நாகினி

சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது….
(நேர்மையான அரசு)

மொழி வாழ்த்து

சத்தியம் சொல்வதற்குச் சக்தியானச் செந்தமிழே
வித்தென எங்கருத்தை வீம்பிலா வார்த்தைகளால்
மத்தளமாய்க் கொட்டிநல் மன்றத்தில் சேர்ப்பதற்கு
இத்தருணம் காப்பாய் இனிது!

அவையடக்கம்

எம்போன்றோர் நற்கவியை ஏற்று யினிதாய்த்
தம்மன்பால் வாழ்த்தத் தவமென யாம்பெற்ற
நம்பிக்கை ஊட்டும் நடுவர் அவையோர்முன்
பம்பரநாச் சுற்றும் பணிந்து!

நேர்மையான அரசு

எட்டிவிட்டோம் பெண்கல்வி எட்டாத தூரத்தில்
பட்டமுடன் ஆளும் பதவியும் பெற்றென்ன
கிட்டியதா இன்னும் கிழியாத நல்லாடை
அட்டிலென நேர்மை அரசு!

நேர்மை அரசென நேசமிகு ஆட்சியின்
பார்வை அமையாததால் பண்பு கெடுக்கின்ற
பார்கள் எனயெங்கும் பாதைமாற்றும் போதையில்
ஊர்கள் குடிபுகும் ஊறு!

குடிபுகுந்து ஊறுசெய்துக் கூத்தடிக்கும் வஞ்சம்
தடிபிடிக்கும் மூப்பிலும் தப்பான நெஞ்சம்
படிந்தினிதாய் சட்டமெனும் பாதமுடன் கொஞ்சி
நடிப்பதன்றோ வாழ்வுக்கு நஞ்சு!

வாழ்வுக்கு நஞ்சாகும் வாக்குத் தவறியிங்கு
தாழ்வுக்குப் பாலமாச்சே தப்பான ஆட்சியென
ஊழ்வினையை நொந்திங்கே ஊர்கூடி மௌனித்தால்
ஏழ்மையென்றும் மாறாத ஏறு!

மாறாத ஏறுமுக மாசெனப் பொய்புரட்டே
ஆறாதப் புண்ணாகி ஆட்சிபீடம் ஏறியிங்குத்
தேறாத மக்களின் தேர்தல் இதுவெனச்
சேறாகும் ஆளும் செழிப்பு!

ஆளும் செழிப்பு அமைந்தரசு நேர்மையில்
நாளும் மறையாத நம்பிக்கை ஊக்கவுறுதி
வாளும் நிறைவான வாட்டமிலா நெஞ்சாகி
மாளும் சமுதாய மாசு!

சமுதாய மாசெனச் சாதிக் கொடுமை
அமுதான மானிடத்தை ஆட்டிவைக்க நச்சுக்
குமுதமாய் தேர்தலாட்சி கும்பிடு வாக்கும்
சுமுகமான பேச்சும் சுணக்கு!

பேச்சும் சுணங்கிவிட்டால் பெற்றிட லாகுமே
கூச்சல் குழப்பம் குடியாட்சி எங்கிலும்
ஏச்சும் குறையாத எந்திர வாழ்வெனப்
பாய்ச்சிப் பரவும் பகை!

பரவும் பகையொழிந்துப் பாசமுடன் நேர்மை
வரவும் செயலாற்றும் வாக்கும் உளதாய்
இரக்காக் குடியாட்சி ஈங்கு மலர்ந்தால்
சரமாய் ஒளிருமாளும் சங்கு!

ஒளிருமாளும் சங்குடன் ஒப்பிலாத மக்கள்
இளித்திங்கு வேடமிட்டு இம்சிக்கு வோரைத்
தளிர்க்கைகள் கோர்த்தென்றும் தண்டிக்கும் போக்கே
களிப்புடன் முன்னேறும் காப்பு!

முடிவுரை

சட்டம் எனும்நற் சாட்டையால் நேர்மையுடன்
ஆட்சி அமைக்கும் அதிகாரம் அன்புடனும்
கட்சி குழப்பமின்றி கண்ணாய்க் குடிகாத்தால்
உச்சி முகரும் உலகு!

கவியரங்கு தந்தெமக்குக் கண்ணான நெஞ்சே
நவிழ்ந்திடுவேன் நன்றி நலம்!

… நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *