ஆண்டாள் – 22 ….
—————————————
”அங்கண்மா ஞாலத்திற்(கு) ஆண்டாள் திருப்பாவை,
திங்கள் கதிர்முகத்தோன் தேவகிசேய், -செங்கண்மால்,
நோன்பிருந்து சொல்லியவண்ணம் நாடுவோர் நிச்சயம்
வான்புகவை குண்டம் வசம் ” ….கிரேசி மோகன்….
ஆண்டாள் – 22 ….
—————————————
”அங்கண்மா ஞாலத்திற்(கு) ஆண்டாள் திருப்பாவை,
திங்கள் கதிர்முகத்தோன் தேவகிசேய், -செங்கண்மால்,
நோன்பிருந்து சொல்லியவண்ணம் நாடுவோர் நிச்சயம்
வான்புகவை குண்டம் வசம் ” ….கிரேசி மோகன்….
(மீ.விசுவநாதன்)
நம்பி இறைவ னிருதாள் பிடித்தால் நமதுளத்தில்
எம்பிக் குதித்துக் கிடப்பான் அழகனாம் ஈசனென்பான் !
வெம்பி விழாமல் வினையைத் திருப்பிடச் செய்வதற்கு
“நம்பி” அவனைத் தவிரவும் யாரடா நம்துணையே !
( கட்டளை கலித்துறை )
(பிரதோஷ தினம் : 07.01.2016)
க. பாலசுப்பிரமணியன்
நீர்பாதி நிலம்பாதி தன்னில் தவமாக உடல் நிறுத்தி
நிலையில்லா மனம்தன்னை இறை நினைவில் நிறுத்தி
நினைவின் கருவாய் நீர்வண்ணன் உருவம் நிறுத்தி
நினைவிழந்த தவத்தோனாய் நின்றான் சுதபனுமே !
சுடுசொல்லில் சுவைகண்ட துர்வாசர் நிலையிழந்து
உருமாற்றி உருக்குலைந்த தவளையாய் உருவாக்க
உள்ளத்திலே தவமாகத் தாமோதரன் மட்டுமிருக்க
உளம்கனிந்த வடிவழகன் சுதபனுக்குக் காட்சி அன்பில் !
தன்னழகில் நிலைகுலைந்த தவத்தோன் நான்முகனும்
விண்ணுலகில் வேறில்லையென்ற மமதையில் நிற்க
வடிவழகன் கண்டதுமே விழிநிறுத்தி வியந்தான் அன்பில்
கண்ணமுது தேடியவன் விண்ணமுது கிடைத்திடவே !
கண்ணழகு காலழகு கையழகு கண்ணா !
காண்கின்ற திசையெல்லாம் உன்னழகு !
கோலாட்ட நடையழகு கைகளிலே குழலழகு
குசேலன் நட்பழகு நீ குறைவில்லா வடிவழகு !
வாமன வடிவழகு! வளர்ந்திட்ட விஸ்வரூபம் அழகு !
வராஹ வடிவழகு! வீரனே! வில்லுந்தன் கையழகு !
தாழம்பூ மணமழகு! உன்னருகே தாயாரின் துணையழகு !
தாளாத அன்பழகு ! தூயவனே, உன் திருவுள்ளம் அழகு!
”ஆண்டாள் -21″….
————————————-
போற்றக் கலங்களெதிர் பார்க்கும் கலங்கரைத்
தோற்றத்திற்க்(கு) ஈடாய் திருப்பாவை, -சாற்றினாள்
சம்சாரக் கப்பலது, சிக்கிடாது பக்தியாம்
மின்சாரம் ஆண்டாள் மினுக் ….கிரேசி மோகன்….
– தேமொழி.
சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் – தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
எல்லாம்பொய் அட்டூணே வாய்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்து அவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய்.
பொருள் விளக்கம்:
தன் சுற்றத்தார் ஒருவரை; உதவிநாடி தன்னிடம் வந்தவரை விருந்தோம்பும் ஒருவர், வந்தவர் தன்னுடன் தொடர்பில் இருப்பவரல்ல என்று தெளிவாகத் தெரிந்தாலும், அந்த உறவினர் வறுமையில் இருந்து மீள முடியாதிருப்பதை ஆராய்ந்து அதை நீக்கும் முறையை அறிந்திராவிடில், அவருக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? (பசி நீக்கும் உணவளித்துக் காப்பதைத் தவிர பிற உதவிகள்) எல்லாமே பொய்; சமைத்து உணவளித்து உதவுவதே மெய்யான உதவி.
பழமொழி சொல்லும் பாடம்: அறங்களுள் சிறந்த அறமாகக் கருதப்படுவது வறியவரின் பசி நீங்க உணவளிப்பது மட்டுமே. பசி தீர்க்கும் அறத்தின் சிறப்பை வள்ளுவர்,
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்: 226)
வறுமையில் உழல்பவரின் பசியைத் தீர்த்திடுக. அந்த அறம் ஒன்றே பொருள் பெற்றோர் தனது செல்வத்தை தம் பிற்கால நலனுக்காகச் சேமித்து வைக்கும் கருவூலம் என்கிறார்.
பொழுது புலர்ச்சி விண்ணுளவி
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++
http://dawn.jpl.nasa.gov/
++++++++++++++
நிலவினில் தடம் வைத்தார்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆராயத்
தளவுளவி சிலவற்றை
நாசாவும்
ஈசாவும் உளவ இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசியை விண்வெளியில் ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
வால்மீனை விரட்டிச் சென்று
தூசியைப் பிடித்துக்
காசினியில் இறக்கும் விண்கப்பல் !
வக்கிரக் கோள் ஒன்றின்
மாதிரி மண் எடுத்து
பூமிக்கு மீண்டது
ஜப்பான் விண்ணுளவி !
அயான் எஞ்சினை முதன்முறை இயக்கி
பல மில்லியன் மைல்கள்
பயணம் செய்து
முரண்கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்டு
புலர்ச்சி விண்ணுளவி
குள்ளக் கோள் செரிஸை நெருங்கி,
நீரெழுச்சி காணச் செல்லும்
சூரிய மண்டலம் ஆய்வதற்கு !
+++++++++++
பொழுது புலர்ச்சி விண்கப்பல் குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது.
2007 இல் ஏவப்பட்டு நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி [Dawn Space Probe] முதன்முறையாக அயான் எஞ்சினை உந்துவிசையாகப் பயன்படுத்தி சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்து பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, முரண் கோள்கள் திரியும் வளையத்தில் [Astroid Belt – Between Mars & Jupiter] வெஸ்டா முரண்கோளைச் 14 மாதங்கள் [2011- 2012] சுற்றி முதலில் ஆராய்ந்தது. பிறகு பயணம் தொடர்ந்து, இப்போது அடுத்தோர் குள்ளக் கோள் செரிஸை [Dwarf Planet Ceres] ஆராய நெருங்கி விட்டது. முதல் நெருக்கத் தளப்பதிவுச் சுற்றுவீதி [Survey Orbit- RC3] 2700 மைல் [4400 கி.மீ.] உயரத்தில் இயக்கப் பட்டது. அது நிகழ விண்ணுளவி ஒரு மாத நாட்களில் 5 சுற்றுக்கள் செய்தது. அந்த உயரத்தில் பொழுது புலர்ச்சி விண்ணுளவி 3 வாரங்கள் தளப்பதிவு [Survey] செய்தது.

அடுத்து புலர்ச்சி விண்ணுளவி 118 சுருள் சுற்றுகளில் [Spiral Revolutions] செரிஸ் நோக்கி இறங்கி, 915 மைல் [1470 கி.மீ.] உயரத்தில் மூன்றாம் தளப்பதிவுச் சுற்றைத் [HAMO -High Altitude Mapping Orbit] தாண்டி, 240 மைல் [385 கி.மீ.] உயரத்தில் நான்காம் தளப்பதிவுச் சுற்றுக்கு [LAMO -Low Altitude Mapping Orbit] மாறுகிறது. அந்த மாறுபாடு நேரும்போது விண்ணுளவி 2 மாதக் காலம் 160 முறை சுற்றிவரும்.
பொழுது புலர்ச்சி விண்ணுளவில் இயங்கி வரும் கருவிகள் :
குள்ளக் கோள் செரிஸ் தன்னை ஒருமுறை சுற்ற சுமார் 9 மணி நேரம் எடுக்கிறது. புலர்ச்சி விண்ணுளவி செரிஸை ஒருமுறை சுற்ற 5:30 மணி நேரம் பிடிக்கிறது. இப்போது [டிசம்பர் 4, 2015] பொழுது புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 309 மில்லியன் மைல் [500 மில்லியன் கி.மீ] தூரத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது. அதிலிருந்து வரும் வானலைச் சமிக்கைகள் [ரேடியோ சிக்னல்ஸ்] பூமிக்கு வந்து சேர சுமார் 1 மணி நேரம் [55 நிமிடங்கள்] ஆகும்.

“ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுகள் இருப்பதாக நாங்கள் கண்டது இதுவே முதன்முறை. மேலும் இந்தக் கண்டுபிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபித்துக் காட்டியது.”
மைக்கேல் கியூப்பர்ஸ் [European Space Agency -ESA Spain]
“செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் உண்டாக அடித்தளக் கடல் உறைதுள்ளதா ? அல்லது தென்படும் இருபுற நீர் எழுச்சி ஊற்றுகள் மட்டும் தனித்து இயங்குபவையா என்னும் வினாக்கள் எழுகின்றன. ”
ஃபிரான்ஸ் விஞ்ஞான ஆராய்ச்சித் தேசீய மையம் வானியலார்.
செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு பில்லிய ஆண்டுகளுக்கு முன்பு நீரும், கார்பன் மூலக்கூறுகளும் சுமந்து வந்த முரண் கோள்கள் [Comets & Asteroids] பூமியைத் தாக்கின என்னும் முன்னோடி நியதிகளை வலியுறுத்தும். அடுத்த ஆண்டு நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [Dawn Spacecraft] செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றும் போது மேலும் புதிய தகவல் கிடைக்கும்.”
ஹம்பர்டோ காம்பின்ஸ் & கிரிஸ்டீன் கம்ஃபர்ட், வானியலார், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்.
“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு [Asteroid]] அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”
ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி
“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது. அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”
சார்லஸ் போல்டன் (NASA Administrator)

சூரிய மண்டலத்தைச் சேர்ந்த குள்ளக் கோள் செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு
2014 ஜனவரி 22 இல் ஈசாவின் விஞ்ஞானிகள் [ESA European Space Agency Scientists] தமது ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் [Herschel Space Observatory] குள்ளக் கோள் செரிஸிலிருந்து விட்டுவிட்டுத் தெரியும் இரண்டு நீர் எழுச்சி ஆவி ஊற்றுகள் [Water Vapour Spouts, like Geysers] வெளியேறு வதை நோக்கியுள்ளார். முழு உருண்டையான குள்ளக் கோள் செரிஸ் முரண் கோள்கள் சுற்றும் வளையத்தில் [Asteroid Belt] ஒன்றாக உள்ளது. முரண்கோள்கள் வளையம் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன. செரிஸ் குள்ளக் கோள், முரண்கோள்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரியது !

2007 இல் நாசா ஏவிய “புலர்ச்சி” விண்ணுளவி வெஸ்டா முரண் கோளை முதலில் சுற்றி உளவித் தற்போது குள்ளக் கோளை நோக்கிச் செல்கிறது. புலர்ச்சி 2015 ஏப்ரலில் செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றி நீர் எழுச்சி ஊற்றுக்களை நெருங்கி ஆராய்ந்து, புதுத் தகவலை அனுப்பும். செரிஸ் குள்ளக் கோளை முதன்முதல் 1801 இல் இத்தாலிய வானியல் விஞ்ஞானி கியூஸெப் பியாஸ்ஸி [Giuseppe Piazzi] கண்டுபிடித்தார். அது வேளாண்மை, இனவிருத்தியைக் குறிப்பிடும் ஒரு ரோமன் பெண் தெய்வத்தின் பெயர். செரிஸின் விட்டம் 950 கி.மீ. [590 மைல்]. அது ஒருதரம் சூரியனைச் சுற்றிவர நாலரை ஆண்டுகள் எடுக்கும். முதலில் அதைச் சூரிய மண்டலத் தோற்றத்தில் எச்சமான ஒரு பளுமிக்க முரண்கோள் [Massive Asteroid] என்றுதான் கருதினார். கூர்ந்து நோக்கியதில் அது முழு உருண்டை வடிவத்தில் சிலிகேட் உட்கரு கொண்ட, பனிக்கவச உட்புறத்தை உடைய சிறுகோள் என்று முடிவு செய்யப் பட்டது. 2008 ஆம் ஆண்டில் அகில் வானியல் ஐக்கியக் குழுவினர் [IAU – International Astronomical Union] தீர்ப்புப்படி அது குள்ளக் கோள்கள் [Dwarf Planets] வகுப்பில் ஒன்றாய் புளுடோ கோளுடன் இடப்பட்டது.
2011 -2013 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா விண்வெளி ஆணையகத்தைச் [ESA -European Space Agency] சேர்ந்த மைக்கேல் கியூப்பர்ஸ் [Michael Kueppers] என்பவர் பூமியைச் சுற்றிவரும் ஹெர்ச்செல் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி மூலம் [Infra-Red Instrument] நான்கு முறை, குள்ளக் கோள் செரிஸை உளவி வந்தார். அப்போது அவர் வியக்கத் தக்க முறையில் செரிஸ் குள்ளக் கோளில் முதன் முறையாக இரண்டு நீர் எழுச்சி ஊற்றுக்களைக் கண்டார். அவை இரண்டும் சூரியனை நோக்கும் திசையில் தெளிவாய்த் தெரிந்தன. நீள்வட்ட வீதியில் சூரியனைச் சுற்றி வரும் செரிஸ் குள்ளக் கோள் சூரியனை நெருங்கும் போது மட்டுமே அந்த நீர் ஊற்றுகள் தென்பட்டன. அந்த இரண்டு நீர் ஊற்றுக்களும் வினாடிக்கு [6 கி.கி.] 13 பவுண்டு வீதம் நீரை வெளியேற்றியன. விஞ்ஞானிகள் நீர் எழுச்சி ஊற்றுகள் செரிஸில் இருப்பதாகக் கண்டது இதுவே முதன்முறை. மேலும் இந்தக் கண்டு பிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபிக்க வழி வகுத்தது.

செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் ஒரு சமயம் தெரிந்தும், மறு சமயம் மறைந்தும் மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன ? விந்தையாக நீர் எழுச்சி ஊற்றுகள் சூரியனுக்கு நேர் எதிரில் வரும் போதுதான் தெரிகின்றன. சூரியனுக்கு அப்பால் செரிஸ் நீள்வட்ட வீதியில் செல்லும் போது, நீர் ஊற்றுகள் தெரிவதில்லை. அதவது செரிஸ் சூரியனுக்கு அருகில் வரும் போது மேற்தளம் சூடாகி, அதன் அடித்தளத்தில் உள்ள உறைந்த நீர் உருகி, அழுத்தம் ஏறி பீறிட்டு எழுகிறது ! சூரியனைச் செரிஸ் தாண்டிப் போனதும் அடித்தளம் குளிர்ந்து போவதால் நீர் எழுச்சி ஊற்று நிறுத்தம் அடைகிறது ! 2015 ஏப்ரலில்சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸை நெருங்கி நோக்கும் போது இன்னும் புதிய தகவல் வெளியாகும்.
“புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம். விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)
“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம். பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது. அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம். பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவி லிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
“வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும். முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது. பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண்கோள் நோக்கிச் செல்கிறது.
முதல் விண்வெளிக் குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்” [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது. 2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது. ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண்கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.
2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி 2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி அதைச் சுற்ற ஆரம்பித்தது. விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது. சூரியனி லிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது. இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப் படுகிறது. இப்போது புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.
இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System]. அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300 மைல்கள். அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ. இப்போது [2012 நவம்பர்] புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது. புலர்ச்சிக்குச் செரிஸ் முரண்கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.
நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.
நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது. பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன. நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.
விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது. வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லா வற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும். 2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.
2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது 2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத் துக்குச் செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர். பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.
வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வா யிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ). தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது. பூமியி லிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது ! திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது. சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது
பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். வெஸ்டா, செரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும். புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள் தான் இந்த வக்கிரக் கோள்கள்.! முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார். வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ். அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி. செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ). ஏறக்குறைய உருண்டையான செரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது. செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.
புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும், பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது. இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது. உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன. பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.
2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.
3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.
4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.
புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது. 2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும். பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.
(தொடரும்)
************************
தகவல்:
Picture Credits: NASA, JPL, ESA, JAXA
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/
5 (a) http://www.thinnai.com/?
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
By : John Matson (June 11, 2010)
13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
20 Wikipedea : http://en.wikipedia.org/
21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/
26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
27. http://en.wikipedia.org/
28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/
29. http://spaceref.com/
30. http://articles.
31. http://www.skyandtelescope.
32. http://gizmodo.com/the-
33. http://earthsky.org/space/
34. http://www.space.com/29984-
35. http://www.spacedaily.com/
36. http://spaceflightnow.com/
37. https://en.wikipedia.org/
38. http://mashable.com/2014/12/
39. http://theplanets.org/ceres/
40. https://en.wikipedia.org/
++++++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) ( January 1, 2016)
Preview YouTube video Dwarf planet Ceres ‘spewing water vapour’ – This is REAL Genius
Preview YouTube video Crazy Engineering: Ion Propulsion and the Dawn Mission
க. பாலசுப்பிரமணியன்
நான்முகன் விடுத்த சக்கரம் நைமிசாரண்யம் வந்தது
நானிலம் போற்றும் வண்ணம் விடியலைத் தந்தது
நான்மறை போற்றிட நல்லோருக்குப் புகல் தந்தது
நாதங்கள் முழங்கியே நாரணன் புகழ் சொன்னது !
மலர்வண்ணம் கனிவண்ணம் எழில் பொங்கும்
வான்மின்னும் கான்வண்ணம் மனம்கொள்ளும்
இறைபோற்றும் வேள்வி பெருக்கும் ஒளிவண்ணம்
இசையோடு இயல்சேர்க்கும் வேதியர் ஒலிவெள்ளம் !
வான்விட்டு மண் வந்து தவம்செய்த விண்ணவரும்
ஊன்விட்டு உயிர்தொட்டு மனம் காக்கும் யோகியரும்
இறைமட்டும் தேடி அமர்ந்த இனிய நைமிசாரிண்யம்
இயற்கையை இசைத்து இறைவன் படைத்த காவியம் !
மரணத்தை வெல்ல வரம்பெற்றான் விருத்தன்
மதம்கொண்ட களிறுபோல் மயக்கம் கொண்டான்
மனமுடைந்த இந்திரனும் மாலனின் சொல்கேட்டு
மாதவத்தோன் ததீசியிடம் எலும்பைப் பெற்றான் !
வஜ்ராயுத்தில் வளைந்தது விருத்தனின் ஆணவம்
வானவர் யோகியர் மோனத்தில் மலர்ந்தது கானகம் !
மறைகளை போற்றிடும் மாதவர் காண மாலனும் வந்தான்
மங்கலம் பொங்கிட மானுடம் தழைத்திட மார்கழி மணாளன் !
தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)
சு. விமல்ராஜ்.
இலக்கியம் என்பது மனித இனத்தின் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் கருவி மட்டும் அல்ல, அது சமூகம் என்னும் அமைப்புக்குள் கீழே விழுந்துவிட்டவனைக் கைப்பிடித்து தூக்கி நிறுத்தவும் உதவும். மனித இனம் காலங்காலமாய் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷிய இலக்கிய வரலாற்றின் ஆழமான பார்வைப் பதிவுகளில் படைப்பின் முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கான இலக்கியமாக, இலக்கியம் தன்னை மாற்றிக்கொள்ளும்போதுதான் அதன் அடர்த்தி உண்மையானதாக இருக்கும் என்ற நிலை உள்ளது. உருவம், உள்ளடக்கம், இலக்கணத்தன்மை இவை இலக்கியத்தை ஒரு மேல் தளத்தில் வைத்துப் பார்க்காமல் சாதாரண குடிமக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு எதிரிடையான கருத்து வழியும் உண்டு. ஏனென்றால் இலக்கியம் என்பது எப்போதும் இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஒரு கூற்று உண்டு.
அதிகார வர்க்கங்களின் முகமூடியைக் கிழித்து எறியும் விதமாக உருவான ரஷிய இலக்கிய முகம் நடுத்தர மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் கருவியாகவும் பயன்பட்டது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் இலக்கியத்துறையில் காணப்பட்ட மாற்றம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்றிலிருந்து இருபத்து ஐந்தில் உருவான உருவவியல் கோட்பாட்டின் வெற்றி என்று சொல்லுகிற அளவுக்கு அது அமைந்திருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹிஸ்ட்ரி ஆஃப் ஆர்ட்’ என்னும் அரசு நிறுவனம் நிறுவப்பட்டு அதனுடைய இலக்கிய வரலாற்றுப் பிரிவாக ஒன்று இயங்கியது. இந்நேரத்தில் உருவவியல் இயங்குதளம் விரைவாக இயங்கியது. அங்கே காணப்பட்ட மார்க்சியத்தின் அழகியலுக்கு நேர் எதிரான ஒரு திறனாய்வுக் கோட்பாட்டை திட்டவட்டமான முறையில் உருவவியல் முன் வைத்தது. அது, ஒரு இலக்கியப்படைப்புக்கு சமூகவியல் அல்லது உளவியல் விளக்கத்தையோ அல்லது படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தையோ கொடுப்பதைப் புறக்கணித்தது. கவிதைப் படைப்பு, அதன் கட்டுமானம், அதன் சீர்கள், தளைகள், பாணிகள் ஆகியவற்றின் மீது அக்கறை காட்டியது.
ஓபாயாஸ் என்ற பெயரில் விக்டர் ஸ்க்ளொவ்ஸ்கி என்பவரின் தலைமையில் இயங்கிய உருவவியலை சார்ந்தவர்கள் ஒரு படைப்பின் உள் அடக்கத்தைப் பொருட்படுத்தாமல் அதிலுள்ள சிறப்பான இலக்கிய உத்திகளை மட்டுமே ஆய்வு செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். கலை இலக்கியப்படைப்புகளுக்கு அதன் உள் கட்டமைப்புக்கு மட்டுமே முதன்மைக்கொடுத்தும் அவற்றை வெறும் சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்த்தும் வந்த பிளாக்கானோவியப் பார்வைக்கான எதிர்ப்பாகவே உருவவியல் என்றே கூறலாம். புரட்சிக்கு முந்தைய ரஷியாவில் இருந்த மொழியியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொண்ட உருவவியல் ஆய்வாளர்கள், ஃப்யூச்சரிசம் போன்ற நவீனப்போக்குகளை ஆதரித்தனர். பாட்டாளி வர்க்கம் பழைய சமுதாயத்தை உதறித்தள்ளியதைப் போல் தாங்கள் பழைய மரபுகளை எதிர்ப்பதாகக் கூறினர். தோஸ்தோவெஸ்கியின் படைப்புகளிலோ அல்லது நிகோலாய் பெர்டியெவின் தத்துவத்திலோ காணப்படுகின்ற கருத்துகளின் செல்வாக்கில் இருந்து இலக்கியத் திறனாய்வை விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உருவவியலை ஆதரித்தவர்களுக்கு இருந்தது. ஏன் என்றால் ரஷியர்களிடம் இறை நம்பிக்கை அதிகமாக இருந்தது.
உருவவியல் கோட்பாட்டாளர்களின் கருத்துகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. முழுவதும் கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவர்கள் என்று கருதத்தக்கவர்களால் ஏற்பட்ட புரட்சியால் மயக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலும்கூட கடவுள் செயல் என்ற தன்மையில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர் என்று உருவவியல் கோட்பாடு கொண்டவர்கள் கருதுகின்றனர். ரஷிய நாட்டின் குறியீட்டுக்கவிஞர் அலெக்சாண்டர் பிளாக்கை அவர்கள் சுட்டிக்காட்டினர் (ரஷிய புரட்சி இலக்கியம்.ப.85 .ராஜதுரை) தமது பன்னிருவர் என்ற கவிதையில் ஏசு கிருத்துவை செங்காவலரை வழி நடத்திச் செல்பவராக வர்ணிக்கிறார்.
கவிதைப்பாணியினை விடுதலை செய்வதும் பணிந்து போகும் சிம்பலிஸ்டுகளை மேன்மேலும் அடிமைப்படுத்தி வந்துள்ள தத்துவ சமயப் போக்குகளுக்கு தலை வணங்க மறுப்பதும் உருவவியலாளர்களின் முதன்மையான நோக்கமாகும் என்று போரிஸ் ஐசன்பாம் கூறுகிறார். எனவே, ஓபாயாஸ் குழுவானது மார்க்சிய அழகியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது, கட்சிக்குத் துணை புரிகின்ற இலக்கிய விமர்சனப் போக்குதான் என்று கட்சித்தலைவர்கள் சிலர் கருதியதில் நியாயம் இருந்தது. உருவவியலாளர்கள் தங்கள் கருத்துகளை தடையேதும் இல்லாமலும், மிகுந்த செருக்கோடும் பிரகடனப்படுத்தினர். இலக்கியத்தை வெறும் மேல் கட்டுமானம் என்று கருதுவதை முற்றிலும் மறுத்த ஐசன் பாம் ஏதாவது ஒரு பொருளாதார அல்லது சமூக அறிவியல் அடிப்படையில் ஒரு இலக்கியப் படைப்பை விளக்க முயற்சி செய்வது இலக்கியத்தின் உள் இயக்கங்களை அல்லது அதன் தனித்த இயக்கத்தை மறுப்பதற்கு ஒத்ததாகும் என்றும் கூறினார்.
உருவமும் உள் அடக்கமும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான தொடர்பு உள்ளவை என்பதைக் கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்கு ஸ்க்ளோவ்ஸ்கியால் தன் கருத்துகளை அன்று அச்சமின்றி வெளிப்படுத்த முடிந்தது. “கலையின் வடிவங்கள் அவற்றில் கலைக்குரிய நியாயங்கள் உண்டா இல்லையா என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். ஒரு புதிய வடிவம் ஏதோவொரு புதிய உள்ளடக்கத்தை வெளியீடு செய்வதாகத் தோன்றுவதில்லை. மாறாக தன் இலக்கிய மதிப்பை இழந்துவிட்ட பழைய இலக்கியத்துக்கான மாற்றீடாகத்தான் அப்புதிய வடிவம் தோன்றுகிறது.”(சான்று. விக்டர் க்ளொவ்ஸ்கி, கார்னல் யுனிவர்சிடி பிரஸ், லண்டன்.1977பக்கம்.85)
செயலின் ஒளிசார்ந்த நிழல்:
ஆரம்ப காலகட்டத்தில் உருவ இயல் மீதான போல்ஷ்வில் தலைவர்களின் நிலைப்பாடு இறுக்கமானதாக இருக்கவில்லை. பொதுவாக அவர்கள் இலக்கிய விவகாரங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதையே விரும்பினர். கருத்துப் போராட்டத்தின் மூலம் எதிர்தரப்பினரை முறியடிப்பதிலும் வென்று எடுப்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கடைப்பிடித்த அளவுகோல் எழுத்தாளர்கள் புரட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதுதான்.
உருவ இயலாளர்கள் கவிதையின் உத்தி நிலையைப் பற்றி ஒரு பட்டியலை உருவாக்கினார்கள். இத்தகைய பகுப்பு ஆய்வுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று புகாரின் கூறினார். இலக்கியத்தைப் பற்றிய காரண காரிய விளக்கம் தரக்கூடிய ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே என்றும் ஒரு குறிப்பிட்ட போக்கு ஏன் எவ்வாறு தோன்றியது என்பதை மார்க்சியத்தால் மட்டுமே விளக்கமுடியும் என்றும் கூறினார் த்ரோத்ஸ்கி.
அழகியல் பற்றிய மதிப்பீடுகளுக்கான அளவுகோல்கள் அனைத்தையும் மார்க்சியத்தால் மட்டுமே வழங்கிவிட முடியாது என்றும் ஒரு இலக்கிய வடிவத்திலுள்ள குறிப்பிட்ட கலையம்சங்கள் மீது அழுத்தம் தருவதில் நியாயம் உண்டு என்றும் ஒப்புக்கொண்ட த்ரோத்ஸ்கி உருவ இயல் பகுப்பாய்வு நுட்பங்களைப் புறக்கணிக்கவில்லை. ஏனெனில் கலை, உலகை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல; மாறாகக் கலைக்கே உரிய விதிகளுக்கு ஏற்ப எதார்த்தத்தை உருமாற்றம் செய்வதாகும். ஆனால் கலைகளை அவற்றின் நுட்பங்களை மட்டும் கொண்டு விளக்குவதோ அல்லது இலக்கியம் முழுவதையும் சொல்வெளியீட்டு பாணியாகக் குறுக்கி விடுவதோ தவறானது என்று அவர்கூறினார். ஒரு கவிதையின் உயிரெழுத்து, மெய்யெழுத்து, வேர்ச்சொல், வாக்கியத்தின் அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய புள்ளி விவரம் சொல்வது மட்டும் ஒரு திறானாய்வாளனின் பணியல்ல என்ற அவர், “ உருவ இயலாளர்கள் புனித ஜானின் சீடர்கள். முதலில் சொல் இருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் கருதுகிறோம்; ஆரம்பத்தில் இருந்தது செயல்- பிறகே சொல் வந்தது- செயலின் ஒலி சார்ந்த நிழலாக ” (சான்று:பக்கம் லியோ த்ரோஸ்கி தி பார்மலிஸ்ட் ஆஃப் பொயட்ரி அண்ட் மார்க்சிஸ்ட் டேவிட் கிரெய்க் பெங்குயின் , லண்டன்,1975ப.374.)
அகத்தூண்டல்:
கலைப்படைப்புக்கு அகத்தூண்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்பது ஒரு கோட்பாடு. கலைப்படைப்பில் தர்க்கத்திற்கு மாறான அம்சங்கள் உள்ளன. நனவிலி என்னும் மனத்தின் செயல்பாட்டை அதில் காணலாம் என்ற கருத்துகளையும், கலையின் உளவியல் செயல்பாட்டையும் உருவவியல் கோட்பாட்டை உடையவர்கள், மயாகோவ்ஸ்கி, ஓசிப் ப்ரிக், புரோலிட்கள் ஆகியோரையும் சேர்த்து மறுத்தனர். இந்த அம்சங்களை மரபான மார்க்சிய இலக்கிய விமர்சகர்கள் சக பயணிகள் த்ரோஸ்கி முதலானோர் ஒப்புக்கொண்டனர். கட்சி-அரசு தலைவர்களில் உருவ இயல் பற்றிய கடுமையான திறனாய்வைச் செய்தவர்கள் லுனாசார்கிஸ்தான். உள்ளடக்கத்தைத் தவிர்த்து கவிதை உத்திகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் உருவ இயல் இலக்கிய விமர்சனம் உண்மையான மனிதப் பிரச்சனைகளை தவிர்க்கின்ற நழுவுதல் தொடர்பானதே என்றும் நசிந்து போன ஆளும் வர்க்கத்தின் மலட்டுப் படைப்பே என்றும் கூறினார். “நவீன முதலாளி வர்க்கத்தால் அனுபவித்து மகிழக்கூடிய புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரே கலை வகை, புற உலகம் சாராத வெறும் உருவம்மட்டும் உள்ள கலைதான். அக்டோபர் புரட்சிக்கு முன்பு உருவவியல் பழுத்துக் கொண்டு வந்த ஒரு காயமாக இருந்தது. இன்று அது பழைய அமைப்பின் பிடிவாதமிக்க எச்சமாக உள்ளது. இன்னும் மாற்றத்துக்கு உட்படாத ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தைப் பார்த்து கள்ளத்தனமாகக் கண் சிமிட்டுகிற அறிவாளிகளின் கடைசிப் புகலிடமாக உள்ளது ” [சான்று: 87]
இலக்கியமும் எடுத்தியம்பலும்:
இலக்கியத்தை எடுத்து இயம்புவதின் மொழியைப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்திப் பாகுபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஒவ்வொரு சொல் வகைகளையும் கிட்டத்தட்ட ஒரு உரையாடலின் வடிவம் ஆகும். எடுத்து உரைத்தலின் நீண்ட பகுதிகள் கதையைச் சொல்பவனின் குரலில் எழுதப்பட்டிருப்பதாக தோன்றுவதாகத் தெரிந்தாலும் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான குரல்கள் இயக்க அசைவுடன் நல்ல தொடர்பு கொண்டிருப்பதாகக் கொள்ளமுடியும். வெவ்வேறு கால வரலாற்று நிலைகளின் இந்தச் சொல் அமைப்புகளின் தொடர்பு உடைமை வேறு வகையானதாக இருக்கின்றன. உண்மைத் தன்மையின் உயிர் குரலாக எது ஒலிக்கிறதோ அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
தோயஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் பலகுரல் தன்மையுடையவை ஆகும். இந்தக் குரல்களில் எதையுமே படைப்பாளியின் குரலாக எடுத்துக்கொள்ள முடியாது. படைப்பின் உச்சம் என்பது குரலின் மொழி என்ன சொல்கிறது என்பதுதான். ஆனால், இது படைப்பாளியின் எதேச்சகார குரலுக்குக் கட்டுப்படும் அமைப்பிலும் இல்லை. அந்தக் குரல்கள் தம்மைப் படைத்துவிட்ட ஆசிரியனுக்கும் அவனது குரலுக்கும் அருகில் நிற்கக்கூடியவை. அவனுடன் ஒத்துப்போக மறுப்பவை. அவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் தயங்காது. ஆனால் இதைப் பல பாணிகளின் வேறுபட்ட புதிய வடிவம் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இவரின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தன் தனித்த தன்மைக்கே உரிய தனித்த பாணியில் பேசுவதில்லை. இவரின் இரட்டை ஆளுமையை நாம் உணரவும் முடியும். லுனா சார்க்கியின் நூலின் இருந்து தோவ்ஸ்தயோஸ்கியின் உயிர்ப்பை உணரமுடியும். லூனாசார்க்கின் தனித்தன்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இவரது நாவல்களில் இந்த பல குரல்கள் கொள்ளும் முரண்பாடு, மோதல் ஆகியவை ஒன்றாக இணைந்து முழுமையான படைப்பு உருவாக்கும் படைப்பு ஆசிரியனின் குரல் இவரின் இரட்டை ஆளுமையைத் தனித்துக் காட்டுகிறது.
சு.விமல்ராஜ்,
உதவிப்பேராசிரியர்,
அ.வ.அ.கல்லூரி,
மயிலாடுதுறை.
அலை:8220470590
thamizhvimal@gmail.com
உன்னைப்புறக்கணித்தவன்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கண்ணீ ரோடு இருந்த
யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ?
என்ன தந்திரம் செய்து மீண்டும்
இழுத்துவரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு?
இந்த இனிய தேன் இரவில்
பூத்துப்பொங்கும் பூங்காவில்
போகுல்* மரத்தடி நறுமண அசைவில்
புகுந்தவன் அவனா உன் மனதில்?
அந்தோ ! ஓர் வசந்த இரவினிலே
நம் இதயங்கள் கலந்து
பற்றிக் கொண்டன.
பத்துத் திக்கிலும் காட்சிக் களஞ்சியம்
பூத்துக் குலுங்கும்
என்ன தந்திரம் செய்து நீ
மீண்டும் அவனை
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு?
காதல் மொழிகள் சிலவற்றை
ஒருவருக் கொருவர்
காதில் ஓதிக் குசுகுசுத்தால் —
அவன் கழுத்தில் சூட
அந்த மலர் மாலையை நீ
அணிவிக்கத் துணிந்தால்,
வசந்தகால முழுமதி இரவு
வந்திடும்
மீண்டும் மீண்டும்!
ஒருபோதும்
திரும்பி மீளாதவன்
உன்னை விட்டு விலகியவனே!
காலம் சாதகமாய் உள்ளது
தவறிய தருணம் சில நிமிடம்!
தாகம் எப்போதும் கொண்ட
ஆத்மா
சூடுபோட்டு விடும்!
என்ன தந்திரம் செய்து நீ
மீண்டும் அவனை
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு?
+++++++++++++++
போகுல்* Bokul / বকুল
Bokul in Bengal, (Mimusops elengi). Praised in traditional Indian medical system (Ayurveda) as analgesic, anti-thirst, refrigerant, anti-inflammatory. Big, dense tree. Small star shaped white flowers with light, very pleasant fragrance. Gather the flowers when they fall off the tree and they will remain fragrant for 3/4 days, before totally drying out. Children sometimes like to chew the fruit for its tangy taste. The fruits support a very noisy cuckoo population, who keep the area alive with their shrill calls dawn to dusk & in brightly moonlit nights of summer.
Calcutta, India, 20.6.2007
++++++++++++++++++++
பாட்டு : 383 தாகூர் தன் 25 வயதில் எழுதியது (1887)
+++++++++++++++++++
Source:
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
வா என் கண்மணி, வந்தென் குவளை நிரப்பு
கடந்த கவலை, எதிர்கால அச்சம் இன்று நீங்க;
மறுநாள் ஏன்? நானிருப்பேன் நானாக நாளை,
கழிந்து சென்ற பல்லாண்டுகாலத் தொடர்போடு.
மேலானோர் மிகச்சிறந்தோர் சிலரை நேசித்தோம்;
காலமும் விதியும் திராட்சைக் கொத்தைச் சிதைத்துவிட
ஓரிரு முறை குவளை மதுவைப் பருகினர் முன்பே;
ஒவ்வொரு வராகத் தொடர்வார் மௌன ஓய்வுக்கு.
நாமிப்போ அறைக்குள் குடித்துக் கூத்தடிப் போம்
பூரிப்பில் போனர் அவரெலாம் வேனிற் துகிலுடன்
பூமிக்குக்கீழே துயிலில் புதைந்து ளோம் நாமே
கீழிறங்கு வோம் படுக்கை தர – ஆம் யாருக்கு?
தகவல்:
ஸ்ரீ பகவான் கூறுவார் ”சப்த ஜால மஹாரண்யம் ”….சொற்கள் எனும் பெருங்காடு….திருப்பாவை என்னும் தண்டகாரண்யத்தில் ஆண்டாள் திருமாலைக் கட்டிப் போட்டாள்….
ஆண்டாள் -20….
——————————-
”முப்பத்து மூவர்க்கு முன்னே முதலைவாய்
கப்பம் தவிர்த்தோய் கஜேந்திரர்க்காய், -நப்பின்னை
யோடுறங்கும் யாதவ ஏறே , திருப்பாவைக்
காடுறங்கும் கோதைக்(கு) அருள்”….கிரேசி மோகன்….
க. பாலசுப்பிரமணியன்
அயோத்தியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் அவன் வீடு
அன்னையர் தந்தையுடன் அண்டமெல்லாம் அவன் உறவு
அன்பாலே கட்டுண்டோர் அவனுடனே ஆயிரம் ஆயிரம்
அதிசயமே அவன் வாழ்க்கை அகிலத்தில் நிகரில்லை !
வில்லெடுத்து விதிவழி வந்தான் விதேகன் மண்ணுலகில்
வில்லொடித்தே வீரன் மங்கை கொண்டான் மிதிலையில்
சொல்கொடுத்த தந்தைக்காக தவக்கோலம் கானகத்தில்
தோள் கொடுத்த தம்பியுடன் துவளாத மனத்துடையான் !
மனத்திலே கயிலைநாதனைக் கலையாலே நிறுத்தியவன்
மனத்தாலே மயங்காத மங்கையை மாயத்தில் வீழ்த்தி
மதிகெட்டு வானத்தே வைதேகியைக் கவர்ந்து செல்ல
மனமொடிந்து புள்ளரசன் சடாயு போரிட்டு புவிவீழ்ந்தான் !
தயரதனைப் போல் சடாயுவும் தன் தந்தையென
தர்பணங்கள் செய்து விடுவித்தான் வாழ்வினையே !
தன்னுயிர்போல் மன்னுயிர் போற்றும் தாமோதரன்
மன்னுயிர் அனைத்திற்கும் முன்னின்ற மூத்தவன் !
சங்கோடு சக்கரமும் சடாயுவும் கைகொண்டு
சமதர்மம் காக்கும் சன்னிதியே திருப்புட்குழி!
கல்லான குதிரை கூட காலாட்டி களிப்புறும்
வில்லோனின் திருத்தலமே விஜயராகவபுரி !
பெற்றாலும் வளர்த்தாலும் தாயினைப் போற்றும்
கோகுலமும் கோசலமும் ஒன்றேதான் !
பாசத்தில் பரதனும் அனுமனும் ஒன்றே தான்
பரந்தாமன் அருளாட்சியில் பார்வை ஒன்றேதான் !
”ஆண்டாள் -19”
—————————–
”குத்து விளக்கெறிய கோதை திருப்பாவை
பக்தியுடன் சொன்னாலே போதுமே, -அப்பனவன்,
நப்பின்னை தாலாட்டும் நாய கனருளால்,
குப்பமும் கோபுரமா கும்”….கிரேசி மோகன்….
’’ஆண்டாள் -18’’….
————————————–
‘’கம்சனால் உந்து மதக்களிற்றின் கொம்பொசித்து,
இம்சை அரசர் இருவரை -தொம்ஸம்,
புரிந்தவன் மீது திருப்பாவை செப்பி,
அறிந்தனள் ஆண்டாள் அரி’’….கிரேசி மோகன்….
இருவரை தொம்ஸம்- கம்ஸ சாணூர மர்த்தனம்….
நியூ ஜெர்சியில் வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா மற்றும் செல்லையா ஞானசேகரன் இணையரின் மகன் திரு. மகிஷன் ஞானசேகரன் (Mahishan Gnanaseharan) அவரது தொடர் சமுகநல அக்கறை கொண்ட செயல்களுக்காக வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார். இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியின் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிறந்த இரு மாணவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, அம்மாநிலத்தின் பிரதிநிதியாக “வாஷிங்டன் வாரம்” என மார்ச் 5 – 12, 2016 வரை வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் பயிற்சியில் பங்கு பெற இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், மாநிலத்திற்கு இருவரென 1)கல்வி, 2) தலைமைப்பண்பு, 3) சமூகப்பணி ஆகிய மூன்றிலுமே மிகச் சிறந்து விளங்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறாக அமெரிக்க அளவில் தேர்வு செய்யப்படும் 104 மாணவர்களுக்கும் மார்ச் மாதம் – வாஷிங்டன் வாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நேரடியாகப் பார்க்கவும், சமூகப்பணியில் பங்கேற்க செயல்முறைப் பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும். பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகப்பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பெறுவது மிகவும் பெருமைக்குரிய சாதனையாகும். அமெரிக்க நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்ற அளவில் இந்த இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.
பயிற்சி காலத்தில், தேர்வு செய்யப்பட்ட இளையதலைமுறையினர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பினையும், அரசு இயங்கும் விதத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பினையும் பெறுவார்கள். இவர்களுக்குக் கல்லூரி படிப்பிற்காக $5,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த ஆண்டு மார்ச் 5 – 12, 2016 வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் 54 ஆவது “அமெரிக்க சட்டமன்றத்தின் இளைஞரணி பயிற்சிப் பாசறை” (United States Senate Youth Program – ussenateyouth.org) பயிற்சியாளர்களில் ஒருவராகத் திரு. மகிஷன் ஞானசேகரன் பங்கேற்க உள்ளார். ஜனவரி முதல் வாரம் (இந்த வாரம்) இப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முறையாகப் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ‘முதல் தமிழ் மாணவர்’ இவர் என்று ‘கனடா மிர்ரர்’ (www.canadamirror.com) குறிப்பிடுகிறது.
இந்தத் தகுதியை மகிஷன் அடைவதற்குக் காரணம்; நடுநிலைப்பள்ளி நாட்களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்டிய சமூக அக்கறை கொண்ட பல செயல்களும் பணிகளுமாகும். இவையாவும் ஒவ்வொருபடியாக இவரை உயர்த்தி வந்துள்ளது.
பத்து வயதில் வானியல் வல்லுநராகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட மகிஷனின் நோக்கம் பிற்காலத்தில் ஒரு கோளையோ, விண்கற்களையோ கண்டுபிடிக்க வேண்டும் என்று துவங்கியது. நூலகம் நடத்திய போட்டியில் பங்கு பெற்று நூலகத்தின் 1,000 புத்தகங்களைப் படித்தமைக்காக நெவார்க் (Newark)நகர ஆட்சியாளரிடம் இருந்து பரிசு, பிறகு சிறந்த கவிதை ஒப்பித்தற்காகத் தங்கப்பதக்கம், மூன்று “உச்சரிப்புத் தேனீ” (ஸ்பெல்லிங் பீ) போட்டிகளில் பரிசுகள் என்று கல்விக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார்.
பொருளாதாரப் பற்றாக்குறையால் நிதியின்றி தனக்கு உதவிய நகர நூலகம் மூடப்பட்ட பொழுது அது ‘மனிதக்குலத்திற்கு எதிரான குற்றம்’ என மிகவும் இளவயதிலேயே தனது கருத்தைத் தயக்கமின்றிப் பதிவு செய்தவர் மகிஷன். மக்களாட்சியைச் சிறப்பாக செயல்படுத்துவதைப் பற்றிய கட்டுரைப்போட்டியில் வன்முறையைக் கட்டுக்குள் வைப்பது பற்றி இவர் எழுதிய கட்டுரை தேசிய அளவில் சிறந்த கட்டுரைக்கானப் பரிசைப் பெறக் காரணமாக அமைந்தது.
தனது ஆரம்பப் பள்ளி நாட்களில் (நான்காம் வகுப்பு) தனது நண்பனான நல்ல மாணவன் ஒருவர் அநீதியாகத் தாக்கப்பட நேர்ந்ததைப் பார்த்த இவரது அனுபவம் வன்முறைக்கு எதிரான சமூகப்பணியில் இவரை ஆர்வம் கொள்ளச் செய்துள்ளது. நெவார்க் நகரத்தில் நடந்த அமைதி கருத்தரங்கை (Newark Peace Education Summit – 2011) தலாய்லாமா அவர்கள் தலைமையேற்று அதில் அவர் உரையாற்றிய பொழுது, அதே மேடையில் வன்முறைக்கு எதிராக ஏழாம் வகுப்பு படித்த 13 வயது மகிஷனும், நெவார்க் நகரத்தின் பிரதிநிதியாக, இளைஞர்களிடம் உள்ள வன்முறைப்போக்கை கண்டித்து அமைதிக்காக உரையாற்றினார்.
உயர்நிலைப்பள்ளியின் இரண்டாமாண்டில் படிக்கும் பொழுது ‘நியூ ஜெர்சி மாநிலத்தின் வொய்.எம்.சி.ஏ இளைஞர் – அரசாட்சி அமைப்பில்’ (New Jersey YMCA – Youth and Government program) துணை ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு சமூகப்பணிகளில் பங்குபெற்று வந்தார். அதில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மாநில அளவின் சிறந்த தலைவர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டப்பட்டார். மீண்டும் பதினோராம் வகுப்பு மாணவராக இருக்கும் பொழுது, சென்ற ஏப்ரலில் (ஏப்ரல் – 2015) அதே வொய்.எம்.சி.ஏ அமைப்பின் தேர்தலில் ஆறு மாணவர்களுடன் போட்டியிட்டு அந்த இளைஞர் அமைப்பின் ஆளுநராகத் ( Youth Governor) தேர்வு செய்யப்பட்டு, தலைமைப் பதவியில் வழிநடத்தி வருகிறார்.
சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டு, தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியையும் வளர்த்துக் கொண்டுள்ள மகிஷன் உலகப்புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் அடுத்த ஆண்டு தனது பட்டப்படிப்பைத் தொடரவிருக்கிறார். திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்களின் குறிக்கோள்கள் வெற்றியடைய வல்லமை இதழின் சார்பாக பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
________________________________________________________
வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
Mahishan Gnanaseharan
https://www.facebook.com/mahishan.g
http://magnaed.com/
________________________________________________________
தகவல் தந்துதவிய தளங்கள்:
யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கவுள்ளார்
http://www.canadamirror.com/canada/54859.html
YMCA New Jersey Youth & Government Program
https://www.facebook.com/YMCA.NJYAG/?fref=nf
Senate Youth (ussenateyouth.org)
Posts by SenateYouth
#USSYP2016 delegates
GNANASEHARAN SELECTED AS ONE OF TWO DELEGATES FROM N.J. FOR THE YOUTH SENATE PROGRAM
http://www.sbp.org/GnanaseharanYouthSenate
GNANASEHARAN CLIMBS THE LADDER TO THE TOP OF YOUTH & GOVERNMENT
http://www.sbp.org/RelId/629227/ISvars/default/Gnanaseharan_YAG_’15.htm
US Capitol Historical Society Awards Mahishan Gnanaseharan Second Place In 2013 ‘Making Democracy Work’ Student-Essay Contest
http://www.prnewswire.com/news-releases/us-capitol-historical-society-awards-mahishan-gnanaseharan-second-place-in-2013-making-democracy-work-student-essay-contest-257996111.html
Di Ionno: A lesson on nonviolence, through the voice of the young
http://blog.nj.com/njv_mark_diionno/2011/05/di_ionno_a_lesson_on_nonviolen.html
Newark community is up in arms about local library closures due to city budget cuts
http://blog.nj.com/njv_barry_carter/2010/07/newark_residents_are_distraugh.html
‘Star reader,’ 10, among honorees at Newark Public Library gala
http://www.nj.com/helpinghands/jamieduffy/index.ssf/2008/11/booked_for_the_evening_a_gala.html
________________________________________________________