Year: 2016

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (221)

    என் இனிய அன்புள்ளங்களே!

    vardahஅன்பான வணக்கங்களுடன் உங்கள் முன்னே அடுத்தொரு மடலுடன் உள்ளம் திறக்கிறேன். உள்ளம் திறக்கிறேன் என்பதை விட எனது தமிழகத்து உறவுகளின் உள்ள உறுதியை நினைந்து வியக்கிறேன் என்று சொல்லுவதே பொருத்தமானது. கலதேவனின் கரங்களில் உருட்டி விளையாடப்படும் பந்தெனப் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துத் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிவரும் உறவுகளின் உள்ளத்துணிச்சல் அலாதியானது. பணத்தாள்களின் மாற்றத்தினால் வந்த நிதிநிலைத் தாக்குதலுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, அரசியல் சூறாவளியென முதலமைச்சரை இழந்து ஒரு அரசியல் தலைமை வெற்றிடத்தில் சிக்கி மீள முயற்சிக்கையில் “வர்தா” எனும் பெயரில் ஒரு பாரிய புயலின் மூலம் சென்னையை ஒரு மூன்று நாட்கள் முடக்கிய ஒரு இக்கட்டான சூழல். இத்தனையையும் தாங்கித் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிவரும் உறவுகளின் தீரம் ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

    இன்றைய உலகம் முழுவதுமே ஒரு ஸ்திரமற்ற நிலையை நோக்கி அவசர வேகத்தில் ஓடுவது போன்றதொரு நிலை தென்படுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் அதுவும் குறிப்பாகச் சிரியா நாட்டில் ஏற்படும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் அதனை நோக்கிய சர்வதேச உலகின் அலட்சிய போக்கும் உள்ளத்தின் ஓரத்தில் ஓரளவு கிலேசத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

    ஒவ்வொருநாடும் தமது செயற்பாடுகளின் தாக்கம் தமது நாட்டின் மக்களின் அபிப்பிராயத்தை உள்வாங்கியே நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆனால் அம்மக்களின் மனதில் உணர்வுகளை நிலைப்படுத்த அவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகள் எத்தகைய வாதங்களை முன்வைக்கிறார்கள் என்பதும் அங்கே முக்கியமாகிறது. ஆனால் கடந்தகாலங்களில் இங்கிலாந்து அந்நியநாடுகளில் நடைப்பெற்ற போர்களில் தம்மை ஈடுபடுத்தியதின் பின்னால் உள்ள நோக்கங்களில் உள்ள சுநயலத்தின் விகிதம் எவ்வளவு எனும் விவாதம் கொடுத்த வில்லங்கங்களின் விளைவாக அடுத்தநாடுகளின் உள்நாட்டு யுத்தங்களுக்குள் தமது படைகளை ஈடுபடுத்துவதை மக்கள் முற்றாக விரும்பவில்லை.

    இங்கிலாந்தின் சமீபத்திய “ப்ரெக்ஸிட்” சர்வஜன வாக்கெடுப்பின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவும் எமக்கு ஒன்றைத் தெளிவாக விளக்குகின்றது. அதாவது இன்றைய மேலைதேய நாடுகள் தமது பரந்துபட்ட விசாலமான உலகளாவிய பார்வையினின்றும் விலகித் தத்தமது நாடுகளின் நலனை மட்டும் உள்ளடக்கிய உள்நோக்கிய பார்வையை முதன்மைப்படுத்தும் மனப்பாங்குடைய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுவே இன்றைய பல நாடுகளின் சமுதாயமாகக் காண்கிறோம். அதன் விளைவே இன்றைய பல இக்கட்டான சூழ்நிலைகளில் பலநாடுகள் தலையீடு செய்யாமல் ஒதுங்குவதற்கான காரணமாகின்றது. இன்றைய உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தெறிக்கும் வினாக்கள் பல விடையின்றித் தவிக்கின்றன. எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் இன்றைய சர்வதேச சமூகங்கள் பண்டைய காலத்துச் சமூகங்களை விட முற்றிலும் மாறுபட்டவை. அன்றைய சமுதாயங்களில் இன்றைய சமுதாயங்களில் காணப்படும் அளவுக்கு கலாசாரக் கலப்புக்கள் காணப்படவில்லை. வளர்ச்சியான காலகட்டங்களில் ஒரு முன்னேற்றப் பாதையாக,இக்காலாசாரக் கலப்புகள் உருவாக்கிய பல்லினக் கலாச்சாரம் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.

    ஆனால் இன்றோ ?

    உலகநாடுகள் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் புதைந்திருக்கும் ஒரு காலகட்டம். அன்றைய வல்லின நாடுகளாகக் கருதப்பட்ட நாடுகளின் முக்கியத்துவம் குறைந்து விட்ட நிலை, அன்று வல்லின நாடுகளில் தங்கியிருந்த பல பின்புல நாடுகள் இன்று பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கின்ற ஒரு நிலை. இத்தகைய நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் இப்பல்லினக் கலாச்சாரத்தை காரணமாகக் கொள்வதும், தமது அரசியல் கொள்கைகளின் பலவீனங்களை மறைப்பதற்காகவும்,தேர்தல்களில் தம்மை முன்னிலைப் படுத்துவதற்காகவும் இக்காரணத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்யும் பல சுயநலவாதிகளின் அரசியலினால் இன்று இந்த நாடுகள் பல ஒருவிதமான இனத்துவேஷ உணர்வுகளுக்குள் தம்மையறியாமல் இழுத்துச் செல்லப்படுகிறார்களோ எனும் ஒரு ஜயப்பாடு எழுகிறது.

    இத்த்கைய ஒரு சூழலில் அந்நியதேசத்தை எமது நிரந்தர நாடுகளாகவும், நாம் அதன் பிரஜைகளாகவும் மாறிவிட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் காலத்தை மிகவும் அவதானிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம். எமக்கும் எமது தமிழகத் தொப்புள்கொடி உறவுகளின் உறுதியும், துணிச்சலும் வேண்டும் என வேண்டிக்கொள்வோம்.

    மீண்டும் அடுத்த மடலுடன்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ***
    படத்துக்கு நன்றி: இந்தியா டுடே

    http://indiatoday.intoday.in/story/cyclone-vardah-havoc-pictures-tamil-nadu/1/832736.html

     

     

     

    Share
  • அரசின் அதிரடியும், மக்களின் சிரமங்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    கருப்புப்பணத்தை வெளியில் கொண்டுவரும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய உரூபாய் நோட்டுகள் 1000, 500, செல்லாது என அரசு அறிவித்து 38 நாட்கள் ஆன நிலையில், 500, 1000 உரூபாய் நோட்டுகள் உபயோகத்திற்குரிய கடைசி நாள் இன்று. அரசின் எந்தவொரு திட்டமும், அது எத்தகையதாயினும் மக்களின் முழுமையான ஆதரவில்லையென்றால் அது வெற்றியடைவதில் சாத்தியமில்லை. ஆயிரம் உரூபாய் நோட்டுகள் முற்றிலுமாக புழக்கத்தில் வருவதில்லை என்றாலும் ₹500 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. வங்கிகளின் அறிவிப்பின்படி இதுவரை ₹ 12.5 இலட்சம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கிறது. ₹ 12.5 இலட்சம் கோடி புழக்கத்திலிருந்து நீக்கிய பிறகு அதே அளவுத் தொகையை அரசு இன்னும் புழக்கத்தில் விடவில்லை.

    மேலை நாடுகளில் உள்ளதுபோன்று பணம் இல்லாத பரிமாற்றங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் அன்றாட சிறு சிறு செலவுகளுக்குக்கூட வங்கி அட்டைகளைப் பயன்படுத்த முடியாது என்பது நம் இந்தியா போன்று பலதரப்பட்ட மக்களும், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழும் நாட்டில் தவிர்க்க முடியாத நிலைப்பாடு ஆகும். பணப்பரிமாற்றத்திற்குப் பதிலாக வங்கி அட்டைகள் உபயோகப்படுத்துவதற்கு மக்கள் தானாகவே முன் வரக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கோவையிலிருந்து சென்னைக்கு மகிழுந்தில் செல்லும் பயணச்செலவிற்கு வங்கி அட்டைகள் உபயோகப்படுத்தும்போது பரிவர்த்தனை கட்டணமாகவே சுமாராக ₹250 செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதுபோன்று அனைத்து விதமான அன்றாட செலவினங்களுக்கும் வங்கி அட்டையை உபயோகப்படுத்தினால் மாத இறுதியில் கணக்கு பார்க்கும்போது அதுவும் செலவுக் கணக்கில் கூடிவிடும். வங்கி அட்டையை பயன்படுத்துவோர் குறிப்பாக உயர் மத்திய வகுப்பினரும், மத்திய வகுப்பினருமே. அதாவது சுமாராக 60% மக்கள் மட்டுமே வங்கி அட்டையை சரளமாக பயன்படுத்தக் கூடியவர்கள். அரசு அறிவிப்பின்படி சேவை வரியை மட்டும் குறைப்பது பெரும் பயனளிக்காது. வங்கி அட்டையின் பரிமாற்றத்திற்குரிய கட்டணத்தை வெகுவாகக் குறைப்பதோ அல்லது கட்டணமில்லா சேவையை ஏற்படுத்துவதோ பயனளிக்கக் கூடும். ஒரு ஆயிரம் உரூபாயை வங்கி அட்டை மூலம் பயன்படுத்தும்போது அந்த நிறுவனங்களுக்கு சுமாராக 1 இலட்சம் உரூபாய் பெறப்படுவதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    ஒவ்வொரு பெரு நகரங்களிலும் அனைத்து வங்கி ஏடிஎம் களும் பணம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் வங்கி ஏடிஎம் கள் மட்டும் செயல்படுகின்றன. அதுபோல ஸ்டேட் வங்கியில் மட்டும் அனைத்து நாட்களிலும் மக்களுக்கு சிறிய அளவேனும் பணம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கி வாசலிலும் நுற்றுக்கணக்கான மக்கள் பல மணி நேரம் இந்தத் தொகையைப் பெறுவதற்காக மழை, வெய்யில் பாராமல் காத்துக்கிடப்பது வேதனைக்குரிய விசயமாகும். இதைத் தவிர்க்க அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி அந்தப் பண அட்டைகளுக்கு பணம் எடுக்கக்கூடிய அளவையும் காலத்தையும் குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் இந்தப் பிரச்சனை குறையுமல்லவா. பொது மக்கள் வங்கியிலிருந்து பெற்ற ₹2000 நோட்டுகள் மறு சுழற்சிக்கே வந்துவிட்டன என்பதும் ஆறுதலான விசயம் . அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கக்கூடிய சூழல் வந்துவிட்டால் வங்கிகளிலும், ஏடிஎம் களிலும் இருக்கக்கூடிய மிகப்பெரிய கூட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இல்லாவிட்டால் அரசு மேலும் மக்களின் அதிருப்திக்கு உள்ளாவதோடு இத்திட்டத்தின் வெற்றியே கேள்விக்குறியாகிவிடும்.

    எந்த ஒரு திட்டமும் பிரதமராலோ, நிதி அமைச்சராலோ மட்டும் செயல்படுத்தப்படுவது இல்லை. வங்கிகளில் உள்ள உயர் அதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் போன்றோரால் செயல்படுத்தப்படுகிறது. இவர்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்பழுக்கற்றவர்களாக இருப்பதில்லை என்பதும் கண்கூடு. இவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கைகளும், அரசின் கடுமையான நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளுமே இன்றைய சூழலில் அத்தியாவசியமாகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”கார்த்திகை தீபமாய் கண்ணன் மயிற்பீலி,
    பார்த்திபவாத் ஸல்யம் பசுவுக்கு, -கீர்த்திமிகு
    கீதையைச் எண்ணிக் கவிழ்ந்து படுத்தனன்
    பாதையோ பாரதப் போர்”….கிரேசி மோகன்….!

    Share
  • 41% இந்துக்களுக்கு அடிப்படைக்கல்வி இல்லை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    உலகளவிலான அனைத்து மதங்களின் அடிப்படையில் கல்வி கற்றோரின் எண்ணிக்கையை பியூ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவலாக, உலகளவில் நம் இந்து மதமே அடிப்படைக் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. யூதர்களே கல்வியில் முதலாம் இடத்தில் உள்ளனர்.

    41% இந்துக்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் இருக்கின்றனர்.
    53% இந்துப்பெண்கள் / 29% இந்து ஆண்கள் சுத்தமாக கல்வி வாடையே இல்லாதவர்களாக உள்ளனர்!
    6.4 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெற்ற இந்து மதத்தின் ஆண்கள் மத்தியில் 4.2 ஆண்டுகள் மட்டுமே பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுகின்றனர்.
    இசுலாமியப்பெண்கள் 4.9 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெறுகின்றனர்.

    இதில் மேலும் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் சில பத்தாண்டுகளாக இந்துக்களின் அடிப்படைக் கல்வியில், 3.4 ஆண்டுகள் என்ற நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதினாலேயே இந்த முடிவாம். அப்படியானால் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்துக்களின் கல்வி நிலை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை. இன்றும் இந்துக்களின் அடிப்படைக்கல்வியில் ஆண்/பெண் பாலியல் இடைவெளியால் பெண்களின் கல்வி நிலை மிகவும் பின் தங்கியே உள்ளதாகவே இந்த ஆய்வு தெரிவிக்கிறது .. 🙁

    நம் இந்தியர்களின் நிலைப்பாடு இன்று இரு வேறுபட்ட எல்லைகளைக் கடந்துகொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமாகிறது. வெளிநாடுகளில் உயர் பதவிகளில் நம் இந்தியர்கள் அதிகமாக சாதனை புரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு புறம் பெரும்பாலான இந்தியர்கள் அடிப்படைக் கல்வியே இல்லாமல் இருக்கின்றனர். கிராமங்களாலான நம் இந்திய நாட்டில் இன்றும் வடகிழக்கு மாநிலங்கள், பீகார், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசத்தின் பெரும் பகுதிகள், ஆந்திர, தெலுங்கானாவின் உட்பகுதிகள், கர்நாடகத்தின் வட பகுதிகள், தமிழ் நாட்டின், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களின் உட்பகுதிகள், கொங்கு நாட்டின் தர்மபுரி, கிருட்டிணகிரி, அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளும் மிகவும் பின் தங்கிய நிலையில், அடிப்படைக் கல்வி என்பதே கேள்விக்குறியாக உள்ளன. எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு, காஷ்மீர் போன்ற மாநிலங்களின் அடிப்படைக் கல்வித் தகுதியை உயர்த்த வேண்டியதும் காலத்தின் கட்டாயம். பஞ்சாபிலும், ஜம்மு காஷ்மீரிலும் கல்வித்தரம் உயர உயர வன்முறையாளர்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்துவிடும் வாய்ப்புகளும் கூடும்.

    1991இல் அறிவொளி இயக்கம் என்ற ஒரு இயக்கம் தொடங்கப்பட்டபோது ஏழை, எளிய மாணவர்களை கல்வி நிலையம் கொண்டு சேர்ப்பதற்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ச்சியாக தொடர்கல்வி இயக்கம், வளர்கல்வி இயக்கம், ஆரோக்கிய இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், சிட்டுக்கள் மையம், துளிர் இல்லம் என இதன் செயல்பாடுகள் விரிவடைந்தன. இந்த அறிவொளி இயக்கம் சமீபத்தில் வெள்ளிவிழா ஆண்டும் (ஆகஸ்ட், 2016) கொண்டாடிவிட்டது. ஆனாலும் இது போன்ற இயக்கங்களின் செயல்பாடுகள் பரவலாக மக்களைச் சென்று அடையவில்லை. அறிவொளி இயக்கம், எழுத்தறிவு இயக்கம் போன்று பல இயக்கங்கள் உருவாக வேண்டும். இதுபோன்ற இயக்கங்களுக்கு பாரபட்சமின்றி மத்திய மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக நல ஆர்வலர்களும் பெருமளவில் பங்கு கொண்டு நம் இந்திய மக்கள் அனைவரும் அடிப்படைக் கல்வியும், தரமான கல்வியும் பெறும் வகையில் செயல்பட வேண்டும்.

    Share
  • ஒருஆயுள் கைதியின் கோரிக்கை

     

    மீ.விசுவநாதன்

    தேவைக்கு மேலொரு காசினைத்
    தேடினால் நான்குற்ற வாளிதானே!
    நாவைத்தான் கட்டிடா நானுமோர்
    நாட்டிலே பொய்கூறும் பிள்ளைதானே !
    சேவைக்கு நெஞ்சிலே கொஞ்சமும்
    சிந்தனை செய்யாத கள்ளனானேன் !
    சாவைத்தான் எண்ணிடா மானுடச்
    சாத்திரம் கூறுமொரு வேடனானேன் !

    மாடாக நித்தமும் வேலைசெய்
    மாந்தரின் கூலியிலே சூடுவைதேன் !
    கோடானு கோடியாய்ச் சூதினைக்
    கொட்டியே நல்லோரை நோகடித்தேன் !
    கூடாத நட்பினால் கூடியே
    கொஞ்சமா கொண்டாட்ட(ம்) ஆடிருப்பேன்?
    தேடாத ஈசனைத் தேடுறேன்
    தீவினை தீர்த்தெனையும் காத்திடாயோ !

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு:
    காய், கூவிளம், கூவிளம், கூவிளம்,காய்,காய்)

    (14.12.2016 10.08 am)

    Share
  • கவியரங்கக் கவிதை.. 1

    நாகினி

    சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது….
    (நேர்மையான அரசு)

    மொழி வாழ்த்து

    சத்தியம் சொல்வதற்குச் சக்தியானச் செந்தமிழே
    வித்தென எங்கருத்தை வீம்பிலா வார்த்தைகளால்
    மத்தளமாய்க் கொட்டிநல் மன்றத்தில் சேர்ப்பதற்கு
    இத்தருணம் காப்பாய் இனிது!

    அவையடக்கம்

    எம்போன்றோர் நற்கவியை ஏற்று யினிதாய்த்
    தம்மன்பால் வாழ்த்தத் தவமென யாம்பெற்ற
    நம்பிக்கை ஊட்டும் நடுவர் அவையோர்முன்
    பம்பரநாச் சுற்றும் பணிந்து!

    நேர்மையான அரசு

    எட்டிவிட்டோம் பெண்கல்வி எட்டாத தூரத்தில்
    பட்டமுடன் ஆளும் பதவியும் பெற்றென்ன
    கிட்டியதா இன்னும் கிழியாத நல்லாடை
    அட்டிலென நேர்மை அரசு!

    நேர்மை அரசென நேசமிகு ஆட்சியின்
    பார்வை அமையாததால் பண்பு கெடுக்கின்ற
    பார்கள் எனயெங்கும் பாதைமாற்றும் போதையில்
    ஊர்கள் குடிபுகும் ஊறு!

    குடிபுகுந்து ஊறுசெய்துக் கூத்தடிக்கும் வஞ்சம்
    தடிபிடிக்கும் மூப்பிலும் தப்பான நெஞ்சம்
    படிந்தினிதாய் சட்டமெனும் பாதமுடன் கொஞ்சி
    நடிப்பதன்றோ வாழ்வுக்கு நஞ்சு!

