Year: 2016

  • கனவு காணும் உலகம்!

    -கே.எஸ்.சுதாகர்

    பன்நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்துவரும் எமது மக்கள்—மூதாதையர்கள்—ஆவணங்களைக் பாதுகாத்து வைப்பதிலும், பதிவு செய்வதிலும் தவறிவிட்டார்கள். யாழ் நூலகம் எரிந்து போனதும், போர் காரணமாகப் பல ஆவணங்கள் அழிந்து போனமையும் துர்ப்பாக்கியமாகும்.

    pic1அவுஸ்திரேலியா கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்குப் பல இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்லவேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு அவுஸ்திரேலியாவில் மீளக் கொடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர் ஹெவின் ரட் 2008ஆம் ஆண்டு, ஆதிகுடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

    இந்தக் கட்டுரை மெல்பேர்ணில், டண்டினோங் pic2மலைச்சாரலில் இருக்கும் ஆதிவாசிகள் பற்றிய சிற்பங்கள் ஓவியங்களைப் பற்றிச் சொல்கின்றது. ஆனால் இந்தப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆதிவாசி அல்லர். வில்லியம் பில் றிக்கெற்ஸ் (William Bill Ricketts) எனப்படும் வெள்ளையினத்தவர் ஆவார்.

    வில்லியம் பில் றிக்கெற்ஸ்…

    மெல்பேர்ணில் சனத்தொகை மிகவும் குறைவாக இருந்த காலப்பகுதியில், தங்கவேட்டை காரணமாகப் பலர் புலம்பெயர்ந்து வரத் தொடங்கியிருந்தார்கள்.

    pic3இவரது தாத்தா வில்லியம் றிக்கெற்ஸ் 1857ஆம் ஆண்டளவில் தனது மனைவி மேரி ஆன் சகிதம் பிரித்தானியாவில் இருந்து மூன்று நான்கு மாதக் கடல் பிரயாணத்தின் பின்னர் மெல்பேர்ண் வந்து சேர்ந்தார். இவர்களுக்கு 12 பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அல்பிரட் என்பவர் சுசான் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசிப் பிள்ளையாக பில் 1898ஆம் ஆண்டு பிறந்தார். இவர்கள் றிச்மண்ட்  என்னும் பகுதியில் குடியிருந்தார்கள்.

    பில் தனது ஆரம்பக்கல்வியில் பெரிதும் நாட்டம் கொள்ளவில்லை. பாடசாலையை விடுவது என்று தீர்மானித்ததும் தமது உறவினரின் நகை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயிலுனராகச் சேர்ந்தார்.  அப்போது அவருக்கு வயது பதினான்கு. இசையில் ஆர்வம் கொண்ட இவர் வயலின் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

    வில்லியம் பில் றிக்கெற்ஸ், 1935ஆம் ஆண்டளவில்pic4 மவுன்ற் டண்டினோங்  பகுதியில் நாலரை ஏக்கர் நிலப்பரப்பை வாங்கினார். அது முதற்கொண்டு அங்கேயே வசிக்கலானார். இயற்கை எழில் கொஞ்சும் சரிவுப்பாங்கான அந்தப்பகுதியின் பாதை மருங்கிலும் குகைகளிலும் களிமண்ணினால் ஆன உருவங்களைச் செய்து வைத்தார்.

    ஆதிவாசிகளின் நம்பிக்கை வாழ்க்கை முறைகளினால் ஈர்க்கப்பட்ட மிகச்சில வெள்ளை இனத்தவர்களில் இவரும் ஒருவர். விலங்கு தாவரம் மனிதன் இயற்கை – இந்தப்பின்னணியில் இவரது படைப்புகளின் தொனி அமைந்திருக்கும். இவரது கற்பனையில் உருவாகும் படைப்புகளிற்குப் பூர்வீகக்குடிகளின் சின்னங்களைக் குறியீடாகப் பாவித்துள்ளார். இவரது காப்பகத்தின் முக்கியமான படைப்புகள் ஆதிவாசிகளின் உருவங்களாகும். அவை ஆதிவாசிகளினதும், அவர்களுக்கும் பூமிக்குமிடையேயான பரிசுத்தமான தொடர்புகள் பற்றியனவுமாகும்.

    காடு இவருடைய விருப்பத்திற்குரியது. அதுபோல பச்சை இவருக்குப் பிடித்த நிறம். இவருடைய பெரும்பாலான ஆடைகள் பச்சை நிறத்தையே கொண்டிருந்தன. அதேபோல இவரது படுக்கை ஜன்னல் விரிப்புகள் எல்லாமே பச்சை நிறத்தைக்  கொண்டிருந்தன.

    உயிரினங்கள்மீது இவர் வைத்திருக்கும் மதிப்பு அளப்பரியது.

    இவர் வசித்த பகுதிகளில் நுளம்பு, எலித் தொல்லைகள் அதிகம். இவர் நுளம்புகளை விரட்டுவதற்கு ஒருபோதும் நுளம்புத்திரி பாவித்தது கிடையாது. அவற்றைக் கொல்லக்கூடாது என்பதில் கவனமெடுப்பார். எலிகளைப் பிடித்து வேறு காட்டுப் பகுதிகளில் கொண்டுபோய் விட்டுவிடுவார்.

    இவர் 60 வருடங்களுக்கும் மேலாகத் தனது படைப்புருவாக்கங்களைச் செய்து வந்தபோதிலும், தன்னை ஒரு ஓவியனாகவோ சிற்பியாகவோ முத்திரை குத்துவதை விரும்பவில்லை. இவர் தனது படைப்புகள் தன்னூடாக வருகின்றனவேயொழிய தன்னுடயவை அல்ல என்கின்றார்.

    இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    இவரது படைப்புகளில் ‘Dromana’—Seawinds Garden, Arthurs Seat, Victoria— மற்றும் “GunBrute’—William Ricketts Sanctuary, Mount Dandenong, Victoria குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

    1949 – 1960 இடைப்பட்ட காலப்பகுதியில் அடிக்கடி மத்திய அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வாழும் Pitjantijatjara, Arrente ஆதி இனமக்களுடன் வாழ்ந்தார். அவர்களின் பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகளினால் பெரிதும் கவரப்பட்டார். தன்னை அந்த இனமக்களுக்காகத் தத்துக் கொடுத்தார். இவரது பெரும்பாலான படைப்புகள் மத்திய அவுஸ்திரேலியா பகுதியில் உள்ள Alice Springs பகுதியில் உள்ள pitchi Ritchi பூங்காவில் உள்ளன.

    1960களில் அவர் அங்கு இல்லாத காலப்பகுதியில் அவரது படைப்புகள் அழிக்கப்பட்டும் களவாளப்பட்டும் போயின. இதனால் அவற்றை அரசு பொறுப்பேற்று, பாதுகாப்புக் கருதி மேலும் நிலப்பகுதியை வழங்கியது. தற்போது மொத்தம் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காப்பகம் இருக்கின்றது, வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துபோகும் இடமாக உள்ளது. காட்டிற்குள் அமைந்திருந்த சரணாலயத்தில், விக்டோரியா அரசினால் இவருக்கெனக் கட்டிக் கொடுக்கப்பட ஒரு அறை கொண்ட வீட்டில் 1962 முதல் பில் வசிக்கலானார். இவரின் அந்த அறை அவரின் படுக்கை, குசினி, ஸ்ரூடியோ, விருந்தினர் அறை எனப் பல வடிவங்கள் எடுத்தன.

    1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதுச்சேரி (இந்தியா) சென்று, ஸ்ரீ அரவிந்தர் ஆச்சிரமத்தில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார்.

    இவரை நான் பார்ப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை. அவுஸ்திரேலியாவிற்கு நான் வருவதற்கு முன்பதாக 1993இல் அவர் இறந்து போனார். இறக்கும் வரை மவுன்ற் டண்டினோங் சரணாலயத்தில் ஆதிவாசிகள் பற்றிய செயற்திட்டங்களை முன்னெடுத்தார். இவரை ஒரு தடவை, மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணி அவரது சரணாலயத்தில் சந்தித்ததாக என்னிடம் சொல்லியிருந்தார்.

    ***

    References:

    Whitefella Dreaming, The authorized biography of WILLIAM RICKETTS, by Peter Brady, 1994.

     

     

     

    Share
  • வரலாறுகளின் வேர் – 2

    அண்ணாமலை சுகுமாரன்

    ans-1

    மனித இனம் இப்பூவுலகில் தோன்றி பல இலட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன என மானிடவியலார்கள் கூறிவருகின்றனர். தமிழர்களைப் பற்றி நமது இலக்கியவாதிகள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றனர் இதை வெறும் கற்பனைக்கூற்று என்றே பலரும் எண்ணிவந்தனர். இதற்கு வலு சேர்த்தவர்கள் ஐரோப்பியர்களே என்பதுதான் உண்மை . தமிழ் வரலாறு ஆய்வுகளில் இடம்பெறும் தமிழர் மானிடவியல் துறையின் முன்னோடியாக விளங்கியவர் ஐரோப்பியர்களே ஆவர். 1910 ஆம் ஆண்டிற்கு முன்புவரை ஐரோப்பியர்கள் இந்தியாவில் எங்குபார்த்தாலும் கேட்பாரற்று கிடைத்த பழம் கலைப்பொருள்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். ஆரம்பத்தில் இந்த ஆய்வு, பொழுது போக்காகவே அமைந்தது. இந்தியாவிலோ பாழடைந்த பழமைப் பொருள்களை வீட்டில் வைத்துக்கொள்வது சாபம் என்று எண்ணி அத்தகைய பொருள்களில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். எனவே நமது வரலாற்றை விவரிக்கும் சான்றுகள் அப்போதும் ஏன் இப்போதும் உதாசீனம் செய்யப்பட்டு வந்தது, வருகிறது .

    மனிதன் தோன்றிய காலம் முதலாக அவர்கள் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவர்களது ஆரம்பக் காலத்தில் முதன்முதலாக தங்களது உணவைத்தேடி விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அவர்களால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவர்கள் அவற்றை எவ்வாறு தயாரித்தார்கள் , எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதுவே மனித குலத்தின் ஆரம்ப நாகரீக வளர்ச்சியாகக் கருதப்பட்டது .

    உலகின் மானுடவியல் ஆய்வில் நியாண்டதால் போன்ற மனித இனங்கள் கிடைத்த ஆதாரங்களினால் அப்போது வெகுவாக பேசப்பட்டு வந்தது . இத்தகைய நிலையில் இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் அதுவும் சென்னைக்கருகில் பல்லாவரத்தில் கிடைத்த ஒரு கல் ஆயுதம் இந்திய சரித்திரத்தையே புரட்டிப்போட்டது .

    ராபர்ட் புரூஸ்புட்

    மண்ணூல் வல்லுநரான ராபர்ட் புரூஸ்புட் இந்திய மண்ணியல் அளவாய்வுத் துறையில் ( GEOLOGICAL SURVEY OF INDIA) 1858 முதல் 1891 வரை பணிபுரிந்தார் அவர் சென்னைக்கு அருகில் இருக்கும் பல்லாவரம் வந்து தங்கி அங்கே தனது ஆய்வைத் தொடங்கினார். அங்கே கல்லாலான ஒரு கருவியைக் கண்டெடுத்தார் அந்த கண்டுபிடிப்பு வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது பல புதிய முடிவுகளை எடுக்க வைத்தது.

    ராபர்ட் புரூஸ் புட்டின் கண்டுபிடிப்பின் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது, வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்யப்பட்டது .
    ஆதி மனிதர்கள் தென்னகத்தின் இப்பகுதியில் வாழ்ந்து வந்திருந்தார்கள் என்பது ஒரு ஆங்கிலேயர் மூலமே உறுதி செய்யப்பட்டது . கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிஎன்ற வரிகள் ஒன்றும் வெற்றுகோஷம் இல்லை.

    இப்போது தமிழகம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்த முந்தைய மூத்த தமிழர்கள் சுமார் 1,50,000 பேர், முன்பே இந்தப்பிராந்தியத்தில் வாழ்ந்தனர் என்பது ஒரு வரலாற்றை புரட்டிப்போட்ட செய்தியாகும்.

    இந்தியத் தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வேறு எங்கும் கிடைக்காத சான்று ஒன்றை இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், பழைய கற்காலக் கருவியை, 1863-ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என போற்றப்படும் இராபர்ட் புரூஸ்புட் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

    அதன்பின், அதே ஆண்டு, செப்., 28இல், ராபர்ட் புரூஸ் புட் மற்றும் டபிள்யூ கிங் ஆகியோர் மீண்டும் ஒரு கல் கைக்கோடாரியை, திருவள்ளூருக்கு அருகில் உள்ள, அதிரம்பாக்கத்தில் கண்டு பிடித்தனர். இவை, “மதராசியன் கற்கருவிகள்”, என அழைக்கப்படுகின்றன. இவை, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் ஆகும். இதனால், தமிழகத்தின் தொல் பழங்கால வரலாறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றது.

    ராபர்ட் புரூஸ் புட், கண்டுபிடித்ததன் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன் இந்தப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்தார்

    இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து,கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். கொசத்தலை ஆறு என்று இப்போது அறியப்படும் அந்த ஆறு இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

    இந்த ஆற்றங்கரை ஆதி மனிதர்களின் முந்தைய வாழ்விடமாக இருந்தது என்பது அங்கே கிடைத்த கல் ஆயுதக் குவியல்கள் ராபர்ட் புரூஸ்புட் மூலம் நிரூபிக்கப்பட்டது. இத்தகைய கல் ஆயுதங்கள் தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தியாகும் .

    தற்போது அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது. மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் ‘Early Pleistocene presence of Acheulian hominins in South India’ என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார். ஆயினும் இந்த ஆய்வு இதுவரை எதோ காரணங்களால் தொடர்ந்து அரசினரால் மறைக்கப்பட்டே வருகிறது .

    பூண்டி அருகே அமைந்திருந்த ஒரு அருங்காட்சியகம் இப்போது செயல்படவில்லை .நான் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஓலைச் சுவடிகளைத் தேடிச் சென்றபோது அந்த அருங்காட்சியகம் இயங்காததைக்கண்டேன் . இவ்வாறே பாண்டியரின் பழைய துறைமுகமான கொற்கையில் இருந்த காட்சியகம் மூடப்பட்டு பண்டைய தொல் பொருள்கள் வீதியிலே கிடக்கக்கண்டேன் .
    அங்கிருந்து நான் கூட சுமார் 5000 வருட தொன்மை வாய்ந்த ஒரு பண்டைய சங்கை அதை கழிவு நீர் கால்வாய்க்கு கரையாக போட்டு வைத்திருந்த ஒரு பெரியவரிடம் இருந்து பெற்று வந்தேன் . இன்றும் அது என்னிடம் உள்ளது . தமிழர் வரலாறு ஏன் இவ்வாறு மதிப்பிழந்துக்கிடக்கிறது ?

    மேலும் பார்ப்போம் அடுத்த வாரம்

    ஆதாரம்
    http://www.antiquity.ac.uk/projgall/pappu297/

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161220 - Tiruppavai 05 -wcolor-lores
    161220 – Tiruppavai 05 -wcolor-lores

    ”ஆயர்தம் பாடியில் அன்னை அரவணைக்க,
    மாயன் வடமதுரை மன்னவன் -தூய
    சிறுமிக்குக் காட்டுகிறான் ஸ்ரீவைகுண் டத்தை
    கருமிக்கு காலனே காப்பு”….கிரேசி மோகன்….!

    ”கம்சனை” ”கஞ்சன்” என்றும் சொல்வதுண்டு….
    ”கஞ்சனை” ”கருமி” என்றும் சொல்வதுண்டு….!(எதுகைக்காக….!)

    Share
  • வன்முறை தடுப்புச்சட்டம்!

    பவள சங்கரி

    சாதிவாரியான வன்முறைகளில் 1,38077 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 43.3% வழக்குகள் நீதி மன்றங்களால் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 25.7% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இதில், 2013 – 2015 வரையிலான காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது மிக அதிகமான தாக்குதல் நடைபெற்றுள்ளன. உத்திரப் பிரதேசம் பீகார் இந்த வன்முறையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது. தமிழகம் இதில் ஒன்பதாவது இடத்தில் (5,131 வழக்குகள் பதிவு) இருக்கிறது. 14 மாநிலங்களில் வன்முறை தடுப்புச்சட்டத்தைச் செயல்படுத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வன்முறை தடுப்புச்சட்டத்தின் 14வது பிரிவின்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தனி நீதி மன்றங்களை அமைக்க வழிவகுக்கிறது. 8 மாநிலங்களில் ஒற்றைப்படை இலக்கங்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 7.6%, தமிழ்நாடு, தெலுங்கானாவில் 7.5%, குஜராத்தில் 3.1% மேற்கு வங்கத்தில் மிகக்குறைவாக 3% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.  சமூகநீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் இவை.

    Share
  • மார்கழி மணாளன் (5)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருப்பாற்கடல் (காராபுரம் )- அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

    ag1

    அரனோடு  அரியும் ஒன்றென்ற தத்துவத்தை

    ஆவுடையார் மேலிருந்து அடியார்க்குச் சொன்னவனே !

    அறியாது பிரிந்திருக்கும் அடியார்கள் அரவணைத்து

    அழியாத அன்பிற்கு இலக்கணம் படைத்தவனே !

     

    ஆழ்கடல் வாழ்வினிலே தத்தளிக்கும் அடியார்கள்

    அருளிட்ட சாசனங்கள் அமைதியாய் கேட்டாயோ

    பாற்கடலை விட்டிங்கே வந்ததேன் பரந்தாமா

    பாசுரங்கள் கேட்டபின்னும் அரங்கா உறங்கலாமா?

     

    ஐம்பொறியும் ஐம்புலனும் உன்வசமே ஆனந்தா

    ஐயமில்லை உன்னையன்றி உறவுமில்லை கோவிந்தா !

    ஐங்கரனின் அறுமுகனின் அன்னையின் சோதரனே !

    ஐயம்கொண்ட புண்டரீகன் ஆட்கொண்ட வேங்கடனே !

     

    ஒப்புயர்விலா உத்தமனே! முப்புரியும் அளந்தவனே!

    செப்புமொழி அத்தனையும் சிதறாமல் தந்தவனே !

    எப்பெயரில் அழைத்தாலும் அப்பெயரில் அமைபவனே

    உப்பரிகை தேவையில்லை உளமறிந்தால் போதுமையா!

     

    கல்லான அகலிகையின் சாபம் விடுத்தாய்

    காதலுடை துளசிக்கோ தன்னைத் தந்தாய்

    கனிவுடைய சபரிக்கோ கருணை தந்தாய்

    கார்மேகா ! கதறுகிறேன் காத்திட வருவாயே !

     

    ஒருபொழுது உனைநினைக்க  உளம்நாடும் மறுபொழுதும்

    மறுபொழுதும் உனைநினைக்க மனம்தேடும் முப்பொழுதும்

    முப்பொழுதும் உனைநினைக்க முன்னிருப்பாய் நாட்பொழுதும்

    நாட்பொழுதும் நாரணனே எப்பொழுதும் எம்பெருமானே !

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • பெருமாள் புகழ்

     

    ’மயிலாப்பூர் பெருமாள் புகழ்’’
    ————————————————————

    தானன தானன தானன தானன
    தானன தானன -தனதான
    ————————————————————–

    ’’நானது போகவும் தானது ஆகவும்
    சோணையு லாவிய -ரமணேசர்
    பேதமி லாதணில், வானரம் தோகைக
    லாபமும் மானுடம் -தனிலேகம்

    காணும்சு பாவமும் , யோகவி தானமும்,
    ஞானசி வோகமும் -அருள்வாயே
    தேவகு லாம்தொழ சூரிரு கூறுற
    வேலேறி ஈசரின் -நுதல்பாலன்
    வானவ ஆனையை வேடுவ மானையும்
    கூடும ணாளரின் -முறைமாம
    நானுள போதிறை ஏனது வீணெண
    பாலனை ஏசிடு -இரணீயன்

    ஆணவ மோடவன் ஆவிகு லாவிட
    தூணிடை போயொளி -நரசீய
    மாமயி லாபுரி கேசவ ஸ்ரீநிதி
    வாசவ மாதவ -பெருமாளே….கிரேசி மோகன்….!

     

    தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன
    தான தானன தத்தன தத்தன -தனதான
    சீனிவாச பெருமாள்
    ———————–

    “ஆல வாயினில் செத்துணர் வுற்றவர் நானை யாரென கற்றுடல் விட்டவர்
    சோணை மாமலை உற்றது ரைத்திடு -ரமணேச
    ஞான மாமுனி செப்பிய சத்தினில் நானும் வாழயில் பற்றுவி ருப்பினை
    கீதை நாயக விட்டுவி ரக்தியில் -விஜயோனாய்

    தோளி லாளிடும் விற்கணை விட்டது போல யாவையும் விட்டுயர் வெற்றியை
    வாழும் நாளிலே வெற்றிலை வட்டிலில் -எளிதாக
    ராஜ யோகமும் ,பக்தியும் ,கர்மமும் ஞான மார்க்கமும் வைத்தருள் இக்கணம்
    ராசா லீலையில் முக்திய ளித்திடும் -குருநாதா

    கால நேமிவ லக்கரம் விட்டிட ஆழி ஊதலி டக்கரம் பற்றிட
    தோளி லாடிட விற்சுமை மற்றிரு -கதைவாளை
    ஆளு மாதவ விக்ரம சொப்புரு வான வாமன நச்சர வத்துயில்
    ஆதி நாரண உச்சரி பத்திரு -திருநாமம்

    நாளு மோதிட நற்கதி பெற்றுயர் வான வாசலில் விட்டுவின் நித்திய
    சூரி யாகுவர் இப்பிற விப்பிணி -குணமாகும்
    கோல மாமயி லைப்புகழ் கற்பக பாலி ஈசனின் பக்கஅ கத்துறை
    சீனு வாசம கத்துவ மைத்துன -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • புதியதோர் சமுதாயம் படைப்போம்

         பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    சாதிகளின்   பிரிவுயின்றி   உயர்வு   தாழ்வு

    சண்டையின்றிச்   சாத்திரத்தின்    பேத   மின்றி

    ஆதிக்க    மதங்களின்றி   வணங்கு   கின்ற

    ஆண்டவனில்   முரண்பட்ட   கருத்து   மின்றி ;

    உழைக்கின்ற   வர்க்கமென்றும்   உழைப்பைத்   தின்றே

    உடல்கொழித்த   வர்க்கமென்றும்   இருந்த   தெல்லாம்

    தழைக்கின்ற   பொதுவுடைமை   நிலையி   னாலே

    தகர்ந்ததென்ற    புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

    வாக்களிக்கத்   தொகைகொடுக்கும்    வழக்க   மின்றி

    வன்முறைகள்   மிரட்டல்கள்   ஏது   மின்றி

    ஆக்கத்தை   அளிப்போரைத்   தேர்ந்தெ   டுக்கும்

    அமைதியான    தேர்தலாக   நடத்தித்  தேர்ந்த

    ஆட்சியிலே   ஊழலின்றி   அமைச்ச  ரெல்லாம்

    அதிகார   ஆர்ப்பாட்டம்   ஏது  மின்றிக்

    காட்சிக்கே   எளியவராய்   மையூட்   டின்றிக்

    கடமைசெய்யும்   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

    ஆற்றினிலும்   ஆலைகளின்   கழிவு  சேர்த்தே

    ஆகாய   வெளியினிலும்   மாசு   சேர்த்தே

    ஊற்றினையும்   தூய்மையிலா   நீராய்   மாற்றும்

    உன்மத்தச்    செயல்களின்றி   இயற்கை    காத்தே ;

    போற்றுகின்ற    இளைஞரெலாம்    வெளிநாட்   டிற்கே

    போகாமல்    தாய்நாட்டை   வளமாய்  ஆக்கி

    ஏற்றதொரு   காட்டாக   உலகின்   முன்னே

    ஏற்றுகின்ற   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

     

     

    Share
  • வேலி தாண்டிய காற்று

     

       ரா.பார்த்தசாரதி

     

    மனிதன் வாழ்க்கையில்   எதற்கெல்லாமோ வேலி  போடுகின்றான்

    குற்றங்களை மறைக்க தனக்குத்  தானே வேலி போட்டுக்கொள்கின்றான்

    அடக்கமான பெண்  கற்பு எனும்  வேலியை தானே போட்டுக்கொள்கிறாள்

    தன் வீடு, தன் கணவன்,தன் பிள்ளை என்ற வேலியை சுற்றி வருகிறாள் !

     

    காற்றுக்கு என்ன  வேலி,  காதலுக்கு ஏது  தோல்வி !

    காதலியின் கண்பார்வையே  காதலுக்கு  வேலி

    பூங்காற்றாய்  மாறிவிடு, புன்னகையால் வென்றிடு

    என் ஜீவன்  வாழ்ந்திட  வாழ்த்துக்கள் சொல்லிவிடு!

     

    காதலினை  தடை  செய்ய ஏது  முள்வேலி ?

    காதலன்,காதலி இடையே ஏது  இடைவெளி

    காதல் இல்லா  வாழ்க்கை  வீணாய்  போகும்

    மெய்யான காதல் ஒன்றே வாழ்வை மேன்மையாக்கும் !

     

    பயிருக்கு  பாதுகாப்பு வேலி, காதலுக்கு பாதுகாப்பு நம்பிக்கை

    காற்று வெளிதனில்  காதல் என்பது ஓர்  ஒத்திகை

    வேலியே பயிரை மேயுமா, காதல் உயிர் மூச்சாய் இருக்குமா

    வேலி  தாண்டிய  காதல், நிலை பெற்றிடுமா  இருக்குமா !

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஆண்டாளின் வேண்டுதல்….!

    ’’ஆண்டாள் கிளி விடு தூது’’….!(’’வர்தா’’ புயல்,மழை நிற்க)
    —————————————————–

    Tiruppavai notes 04-wcol-lores
    Tiruppavai notes 04-wcol-lores

    ‘’ஆழிமழைக் கண்ணா அடிக்கடி வாராதே
    சோழியன் சிண்டுதெறிப்பு சென்னையில் -தாழிகள்(வெண்ணைத் தாழி)
    உச்சி(உறி) கழண்டு உருண்டோ டுதுதரையில்
    பச்சை மரங்களெல்லாம் பாழ்’’….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (91)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    15592017_1186125674774963_1708252129_n

    112795645n05_rஷாம்னி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நதிநீர்ப்பங்கீடு ஒன்றியங்களுக்கு ஆக்கப்பூர்வமான மாற்று

    பவள சங்கரி

    தலையங்கம்

    அரசு ஆணைப்படி தற்போது உள்ள தனித்தனி நதிநீர் பங்கீடுகளுக்குரிய ஆணையங்களைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக நிரந்தர நதிநீர் பங்கீடு ஒன்றியத்தை நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதன்படி நதிநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பங்கீட்டு ஆணையங்களும் இனி செல்லத்தக்கதல்ல. மத்திய அமைச்சர் குழு அங்கீகரித்துள்ள இந்த அரசாணை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுப் பின் சட்டமாகும். ஆயினும், இது பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது, காலந்தாழ்த்துகிற செயலாகவே இருக்கும் என்றும் பல வல்லுநர்கள் கருதுகின்றனர். நடைமுறைக்கேற்றதொரு சிறந்த செயல்பாடாகவே இதனைக் கருதுவதற்குத் தக்கவாறு இந்த நிரந்தர நீர்த்தீப்பாணையம், தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் வங்கி, உச்சநீதி மன்றம் போன்று சுய தன்னதிகாரம் கொண்டதாக இருப்பது நலம். அப்படி இருக்கும்பட்சத்தில் இதன் செயல்பாடுகள் மற்றெந்த குறுக்கீடுகளுமின்றி சிறப்பாகச் செயல்பட வழிவகுக்கும் . மேலும் சில மாற்றங்கள் கொண்டுவருவதாகவும் அரசுக்குறிப்பீட்டில் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் இந்த நிரந்தர நீர்த்தீர்ப்பாணையம் தன்னாட்சிக் கொண்டதாக அறிவித்தால் வரவேற்கத்தக்கதாக அமையும். ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டவைகளை இது கட்டுப்படுத்தாமல் இருப்பது நலம். உதாரணமாக காவேரி நதிநீர் பங்கீட்டிற்காக கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கும் இடையேயான நதிநீர் பங்கீடு பற்றி அளித்த தீர்ப்பின் படியும், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படியும், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைகப்படவேண்டும். இல்லையென்றால் இந்த நிலை வருவதற்கே இன்னும் பத்தாண்டுகள் ஆகிவிடக்கூடும். ஆகவே புதிய பிரச்சனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் வகையில் நடுவண் அரசு இதை மேற்கொண்டால் இந்த ஆணையம் அனைவராலும் வரவேற்கத்தக்க வகையில் அமையும் வாய்ப்பு அதிகமாகலாம். பழைய தீர்ப்புகளை இது கட்டுப்படுத்தாது என்ற தெளிவான முன் வரைவு மசோதாக்களில் அரசு தாக்கல் செய்தால் நலம் பயக்கும் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் வானையும், நடுவண் அரசையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (35)

    நிர்மலா ராகவன்

    பெண்ணியம் என்பது

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2

    `பெண்ணியம் என்றால் என்ன?’ என்று தமிழ்நாட்டிலுள்ள ஒரு கல்லூரி மாணவன் கேட்டான்.

    `அது என்ன இல்லை என்பதைச் சொல்கிறேன்,’ என்றுவிட்டு, `ஆண்கள் ப்ரா அணிகிறார்களா? நாங்கள் மட்டும் எதற்கு அணியவேண்டும் என்று உள்ளாடையைக் கொளுத்துவது பெண்ணியம் இல்லை!’ என்று நான் கூறியதும், அந்த `கெட்ட’ வார்த்தையைக் கேட்டோ, என்னவோ, அரங்கத்திலிருந்த எல்லா இளவயதினரும் உரக்கச் சிரித்தார்கள்.

    ஆண்களும் பெண்களும் சமூகத்தில், கல்வியில், பொருளாதாரத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பெண்ணியம்.

    பெண்ணியவாதியான ஒரு பெண், ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்பவள், ஆண்களை வெறுக்கிறாள் என்று அர்த்தமில்லை. தன்னை மதித்து நடக்கும் ஆண்களிடம் நட்பாகப் பழகுவாள். தானும் ஒரு பொருட்டுதான் என்று எண்ணி, பிறர் தன்னை நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவ்வளவுதான்.

    `நாங்கள் பெண்ணியவாதிகள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை!’ என்ற மமதையுடன் சிகரெட் புகைப்பதும், விஸ்கி குடிப்பதும், பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும்தான் சுதந்திரம் என்று முதலில் நினைப்பவர்கள்கூட முப்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டால், ஒரு வெறுமையை உணர்கிறார்கள்.

    `ஆண்கள் இல்லாமலே நாங்கள் வாழ்ந்து காட்ட முடியும்!’ என்ற சவால் அர்த்தமற்றது. ஏதோ காரணத்திற்காகத்தானே இருபாலரும் இவ்வுலகில் பிறந்திருக்கிறார்கள்?

    நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட பல பெண்கள், “சிறு வயதில், ஆசிரியை அடித்தார், `நன்றாகப் படி!’ என்று. குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் அப்பா கோபித்தார். படிப்பு, போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் அம்மா மகிழ்ந்தாள். ஆனால், அவர்கள் சொற்படியெல்லாம் கேட்டு, மிக நன்றாகப் படித்து, ஆண்களுக்குச் சரிசமமாக பெரிய உத்தியோகம் அமைந்தாலும், சுதந்திரமாக இருந்தால் பழிச்சொல் வருகிறதே!” என்று என்னிடம் அரற்றியிருக்கிறார்கள்.

    சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை உண்டே!

    கதை: ஒரு பெண்ணியவாதியுடன் நெடுநேரம்

    என்னுடன் பள்ளியில் படித்த கஸ்தூரி மேற்கூறியபடி — மனம் போனபடியெல்லாம் — நடந்தபோது, நெருங்கிய உறவினர்கள்கூட அவளைத் தம் வீட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதித்தார்கள். தந்தையோ, அவளுடன் பேசுவதையே விட்டார். அவருடைய உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாய் மட்டும் அன்பாக இருந்தாள்.

    எனக்குத் திருமணமானபின் அவளைச் சந்தித்து நெடுநேரம் அவள் வாழ்க்கைமுறையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஆரம்பப்பள்ளியிலிருந்தே இருவருக்கும் பழக்கம். அவள் சொல்வதையெல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, `என்றாவது உன் கதையை எழுதுவேன்!’ என்றதும், பலக்கச் சிரித்தாள்.

    `உன்னிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தோன்றுகிறது!’ என்றவளிடம், `உன் அம்மாவுக்கு உன் நடத்தையால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை யோசித்தாயா?’ என்று கேட்டேன்.

    `வாய்ப்பு இருந்திருந்தால், அம்மாவும் இப்படித்தான் நடந்திருப்பார்கள்!’ என்றாள் கஸ்தூரி, அலட்சியமாக.

    உயர்கல்வி மற்றும் உத்தியோக நிமித்தம் தனித்து வாழும் வாய்ப்பு கிடைத்தால் யார் குறுக்கீடும் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றெண்ணும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சமூகத்தின் எதிர்ப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

    `எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த ஆண்கள் கல்யாணமாகி, தம் மனைவியுடன் எங்காவது செல்லும்போது நான் எதிர்ப்பட்டால், தெரியாதமாதிரி நடப்பார்கள். அது ஏன்?’ என்று கேட்டாள் கஸ்தூரி.

    நான் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் ஆண். சற்று முன்னேபின்னே நடக்க அவர்களுக்குச் சமூக அங்கீகாரம் இருக்கிறது. ஆனால், `சுதந்திரம்’ என்ற மயக்கத்துடன் ஒரு பெண் தான்தோன்றித்தனமாக நடக்கத் துணிந்தால், அவளுக்குத்தான் அவப்பெயர்.

    பெண்களை மதியுங்கள்

    ஒரு பெண் எப்படி நடக்கவேண்டும் என்று யார் யார் தீர்மானிக்கிறார்கள்?

    பதில்: சமூகத்தை ஒட்டி நடக்கும் குடும்பத்துப் பெரியவர்கள், இலக்கியம் மற்றும் திரைப்படங்கள்.

    பெரும்பாலான தமிழ்ப்படங்களில் அப்பா என்பவர் மகனைக் கரித்துக் கொண்டிருப்பார். அம்மா பின்னால் சோகமாக நின்று, அவனுக்குப் பரிவாள். ஏனெனில் அவன் ஆண்மகன். அவனைப் பெற்றெடுத்ததால் சமூகத்தில் அவளுடைய மதிப்பும் உயர்ந்துவிட்டது என எண்ணுகிறாள்.

    அந்த மகனுக்குக் கல்யாண வயது வரும்போது, தனக்கு வாய்ப்பவளும் தன் தாய்போல் தன்னை எந்த நிலையிலும் ஆதரிப்பவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுகிறது. அதற்கு அவனுக்கு அடங்கியவளாக இருக்கவேண்டும்.

    பொதுவாக, ஆண்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அவர்களுக்கு இன்னொரு விதமாகவும் கற்பிக்கப்படுகிறது. `பொம்பளைமாதிரி அழாதே!’ என்று ஒரு சிறுவனைக் கண்டிக்கும்போது, பெண்களைவிட தான் உயர்த்தி என்று அவன் எண்ண வழிகோலுகிறோம்.

    அதனாலேயே தங்களைவிட அதிகமான தன்னம்பிக்கையோ, அறிவுத்திறனோ ஒரு பெண்ணுக்கு இருந்தால், `இனிமே நாங்கதான் புடவை கட்டிக்கணும்!’ என்று அயர்வார்கள் சிலர். பெண்களின் உயர்வு அவர்களை அச்சவைக்கும், குறுகவைக்கும், தன்மையா?

    கதை: தேவை –_கல்யாணம்

    வினுதா கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தவள். அவளுடைய படிப்பைவிட உயர்ந்த கல்வி கற்றிருந்த மணமகன் அமைவது கடினமாகப்போக, தனக்கும் திருமணம் என்று ஒன்று நடக்குமா!’ என்ற ஏக்கம் பிறந்திருக்க வேண்டும்.

    இறுதியில் ஒருவர் அமைந்தார் — அவள் தன் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். பெண் என்றால் இல்லற வாழ்க்கை, குழந்தைகள், சமையல் என்று தன் தாயைப் பார்த்துக் கற்றிருந்தவளுக்கு அது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. மகிழ்ச்சியுடன் உடன்பட்டாள்.
    `நான் சம்பாதிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லே. அவரே கைநிறையச் சம்பாதிக்கிறார்!’ என்று பெருமை பேசிக்கொண்டாள்.

    செக்கு மாடு

    திருமணமானபின்னரும் நான் வேலைக்குப் போகிறேன் என்று நான் சொல்லக் கேட்ட ஒரு முதியவள், `ஆக, ஒன் ஆத்துக்காரர் சம்பாதிச்சு ஒனக்கு சாப்பாடு போடலே?’ என்று கேட்டாள், கேலியாக.

    இவர்களைப் போன்றவர்களுக்கு, எந்த ஒரு தேவைக்கும் ஆணின் கையை எதிர்பார்ப்பது பெருமை; அதனாலேயே உயர்கல்வி பெண்களுக்குக் கூடாத ஒன்று. ஏனெனில் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து, `உரிமை’ என்று ஏடாகூடமாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சமூகத்தில் இதுவரை கடைப்பிடித்தது எல்லாவற்றிற்கும் அர்த்தம் இல்லாது போய்விடுமே!

    பெண்கள் வீட்டிலேயே இருந்த காலத்தில், தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் கணவனை எதிர்பார்த்திருந்ததால், முடிந்ததோ, இல்லையோ, எல்லா வேலைகளையும் தாமே செய்தார்கள்.

    அவர்களிலும் சிந்திக்க அஞ்சாத ஓரிருவர், `இது என்ன வாழ்க்கை! எல்லா நாட்களும் ஒரேபோல!’ என்று அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், `இப்படித்தான் நடக்க வேண்டும்,’ என்ற கட்டாயம் இருந்ததால், சுயவிருப்பம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிற்று. தனித்துவம் என்ற வார்த்தைக்கே அவர்கள் அகராதியில் இடமில்லை. புதுமையாகச் சிந்தித்தால் பழி வருமோ என்ற அச்சம் வேறு. அப்படி நடந்துவந்த ஒரு பெண்மணி கூறினார், `நாங்க செக்கு மாடு மாதிரி ஒரே இடத்திலே சுத்திச் சுத்தி வரோம்!’

    பெண்ணிய ஆண்கள்

    `நாள்பூராவும் வேலை செய்துவிட்டு வந்து எனக்கு அசதியா இருக்கு,’ என்று மனைவி கூற, அன்றையிலிருந்து துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போடுவதைத் தன் வழக்கமாக ஏற்றார் கணவர். குழந்தை வளர்ப்பிலும் மகிழ்ச்சி கொண்டார். `பெண்டாட்டி தாசன்!’ என்று பிறர் கேலி செய்தார்கள். அவர்கள் புரியாதவர்கள். எப்போதும் பெண்களைவிட உயர்ந்த நிலையிலேயே இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஆண்களின் நிம்மதியைத்தான் பறித்துவிடாதா?

    இருவரும் உயரலாம்

    வாழ்க்கை என்னும் தராசில், ஆணோ, பெண்ணோ கீழேயே இருக்க நேர்ந்தால், அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? இல்லை, `நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?’ என்று ஆராயும் துணிவுதான் அவர்களிடம் இருக்க முடியுமா? `நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லை?’ என்று அடிக்கடி பிறரிடம் கேட்பார்கள் இவர்கள்.

    `நீயும் மேலே வா!’ என்று ஒரு பெண்ணை, அவள் மனைவியோ, மகளோ, முன்னுக்கு வர வழிவகுக்கும்போது உடன் இருக்கும் ஆணும் உயர்கிறான்.

    இதிலும் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. அவனிடமிருந்து மாறுபட்டிருக்கும் பிறர், `பெண்களுக்கு ரொம்ப இடம் கொடுத்தால், தலைக்குமேல் ஏறுவார்கள்!’ என்று பயமுறுத்துவார்கள்.

    யோசித்தால், இதுவும் உண்மைதான் என்றே தோன்றுகிறது. அபூர்வமாகத் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளால், பிற பெண்களிலிருந்து அவள் வித்தியாசப்பட்டிருப்பதால், அவளுடைய சுயமதிப்பு கூடிவிட, எல்லோர்மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கிறாள்.

    ஆனால், அவ்வப்போது அப்பெண்கள் செய்வது ஏதாவது ஏன் சரியில்லை என்று சொன்னால், சிந்தித்து, தம் தவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.

    தொடருவோம்

    Share
  • மார்கழி மணாளன் (4)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரு இந்தாளுர்  –  அருள்மிகு பரிமள ரங்கநாதப் பெருமாள்

    ag

    அணிதலை நாகனும் அமைதியைக் காத்திட

    அலைமகள் நிலமகள் அடிகளைப்  போற்றிட

    அரங்கத்தில் அயர்ந்த அமரனே எழுந்திரு

    அரியணை நெஞ்சினில் அழகுடன் அமர்ந்திடு !

     

    மதிகெட்டு மதிபெற்ற சாபம் விலக்கினாய்

    முனிசெய்த சதிநீக்கி முன்னவன் காத்தாய்

    விதிமாற்றி நதிதன்னைத் தலைமீது வைத்தாய்

    பனிநீக்கும் பகலவனாய் துயர்தீர்க்கும் பரிமளா !

     

    கல்லுறை நிற்பதை கணத்தினில் விலக்கி

    வானுறை வேங்கடா விழியினில் நிற்பாய்

    ஊனுறை உணர்வினால்  உன்னையே போற்றிட

    மூதுரை முத்தமிழ் மூச்சிடை வைத்தேன் !

     

    ஊதிடும் குழலுக்கு உருகிடும் உலகினில்  

    ஆடிடும் கோபியர் போலவே போதையில்     

    பேசிட மொழியின்றி பரவசம் கொண்டேன்

    நாசியில் மூச்செல்லாம் நடனங்கள் ஆடுதே  !

     

    கூடியகைகள்  உன்னைக் கூப்பியே நிற்கும் 

    குரலென்றும்  உன்பெயர் கூறியே ஒலிக்கும்

    குவிந்திட்ட விழிகளில் நின்னெழில் நிறையும்

    குறையின்றி வாழ்ந்திட நின்னருள் வேண்டும் !

     

    பாய்முனை படித்தபின் பதறிடும் நெஞ்சம்

    நோய்முனை தவிர்த்திட  உன்னிடம்  தஞ்சம்

    தாய்முலை தேடியே தாவிடும் சேயென

    வாயினில்  வந்தேன் வழங்கிடு பரிமளா !

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 57

    வீட்டுச்சூழ்நிலைகளும் கற்றலும் (5)

    education

    ஒரு உண்மை நிகழ்ச்சி ..

    மூன்றாவது வகுப்பில் படிக்கும் தங்கள் மகனோடு ஒரு பெற்றோர் மனநல மருத்துவரைக் காணச் செல்கின்றனர். அவரோடு நேர்காணலுக்காக நேரம் கிடைத்ததும் அந்த நிபுணர் பெற்றோர்களிடம் வந்த காரணத்தைப் பற்றி விளக்கம் கேட்கிறார். உடனே தாயார் “என் மகனுக்கு என்ன குறையென்று தெரியவில்லை. அவன் மனநிலையில் என்ன பாதிப்பு என்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் அழைத்து வந்தேன்” என்று விளக்கம் தருகின்றார். அதைக்கேட்ட அந்த மருத்துவருக்கு ஆச்சரியம் சேர்ந்த கோபம் உண்டாகிறது. ஏனெனில், அவரைச் சந்திப்பதற்கு முன்னாலாயே பெற்றோர்கள் அந்தக் குழந்தைக்கு ஏதோ மனநல பாதிப்பு என்ற கருத்துக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டது மட்டுமின்றி முடிவுக்கும் வந்துள்ளனர்.

    பொறுமையுடன் அந்த மருத்துவர் “நீங்களாகவே எப்படி இந்தக் கருத்துக்கு இடம் கொடுத்தீர்கள்?” என்று கேட்க உடனே தந்தை “மேடம், இவனால் நன்றாகப் படிக்க முடியும். பரீட்சைகளில் 80-90 மதிப்பெண்கள் வாங்க முடியும். ஆனால் இவனுக்கு கிடைப்பது என்னவோ 40 முதல் 50 மதிப்பெண்களே ! அதனால்தான் உங்களிடம் அழைத்து வந்தோம்” என்று பதிலுரைக்க அந்த மருத்துவருக்கு ஒரே வருத்தம். எப்படி ஒரு குழந்தையின் மதிப்பெண்களை முன்னிறுத்தி அவர்களுடைய மனநிலையையே பெற்றோர்கள் தவறாக முடிவெடுக்கின்றனர் என்று என்னிடம் அங்கலாய்த்தார்.

    இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்தது உண்டு. ஒரு குழந்தையின் ஆர்வங்களையும் கற்றலின் சூழ்நிலைகளையும் விருப்பு வெறுப்புக்களை அறியாமல் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒரு மாணவன் புத்திசாலியா இல்லையா என்பதை நிரூபிக்க முடியாது. அவ்வாறு செய்தல் தவறானது மட்டுமல்ல முட்டாள்தனமானது. பல நேரங்களில் பெற்றோர்கள் சமுதாயப்  போக்குகளையும் சமுதாயத்தில் உள்ள கடும் போட்டிகளையும் சுட்டிக்காட்டி அவற்றிற்கு இவர்களைத் தயார் செய்ய வேண்டாமா என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அவர்களுடைய ஆதங்கத்தில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அந்தக் கடும் போட்டியான சூழ்நிலைக்குத் தயார் செய்ய அவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியையும் தன்னம்பிக்கையையும் மற்றும் ஆக்கத்திறன்களையும் வளர்க்க வேண்டும்.

    கற்றலின்போது சிறுவர் சிறுமிகளுக்குத் தடைகள் இருந்தால் அதை ஆலோசகர்கள் மூலமாக அறிந்துகொள்ளுதல் நல்லதே.  ஆனால் சிறு இயலாமைகளை பெருத்தப்படுத்தி அவர்களை மற்றவர்களின் திறன்களோடு ஒப்பிட்டு தாழ்மைப்படுத்துதல் அவர்களுடய பிற்கால வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. பல நேரங்களில் இந்தக் குறைகளை சிறிய உடற்பயிற்சி மற்றும் கவனப் பயிற்சிகள் மூலமாக சரிப்படுத்த முடியும்.

    நியூட்டன், ஐன்ஸ்டீன், வால்ட் டிஸ்னி, நெப்போலியன், சர்ச்சில், கிரகாம் பெல், போர்ட் போன்ற பலருக்கு கற்றலில் குறைகள் இருந்திருக்கின்றன. அவர்களுடைய ஆசிரியர்கள் இந்த மாணவர்களை கற்றலில் விருப்பம் இல்லாதவர்களாகவும், திறமைக்குறைவானவர்களாகவும், கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாகவும், வாழ்க்கையில் முன்னேறத்  தகுதியில்லாதவர்களாகவும் அழைத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த சாதனைகள் உலகையே வியப்படையச் செய்திருக்கின்றன.

    பள்ளியில் கணித ஆசிரியராக இருந்து பள்ளி முதல்வரான ஒரு அன்பர் தனது ஒரே மகன் கணக்கில் அறுபது மதிப்பெண்களுக்கு மேல் வாங்கவில்லை என்ற காரணத்தால் அவனை வீட்டிலிருந்து விலக்கி  எட்டாம் வகுப்பிலேயே மற்றொரு பள்ளியின் விடுதியில் சேர்த்துவிட்டார். அந்த மாணவனுக்கு இந்தத் துன்புறுத்தலால் கணிதத்தின் மேலே ஒரு விதமான வெறுப்பே ஏற்பட்டுவிட்டது. அந்த மாணவன் பன்னிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்கமுடியாதபடி தோல்வியைத் தழுவிக்கொண்டு இருந்தான். ஆனால் அவன் திறமைகள் அவனை ஒரு “சகல கலா வல்லவனாக” உலகுக்கு வெளிக்காட்டியது. முதுகலை படிப்புப் படித்தவர்களை விட இவனுக்கு பொது அறிவும் திறனும் வாழ்க்கையின் சோதனைகளை சந்திக்கக் கூடிய திறனும் அமைந்தது. உறவினர்கள் அனைவரும் இவன் மட்டும் நன்றாகப் படித்திருந்தால் தொழில் துறையில் சாதனைகள் படைத்திருப்பான் என்று பாராட்ட ஆரம்பித்தனர். இது போன்ற பல முன்மாதிரிகளை நாம் வாழ்க்கையில் பல இடங்களில் சந்தித்துள்ளோம். இதற்க்கு  யார் காரணம் ?

    பெற்றோர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளின் திறன்களை அறிந்து வழிப்படுத்தி பாராட்டத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் தன்னுடைய மகனுக்கு மருத்துவத்தில் எந்த ஈடுபாடுமில்லை என்று நன்கு அறிந்தும் பணத்தை அதிக அளவில் செலவழித்து அவனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து மருத்துவராக்கிய நிலையில் அவருக்கு  அந்தத் தொழில் ஈடுபாடு இல்லாதது மட்டுமின்றி அதை வெறும் ஒரு வியாபாரமாக ஆக்கிய கதை வருத்தத்தை அளிக்கக்கூடிய ஒன்று.

    குழந்தைகளின் ஆர்வங்களையும் ஈடுபாடுகளையும் விருப்பங்களையும் அறியாமல் அவர்களின் தரநிர்ணயம் செய்வது ஒரு தவறான செயல். இந்தத் தவறான செயல்களுக்கு கல்விக்கூடங்கள் எவ்வாறு   ஒத்துழைக்கின்றன என்று தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(147)

    -செண்பக ஜெகதீசன் 

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும். (திருக்குறள் -947: மருந்து) 

    புதுக் கவிதையில்…

    பசித்தீயின்
    அளவறிந்து உண்ணலே
    அருமருந்து…
    அந்த
    அளவறியாமல்
    அளவின்றி உண்பவனிடம்
    அளவின்றி வரும் நோய்கள்…! 

    குறும்பாவில்…

    உடல்செரிமான அளவறிந்துண்ணாமல்
    அதிகமாய் உண்பவனுக்கு வந்திடும்
    அளவிலா நோய்கள்…! 

    மரபுக் கவிதையில்…

    உண்ணும் உணவைச் செரிக்கவைக்கும்
         -உடல்தீ யளவு தெரியாமல்,
    எண்ணம் போல உணவினைத்தான்
       -எடுத்தே யளவு ஏதுமின்றி
    உண்பவர் உடலது தாங்காதே,
         –உண்டா லதனை மேன்மேலும்,
    எண்ணி லடங்கா நோயெல்லாம்
      –எளிதி லவரைச் சேர்ந்திடுமே…! 

    லிமரைக்கூ…

    அளவாய் உண்பதே மருந்து,
    அதிக நோய்தரும், பசித்தீயின் அளவறியாது
    அளவின்றி உண்டால் விருந்து…! 

    கிராமிய பாணியில்…

    மருந்து மருந்து அருமருந்து
    அளவோட தின்னா அதுமருந்து,
    ஒடம்போட
    செரிமான அளவத் தெரிஞ்சித்தான்
    அளவோட தின்னா அதுவிருந்து…

    அது தெரியாம
    அளவுயில்லாம எல்லாத்தையும்
    அள்ளித்தின்னா நோய்வருமே,
    அவுனுக்கு
    அத்தினநோயும் சேந்துவருமே… 

    அதால,
    மருந்து மருந்து அருமருந்து
    அளவோட தின்னா அதுமருந்து…!

     

     

     

    Share