திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(10)
இசைக்கவி ரமணன்
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(9)
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது (8)
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை அடைந்தாருக்கு அல்லாமல், மற்றவர் பொருள், இன்பமாகிய பிற கடல்களைக் கடக்க முடியாது.
‘தருமத்தின் பாதை சூட்சுமமானது, கரடுமுரடானது` என்று மகாபாரதம் சொல்லும். அறம் என்பது பல பொருள் கொண்டது. காலம், இடம், சூழல், மனிதனின் நிலை இவற்றுக்கேற்பப் பொருள் மாறுவது. மிகவும் விரிந்தது. மிக மிக நுண்மையானது. இறைவனுக்குச் சொல்லப்படும் பல தன்மைகள் தருமத்திற்கும் பொருந்தும். எனவே தருமத்தை, அறத்தைக் கடல் எனலாம். ஆனால், இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டவனுக்குப் பாதை கரடுமுரடாக இருக்காது.
அறவாழி என்றால் தருமக் கடல். அந்தணன்? செந்தண்மை பூண்டொழுகுபவன்! எதிர்பார்ப்பற்ற கருணை பூண்டவன், காரணமற்ற கருணை உள்ளவன். காருண்ய வேகம் உள்ளவன். செயற்பூர்வமான தயை உள்ளவன்.
இறைவனே அறக்கடல். பெரியது, அளவற்றது, ஆழமானது, ரத்தினங்களைக் கொண்டது என்பதற்காக அவனைக் கடல் என்கிறோம். இது மருட்டும் கடல் அல்ல. நம்மை ஆச்சரியத்தில் நிறுத்திவைக்கும் அருட்கடல். வற்றாதது. அவனது திருவடிகளைச் சேர்வதும் அறக்கடலை அளப்பதும் ஒன்றே. அவனது திருவடிகளாகிய ஓடத்தின் மூலம் பிற கடல்களாகிய பொருள், இன்பம் இவற்றையும் கடக்கலாம். அறம், புரியாமல் போகலாம். ஆனால், பொருள், இன்பம் இவற்றில் மயக்கம் ஏற்பட்டு மனிதன் திசைதவறிப் போக வாய்ப்பு அதிகமுண்டு.
இறைவனின் தாள்களே அறக்கடல். அவன் தாள்களே தெப்பம். அவன் தாள்களே மற்றைய கடல்களைக் கடக்க உதவும் ஓடம்.
`அறவழியை ஏற்காத மனிதர்கள், என்னை அடையாமல் இன்ப துன்பங்களில் உழல்கிறார்கள்,` என்பது கண்ணன் வாக்கு, (கீதை:09:03)
இந்தக் குறளிலும் முந்தைய குறளிலும் அரிது என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதன் சிறப்பைப் பார்ப்போம்:
அரிது என்றால் அருமையான (precious) அரிதான (rare) என்று பொருள். அருமை என்ற சொல்லுக்கு இன்மை, இல்லாதது (non-existent) என்றும் பொருள். அரிது என்றால் உண்டாகாது, தோன்றாது (impossible) என்றும் பொருள். இந்த நான்கு பொருள்களிலும் அரிது என்னும் சொல்லை ஆள்கிறார் வள்ளுவர்.
பசும்புல் தலைகாண் பரிது; வெகுளி கணமேனும் காத்தல் அரிது; வானகமும் வையகமும் ஆற்றல் அரிது; மாண்டற் கரிதாம் பயன்; புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே; தீப்பிணி தீண்டல் அரிது; அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது; தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; வணங்கிய வாயினராதல் அரிது; அரியவற்று ளெல்லாம் அரிதே; உறைநிலத்தோடு ஒட்டல் அரிது; அரிய கற்றும் ஆசற்றார்; மாண்பயன் எய்தல் அரிது; இகல்வெல்லல் யார்க்கும் அரிது; போற்றின் அரியவை போற்றல்; கொளற்கரிதாய்; மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது; செறுவார்க்கும் செய்தல் அரிது; பொன்றாமை ஒன்றல் அரிது; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
இன்னும் இப்படிப் பல குறள்களில் அவர் அரிது என்னும் சொல்லை ஆண்டிருக்கும் விதம் ஆய்ந்து அறியத்தக்கது.
தொடருவோம்