தில்லை காட்டும் சைவசமயாசிரியர் நால்வர்களின் காலச்சுவடுகள்

-பேரா.முனைவர். ந. கிருஷ்ணன்

images for the article Thillai

தில்லை – பக்தி எழுச்சி வரலாற்றின் மொகஞ்சதாரோ!

தில்லை பக்தி எழுச்சி வரலாற்றின் மிகமுக்கியமான சான்றுகளைப் பட்டியலிடும் தமிழக மொகஞ்சதாரோ. தமிழர்களின் போதாத காலமோ என்னவோ, இவ்வூர் தரும் இலக்கியச் சான்றுகள் அறிவியல்ரீதியாகக் கருதப்படாததால், தமிழிலக்கிய வரலாற்றின், குறிப்பாகச் சைவ இலக்கிய வரலாற்றின் தடங்கள் முரண்பாடுகளின் குவியலாகவே இன்றுவரை காணக்கிடக்கின்றன. கடல் நிலவியல்ரீதியாக கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தில்லையில் நிகழ்ந்த மாற்றங்கள் நமக்குத்தரும் செய்திகளைத் தொகுப்பதும், அதன்வழி சைவஇலக்கிய வரலாற்றை மீள்வாசிப்பு செய்வதுவும் இக்கட்டுரையின் நோக்கம்.

தில்லை என்னும் சிதம்பரம் இந்திய வரைபடத்தில் 11.39°N 79.69°E ஆக அமைந்துள்ளது. தில்லை நகர் தமிழகத்தின் வட மாவட்டமான கடலூரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ. வான்வழித் தொலைவிலும், சாலை வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத் தில்லை. ஏறத்தாழ சமவெளியில் அமைந்துள்ள இந்நகரைச்சுற்றிக் காடுகள், குறிப்பாகத் தில்லைவனக் காடுகள் காணப்படுகின்றன. சிவப்பு மற்றும் வண்டல் மண்வகைகள் நெல் போன்ற செழிப்பான பயிர்கள் விளைய காரணமாகும்.

தில்லை என்பது ஒரு மரம் – சிதம்பரம் கோயிலின் தல விருட்சம் – தலத்தின் புனித மரம்

முற்காலச் சிவன் திருக்கோயில் கடல்சூழ்ந்து தில்லை மரங்கள் நிறைந்த பெரும்பகுதி காடாக இருந்தது (Mangrove of ancient Tillai trees Exocoeria agallocha). அதன் காரணமாக, இத்தலத்தைத் ‘தில்லைவனம்’ என்றும் அழைத்தனர் பண்டைத் தமிழர். நாளடைவில் அப்பெயர் தில்லை என்றும், தில்லையம்பதி என்றும் மாறியது. இத் தலத்தின் புனித மரம் – தல விருட்சம் தில்லை மரமேயாகும். அதன் காரணமாகவே, சேந்தனார், “மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர் போயகல!” என்று பாடியுள்ளார். காலப்போக்கில், கடல் தில்லையிலிருந்து விலகிக் கழிசூழ்ந்து விளங்கி, பின் அதுவும் நீங்கிச் சென்றது. தில்லையை அடுத்துப் பத்துக் கிலோமீட்டர் (சாலை வழியாகப் பதினைந்து கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் (உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்) தில்லைமரங்கள் நிறைந்து காணப்படுவதை இன்றும் காணலாம்.

இதில் என்ன பெரிய செய்தி என்று கேட்கிறீர்களா? தில்லை ஒருகாலத்தில் கடல்சூழ்ந்து இருந்ததும், பின் கடல் பின்வாங்கிக் உப்பங்கழிசூழ்ந்து இருந்ததும், தற்போது உப்பங்கழியும் பின்வாங்கிப் ‘பிச்சாவரம் சதுப்புநிலத் தில்லைமரக் காடுகளாக’க் காட்சியளிப்பதில் என்ன பெரிய செய்தி இருந்துவிடப் போகிறது என்று சலிப்படைய வேண்டாம். தற்போது நம்முன் உள்ள கேள்வி

  1. தில்லையைக் கடல் சூழ்ந்திருந்தது எக்கால கட்டத்தில்? இலக்கியச் சான்று உண்டா?
  2. தில்லையைக் கழி சூழ்ந்திருந்தது எக்கால கட்டத்தில்? இலக்கியச் சான்று உண்டா?

தில்லையைப் பண்டையக்காலத்தில் கடல் சூழ்ந்திருந்ததா அல்லது கழி சூழ்ந்திருந்ததா என அறிவியலாளர்களைக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைத் தருகின்றனர். செயற்கைக்கோள் படங்கள் அக்கால கட்டங்களில் இல்லாமையால், அவர்களால் திட்டமாகக்கூற இயலாமை புரிந்துகொள்ளக் கூடியதே.

கவிஞர்களே காலக் கண்ணாடி!

கவிஞன் எப்போதும் ஒரு காலத்தின் கண்ணாடியாயிற்றே. எனவே, இலக்கியச் சான்று தேடிச் செல்லலாம். உதாரணமாக, 1995ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகமான ‘பேஜர்’ என்னும் செய்தி அனுப்பும் கருவி 2001இல் காணாமல் போனது. பேஜர்’ செய்தி அனுப்பும் கருவியைக் குறித்த பதிவுகளை அக்காலகட்டத்தில் வந்த திரைப்படப் பாடலாசிரியர்கள் பாடியுள்ளனர். காட்டாக, 1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘செல்வா’ என்ற திரைப்படத்துக்காக சினிமாக் கவிஞர் வாலி எழுதிய கீழ்க்கண்ட பாடலில் ‘பேஜர்’ என்ற தகவல்தொடர்புக் கருவியைக் குறித்த பதிவு காணக்கிடக்கின்றது.

ஏ லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு டப்புன்னு
லெவல்லா அடிக்குது ஹார்ட் பீட்டு
………….

பேஜர் உந்தன் கண்ணில் இருக்கு
அதில் மேஜரான மேட்டர் இருக்கு
………

இப்பாடல் சிற்பியின் இசையில் சுரேஷ் பீட்டர், ஸ்வர்ணலதா, தீபிகா குழுவினரால் பாடப்பட்டுள்ளது. ஒரு இடத்தின் இயற்கை அழகாகட்டும், செழிப்பாகட்டும், வளர்ச்சியாகட்டும், அக்காலக் கவிஞனின் கவிதைப் பதிவுகளில் பதிக்கப்பட்டிருக்கும். நாட்டின் கவிஞர்கள் எப்போதுமே நம்பிக்கைக்குரிய ஆவணப் பதிவர்கள். ஏனெனில், இலக்கியப் பதிவுகள் கவிஞனின் உள்ளத்தூறும் உண்மையின் அழகான வெளிப்பாடுகள். அங்கு, பொய்ம்மைகளுக்கு இடமேயில்லை. எனவே, நாம் தில்லை நகரைக் குறித்த காலப்பதிவுகளுக்காக, பரமனையே பாடிய சைவ சமயக்குரவர்கள் நால்வர் தந்த முதல் எட்டுத் திருமுறை இலக்கியங்களையே மீள்வாசிப்பு செய்யலாம்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், திருஞான சம்பந்தர் காலத்தில் தில்லை நகரை ஒரு பக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன. 

முதலில், முதல் மூன்று திருமுறைகளையும் தந்த நான்மறை நற்றமிழ் திருஞான சம்பந்தப் பெருமானிடம் செல்வோம்.

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்

செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. (திருஞானசம்பந்தர் 1ஆம்திருமுறை.கோயில்.3.)

மைதீட்டப்பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடைய உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத அறமுதலான மறைப்பாடல்களைப் புரிந்த சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும்.

இப்பாடலில், தில்லையை ‘உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள்’ என்னும் பொருளில் ‘கழிசூழ் தில்லையுள்’ என்று பெருமான் பாடியுள்ளார். எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டில் தில்லையை ஒரு பக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன என்பது தெளிவு.

அடுத்ததாக, நான்கு முதல் ஆறாம் திருமுறைகளை அருளிய அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பெருமானிடம் செல்லலாம். அப்பர்பெருமான் தில்லை கூத்தபெருமானைத் திருமுறைகளுக்கு இரண்டு வீதம் மொத்தம் 6 பதிகங்களில் சுமார் அறுபது பாடல்களில் பாடித் துதித்துள்ளார்.

இவற்றுள், நான்காம் திருமுறையின் 22ஆம் பதிகத்தின் 1-3 பாடல்களில் முறையே ‘மஞ்சடை சோலைத் தில்லை’, ‘நாறுபூஞ் சோலைத் தில்லை’, ‘நாறுபூஞ் சோலைத் தில்லை’ எனத் தில்லையின் வளமிக்க சோலைகளை ஒவ்வொரு பாட்டின் மூன்றாம் வரியில் சிறப்பிக்கின்றார்.

நான்காம் திருமுறையின் 22ஆம் பதிகத்தின்  4ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘நன்செய்வயலிலே தானியங்கள் அறுவடையாகும் தில்லை’ எனப் பொருள்படும் ‘செய்யரி தில்லை’ எனவும், 8ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘பாசனத்துக்காக நீர்தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே’ எனப் பொருள்படும் ‘சிறைகொள் நீர்த் தில்லை’ எனவும், ஐந்தாம் திருமுறையின் 2ஆம் பதிகத்தின் 10ஆம் பாடலின் மூன்றாம் வரியில், ‘தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனை’ என்றும்  தில்லையின் வயல் வளத்தைப் பாடியுள்ளார். ஆறாம் திருமுறையில் தில்லைவளம் குறிக்கப்படவில்லை.

அப்பர் பெருமான், ஞானசம்பந்தருக்குச் சமகாலத்தவராதலால், இருவரின் கருத்துக்களையும் ஒன்றுசேர நோக்கினால், தில்லை அவர்கள் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டு காலத்தில், ஒருபக்கம் உப்பங்கழியாலும், மற்றபக்கங்களில் வயல்களாலும், சோலைகளாலும் சூழப்பட்டிருந்தது என்ற செய்தியைப் பெறுகின்றோம்.

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல்களில் தில்லையின் கடல் நிலவியல் குறித்த செய்தியில்லை.

எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறையின் 90ஆவது பதிகமான கோயில் பதிகத்திலே “பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே” என்று மட்டுமே அனைத்துப் பாடல்களிலும் பதிவிடப்பட்டுள்ளதே தவிர தில்லைவளம் கூறப்படவில்லை. எனவே, தில்லையின் கடல் நிலவியல் குறித்த செய்தி எதுவும் கிடைக்கவில்லை.

ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனத் தமிழியல் ஆய்வர்களால் கருதப்படும் மாணிக்கவாசகப்பெருமானின் திருவாசகத்தில் தில்லைவளம் குறித்த செய்திகள் குறைவு.

ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப் பெரும்பான்மைத் தமிழியல் ஆய்வர்களால் கருதப்படும் எட்டாம் திருமுறை தந்த மாணிக்கவாசகப்பெருமானின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றுள், தில்லைவளம் குறித்த செய்திகள் திருவாசகத்தில் சற்றுக் குறைவாகவே கிடைக்கின்றன.

குலம்பாடிக் கொக்கிறகும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்டவாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
– திருவாசகம்:11.20

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ
– திருவாசகம்:13.1

படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ
– திருவாசகம்:13.14

பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே
– திருவாசகம்:31.6

மேலே குறிப்பிட்ட நான்கு பாடல்களில், திருவாசத்தின் திருத்தெள்ளேணம் பதிகத்தின் 20ஆம் பாடல் கடல் நீரலைகள் ஓசைஎழுப்புகின்ற தில்லை அம்பலத்தே ஆடுகின்ற எனப் பொருள்படும் “அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற” என்ற வரியில் தில்லை அம்பலம் கடற்கரையில் அமைந்துள்ளதைப் பதிவுசெய்துள்ளது.

திருவாசத்தின் திருப்பூவல்லி பதிகத்தின் 1ஆம் பாடல் “அணையார் புனல்தில்லை” என்று பதிவிட்டதன் மூலம் தில்லையின் வயல்வளத்தையும், 14ஆம் பாடல்  “தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா” என்று பதிவிட்டதன் மூலம் தில்லைக் கோயில் பெரிய மதில்களைக் கொண்டிருந்தமையையும் பதிவுசெய்துள்ளது.

திருவாசத்தின் கண்டபத்து பதிகத்தின் 6ஆம் பாடல் “செறிபொழில்சூழ் தில்லைநகர்” என்று பதிவிட்டதன் மூலம் தில்லையின் பொழில் சூழ்ந்த சோலைவளத்தையும் பதிவுசெய்துள்ளது.

ஆக, மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைக் கோயில் பெரிய மதில்களை உடையதாய் கடற்கரையில் அமைந்துள்ளமையும், தில்லை ஊர் வயலும் சோலைகளும் நிறைந்து செழிப்பாக இருந்தமையும் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து பெறப்படுகின்றது. எனினும், “அலம்பார் புனல் தில்லை” கடல் நீரலை ஓசையைக் குறித்ததா அல்லது வயல்களில் தளும்பும் நீரலையோசையைக் குறித்ததா என்ற ஐயம் எழாமலும் இல்லை. எனவே, மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையார்’ படைப்பையும் ஆய்ந்து பார்க்காமல் தில்லை அவர் காலத்தில் கடற்கரையில் அமைந்திருந்தது என்று முடிவுக்கு வர இயலாது.

ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டின் கருதப்படும் மாணிக்கவாசகப்பெருமானின் திருகோவையாரில் கடற்கரைக் கோயிலாகத் தில்லை கூறப்பட்டுள்ளது.

நானூறு பாடல்களைக் கொண்ட திருக்கோவையாருள், 20, 49, 85, 122, 147, 182, 183, 222 எண்ணுடைய எட்டுப் பாடல்களில் தில்லைவளம் குறித்த வலுவான செய்திகள் காணக் கிடக்கின்றன.

சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்குஎன் கொலாம்புகுந்து எய்தியதே” – திருக்கோவை 20

என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே
– திருக்கோவை 49

சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே  – திருக்கோவை – 85.

அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே  – திருக்கோவை – 122.

ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந் தளர்ந்தனை நன்னெஞ்சமே 1– திருக்கோவை – 147.

ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்தார்க்குஞ் செறிகடலே
– திருக்கோவை – 182.

பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே – திருக்கோவை – 183.

மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்

மன்போல் பிறைஅணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
நின்போல்நடை அன்னம்துன்னிமுன்தோன்றும்நன் நீள்நகரே – திருக்கோவை – 222.

பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே  – திருக்கோவை – 317.

கடலலைகளைச் சிறைவத்துள்ள சிற்றம்பலம்: 

மேற்கண்ட ஒன்பது பாடல்களில், முதலாவதாகக் குறிக்கப்பட்ட திருக்கோவையின் இருபதாவது பாடல் “சிறை வான்புனல் தில்லைச் சிற்றம்பலத்தும்” என ‘வானுயர ஆர்த்துஎழும் கடலலைகளைச்    சிறைவத்துள்ள சிற்றம்பலத்தில் உறையும்” என்று கூறுகின்றது.

கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடல்:

அடுத்ததாக வரும் திருக்கோவையின் நாற்பத்தொன்பதாவது பாடல் “மின் எறி செஞ்சடைக் கூத்தப்பிரான் வியன்தில்லை முந்நீர்” என “மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடல்” என்று சொல்கிறது. (கடலைக் குறிக்கும் முந்நீர் என்னும் சொல் சங்ககாலம் தொட்டுத் தமிழில் வழங்கி வருகின்றது. காட்டாக, “திரை பொரு முந்நீர்க் கடல்” -புறநானூறு:154 “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி” -புறநானூறு:66, முந்நீர் தரும் உப்பை அமிழ்தம் என்னும் பொருளில் “முந்நீர் பயந்த … வெண்கல் அமிழ்தம்” -அகநானூறு 207, முந்நீரில் செல்வோர் மகளிருடன் செல்வதில்லை என்ற கருத்தில் “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”-தொல்காப்பியம்:3-37-1, முந்நீர் வண்ணம் கொண்ட திருமாலைப் போன்ற பிறங்கடை என்னும் பொருளில் “முந்நீர் வண்ணன் பிறங்கடை (தொண்டைமான்)” -பெரும்பாணாற்றுப்படை:30,  முந்நீரில் செல்லும் கப்பல்களைக் காற்று கவிழ்க்கும் என்னும் பொருளில் “நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்” –கலித்தொகை:5,  வெண்திரை முந்நீர் வளைஇய உலகம் -பதிற்றுப்பத்து:31)

மாவங்கக் கடல் சூழ்ந்த தில்லைக் கூத்தபிரான்: 

திருக்கோவையின் எண்பத்தைந்தாவது பாடலோ “மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே” என மாவங்கக் கடல் சூழ்ந்த தில்லைக் கூத்தபிரான் நேர் தோன்றி வருவதாகக் கூறுகிறது. திருக்கோவையின் 122வது பாடலோ “கடல் தில்லை அன்னாய் கலங்கல் தெளி” என வெளிப்படையாகவே தில்லையைக் கடல் சூழ்ந்திருந்த செய்தியைத் தெரிவிக்கிறது.

தில்லைச் சிற்றம்பலம் கடல்சூழ விளங்கியதைக் காட்டும் பிற கோவைப் பாடல்கள்:

தில்லைச் சிற்றம்பலம் கடல்சூழ விளங்கியதை “ஆனந்த மாக்கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன” என்று திருக்கோவை – 147ஆவது பாடலும், “புலியூர்ப் புனிதன் சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்து ஆர்க்கும் செறிகடலே” என்று  திருக்கோவை – 182ஆவது பாடலும், “பூணிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே” என்று திருக்கோவை – 183ஆவது பாடலும், “மின்போல் கொடி நெடுவானக் கடலுள் திரைவிரிப்ப” என்று  திருக்கோவை – 222ஆவது பாடலும் விளங்கத் தெரிவிக்கின்றன. “பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்என்று திருக்கோவை – 317ஆவது பாடல் தில்லைநகர் காவிரி நதியால் வளம் பெற்றதையும் தெரிவிக்கிறது.

எனவே, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தர், அப்பர் பாடல்களிலிருந்து பெறப்படும் அகச்சான்றுகளிலிருந்து, வயல்களாலும், சோலைப் பொழில்களாலும் வளம்பெற்ற தில்லை, ஒருபுறம் உப்பங்கழிகளால் சூழப்பெற்றிருந்தமை பெறப்படுகின்றது.

ஆனால், ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பெரும்பான்மையான தமிழாய்வர்களால் துணியப்பட்ட மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையாரிலிருந்து பெறப்படும் அகச்சான்றுகளிலிருந்து வயல்களாலும், சோலை போழில்களாலும் வளம் பெற்ற தில்லை, ஒருபுறம் வங்கமாக் கடலால் சூழப்பெற்றிருந்தமை பெறப்படுகின்றது. 

கடல் சூழப்பட்ட காலமே கழி சூழப்பட்ட காலத்திற்கு முன் இருத்தல் வேண்டும் என்பது கடல் நிலவியலின் அடிப்படை உண்மை.

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம்வரை நாம் காணும் தில்லைநகர் மற்றும் தில்லைக்கோவில் மாட மாளிகைகளால் சூழப்பட்டு, கடலோ, உப்பங்கழியோ சூழப்படாமல் கடலிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

கடல் நிலவியல்ரீதியாக (marine geology), கடல் சூழ்ந்த நிலப்பகுதியே கால ஓட்டத்தில் கடல் விலகிச் செல்லும் காரணத்தால் Backwater எனப்படும் உப்பங்கழிகளால் சூழப்பட்டு, தொடரும் கடல் விலகிச்செல்லும் நிகழ்வால், உப்பங்கழிகளும் நிலப்பகுதியாக மாறுகின்றன. தில்லைநகர் தற்போது கடலோ, உப்பங்கழியோ சூழப்படாது, கடலிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளதை ஒப்புநோக்கினால், கடல் சூழப்பட்ட காலமே கழி சூழப்பட்ட காலத்திற்கு முன் இருத்தல் வேண்டும்.

இவை அனைத்தையும் ஒன்றுசேரப் பார்க்கும்போது, ஏழாம் நூற்றாண்டில் தில்லை கழியால் சூழப்பட்டிருந்தது என்ற அகச்சான்று சம்பந்தப் பெருமானின் பாடல்களிலிருந்து பெறப்படுவதால், தில்லை கடலால் சூழப்பட்டிருந்தது என்ற அகச்சான்று பெறப்பட்ட திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாடல்கள் குறைந்தஅளவு ஏழாம் நூற்றாண்டுக்கு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்காவது முன்பே படைக்கப்பட்டிருக்க வேண்டும்  என்பது  உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாக விளங்கும்.        

மூவர் தேவாரங்களிலும் காணப்படும் விநாயகப் பெருமான் வழிபாடு திருவாசகத்தில் இல்லை.

மேலும், விநாயகப் பெருமான் வழிபாடு மூவர் தேவாரங்களிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ விநாயகப்பெருமானைக் குறித்த பதிவுகள் முற்றிலும் இல்லை.

முருகப்பெருமானைக் குறித்த பதிவுகள் திருவாசத்தில் காணக்கிடக்கின்றன. காட்டாக, திருவாசத்தில் முருகப்பெருமானைக் குறித்த சில சொல்லாடல்கள் தரப்பட்டுள்ளன.

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடயற்கே உந்தீபற
  குமரன்தன் தாதைக்கே உந்தீபறதிருவாசகம்:திருவுந்தியார்:17 

அந்தரர் கோன் அயன்தன் பெருமான் ஆழியான் நாதன் நல்வேலன் தாதை
எந்தரம் ஆளுமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே

  • திருவாசகம்:திருப்பொற்சுண்ணம்:3 

குமரக்கடவுளைக் குறித்த மணிவாசகர், குமரனின் மூத்தவர் விநாயகப்பெருமானைத் தன் பாடல்களில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதிலிருந்து, மாணிக்கவாசகரின் காலத்தைய தமிழகத்தில் விநாயகவழிபாடு இல்லாமல் இருந்தது என்பது மிகத்தெளிவு.

விநாயகர் வழிபாடு தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லை என்பதால், மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் முந்தையதும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையதும் என்பதற்கு இது இன்னுமொரு வலுவான சான்று.

முதலாவது வரகுணனா அல்லது இரண்டாவது வரகுணனா என்ற ஆய்வுப் பட்டிமன்றங்கள்:

ஆனால், இதுகாறும் தமிழிலக்கிய வரலாறு எழுதிய தமிழியல் ஆய்வர்கள் மாணிக்கவாசகர் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ள வரகுணப்பாண்டியன் முதலாவது வரகுணனா அல்லது இரண்டாவது வரகுணனா என்று ஆய்வுப் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி, இரண்டாவது வரகுணனே என்று முடிவுகட்டி, மாணிக்கவாசகரின் காலத்தை எட்டாவது நூற்றாண்டிற்குப் பின்கொண்டு சென்றுவிட்டனர். ஒரு மன்னனின் பெயரை அவன் மகன்வழிப் பெயரனோ, மகள்வழிப் பெயரனோ பெறுவது தமிழ்க்குடிகளில் இன்றும் நாம் காணும் தொன்மப் பண்பாட்டு நிகழ்வுகள். வரலாற்று ஆய்வுநெறி முறைகள் அடிப்படையில் நோக்கினால், சிதம்பரம் நடராசப்பெருமான் கோயில், திருச்செந்தூர் முருகப்பெருமானின் கோயிலைப்போலக் கடற்கரைக் கோயிலாக மாணிக்கவாசகரின் காலத்தில் விளங்கியது என்பதை விளக்கும் திருக்கோவையாரின் ‘கடல்சூழ்ந்த தில்லை’ பதிவுகளும், மற்றும் விநாயகப் பெருமான் வழிபாட்டுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவர் மாணிக்கவாசகர் ஆகிய வலுவான சான்றுகளை ஒப்பிடும்போது, வரகுணன் என்ற பெயர்கொண்ட மன்னர்கள் காலத்தையும் மாணிக்கவாசகரின் காலத்தையும் ஒப்பிடும் வாதம் மிகமிக வலுவற்றது என்பது தெளிவாக விளங்கும். எனவே, மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதி.

தமிழிலக்கிய வரலாறு இவ்வாறு முரண்களின் மூட்டையானதன் காரணம்: 

தமிழிலக்கிய வரலாறு, ஆய்வு நெறிகளைப் பின்பற்றாமல், கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன்னார் இவ்வாறு கூறிவிட்டமையால், அது அவ்வாறே இருத்தல் வேண்டும் என்ற ‘பெரியோர் உரை அளவு’ ஒன்றையே பெரும்பான்மை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் புதினங்களாகவே உள்ளன. விதிவிலக்காக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், கா.சு.பிள்ளை, பரிதிமாற்கலைஞர், தேவநேயப்பாவாணர் போன்ற அறிஞர்கள் நம்மிடையே தோன்றினர் எனினும், அவர்கள் எடுத்துக்கொண்ட பரந்துபட்ட தமிழாய்வுத் தளங்களை நோக்கும்போது, தில்லை அதற்குரிய இடத்தைப்பெறவில்லை என்பது தமிழர்களாகிய நாம் செய்த தவக்குறைவே. மேலும், அவர்தம் காலத்திலேயே, பல்கலைக்கழகங்களிலும், தமிழாய்வு மையங்களிலும் அமர்ந்திருந்த பிற தமிழியல் ஆய்வாளர்கள் இவ்வறிஞர்கள்பால் கொண்ட தனித்தமிழ் உள்ளிட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, “பெரும்மொழிப்பற்றின் காரணமாகக் கூறியவையேயன்றி ஏற்புடையவையன்று (far fetched thoughts due to Tamil affinity)” என்று முத்திரை குத்தி அவர்தம் கருத்தாய்வுகள் உலக அரங்கில் சென்றடையா வண்ணம் செய்துவிட்டனர். ‘(எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளுக்கு நேர் மாறானவர்கள் இத்தகையோர்). ஆனாலும், காலம் இவர்களின் தவறுகளைக் களையாமல் விடப்போவதில்லை என்பது உறுதி.

இறுதியாக, தில்லை மரம் குறித்துச் சங்கப்பாடல்களில் காணக்கிடைக்கும் செய்திகள் சில:

  • குறிஞ்சிநிலத்து மகளிர் குவித்து விளையாடிய தொண்ணூற்று ஒன்பது மலர்களில் தில்லை மலரும் ஒன்று. இது மணம் வீசும் மலர். இதன் மரம் ‘தளதள’வெனத் தழைத்திருக்கும். பெரிதாக இருக்கும்.
  • நீர்நாயின் குருளை (குட்டி) மீனை மேய்ந்தபின் தில்லையம் பொதும்பில் (ஆற்றோரக் காடுகளில்) பள்ளி கொள்ளுமாம்.
  • தில்லை மரங்கள் ஊருக்கு வேலியாக அமைவது உண்டு.
  • உப்பங்கழிகளில் முண்டகமும் தில்லையும் ஓங்கி வளரும்.
  • தில்லைக் காய்கள் முனிவர்களின் சடைமுடி தொங்குவது போலக் காய்த்துக் குலுங்கும். புது வெள்ளம் கொட்டும் அருவியில் குளித்துக் குளித்து அவர்களின் தலைமுடி சடை போட்டுவிடுமாம்.

ஆய்வுகள் தொடரும்…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *