பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

சாதிகளின்   பிரிவுயின்றி   உயர்வு   தாழ்வு

சண்டையின்றிச்   சாத்திரத்தின்    பேத   மின்றி

ஆதிக்க    மதங்களின்றி   வணங்கு   கின்ற

ஆண்டவனில்   முரண்பட்ட   கருத்து   மின்றி ;

உழைக்கின்ற   வர்க்கமென்றும்   உழைப்பைத்   தின்றே

உடல்கொழித்த   வர்க்கமென்றும்   இருந்த   தெல்லாம்

தழைக்கின்ற   பொதுவுடைமை   நிலையி   னாலே

தகர்ந்ததென்ற    புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

 

வாக்களிக்கத்   தொகைகொடுக்கும்    வழக்க   மின்றி

வன்முறைகள்   மிரட்டல்கள்   ஏது   மின்றி

ஆக்கத்தை   அளிப்போரைத்   தேர்ந்தெ   டுக்கும்

அமைதியான    தேர்தலாக   நடத்தித்  தேர்ந்த

ஆட்சியிலே   ஊழலின்றி   அமைச்ச  ரெல்லாம்

அதிகார   ஆர்ப்பாட்டம்   ஏது  மின்றிக்

காட்சிக்கே   எளியவராய்   மையூட்   டின்றிக்

கடமைசெய்யும்   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

 

ஆற்றினிலும்   ஆலைகளின்   கழிவு  சேர்த்தே

ஆகாய   வெளியினிலும்   மாசு   சேர்த்தே

ஊற்றினையும்   தூய்மையிலா   நீராய்   மாற்றும்

உன்மத்தச்    செயல்களின்றி   இயற்கை    காத்தே ;

போற்றுகின்ற    இளைஞரெலாம்    வெளிநாட்   டிற்கே

போகாமல்    தாய்நாட்டை   வளமாய்  ஆக்கி

ஏற்றதொரு   காட்டாக   உலகின்   முன்னே

ஏற்றுகின்ற   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புதியதோர் சமுதாயம் படைப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *