கனவு காணும் உலகம்!
-கே.எஸ்.சுதாகர்
பன்நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்துவரும் எமது மக்கள்—மூதாதையர்கள்—ஆவணங்களைக் பாதுகாத்து வைப்பதிலும், பதிவு செய்வதிலும் தவறிவிட்டார்கள். யாழ் நூலகம் எரிந்து போனதும், போர் காரணமாகப் பல ஆவணங்கள் அழிந்து போனமையும் துர்ப்பாக்கியமாகும்.
அவுஸ்திரேலியா கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்குப் பல இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்லவேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு அவுஸ்திரேலியாவில் மீளக் கொடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர் ஹெவின் ரட் 2008ஆம் ஆண்டு, ஆதிகுடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்தக் கட்டுரை மெல்பேர்ணில், டண்டினோங் மலைச்சாரலில் இருக்கும் ஆதிவாசிகள் பற்றிய சிற்பங்கள் ஓவியங்களைப் பற்றிச் சொல்கின்றது. ஆனால் இந்தப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆதிவாசி அல்லர். வில்லியம் பில் றிக்கெற்ஸ் (William Bill Ricketts) எனப்படும் வெள்ளையினத்தவர் ஆவார்.
வில்லியம் பில் றிக்கெற்ஸ்…
மெல்பேர்ணில் சனத்தொகை மிகவும் குறைவாக இருந்த காலப்பகுதியில், தங்கவேட்டை காரணமாகப் பலர் புலம்பெயர்ந்து வரத் தொடங்கியிருந்தார்கள்.
இவரது தாத்தா வில்லியம் றிக்கெற்ஸ் 1857ஆம் ஆண்டளவில் தனது மனைவி மேரி ஆன் சகிதம் பிரித்தானியாவில் இருந்து மூன்று நான்கு மாதக் கடல் பிரயாணத்தின் பின்னர் மெல்பேர்ண் வந்து சேர்ந்தார். இவர்களுக்கு 12 பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அல்பிரட் என்பவர் சுசான் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசிப் பிள்ளையாக பில் 1898ஆம் ஆண்டு பிறந்தார். இவர்கள் றிச்மண்ட் என்னும் பகுதியில் குடியிருந்தார்கள்.
பில் தனது ஆரம்பக்கல்வியில் பெரிதும் நாட்டம் கொள்ளவில்லை. பாடசாலையை விடுவது என்று தீர்மானித்ததும் தமது உறவினரின் நகை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயிலுனராகச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதினான்கு. இசையில் ஆர்வம் கொண்ட இவர் வயலின் வாசிப்பதில் கெட்டிக்காரர்.
வில்லியம் பில் றிக்கெற்ஸ், 1935ஆம் ஆண்டளவில் மவுன்ற் டண்டினோங் பகுதியில் நாலரை ஏக்கர் நிலப்பரப்பை வாங்கினார். அது முதற்கொண்டு அங்கேயே வசிக்கலானார். இயற்கை எழில் கொஞ்சும் சரிவுப்பாங்கான அந்தப்பகுதியின் பாதை மருங்கிலும் குகைகளிலும் களிமண்ணினால் ஆன உருவங்களைச் செய்து வைத்தார்.
ஆதிவாசிகளின் நம்பிக்கை வாழ்க்கை முறைகளினால் ஈர்க்கப்பட்ட மிகச்சில வெள்ளை இனத்தவர்களில் இவரும் ஒருவர். விலங்கு தாவரம் மனிதன் இயற்கை – இந்தப்பின்னணியில் இவரது படைப்புகளின் தொனி அமைந்திருக்கும். இவரது கற்பனையில் உருவாகும் படைப்புகளிற்குப் பூர்வீகக்குடிகளின் சின்னங்களைக் குறியீடாகப் பாவித்துள்ளார். இவரது காப்பகத்தின் முக்கியமான படைப்புகள் ஆதிவாசிகளின் உருவங்களாகும். அவை ஆதிவாசிகளினதும், அவர்களுக்கும் பூமிக்குமிடையேயான பரிசுத்தமான தொடர்புகள் பற்றியனவுமாகும்.
காடு இவருடைய விருப்பத்திற்குரியது. அதுபோல பச்சை இவருக்குப் பிடித்த நிறம். இவருடைய பெரும்பாலான ஆடைகள் பச்சை நிறத்தையே கொண்டிருந்தன. அதேபோல இவரது படுக்கை ஜன்னல் விரிப்புகள் எல்லாமே பச்சை நிறத்தைக் கொண்டிருந்தன.
உயிரினங்கள்மீது இவர் வைத்திருக்கும் மதிப்பு அளப்பரியது.
இவர் வசித்த பகுதிகளில் நுளம்பு, எலித் தொல்லைகள் அதிகம். இவர் நுளம்புகளை விரட்டுவதற்கு ஒருபோதும் நுளம்புத்திரி பாவித்தது கிடையாது. அவற்றைக் கொல்லக்கூடாது என்பதில் கவனமெடுப்பார். எலிகளைப் பிடித்து வேறு காட்டுப் பகுதிகளில் கொண்டுபோய் விட்டுவிடுவார்.
இவர் 60 வருடங்களுக்கும் மேலாகத் தனது படைப்புருவாக்கங்களைச் செய்து வந்தபோதிலும், தன்னை ஒரு ஓவியனாகவோ சிற்பியாகவோ முத்திரை குத்துவதை விரும்பவில்லை. இவர் தனது படைப்புகள் தன்னூடாக வருகின்றனவேயொழிய தன்னுடயவை அல்ல என்கின்றார்.
இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இவரது படைப்புகளில் ‘Dromana’—Seawinds Garden, Arthurs Seat, Victoria— மற்றும் “GunBrute’—William Ricketts Sanctuary, Mount Dandenong, Victoria குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.
1949 – 1960 இடைப்பட்ட காலப்பகுதியில் அடிக்கடி மத்திய அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வாழும் Pitjantijatjara, Arrente ஆதி இனமக்களுடன் வாழ்ந்தார். அவர்களின் பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகளினால் பெரிதும் கவரப்பட்டார். தன்னை அந்த இனமக்களுக்காகத் தத்துக் கொடுத்தார். இவரது பெரும்பாலான படைப்புகள் மத்திய அவுஸ்திரேலியா பகுதியில் உள்ள Alice Springs பகுதியில் உள்ள pitchi Ritchi பூங்காவில் உள்ளன.
1960களில் அவர் அங்கு இல்லாத காலப்பகுதியில் அவரது படைப்புகள் அழிக்கப்பட்டும் களவாளப்பட்டும் போயின. இதனால் அவற்றை அரசு பொறுப்பேற்று, பாதுகாப்புக் கருதி மேலும் நிலப்பகுதியை வழங்கியது. தற்போது மொத்தம் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காப்பகம் இருக்கின்றது, வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துபோகும் இடமாக உள்ளது. காட்டிற்குள் அமைந்திருந்த சரணாலயத்தில், விக்டோரியா அரசினால் இவருக்கெனக் கட்டிக் கொடுக்கப்பட ஒரு அறை கொண்ட வீட்டில் 1962 முதல் பில் வசிக்கலானார். இவரின் அந்த அறை அவரின் படுக்கை, குசினி, ஸ்ரூடியோ, விருந்தினர் அறை எனப் பல வடிவங்கள் எடுத்தன.
1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதுச்சேரி (இந்தியா) சென்று, ஸ்ரீ அரவிந்தர் ஆச்சிரமத்தில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார்.
இவரை நான் பார்ப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை. அவுஸ்திரேலியாவிற்கு நான் வருவதற்கு முன்பதாக 1993இல் அவர் இறந்து போனார். இறக்கும் வரை மவுன்ற் டண்டினோங் சரணாலயத்தில் ஆதிவாசிகள் பற்றிய செயற்திட்டங்களை முன்னெடுத்தார். இவரை ஒரு தடவை, மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணி அவரது சரணாலயத்தில் சந்தித்ததாக என்னிடம் சொல்லியிருந்தார்.
***
References:
Whitefella Dreaming, The authorized biography of WILLIAM RICKETTS, by Peter Brady, 1994.