அண்ணாமலை சுகுமாரன்

ans-1

மனித இனம் இப்பூவுலகில் தோன்றி பல இலட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன என மானிடவியலார்கள் கூறிவருகின்றனர். தமிழர்களைப் பற்றி நமது இலக்கியவாதிகள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றனர் இதை வெறும் கற்பனைக்கூற்று என்றே பலரும் எண்ணிவந்தனர். இதற்கு வலு சேர்த்தவர்கள் ஐரோப்பியர்களே என்பதுதான் உண்மை . தமிழ் வரலாறு ஆய்வுகளில் இடம்பெறும் தமிழர் மானிடவியல் துறையின் முன்னோடியாக விளங்கியவர் ஐரோப்பியர்களே ஆவர். 1910 ஆம் ஆண்டிற்கு முன்புவரை ஐரோப்பியர்கள் இந்தியாவில் எங்குபார்த்தாலும் கேட்பாரற்று கிடைத்த பழம் கலைப்பொருள்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். ஆரம்பத்தில் இந்த ஆய்வு, பொழுது போக்காகவே அமைந்தது. இந்தியாவிலோ பாழடைந்த பழமைப் பொருள்களை வீட்டில் வைத்துக்கொள்வது சாபம் என்று எண்ணி அத்தகைய பொருள்களில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். எனவே நமது வரலாற்றை விவரிக்கும் சான்றுகள் அப்போதும் ஏன் இப்போதும் உதாசீனம் செய்யப்பட்டு வந்தது, வருகிறது .

மனிதன் தோன்றிய காலம் முதலாக அவர்கள் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவர்களது ஆரம்பக் காலத்தில் முதன்முதலாக தங்களது உணவைத்தேடி விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அவர்களால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவர்கள் அவற்றை எவ்வாறு தயாரித்தார்கள் , எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதுவே மனித குலத்தின் ஆரம்ப நாகரீக வளர்ச்சியாகக் கருதப்பட்டது .

உலகின் மானுடவியல் ஆய்வில் நியாண்டதால் போன்ற மனித இனங்கள் கிடைத்த ஆதாரங்களினால் அப்போது வெகுவாக பேசப்பட்டு வந்தது . இத்தகைய நிலையில் இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் அதுவும் சென்னைக்கருகில் பல்லாவரத்தில் கிடைத்த ஒரு கல் ஆயுதம் இந்திய சரித்திரத்தையே புரட்டிப்போட்டது .

ராபர்ட் புரூஸ்புட்

மண்ணூல் வல்லுநரான ராபர்ட் புரூஸ்புட் இந்திய மண்ணியல் அளவாய்வுத் துறையில் ( GEOLOGICAL SURVEY OF INDIA) 1858 முதல் 1891 வரை பணிபுரிந்தார் அவர் சென்னைக்கு அருகில் இருக்கும் பல்லாவரம் வந்து தங்கி அங்கே தனது ஆய்வைத் தொடங்கினார். அங்கே கல்லாலான ஒரு கருவியைக் கண்டெடுத்தார் அந்த கண்டுபிடிப்பு வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது பல புதிய முடிவுகளை எடுக்க வைத்தது.

ராபர்ட் புரூஸ் புட்டின் கண்டுபிடிப்பின் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது, வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்யப்பட்டது .
ஆதி மனிதர்கள் தென்னகத்தின் இப்பகுதியில் வாழ்ந்து வந்திருந்தார்கள் என்பது ஒரு ஆங்கிலேயர் மூலமே உறுதி செய்யப்பட்டது . கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிஎன்ற வரிகள் ஒன்றும் வெற்றுகோஷம் இல்லை.

இப்போது தமிழகம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்த முந்தைய மூத்த தமிழர்கள் சுமார் 1,50,000 பேர், முன்பே இந்தப்பிராந்தியத்தில் வாழ்ந்தனர் என்பது ஒரு வரலாற்றை புரட்டிப்போட்ட செய்தியாகும்.

இந்தியத் தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வேறு எங்கும் கிடைக்காத சான்று ஒன்றை இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், பழைய கற்காலக் கருவியை, 1863-ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என போற்றப்படும் இராபர்ட் புரூஸ்புட் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

அதன்பின், அதே ஆண்டு, செப்., 28இல், ராபர்ட் புரூஸ் புட் மற்றும் டபிள்யூ கிங் ஆகியோர் மீண்டும் ஒரு கல் கைக்கோடாரியை, திருவள்ளூருக்கு அருகில் உள்ள, அதிரம்பாக்கத்தில் கண்டு பிடித்தனர். இவை, “மதராசியன் கற்கருவிகள்”, என அழைக்கப்படுகின்றன. இவை, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் ஆகும். இதனால், தமிழகத்தின் தொல் பழங்கால வரலாறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றது.

ராபர்ட் புரூஸ் புட், கண்டுபிடித்ததன் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன் இந்தப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்தார்

இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து,கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். கொசத்தலை ஆறு என்று இப்போது அறியப்படும் அந்த ஆறு இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றங்கரை ஆதி மனிதர்களின் முந்தைய வாழ்விடமாக இருந்தது என்பது அங்கே கிடைத்த கல் ஆயுதக் குவியல்கள் ராபர்ட் புரூஸ்புட் மூலம் நிரூபிக்கப்பட்டது. இத்தகைய கல் ஆயுதங்கள் தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தியாகும் .

தற்போது அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது. மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் ‘Early Pleistocene presence of Acheulian hominins in South India’ என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார். ஆயினும் இந்த ஆய்வு இதுவரை எதோ காரணங்களால் தொடர்ந்து அரசினரால் மறைக்கப்பட்டே வருகிறது .

பூண்டி அருகே அமைந்திருந்த ஒரு அருங்காட்சியகம் இப்போது செயல்படவில்லை .நான் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஓலைச் சுவடிகளைத் தேடிச் சென்றபோது அந்த அருங்காட்சியகம் இயங்காததைக்கண்டேன் . இவ்வாறே பாண்டியரின் பழைய துறைமுகமான கொற்கையில் இருந்த காட்சியகம் மூடப்பட்டு பண்டைய தொல் பொருள்கள் வீதியிலே கிடக்கக்கண்டேன் .
அங்கிருந்து நான் கூட சுமார் 5000 வருட தொன்மை வாய்ந்த ஒரு பண்டைய சங்கை அதை கழிவு நீர் கால்வாய்க்கு கரையாக போட்டு வைத்திருந்த ஒரு பெரியவரிடம் இருந்து பெற்று வந்தேன் . இன்றும் அது என்னிடம் உள்ளது . தமிழர் வரலாறு ஏன் இவ்வாறு மதிப்பிழந்துக்கிடக்கிறது ?

மேலும் பார்ப்போம் அடுத்த வாரம்

ஆதாரம்
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க