–நிர்மலா ராகவன்

 

kabali pic

’இப்போ யாரைக் கேட்டாலும், மலேசியாவிலதான் வேலை பாக்கிறதாச் சொல்றாங்க!’ சமீபத்தில் தமிழ்நாட்டில் நான் கேட்டது இந்த விமரிசனம்.

இங்கு வேலை பார்க்க வருகிறவர்கள் பன்னிரண்டிலிருந்து ஐம்பது பேர் ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு, குடும்பத்துடன் இருக்க வாய்ப்பில்லாது (இந்தோனீசியர்களைத் தவிர பிற ஆண்கள் தம் மனைவியரை அழைத்து வர அனுமதி கிடையாது), விடுமுறை நாட்களில்கூட வெளியூருக்கு எங்காவது போகாது, முடிந்தவரை காசைச் சேமித்துக்கொண்டு தாய்நாடு திரும்பும்போது, தாம் அனுபவித்த இன்னல்கள் பிறருக்குத் தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்வார்கள். அப்போதுதானே மிதப்பாக நடக்கலாம்!

இதனால், மலேசியாவில் எல்லாத் தமிழர்களும் கோடீஸ்வரர்கள், பணத்தை வாரி இறைப்பவர்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைக்கும் இந்த நம்பிக்கைக்கும் வெகு தூரம் என்பதுதான் சரியான நிலவரம்.

மலாயாவில் இருபதாம் நூற்றாண்டில் வேலை பார்த்த எஸ்.ஏ. கணபதி என்ற தொழிலாளி ஒரு விதத்தில் கபாலி என்கிற நாயகனுக்கு முன்னோடி எனலாம். இவர் இளம் வயதிலேயே மலாயா தொழிற்சங்க இயக்கத்தின் தேசியத் தலைவரானார்.

ஒரே வேலையைச் செய்தாலும், ஒரு நாளைக்குச் சீனர்களுக்கு அறுபது காசு, இந்தியர்களுக்கு நாற்பது காசு என்று ஆங்கிலேய முதலாளிகள் நிர்ணயித்ததை எதிர்த்தார். தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டுகோலாக அமைந்தார். முதலாளித்துவத்தை எதிர்த்தால் என்ன ஆகும்? அவர் தூக்கிலிடப்பட்டார். (ஆதாரம்: மலேசிய நண்பன், ஞாயிறு பதிப்பு, ஜூலை 31)

நான் ஐம்பது வருடங்களுக்குமுன் கோலாலம்பூருக்கு வந்தேன். அப்போது தமிழர்கள் பெரும்பாலும் தோட்டப்புறம், அதாவது ரப்பர் எஸ்டேட்டுகளில்தான் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை முதலிய நகரங்களுக்கு அருகே இருந்த கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள். அனேகருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பெரிய நகரங்களிலோ தெருக்கூட்டுவது போன்ற கடைநிலை ஊழியங்களைத்தான் செய்துவந்தார்கள்.

’இங்குள்ள இந்தியர்களுக்குள் ஒற்றுமையே இல்லையே!’ என்று நான் என் குடும்பத்தினரிடம் பலமுறை சொல்லி அங்கலாய்த்ததுண்டு. இதனாலேயே இவர்களை கீழ்நிலையிலேயே வைத்திருப்பது பிறருக்குச் சாத்தியமாயிற்று.

கல்விகற்றால் உயரலாம் என்று சிலருக்குப் புரிந்துபோயிற்று. ஆனால், அதுவும் கடினமாகத்தான் இருந்தது. ஏழ்மை நிலையில் புத்தகம், சீருடை என்று வாங்கக் காசில்லை.

நான் கற்பித்த  முதல் பள்ளியில், சீன, ஆங்கில-சீன ஆசிரியைகள் ஒரு தமிழ்ப் பையனைப்பற்றி ஆசிரியைகளின் பொதுஅறையில் ஓயாது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவன் செல்வந்தர் வீட்டுப் பையன். அதனால், இவர்கள் மட்டம் தட்டிப்பேசுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முடிந்தவரை மரியாதையுடன் எதிர்த்திருப்பான்.

ஒரு முறை, `நீ அவனைப்பற்றி எதுவுமே சொல்வதில்லையே!’ என்று அதிசயப்பட்டு என்னிடம் கேட்டபோது, நான் யோசிக்காது, “Indian boys are no problem in my class!” (இந்திய மாணவர்கள் என் வகுப்பில் பிரச்சனைகள் அளிப்பதே கிடையாது!) என்றுவிட்டேன். அவர்கள் முகம் அவமானத்தால் சுருங்கியது. அப்போதுதான் RACISM என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு.

(சீனப்பையன்கள் அதைவிட அதிகமாக, மரியாதைகெட்டத்தனமாக நடக்கலாம். ஆனால், `இந்தச் சீனர்களே இப்படித்தான்!’ என்று அவர்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். மாட்டிக்கொள்வதெல்லாம் சாதுவான தமிழர்கள்தாம். அதுவும், அழகாகவோ, திறமைசாலியாகவோ இருந்தால் போயிற்று!).

இன்னொரு பள்ளியில், ஒரு வகுப்பறையில் ஆசிரியை கணக்குப்பாடம் நடத்திக்கொண்டிருக்க, தமிழ் மாணவிகள் ஆறுபேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு, தம்பாட்டில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைத் தனியே அழைத்துக் கேட்டபோது, `உங்களுக்கு இதெல்லாம் புரியாது. என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள்!’ என்று ஆசிரியை சொல்லிவிட்டதாக அறிந்தேன்; அதிர்ந்தேன்.

நான் தினமும் மிக் கவனமாக அலங்கரித்துக்கொண்டு போவேன். உதட்டுச்சாயம், எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட காலணி (இரண்டு, மூன்று நிறங்களில்கூட இருக்கும்), வளையல், கைக்கடிகாரப்பட்டை எல்லாமே என் புடவை நிறத்தில்தான் இருக்கும். எனக்கு அலங்காரத்தில் பிரியம் என்பதால் மட்டுமில்லை, `உங்களாலும் உயர முடியும். ஏழ்மையைக் கண்டு அஞ்சாதீர்கள்! அது நிலையானதில்லை’ என்று மாணவிகளுக்கு நான் மறைமுகமாக அளிக்க விரும்பிய போதனை அது.

தொலைக்காட்சிக்கு என்னைப் பேச அழைக்கும்போது, `ஒரு நிபந்தனை. ஒரு நிமிடத்துக்கு ஒரு புடவை மாற்றுவேன்,’ என்றுவிடுவேன். அது வேடிக்கை என்று நினைத்து சிரிப்பார்கள் இயக்குநர்கள். ஒரு நிகழ்ச்சிக்குப்பின், நான் வேறு ஒரு ஊருக்குப் போயிருந்தபோது, `உங்களை டி.வியில பாத்தேன். Very nice saris!” என்று கிறங்கினார், வசதிகுறைந்த நிலையிலிருந்த ஒரு ஆண்!

கபாலி படத்தில் ரஜினி விடாப்பிடியாக கோட்டு அணிந்து வருவதும் இதைப்போல்தான் என்றே தோன்றுகிறது.

படத்தின் இறுதியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள் கபாலியிடம் முறையிடுவதுபோல் வருகிறதே, அதுவும் இன்றைய நடப்பைக் காட்டுகிறது.

ஒரு சில இந்திய வம்சாவளியினர் (ஆரம்பத்தில்  வந்தவர்களில் 80% தமிழர்கள்தாம்) நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைக்காது, உபகாரச் சம்பளம் கிடைப்பதும் துர்லபம்தான் என்ற நிலை. எப்படியோ படித்துத் தேர்ச்சி பெற்றாலும், அரசாங்க வேலை கிடைப்பது கடினம். பிற இடங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட பாதி சம்பளத்திற்கு வேலை செய்யவென ஆப்பிரிக்கா, நேபால், பங்களாதேஷ், மியன்மார், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து என்று உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆட்கள்தாம் வந்து  குவிகிறார்களே!

இதெல்லாம் புரியாது, `இவ்வளவு பணக்கார நாட்டில் நாம் ஏன் ஏழைகளாக இருக்கவேண்டும்?’ என்ற ஆத்திரத்துடன் சிலர் குண்டர் கும்பலில் சேருகிறார்கள். இல்லை, சேர்க்கப்படுகிறார்கள். இதனால் பணத்துடன், அந்தஸ்தும் கிடைக்கிறது. இவர்கள் பிறரைப் பார்த்துப் பயந்தது போக, பிறர் இவர்களைப் பார்த்துப் பயப்படுகிறார்களே, போதாதா?

சட்ட விரோதமான செயல்களால் பொருளீட்டுபவர்களில் பலர் தம் நிலையை மறப்பதில்லை. வசதிகுறைந்த இந்தியர்களுக்கும், விதவைகளுக்கும் பலவாறாகப் பொருளுதவி செய்கிறார்கள். இப்படி ஒருவர் அண்மையில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அவருடைய இறுதி ஊர்வலத்தில் பலர் ஆழ்ந்த வருத்தத்துடன் கலந்துகொண்டனர். அவருடைய படத்தைத் தாங்கிய பெரிய, பெரிய போஸ்டர்கள் எங்கும் காணப்பட்டது என்கிறது ஒரு செய்தி.

திரைப்படம் என்றால் சும்மா பொழுதுபோக்கிற்குத்தான் என்று தியேட்டருக்குப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் கபாலி ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால் மறைக்கப்பட்டிருந்த பல உண்மைகளை (ஊழல்களை?) கபாலி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது — படத்தில் வரும் பாத்திரங்கள் எவரையும் குறிப்பன அல்ல என்ற முன்னுரையுடன்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.