Month: August 2016

  • எழுவகைப் பெண்கள்: 10

    அவ்வைமகள்

    துவாரபாலகர்களும் துளைநிலை ஒழுக்கமும்

    அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்ற உங்கள் அவ்வையைப் இவ்வுலகின் தலைசிறந்த பெண்மைப் பாதுகாவலர் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார் அந்த இராணுவ அதிகாரி.

    “நான்கு மனைவிகள் – எத்தனையையோ பெண் தோழிகள் என்று என் காலம் இதுகால் ஓடியிருக்கிறது. பெண்ணின் உடம்பை – புணர்ந்திருக்கிறேனே தவிர உணர்ந்தவன் இல்லை. நான் சொல்கிறேன் எனத் தப்பாக நினைக்காதீர்கள – ஆண்மை மிதர்ப்புக்குக் கண்ணும் தெரியாது – காதும் கேட்காது – மூளையும் விளங்காது – துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம் – நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். பெண்கள் பற்றிய புரிந்து கொள்ளல் கொஞ்சம் இருந்தது என்றாலும் – அவர்களைப் பற்றிய சரியான ஞானம் இல்லாமலேயே என் வாழ்நாளைக் கழித்திருக்கிறேனே என்று இப்போது உணர்கிறேன் – ஒருவேளை உங்கள் கலாச்சாரம் போன்று எங்கள் கலாச்சாரத்திலும் பெண்களின் நலன் என்பது முத்தாய்ப்பான விஷயமாக இருந்திருக்குமேயானால் நான் உங்கள் ஆடவர்களைப் போல ஒரே ஒரு மனைவியோடு நல்விதமாய் வாழ்ந்து – இப்படி அழிந்தொழியாமல் – அலைந்துகெடாமல் ஒழுங்காய் இருந்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.” என்கிறார்.

    அந்த வெளிப்படையான நேர்மையைப் பாராட்டி விட்டுச் சொன்னேன், உங்கள் வாக்கின் சாட்சியாக எங்கள் ஆடவர்களை மீண்டும் நிலைக்கழைக்கும் பணி எங்களுக்கு இருக்கிறது என்பதை நான் எனக்கு மீண்டும் நினைவூட்டிக்கொண்டேன். சொல்லப்போனால், ஆண்களால் தான் ஒரு நாடு தாழ்வுறுகிறது என்பதை அவ்வையே சுட்டிக் காட்டியிருக்கிறார். நாடு எதுவாகினும், அது எத்தகைய நிலத் தன்மையைக் கொண்டதாகினும், அந்நிலத்தில் உள்ள ஆடவரின் தராதரத்தைக் கொண்டே அந்நிலத்த்தின் தராதரமும் அமையும் என்கிறார் அவ்வை என்றவள் தொடர்ந்து.

    அவ்வையின்

    “நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவ ராடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

    என்ற பாடலை மொழிபெயர்த்துச் சொன்னேன். அந்நொடி, “அப்படியா – அப்படியா – அப்படியா?” என்று தொடர்ந்து கூவி வியந்தார் – மேலும் தொடர்ந்தார்.

    “இது எத்தனைப் பெரிய சமூகப் பொருளாதாரத் தத்துவம் தெரியுமா? ஆடவனின் நடத்தை – அவனது பழக்க வழக்கங்கள் – அவனது பெண்ணறம் பேணும் பாங்கு ஆகியன உண்மையிலேயே ஒரு சமூகத்தை அழிக்கும் அல்லது வாழவைக்கும். ஆடவனின் இளமை ஆற்றல் வெகுபெரும்பாலும் விரயமாகிறது – ஆனால் பெண்ணோ துடித்தெழுகிறாள் – காவல் தெய்வமாய் அவதாரம் எடுக்கிறாள். தன் வீட்டை – தனது சமூகத்தைக் காக்க – பெண் எத்தனைப் பாடுபடுகிறாள் என்பதை நான் அறிவேன் – சொல்லப்போனால் உங்கள் அவ்வையின் வாசகம் எனக்கு மிகவும் பொருந்தும் – என்னை வழிநடத்திச் செல்ல என்வாழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு பெண்ணும் முயன்றாள் – என் தாயிலிருந்து – நான் பழகி விலகிய அனைத்துப் பெண்கள் வரை! ஆனால் நான்? உதாசீனம் செய்தேன் – புறக்கணித்தேன் – அவர்கள் யாவரையும் உடுப்பாய்ப் பயன்படுத்தி, என் வாழ்விலிருந்து கழற்றி எறிந்தேன். உண்மையில் சொல்கிறேன் மோசமான ஆடவர்கள் எந்த சமூகத்துக்கும் அடுக்காது. உங்கள் அவ்வை, ஆடவர்கள் பற்றி நூற்றுக்கு நூறு சரியாய்ச் சொல்லியிருக்கிறாள்.” என்றார். அவரது களங்கமற்ற உண்மையின் வெளிப்பாட்டை மீண்டும் பாராட்டித் தொடர்ந்தேன்.

    “துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம்” என்றீர்களே அந்த வாசகம் என் சிந்தனையைக் கிளறியது. துவார பாலகர்களின் – Hole Guards நினைவு வந்தது என்றேன்.

    “அப்படியா அவர்கள் யார்?” என்றார்.

    “எங்கள் கோயிலில் மூலவர் எனப்படும் பிரதானக் கடவுள் கருவறையில் இருப்பார் என்று முன்னம் சொன்னேன் அல்லவா? எங்கள் கோயில்களில் கருவறையின் பிரதான துவாரத்தில் – அதாவது நுழைவாயிலில் – இருபுறமும் துவார பாலகர்கள் எனும் காவல் தெய்வங்கள் இருவர் இருப்பர் -இவர்கள் கர்ப்பக்கிரகத்தின் தலைமை துவாரத்தில் பக்கத்திற்கு ஒருவராக நிற்பர். பாலகன் என்றால் ஆண்பிள்ளை என்பது பொருள்.

    நெடிய தோற்றமும், ஊடுருவி வினவும் வியப்புக் கண்ளும் – கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி நிற்பர் துவார பாலகர்கள். இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்றால் – துவார பாலகரின் இருகால்களில் ஒரு கால் மட்டுமே கீழே பதிந்திருக்கும் – இரண்டாவதுகாலைத்தூக்கி – தூக்கிய அக்காலை மாறுகோணமாய்ச் செலுத்தி – அக்காலைக் கொண்டு – எழுச்சியுடன் கர்ச்சிக்கும் ஒரு ஆண் சிங்கத்தை அடங்குவார் துவாரபாலகர். அந்த காட்சியைக் கொஞ்சம் உற்று கவனிக்க வேண்டும். துவாரபாலகரின் கோணத்தில் தூக்கிய காலானது, ஒரு ஆண்சிங்கத்தின் தலைமீது நன்கு அழுத்திக்கொண்டிருக்கும்- அந்த சிங்கமோ “ஏய் நான் ஒரு சிங்கராஜா! என்னை நீ இப்படிச் செய்கிறாயே” என்று மிதர்ப்போடு அச்சிங்கம் அலறுவதுபோல் காட்சி இருக்கும்.

    அதற்கு துவாரபாலகர், “ஏய்! நீ சிங்க ராஜாவானால் எனக்கென்ன? உன் ஆம்பளைத் திமிரோடு இங்கே நுழைந்தாய் என்றால் அசிங்கப்படுவாய் ஜாக்கிரதை!” என்றபடியாக பதிலிருப்பார். ஒருவித அசாத்திய புன்னகையோடு – அச்சிங்கத்தை – அதாவது ஆண் செய்யக்கூடிய அசிங்கத்தைத் தரையோடு தரையாக அமுக்கி – அதனை எழும்பாமல் – மிதித்தபடி நிற்கிறார் எங்கள் துவாரபாலகர்.

    உண்மையில், எங்கள் துவாரபாலகர்களின் ஒய்யாரத்தையும் கம்பீரத்தையும் உடல்முத்திரை இலக்கணத்தையும் சொல்ல வார்த்தைகள் போதா. சொல்லப்போனால், இந்த துவார பாலகர்கள் ஏன் இங்கு கருவறை வாயிலில் நிற்கிறார்கள் – இவர்கள் கூறுவது என்ன என்று சிறுவயது முதல் நான் யோசித்ததுண்டு. அப்போதெல்லாம் புரியாதது – நவீன மருத்துவ அறிவியலில் கல்வி பெற்று – தொழில் மேற்கொண்டதால் – பின்னாளில் புரிந்தது. எங்கள் பாட்டியின் அம்மா ஓயாமல் சொல்லுவாள் “பலகாரமும் பலதாரமும் பாடைக்குப் பக்கம்” என்று அதுவும் கூட இந்த மருத்துவ அறிவியல் ஞானத்திற்குப் பின்பு மட்டுமே புரிந்தது. பலகாரம் -snack சாப்பிடுவதுபோல் பலபெண்களுடன் உறவு கொள்ளுவதா என்பதே அவள் கூறிய பழமொழியின் பொருள்.

    மருத்துவ அறிவியலில், பலதாரம் கொள்பவனுக்கு இதயக் கோளாறுகள் டக்கென வருகின்றன என்பது கண்டு ஆச்சரியப்பட்டேன் – பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது அவனுடலில் – T helper செல்கள் பாதிக்கப்படுகின்றனவே என்று வியந்தேன். இந்த வாழ்வியல் அனுபவங்களின் விளைவால் எங்கள் கலாச்சாரத்தின் உன்னதத் தன்மையும் – எங்கள் மூதாதையர்கள் நாட்டியிருக்கிற மூலவேர்களையும் கொஞ்சம் கூடுதல் தெளிவுடன் பார்க்கும் சிந்தையும் என்னுள் வளர்ந்தது.

    ஆக, ஆண்களுக்கு இருக்கின்ற துவாரம் தேடும் எழுச்சியின் கடும் விளைவுகளின் விளக்கம் தான் துவாரபாலகர்கள் என்பேன். இளமையின் எழுச்சியால் உந்தப்பட்டு – பெண்ணின் கருவறையின் முகப்பான பெரினிய துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சிக்கு துவாரபாலகர்கள் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்கள் என்பேன்: “மறையுறுப்புக்கள் ஆயுதம் போன்றவை – நெறிபிறழும்போது பதம் பார்த்துவிடுபவை – மனிதா நீ இதை புரிந்து கொள்! இந்தத் துவாரத்துக்குள் புனித அக்கினிக் கனல் இருக்கிறது – இந்த துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சி தூய்மையானதென்றால் – நியாமானதென்றால் – இங்குள்ள அக்கினி அந்த எழுச்சியைப் புடம்போட்டுத் தங்கமாக்கும் – நுழைந்த நல் எழுச்சியின் பிரதி பலனாய் – எழுச்சிமிக்கப் பரிசாய் நல்ல உறவு தரும் – நல்ல பிணைப்பு  தரும் – நல்ல ஆரோக்யம் தரும் – தங்கமான வாரிசு தரும். அன்றேல், இந்த துவாரத்தில் உள்ள அக்கினி உன் தீய எழுச்சியைக் கொய்து உன்னையே பொசுக்கிவிடும் ஜாக்கிரதை!” என்று துவாரபாலகர்கள் சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது!” என்றேன்.

    பார்க்கப்போனால், பெரினியத் துவாரத்துக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு ஆணும் துளைநிலை ஒழுக்கத்தோடு மட்டுமே நுழையமுடியும் என்னும் எங்கள் ஆன்மீக விளக்கங்கள் இன்றைய மருத்துவச் சான்றுகளின் கருத்தையே என்றோ அனாயாசமாய்ச் சொல்லிப்போயின என்பேன். சொல்லப்போனால் கற்பு என்கிற ஒரு கோட்பாட்டை எங்கள் கலாச்சாரம் நேரிடையாகவும் – மறைமுகமாகவும் வாழ்க்கைக் கோட்பாடாகவே முன்வைக்கிறது எனலாம்” என்றேன்.

    “What you said really makes sense” என்றார். “Chastity” அதாவது கற்பு என்பது ஆணுக்கு மிகவும் முக்கியம் – அதனை நான் இந்நிலையில் வெகு ஆணித்தரமாகச் சொல்லமுடியும் – என் தனிமனித வாழ்வின் பலாபலன்கள் அடிப்படையில் என்றார். கற்பை உலகின் பல கலாச்சாரங்கள் கோடிட்டேனும் காட்டுகின்றன – ஆனால்  உங்கள் கலாச்சாரம் பல்லாயிரம் படிகள் மேலே போய் அதனை வாழ்வின் இன்றியமையாக் கூறாகக் காட்டுவது உண்மையில் மிகப்பெரிய சாதனை!” என்றவர் நான் இன்னொன்றையும் சொல்லவேண்டும் என்று தொடர்ந்தார்.

    “ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் ஆயுசு பரியந்தமும் வாழமுடியும் என்று உங்களைப்போலவே இங்கு சில வெள்ளையர்களும் காட்டிவருகிறார்கள். ஏகபத்தினி விரதத்தோடு வாழும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் – அப்படி இருந்திருக்கலாமே என என் எண்ணம் இப்போது ஏங்குகிறது. ஏனெனில் – எனக்குத் தெரிந்து ஏகபத்தினி விரதம் கடைபிடிக்கும் நபர்களின் குடும்பங்கள் உண்மையிலேயே, ஸ்திரமாய் – சவுக்கியமாய் – வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன. கிளைபட்டு – கிளைபட்டு branching செய்பவன் உண்மையிலேயே சீக்கிரம் ரோகியாகிறான் – இதில் நானும் அடக்கம் என்றார். ஒரு பெண்ணைத் தாண்டி இன்னொரு பெண்ணைப் புணரும்போது உண்மையிலேயே – அது கொடூர எண்ணம் தான் என நான் எங்கும் கூறுவேன்” என்றார்.

    சரி, மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று தொடர்ந்து வினவினார் – என் உரையாடல் தொடர்ந்தது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    f3546a80-305f-4863-8e4d-d7964e2c7672

    ’’ஒலிம்பிக் டார்ச்சேந்தி ஓடுகின்றான் கண்ணன்
    குளம்படி மான்வேகம் கொண்டு: -களம்புகும்,
    பார்த்தனின் வெற்றி பிரகா ச(ம்)அடைய
    வேர்க்கின்றான் நந்த வனன்’’…..கிரேசி மோகன்….

    குளம்படி -மானின் பாதம்….!

    Share
  • பெருமாள் துதி!

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….இன்று 3 நாமங்கள் ’’கோவிந்தாய, விஷ்ணவே, திரிவிக்ரமாய’’….!

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
    நிலைதர நின்றிடும் கோவிந்தா
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு ( நான்காம் பகுதி)

    க.பாலசுப்பிரமணியன்

     

    அமைதியான பயணம்…
    நினைவுக்கடலில்…
    ஆழ்கடலின் உள்ளே..
    அலைகளில்லாத இடத்தில்……
    இன்னும் அமைதியைத் தேடி…

    அமைதி எங்கே?
    மகிழ்சியாலா ?
    துயரத்தாலா ?

    இன்பங்களின் அந்தப்புர வாசலில்..
    சிதறிக்கிடப்போதோ மகிழ்ச்சி?
    அல்லது..
    துன்பக்கிணறைத் தூர்வாரியபின்..
    கொஞ்சிவரும்..
    குளிர் நீரூற்றோ ?

    இன்பங்கள்…
    வறண்டு காய்ந்த பூமியில்…
    சில்லென்று விழுகின்ற..
    சில நீர்த்துளிகள் போல்..
    ஒட்டியவுடன் உலர்ந்துபோகும் !!

    உடலின் ஒவ்வொரு அணுவிலும்..
    உள்ளே அமர்ந்து..
    அமுதம் போல்…
    சிகரத்தை வெல்லும் சிந்தனையைத் தூண்டி..
    வந்த சுவடு தெரியாமல்..’
    தன் வீடுநோக்கிச் செல்லும் !

    இன்பங்கள்.. எதில்?

    பிறக்காத பிள்ளைக்குப்
    பெயர் சூட்டும் ஆர்வத்தில் !

    உழைத்த உடலிலிருந்து
    உதிரமாய் கொட்டும் ..
    வியர்வையின் சுவாசத்தில் !!

    பசித்த வயிற்றை
    பானைச் சோறு ..
    முத்தமிடும் மோகத்தில் !!

    ஏழ்மையின் இதயத்தை
    காதலிக்கும் வறுமையின் தேடலில் !!

    வெறுப்பென்ற நெருப்புக்குள்
    கருணையும் வீடுகட்டி …
    வீணைமீட்டும் நாதத்தில்!!!!

    மருண்ட இருளின் துயர் நீக்க ..
    இன்னொரு விளக்கேற்றும்
    மெழுகுவர்த்தியின் தியாகத்தில் !!!!

    இன்பத்தையே துறந்து வந்த
    இன்பத்தை..
    நேசிக்கும் இன்பத்தில் !!

    இன்பங்கள் நீர்க்குமிழிகள்..

    இதயங்களோடு விலைபேசும்
    இடைக்காலத் தரகர்கள் !

    உணர்வுகளின் வாசலில்
    உமிழ்ந்து செல்லும்
    உல்லாசப் பறவைகள் !

    வானவில்லை வாசலில் காட்டி ..
    கானல் நீரில் கலங்கவிடும்
    கற்பனைத் தேர்கள் !

    இன்பங்கள்..
    வாசமுள்ள பூக்கள் தான் !
    வாடிவிடும் காலையிலே !

    சிற்றின்பச் சிரிப்பிற்காக
    சீழ்பிடித்த உடலும்
    சீறியெழுந்து …
    விசிலடிக்கும் வேட்கை !!

    பூசைக்கு வந்த மலராய்
    பேரின்பச் சிந்தனைகள்..
    புலனுள்ளே தவமிருக்க ..
    போராடும் வாழ்வோடு!!

    சொந்தமென்று எதுவுமில்லை..
    இன்பத்தில்..
    இல்லாதவர்க்கு கிடைப்பதெல்லாம்
    இன்பம் !!
    இருப்பவருக்கு இன்னும் வேண்டுவதோ
    இன்பம் !!
    துறந்தவர்க்குத் வந்தவினை கழிப்பதுவே
    இன்பம் !!

    மதமுற்ற களிறுபோல்
    வீதியெல்லாம் ஓடுகின்றேன் ..
    இன்பமென்ற ஒன்றைத் தேடி ..
    ஏங்குவதென்…..
    மனமா? உடலா? உயிரா ?

    மாயத்தை நீக்கி ..
    மனதுள் சொல்லிடுவாய்..
    மாயவனே !

    நண்பனே !
    கைப்பிடித்த உன்னுடன்
    காலமெல்லாம்
    கேள்விகளின்றி…
    பதில்களின்றி..
    அமைதியில் ..
    நடப்பதுவோ இன்பம் ?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”BAMBOO NOTES”….
    ——————————————

    கேசவ் ஓவியத்தைப் பார்த்த்வுடன் நினைவுக்கு வந்தது ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’’ கவிஞர் கண்ணதாசர் அவர்களின் ‘’கிருஷ்ண கானம்”….!

    09b8a4e7-d23f-4df5-aa40-f261e9c9ca12

    ‘’பேம்பூ(Bamboo) கொடுத்து வந்த புல்லாங் குழல்புருஷன்
    மாம்பூ(மாம்பழவாய்)வாய் பட்டின்று மோதியதால் -தாம்பூலம்
    போலச் சிவந்து பிரவுன்(Brown) நிறமிழப்பு,
    பால்பசு போயங்கு பேர்(BEAR)’’….கிரேசி மோகன்….

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு  ( மூன்றாம்   பகுதி)

    க.பாலசுப்பிரமணியன்

     

    நண்பனே !!

    உடலின்றி உயிரில்லை…

    ஆனால்…

    உடலில்லா உயிரெங்கே?

     

    வாழ்க்கை என்றால் என்ன?

    வாழ்க்கைக்கும் உயிருக்கும் என்ன உறவு?

     

    புல்லாங்குழலின் ஒரு பக்கம்

    நுழையும் காற்று..

    இசையாய்

    மறுபக்கம் வருவது போல்…

     

    உடலென்னும் இந்தக் குழலில்..

    ஓசையின்றிச் செல்லும் காற்று..

    இசைக்கும் இசைதான் வாழ்வோ?

     

    இந்தக் குழலை ஊதுவது யார்?

    நீயா? இல்லை நானா?

    இதில்..

    ராகங்களையும் ,

    தாளங்களையும்

    பாடல்களையும்

    யார் எழுதியது ?

     

    ஓர் மரபணுக்குள் உயிரைவைத்து

    நாளொரு மேனியும்

    பொழுதொரு வண்ணமுமாய்

    வளர்த்து ..

    வாழ்வென்னும் வலைக்குள்

    வாசமுடன் வைத்தது யார் ?

     

    புழுவாக..

    புள்ளினமாக

    பூமியிலே ஊர்வனவாக..

    மண்ணுலகில்..

    நீர்நிலையில்..

    வானத்தில் ..

    வண்ணமிகு உயிரினங்கள் ..

    ஏன் படைத்தாய் ?

     

    மரபணுக்குள் ..

    உயிர் மந்திரத்தை

    யார் எழுதியது?

     

    வாழ்க்கையின் பொருள்பெற்று

    ஒரு மரபணு..

    இன்னொரு மரபணுவிற்கு ..

    என்ன செய்தி சொல்கிறது?

    எதற்காக ?

     

    கருவறையில்

    தொட்டிலிட்டு ..

    தன்னுயிரைப் பணயம் வைக்க

    தாய்மைக்கு யார் சொன்னது?

     

    அழுதுகொண்டே பிறக்கின்ற உயிர்

    வாழ்வில் அழுவதற்கு

    ஏன் மறுக்கிறது?

     

    வாழ்க்கை.. என்பது

    முடிந்ததா?

    முனைந்ததா?

    முடிவதா?

     

    வாழ்க்கை..

    எங்கே தொடங்கி..

    எங்கே முடிகிறது?

     

    பிறப்பும் மரணமும்..

    வாழ்க்கை கதைக்கு

    முன்னுரையும் முடிவுரையுமா?

     

    சில உயிர்கள்…

    மின்மினிப் பூச்சிகள்… போல் ..

    முடிவிலே முதலை நிறுத்தி…

     

    சில உயிர்கள்…

    முடிவையே  அறியாமல்…

    என்றும் சிரஞ்சீவியாய் ..

     

    சில உயிர்கள்..

    நித்தம் பயத்தில்

    பிறந்துகொண்டும்.. இறந்துகொண்டும்..

     

    ஏன் இந்த பாரபட்சம் ?

    இதை யார் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது?

     

    மகிழ்ச்சிகள் ..

    வேதனைகள்..

    வெற்றிகள்..

    தோல்விகள்..

    எது வாழ்க்கைக்குச் சொந்தம் ?

     

    அறியாததை அறிவுக்கும்

    நிலையாததை உண்மைக்கும் ..

    இணைக்க முயலும் ..

    முகப்பில்லா முயற்சியோ

    வாழ்க்கை ?

     

    விதையாக..

    முளையாக..

    செடியாக..

    பூத்துக்குலுங்கி..

    பழமாகிக்கனிந்து

    சருகாக ..

    வீழ்வதுவோ வாழ்க்கை ?

    இதில் எது சிறந்தது ?

    முளைப்பதா முடிவதா ?

     

    கேள்விகள் ஆயிரம்..

    பதில்கள் பதுங்கிக்கொண்டு.. … ..

    அறிந்தவர்கள் அமைதியில் ..

    அறியாதவர்கள் ஆணவத்தில்..!!

     

    நண்பனே..

    கோள்கள் பல்லாயிரம்…

    தாரகைகள் பல்லாயிரம்..

    பால்வெளிகள் பல்லாயிரம்…

    அண்டங்கள் எங்கெங்கோ…

     

    இதனிடையில்…

    இந்த உயிர்..

    இந்த உடல்..

     

    நீ..

    நான்..

    நமக்குள் என்ன உறவு ?

    இது வெறும் நட்பா?

    இல்லை …?

     

    பயத்தில்..

    உன் கைகளை   ..

    இருக்கமாகப் பிடிக்கிறேன்..

     

    பயணம் தொடர்கிறது..

    அமைதியான பயணம்..

    இனிமையான பயணம்..

     

    ஆண்டுகளாய்

    யுகங்களாய் ..

    நீயும் நானும்…

    போகுமிடம் எங்கே..?

    Share
  • பெருமாளின் த்வாதச நாமத் துதி….

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….

    இன்று ஆரம்பம்….முதல் மூன்று நாமங்கள் ‘’கேசவா, நாராயணா, மாதவா’’….

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..

    “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
    கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
    உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
    பலமுற காட்டினை பாதையதை
    பொலபொல என்றுதி காலையை முந்திடும்
    பரவசக் கோதையின் பாசுரத்தால்
    அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
    கட்டிடக் கேட்டிடும் கேசவனே”….(1)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
    பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
    பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
    எறியசு தர்சனம் விரல்விட்டு
    துரிதநி வாரண முனிகள்த போவனம்
    பறையும்க தாம்ருத காரணனே
    முரளிம னோகர கமலப தாம்புய
    அனந்தந ராயண பூரணனே”….(2)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அவையென இவையென அளவிடல் தவறென
    கவிமணி மலையணில் கூட்டியதை
    புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
    மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
    தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
    குளிர்மழை காத்தனை யாதவனே
    கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக்
    கரணம்செய் காக்கும் மாதவனே”….(3)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Share
  • “கொஞ்சம் யோசி”

    மீ. விசுவநாதன்

     

    பெற்ற உதவியை மறப்பதும்
    உற்ற துணைதனை இழப்பதும் – மனமே
    கற்ற வழியெது எண்ணுவாய் – தீ
    தற்ற மொழியிலே சொல்லுவாய் !

    நித்தம் கவலையில் திளைப்பதும்
    சுத்த நினைவினை இழப்பதும் – மனமே
    சித்தம் அறிந்துடன் காட்டுவாய் – உன்
    குத்தம் குறைகளைக் கொட்டுவாய் !

    உருவில் அழகினைக் கருதியும்
    அருகில் பணத்தது புழுதியும் – மனமே
    உருகி உருகியே கொஞ்சுவாய் – உயிர்
    திருகித் தவிகையில் அஞ்சுவாய் !

    நீரில் மிதக்கிற எண்ணையாய்
    நாரில் விடுபடும் மலர்களாய் – மனமே
    நூறில் ஒருவராம் என்றிட – நீ
    சேறில் கமலமாய்த் தோன்றுவாய் !

    (அரையடி வாய்பாடு: மா, விளம், விளம்)
    (05.08.2016 07.39 am)

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு .. (ஐந்தாம் பகுதி )

    க. பாலசுப்பிரமணியன்

     

    நண்பனே…
    கொஞ்சம் நில்…
    என் இன்பக்கோட்டையின்
    வாயிலின் கதவுகளை
    யாரோ தட்டுகிறார்கள் !

    ஏன் நண்பா சிரிக்கின்றாய்?
    உனக்கு அவர்களை அடையாளம்
    தெரியுமா?

    உருக்குலைந்த உடல்கள்
    ஒன்றாய் .சேர்ந்ததுபோல்..
    உருத்தெரியாத உருவங்கள்
    நடுக்காட்டில் ஓலமிட்டது போல்……

    அந்த ஒலி
    ஏன் புரியாத பயத்திற்கு
    முன்னுரை எழுதுகிறது?

    பனிக்குள் புதைந்த நெருப்பைப்போல் ..
    இளமைக்குள் மறைந்த முதுமை போல்
    இருளுக்குள் ஒளிந்த பயத்தைப் போல் ..

    நம்பிக்கையின் வேர்களில்..
    நச்சை உமிழ்ந்துகொண்டு…

    காலங்கள் காத்து நின்ற..
    நமது நட்பின் ..
    ஆணிவேர்களை அசைத்துக்கொண்டு..

    பயத்துக்குப் பாதுகாவலனாய்
    சந்தேகத்தின் சகோதரனாய் ..

    ஓ!
    இவைகளுக்குப் பெயர்தான்
    துன்பங்களா?

    துன்பங்கள்..
    அதிர்ஷ்டத்தேரின் ஓட்டத்திற்கு
    முட்டுக்கட்டையாய் ..

    ஆரம்பத்திலேயே….
    முடிவைத்தேடும்..
    முதுகலையாய் ..

    என்னையே நான்
    வீழ்த்திக்கொள்ள
    ஏதுவாய்…

    நண்பனே !
    துன்பத்திற்கு ..
    வாழ்வில்…
    ஏன் தோரணம் காட்டுகிறோம் ?

    வலிகள் ..
    சங்கடங்கள்…
    பிரிவுகள்..
    துன்பத்திற்குத் தோள்கொடுப்பதேன்?

    யாருடைய கருவில்
    துன்பம்..
    உயிர்த்து எழுந்தது ?

    அமைதியான வாழ்வில் ..
    அழிவின் தூதுவனாய் ..
    அலைகள் ஆர்ப்பரிக்கும்
    சுனாமியாய் ………

    தனக்குத் தானே தவிலடித்துக்கொண்டு..
    கோஷங்கள் போட்டுக்கொண்டு..
    விழா எடுத்துக்கொண்டு…

    என்னோடு போரிட ..
    இவைகளுக்கு …
    ஏன் இத்தனை ஆசை ?

    கார்மேகத்தில்..
    கண்சிமிட்டும் மின்னலைப் போல்..
    கலங்கவைக்கும் இடியினைப்போல்….

    கண நேரத்தில்..
    வரும் போகும்…!

    பாவம் !
    யாருக்குத் தெரியும் ..
    இவைகளுக்கு
    வாழ்வு குறைவென்று ?

    காற்றடித்தால் ஓடிவிடும் !
    கனவுலகில் மறைந்துவிடும்.!
    கண்ணீரில் கரைந்துவிடும் !

    அறிவுக்கண்களுக்கு ..
    இவை தெரிவதில்லை…
    அசையாத உள்ளங்களுக்கு
    இவை அடையாளம் காட்டுவதில்லை !

    துன்பம் எது?

    இருப்பதில் அடங்குவதா?
    இயலாமையில் வாடுவதா?
    இசைவின்றி வாழுவதா?

    தோல்வியில் துவளுவதா?
    துணிந்து எழுந்திட மறுப்பதா?

    தன்னலம் போற்றுவதா ?
    பிறர்நலம் பேணுவதா?

    துன்பத்தைக் கண்டு
    துன்பமுறும் நெஞ்சங்களில்
    எஞ்சி நிற்பது என்ன?

    வந்ததும் ஒன்றுமில்லை..
    போவதும் ஒன்றுமில்லை..
    அறிந்தவர் மாய்ந்ததில்லை..
    அறியாதார் வாழ்ந்ததில்லை..

    துன்பம்…
    என் நிழலுக்கு ..
    நான் எழுதிக்கொடுக்கும்
    அடிமை சாசனம்!

    கன்றாகப் பின் நின்று…
    களிப்புடன் உன் நிழலில்..
    காலங்கள் கழித்திட்டால்

    துன்பங்கள் வந்திடுமோ?
    துயரங்கள் நின்றிடுமோ?

    நண்பனே…
    நான் அறிவேன்…
    உன் உள்ளம்..

    யாரறிவார் உன் வலிகள் ?
    உன் துயர்கள்..?”

    உன் பாதச்சுவடுகளில் …
    என் பாதங்களை அமர்த்தும் பொழுது..
    உன் வலிகள் …
    உன் துயரங்கள் ….
    என் உள்ளுணர்வுகளில்…

    பிண்டங்களின்..
    அண்டங்களின் ..
    கோள்களின் ..
    துயரங்கள்…
    அனைத்தையும் சுமந்தும் நீ..

    முகத்தில் என்றும்..
    அமைதியுடன்..
    புன்னகையுடன்..

    அனைத்தையும் கடந்ததாலோ?

    நீ.. ?
    ஆள்பவனா?
    ஆண்டவனா?

    நண்பா..
    நீ யாராயிருந்தாலும் ..
    கைப்பிடித்து வருவேன் !

    “யாமிருக்க பயமேன்?”
    என்று…
    நீ எனக்கும்..
    நான் உனக்கும்..

    காலங்கள் சென்றாலும்
    கறைபடியா நட்பன்றோ?

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(10)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(9)

    kural-4-1-1

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    பிறவாழி நீந்த லரிது (8)

    அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை அடைந்தாருக்கு அல்லாமல், மற்றவர் பொருள், இன்பமாகிய பிற கடல்களைக் கடக்க முடியாது.

    ருமத்தின் பாதை சூட்சுமமானது, கரடுமுரடானது` என்று மகாபாரதம் சொல்லும். அறம் என்பது பல பொருள் கொண்டது. காலம், இடம், சூழல், மனிதனின் நிலை இவற்றுக்கேற்பப் பொருள் மாறுவது. மிகவும் விரிந்தது. மிக மிக நுண்மையானது. இறைவனுக்குச் சொல்லப்படும் பல தன்மைகள் தருமத்திற்கும் பொருந்தும். எனவே தருமத்தை, அறத்தைக் கடல் எனலாம். ஆனால், இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டவனுக்குப் பாதை கரடுமுரடாக இருக்காது.

    அறவாழி என்றால் தருமக் கடல். அந்தணன்? செந்தண்மை பூண்டொழுகுபவன்! எதிர்பார்ப்பற்ற கருணை பூண்டவன், காரணமற்ற கருணை உள்ளவன். காருண்ய வேகம் உள்ளவன். செயற்பூர்வமான தயை உள்ளவன்.

    இறைவனே அறக்கடல். பெரியது, அளவற்றது, ஆழமானது, ரத்தினங்களைக் கொண்டது என்பதற்காக அவனைக் கடல் என்கிறோம். இது மருட்டும் கடல் அல்ல. நம்மை ஆச்சரியத்தில் நிறுத்திவைக்கும் அருட்கடல். வற்றாதது. அவனது திருவடிகளைச் சேர்வதும் அறக்கடலை அளப்பதும் ஒன்றே. அவனது திருவடிகளாகிய ஓடத்தின் மூலம் பிற கடல்களாகிய பொருள், இன்பம் இவற்றையும் கடக்கலாம். அறம், புரியாமல் போகலாம். ஆனால், பொருள், இன்பம் இவற்றில் மயக்கம் ஏற்பட்டு மனிதன் திசைதவறிப் போக வாய்ப்பு அதிகமுண்டு.

    இறைவனின் தாள்களே அறக்கடல். அவன் தாள்களே தெப்பம். அவன் தாள்களே மற்றைய கடல்களைக் கடக்க உதவும் ஓடம்.

    `அறவழியை ஏற்காத மனிதர்கள், என்னை அடையாமல் இன்ப துன்பங்களில் உழல்கிறார்கள்,` என்பது கண்ணன் வாக்கு, (கீதை:09:03)

    இந்தக் குறளிலும் முந்தைய குறளிலும் அரிது என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதன் சிறப்பைப் பார்ப்போம்:

    ரிது என்றால் அருமையான (precious) அரிதான (rare) என்று பொருள். அருமை என்ற சொல்லுக்கு இன்மை, இல்லாதது  (non-existent) என்றும் பொருள். அரிது என்றால் உண்டாகாது, தோன்றாது (impossible) என்றும் பொருள். இந்த நான்கு பொருள்களிலும் அரிது என்னும் சொல்லை ஆள்கிறார் வள்ளுவர்.

    பசும்புல் தலைகாண் பரிது; வெகுளி கணமேனும் காத்தல் அரிது; வானகமும் வையகமும் ஆற்றல் அரிது; மாண்டற் கரிதாம் பயன்; புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே;  தீப்பிணி தீண்டல் அரிது; அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது; தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; வணங்கிய வாயினராதல் அரிது; அரியவற்று ளெல்லாம் அரிதே; உறைநிலத்தோடு ஒட்டல் அரிது; அரிய கற்றும் ஆசற்றார்; மாண்பயன் எய்தல் அரிது; இகல்வெல்லல் யார்க்கும் அரிது; போற்றின் அரியவை போற்றல்; கொளற்கரிதாய்; மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது; செறுவார்க்கும் செய்தல் அரிது; பொன்றாமை ஒன்றல் அரிது; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.

    இன்னும் இப்படிப் பல குறள்களில் அவர் அரிது என்னும் சொல்லை ஆண்டிருக்கும் விதம் ஆய்ந்து அறியத்தக்கது.

     தொடருவோம்

    Share
  • அம்மாபிள்ளை

    நிர்மலா ராகவன்

     

    பூங்கோதையின் அருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு.

    `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும் ஒன்றுதான்!’ என்று நினைக்கும் போதே ஏதோ நெஞ்சை அடைத்துக்கொண்டது.

    “ஒங்களுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே!” யாராவது ஏதாவது கேட்டால், ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசும் பூங்கோதை அன்றுதான் முதன்முதலாக அவ்வளவு ஆக்ரோஷத்துடன், சுயமாகப் பேசினாள். அதுவும் கணவனிடமே!

    அவளுக்கு விடையளிக்கும் திறனின்றி, தங்கராசு தலைகுனிந்த படி, ஆஸ்பத்திரி அறையை விட்டு வெளியேறினான்.

    அறைக்கு வெளியே நின்றிருந்த கோமளம் கண்ணில் வேதனையுடன் வெளிநடந்த மகனைப் பார்த்தாள்.

    `ஒன்னை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்! சீ!’ அவள் மனதில் நினைத்தது அவனுக்குக் கேட்டது.

    மனைவி இருக்கையிலேயே கேடுகெட்ட  பெண்களை தேடிப் போயிருக்கிறான்!

    பத்து வயதுவரை தன் மடியிலேயே வைத்துக் கொஞ்சிய மகன்!

    “ஒங்கப்பா மாதிரி நீயும் என்னை விட்டுட்டுப் போயிடாதே, தங்கம்!” சிறுவயதில் அம்மா ஓயாது அரற்றியது அவனுக்குப் புரியத்தான் இல்லை. அப்பா அவர்களுடன் தானே இருந்தார்?

    குழப்பத்தினூடே, தனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்யும் அம்மாவின் மேல் பரிதாபம் உண்டாயிற்று. அவளுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டான்.

    எல்லாரும் கடவுளுக்குப் படையல் செய்தால், அம்மாவுக்கு அவன் தான் தெய்வம். அவள் எது சமைத்தாலும், அவன் சாப்பிட்டுப் பார்த்ததும், `பிடிச்சிருக்கா தங்கம்?’ என்று பல முறை கேட்டு, தன் சம்மதத்தைக் காட்ட அவன் தலையாட்டினால் தான் இன்னொரு முறை அதைச் செய்வாள்.

    ஒரு முறை, ஏதோ நூதனமான உணவுப் பண்டத்தைத் தயாரித்து, அதை இவன், `நல்லாவே யில்லையே!’ என்று சொல்லிவிட, அவள் துடித்ததைப் பார்த்து, இனி அம்மா மனம் நோக எதையும் சொல்லக்கூடாது என்று நிச்சயித்துக் கொண்டான்.

    அன்றையிலிருந்து, எது சொல்வதற்கு முன்பும், `நான் இப்படிச் சொன்னால், அம்மா எப்படி எடுத்துக்கொள்வாள்?’  என்று யோசித்துப் பேச ஆரம்பித்தான். அதனால் பேசுவதே அபூர்வமாகிப் போயிற்று.

    தட்டில் அம்மா என்ன போட்டாலும், எவ்வளவு போட்டாலும், சாப்பிட்டான். `குண்டு’ என்று சகமாணவர்கள் கேலி செய்தபோது, `எங்கம்மாவுக்கு நான் இப்படி இருந்தாத்தான் பிடிக்கும்!’ என்று மறுமொழி அளிப்பான், வீம்பாக.

    அதிசயமாக ஒருமுறை, “எங்க ஸ்கூல்ல எல்லாரையும் உல்லாசப் பயணம் கூட்டிட்டுப் போறாங்கம்மா. நாலு நாள்! நானும் போறேனே!” என்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொஞ்சியபோது, “என்னைத் தனியா விட்டுட்டுப் போக ஒனக்கு அவ்வளவு ஆசையா, தங்கம்?” என்று அழுகைக்குரலில் கேட்ட கோமளம், அன்று பூராவும் எதுவும் பேசாது, எதையோ பறிகொடுத்ததுபோல வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    மறுநாள் எல்லா மணவர்களும் பெயரைப் பதிவு செய்யும்போது, “ஏன் தங்கராசு, நீ வரலே?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் ஆசிரியை.

    “அவன் அவங்கம்மாவை விட்டு எங்கேயும் வரமாட்டான், டீச்சர்!” யாரோ ஒருவன் துடுக்காகச் சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள்.

    இந்த மாதிரி ரௌடிகளுடன் ஊர் சுற்றுவதற்கு, வீட்டு வாசலில் தனக்கென்று அம்மா வாங்கிப் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம்!

    இவன் ஒதுங்க ஒதுங்க, மற்ற பையன்களின் தொல்லை அதிகமாயிற்று. போதாத குறைக்கு, இப்போதெல்லாம் அப்பாவும் சேர்ந்துகொண்டார்.

    தானுண்டு, தன் நண்பர்கள் உண்டு என்றிருந்தவருக்கு அப்போது தான் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற பிரக்ஞையே வந்திருந்தது.

    “இந்தா! அவனை அவன் வயசுப் பசங்களோட பழக விடு. இப்படி, வீட்டிலேயே பிடிச்சு வெச்சுக்கிட்டு!” பொங்கிய ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொள்ள, முணு முணுப்பாக வந்தது குரல்.

    அதுவே பொறுக்கவில்லை கோமளத்திற்கு. “எல்லாம் எனக்குத் தெரியும். வீட்டிலேயே தங்காம, கூட்டாளிங்களோடேயே பொழுதைக் கழிக்க.., ஒங்கொருத்தரைப்போல, என் மகன் ஒண்ணும் சூதாடியோ, குடிகாரனோ இல்லே!”

    சூதாட்டம் தந்த போதையில், `இதைவிட வேறு சுகமில்லை!’ என்று தோன்றிப் போயிருந்தது அவருக்கு. திருமணமாகிய சில வருடங்களிலேயே, மனைவியை நாடுவதில் நாட்டம் அறவே போயிற்று. அதனாலேயே அவளுடைய ஏளனத்துக்கும், வெறுப்புக்கும் தான் பாத்திரமாகியிருந்தது அவருக்குத் தெரிந்துதான் இருந்தது.

    இப்போது தான் அதிகம் பேசினால், தன் குறையை உரக்க விமர்சித்து விடுவாளோ என்ற பயம் எழ, வாய் அடைத்துப் போயிற்று. `அம்மாவும், பிள்ளையும் எப்படியோ தொலையட்டும்!’ என்று கைகழுவிவிட்டார்.

    மகனையொத்த இளைஞர்கள் காதல், கீதல் என்று அலைந்து, தான்தோன்றித்தனமாக எவளையோ கல்யாணம் செய்துகொண்டு பெற்றோரைப் புறக்கணித்து விட்டுப் போவதைப் பார்க்கையில், கோமளத்திற்கு அவனைப் பற்றி அபாரப் பெருமை எழும்.

    `எங்க தங்கத்தைப்போல உண்டா! படிச்சான், வேலையில சேர்ந்தான். `இந்தாங்கம்மா,’ன்னு அப்படியே சம்பளப் பணத்தை என் கையில குடுத்துடறான். ஒரு சிகரெட்டு பிடிச்சிருப்பானா, இன்னி வரைக்கும்!’ எதிரில் யாரும் இல்லாவிட்டாலும் கூட  தானே மகன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பாள், சலிக்காது.

    தங்கராசு நிச்சலனமாக இருந்தான். அம்மா சொன்னால் மகன் முடி வெட்டிக்கொள்ளப் போனான். எந்தக் கடையில் எப்படிப் பேரம் பேசி சாமான் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் உபதேசம் நடக்கும்.

    அம்மா இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்யக்கூட தங்கராசுவுக்குப் பயமாக இருந்தது. அம்மாவே பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான், அசட்டுச்சிரிப்போடு.

    அவனுக்குத் தெரியாது, பலரும் கோமளத்திடம், `ஒனக்கு வயசாகலே ஒரு மருமக வந்தா ஒனக்கு நல்லதுதானே?’ என்று கேட்டதன் விளைவு அது என்று.

    மகனுடைய அன்புக்காக மருமகளுடன் போட்டி போட வேண்டியிருக்குமே என்று முதலில் பயந்த கோமளம், மிகவும் சாதாரணமான ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தாள்.

    பூங்கோதை அம்மா மாதிரியே தெரிந்தாள்  தங்கராசுவுக்கு.

    முரட்டுத்தனமாகப் பேசியோ, நடந்தோ அவளை நோகடிக்கக்கூடாது என்று தோன்றிப்போயிற்று. ‘வேறொரு பெண்ணை — என்னதான் அவள் மனைவியாக இருந்தாலும் — நான் நாடினால், அம்மாவுக்கு வருத்தமாக இருக்காது? என்ற குழப்பம் வேறு எழுந்தது.

    கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தன்னிடம் ஏதோ குறை இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. ஏதோ வேகத்தில், உடன் வேலை செய்யும் ராமுவிடம் சொல்ல, மன்மதக்கலையைத் தொழிலாகக் கொண்டிருந்த பெண்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த அனுபவம் அளித்த வேகத்தில் மனைவிக்குக் கணவனாக இயங்க முடிந்தது.

    தான் தகப்பனாகப் போகிறோம்! தங்கராசுவுக்குள் ஒரு நிறைவு. முதன்முறையாக, அம்மா சொல்லிக் கொடுக்காமல் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம்!ஆனால், அந்தப் பெருமையும், பூரிப்பும் நிலைக்கவில்லை.

    “குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வையில்லை. கருவிலேயே காம நோயால் பாதிக்கப்பட்டு..,” என்று டாக்டர் கூறிக்கொண்டே போனபோது, தங்கராசுவுக்கு ஒன்றுதான் புரிந்தது. தன்னால் எதையுமே உருப்படியாகச் செய்ய முடியாது.

    “எனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா. ராமுதான் சொல்லிக்குடுத்தான்!” என்று சிறுபிள்ளையாகவே ஆகி, பயத்தில் திக்கியபடி அவன் கூறியபோது, கோமளத்தின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை.

    மகனைப் பிறரிடம் இழந்து, தனிமைக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயம் இனி கிடையாது. அவன் என்றும் அவள் குழந்தை தான்!

    Share
  • அருள்என்னும் அன்புஈன் குழவி

    முனைவர் துரை.குணசேகரன்,

     

    மனத்தான், பகுத்தறியும் குணத்தான் மாண்புக்குரிய இனம் மனித இனம். பண்பட்ட மனித மனம் தனக்கென வாழாது. அதற்குக்காரணம் அம்மனத்தில் குடி கொண்டிருக்கும் கனிந்த அன்பால் உருவான அருட்பண்பு. மாந்தரிடத்தில் இப்பண்பு குடிகொண்டிருப்பதால்தான் இன்னும் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொல்காப்பியர் காலம் தொடங்கி அண்மையில் சென்னை, திருவள்ளுர்,கடலூர் போன்ற நகரங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்ட காலம் வரை மேற்கூறிய அருள் பண்பின் மேன்மைத்திறம் குறித்தது இக்கட்டுரை.

    அன்பின் வழிப்பட்ட அருள்: வரையறை

    அருளுக்குப் பொருள் விளக்கம் கூறவந்த பிங்கலந்தை நிகண்டு,

    தகவும் கருணையும் இரக்கமும் தயவும்

    கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும்

     

    என்று குறிப்பிடுகிறது. அருள் குறித்து கருத்துரைக்கும் மொ.அ. துரை. அரங்கசாமி,

    பிற உயிர்களின் துன்பம் கண்டு துடிப்பவருடைய உள்ளத்தில் முதல் முதல் நெகிழ்ச்சி ஏற்படும் கசிவும் காதலும் அன்பும் ஆர்வமும் அருளும் உண்டாகும். இவை ஒரு பொருள் குறித்த பல சொற்கள் போலத் தோன்றினாலும் தம்முள் பெரிதும் வேறுபாடு கொண்டவை. அருள் என்பது இவ்வரிசைப்படி இறுதியாகும் என்று குறிப்பிடுகின்றார்.(அன்புநெறியே தமிழ்நெறி.பக்.73-77)

    அன்பு தொடர்பான பல சொற்களை எடுத்துரைக்கும் ஜெக வீரபாண்டியனார், “தன்னைப்பெற்ற தாய் தந்தையர் மேல் ஒருவருக்குள்ள பிரியம் மருவியபொழுது அது பிரிவு; மனைவியரிடம் நேரின் காதல்; மக்கள்பால் உறின்பாசம்; சுற்றத்தினர் மேல் எழுந்தால் அது வாஞ்சை; தாழ்ந்த பிராணிகள் மேல் சாரின் தயை; ஒத்தார்மீது உறின் நேசம்; உயர்ந்தவர்மேல் வரின் ஆர்வம்; பொருள்கள்பால் புகின் பற்று; தெய்வத்தின் மீது வைப்பின் பக்தி; முதிர்ச்சியில் பிறப்பது அருள்” என்று விளக்குகின்றார்.(நீதி நூல்கள் தொகுதி.2.பக்.269)

    அன்பின் திறத்தினை அறத்துப்பாலில் அன்புடைமையில் பத்துக்குறட்பாக்களில் விளக்கிய வள்ளுவர்(71-80) பொருள் செயல் வகை குறித்து பொருட்பாலில்,

    அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்

    செல்வச் செவிலியா லுண்டு”(757)

     

    என்று அன்பின் குழந்தையாக அருளைக்குறிப்பிடுகின்றார். இதற்கு உரை எழுதப்புகுந்த  பரிமேலழகர், “தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் உளதாவ தாகலின் அதனை’அன்பீன் குழவி என்றும், அது வறியார் மேல் செல்வது அவ்வறுமை களைய வல்லார்க்கு ஆகலின் பொருளை அதற்கு ‘செவிலி ’என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாதுதானே எல்லாப்பொருளும் உதவி வளர்த்தலின் ‘செல்வச்செவிலி’ என்றும் கூறினார்.” என்று தெளிவுரை நல்குகின்றார். இதன்வழி அன்பின் கனிந்த உள்ளம் அருள் என்றும், இது முழுமையுற எண்ணத்துடன் செயல்பாட்டிற்குத் தேவையான பொருள் தேவை என்றும் தொடர்பில்லார், தொடர்பில்லாதவை மாட்டுப் பிறப்பது அருள் என்பதும் பரிமேலழகர் கருத்து. இது அன்பினை, தன்னலம் சார்ந்ததாகவும் அருளினை, பொது நலம் சார்நததாகவும் வெளிப்படுத்தும் என்பதும் அறியத்தக்கவையாகும். ஆனால் வள்ளுவரோ தம்முடைய அன்புடைமை அதிகாரத்தில்,

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு”(72)

     

    என்னும் குறள் வழி அன்பும் பொதுநலம் சார்ந்ததாகவே காட்டுகின்றார் என்பது தெளிவு.

    மேற்காணும் விளக்கங்களிலிருந்து பரிவு, காதல், பாசம், வாஞ்சை, தயை, நேசம், ஆர்வம், பற்று, பக்தி, நட்பு, அருள் இவையனைத்தும் அன்பின் வெளிப்பாடு என்பதும் இதன் முதிர்ந்த கனிந்த நிலையே அருள் என்றும் தெளியலாம். ஆன்மிகவாதிகளின் அருளால் உள்ளம் தெளிவாகும். பிறரின் அருளால் புறமும் நலமாகும். முன்னதற்குப்பொருள் தேவையிலை; பின்னதற்குப் பொருள் அவசியம் என்று வரையறுத்துக்கொள்ளலாம்.

     

    பிறவிக்குணமா?

    தமிழ் மூதாட்டி ஒளவை பழக்கம், பாரம்பரியக்குணம் இவற்றிற்குரியவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பன ஆய்வுக்குரியது.

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்நித்தம்

    நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

    கொடையும் பிறவிக் குணம்

     

    ஒளவையின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும் பின்னவை மூன்றையும் பழக்கத்தால் கொண்டுவரமுடியும். பிறவிக்குணம் நிலையானது; பழக்கம் நிலையில்லாதது. தொடர் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே பழக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது தெளியலாம்.

    நேயச்சிந்தனைகள்:

    அன்பின் பிரிவுகளில் ஒன்றான நேயம் தொடர்பில்லாதோர் மாட்டு நிகழ்வது. இதனை மனிதநேயம், ஆன்மநேயம் என்று வகைப்படுத்தலாம். உறவினர் அல்லாத பிற மாந்தர்களிடம் செலுத்துவது மனிதநேயம் என்றும், பிற உயிர்களிடமும் உயிரல்லாத பொருள்களிடமும் கொண்டுள்ள  நேயத்தினை ஆன்மநேயம் என்றும் தெளிவுபடுத்தலாம். எடுத்துக்காட்ட வேண்டுமெனில் பாரதியின்,

    வாழ்ந்தால் முப்பது கோடியும் வாழ்வோம்

    வீழின் முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்

     

    என்றது மனிதநேயம் என்றால்,

     

    காக்கை குருவி எங்கள் சாதிநீள்

    கடலும் மலையும் எங்கள் கூட்டம்

     

    என்றது, ஆன்மநேயத்தின்பாற்படும் எனலாம்.

    இலக்கியங்களில் மனிதநேயம்:

    தமிழை பக்தியின் மொழி என்பார் தனிநாயக அடிகள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறரும் அரும்பாடுபட்டு, தமிழில் பக்தி இலக்கியச் செய்திகளை அளவில்லாது அளித்துள்ளனர். அதன்வழி மக்கள் மனத்தில்   நேயச்சிந்தனைகளை வளர்த்துள்ளனர். மற்ற உயிர்களினின்றும் மனிதன் வேறுபடுவதற்கு அடிப்படை அவன் பெற்றுள்ள மனமே.

    அறிவு: தொல்காப்பியர் வரையறை

    அறிவினை முன்னோர்கள் வழியில் வகைப்பாடு செய்யும் தொல்காப்பியர்,

    ஒன்றறி வதுவே உற்றறிவதுவே

    இரண்டறி வதுவே அதனொடு நாவே

    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்தறி வதுவே அவற்றொடு மனனே

    நேரிதின் உணர்ந்தொர் நெறிப்படுத் தினரே”(தொல்.மரபியல்.27)

     

    என்று அறிவியலாளரும் வியக்கும் வண்ணம் ஓரறிவு முதல் ஆறறிவு வரை தெளிவுபடுத்தியுள்ளார். இதில், புலன்களின் வளர்ச்சி நிலையைச் சுட்டும் அவர், அவ்வற்றிற்குரிய உயிரினங்களையும் பட்டியலிடுகின்றார். அதன் நிறைவாக,

     

    மக்கள் தாமே ஆறறிவுயிரே’(மரபியல். நூ.33)

    என்றும் குறிப்பிடுவதன் வழி மனத்தாலறியும் அறிவினைக்கூடுதலாகப் பெற்றவர்கள் மனிதர்கள் என்பது புலனாகும்

    மனத்தால் மாறுபாடு:

    மனம் கொண்டவர்கள் மனிதர்கள் என்பதனாலெயே அனைவரும் பண்பட்டவர்கள் என்று சொல்லமுடியாது. மனிதர்களில் சிலர் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்று தம் அதிகார பலத்தைக் காட்டக்கூடியவர்கள் பண்படா மனத்தவர் பட்டியலில் உள்ளவர்கள். இவர்கள் ‘அன்பின் வழியது உயிர் நிலை’ (குறள்.80) என்னும் குறளின் பொருளை உணராதவர்கள். மாறாக அன்பால் எதனையும் சாதிக்க இயலும் என்னும் கருத்து கொண்ட பண்பட்டவர்கள், செயல்பாட்டினால் அனைவர் நெஞ்சிலும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

    சங்ககாலத்து மனிதநேயம்:

    நேயத்தின் பாற்பட்ட உயர் சிந்தனைகள் மிகுந்திருப்பது சங்க காலப் படைப்புகள். அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது புறநானூறு. அகத்திணையைத் தமிழன் அன்பின் ஐந்திணை என்று வகுத்து மிகுதியான பாடல்களைத் தந்திருந்தாலும், புறத்திணைப் படைப்புகளில் அன்பினை விதைத்து அது செழித்த தன்மையினைப் புறநானூறு போன்ற படைப்புகள் உலகிற்குப் பறைசாற்றும்.

     

    மூவேழு வள்ளல்கள்:

    அபிதான சிந்தாமணி குறிப்பிடும் மூவேழு வள்ளல்களில் முதலேழில் இடம்பெற்றுள்ள குமணன் செம்பியன் ஆகியோரும் கடையேழு வள்ளல்களாக்க் குறிப்பிடப் பெற்றவர்களில் எழினி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையமான் ஆகிய அறுவரும் இதில் குறிப்பிடப்பெறாத ஆய் அண்டிரனும் புறநானூற்றில் குறிப்பிடப்பெற்ற வள்ளல்கள் ஆவர். முதலேழு வள்ளல்களில் ஒருவராக அபிதான சிந்தாமணி குறிப்பிடும் குமண வள்ளலைப் பாடும் பெருஞ்சித்திரனார், கடையேழு வள்ளல்களின் பட்டியலைத் தந்து, இவர்கள் மறைந்ததனால் ‘இரந்தோர் துன்பம் நீக்குபவன் நீ’ என்னும் கருத்தால் வந்ததாகக் குறிப்பிடுகின்றார்.(புறம்.158) இது இவ்வாறிருக்க, கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வாழ்ந்த குமணனை முதலேழு வள்ளல்களின் பட்டியலில் சேர்த்து மேற்காணும் களஞ்சியம் குறிப்பிடுவது குழப்பத்தை அளிப்பதாக உள்ளது.

    மேலே குறிப்பிடப்பெற்றுள்ள வள்ளல்கள் தன்னலம் பாராமல் அவர்களின் உள்ளம் கனிந்த நிலையில் அருள் சுரப்பின் காரணமாக அவர்கள் செய்த செயல் இன்றும் மக்கள் மனத்தில் நின்று நிலவுகின்றது.

    மறுமைப்பயன் நோக்கியதா?

    ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

    தன் பிள்ளை தானாக வளரும்

    என்னும் பழமொழி தன்னலத்தின் வெளிப்பாடாக, வீட்டிற்கு மணப்பெண்ணாக வந்தவரை பாதுகாப்புடன் நடத்தினால் அவர்வழி தனக்குப் பிறக்கும் பிள்ளையை கவனித்துக் கொள்வார் என்று வலிந்து பொருள் கொள்வர். ஆனால் நாட்டுப்புறத்தில் வழங்கும் பொன்மொழிகள் அலங்காரத்துடனோ பொருள் ஆழத்திலோ வெளிவருவதில்லை; இயல்பாக வெளிவருபவை. எனவே, மேற்காணும் பொன்மொழி, குறிப்பிடும் ‘ஊரான் பிள்ளை’ என்பது முன்பின் அறிமுகமில்லாதவர்களைக் குறித்ததுதான் என்று கொள்ளுதலே சிறப்பு.  இது பொதுநலத்தின் பாற்பட்டது என்றாலும் பலனை எதிர்பார்த்துச் செய்வது. ஆனால், சங்ககாலத்தில் ஆட்சி செய்த குறு நிலமன்னர்களில் வள்ளலாகப் பெயர்பெற்ற ஆய்அண்டிரனின் வள்ளல் தன்மையைக் குறிப்பிட வந்த ஏணிச்சேரி முடமோசியார்,

    இம்மைச் செய்து மறுமைக் காமெனும்

    அறவிலை வணிக னாயலன்” (புறம்.134)

    என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியது. பயன் கருதிச் செய்யக்கூடிய அறம் ஒருவகை வணிகம்தான் என்னும் கருத்தைக் கொண்டவர்கள் சங்ககால வள்ளல்கள் என்பது பின்பற்றத்தக்கது.

     

     

    பொய்மொழியான பொன்மொழி:

    விருந்தும் மருந்தும் மூன்று நாள்

    என்பதும் மற்றுமொரு பொன்மொழியாகும். பொதுவாக இம்மாதிரியான முதுமொழிகள் சமூகத்தின் பிழிவாக, பெரும்பான்மைநோக்கி வெளிவருவன. ஆனால் சங்கால மன்னர்களில் சிலர் இம்மொழியைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தம்முடைய கொடைப்பண்பினால் மாற்றிக் காட்டுவதைக் காணமுடிகிறது. அதியமான் நெடுமானஞ்சியின் கொடைத்தன்மைய,

    ஒருநாள் செல்லல மிருநாட் செல்லலம்

    பலநாள் பயின்று பலரோடு செல்லினும்

    தலை நாட் போன்ற விருப்பினன்…………………..”

    என்று குறிப்பிடும் ஒளவையார், எத்தனை முறை விருந்தினராகச் சென்றாலும் முதல் நாள் சென்றதைப் போன்ற வரவேற்பை அளிப்பான் என்றும், அவர்களுக்குப் பரிசில் என்பது ‘யானை கோட்டிடை வைத்த கவளம் போன்று” (புறம்.101) உறுதியானது என்றும் சுட்டுவன கொடைத்தன்மையின் சிறப்பினைப் பறைசாற்றுவதாகும்.

    புலவர்களின் அருள்தன்மை:

    மன்னர்கள் மட்டுமன்றி, புலவர்களும் மக்களுக்கு எண்ணற்ற செயல்களின் வழி அவர்களின் வாழ்வுக்குப் பெரும் உதவி புரிந்துள்ளனர். முடியாட்சிக்கால மன்னர்கள் செய்த தவறுகளை அஞ்சாது சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்தியதுடன் மக்கள் மகிழ்வுடன் வாழ வழியையும் காட்டியுள்ளனர். இவ்வகையில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய உடன்பிறந்த மன்னர்களிடையே நடக்கவிருந்த போரினைத் தடுத்து அவர்களுடன் மக்களையும் காப்பாற்றினார் கோவூர்க்கிழார். (புறம்.44)  கோப்பெருஞ்சோழனை எதிர்த்த அவனின் பிள்ளைகளை அழித்து ஒழிக்க எண்ணிய மன்னனின் செயலை, உரிய விளக்கங்களை அளிப்பதன் வழி தடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிள்ளைகளுக்கு வாங்கித்தந்தார் புலவர் எயிற்றியனார். மலையமான் திருமுடிக்காரியின் மக்களை, பகையின் காரணமாக, கொல்ல நினைத்த குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு அறிவுரை நல்கி பிள்ளைகளைக் காத்தார் கோவூர்க்கிழார்(புறம்.46) அவரே, இளந்தத்தன் என்னும் புலவனை நலங்கிள்ளியின் ஒற்றன் எனக் கருதிக் கொல்ல நினைத்த நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் பெருமைகளைச் சுட்டிக்காட்டிக் காத்தார்(புறம்.47) இவையனைத்தும் மனித நேயத்தின்பாற்பட்ட செயல்களே.

     

    புரவலர்களாக புலவர்கள்:

    வறுமையுற்ற போதும் பொய்கூறாதவர்கள் புலவர்கள். வறுமையால் மன்னர்களைப்பாடி வளமையுற்ற போது அவ்வளத்தை வைத்துக்கொண்டு பலகாலம் வள்ளல்களாக விளங்கியிருக்கின்றனர். நீண்டநாள் வறுமையில் வாடி இறுதியில் குமணனைப்பாடி கொண்டுவந்த பொருளை தம் மனைவியிடம் கொடுத்து,

    நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்

    ……………………

    இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது

    வல்லாங்கு வாழுது மென்னாது நீயும்

    எல்லார்க்குங் கொடுமதி மனை கிழவோயே”(புறம்.163)

     

    என்று கூறும் புலவர் பெருஞ்சித்திரனாரின் செயல் எண்ணி எண்ணி பெருமை கொள்ளத்தக்கது. எனக்கு வேண்டியோர் உனக்கு வேண்டியோர் என்று பாராமல் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு  இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதைப் போன்ற  உள்ளங்கொண்ட  பெருஞ்சித்திரனார்கள் இன்று பலர் தேவை. வேண்டுதல் வேண்டாமை இலான் என்று இறைவனை வள்ளுவர் குறிப்பிடுவார். இறைவன் தன்மை கொண்ட பலர் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளனர். இன்று சமுதாயம் காணும் துன்பத்தைத் துடைக்க சங்க காலத்தில் வாழ்ந்த அரசர், புலவர்கள் பலர் தேவைப்படுகின்றனர்.

    ஆன்ம நேயச்சிந்தனையாளர்கள்:

    இறையடியார்களும் இயற்கை விரும்பிகளும் அவ்வப்போது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்து  உயிர்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறைகொண்டு வாழ்ந்தும் வாழவைத்தும் வந்துள்ளனர்.

     

    வாகனங்களும் தலவிருட்சங்களும்:

     

    ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்

    பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்

     

    என்பது நாட்டுப்புற  வழக்கு. இதே உத்தியைப் பின்பற்றி ஆன்மிகவாதிகள் சில நேரங்களில் மக்களை எச்சரிக்கை விடுத்தும் அன்பாகவும் கூறி விலங்குகள் பறவைகள், மரங்கள் முதலானவற்றைப் பாதுகாத்துள்ளனர்.

    பன்றி, மூஞ்சுறு போன்றவற்றை இறைவனின் வாகனமென்று அடிக்கக்கூடாதென்றும் வேம்பு, அத்தி உள்ளிட்ட மரங்கள் கோவில் தலவிருட்சங்கள் அதனால் இம்மரங்களை வெட்டக்கூடாதென்றும் பாதுகாத்து வருகின்றனர்.

    மரம் வெளியிடும் காற்று மனிதர்க்கு மூச்சுக்காற்று; மனிதர் வெளியிடும் நச்சுக்காற்றை உள்ளிழுத்து வாயுமண்டலத்தைத் தூய்மைசெய்கிறது மரம். இவ்வகையில் மனிதனின் உயிராக விளங்கும் மரங்களில் ஒன்றை வெட்டுவதற்கு முன் பத்து மரக்கன்றுகளையாவது நடவேண்டாவா? மேலை நாட்டு நாகரிக மோகத்தில் திளைத்து பிறந்தநாள், திருமணநாள் கொண்டாடும் தமிழர்கள் அவ்வப்போது வீணாகச் செலவிடும் தொகையில் மரக்கன்றுகைளை அளித்து தமக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றலாமே.

    ஆன்மீகவாதிகளின் ஆன்மநேயம்:

    ‘புல்லாகி பூடாய் புழுவய் மரமாய்’ என்று எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்ததாகக் கூறும் மாணிக்கவாசகர் (திருவாசகம்.சிவபுராணம்.26-31),

    எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

    தம்முயிர் போல் எண்ணி

     

    வாடியபயிரைக் கண்டபோதே வாடும் மனத்துடன் வாழ்ந்த வள்ளலார் (திருவருட்பா.5298), போன்ற எண்ணற்ற அருளாளர்கள் தோன்றி தமிழ் மக்களும் விலங்குகளும் உயிரினங்களும் வாழ வழிகண்டனர்.

     

    அறிமடமும் சான்றோர்க்கணி:

    வள்ளல்கள் சிலரின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கின் அவை அவர்களின் அறியாமையானவையாகத் தோன்றும். ஆனால் உடுக்கை இழந்தவன் கைபோன்று துன்பமுற்றோர் அல்லது துன்பமுற்றவையின் இடுக்கண்களைய வேண்டுமென்ற உடனடிச் சிந்தனைகளைச் சீர்தூக்கி ஆராயின் உதவி செய்தோரின் உள்ளம் வெளிப்படும். துன்பத்தில் தாம் பங்குகொண்ட்து மட்டுமன்றி அதனைத் தாம் ஏற்றுக்கொண்டு அவர்களை அல்லது அவைகளை அத்துன்பத்தினின்றும் விடுவித்து இன்பமடையச்செய்த செயல்களை சங்ககாலம் தொடங்கி இக்காலம்வரை காணலாம். அவ்வகையில் முல்லைக்குத் தேரீந்த பாரி, மயிலுக்குப் போர்வையீந்த பேகன் உள்ளிட்ட பலரின் செயல்களைச் சுட்டலாம். இச்செயல்கள் மேற்குறிப்பிட்டோரின் அறியாமை என்று எண்ணுவது, எண்ணுவோரின் அறியாமைக்குச் சான்றாகும். மாறாக இவ்வறிமடமும் இச்சான்றொர்களுக்கு அணியாகத் திகழும். வாகனங்கள் மிகுதியாகச் செல்லும் சாலைத் தடுப்புகளுக்குள் மாட்டிக்கொண்ட பல விலங்குளை சிலர், உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் நிகழ்வுகளை இன்றும் முக நுல்களில் அன்றாடம் காணலாம்.

     

     

     

     

    ஒருபானைச் சோற்றுக்கு:

    சிலவாண்டுகளுகு முன் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டு பாகிஸ்தான் வீரர்கள் புதைந்து கொண்டிருந்த நேரம் இந்திய வீரர்கள் உடனடியாகச் சென்று காப்பாற்றினார்களாம். எல்லையில் தீவிரவாதத்தை முறியடிக்க அதே வீரர்களை சுட்டு வீழ்த்துவதென்றாலும் இந்திய வீரர்கள் செய்வார்கள். அது நாட்டைக் காப்பாற்றும் கடமை. ஆனால் எதிர்பாராத  இயற்கைச் சீற்றத்தால் எதிரிகளை அழிவிலிருந்து காப்பாற்றியது மனித நேயம்.

    மனிதநேயம் மறைந்து போனதா?

    எதற்கெடுத்தாலும் சங்க காலம், பக்திக் காலம் என்று பழைய காலங்களின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றோர் தற்காலத்தை ஒரு கற்காலமாக நினைத்து எண்ணிப் பழிதூற்றி வந்தனர். எதற்கெடுத்தாலும் இது கலிகாலம். நடக்காதவை எல்லாம் நடக்கும் என்று புறஞ்சொல்லி வந்தனர். நவம்பர், திசம்பர் 2015ல் அடாது பெய்த மழை வெள்ளத்தால்  சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கி தத்தளித்த அவலத்திற்குப்பின், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுகின்றவரை.

    வெள்ளத்தில் தத்தளித்தோரை மீட்டவர்களில் பெரும்பாலானோர், எதற்கும் உதவமாட்டார்கள் என்று பெரியவர்கள் ஒதுக்கி வைத்து வேண்டாவெறுப்பாக முகஞ்சுளித்துப் பார்த்த இளையோர் பட்டாளம், தன்னலம் பாராத தன்னார்வத் தொண்டர்கள், சுவைஞர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வளர்ந்து வருபவர்கள் என்று மக்கள் தவறாகக் கணக்குப் போட்டு வைத்திருந்த திரை நட்சத்திரங்கள், நீரால், மொழியால் நிரந்தரமான எதிரிகள் என்று தமிழர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்த அண்டை மாநிலத்தார்கள், எதைச்செய்தாலும் அதிலொரு அரசியலிருக்குமோ என்று மக்கள் அச்சத்துடனேயே பார்த்துவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், மேலாக, இலாப நோக்கோடு இச்செய்தியைப் போட்டுள்ளார்கள் என்று வாசகர்கள் இதுவரை தப்புக்கணக்கு போட்டிருந்த, உயிரை துச்சமென மதித்து எண்ணற்ற உயிர்களைப் பாதுகாக்க உயிரான செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து மக்களின் நெஞ்சங்களிலிருந்த  அச்ச உணர்வைப் போக்கிய ஊடகங்கள் என்று இப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். அடித்த மழை வெள்ளம் போல. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் மனிதம் பாடநூல்களில், சொல்லிக் கொடுக்கும் வகுப்பறைகளில் பாடத்திட்டங்களின் வழி மறைந்து போயிருக்கலாம். ஆனால், மனித மனங்களிலிலிருந்து சிறிதளவும் குறையவில்லை. மாறாக வளர்ந்திருக்கின்றது; முழுமையாய் மலர்ந்திருக்கின்றது.

     

    இனங்காட்டும் சூழல்:

    சூழ்நிலை மனிதனை உருவாக்கு கின்றது என்பதை விட  இனம் காட்டுகிறது என்பது மிகப்பொருத்தம். சென்னை மழையில் நன்கு அறிமுகமானவர்கள் கூட தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நெஞ்சம் நெகிழும்படியாக உதவிகளைச் செய்துள்ளனர். விளம்பரங்களைத் தேடிக்கொண்டவர்கள் என்று யாரையும் விரல்விட்டு சொல்லவியலாது. உலகம் உருண்டை என்பதைப் போல இதுவரை கீழ்த்தளத்திற்கு இருந்த மதிப்பு மேலே மேலே  மேல் தளத்திற்கு சென்றுவிட்டது. விலைமதிப்பில்லாத, இமயத்தின் சிகரத்தில் இருந்த சென்னை நகர மண்ணின் விலை படுபாதாளத்திற்குச் சென்றாலும் வியப்பதற்கில்லை. சென்னையில் நீர் நின்ற இடங்களெல்லாம் ஆறு, ஏரி, குளம், கால்வாய் என்று பெயர் உள்ள இடங்கள்தாம். இனி நீரிருக்க அவ்விடங்களை விட்டுவிடலாம் மக்கள் இருக்க ஏற்ற இடங்களைத் தெரிவு செய்யலாம்.

    மழைக்குமுன் சென்னை(.மு.செ.):

    எதிர் வீட்டில் யாரிருக்கிறார்கள்? இந்தப் பெயர் கொண்ட தெரு எங்கே இருக்கிறது? இந்த ஊருக்குப் போகும் வழியாது? என்று எத்தனைக் கேள்விகள் கேட்டாலும் ‘தெரியாது’ என்னும் பதிலை, கேட்பதற்கு முன்பாகவே ஆயத்தமாக வைத்திருந்த இளைஞர் பட்டாளம்; பக்கத்துத் தெருவில் உள்ள வீட்டிற்கு, பத்துக் கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டுவந்து விட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்; பையில் இருந்த பணத்தை கொள்ளையனுக்குக் கொடுத்துவிட்டுத் தவிக்கும் நாட்டுப்புறத்தானுக்கு ‘உள்ளே போ’ என்று சொன்னேனே கேட்டியா? போ……. போயி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு போ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பேருந்து நடத்துநர்கள்; அப்பாவியாக புகார் கொடுத்துவிட்டு பணம் எப்போது கிடைக்கும்? என்று கேட்கும் பட்டிக்காட்டானிடம் ‘உடனே(கிடைக்கும்)…. போ சொல்லி அனுப்புறோம்’ என்று மறைமுகமாகத் தமக்குக் கிடைக்கப் போவதை உற்சாகத்தில் கொக்கரிக்கும் காவல்துறையினர்; பளபளக்கும் வார்த்தையால் பளிச்சிடும் விளக்கொளியில் இருட்டினை விற்பனை செய்யும் வியபாரிகள்; பணத்திற்காக எதையும் செய்யும் கைக்கூலிகள்; விளம்பரம் தேடும் அரசியல் வாதிகள்; இளைஞர்களைச் சீரழிக்கும் திரைத்துறையினர் என்று அனைத்துத் துறையிலும் உள்ள புல்லுருவிகளின் கை ஓங்கியிருந்தது இங்கே குறிப்பிடப்பட்ட துறைகளில் மிகவும் நல்லவர்களும் வெளியில் தெரியாத வேர்களாகவே இருந்தனர்.

    மழைக்குப் பிறகு சென்னை(.பி.செ.):

    அனைத்து தீய செயல்களுக்கும் கழுவாய் தேடியதைப் போல இன்று சென்னை தம்முடைய அழுக்குளைப் போக்கிக்கொண்டு அழகாக மாறி வருகிறது.  நச்சுப்பாம்பு கடித்ததையும் பொருட்படுத்தாது மீட்புப்பணியில் ஈடுபட்டு இறந்து போன திருவொற்றியூர் தியாகராயபுரம் முகமது ஜாபர் மகன் இம்ரானைப் போல மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மறைந்துபோன மாணிக்க உறவுகளை, மக்களை நம்பி வாழ்ந்த பாசப்பிராணிகளை இனி பார்ப்பது எந்த நாளோ? இழந்து போன உடைமைகளை மீட்டெடுப்பது என்றோ?

    ‘படுத்தால் உறக்கம் இல்லை’; தூங்கி இரண்டு நாளாச்சி; உடனே போயி லோடு ஏத்திட்டு வரணும் என்று ஐதராபாத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் ஷாஜி போன்று  தன்னலம் கருதாத சேவையில் ஈடுபட்ட ஆயிரமாயிரம் தன்னார்வத் தொண்டர்களின் பணிக்கு ஈடாக எதனை அளிப்பது?  இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பாதுகாப்புத்தேடி ஓடிஒளியாமல் பெண்ணாக இருந்தாலும் வெள்ளத்தில் நீந்திவந்து, செயல்படும் ஒன்றிரண்டு தொடர்வண்டிகளின் வழி மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டுமென்று இருபத்தினான்கு மணி நேரம் தொடர்ந்து பணிபுரிந்து சாதனை நிகழ்த்திய தொடர் வண்டி இயக்க கண்காணிப்பு அலுவலர் சென்னை மாடம்பாக்கம் ஜே.கீதா சுரோ  போன்றவர்களுக்கு  எப்படி நன்றி சொல்வது?

    எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான். இவர்களில் எவரும் நன்றிக்காக உதவியோர் அல்லர்.அவர்கள் காட்டியது வெறும் அன்பன்று; கனிந்த அருள். இதன்வழி அனைவரும் தெரிந்து கொண்டது யாதெனின் இது குறித்து கோமல் அன்பரசன் தினமணியில் எழுதிய கட்டுரையின் வழி சொல்வதென்றால் ‘மாமழை மீட்டெடுத்த மனிதநேயம்’ என்பதுதான்.

    இனி ஒரு விதி செய்வோம்:

    எதிர்பாராத பேரிடரை எப்படியோ மக்கள் சக்தியால் ஓரளவு மீட்டெடுத்துள்ளோம். இனியும் இழப்பதற்கு மக்களிடம் ஒன்றுமில்லை. 2005 திசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் மறைதோர்களைக் காட்டிலும் நிவாரணத்தொகை பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மிகுதி. ஆழிப்பேரலை அடிக்கடி நிகழும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று ‘சுனாமி’ எனும் சொல்லே அவர்களுடையதுதான். அப்படிப்பட்ட நாடுகளுக்குச் சென்று தெளிவான திட்ட வரையறைகளைத் தீட்டி அரசு முனைப்புடன் செயல்பட்டால் இனியும் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்கவியலும்.

    பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டுவந்து மழை வெள்ளம் மட்டுமன்று அணு உலை, ஆழிப்பேரலை உள்ளிட்ட எந்தச் சூழலிலும் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் ஏரியைத் தூர்த்து எழுப்பப்பட்ட நகரந்தான் மெக்சிகோ. அந்த நகருக்குக் கீழே 62 கிலோமீட்டர் நீளத்திற்கு மிகப்பெரிய அளவிலான பாதாளச் சாக்கடையை அமைத்து மிகுதியான நீரை வெளியேற்றுகின்றனர். இதைப்போன்ற ஒரு திட்டத்தை  சென்னை நகரில் ஏற்படுத்தி செயல்படுத்துவது காலத்தில் கட்டாயம்.

    பெய்கின்ற மழை நீரை தேக்கி வைத்து பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் நீர் நிலைகளைத் தூர்வாரி கரைகளை உயர்த்தி தேவையான நேரங்களில் பயன்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனியும் நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் எந்தச்செயலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்று சிலப்பதிகார இளங்கோவைப் போன்று மழையை வாழ்த்திப் பாடமுடியும். இன்றேல் மழை மேகத்தைக் கண்டால் சென்னை நகரத்தை விட்டே ஓடத்தோன்றும். சென்னையில் பெய்த பேய் மழையால் தூய்மையானது கூவம் மட்டுமன்று; மக்களின் மனங்களும்தான். அதன் வழி மழை மேகம் மறைத்திருந்த மனித நேயம் வெளுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் அடிப்படை மக்கள் காட்டிய அன்பின் நிறைவு; அருளின் தெளிவு.

    முனைவர் துரை.குணசேகரன்,
    (மாநிலத்தலைவர்,
    தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை),
    தலைவர், தமிழாய்வுத்துறை(ப.நி)
    ஏ.வி.சி.கல்லூரி(தன்.).,
    மயிலாடுதுறை,
    தமிழ்நாடு-609305

    —————————————-

    Share
  • தில்லை காட்டும் சைவசமயாசிரியர் நால்வர்களின் காலச்சுவடுகள்

    -பேரா.முனைவர். ந. கிருஷ்ணன்

    images for the article Thillai

    தில்லை – பக்தி எழுச்சி வரலாற்றின் மொகஞ்சதாரோ!

    தில்லை பக்தி எழுச்சி வரலாற்றின் மிகமுக்கியமான சான்றுகளைப் பட்டியலிடும் தமிழக மொகஞ்சதாரோ. தமிழர்களின் போதாத காலமோ என்னவோ, இவ்வூர் தரும் இலக்கியச் சான்றுகள் அறிவியல்ரீதியாகக் கருதப்படாததால், தமிழிலக்கிய வரலாற்றின், குறிப்பாகச் சைவ இலக்கிய வரலாற்றின் தடங்கள் முரண்பாடுகளின் குவியலாகவே இன்றுவரை காணக்கிடக்கின்றன. கடல் நிலவியல்ரீதியாக கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தில்லையில் நிகழ்ந்த மாற்றங்கள் நமக்குத்தரும் செய்திகளைத் தொகுப்பதும், அதன்வழி சைவஇலக்கிய வரலாற்றை மீள்வாசிப்பு செய்வதுவும் இக்கட்டுரையின் நோக்கம்.

    தில்லை என்னும் சிதம்பரம் இந்திய வரைபடத்தில் 11.39°N 79.69°E ஆக அமைந்துள்ளது. தில்லை நகர் தமிழகத்தின் வட மாவட்டமான கடலூரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ. வான்வழித் தொலைவிலும், சாலை வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத் தில்லை. ஏறத்தாழ சமவெளியில் அமைந்துள்ள இந்நகரைச்சுற்றிக் காடுகள், குறிப்பாகத் தில்லைவனக் காடுகள் காணப்படுகின்றன. சிவப்பு மற்றும் வண்டல் மண்வகைகள் நெல் போன்ற செழிப்பான பயிர்கள் விளைய காரணமாகும்.

    தில்லை என்பது ஒரு மரம் – சிதம்பரம் கோயிலின் தல விருட்சம் – தலத்தின் புனித மரம்

    முற்காலச் சிவன் திருக்கோயில் கடல்சூழ்ந்து தில்லை மரங்கள் நிறைந்த பெரும்பகுதி காடாக இருந்தது (Mangrove of ancient Tillai trees Exocoeria agallocha). அதன் காரணமாக, இத்தலத்தைத் ‘தில்லைவனம்’ என்றும் அழைத்தனர் பண்டைத் தமிழர். நாளடைவில் அப்பெயர் தில்லை என்றும், தில்லையம்பதி என்றும் மாறியது. இத் தலத்தின் புனித மரம் – தல விருட்சம் தில்லை மரமேயாகும். அதன் காரணமாகவே, சேந்தனார், “மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர் போயகல!” என்று பாடியுள்ளார். காலப்போக்கில், கடல் தில்லையிலிருந்து விலகிக் கழிசூழ்ந்து விளங்கி, பின் அதுவும் நீங்கிச் சென்றது. தில்லையை அடுத்துப் பத்துக் கிலோமீட்டர் (சாலை வழியாகப் பதினைந்து கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் (உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்) தில்லைமரங்கள் நிறைந்து காணப்படுவதை இன்றும் காணலாம்.

    இதில் என்ன பெரிய செய்தி என்று கேட்கிறீர்களா? தில்லை ஒருகாலத்தில் கடல்சூழ்ந்து இருந்ததும், பின் கடல் பின்வாங்கிக் உப்பங்கழிசூழ்ந்து இருந்ததும், தற்போது உப்பங்கழியும் பின்வாங்கிப் ‘பிச்சாவரம் சதுப்புநிலத் தில்லைமரக் காடுகளாக’க் காட்சியளிப்பதில் என்ன பெரிய செய்தி இருந்துவிடப் போகிறது என்று சலிப்படைய வேண்டாம். தற்போது நம்முன் உள்ள கேள்வி

    1. தில்லையைக் கடல் சூழ்ந்திருந்தது எக்கால கட்டத்தில்? இலக்கியச் சான்று உண்டா?
    2. தில்லையைக் கழி சூழ்ந்திருந்தது எக்கால கட்டத்தில்? இலக்கியச் சான்று உண்டா?

    தில்லையைப் பண்டையக்காலத்தில் கடல் சூழ்ந்திருந்ததா அல்லது கழி சூழ்ந்திருந்ததா என அறிவியலாளர்களைக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைத் தருகின்றனர். செயற்கைக்கோள் படங்கள் அக்கால கட்டங்களில் இல்லாமையால், அவர்களால் திட்டமாகக்கூற இயலாமை புரிந்துகொள்ளக் கூடியதே.

    கவிஞர்களே காலக் கண்ணாடி!

    கவிஞன் எப்போதும் ஒரு காலத்தின் கண்ணாடியாயிற்றே. எனவே, இலக்கியச் சான்று தேடிச் செல்லலாம். உதாரணமாக, 1995ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகமான ‘பேஜர்’ என்னும் செய்தி அனுப்பும் கருவி 2001இல் காணாமல் போனது. பேஜர்’ செய்தி அனுப்பும் கருவியைக் குறித்த பதிவுகளை அக்காலகட்டத்தில் வந்த திரைப்படப் பாடலாசிரியர்கள் பாடியுள்ளனர். காட்டாக, 1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘செல்வா’ என்ற திரைப்படத்துக்காக சினிமாக் கவிஞர் வாலி எழுதிய கீழ்க்கண்ட பாடலில் ‘பேஜர்’ என்ற தகவல்தொடர்புக் கருவியைக் குறித்த பதிவு காணக்கிடக்கின்றது.

    ஏ லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு டப்புன்னு
    லெவல்லா அடிக்குது ஹார்ட் பீட்டு
    ………….

    பேஜர் உந்தன் கண்ணில் இருக்கு
    அதில் மேஜரான மேட்டர் இருக்கு
    ………

    இப்பாடல் சிற்பியின் இசையில் சுரேஷ் பீட்டர், ஸ்வர்ணலதா, தீபிகா குழுவினரால் பாடப்பட்டுள்ளது. ஒரு இடத்தின் இயற்கை அழகாகட்டும், செழிப்பாகட்டும், வளர்ச்சியாகட்டும், அக்காலக் கவிஞனின் கவிதைப் பதிவுகளில் பதிக்கப்பட்டிருக்கும். நாட்டின் கவிஞர்கள் எப்போதுமே நம்பிக்கைக்குரிய ஆவணப் பதிவர்கள். ஏனெனில், இலக்கியப் பதிவுகள் கவிஞனின் உள்ளத்தூறும் உண்மையின் அழகான வெளிப்பாடுகள். அங்கு, பொய்ம்மைகளுக்கு இடமேயில்லை. எனவே, நாம் தில்லை நகரைக் குறித்த காலப்பதிவுகளுக்காக, பரமனையே பாடிய சைவ சமயக்குரவர்கள் நால்வர் தந்த முதல் எட்டுத் திருமுறை இலக்கியங்களையே மீள்வாசிப்பு செய்யலாம்.

    ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், திருஞான சம்பந்தர் காலத்தில் தில்லை நகரை ஒரு பக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன. 

    முதலில், முதல் மூன்று திருமுறைகளையும் தந்த நான்மறை நற்றமிழ் திருஞான சம்பந்தப் பெருமானிடம் செல்வோம்.

    மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
    கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
    பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்

    செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. (திருஞானசம்பந்தர் 1ஆம்திருமுறை.கோயில்.3.)

    மைதீட்டப்பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடைய உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத அறமுதலான மறைப்பாடல்களைப் புரிந்த சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும்.

    இப்பாடலில், தில்லையை ‘உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள்’ என்னும் பொருளில் ‘கழிசூழ் தில்லையுள்’ என்று பெருமான் பாடியுள்ளார். எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டில் தில்லையை ஒரு பக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன என்பது தெளிவு.

    அடுத்ததாக, நான்கு முதல் ஆறாம் திருமுறைகளை அருளிய அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பெருமானிடம் செல்லலாம். அப்பர்பெருமான் தில்லை கூத்தபெருமானைத் திருமுறைகளுக்கு இரண்டு வீதம் மொத்தம் 6 பதிகங்களில் சுமார் அறுபது பாடல்களில் பாடித் துதித்துள்ளார்.

    இவற்றுள், நான்காம் திருமுறையின் 22ஆம் பதிகத்தின் 1-3 பாடல்களில் முறையே ‘மஞ்சடை சோலைத் தில்லை’, ‘நாறுபூஞ் சோலைத் தில்லை’, ‘நாறுபூஞ் சோலைத் தில்லை’ எனத் தில்லையின் வளமிக்க சோலைகளை ஒவ்வொரு பாட்டின் மூன்றாம் வரியில் சிறப்பிக்கின்றார்.

    நான்காம் திருமுறையின் 22ஆம் பதிகத்தின்  4ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘நன்செய்வயலிலே தானியங்கள் அறுவடையாகும் தில்லை’ எனப் பொருள்படும் ‘செய்யரி தில்லை’ எனவும், 8ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘பாசனத்துக்காக நீர்தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே’ எனப் பொருள்படும் ‘சிறைகொள் நீர்த் தில்லை’ எனவும், ஐந்தாம் திருமுறையின் 2ஆம் பதிகத்தின் 10ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனை’ என்றும்  தில்லையின் வயல் வளத்தைப் பாடியுள்ளார். ஆறாம் திருமுறையில் தில்லைவளம் குறிக்கப்படவில்லை.

    அப்பர் பெருமான், ஞானசம்பந்தருக்குச் சமகாலத்தவராதலால், இருவரின் கருத்துக்களையும் ஒன்றுசேர நோக்கினால், தில்லை அவர்கள் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டு காலத்தில், ஒருபக்கம் உப்பங்கழியாலும், மற்றபக்கங்களில் வயல்களாலும், சோலைகளாலும் சூழப்பட்டிருந்தது என்ற செய்தியைப் பெறுகின்றோம்.

    எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல்களில் தில்லையின் கடல் நிலவியல் குறித்த செய்தியில்லை.

    எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறையின் 90ஆவது பதிகமான கோயில் பதிகத்திலே “பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே” என்று மட்டுமே அனைத்துப் பாடல்களிலும் பதிவிடப்பட்டுள்ளதே தவிர தில்லைவளம் கூறப்படவில்லை. எனவே, தில்லையின் கடல் நிலவியல் குறித்த செய்தி எதுவும் கிடைக்கவில்லை.

    ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனத் தமிழியல் ஆய்வர்களால் கருதப்படும் மாணிக்கவாசகப்பெருமானின் திருவாசகத்தில் தில்லைவளம் குறித்த செய்திகள் குறைவு.

    ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப் பெரும்பான்மைத் தமிழியல் ஆய்வர்களால் கருதப்படும் எட்டாம் திருமுறை தந்த மாணிக்கவாசகப்பெருமானின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றுள், தில்லைவளம் குறித்த செய்திகள் திருவாசகத்தில் சற்றுக் குறைவாகவே கிடைக்கின்றன.

    குலம்பாடிக் கொக்கிறகும்பாடிக் கோல்வளையாள்
    நலம்பாடி நஞ்சுண்டவாபாடி நாள்தோறும்
    அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
    – திருவாசகம்:11.20

    இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
    துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
    அணையார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ
    – திருவாசகம்:13.1

    படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
    கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
    தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
    நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ
    – திருவாசகம்:13.14

    பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
    உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
    செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
    மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே
    – திருவாசகம்:31.6

    மேலே குறிப்பிட்ட நான்கு பாடல்களில், திருவாசத்தின் திருத்தெள்ளேணம் பதிகத்தின் 20ஆம் பாடல் கடல் நீரலைகள் ஓசைஎழுப்புகின்ற தில்லை அம்பலத்தே ஆடுகின்ற எனப் பொருள்படும் “அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற” என்ற வரியில் தில்லை அம்பலம் கடற்கரையில் அமைந்துள்ளதைப் பதிவுசெய்துள்ளது.

    திருவாசத்தின் திருப்பூவல்லி பதிகத்தின் 1ஆம் பாடல் “அணையார் புனல்தில்லை” என்று பதிவிட்டதன் மூலம் தில்லையின் வயல்வளத்தையும், 14ஆம் பாடல்  “தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா” என்று பதிவிட்டதன் மூலம் தில்லைக் கோயில் பெரிய மதில்களைக் கொண்டிருந்தமையையும் பதிவுசெய்துள்ளது.

    திருவாசத்தின் கண்டபத்து பதிகத்தின் 6ஆம் பாடல் “செறிபொழில்சூழ் தில்லைநகர்” என்று பதிவிட்டதன் மூலம் தில்லையின் பொழில் சூழ்ந்த சோலைவளத்தையும் பதிவுசெய்துள்ளது.

    ஆக, மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைக் கோயில் பெரிய மதில்களை உடையதாய் கடற்கரையில் அமைந்துள்ளமையும், தில்லை ஊர் வயலும் சோலைகளும் நிறைந்து செழிப்பாக இருந்தமையும் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து பெறப்படுகின்றது. எனினும், “அலம்பார் புனல் தில்லை” கடல் நீரலை ஓசையைக் குறித்ததா அல்லது வயல்களில் தளும்பும் நீரலையோசையைக் குறித்ததா என்ற ஐயம் எழாமலும் இல்லை. எனவே, மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையார்’ படைப்பையும் ஆய்ந்து பார்க்காமல் தில்லை அவர் காலத்தில் கடற்கரையில் அமைந்திருந்தது என்று முடிவுக்கு வர இயலாது.

    ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டின் கருதப்படும் மாணிக்கவாசகப்பெருமானின் திருகோவையாரில் கடற்கரைக் கோயிலாகத் தில்லை கூறப்பட்டுள்ளது.

    நானூறு பாடல்களைக் கொண்ட திருக்கோவையாருள், 20, 49, 85, 122, 147, 182, 183, 222 எண்ணுடைய எட்டுப் பாடல்களில் தில்லைவளம் குறித்த வலுவான செய்திகள் காணக் கிடக்கின்றன.

    சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும்
    உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
    துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
    இறைவா தடவரைத் தோட்குஎன் கொலாம்புகுந்து எய்தியதே” – திருக்கோவை 20

    என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன் னும்முயன்றால்
    மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல்நெஞ்சே
    மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
    பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே
    – திருக்கோவை 49

    சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
    பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு
    துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
    வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே  – திருக்கோவை – 85.

    அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
    ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண்
    களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல்
    தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே  – திருக்கோவை – 122.

    ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின்
    தேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை
    வானுந்து மாமதி வேண்டி அழுமழப் போலுமன்னோ
    நானுந் தளர்ந்தனன் நீயுந் தளர்ந்தனை நன்னெஞ்சமே 1– திருக்கோவை – 147.

    ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
    சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி தோன்றுந் துறைவர்சென்றார்
    போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
    சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்தார்க்குஞ் செறிகடலே
    – திருக்கோவை – 182.

    பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ்
    சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
    வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
    பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே – திருக்கோவை – 183.

    மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
    பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்

    மன்போல் பிறைஅணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
    நின்போல்நடை அன்னம்துன்னிமுன்தோன்றும்நன் நீள்நகரே – திருக்கோவை – 222.

    பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
    வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
    துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ
    மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே  – திருக்கோவை – 317.

    கடலலைகளைச் சிறைவத்துள்ள சிற்றம்பலம்: 

    மேற்கண்ட ஒன்பது பாடல்களில், முதலாவதாகக் குறிக்கப்பட்ட திருக்கோவையின் இருபதாவது பாடல் “சிறை வான்புனல் தில்லைச் சிற்றம்பலத்தும்” என ‘வானுயர ஆர்த்துஎழும் கடலலைகளைச்    சிறைவத்துள்ள சிற்றம்பலத்தில் உறையும்” என்று கூறுகின்றது.

    கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடல்:

    அடுத்ததாக வரும் திருக்கோவையின் நாற்பத்தொன்பதாவது பாடல் “மின் எறி செஞ்சடைக் கூத்தப்பிரான் வியன்தில்லை முந்நீர்” என “மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடல்” என்று சொல்கிறது. (கடலைக் குறிக்கும் முந்நீர் என்னும் சொல் சங்ககாலம் தொட்டுத் தமிழில் வழங்கி வருகின்றது. காட்டாக, “திரை பொரு முந்நீர்க் கடல்” -புறநானூறு:154 “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி” -புறநானூறு:66, முந்நீர் தரும் உப்பை அமிழ்தம் என்னும் பொருளில் “முந்நீர் பயந்த … வெண்கல் அமிழ்தம்” -அகநானூறு 207, முந்நீரில் செல்வோர் மகளிருடன் செல்வதில்லை என்ற கருத்தில் “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”-தொல்காப்பியம்:3-37-1, முந்நீர் வண்ணம் கொண்ட திருமாலைப் போன்ற பிறங்கடை என்னும் பொருளில் “முந்நீர் வண்ணன் பிறங்கடை (தொண்டைமான்)” -பெரும்பாணாற்றுப்படை:30,  முந்நீரில் செல்லும் கப்பல்களைக் காற்று கவிழ்க்கும் என்னும் பொருளில் “நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்” –கலித்தொகை:5,  வெண்திரை முந்நீர் வளைஇய உலகம் -பதிற்றுப்பத்து:31)

    மாவங்கக் கடல் சூழ்ந்த தில்லைக் கூத்தபிரான்: 

    திருக்கோவையின் எண்பத்தைந்தாவது பாடலோ “மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே” என மாவங்கக் கடல் சூழ்ந்த தில்லைக் கூத்தபிரான் நேர் தோன்றி வருவதாகக் கூறுகிறது. திருக்கோவையின் 122வது பாடலோ “கடல் தில்லை அன்னாய் கலங்கல் தெளி” என வெளிப்படையாகவே தில்லையைக் கடல் சூழ்ந்திருந்த செய்தியைத் தெரிவிக்கிறது.

    தில்லைச் சிற்றம்பலம் கடல்சூழ விளங்கியதைக் காட்டும் பிற கோவைப் பாடல்கள்:

    தில்லைச் சிற்றம்பலம் கடல்சூழ விளங்கியதை “ஆனந்த மாக்கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன” என்று திருக்கோவை – 147ஆவது பாடலும், “புலியூர்ப் புனிதன் சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்து ஆர்க்கும் செறிகடலே” என்று  திருக்கோவை – 182ஆவது பாடலும், “பூணிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே” என்று திருக்கோவை – 183ஆவது பாடலும், “மின்போல் கொடி நெடுவானக் கடலுள் திரைவிரிப்ப” என்று  திருக்கோவை – 222ஆவது பாடலும் விளங்கத் தெரிவிக்கின்றன. “பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்என்று திருக்கோவை – 317ஆவது பாடல் தில்லைநகர் காவிரி நதியால் வளம் பெற்றதையும் தெரிவிக்கிறது.

    எனவே, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தர், அப்பர் பாடல்களிலிருந்து பெறப்படும் அகச்சான்றுகளிலிருந்து, வயல்களாலும், சோலைப் பொழில்களாலும் வளம்பெற்ற தில்லை, ஒருபுறம் உப்பங்கழிகளால் சூழப்பெற்றிருந்தமை பெறப்படுகின்றது.

    ஆனால், ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பெரும்பான்மையான தமிழாய்வர்களால் துணியப்பட்ட மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையாரிலிருந்து பெறப்படும் அகச்சான்றுகளிலிருந்து வயல்களாலும், சோலை போழில்களாலும் வளம் பெற்ற தில்லை, ஒருபுறம் வங்கமாக் கடலால் சூழப்பெற்றிருந்தமை பெறப்படுகின்றது. 

    கடல் சூழப்பட்ட காலமே கழி சூழப்பட்ட காலத்திற்கு முன் இருத்தல் வேண்டும் என்பது கடல் நிலவியலின் அடிப்படை உண்மை.

    பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம்வரை நாம் காணும் தில்லைநகர் மற்றும் தில்லைக்கோவில் மாட மாளிகைகளால் சூழப்பட்டு, கடலோ, உப்பங்கழியோ சூழப்படாமல் கடலிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

    கடல் நிலவியல்ரீதியாக (marine geology), கடல் சூழ்ந்த நிலப்பகுதியே கால ஓட்டத்தில் கடல் விலகிச் செல்லும் காரணத்தால் Backwater எனப்படும் உப்பங்கழிகளால் சூழப்பட்டு, தொடரும் கடல் விலகிச்செல்லும் நிகழ்வால், உப்பங்கழிகளும் நிலப்பகுதியாக மாறுகின்றன. தில்லைநகர் தற்போது கடலோ, உப்பங்கழியோ சூழப்படாது, கடலிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளதை ஒப்புநோக்கினால், கடல் சூழப்பட்ட காலமே கழி சூழப்பட்ட காலத்திற்கு முன் இருத்தல் வேண்டும்.

    இவை அனைத்தையும் ஒன்றுசேரப் பார்க்கும்போது, ஏழாம் நூற்றாண்டில் தில்லை கழியால் சூழப்பட்டிருந்தது என்ற அகச்சான்று சம்பந்தப் பெருமானின் பாடல்களிலிருந்து பெறப்படுவதால், தில்லை கடலால் சூழப்பட்டிருந்தது என்ற அகச்சான்று பெறப்பட்ட திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாடல்கள் குறைந்தஅளவு ஏழாம் நூற்றாண்டுக்கு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்காவது முன்பே படைக்கப்பட்டிருக்க வேண்டும்  என்பது  உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாக விளங்கும்.        

    மூவர் தேவாரங்களிலும் காணப்படும் விநாயகப் பெருமான் வழிபாடு திருவாசகத்தில் இல்லை.

    மேலும், விநாயகப் பெருமான் வழிபாடு மூவர் தேவாரங்களிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ விநாயகப்பெருமானைக் குறித்த பதிவுகள் முற்றிலும் இல்லை.

    முருகப்பெருமானைக் குறித்த பதிவுகள் திருவாசத்தில் காணக்கிடக்கின்றன. காட்டாக, திருவாசத்தில் முருகப்பெருமானைக் குறித்த சில சொல்லாடல்கள் தரப்பட்டுள்ளன.

    பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடயற்கே உந்தீபற
      குமரன்தன் தாதைக்கே உந்தீபறதிருவாசகம்:திருவுந்தியார்:17 

    அந்தரர் கோன் அயன்தன் பெருமான் ஆழியான் நாதன் நல்வேலன் தாதை
    எந்தரம் ஆளுமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே

    • திருவாசகம்:திருப்பொற்சுண்ணம்:3 

    குமரக்கடவுளைக் குறித்த மணிவாசகர், குமரனின் மூத்தவர் விநாயகப்பெருமானைத் தன் பாடல்களில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதிலிருந்து, மாணிக்கவாசகரின் காலத்தைய தமிழகத்தில் விநாயகவழிபாடு இல்லாமல் இருந்தது என்பது மிகத்தெளிவு.

    விநாயகர் வழிபாடு தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லை என்பதால், மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் முந்தையதும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையதும் என்பதற்கு இது இன்னுமொரு வலுவான சான்று.

    முதலாவது வரகுணனா அல்லது இரண்டாவது வரகுணனா என்ற ஆய்வுப் பட்டிமன்றங்கள்:

    ஆனால், இதுகாறும் தமிழிலக்கிய வரலாறு எழுதிய தமிழியல் ஆய்வர்கள் மாணிக்கவாசகர் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ள வரகுணப்பாண்டியன் முதலாவது வரகுணனா அல்லது இரண்டாவது வரகுணனா என்று ஆய்வுப் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி, இரண்டாவது வரகுணனே என்று முடிவுகட்டி, மாணிக்கவாசகரின் காலத்தை எட்டாவது நூற்றாண்டிற்குப் பின்கொண்டு சென்றுவிட்டனர். ஒரு மன்னனின் பெயரை அவன் மகன்வழிப் பெயரனோ, மகள்வழிப் பெயரனோ பெறுவது தமிழ்க்குடிகளில் இன்றும் நாம் காணும் தொன்மப் பண்பாட்டு நிகழ்வுகள். வரலாற்று ஆய்வுநெறி முறைகள் அடிப்படையில் நோக்கினால், சிதம்பரம் நடராசப்பெருமான் கோயில், திருச்செந்தூர் முருகப்பெருமானின் கோயிலைப்போலக் கடற்கரைக் கோயிலாக மாணிக்கவாசகரின் காலத்தில் விளங்கியது என்பதை விளக்கும் திருக்கோவையாரின் ‘கடல்சூழ்ந்த தில்லை’ பதிவுகளும், மற்றும் விநாயகப் பெருமான் வழிபாட்டுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவர் மாணிக்கவாசகர் ஆகிய வலுவான சான்றுகளை ஒப்பிடும்போது, வரகுணன் என்ற பெயர்கொண்ட மன்னர்கள் காலத்தையும் மாணிக்கவாசகரின் காலத்தையும் ஒப்பிடும் வாதம் மிகமிக வலுவற்றது என்பது தெளிவாக விளங்கும். எனவே, மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதி.

    தமிழிலக்கிய வரலாறு இவ்வாறு முரண்களின் மூட்டையானதன் காரணம்: 

    தமிழிலக்கிய வரலாறு, ஆய்வு நெறிகளைப் பின்பற்றாமல், கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன்னார் இவ்வாறு கூறிவிட்டமையால், அது அவ்வாறே இருத்தல் வேண்டும் என்ற ‘பெரியோர் உரை அளவு’ ஒன்றையே பெரும்பான்மை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் புதினங்களாகவே உள்ளன. விதிவிலக்காக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், கா.சு.பிள்ளை, பரிதிமாற்கலைஞர், தேவநேயப்பாவாணர் போன்ற அறிஞர்கள் நம்மிடையே தோன்றினர் எனினும், அவர்கள் எடுத்துக்கொண்ட பரந்துபட்ட தமிழாய்வுத் தளங்களை நோக்கும்போது, தில்லை அதற்குரிய இடத்தைப்பெறவில்லை என்பது தமிழர்களாகிய நாம் செய்த தவக்குறைவே. மேலும், அவர்தம் காலத்திலேயே, பல்கலைக்கழகங்களிலும், தமிழாய்வு மையங்களிலும் அமர்ந்திருந்த பிற தமிழியல் ஆய்வாளர்கள் இவ்வறிஞர்கள்பால் கொண்ட தனித்தமிழ் உள்ளிட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, “பெரும்மொழிப்பற்றின் காரணமாகக் கூறியவையேயன்றி ஏற்புடையவையன்று (far fetched thoughts due to Tamil affinity)” என்று முத்திரை குத்தி அவர்தம் கருத்தாய்வுகள் உலக அரங்கில் சென்றடையா வண்ணம் செய்துவிட்டனர். ‘(எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளுக்கு நேர் மாறானவர்கள் இத்தகையோர்). ஆனாலும், காலம் இவர்களின் தவறுகளைக் களையாமல் விடப்போவதில்லை என்பது உறுதி.

    இறுதியாக, தில்லை மரம் குறித்துச் சங்கப்பாடல்களில் காணக்கிடைக்கும் செய்திகள் சில:

    • குறிஞ்சிநிலத்து மகளிர் குவித்து விளையாடிய தொண்ணூற்று ஒன்பது மலர்களில் தில்லை மலரும் ஒன்று. இது மணம் வீசும் மலர். இதன் மரம் ‘தளதள’வெனத் தழைத்திருக்கும். பெரிதாக இருக்கும்.
    • நீர்நாயின் குருளை (குட்டி) மீனை மேய்ந்தபின் தில்லையம் பொதும்பில் (ஆற்றோரக் காடுகளில்) பள்ளி கொள்ளுமாம்.
    • தில்லை மரங்கள் ஊருக்கு வேலியாக அமைவது உண்டு.
    • உப்பங்கழிகளில் முண்டகமும் தில்லையும் ஓங்கி வளரும்.
    • தில்லைக் காய்கள் முனிவர்களின் சடைமுடி தொங்குவது போலக் காய்த்துக் குலுங்கும். புது வெள்ளம் கொட்டும் அருவியில் குளித்துக் குளித்து அவர்களின் தலைமுடி சடை போட்டுவிடுமாம்.

    ஆய்வுகள் தொடரும்…

     

    Share
  • பார்வைகள் பலவிதம்!

    -வீ.முத்துலட்சுமி

    பாழாய்ப் போன பார்வைக்குத்தான் அா்த்தங்கள் அனேகம்
    அம்மாவின் பார்வையில் தொனித்தது அன்பு
    அப்பாவின் பார்வை அகண்டமாக்கியது அறிவை
    பணக்காரனின் பார்வையோ ஏளனப்படுத்தியது என் ஏழ்மையை
    எதிரியின் பார்வையோ என்னைப் புழுப்போலப் பொசுக்கியது
    குழந்தைகளின் பார்வையோ என்னைக் குதூகலிக்கச் செய்தது
    எத்தனைப் பார்வைகள்… அதில் எத்தனை அா்த்தங்கள்…!!

    பார்வைகள் பலவிதம்! பார்வைகள் பலவிதம்!
    எங்கெங்கிருந்தோ பார்வைகள் வந்து எனைக் குத்த
    என்னைப் படைத்த ஆண்டவனே!
    உன் பார்வை மட்டும்
    இன்னும்
    என் மீது படாததேனோ?

    ***

    வீ. முத்துலட்சுமி,
    தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா்,
    எஸ். எஃப். ஆா் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    Share
  • கபாலியும் மலேசியர்களும்

    –நிர்மலா ராகவன்

     

    kabali pic

    ’இப்போ யாரைக் கேட்டாலும், மலேசியாவிலதான் வேலை பாக்கிறதாச் சொல்றாங்க!’ சமீபத்தில் தமிழ்நாட்டில் நான் கேட்டது இந்த விமரிசனம்.

    இங்கு வேலை பார்க்க வருகிறவர்கள் பன்னிரண்டிலிருந்து ஐம்பது பேர் ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு, குடும்பத்துடன் இருக்க வாய்ப்பில்லாது (இந்தோனீசியர்களைத் தவிர பிற ஆண்கள் தம் மனைவியரை அழைத்து வர அனுமதி கிடையாது), விடுமுறை நாட்களில்கூட வெளியூருக்கு எங்காவது போகாது, முடிந்தவரை காசைச் சேமித்துக்கொண்டு தாய்நாடு திரும்பும்போது, தாம் அனுபவித்த இன்னல்கள் பிறருக்குத் தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்வார்கள். அப்போதுதானே மிதப்பாக நடக்கலாம்!

    இதனால், மலேசியாவில் எல்லாத் தமிழர்களும் கோடீஸ்வரர்கள், பணத்தை வாரி இறைப்பவர்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைக்கும் இந்த நம்பிக்கைக்கும் வெகு தூரம் என்பதுதான் சரியான நிலவரம்.

    மலாயாவில் இருபதாம் நூற்றாண்டில் வேலை பார்த்த எஸ்.ஏ. கணபதி என்ற தொழிலாளி ஒரு விதத்தில் கபாலி என்கிற நாயகனுக்கு முன்னோடி எனலாம். இவர் இளம் வயதிலேயே மலாயா தொழிற்சங்க இயக்கத்தின் தேசியத் தலைவரானார்.

    ஒரே வேலையைச் செய்தாலும், ஒரு நாளைக்குச் சீனர்களுக்கு அறுபது காசு, இந்தியர்களுக்கு நாற்பது காசு என்று ஆங்கிலேய முதலாளிகள் நிர்ணயித்ததை எதிர்த்தார். தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டுகோலாக அமைந்தார். முதலாளித்துவத்தை எதிர்த்தால் என்ன ஆகும்? அவர் தூக்கிலிடப்பட்டார். (ஆதாரம்: மலேசிய நண்பன், ஞாயிறு பதிப்பு, ஜூலை 31)

    நான் ஐம்பது வருடங்களுக்குமுன் கோலாலம்பூருக்கு வந்தேன். அப்போது தமிழர்கள் பெரும்பாலும் தோட்டப்புறம், அதாவது ரப்பர் எஸ்டேட்டுகளில்தான் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை முதலிய நகரங்களுக்கு அருகே இருந்த கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள். அனேகருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பெரிய நகரங்களிலோ தெருக்கூட்டுவது போன்ற கடைநிலை ஊழியங்களைத்தான் செய்துவந்தார்கள்.

    ’இங்குள்ள இந்தியர்களுக்குள் ஒற்றுமையே இல்லையே!’ என்று நான் என் குடும்பத்தினரிடம் பலமுறை சொல்லி அங்கலாய்த்ததுண்டு. இதனாலேயே இவர்களை கீழ்நிலையிலேயே வைத்திருப்பது பிறருக்குச் சாத்தியமாயிற்று.

    கல்விகற்றால் உயரலாம் என்று சிலருக்குப் புரிந்துபோயிற்று. ஆனால், அதுவும் கடினமாகத்தான் இருந்தது. ஏழ்மை நிலையில் புத்தகம், சீருடை என்று வாங்கக் காசில்லை.

    நான் கற்பித்த  முதல் பள்ளியில், சீன, ஆங்கில-சீன ஆசிரியைகள் ஒரு தமிழ்ப் பையனைப்பற்றி ஆசிரியைகளின் பொதுஅறையில் ஓயாது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவன் செல்வந்தர் வீட்டுப் பையன். அதனால், இவர்கள் மட்டம் தட்டிப்பேசுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முடிந்தவரை மரியாதையுடன் எதிர்த்திருப்பான்.

    ஒரு முறை, `நீ அவனைப்பற்றி எதுவுமே சொல்வதில்லையே!’ என்று அதிசயப்பட்டு என்னிடம் கேட்டபோது, நான் யோசிக்காது, “Indian boys are no problem in my class!” (இந்திய மாணவர்கள் என் வகுப்பில் பிரச்சனைகள் அளிப்பதே கிடையாது!) என்றுவிட்டேன். அவர்கள் முகம் அவமானத்தால் சுருங்கியது. அப்போதுதான் RACISM என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு.

    (சீனப்பையன்கள் அதைவிட அதிகமாக, மரியாதைகெட்டத்தனமாக நடக்கலாம். ஆனால், `இந்தச் சீனர்களே இப்படித்தான்!’ என்று அவர்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். மாட்டிக்கொள்வதெல்லாம் சாதுவான தமிழர்கள்தாம். அதுவும், அழகாகவோ, திறமைசாலியாகவோ இருந்தால் போயிற்று!).

    இன்னொரு பள்ளியில், ஒரு வகுப்பறையில் ஆசிரியை கணக்குப்பாடம் நடத்திக்கொண்டிருக்க, தமிழ் மாணவிகள் ஆறுபேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு, தம்பாட்டில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைத் தனியே அழைத்துக் கேட்டபோது, `உங்களுக்கு இதெல்லாம் புரியாது. என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள்!’ என்று ஆசிரியை சொல்லிவிட்டதாக அறிந்தேன்; அதிர்ந்தேன்.

    நான் தினமும் மிக் கவனமாக அலங்கரித்துக்கொண்டு போவேன். உதட்டுச்சாயம், எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட காலணி (இரண்டு, மூன்று நிறங்களில்கூட இருக்கும்), வளையல், கைக்கடிகாரப்பட்டை எல்லாமே என் புடவை நிறத்தில்தான் இருக்கும். எனக்கு அலங்காரத்தில் பிரியம் என்பதால் மட்டுமில்லை, `உங்களாலும் உயர முடியும். ஏழ்மையைக் கண்டு அஞ்சாதீர்கள்! அது நிலையானதில்லை’ என்று மாணவிகளுக்கு நான் மறைமுகமாக அளிக்க விரும்பிய போதனை அது.

    தொலைக்காட்சிக்கு என்னைப் பேச அழைக்கும்போது, `ஒரு நிபந்தனை. ஒரு நிமிடத்துக்கு ஒரு புடவை மாற்றுவேன்,’ என்றுவிடுவேன். அது வேடிக்கை என்று நினைத்து சிரிப்பார்கள் இயக்குநர்கள். ஒரு நிகழ்ச்சிக்குப்பின், நான் வேறு ஒரு ஊருக்குப் போயிருந்தபோது, `உங்களை டி.வியில பாத்தேன். Very nice saris!” என்று கிறங்கினார், வசதிகுறைந்த நிலையிலிருந்த ஒரு ஆண்!

    கபாலி படத்தில் ரஜினி விடாப்பிடியாக கோட்டு அணிந்து வருவதும் இதைப்போல்தான் என்றே தோன்றுகிறது.

    படத்தின் இறுதியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள் கபாலியிடம் முறையிடுவதுபோல் வருகிறதே, அதுவும் இன்றைய நடப்பைக் காட்டுகிறது.

    ஒரு சில இந்திய வம்சாவளியினர் (ஆரம்பத்தில்  வந்தவர்களில் 80% தமிழர்கள்தாம்) நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைக்காது, உபகாரச் சம்பளம் கிடைப்பதும் துர்லபம்தான் என்ற நிலை. எப்படியோ படித்துத் தேர்ச்சி பெற்றாலும், அரசாங்க வேலை கிடைப்பது கடினம். பிற இடங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட பாதி சம்பளத்திற்கு வேலை செய்யவென ஆப்பிரிக்கா, நேபால், பங்களாதேஷ், மியன்மார், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து என்று உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆட்கள்தாம் வந்து  குவிகிறார்களே!

    இதெல்லாம் புரியாது, `இவ்வளவு பணக்கார நாட்டில் நாம் ஏன் ஏழைகளாக இருக்கவேண்டும்?’ என்ற ஆத்திரத்துடன் சிலர் குண்டர் கும்பலில் சேருகிறார்கள். இல்லை, சேர்க்கப்படுகிறார்கள். இதனால் பணத்துடன், அந்தஸ்தும் கிடைக்கிறது. இவர்கள் பிறரைப் பார்த்துப் பயந்தது போக, பிறர் இவர்களைப் பார்த்துப் பயப்படுகிறார்களே, போதாதா?

    சட்ட விரோதமான செயல்களால் பொருளீட்டுபவர்களில் பலர் தம் நிலையை மறப்பதில்லை. வசதிகுறைந்த இந்தியர்களுக்கும், விதவைகளுக்கும் பலவாறாகப் பொருளுதவி செய்கிறார்கள். இப்படி ஒருவர் அண்மையில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அவருடைய இறுதி ஊர்வலத்தில் பலர் ஆழ்ந்த வருத்தத்துடன் கலந்துகொண்டனர். அவருடைய படத்தைத் தாங்கிய பெரிய, பெரிய போஸ்டர்கள் எங்கும் காணப்பட்டது என்கிறது ஒரு செய்தி.

    திரைப்படம் என்றால் சும்மா பொழுதுபோக்கிற்குத்தான் என்று தியேட்டருக்குப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் கபாலி ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால் மறைக்கப்பட்டிருந்த பல உண்மைகளை (ஊழல்களை?) கபாலி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது — படத்தில் வரும் பாத்திரங்கள் எவரையும் குறிப்பன அல்ல என்ற முன்னுரையுடன்!

     

     

    Share