயதில், விதவையான பாடகிகளை கல்யாணக் கச்சேரிகளுக்கு அழைக்கத் தயங்குவார்கள் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். விதவைப்பெண்ணைப் பார்த்தால், மணப்பெண்ணின் மனம், `நாமும் அதுபோல் ஆகிவிடுவோமோ!’ என்று கவலைப்படுமாம். ஏன், லேகாவின் தங்கைக்கு தன் அக்காள் விதவை என்ற உண்மை முதல்நாள் தெரியாதா?
லேகா வருந்துவதைப் பார்த்து, அவள் மகளுக்கு ஆத்திரம். அப்பெண்ணை நாட்டியம் ஆடும்படி கேட்டபோது, `முதலில் எங்கம்மாவை மரியாதையாக நடத்துங்கள்!’ என்று திட்டவட்டமாகக் கூறினாளாம். லேகா பெருமிதத்துடன் தெரிவித்தாள்.
சொந்தக் குடும்பத்திலேயே மதிப்பும் மரியாதையும் கிடைக்காத ஒருத்தி வீண் குழப்பத்துக்கும் பயத்துக்கும் ஆளாகுவதில் என்ன ஆச்சரியம்? அந்தப் பயத்தை தன்னை நல்லபடியாக நடத்தாத தாயுடன் எப்படிப் பகிர்ந்துகொள்ள முடியும்?
“பாதி சமயம், நம் பயம் வீண்தான்,” என்று அவளுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தேன். “ஒப்பனை சரியாக இல்லாவிட்டால் என்ன குடி முழுகிவிடப் போகிறது! நடன ஆசிரியை சரி செய்து விட்டுப்போகிறாள்!” என்றுவிட்டு, “ஆனால், உன் பயம் அதுவல்ல. நீ அனுபவித்த துயரங்களும் துன்பங்களும் உன்னை இன்னும் ஆட்டுவிக்கின்றன,” என்று நான் சொல்லிக்கொண்டே போனபோது, அவள் வருத்தத்துடன் தலையசைத்தாள்.
“பரீட்சைக்குப் போகுமுன் ஒரு மாணவி பயப்படுவதுபோல்தான் இது. நன்றாகப் படித்திருப்பாள். இருந்தும், நாம் படித்ததெல்லாம் கேள்வித்தாளில் வருமோ, அல்லது படித்ததை மறந்துவிடுவோமோ என்ற வேண்டாத பயமெல்லாம் வரும். கடைசியில் பார்த்தால், நன்றாகவே எழுதி, நல்லபடியாக தேர்ச்சியும் பெற்றிருப்பாள். அவள் பயந்ததெல்லாம் வீண். அநாவசியமாக பயப்படுவதால், நம் சக்திதான் விரயமாகி, உடல்நிலை கெடுவதுதான் நடக்கும்!”
ஒருவர் குழப்பத்துடன் இருக்கும்போது, சம்பந்தமில்லாத வேறு ஒருவரின் நிலையைச் சொல்லும்போது சிறிது ஆறுதல் அடைகிறார்கள், நாம் மட்டும் தனியாக இல்லை என்ற நிதரிசனம் புரிந்து.
லேகாவின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. “நீங்கள் பரீட்சையைப்பற்றிச் சொன்னது ரொம்ப சரி, ஆன்ட்டி,” என்று சிரித்தாள்.
ஏதாவது செய்ய ஆரம்பிக்குமுன்னரே, `நம் முயற்சியில் தோல்வி அடைந்துவிடுவோமோ!’ என்று அஞ்சுபவர்களால் எதையும் சாதிக்க முடியாது.
புதிதாக எதையாவது செய்ய ஆரம்பிக்கும்போது அச்சம் ஏற்படுவது சகஜம். ஆனால், அதையும் மீறி, அந்தச் செயலைச் செய்தால் நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ஒரு காரியத்தில் வெற்றி பெற்றவர்கள் அடுக்கடுக்காக வெற்றி பெறுவது இந்த மனப்போக்கினால்தான். இவர்களுக்கு தோல்வியும் அடுத்து என்ன செய்யக்கூடாது என்ற பாடத்தைப் புகட்டும். தோல்வியால் மனம் தளர்வது கிடையாது. அதில் அவமானம் இருப்பதாகவும் இவர்கள் கருதுவதில்லை.
கதை: என்னுடன் வேலை பார்த்த மேரியை அவள் தாய் பொத்திப் பொத்தி வளர்த்தாளாம். கணவரையும், இன்னொரு மகளையும் போர்க்காலத்தில் பறிகொடுத்திருந்த அத்தாய் செய்தது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அதன் எதிர்விளைவாக, மேரிக்கு தன்னம்பிக்கை குன்றிவிட்டது. ஏதாவது தப்பு செய்துவிடுவோமோ என்று பயந்துகொண்டே இருந்ததில், மிக மிக நிதானமாகத்தான் எதையும் செய்வாள்.
`எப்போது மேரி டீச்சர் பாடம் நடத்தினாலும், எங்களுக்குத் தூக்கம் தூக்கமாக வருகிறதே, என்?’ என்று சில மாணவிகள் என்னிடம் கேட்டபோது, என்னால் அவர்களுக்குப் பதிலளிக்க முடியவில்லை.
கதை: ஒரு முறை, ஆசிரியர் தினத்திற்காக நான் எழுதித் தயாரித்த நாடகத்தில் நடிக்க மேரியை அழைத்தேன்.
`சர்ச்சில் நான்தான் பியானோ வாசிப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பேதிதான்!’ என்றாள்,பரிதாபமாக. `எனக்கு மேடை ஏறுவது என்றால் கொள்ளைப்பயம். வயிற்றுப்போக்கு வந்துவிடும்!’ என்று தாழ்மையுடன் மறுத்தாள்.
என்னைப் போன்ற சில `துணிந்தகட்டை’களுடன் நாடகத்தை ஒப்பேற்றினேன் – உங்களுக்கு மாணவிகள் செய்யும் எதனால் கோபம் வருகிறதோ, அந்த மாணவியாக மாறி நடியுங்கள். மனம் லேசாகிவிடும்!’ என்று ஆசை காட்டி.
ஒரு மாணவி வகுப்பில் காலைப் பரத்திக்கொண்டு உட்கார்ந்திருக்க, அவளைக் கண்டித்தபோது, `நான் ஷார்ட்ஸ் போட்டிருக்கிறேன். பாருங்கள்,’ என்று குட்டைப்பாவாடையைத் தூக்கிக் காட்டியதோடு நில்லாமல், ஒரு சுற்று வேறு சுற்றினாளாம். வேறொரு ஆசிரியை அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தை விவரிக்க, அப்பாத்திரம் நாடகத்துக்கு நல்ல நகைச்சுவையைக் கொடுக்கும் என்று தீர்மானித்தேன்.
`நீங்களும், உங்கள் யோசனையும்! இந்தமாதிரி பாத்திரத்தில் நடிக்க யார் முன்வருவார்கள்!’ என்று சக ஆசிரியை ஒருத்தி கேலி செய்ய, நான் அவளையே உற்றுப் பார்த்தேன்.
`நீங்களா!’ என்று பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.
நாடகம் முடிந்ததும், `நான் ஒரு ஒரு வருடத்தில் இவ்வளவு சிரித்ததில்லை,’ என்று ஓர் ஆசிரியை பாராட்டினாள். (அது பெண்கள் பள்ளிக்கூடம்).
இதை எதற்கு விவரிக்கிறேன் என்றால், `நாம் செய்வது கேலிக்கூத்தாக ஆகிவிடுமோ?’ என்று பயந்திருந்தால், அப்படி ஒரு பாத்திரத்தை நான் ஏற்றிருக்க முடியாது. பிறர் சிரித்தால், அது என்னைப் பார்த்தல்ல என்று புரிந்திருந்தேன்.
`நம்மைப்போன்ற ஒரு மாணவி அப்படிச் செய்தபோது, நமக்கு ஏன் அதிர்ச்சி ஏற்படவில்லை?’ என்று அவர்களை யோசிக்க வைத்தது அந்த நாடகம்.
`மதிப்புக்குரிய ஆசிரியை இப்படியெல்லாம் நடிக்கலாமா?’ என்று யாரும் முகம் சுளிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தாலும், அந்த ஒருவருக்காக நான் மனம் தளர்ந்திருக்க மாட்டேன்.
பிறர் நம்மைப் பாராட்டுவார்களா, பழிப்பார்களா என்று சந்தேகப்பட்டபடி ஒரு காரியத்தில் ஈடுபட்டால், அரைமனதாகத்தான் இருக்கும் நமது பங்களிப்பு. ஏனோ வெற்றி கிடைக்கவில்லையே என்று அப்புறம் ஏங்குவது வீண்.
தொடருவோம்