    வாழ்வுக்கு நஞ்சாகும் வாக்குத் தவறியிங்கு
    தாழ்வுக்குப் பாலமாச்சே தப்பான ஆட்சியென
    ஊழ்வினையை நொந்திங்கே ஊர்கூடி மௌனித்தால்
    ஏழ்மையென்றும் மாறாத ஏறு!

    மாறாத ஏறுமுக மாசெனப் பொய்புரட்டே
    ஆறாதப் புண்ணாகி ஆட்சிபீடம் ஏறியிங்குத்
    தேறாத மக்களின் தேர்தல் இதுவெனச்
    சேறாகும் ஆளும் செழிப்பு!

    ஆளும் செழிப்பு அமைந்தரசு நேர்மையில்
    நாளும் மறையாத நம்பிக்கை ஊக்கவுறுதி
    வாளும் நிறைவான வாட்டமிலா நெஞ்சாகி
    மாளும் சமுதாய மாசு!

    சமுதாய மாசெனச் சாதிக் கொடுமை
    அமுதான மானிடத்தை ஆட்டிவைக்க நச்சுக்
    குமுதமாய் தேர்தலாட்சி கும்பிடு வாக்கும்
    சுமுகமான பேச்சும் சுணக்கு!

    பேச்சும் சுணங்கிவிட்டால் பெற்றிட லாகுமே
    கூச்சல் குழப்பம் குடியாட்சி எங்கிலும்
    ஏச்சும் குறையாத எந்திர வாழ்வெனப்
    பாய்ச்சிப் பரவும் பகை!

    பரவும் பகையொழிந்துப் பாசமுடன் நேர்மை
    வரவும் செயலாற்றும் வாக்கும் உளதாய்
    இரக்காக் குடியாட்சி ஈங்கு மலர்ந்தால்
    சரமாய் ஒளிருமாளும் சங்கு!

    ஒளிருமாளும் சங்குடன் ஒப்பிலாத மக்கள்
    இளித்திங்கு வேடமிட்டு இம்சிக்கு வோரைத்
    தளிர்க்கைகள் கோர்த்தென்றும் தண்டிக்கும் போக்கே
    களிப்புடன் முன்னேறும் காப்பு!

    முடிவுரை

    சட்டம் எனும்நற் சாட்டையால் நேர்மையுடன்
    ஆட்சி அமைக்கும் அதிகாரம் அன்புடனும்
    கட்சி குழப்பமின்றி கண்ணாய்க் குடிகாத்தால்
    உச்சி முகரும் உலகு!

    கவியரங்கு தந்தெமக்குக் கண்ணான நெஞ்சே
    நவிழ்ந்திடுவேன் நன்றி நலம்!

    … நாகினி

    Share
  • சிவ விஜயபாரதியின் கவிதை

    விஜயபாரதி

    வனத்திடைத் துலாவி
    கண்டடைதலின்
    பிறகொரு நாளில்
    வெட்டப்பட்டது மூங்கில்

    துளைகள் நிரப்பப்பட
    உயிர்த்தெழுகிறது

    மழைப்பொழுதில் நனைந்தப்
    பறவையொன்று சிறகுலர்த்தலின் பரவசமென
    இசையை நிரப்பியிருந்தது

    இதழுக்கானக் காத்திருப்பில்
    பருவம் தப்பிப் போக
    நிலமிழந்தவர்களின் சோகத்தை
    உடுத்தியிருந்தது

    படிந்திருக்கும் ஒட்டடைகளுக்குப் புரிவதில்லை
    மீட்டப்படாத அதன் இராகங்கள்.

    Share
  • வரலாறுகளின் வேர்! (1)

    அண்ணாமலை சுகுமாரன்

    ans

    கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது.

    ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி என அனைத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றை கணிக்க தக்க சான்றுகள் வேண்டும் .

    ஆதாரங்கள் எனும் உறுதியான கற்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு .

    வரலாறு தற்போது தொல்லியல் என அறிவுப்பூர்வமானதொரு விஞஞானம் போல் ஆகிவிட்டது . அதன் ஆய்வுக்கு இப்போது பல்வேறு துறைசார்ந்த அறிவும் அவசியமாகிவிட்டது .

    தொல்லியல் என்பது, வரலாறு ,மானிடவியல், கலாச்சாரம் , பொருளாதாரம் இனவரலாறு, நீரடி தொல்லியல்,என பல்வேறு துறைகளின் அறிவு தேவைப்படுகிறது .

    தொல்லியல் எதிர்கால மனித வாழ்க்கைக்கு ஒரு செய்தியை எப்போதும் கூறிவருகிறது. கடந்த காலத்தைப் பொறுத்தே வருங்காலம் அமைகிறது .

    இப்போது வாழும் வாழ்க்கையின் விதை கடந்த காலத்தில்தான் இருக்கிறது .வரலாற்றை நிர்ணயிக்க சான்றுகள் மிக அவசியம் .

    நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை .

    மேலும் இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்துதான் அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

    அலெக்சாண்டர், 326 BCயில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டிலோ இன்னமும் மோசம் தஞ்சை பெரியக்கோயிலே கரிகால் சோழன் கட்டியது என்று ஒரு கதை நிலவிவந்ததாக பொன்னியின் செல்வன் எனும் ஒரு குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி விவாதத்தில் இருந்தது நினைவிருக்கிறது .

    ஒவ்வொரு கோவிலுக்கும் பின்புலத்தில் ஒரு புராணக் கதை நம்ப முடியாதபடி இருக்கும் . வரலாற்று செய்தி அதில் மறைந்து கிடக்கும் .நெல் மணியை சேர்க்க ஆரபித்த குதிரில் நெல்லை விட பதர்கள் அதிகம் ஆனது போல் புராண கற்பனையில் வரலாற்று உண்மைகள் மறைந்து போயின .நெல் மணிகள் காணாமல் மறைந்து போயின .

    திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது. மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள். குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீனப் பயணி சொல்லியிருக்கிறார். 1857இன் சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கை அழிவில் செய்திருக்கிறார்கள். பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடமாக இருந்திருக்கிறது . தாஜ் மஹாலின் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

    இன்றும் பல கோட்டைகள் சுற்றுலா விடுதிகளாக சுதந்திர இந்தியாவிலும் இருக்கின்றன. (உதயகிரி) தரங்கம்பாடியில் இருக்கும் டேனிஷ் கோட்டை 30 ஆண்டுகளுக்கு முன் அரசாங்க ஒய்வு விடுதியாகப் பயன்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். பல அரண்மனைகள் தமிழ் நாட்டில் இன்னமும் அரசு அலுவலகங்களாக இருந்து வருகிறது .

    இந்த நிலையில்தான் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். அவர்கள் வந்தது என்னவோ வேறு வேலைக்கு ஆயினும் கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இத்தகைய ஆய்வுகளுக்கு இல்லை; என்றபோதிலும் , இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய வரலாற்று சான்றுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.

    அப்போது இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு , இந்தியர்கள் மனதில் ஒருவகை தாழ்வு மனப்பான்மையை குடி கொள்ளச் செய்தார்கள்.

    அந்த நிலையில் சில கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் உள்ள மனசாட்சியுள்ள சிலர் தொல்லியல் சான்றுகளை மேலும் அழிவிலிருந்து காத்து இந்தியாவின் வரலாறு எனும் கட்டிடம் எழ உதவி செய்தனர் .

    அத்தகையோரை பரவலாக அறியச் செய்வது வரலாற்றை அறிவதில் மிக முக்கியமானதாகும்.
    முதலில் வரலாறு உருவாக உதவி செய்த அயல் நாட்டினரைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முக்கிய தொல்லியல் நிகழ்வுகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் இருந்த வரலாற்று ஆர்வலர்களைப் பற்றியும் அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் விதமாகவும் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவாளர்கள் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ,க. அப்பாதுரை அவர்கள் சதாசிவ பண்டாரத்தார் முதல் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ,நாகசாமிஅவர்கள், ராஜமாணிக்கனார்அவர்கள், புலவர் ராசு அவர்கள் ,நடன காசிநாதன் அவர்கள் ,தியாக சத்தியமூர்த்தி அவர்கள் குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்கள் , குடந்தை காசிநாதன் அவர்கள், பத்மாவதி அவர்கள் போன்ற இன்னுமும் உழைத்துக் கொண்டிருக்கும் பலரையும், சொல்லாமல் விடுபட்ட இன்னமும் பலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது .

    வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இருக்கும்வரை இத்தொடர் தொடர்ந்து வரும் .

    பகுதி 1- அயல் நாட்டு அறிஞர்கள்

    சர் வில்லியம் ஜோன்ஸ்

    1746 இல் பிறந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1783இல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக இந்தியா வந்தார், அவர் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு அரேபிய மொழிகளை சிறிய வயதிலேயே கற்றறிந்தார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

    தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் என்பவரை தேர்ந்தெடுத்தார். அந்த கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சர்.வில்லியம் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் . தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதைப் பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்படவில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

    பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சி பெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் இலத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். இலத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.

    வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார். சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத நாகரீகம் இல்லாத வனம் போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை நினைத்திருந்தார்கள் . எனவே கிடைத்த அத்தனையையும் ஆவணப்படுத்த – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார்.

    ஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தது.

    அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார்.

    ஒருவேளை அது சரஸ்வதி போல் தடம் இல்லாமல் போன ஒரு நதியாக இருக்கலாமோ ?

    அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்தப் பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ்? சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312 BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.

    இவ்வாறு இந்திய வரலாறுக்கு சர் வில்லியம் ஜோன்ஸ் ஒரு நல்ல துவக்கத்தையும் , உலகின் கவனத்தை இந்திய வரலாற்றின்மேல் திருப்ப ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் .
    அவரைத்தொடர்ந்து பல ஐரோப்பியர்களுக்கு இந்திய வரலாற்றின் மேல் ஒரு ஆர்வம் தோன்றியது வரலாற்றின் ஆய்வில் பலருக்கு ஆர்வம் எழ சர் வில்லியம் ஜோன்ஸ் முக்கிய காரணமாக விளங்குகிறார்

    2) சார்லஸ் வில்கின்ஸ்

    சார்லஸ் வில்கின்ஸ் ஒரு சிறந்த சம்ஸ்கிருத அறிஞர் இவர் வில்லியம் ஜோன்ஸ்அவர்களின் நண்பர் இவர் கல்கத்தாவுக்கு 1770 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் .

    சமஸ்கிருதம் பற்றிய ஆழமான புலமை பெற்ற ஆங்கிலேயர்களின் இவரே முதன்மையானவர் எனலாம். குப்தர்களின் கால எழுத்தைக் கண்டுபிடித்ததில் இவரது பணி முக்கியமானது . இது இந்தியாவின் கல்வெட்டு இயலில் மிக முக்கியமானதாக அமைந்தது .

    அந்தக்காலகட்டத்தில் உலகில் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்தது அது உலகின் அனைத்து மொழிகளும் ஹீப்ரு மொழியில் இருந்து தோன்றியது என்பதே .

    இந்தியாவில் வந்து இவர் செய்த ஆய்வுகளுக்குப்பின் பாரசீகமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியது என நிறுவினார் .

    அடுத்து சென்னையில் பல்லாவரத்தில் கிடைத்த மிகப்பழைய தடயத்தைப் பற்றிய செய்திகளைக் காணலாம் .

    தொடர்ச்சியாக இன்னமும் பல தகவல்களை அறியலாம் – அடுத்த வாரத்தில்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161212 - TriguNatAra -wcol-lores
    161212 – TriguNatAra -wcol-lores

    ”சத்வரஜஸ் தாமஸ் சுருதி முடுக்கிட
    சுத்தசத்வ கீதம் செவிக்குணவு: -தத்தகுரு
    மும்மூர்த்தி ராகத்தில், முக்குண தாளத்தில்
    செம்மூர்த்தி கண்ணன்வா சிப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • ‘’வர்தா’’

     

    நேற்று ‘’வர்தா’’ புயலுக்காக எழுதியது….!

    ‘’ஊழியில் ஆலில் உலகளந் தோய்மிதந்தாய்,
    பாழியன்தோள் பச்சைப் புயல்மாலே, -வாழிய!
    வர்தாவே(வரதராஜரே) காஞ்சி வளர்ந்து வரம்தருவோய்
    வர்தா புயலடக்க வா’’….கிரேசி மோகன்….!

    Share
  • மின்னஞ்சல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க அரசின் புதிய அறிவிப்புகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒன்றரை இலட்சம் கோடி வங்கிகளில் பணப்பரிமாற்றக் கட்டணங்களாக வசூலித்துவிட்டு, இந்தப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க கோடிக்கணக்காக பணம் பரிசளிப்பதாக அறிவிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இன்று அரசு மின்னஞ்சல் பணப்பரிமாற்றம் அதிக முறைகளில் பயன்படுத்துவோருக்கு கோடிக்கணக்கில் பணம் பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளனர். மின்னஞ்சல் பயன்படுத்துவோரை உற்சாகப்படுத்துவது நல்ல விசயம்தான் என்றாலும், வங்கிகளின் தேவையற்ற கட்டணங்களை விதிப்பது மூலம் பெரும்பாலானவர்களுக்கும் இது சுமைதான். பரிசு கிடைப்பதோ சிலருக்கு மட்டுமே..

    ₹3,300 பணப்பரிமாற்றம் செய்யும் ஒருவர் தன் வங்கிக்கு (இது ஸ்டேட் வங்கி கட்டண விகிதம் என்றாலும் ஏனைய அரசுடமை வங்கிகளின் கட்டணங்களிலும் பெரும் வேறுபாடு கிடையாது) ₹11.74 கட்டணமாகக் கட்டுகிறார். அந்தப் பணத்தைப் பெறக்கூடிய நபரும் தன் வங்கியில் அதே கட்டணமான ₹11.74 செலுத்தித்தான் அந்தப் பணத்தை பெறுகிறார். ஆக இருபுறமும் கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. இது குறைவான தொகை என்றாலும் வருட இறுதியில் இலாப, நட்டக் கணக்குகளைப் பார்க்கும்போது மக்களுக்கு இது ஒரு பெருஞ்சுமையாகவே உணரப்படும். வங்கிகளுக்கோ மொத்தக்கணக்கில் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஊரிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட வங்கிக்கும் தினசரி இலட்சக்கணக்கான உரூபாய்கள் வருமானமாகக் கிடைக்கின்றன. தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களும் இதில் அடங்கும். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மின்னஞ்சல் பணப் பரிமாற்றத்தை எவ்வாறு வரவேற்க இயலும்?

    Share
  • படக்கவிதைப் போட்டி – (90)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    15401477_1179568085430722_1334656740_n

    27182698n05ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 17.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • தீபத் திருநாள்!

    திருவண்ணாமலை மகிமை

    at

    அண்ணா மலையாய் திகழ்ந்திடும் தலம்
    ஆதியும் அந்தமும் இல்லாதான் தலம்
    இருள் நீக்கும் ஜோதி வடிவான தலம்
    ஈடற்ற பெருமைகள் பல பெற்ற தலம்
    உண்ணாமுலை உடனுறைந்திடும் தலம்
    ஊழ்வினை அகற்றும் புண்ணிய தலம்
    எங்கள் திருவண்ணாமலை தெய்வீக தலம்
    ஏகமனதுடன் நினைத்தால் முக்தி தரும் தலம்
    ஐயம் நீக்கி சிந்தை தெளிவிக்கும் தலம்
    ஒப்பற்ற சித்தர்கள் பலர் வாழ்ந்த தலம்
    ஓயாது மூலிகைக் காற்று தாலாட்டும் தலம்
    ஔவைக்கு பிரியமான சண்முகநாதனும்
    அருணகிரிநாதருக்கு அருளிய தலம்
    அஷ்ட லிங்கங்களையும் கிரிவலம் வந்தால்
    அல்லல்கள் யாவும் அகன்று ஓடிடும்
    கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள்
    காணும் இடமெங்கும் தீபங்கள் ஜொலிக்கும்
    ரமணர் சேஷாத்திரி போன்றோரால் தான்
    சிறப்புகள் பெற்றது நம்முடைய தலம்
    அண்ணா மலையை அனுதினம் நினைப்போம்
    அல்லல்கள் மறைந்து அவனியில் நிலைப்போம்

    சித்ரப்ரியங்கா ராஜா
    திருவண்ணாமலை.

    Share
  • அழுதகண்ணீர்

    ரா.பார்த்தசாரதி

     

    அழுத  கண்ணீர்  என்றும் ஆற்றாமையை உணர்த்தும்

    தொண்டுள்ளம், கொண்டு, மக்களின் பசியாற்றினார்

    அவர் இறக்கும் போது கடல்நீரும் கண்ணீரில் கரையும்

    அலை கடலென மக்கள் வெள்ளம் அஞ்சலி செய்ததே !

     

    சாதனை படைத்தது வாழ்ந்து, வரலாறாக புகழ் ஓங்கியதே

    மக்கள் மனதில் குடிகொண்ட தால் அம்மா என அழைத்தனரே

    வினைத்திட்பம் கொண்டு எதிரிகளையும் எதிர்த்து நின்றாய்

    அஞ்சி விடாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றாய் !        

     

    செய்வதை மட்டும்  சொல்லிட வேண்டும்

    சொன்னதை  நிச்சயம் செய்திட வேண்டும்

    நல்லதையே செய்ய நினைத்திடல் வேண்டும்

    பாகுபாடின்றி செயலாற்றினால் புகழ் தேடி வரும் !

    Share
  • இசைந்திடும் இரவும் உறங்கா இசையும்

    எஸ்.வி. வேணுகோபாலன்

    av
    எழுபதுகளின் இரவுகள் சங்கீதப் பிசாசுகளுக்கானவை. புதன் கிழமை இரவு பத்து மணி சென்னை வானொலியிலிருந்து ஒலிபரப்பாகும் பழைய பாடல்களுக்காக விழித்திருக்கும் இதயங்களுக்கானது. பகலில் ஒலிக்கும் ஒரு பாடல், இரவில் ஒலிக்கையில் புது மெருகோடு காதில் இறங்குவதன் ரசம் அதைக் கேட்டுக் கிறங்கியவர்களுக்குத்தான் பிடிபடும். யார் வேண்டுமானாலும் யாரையும் காதலிக்கட்டும். யாரும் யாரோடும் கட்டிப்புரண்டு சண்டை போடட்டும். யாரை நினைத்தும் யாரும் உருகித் திணறித் திண்டாடட்டும். ஆனால் அதை தயவு கூர்ந்து பாடலாக்கி இசையூட்டி எங்கள் உள்ளத் திருவோட்டில் போடுங்களய்யா, நாங்கள் வாழ்ந்துகொள்கிறோம் என்று ஏங்கியிருந்த காலங்கள் அவை.

    நேர்கோட்டில் பாடிவிட்டுப் போகும் பாடல்கள் ஒரு பக்கம்.குரலின் வழி கொஞ்சம் போதையூட்டும் குழைவுகளும், மாற்றங்களும், சாகச விளையாட்டுகளும் கொண்ட பாடல்கள், அடடா..அடடா…. உயிரை உறிஞ்சி எடுக்க வருபவை அல்லவா…பென்சிலால் போடும் மெல்லிய கோட்டின் மீது அழுத்தமாகப் பேனாவால் வரையும் ஓவியம்போல, “பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..”என்று படிக்கும் இளசான குரலின்மீது வெற்றிலை, புகையிலை, பாக்கு போட்டுக் குதப்பியவாறு பாடுவது போல் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் என்று ஒரு வித்தியாசமான காரக் குரல் அதே வரிகளை வசீகரமாகத் தொடுத்துச் செல்லும்! ஆலாபனை அழகுக்கும், தமிழ் உச்சரிப்புக்கும், கம்பீர ராக நிரவலுக்குமாகக் கொடிகட்டிப் பறந்த சி.எஸ். ஜெயராமன் என்ற அற்புதக் கலைஞனை ரசிகர் கூட்டம் கொண்டாட வைத்த பாடல் அது. “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே….” மட்டுமென்ன இலேசான இன்பமா! அப்புறம், மெல்ல மெல்லப் பரவி வந்து உடல் தழுவும் தென்றல் போன்ற, “அன்பாலே தேடிய என் அழகுச் செல்வம்“ பாடல் ஓர் அமுத ஊற்றாயிற்றே! “வீணைக் கொடியுடைய வேந்தனே” என்ற அற்புதமான ‘சம்பூர்ண இராமாயணம்’ படப் பாடலில் சி.எஸ்.ஜே. “சங்கீத சௌபாக்யமே” என்று நுழையும் இடம் எத்தனை அலாதி! காலையில் பாடும் ராகம், உச்சி வேளையில், வெண்பாவுக்கு உகந்தது, அகவல் பாவிற்கு…என ராகங்களை விவரித்துச் செல்கையில், இராவணனை அவரது அன்பு மனையாள் மண்டோதரி “சுவாமி, தாங்கள் கயிலைநாதனை கானத்தால் கவர்ந்த பாடல்?” என்று கேட்க, அவர் “கா…..” என இழைத்து இழுத்து காம்போதி ராக ஆலாபனையில் உயர்த்திப் பிடிக்கும் இடம்… அடடா…அடடா! “குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” இல்லாமல் ‘இரத்தக் கண்ணீர்’ கிடையாது. ஆயிரம் காதுகள் போதாது வண்ணக்கிளியே!

    குழந்தைக் குரலின் கொஞ்சுமொழி என்றால் எம்.எஸ். ராஜேஸ்வரி! “குவா குவா பாப்பா, இவ குளிக்க காசு கேப்பா,” “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே,” … ஆஹா…என்ன ரம்மியமான பட்டியல்! “கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே” பாட்டைக் கேட்டுக் கண் கலங்காதவர் உண்டா! “மியாவ் மியாவ் பூனைக்குட்டி, வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி” பாடாத அந்நாளைய மனிதர் உண்டா! காலத்தைப் பின்னோக்கித் தள்ளும் உத்தியில் மணிரத்தினம் இயக்கத்தில் வந்த ‘நாயகன்’ படத்தின் “நான் சிரித்தால் தீபாவளி” பாடலில் சேர்ந்து ஒலிக்கும் ராஜேஸ்வரி-ஜமுனாராணி குரல்கள் எத்தனை நர்த்தனம் பயின்றவை!

    “ஒரே பாடல்” (எங்கிருந்தோ வந்தாள் ), “இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்” என்ற வரிகளையும் உள்ளடக்கிய “நான் கவிஞனும் இல்லை” (படித்தால் மட்டும் போதுமா), “கற்பனைக்கு மேனி தந்து” (பாட்டும் பரதமும்) என டி.எம். சவுந்திரராஜன் பாடல்களில் இரவுக்கு தோதானவை என்றே தனி பட்டியல் இருக்கும்.

    கொஞ்சுமொழி பாடல்களில் முத்திரைப் பாடகி (நடிகர், இயக்குநர், எழுத்தாளருமான) பி. பானுமதி! “கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே” என்ற தாளகதி மிக்க பாடல் (அதில் “பானு மதி மாறிவரும்” என்று அவர் பெயரைத் தாங்கிவரும் சொற்களை அவரே பாடுவது சுவையான இடம்!), “பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று” என்ற உருக்கமான கீதம், “மாசிலா நிலவே” (அம்பிகாபதி) பாடலின் காதல் மணம், “அன்னை என்பவள் நீ தானா,” “அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்” ….பட்டியல் முடியக் கூடியதா! ‘மயங்காத மனம் யாவும் மயங்கும்’ வசீகரக் குரல் அல்லவா அது!

    புல்லாங்குழலின் மெல்லிய தொடுப்பில் புறப்பட்டு வேகம் கொள்ளும் “காலங்களில் அவள் வசந்தம்” (பாவ மன்னிப்பு), “நிலவே என்னிடம் நெருங்காதே” (ராமு), “மௌனமே பார்வையால்” (கொடிமலர்) என்ற மனத்துக்கு நெருக்கமான வரிசையில் எத்தனை பாடல்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ் அளித்தார், இரவுகளுக்காகவே!குழந்தைக் குரலில் எஸ். ஜானகி பாடியிருக்கும் பாடல்கள் தனிச் சுவை மிக்கவை. “கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே,” “டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா,” “டாடி டாடி ஓ மை டாடி” …..ரீங்கரிக்கும் வித்தியாசமான குரல் அனுபவம் அது.

    எம்.எஸ். விஸ்வநாதனின் அசாத்திய இசையில் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தின் “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” என அபாரமான தாளக்கட்டில் ஜானகி கெஞ்சியும் கொஞ்சியும் விஞ்சியும் வெளிப்படுத்தும் காதல் ஏக்கக் குரல், இரவில் கேட்கையில், உணர்வு கூடுதலாய்த் ததும்பி கரை தொட்டு மீளுமே!பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்தில், இளையராஜா இசையில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடலுக்கு மலேசியா வாசுதேவன் வாய்த்தார். பின்னாளில், ‘கல்யாணராமன்’ படத்தில், “ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன் என்று பட்டையைக் கிளப்பினார்! நெகிழ்ச்சியுறவும், ஆவேசம் கொள்ளவும், மென்மையாகக் காதல் பேசவும் என அவரது பாடல்கள் ஒலித்தன.

    “சதன், ஷோபா இவர்களுடன் டி.எம். சவுந்திரராஜன் பாடிய பாடலின் படம் இரு மலர்கள்” என்று வானொலியில் அறிவிப்பு கேட்டதும், பக்கத்தில் ஓடி வந்து காதைத் தீட்டிக்கொண்டு கேட்ட “மகராஜா ஒரு மகராணி, இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி” என்ற கொஞ்சும் பாடலை அன்றைய ரசிகர்கள் யார் மறந்திருக்க முடியும்? “யாரது இங்கே மந்திரி, குட்டி ராணி வந்தாளே எந்திரி” என்று குழந்தைக்குரல் ஆணையிடுவதும், “வணக்கம் வணக்கம் சின்ன ராணி” என டி.எம்.எஸ். கம்பீரக் குரல் வளைவதும் …

    எப்படிச் சொல்வது!சதன், சாய்பாபா என்ற பெயர்களைக் கேட்டவுடன் மனம் துள்ளாட்டம் போடும். பாட்டில் வரும் சிறப்பு சப்தங்கள்.. சேட்டை ஒலிகள்… “அந்தப் பக்கம் வாழ்வது ரோமியோ” என்ற பாடலில் சாய்பாபா பண்ணும் அமர்க்களம்! அதில், “ஊர்வசி வந்தும் மயங்கிடார்… உன் மேல் ஆணை மை கிடார்” என்று கிடார் மீட்டும் ஒரு ரகமான பாடல் அது.வி. குமார் இசையில், ‘வெள்ளி விழா’ பாடல்களில் எதை இழக்க முடியும்? ஆர்ப்பாட்டக் குரல்காரரான எல்.ஆர். ஈஸ்வரியை, “காதோடுதான் நான் பாடுவேன்” என்று அதிராமல் பாட வைத்த அந்தப் பாடல் இரவில் கேட்டு விம்மி விடுதலை தேடித் திணறவென்றே உருவாக்கப்பட்டது. (“நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்” என்று பி. சுசீலாவை அதே படத்தில் குமார் பாடவைத்திருந்தார்!)

    எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்னுமொரு மென்குரல் அசுரன், வீட்டுத் திண்ணைகளில், வயல்களில், தெருவோரக் கடையில் டிரான்சிஸ்டரும் கையுமாகத் துண்டு விரித்துத் தலை சாய்த்தவர்களை வாட்டி எடுத்துக் கொண்டாட வைத்தார்.“ஆயிரம் நிலவே வா” பாடல் (அடிமைப்பெண்) கே.வி. மகாதேவன் இசையில் ஒரு இரவுக் கொடை! “அவள் ஒரு நவரச நாடகம்” (உலகம் சுற்றும் வாலிபன்), “சம்சாரம் என்பது வீணை” (மயங்குகிறாள் ஒரு மாது)…. நிறைவுறாத பட்டியல் அது. ‘பட்டின பிரவேசம்’ படத்தில் எம்.எஸ்.வி. யாத்தளித்த வயலின் இசையோடு, உள்ளத்தை மென் காதலுணர்வால் சீண்டிய “வான் நிலா நிலா அல்ல, வாலிபம் நிலா” பாட்டுக்காக எத்தனை இரவுகளையும் பரிசளிக்கலாம்.

    ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலால் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான வாணி ஜெயராமின் தனித்துவக் குரலை எப்படி விட? “அன்பு மேகமே இங்கு ஓடி வா” (எங்கம்மா சபதம்), “மல்லிகை முல்லை பூப்பந்தல்” (அன்பே ஆருயிரே), ‘சங்கராபரணம்’ படத்தின் முடிவற்ற இசைக்கலவையில் எஸ்.பி.பி., வாணி ஜெயராம் இருவரும் கலக்கியெடுத்த பாடல்கள் (ப்ரோ சேவா…., ஓம்கார நாதானு )…பி. சுசீலா குரலின் தேர்ச்சியான சில பழைய பாடல்களை (“இரவுக்கு ஆயிரம் கண்கள்,” “பகலிலே சந்திரனைக் காணப் போனேன்,” “கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ,” “காதல் சிறகைக் காற்றினில் விரித்து,” “உன்னைத்தான் நான் அறிவேன்” …) இரவில் கேட்டுப் பாருங்கள், பிறகு பகலில் கேட்க நேர்ந்தாலும் உங்கள் எண்ணங்களில் ஒரு ரகசிய இரவு சூழ்வதை உணர்வீர்கள்.

    பார்த்திராத இசை அமைப்பாளர்களை, சந்தித்திராத பாடகர்களை, கண்டிராத படத்தின் காட்சிகளை திரைக் கலைஞர்களுக்கான மானசீகமான மதிப்போடும், அவர்தம் கலைக்கான வணக்கங்களோடும் இழைந்து உருகிக் கொண்டாடிப் பாடல்களைக் கேட்கத்தக்க இரவு நேரங்கள் மனித உள்ளத்தின் பண்பாக்கத்தை மேலும் ஒரு படி மேலுயர்த்திக் கொடுக்க அரவணைக்கின்றன. அசாதாரணக் குரல்களில் ஒலிக்கும் பாடல்கள் உள்ளத்தை வருடிக் கொடுக்கின்றன.

    அன்றாடத்தின் பாடுகளை, உழைப்பின் வலியை, உறவுகளுக்கிடையே வாழ்க்கை ஏற்படுத்தும் அலைக்கழிப்புகளை எல்லாம் மறந்து உடலையும் உள்ளத்தையும் இலகுவாக்கி மிதக்க வைக்கின்றன. நெகிழ்ச்சியுற அலைமோத விடுகின்றன. மழை நேரத்தில் கைகளுக்கு வந்து சேரும் சூடான, இதமான தேநீராய் உடல் முழுக்கப் பரவி மனம் முழுக்கக் கோலோச்சுகின்றன. திக்குமுக்காட வைக்கும் சமகால வாழ்க்கையில் மனித இயல்புகளை இழந்துவிடாமலும், நேய உணர்வுகளை மறுத்துவிடாமலும், இளைப்பாறி உணர்வுகளை மீட்டெடுத்துக் கொள்ளும் வழியில் வாழப் பழகிக் கொள்ளவும் இசை நமக்கு இயற்கை அளித்த இன்னொரு வரம். இரவு அந்தத் (தா)வரத்திற்கு ஓர் உரம்.

    நன்றி  தீக்கதிர்

    Share