ஜனவரி 4, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு மகிஷன் ஞானசேகரன் அவர்கள்

Capture

 

நியூ ஜெர்சியில் வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா மற்றும் செல்லையா ஞானசேகரன் இணையரின் மகன் திரு. மகிஷன் ஞானசேகரன் (Mahishan Gnanaseharan) அவரது தொடர் சமுகநல அக்கறை கொண்ட செயல்களுக்காக வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார். இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியின் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிறந்த இரு மாணவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, அம்மாநிலத்தின் பிரதிநிதியாக “வாஷிங்டன் வாரம்” என மார்ச் 5 – 12, 2016 வரை வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் பயிற்சியில் பங்கு பெற இருக்கிறார்.

Senate Youth1

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், மாநிலத்திற்கு இருவரென 1)கல்வி, 2) தலைமைப்பண்பு, 3) சமூகப்பணி ஆகிய மூன்றிலுமே மிகச் சிறந்து விளங்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறாக அமெரிக்க அளவில் தேர்வு செய்யப்படும் 104 மாணவர்களுக்கும் மார்ச் மாதம் – வாஷிங்டன் வாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நேரடியாகப் பார்க்கவும், சமூகப்பணியில் பங்கேற்க செயல்முறைப் பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும். பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகப்பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பெறுவது மிகவும் பெருமைக்குரிய சாதனையாகும். அமெரிக்க நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்ற அளவில் இந்த இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

Senate Youth2

பயிற்சி காலத்தில், தேர்வு செய்யப்பட்ட இளையதலைமுறையினர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பினையும், அரசு இயங்கும் விதத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பினையும் பெறுவார்கள். இவர்களுக்குக் கல்லூரி படிப்பிற்காக $5,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த ஆண்டு மார்ச் 5 – 12, 2016 வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் 54 ஆவது “அமெரிக்க சட்டமன்றத்தின் இளைஞரணி பயிற்சிப் பாசறை” (United States Senate Youth Program – ussenateyouth.org) பயிற்சியாளர்களில் ஒருவராகத் திரு. மகிஷன் ஞானசேகரன் பங்கேற்க உள்ளார். ஜனவரி முதல் வாரம் (இந்த வாரம்) இப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முறையாகப் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ‘முதல் தமிழ் மாணவர்’ இவர் என்று ‘கனடா மிர்ரர்’ (www.canadamirror.com) குறிப்பிடுகிறது.

இந்தத் தகுதியை மகிஷன் அடைவதற்குக் காரணம்; நடுநிலைப்பள்ளி நாட்களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்டிய சமூக அக்கறை கொண்ட பல செயல்களும் பணிகளுமாகும். இவையாவும் ஒவ்வொருபடியாக இவரை உயர்த்தி வந்துள்ளது.

பத்து வயதில் வானியல் வல்லுநராகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட மகிஷனின் நோக்கம் பிற்காலத்தில் ஒரு கோளையோ, விண்கற்களையோ கண்டுபிடிக்க வேண்டும் என்று துவங்கியது. நூலகம் நடத்திய போட்டியில் பங்கு பெற்று நூலகத்தின் 1,000 புத்தகங்களைப் படித்தமைக்காக நெவார்க் (Newark)நகர ஆட்சியாளரிடம் இருந்து பரிசு, பிறகு சிறந்த கவிதை ஒப்பித்தற்காகத் தங்கப்பதக்கம், மூன்று “உச்சரிப்புத் தேனீ” (ஸ்பெல்லிங் பீ) போட்டிகளில் பரிசுகள் என்று கல்விக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார்.

Capture7

பொருளாதாரப் பற்றாக்குறையால் நிதியின்றி தனக்கு உதவிய நகர நூலகம் மூடப்பட்ட பொழுது அது ‘மனிதக்குலத்திற்கு எதிரான குற்றம்’ என மிகவும் இளவயதிலேயே தனது கருத்தைத் தயக்கமின்றிப் பதிவு செய்தவர் மகிஷன். மக்களாட்சியைச் சிறப்பாக செயல்படுத்துவதைப் பற்றிய கட்டுரைப்போட்டியில் வன்முறையைக் கட்டுக்குள் வைப்பது பற்றி இவர் எழுதிய கட்டுரை தேசிய அளவில் சிறந்த கட்டுரைக்கானப் பரிசைப் பெறக் காரணமாக அமைந்தது.

Capture5

தனது ஆரம்பப் பள்ளி நாட்களில் (நான்காம் வகுப்பு) தனது நண்பனான நல்ல மாணவன் ஒருவர் அநீதியாகத் தாக்கப்பட நேர்ந்ததைப் பார்த்த இவரது அனுபவம் வன்முறைக்கு எதிரான சமூகப்பணியில் இவரை ஆர்வம் கொள்ளச் செய்துள்ளது. நெவார்க் நகரத்தில் நடந்த அமைதி கருத்தரங்கை (Newark Peace Education Summit – 2011) தலாய்லாமா அவர்கள் தலைமையேற்று அதில் அவர் உரையாற்றிய பொழுது, அதே மேடையில் வன்முறைக்கு எதிராக ஏழாம் வகுப்பு படித்த 13 வயது மகிஷனும், நெவார்க் நகரத்தின் பிரதிநிதியாக, இளைஞர்களிடம் உள்ள வன்முறைப்போக்கை கண்டித்து அமைதிக்காக உரையாற்றினார்.

Capture6

உயர்நிலைப்பள்ளியின் இரண்டாமாண்டில் படிக்கும் பொழுது ‘நியூ ஜெர்சி மாநிலத்தின் வொய்.எம்.சி.ஏ இளைஞர் – அரசாட்சி அமைப்பில்’ (New Jersey YMCA – Youth and Government program) துணை ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு சமூகப்பணிகளில் பங்குபெற்று வந்தார். அதில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மாநில அளவின் சிறந்த தலைவர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டப்பட்டார். மீண்டும் பதினோராம் வகுப்பு மாணவராக இருக்கும் பொழுது, சென்ற ஏப்ரலில் (ஏப்ரல் – 2015) அதே வொய்.எம்.சி.ஏ அமைப்பின் தேர்தலில் ஆறு மாணவர்களுடன் போட்டியிட்டு அந்த இளைஞர் அமைப்பின் ஆளுநராகத் ( Youth Governor) தேர்வு செய்யப்பட்டு, தலைமைப் பதவியில் வழிநடத்தி வருகிறார்.

           Capture2Capture3

சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டு, தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியையும் வளர்த்துக் கொண்டுள்ள மகிஷன் உலகப்புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் அடுத்த ஆண்டு தனது பட்டப்படிப்பைத் தொடரவிருக்கிறார். திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்களின் குறிக்கோள்கள் வெற்றியடைய  வல்லமை இதழின் சார்பாக பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

________________________________________________________

வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
Mahishan Gnanaseharan
https://www.facebook.com/mahishan.g

http://magnaed.com/

________________________________________________________

தகவல் தந்துதவிய தளங்கள்:
யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கவுள்ளார்
http://www.canadamirror.com/canada/54859.html

YMCA New Jersey Youth & Government Program
https://www.facebook.com/YMCA.NJYAG/?fref=nf

Senate Youth (ussenateyouth.org)

#USSYP2016 delegates

GNANASEHARAN SELECTED AS ONE OF TWO DELEGATES FROM N.J. FOR THE YOUTH SENATE PROGRAM
http://www.sbp.org/GnanaseharanYouthSenate

GNANASEHARAN CLIMBS THE LADDER TO THE TOP OF YOUTH & GOVERNMENT
http://www.sbp.org/RelId/629227/ISvars/default/Gnanaseharan_YAG_’15.htm

US Capitol Historical Society Awards Mahishan Gnanaseharan Second Place In 2013 ‘Making Democracy Work’ Student-Essay Contest
http://www.prnewswire.com/news-releases/us-capitol-historical-society-awards-mahishan-gnanaseharan-second-place-in-2013-making-democracy-work-student-essay-contest-257996111.html

Di Ionno: A lesson on nonviolence, through the voice of the young
http://blog.nj.com/njv_mark_diionno/2011/05/di_ionno_a_lesson_on_nonviolen.html

Newark community is up in arms about local library closures due to city budget cuts
http://blog.nj.com/njv_barry_carter/2010/07/newark_residents_are_distraugh.html

‘Star reader,’ 10, among honorees at Newark Public Library gala
http://www.nj.com/helpinghands/jamieduffy/index.ssf/2008/11/booked_for_the_evening_a_gala.html

________________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. மகிஷன் ஞானசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *