Month: November 2016

  • மனமிருத்தி வணங்கிடுவோம் !

     

          ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா ) 

     

     

     

          முருகனது திருநாமம் மூச்செல்லாம் நிறைந்திருக்கும்

          திருநீறு அவரிடத்தில் திகழொளியைத் தந்துநிற்கும் 

          வருகின்ற பொருளனைத்தும் வழங்கிடுவார் திருப்பணிக்கு

          வாழ்நாளில் வாரியார் வாழ்ந்திருந்தார் வையகத்தில் !

     

        இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாமே அறிந்திருந்தார்

        தலைக்கனத்தை ஒருநாளும் தானேற்றிக் கொண்டறியார் 

        நிலத்திலுள்ளார் கடவுள்தமை நினைத்துவிட பேசிநின்றார்

        பழுத்தசைவப் பழமாகப் பாரெல்லாம் சென்றுவந்தார் !

     

          அருணகிரி திருப்புகழை அவர்பாடும் விதத்தாலே

          அனைவருமே திருப்புகழை ஆசையுடன் படித்தார்கள்

          தெருவெங்கும் அவர்பேச்சைக் கேட்டுநின்ற காரணத்தால்

          முருகாவென் றழைக்கின்றார் முகிழ்ந்தெழுந்தார் மூலையெலாம் !

     

         சிரிப்பினைக் கையாண்டு சிந்தனையை ஊட்டிநின்றார்

         சிரிப்புடனே வாழ்வதற்குச் சிவனருளே தேவையென்றார்

         சிரிக்காதார் வாழ்வெல்லாம் சிறக்காது வெனவுரைத்தார் 

         சிரித்தமுகம் கொண்டுநின்ற சிவப்பழமாம் சுவாமியவர் !

     

          பாமரரரும் பண்டிதரும் பாராட்டப் பலசெய்தார் 

          பாடல்களை பிரித்ததற்குப் பாங்காக கருத்துரைத்தார் 

          அடுத்தவரின் முகஞ்சுழிக்க அவர்பேசும் விதமறியார் 

          அறிஞரெலாம் வாரியாரின் அருகுசெல்ல ஆசைப்பட்டார் ! 

     

          பல்கலைக் கழகத்தில் பலவுரைகள் அவர்செய்தார்

          பல்கலைக் கழகமாய் திகழ்ந்தாரே வாரியாரும் 

          விடைதெரியா பலவற்றை விளக்கிநின்றார் விரிவுரையால்

          விடைசொல்லும் விதத்தாலே வியக்கவைத்தார்  வித்தகரை !

     

          உலகமெலாம் சென்றிடினும் ஓம்முருகா மறக்காது 

          முருகனது திருநாமம் முழுமனதாய் ஓதிநின்றார் 

          வருகின்ற அடியார்க்கு திருநீறு உவந்தளித்து 

          மருளகளகற்றி மனம்திருந்த மாமருந்தாய் அவரிருந்தார் !

     

          பேசினார் எழுதினார் பெருத்தவுடல் தான்சுமந்தார் 

          கூசாமல் குறுகாமல் குணம்சிறக்க வாழ்ந்திருந்தார் 

          மாசில்லா அவர்வார்த்தை வையகத்தை வாழ்விக்கும்

          காசினியில் அவர்வாழ்ந்த காலமதை நாம்நினைப்போம் !

     

           வாரியார் சுவாமிகள் வரலாறாய் ஆகிவிட்டார் 

           வரலாற்றில் அவர்போல வருவதற்கு யாருள்ளார் 

           வையகத்தார் மனம்திருந்த மருந்தாக அவரிருந்தார்

           வாரியார் சுவாமிகளை மனமிருத்தி வணங்கிடுவோம் !

     

     

     

    Share
  • விஷ்ணுசித்தரும் வாத்சல்ய பாவமும்

    -முனைவர் நா.கவிதா

    கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த வரலாறு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு பாசுரங்கள் இயற்றியவர் பெரியாழ்வார். ”மன்னர்கள் யாவரும் உய்யவரு கோமான் தன் கண்ணன் என” கோகுலத்தில் அனைவரும் கொண்டாடும்பொழுது, யசோதையாகத் தன்னைக் கருதி எல்லையின்றிப் பெருகும் அன்பால் பெருமாள்மீது இன்தமிழால் பாசுரங்கள் பாடியுள்ளார்.

    பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர்  பெருமாளிடம் தாய்ப்பாவனையில் பாசுரங்கள் பாடியவர்கள் ஆவர். இவர்களில் குலசேகராழ்வார் மட்டும் தந்தை நிலையிலும் பாசுரங்கள் பாடியுள்ளார். இவற்றில் பெரியாழ்வாரின் தாய்ப்பாவனைப் பாசுரங்களின் சிறப்புகளையும், தாய் சேய் பாவ உணர்வாகிய வாத்சல்ய பாவம் எங்ஙனம் அமைந்துள்ளது எனும் கருத்தினை   எடுத்துரைப்பதாகவும்  இவ் ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.

     வாத்சல்ய பாவம் (தாய் – சேய் பாவம்):

     திருமாலுக்குரிய பண்புகளில் ஒன்றாக krishna“வாத்சலயம்”என்பது குறிக்கப்படுகின்றது. “வத்ஸ்லா” என்பது கன்றினைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். கன்றின் மேல் பசு கொள்ளும் அன்பினைப்போல் இறைவனும் உயிர்கள்மேல் அன்பு உடையவன் என்னும் கருத்தினையே இப்பண்பு உணர்த்துகிறது. அதுவே, தாய் – சேய் அன்பு நிலையே வாத்சல்ய பாவமாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தகைய பாவ உணர்வில் இறைவனின் உயர்ந்த நிலையையும், தனது தாழ்ந்த நிலையையும் முற்றிலும் அடியவர்கள் மறந்து விடுகின்றார்கள்.   இறைவனைத்  தம்முடைய குழந்தையாகப் பாவித்துத் தம்மைத் தாயாகவும், தந்தையாகவும் எண்ணி உண்மையான அன்பினை வெளிப்படுத்துகின்றனர். இப்பூலோகத்தைக் காப்பவனையே தனது அரவணைப்பால் காக்கப்பட வேண்டிய குழந்தையாக எண்ணி பாடுகிறார் விஷ்ணுசித்தர்.

    தாய் – சேய் பாவ பாசுரங்கள்

    வ.எண் பதிகங்களின் தொடக்கம் பாசுர எண் உள்ளடக்கம்
     

    1.

    வண்ண மாடங்கள் 13-22 கண்ணன் பிறந்தான்
     

    2.

    சீதக் கடலுள் 23-43 திருமேனி எழில்
     

    3.

    மாணிக்கங்கட்டி 44-53 கண்ணன் தாலாட்டு
     

    4.

    தண்முகத் துச்சுட்டி 54-63 அம்புலிப்புருவம்
     

    5.

    உய்ய வுலகுபடைத்து 64-74 செங்கீரைப்பருவம்
     

    6.

    மாணிக்கக் கிண்கிணி 75-85 சப்பாணிப்பருவம்
     

    7.

    தொடர்சங் கிலிகை 86-96 தளர்நடைப்பருவம்
     

    8.

    பொன்னியற் கிண்கிணி 97-107 அச்சோப் பருவம்
     

    9.

    வட்டு நடுவே 108-117 புறம் புல்கல்
     

    10.

    மெச்சூது சங்க 118-127 அப்பூச்சி காட்டுதல்
     

    11.

    அரவணையாய் ஆயரேறே 128-138 தாய்ப்பாலுண்ண அழைத்தல்
     

    12.

    போய்ப்பா டுடைய 139-151 காதுகுத்தல்
     

    13.

    வெண்ணெய் 152-161 நீராட அழைத்தல்
     

    14.

    பின்னை மணாளனை 162-171 குழல்வாரக் காக்கையை வா எனல்
     

    15.

    வேலிக்கேல் வெட்டி 172-181 காக்கையைய் கோல்  கொண்டு  வரக்  கேட்டல்
     

    16.

    ஆனிரை மேய்க்கநீ 182-191 பூச்சூட அழைத்தல்
     

    17.

    இந்திர னோடு 192-201 காப்பிடல் (திருஷ்டி கழித்தல்)
     

    18.

    வெண்ணெய் விழுங்கி 202-212 பிள்ளை விளையாட்டு
     

    19.

    தன்னே ராயிரம் 223-233 தாய்பாலூட்ட  அஞ்சுதல்

    பெரியாழ்வாரது பாசுரங்களில் ஏறக்குறைய பாதிக்கும் மேலாக தாய் – சேய் பாவமே காணப்படுகின்றது.  “தாயார் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்தனை” என்று தனது குழந்தை வளர்கின்ற நிலையைக் கண்டு அவனது லீலைகளைப்  பாடியுள்ளார். சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டதாக, இசையோடு பாடி மகிழும் வகையில் இப்பாடல்கள் யாவும் அமைந்துள்ளன.

    தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக

         பெரியாழ்வார் பாசுரங்களில் தாய்மை உணர்வு மிகுதியும் மிளிர்கின்றது என்பதைத் தொடக்கத்தில் இருந்தே கண்டுவருகிறோம். அதிலும் தொடக்கப் பாசுரங்களில் எல்லாம் பெரியாழ்வார் கண்ணனைத் “தேவகியின் குழந்தையாகவே” மறக்காமல் தேவகியை நினைவூட்டுகிறார். பின்னர், “யசோதையின் குழந்தை” என்பதையும் முன்வைத்ததோடு, ஒரு கட்டத்தில் தேவகி, யசோதை என்பதெல்லாம் மறைந்து – என் பிள்ளை, என்மகன் கோவிந்தன், என் சிறுக்குட்டன் என்று தன் மகனாகவே எண்ணிப்பாடி மகிழ்கின்றார்.

    ”சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி
    கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த
    பேதைக் குழவி!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 23) என்பதில் கண்ணன் தேவகி குழவியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளான்.
    பின்னர்,
    மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
    செய்த்தலை நீல நிறத்துச் சிறுபிள்ளை!” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-34) என்று யசோதை வளர்க்கும் நீலநிறமான சிறுபிள்ளை என்று அடைமொழியிட்டுப் பாடுகிறார். அதனை அடுத்து, யசோதை மறைந்து பெரியாழ்வார் வெளிப்படையாக என்மகன் என்று கூறுகின்ற முறைமையை,

    ”என் மகன் கோவிந்தன்கூத்தினை இள மாமதீ
    நின்முகம் கண்ணுள ஆகில்,நீயிங்கே நோக்கிப் போ” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-54) என்ற பாசுரத்தில்  காணலாம். குழந்தைக்கு அம்புலியைக்காட்டி அமுது கொடுக்கும் இப்பதிகத்தில் பெரியாழ்வார் தனது குழந்தையைக் கோவிந்தா, பெருமான் என்று பதிவு செய்துள்ளார்.

    ”என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
    தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-55)

    “என் குழந்தை மிகச் சிறியவன், இனிய அமுது போன்று இனிக்கக்கூடியவன் என்னைக் கண்டு வரும்படியாகக் கைகளால் சைகை காட்டி அழைக்கிறான்” என்பதில் பெருமிதத்துடன் எனது குட்டன், என்மகன் என்று கூறுவதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆக, மேற்கூறிய பாசுரங்களால் பெருமாளை வளா்ப்பதில் தனது அன்பினைப் பதிவுசெய்தவர்களாகத் தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக மிளர்வதைக் காண இயலுகின்றது.

    திருமேனி அழகில் மயங்கும் தாய்உள்ளம்

         தாய் தனது குழந்தையின் எல்லாச் செயல்களிலும்  தனது மனத்தினைப் பறிகொடுக்கிறாள். தனது குழந்தை தூங்கினாலும், அழுதாலும் அழகுடையதாகவே தாயின் பார்வையில் காண்ப்படுகிறது. அவ்வகையில் உலகையே படைத்த இறைவன் குழந்தையாக அவதரித்தவுடன் அழகில் மயங்கிய தாய்உள்ளம் கோகுலத்தில் உள்ள கோபியர்கள் அனைவரையும் அழைத்துக் கண்ணனின் அழகைக் காணவரும்படி அழைக்கிறது. பாதாதி கேச வருணனையாகப் பெருமாளின் பாதத்தில் தொடங்கிக் கால்விரல், முழந்தாள், தொடை, முத்தம், இடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், மூக்கு, கண்கள், புருவம், மகரக்குழை, நெற்றி, குழல் என்று அனைத்து உறுப்புகளின் அழகையும் அணுஅணுவாக இரசிக்கிறார்.

         இங்கு யசோதையாகவே பெரியாழ்வார் மாறிவிட்டார் என்தற்கான மற்றொரு சான்று புலப்படுகிறது. தாயின் பார்வையில் குழந்தையின் உறுப்புகளில் வேறுபாடு இல்லை. அதனால்தான் ஆண் குழந்தையின் பிறப்பு உறுப்பை முத்தம் என்ற சொல்லினால் எடுத்துரைத்து வருணனை  செய்கின்றார்.

    “பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
       பாதக் கமலங்கள் காணீரே, பவளவாயீர்! வந்து! காணீரே!”      (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-23)

    என்று பாதாதிகேச வருணனையில் பாதத்தினைக் காணக் கோபியர்களை அழைக்கின்றார். அப்பாதாதிகேச வருணனையின் உள்ளடக்கத்தைப் பின்வரும் பகுதியில்  காணலாம்.

    • பாதம் – தாமரை மலர் போன்ற பாதங்களை வாயில் வைத்து சுவைக்கும் அழகு.
    • பத்து விரல்கள் – முத்தும், மணியும், வயிரமும், நன்பொன்னும் கலந்தாற் போன்ற பத்து விரல்களின்அழகு.
    • கணுக்கால் – வெள்ளித்தண்டை பெருமானின் கணுக்காலில் இருப்பதால் தண்டைக்கு என்னே ஒரு பெருமை.
    • முழந்தாள் – கயிற்றால் அடிக்க வரும் யசோதையிடம் இருந்து தப்பிக்க கண்ணன் தவழும் பொழுது உள்ள முழந்தாள் அழகே அழகு.
    • தொடை – பூதனை, இரணியன் என்ற இருவரையும் கொன்ற கண்ணனின் தொடை அழகினைக் கோபியர்களே காண்பீர்களாக.
    • முத்தம் – அஸ்த நட்சத்திற்கு பத்து நாட்கள் முன்பு தேவகியின் வயிற்றில் பிறந்த கண்ணனின் முத்தத்தின் அழகை ஆனந்திக்கிறாள்.
    • இடை – இடையில்  உள்ள அரைஞாண், பவழவடம், முத்துவடம் இவற்றின் பெருமையைக் கூறல்.
    • உந்தி – குட்டியானை போன்று யாதவச் சிறுவர்களை வெற்றிபெறும் கண்ணனின் உந்தி அழகை அவன் துயிலும் பொழுது மட்டுமே காண இயலும்.
    • உதரம் – கண்ணனது விஷமம் தாங்காமல் கட்டப்பட்ட தாம்புக் கயிற்றால் உண்டாகிய தழும்பினைக் காணுங்கள்.
    • திருமார்பு – கௌஸ்துப மணி துலங்கும் கண்ணனது மார்பழகு.
    • தோள்கள் – சகடாசுரனை நாலைந்து மாதக் குழந்தையாக இருந்த கண்ணன் சிறிய பாதத்தால் உதைத்தழித்தான். அவனது தோள் அழகினைக் காண்பித்து மகிழ்தல்.
    • கைகள் – சங்கு, சக்கர ரேகைகள் பொருந்திய களவுசெய்து உண்ட நெய்ப்பசையுடைய கைகளின் அழகைத் தோழியரிடம் காட்டல்.
    • கண்டம் – நந்தகுமாரன் வயிற்றில் பிரளய காலத்தில் உலகங்களே அடைக்கலமாயின. அத்தகைய கழுத்து அழகினைக் கண்டு மெய்சிலிர்த்தல்.
    • வாய் – கொவ்வைக் கனியை ஒத்த வாயை உடைய சிங்கக் குட்டி கண்ணனே.
    • எள்ளுப்பூ நாசி – கண்ணனைக் குளிப்பாட்ட மஞ்சளால் நாவினை தேய்க்கும் பொழுது – கண்ணழகால், உதட்டில் தோன்றும் குறும்புச் சிரிப்பழகால், எள்ளுப்பூ நாசி அழகால் யசோதையையும் கோகுலத்தில் உள்ள அனைவரையும் பூரிப்படையச் செய்வான்.
    • கண்கள் – அசுரர்களின் தீமையை அழித்து வளர்கின்ற கண்ணனின் கண் அழகே அவனுக்கு அப்பெயரை இட்டுத்தந்தது. அக்கண்ணழகைக் காண இரு கண்கள் போதுமா?
    • புருவம் – கருப்பு வைரம் போன்ற புருவ அழகைக் காரிகையீரே காண்பீர்களாக.
    • காது – மகரகுண்டலங்களைக் காதில் அணிந்து அவற்றுக்குக் கண்ணன் பெருமை சேர்க்கிறான்.
    • நெற்றி – சிறுமிகளது விளையாட்டுப் பொருட்களான சிறுமுறம், குட்டிப்பானை, வளர்ப்பு மைனா ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்ப ஓடும் கண்ணன் அழகைக் காணுங்கள்!
    • கூந்தல் – கன்றுகளை மடக்கக் கண்ணன் பொன்கொம்பினைப் பிடித்துக் கொண்டு ஓடும்பொழுது காற்றில் கண்ணனின் சுருண்ட முடிகள் அசைகின்ற அழகைக் காண  விரைந்து வருவீர்களாக.

    இவ்வாறு  கண்ணனின் அழகைக் கூறும் 21 பாசுரங்களை எவா் பக்திமையுடன் இயம்புகின்றனரோ அவர்கள் பெருமானுடன் பரமபதத்தில் பிரியாது இருப்பர் என்று கூறி இப்பாசுரப் பகுதியினை நிறைவு செய்கிறார்.

    ”சுருப்பார்குழலி யசோதை முன் சொன்ன
    திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
    விருப்பால் உரைத்த இருபதோ டொன்றும்
    உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே!”  (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-43)

    இப்பதிகப் பகுதியில் பெரியாழ்வார் தன்னை முழுமையாக யசோதையாக மாற்றிக் கொண்டமைக்குப் பல சான்றுகள் காணக் கிடக்கின்றன.

    வாய்மொழி இலக்கியப் பதிவாகத் தாலாட்டு :

    குழந்தையைத் தூங்கச் செய்வதற்காக உறவினர்கள் அளிக்கும் பரிசுப் பொருட்களை வரிசைப்படுத்திக்கூறித் தாலாட்டுப் பாடும் இயல்பான தாயாக பெரியாழ்வார் “தாலாட்டு”  என்ற பாசுரப் பகுதியில் மிளிர்கிறார். வாய்மொழி இலக்கியமாக மிளிரும் நாட்டுப்புற இலக்கியத்தில் குழந்தையைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடல்களில் உறவினர்கள் பரிசுப் பொருட்களுடன் வந்து பார்க்கும் நிலை நவிலப்பட்டுள்ளது.

    “சின்னண்ணன் வந்தானோ கண்னே! – உனக்கு
    சின்னச் சட்டை கொடுத்தானோ? – உனக்கு
    பட்டு ஜவுளிகளும் கண்ணே! – உனக்கு
    பலவர்ணச் சட்டைகளும்
    பட்டுப் புடவைகளும் கண்ணே! – உனக்கு
    கட்டிக்கிடக் கொடுத்தானோ?”

    என்ற வாய்மொழி இலக்கியக் கருத்தினைப் பதிவுசெய்வது போன்று உலகின் முழுமுதல் கடவுளான பெருமாளுக்குப் பிரம்மா, சிவன் முதலிய கடவுளர்களும் ஏனைய தேவர்களும் பரிசுப் பொருட்களுடன் வந்த தத்தமது தகுதிக்கேற்ற இடத்தில்  நின்றனர் என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

    “மாணிக்கங் கட்டி வயிர மிடைகட்டி
    ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுதொட்டில்
    பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக் குறளனே தாலேலோ” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 44)

    திருமாலின்  உந்தியில் இருந்து பிறந்தமையால் பிரம்மனுக்குத் திருமால் தந்தை உறவாகும். அதே திருமால் கண்ணனாக அவதரித்த பொழுது பிரமன் ஆணிப்பொன்னால் சிறுதொட்டிலைத் தருகிறான். இந்திரனோ அழகான சதங்கையைத் தருகிறான். பரிசுப்பொருளைத் தந்துவிட்டு வெகுதூரத்திலும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் நடுவில் நின்றான் என்று கூறித் தாலாட்டுப் பாடிக் கண்ணனைத் தூங்கவைக்க முயல்கிறார்.

         சிவந்த திருக்கண்களை உடைய கருமேகம் போன்ற கண்ணனே, உனக்கு அனைத்து தேவர்களும் சங்கில் உயர்ந்ததாகத் திகழும் வலம்புரியையும், உனது திருவடிக்குச் சதங்கைகளையும், அழகிய முன்சரிவளையும், தங்க அரைஞாண் கயிறும், திருமார்பில் அணிய நாணும் அனுப்பியுள்ளனர் என்று பரிசுப்பொருட்களின் பட்டியலைக் குழந்தைக்கண்ணனிடம் கூறிவிட்டுத் தாலாட்டுப் பாடுகின்றார் பெரியாழ்வார். இதனை,

    “சங்கின்  வலம்புரியம் சேவடிக் கிண்கிணியும்
    அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
    அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
    செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!”     (நாலாயிர திவ்யப்  பிரபந்தம் – 47)

    என்ற பாசுரத்தில் அறியலாம். அத்துடன் கண்ணனுக்கு வந்த பரிசுப் பொருட்கள் பற்றிப் பெரியாழ்வார் கூறும் கற்பனை வளத்தைப் பின்வரும் பட்டியல்  பகுதியில் காணலாம்.

    பெரியாழ்வாரின் கற்பனையும் ஆழ்ந்த அன்பும்

    வ.எண் பரிசுப் பொருட்கள் பரிசுவழங்கியவா்
    1. ஆணிப்பொன் தொட்டில் பிரம்மன்
    2. இடைச் சுரிகை ஈசன்
    3. சதங்கை இந்திரன்
    4. தேவர்கள் வலம்புரிச்சங்கு,சதங்கை,அரைஞாண் கயிறு,

    முன்சரிவளை

    5. குபேரன் ஐம்படைத்தாலி,ஆரம்
    6 வருணன் முத்தாரம்,சங்குவளை
    7 திருமகள் துளசிமாலை
    8 பூமாதேவி கச்சை,உடைவாள், தங்கவளையல், நவரத்தினச்சுட்டி, தங்கப்பூ
    9 பார்வதி வாசனைப்பொருட்கள்,

    கண்ணுக்கு மை, சிந்துரம்

    இத்தகையப் பரிசுப் பொருட்கள் பற்றிய விளக்கத்தில் பட்டா்பிரானின் கற்பனையும் பெருமாள்மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பும் புலப்படுகின்றது. எவர் இத்தகைய பத்து பாசுரங்களை பக்தியோடு படிப்பரோ அவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

    கருமலைக்குட்டியின் தளர்நடையில் மகிழும் விஷ்ணுசித்தர்:

         பாதங்களை முழுவதும் தரையில் பதிக்காமல் தத்தி நடைபயிலும் குழந்தையின் தளர்நடையில் யசோதை மனம்விரும்பி மூழ்கி காணப்படுகிறாள். ஓரடி எட்டு வைத்து நடைபயிலும் குழந்தை, தான் சாதித்த மனவுணர்வினால் பெரும் புன்னகையை வெளிப்படுத்தும். இதில் மனம் மகிழ்ந்து யசோதை இருப்பதை,

    “முன்நல் ஓர் வெள்ளிப் பெருமலைக்
    குட்டன் “மொடு மொடு” விரைந்தோட
    பின்னைத்  தொடர்ந்ததோர் கருமலைக்
    குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்
    பன்னியுலகம் பரவிஓ வாப்
    புகழ் பலதேவன் என்னும்
    தன் நம்பியோடப் பின்கூடச்
    செல்வான் தளர்நடை நடவானோ!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 90)

    என்ற பாசுரத்தில் காணலாம். வெண்மலைக்குட்டி போல பலராமன் முன்னே ஓட, கருமலைக்குட்டி போன்ற கிருஷ்ணன் பின்னே தளர்நடை மிளிர உடன்பிறந்தோனைத் துரத்துகிறான். இத்தகைய நடையழகை  யசோதையுடன் பெரியாழ்வாரும் மானசீகமாகக் கண்டு மனம்மகிழ்கின்ற பகுதியே மேற்கூறிய பகுதியாகும்.

    மேலும், எம்பெருமானது தளர்நடை எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது மன விருப்பத்தினை எடுத்துரைக்கிறார். பகைவர்களை வென்று, அவர்களின் தலையின் மேல் தளர்நடை எடுத்து நீ நடக்க வேண்டும். அந்நடை நடவானோ? என்று கேட்பதில்  கண்ணன் அவதாரமூர்த்தி என்பதை உணர்த்திச் செல்கிறார். இதனை,

    “தன்னைப் பெற்றோற்குத் தன்வா யமுதம்தந்
    தென்னைத் தளிர்ப்பிக்கின்றான்
    தன்னெற்று மாற்றலர் தலைகள்
    மீதெ தளர் நடை நடவானோ!”   (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 89)
    என்ற பாசுரத்தால் அறியலாம். கண்ணனை நோக்கி நடவானோ? எனத் தனது வினாவினைக் கேட்பதன் வாயிலாகக் கண்ணன் அவதராமூர்த்தி என்பதையே கூறிச்செல்கிறார். 

    குழந்தைப் பராமரிப்பில் பெரியாழ்வார் உள்ளம்: 

         பெரியாழ்வாரின் பாசுரங்களில் காணலாகும் சொல்லாட்சியில் ஓர் அன்னையின் கவலையும், ஆதங்கமும், உண்மையான அன்பு மிகுதியும் மிளிர்கின்றன. ஓர் ஆண்மகனால் குழந்தைப் பராமரிப்புச் செயல்களாகிய நீராட்டுதல், பூச்சூடுதல், அணிகலன்கள் அணிவித்து அலங்கரித்தல், தூங்கச் செய்தல் போன்ற பணிகளைச் சிறப்பாக, அன்பாகச் செய்ய இயலுமா? என்பதைத் தனது நுட்பமான உணர்ச்சிகளால், நளினமான மன உணர்வுகளால் தன்னை யசோதையாகப் பாவித்து மிகச் சிறப்பாக, யதார்த்தம் புலப்படும் வகையில் பாசுரங்களைப் படைத்துச் செல்கிறார் பெரியாழ்வார்.

    “கறந்தநற் பாலும் தயிரும் கடைந்தஉறிமேல் வைத்த வெண்ணெய்
    பிறந்ததுவே முதலாகப் பெற்றுஅறியேன் எம்பிரானே
    சிறந்த நற்றாய் அலர்தூற்றும் என்பதனால் பிறா்முன்னே
    மறந்தும் உரையாட மாட்டேன்! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் -158)

    என்ற பாசுரத்தில் முழுமையாக ஒரு தாயின் மனஉணர்வுகளோடு கண்ணனிடம் உரையாடும் பெரியாழ்வாரைக் காண இயலுகின்றது. கண்ணா! நீ பிறந்தநாள் முதற்கொண்டு கறந்த பாலையும் கட்டித்தயிரையும் உறியில் வைத்த வெண்ணெயையும் ஒருசேர நான் ஒருபொழுதும் பார்க்கவில்லை. நான் உனக்குச் சிறந்ததாயாக இருந்து நீ செய்த தீம்புகளை மற்றவர்முன் மறந்தும் பேசமாட்டேன்! என்று உறுதிமொழி தருகிறாள். ஆக, ”கண்ணா மஞ்சனம் ஆட வருவாயாக!” என்று தாய்மையுடன் அழைக்கிறார் பெரியாழ்வார்.

         நீராடும் முறைமைப்பற்றிக் கூறுகையில் குளிர்ச்சிக்காக நெல்லிக்காய் இட்ட நீரை நீராடுதலும், உடலுக்குப் பாதுகாப்பாக மஞ்சள் பயன்படுத்திய முறைமையையும் காண முடிகின்றது.

    “காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில பூரித்து வைத்தேன்
    வாய்த்த புகழ்மணி வண்ணா! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 154)

    என்பதிலும்,

    “மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன், அழகனே! நீராட வாராய்.” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம் -155)

    என்ற பகுதியிலும், குறும்புகள் செய்யும் மாயக்கண்ணனை நீராட வருமாறு  அழைப்பதையும், நீராடப் பயன்படுத்திய பொருட்கள் பற்றியும் காணமுடிகின்றது. இன்றும் கோயில்களில் திருமாலின் திருமஞ்சனத்தின் போது பெரியாழ்வார் இயற்றிய நீராட அழைக்கும் பாசுரங்களைப் பாடுவது வழக்கமாகும்.

     காப்பிடும் வழக்கு:

         பெரியாழ்வார் தம்மைத் தாயாகவும், யசோதையாகவும், ஆயர்பாடியின் ஆய்ச்சியாகவும்,  செவிலித் தாயாகவும், பல தாயர்களின் கூற்றுகளில்  தமது பாசுரங்கள் அனைத்தையும் அமைத்துள்ளார். பக்திமை உணர்வின் பெட்டகமாக அன்பின் களஞ்சியமாகத் திகழும் இப்பாசுரங்கள் தாய் சேய் பாவத்திற்கு நல்லதோர் சான்றாகத் திகழ்கின்றது. இப்பகுதியில் காப்பிடல் (திருஷ்டி கழித்தல்) என்கின்ற பகுதி தாய்மையின் ஆழ்அன்பின் பதிவாகத் திகழ்கின்றது.

         கண்ணனின் அழகினைக் கண்டு, குறும்புகளைக் கண்டு கண்ணேறு வராதபடி காப்பிட வேண்டும் என்று யசோதை எண்ணுகிறாள். குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாகக் கண்ணேறு  கழித்தல் செய்வர். ஏனெனில் சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு. அதன்படியே யசோதை கண்ணனுக்குக் கண்ணேறு படாமல் இருக்கவும் அந்திப்பொழுதில் தீயசக்திகள்  நெருங்காமல் இருக்கவும் கண்ணனைக் காப்பிட  அழைக்கிறாள்.

    “மன்றில் நில்லேல். அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்!
    நன்று கண்டாய் என்றன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்”     (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 193)

    என்ற அடிகளில் சந்திவேளையில் கெட்ட தேவதைகள் நாற்சந்தியில் நிற்கும். அதனால் கண்ணனுக்கு ஏதேனும் துன்பம் உண்டாகுமோ என்று யசோதை அஞ்சும் உள்ளத்தைக் காணமுடிகின்றது.

         மேலும் அந்திப்பொழுதில் விளக்கேற்றி அந்தணர்கள் சங்கிலே நீர் கொண்டு மந்திரம் கூறிக் காப்பிடும் வழக்கு உண்டு என்பதைப் பின் வரும் பாசுர அடிகளில் காணலாம்.

    “இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
     டெழில் மறையோர் வந்து நின்றார்
    தருக்கேல்நம் பிசந்தி நின்று
    தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
    திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
    தேசுடை வெள்ளறை நின்றாய்
    உருக்காட்டு மந்தி விளக்கின்
    றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 200)

    இங்கு யசோதையின் புலம்பல்மொழிகள் பதிவாகியுள்ளன. ”வேதம்கூறிக் கொண்டு நல்ல நீரை சங்கிலே ஏந்திக்கொண்டு வரும் பிராமணர்கள் கண்ணா உனக்கு இரட்சையிட வந்துள்ளார்கள். ஆனால்  நீயோ நாற்சந்தியிலே நின்று கொண்டிருக்கிறாய். அழகிய இரட்சையை உனக்கு இட, உன் வடிவத்தைக் காட்டும் அந்தி விளக்கை ஒளியுடன் நான் ஏற்றுவேன் என்றும் அதைக் காண விரைந்து வருவாயாக!” என்றும் யசோதை அழைக்கிறாள்.பண்டைக்கால காப்பிடும் வழக்கு முறைமைகளையும் இங்கு அறிய இயலுகின்றது.

         இவ்வாறாக, தாய்பாவனை என்ற பகுதியில் அவதார நாயகனுக்குத் தமிழகக்  குழந்தையின் வளர்ப்புமுறையை ஏற்றிக்கூறும் பொழுது பல்வேறு வழிமுறைமைகளைப் பதிவுசெய்துள்ளார் பெரியாழ்வார். தமிழக மக்களின் குழந்தை தொடர்பான காதுகுத்தல், தொட்டிலிடுதல், குழந்தையின் உணவினைத் தேர்ந்தெடுத்தல், யானைத்தந்தத்தால் செய்த சீப்பால் குழல்வாருதல்,  பூச்சூடல் போன்ற இன்னும் பல தரவுகளைப் பதிவுகளாக்கிப் பாசுரத்திற்குப் பொலிவும், படிக்கும் அடியவர்களுக்கு நெகிழ்வும், ஈடுபாடும் தோன்றும் வகையில் பாசுரங்கள் யாவற்றையும் சிறப்புடன் அமைந்துள்ளார்

    ***** 

    முனைவர் நா.கவிதா,
    உதவிப்பேராசிரயர், தமிழ்த்துறை,
    எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி,
    தன்னாட்சி,
    சிவகாசி.

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(144)

     

    செண்பக ஜெகதீசன்

    நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை

    நாணா லுயிர்மருட்டி யற்று.

           –திருக்குறள் –1020(நாணுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    செய்யக் கூடாததைச் செய்ய

    நாணும் குணம்

    இதயத்தில் இல்லாதவரின்

    உயிர் இயக்கம்,

    மரபொம்மையைக் கயிற்றில் கட்டி

    உயிருள்ளதுபோல் இயக்கி

    ஏய்த்தல் போன்றதே…!

     

    குறும்பாவில்…

     

    உள்ளத்தில் நாணமில்லாதவரின் உயிரியக்கம்,

    கயிற்றில் கட்டி மரபொம்மையை

    உயிருள்ளதாய் இயக்குதல் ஒப்பதே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    செய்யத் தகாதன செய்வதற்கே

         செயலில் உளத்தில் நாணமிலார்

    உய்யும் உலக வாழ்வினிலே

         உலவித் திரியும் இயக்கமது,

    பொய்யாய் இயக்கப் பொம்மையதைப்

       பிடித்துக் கட்டி கயிற்றாலே

    மெய்யாய் இயக்கும் இயக்கம்போல்

      மேதினி யதனில் இழுக்காமே…!

     

    லிமரைக்கூ…

     

    தகாதவை செய்ய நாணாதார் வாழ்வு,

    மரப்பொம்மையை கயிற்றில் கட்டி இயக்குதல்போல்

    ஆகுமே அகில வாழ்வில் தாழ்வு…!

     

    கிராமிய பாணியில்…

     

    வெக்கப்படு வெக்கப்படு

    மனசார வெக்கப்படு

    கெட்டதுசெய்ய வெக்கப்படு..

     

    வாழ்க்கயில இதுக்கு

    வெக்கப்படாதவன் ஆட்டமெல்லாம்

    வெத்தாட்டமாப் போயிடுமே,

    மரப்பொம்மய கயத்திலகட்டி

    மனம்போல ஆட்டுறமாதிரி

    மதிப்பில்லாமப் போயிடுமே..

     

    அதால,

    வெக்கப்படு வெக்கப்படு

    மனசார வெக்கப்படு

    கெட்டதுசெய்ய வெக்கப்படு…!

     

     

    Share
  • மாசுக்கட்டுப்பாடு

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஏழாவது நாளாக இன்றும் நம் இந்தியத் தலைநகர் தில்லியில் முன் எப்போதும் இல்லாததைவிட காற்று மாசுப்பட்டு, அடர்ந்த புகைமூட்டமாக சுவாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தில்லியில் நடக்கவிருந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள் முதல் 10 நாட்களுக்கு, மெட்ரோ தளங்கள் உள்பட, கட்டிட இடிப்பு நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகள், டீசல் இயந்திரங்கள் பயன்பாடு போன்றவைகள் அவசரகால பயன்பாடுகள் தவிர மற்றவைகளுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நலத்துறை மூலம் சாலைகள் முழுவதையும் பரவலாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதோடு, தெருவோர கட்டிடக் கழிவுகளையும் நீக்கம் செய்யவும் வழிநடத்தப்பட்டுள்ளது. செயற்கை மழை மூலம் சுத்தம் செய்யும் சாத்தியக்கூறுகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மூலம் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குப்பைக்கூளங்களை எரிப்பதை தடுத்து நிறுத்தி, மேற்கொண்டு மாசு ஏற்படுத்தாதவாறு கண்காணிக்க அதிகாரிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பனி மூட்டம்போல் தலை நகர் எங்கும் புகை மூட்டம். சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கிக் குடிப்பது போன்று சுவாசிக்க காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழல் ஏற்படும் அவல நிலை வந்துள்ளது. இன்று எவரையும் கைகாட்ட விரும்பவில்லை என்று கூறினாலும், உடனடியாக களையப்பட வேண்டிய பிரச்சனை என்று தில்லி முதல்வர் ஏற்கனவே பலமுறை எடுத்துக்கூறியும், இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.

    தில்லி அரசு முன்பு டீசல் வாகனங்களை தில்லிக்குள் அனுமதியை இரத்து செய்திருந்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் மீண்டும் அனுமதி அளித்தது மூலம் மாசுக் கட்டுப்பாட்டிற்கு பங்கம் ஏற்படுத்திவிட்டது. அண்டை மாநிலங்களாகிய பஞ்சாப் , ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் மிக அதிகமாக புகை மண்டலம் தில்லியை சூழ்கின்றன. கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிப்பதுபோல் விவசாயக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் விவாசாயிகளின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் பெருகும். தில்லியைச் சுற்றிலும் நொய்டா போன்ற பகுதிகளிலிருந்து வெளியேறும் நீரைச் சுத்தீகரித்து வெளியேற்றவேண்டும் என்று ஆணை இருப்பதுபோன்று, புகை மண்டலங்களை ஏற்படுத்தக்கூடிய ஆலைக் கழிவுகளையும் சுத்தீகரிப்பு செய்யும்வண்ணம் முறைப்படுத்தலாம். 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்திற்கு தகுதியற்றதாகத் தடை செய்வதால் தொழில் வளமும் பெருகுவதோடு, மக்கள் ஆரோக்கியமாக வாழத் தகுதியுடைய நகராகவும் மாறலாம். ஆஸ்துமா, நுரையீரல் புற்று நோய், போன்ற நோய்களால் இந்தியாவில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பும் ஏற்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. தில்லியில் மட்டுமன்றி இந்நிலை ஏனைய பெரு நகரங்களாகிய மும்பாய், பெங்களூரு, கல்கத்தா போன்றவைகளையும் தாக்கக்கூடிய அபாயமும் வரலாம். பெரு நகரங்களைத் தவிர்த்து தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது என்பதும் வருத்தத்திற்குரிய விசயம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161106 -New forever -lores

    “….”குத்துக்கால் இட்டு குழலூதும் கண்ணனை
    நித்தம் கேசவ் நமக்களிப்பு; -சித்தத்தில்
    எண்ணமே இல்லாது ஏரார்ந்த கண்ணியின்
    கண்ணனை நெஞ்சே கருது “….கிரேசி மோகன் ….!

    Share
  • இந்தப் பூமி முழுவதும் விடியும் வரை………………..!

    நவம்பர்7: புரட்சியின் நூற்றாண்டு

    எஸ் வி வேணுகோபாலன்

    இருபத்தைந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும்…முதன்முதல் அந்த வித்தியாசமான பல்லவியை ஓர் அற்புத இசைப் பாடகன் குரலில் கேட்டு! ‘எங்களைத் தெரியலையா, இந்த இசையைப் புரியலையா?’ என்று கேள்விகளைத் தொடுத்துத் தொடங்கும் அந்த உயிர்த்துடிப்பான பாடலைப் பின்னர் நமது பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி எப்போது எங்கு பாடும்போதும் அதே சிலிர்ப்போடு கேட்டுக் கொண்டிருக்கிறேன்…

    பரிணாமன் எழுதிய அந்தப் பாடலின் பயணம், பிறகு, ‘திங்கள் ஒளியினில் துயில்வோரே – தினம் சூரியத் தீயினில் உழைப்போரே ….’ என்று மேலெழுந்து வருமிடம் உள்ளத்தைத் தீண்டுகையில் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும். பாட்டாளி வர்க்கத்திற்கான அச்சு அசலான குரலாக எழும் அந்தப் பாடல், சுரண்டலற்ற சமூகத்தைச் சமைப்பதற்கான தாகத்தை, சோசலிச உலகம் படைக்கப்பட்டதன் கொண்டாட்டத்தின் பின்னணியில் உரத்துப் பேசிச்செல்லும்.

    ak

    ஜார் எனும் அரக்கனை வேரறுத்த சம்மட்டி அரிவாள்கள், சரித்திர நரம்பு மண்டல மையத்தின் தத்துவ மருத்துவர்கள், ஃபாசிச இட்லரின் கூலிப்படைகளைப் பனி மலைமீதினில் வென்றவர்கள், பாட்டாளி ஆட்சியை முதன்முதல் மண்ணில் படைத்திட்ட புரட்சியியல் விஞ்ஞானிகள்….என்ற வரிகளில் எத்தனை எத்தனை ஆண்டு வரலாறும், போராட்டங்களும், மனிதகுல விடுதலைக்கான தியாகங்களும், தீரமிக்க புரட்சியின் வெற்றிக்களிப்பும் தெறிப்பதை மீண்டும் மனத்திரைக்குள் காண முடியும்.

    ak11917ம் ஆண்டு, உலகுக்கு முதன்முறை வேறுவகையில் உதயமானது. முதலாம் உலகப்போரின் ஆதாயங்களை ஏகாதிபத்திய உலகம் வெறிபிடித்த மிருகம் போல் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, போரின் காயங்களும், சேதங்களும், வாழ்வாதாரம் மேலும் மோசமாகிப்போன கோலங்களுமாக உலகெங்கும் உழைப்பாளி மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி இருந்த நேரமது. தாங்களே பகடைக்காய்கள். தங்களது நலனே பணயம் வைத்து ஆட்டம் நடத்தப்படுகிறது. எல்லா இழப்பின் வலியும் வேதனையும் தங்கள்மீதே சுமத்தப்படுகிறது என்ற கசப்பும், வெறுப்பும் தீயாகக் கனன்றெழுந்த இடங்களில், கொடியவன் ஜார் ஆண்ட ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் கூடுதல் தெளிவோடும், தீர்மானமான சிந்தையோடும் அறிவுற்றுத் தீவிழித்து எல்லாத் தடைகளையும் உதறித்தள்ளி முழங்கிப் புரட்சி என்ற பெருமுழக்கத்தோடு புறப்பட்டது. புரட்சியின் பிரசவத்தைப் பக்கத்திருந்து பார்த்துக்கொண்ட செவிலித்தாய் என்று வருணிக்கப்பட்டார் மாமேதை லெனின்.

    முதலாளித்துவச் சுரண்டல் உலகின் பல இடங்களிலும் வலுத்திருக்க, ரஷ்யாவில் எப்படி முதலில் வெடித்தது புரட்சி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் எந்த இடத்தில் கண்ணி வலுவற்றிருந்ததோ அங்கே தொடுக்கப்பட்ட சம்மட்டி அடி, விடுதலையைப் பெற்றுத் தந்தது என்று பதில் அளித்தார் லெனின்.

    வீழ்த்தப்பட்ட இறுதி ஜார் மன்னன், ரஷ்யப் பேரரசின் வளமை மிக்க பூமிப்பகுதியின் 80 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்தான். அதுபோக, சுமார் 28 ஆயிரம் பெரும் பண்ணையார்கள் வசம், ஒன்றரை கோடி ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்தது. நிலச்சுவான்தாரர்கள் ஆதிக்கம் கொடிகட்டி இருந்த ரஷ்யாவில் ஏகபோகங்களின் கையிருப்பில் இருந்த சுரங்கத் தொழில்களிலும், இதர ஆலைகளிலும் முதலாளித்துவம் நிலைபெறத் தொடங்கி இருந்தாலும் அய்ரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியே இருந்தது. எனவேதான், இறுதி அடியை உறுதியாக அடித்து வெற்றி பெற முடிந்தது என்றனர் பாட்டாளி வர்க்க தத்துவ மேதைகள்.

    ak2

    முதலாவதாக நடைபெற்ற முதலாளித்துவ புரட்சி, பிப்ரவரி 1917ல் வெற்றி பெற்று அமையப்பெற்ற அரசின் தன்மை, பாட்டாளிவர்க்கத்தின் கோபத்தை மேலும் விசிறி விட்டது. எனவே அது வேகமாக முன்னேறி, கிராமங்களில் வேளாண் உழைப்பில் ஈடுபட்டிருந்தோரையும் விழிப்புணர்வும், ஆவேசமும் கொள்ளவைத்தது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்த ரஷ்ய பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்று, விவசாயி வர்க்கத்தையும் இணைத்துக்கொண்டு நடத்திய போல்ஷெவிக் புரட்சி, இந்த மண்ணில் மானுட நேயம், மனிதம் இவற்றின் பொருளை உலகுக்கே படிப்பினை ஆக்கிக் கொடுத்தது.

    போல்ஷெவிக் கட்சி பின்னர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்டது. எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்ற பிரகடனத்தை போல்ஷெவிக்குகள் அறிவித்தனர். அந்நாளைய ரஷ்ய காலண்டர் படி, அக்டோபர் 25 (இப்போதைய கணக்குப்படி நவம்பர் 7) அன்று புரட்சிகர சக்திகள் ஜார் பேரரசனின் மொத்தப் பகுதிகளிலும் செஞ்சேனையின் கட்டுக்குள் கொணர்ந்து, ஆட்சிப்பொறுப்பை ஏற்றன. மக்கள் பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் கமிசார்கள் அவையின் தலைமையில் அரசு அமைந்தது.

    நிலம், சமாதானம், ரொட்டி என்ற முழக்கத்தின்கீழ் மக்களைத் திரட்டிய போல்ஷெவிக் புரட்சியில் அமையப்பெற்ற அரசு, முதல் கடமையாக, நிலக்குவியலை மக்கள் உடமை ஆக்கி, உள்ளூர் குழுக்கள், விவசாய சோவியத் குழுக்கள் வசம் ஒப்படைத்தது. பின்னர் கூட்டுப்பண்ணை வேளாண்மை நடைபெற கால்கோள் இடப்பட்டது.

    எல்லோருக்குமான கட்டாய இலவசக் கல்வி, உயர் கல்வி, வேலை வாய்ப்பு, இலவச மருத்துவ சுகாதார பாதுகாப்பு அனைத்தையும் யு எஸ் எஸ் ஆர் என்று அமைக்கப்பட்ட ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசு நடைமுறைப்படுத்தியது. தேசிய இனங்களின் சிறைச்சாலை என்று வருணிக்கப்பட்ட ஜாரின் ரஷ்யா இருந்த இடத்தில், மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தோடு அன்பு கலந்த ஒன்றியத்தைப் படைத்தனர் புரட்சியியல் விஞ்ஞானிகள். பெண்களுக்கான வாக்குரிமையை சோவியத் ஒன்றியம் கொணர்ந்த பல்லாண்டுகளுக்குப் பிறகே அய்ரோப்பிய நாடுகள் அனுமதித்தன. (பிரிட்டனில் கூட 1928ல் தான் பெண்களுக்கான வாக்குரிமை சாத்தியமானது).

    மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்தியது புரட்சிகர சோவியத் அரசு. ‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ, மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ’ என்ற மகாகவியின் கேள்விகளுக்கு செயல்விளக்கமான பதிலைக் கொடுத்தது சோவியத் ஒன்றியம். அதனால் தான், ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டிடையினில் கண் வைத்தாள், ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி’ என்று எழுதினார் பாரதி. குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்ற அவரது கீதத்தின் மெய்ப்பாடு சோவியத் ரஷ்யா. தேசிய கவி ரவீந்திர நாத் தாகூர் நேரில் சென்று பார்த்து புளகாங்கிதம் அடைந்தார். இருளிலிருந்து ஒளிவெள்ளத்திற்கு லட்சக்கணக்கான மக்களை வழி நடத்திட முடியும் என்பதை என் கண்களால் நம்பமுடியாமல் கண்டு பெருமிதம் கொண்டேன் என்றார். கவி நஜ்ருல் இஸ்லாம் உள்ளிட்ட பலரும் பரவசமடைந்தனர். தந்தை பெரியாரும் சோவியத் உலகை நேரில் சென்று பொதுவுடைமையின் வெற்றியைக் கண்ணாரக் கண்டு திரும்பினார். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் முதல் எம் ஆர் ராதா வரை நமது தமிழகக் கலையுலகின் அரிய படைப்பாளிகள் ஈர்க்கப்பட்டனர்.

    ஆனால், இத்தனையும் அத்தனை இலகுவாக நடந்துவிட வில்லை. புரட்சியின் வெற்றியை அடுத்து, ஏகாதிபத்திய சக்திகள் வெளியிலிருந்து தூண்டிட உருவான உள்ளூர் கலகங்கள் பெரிய சவாலாக இருக்க, நான்கு ஆண்டுகளில் எதிர்ப்புரட்சி சக்திகள் ஒடுக்கி வீழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த ஃபாசிச முசோலினியையும், நாசிச இட்லரையும் வீழ்த்தியதில் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய செஞ்சேனையின் துணிவுமிக்க போரும், அளவிட முடியாத எண்ணிக்கையிலான மக்களின் தியாகமும் ஆற்றிய பங்களிப்பு விவரிக்க முடியாதது.

    சோவியத் புரட்சி அய்ரோப்பிய நாடுகளிலும் விடுதலையை சாத்தியமாக்கியது. சீனப்புரட்சிக்கு ஆதர்சமானது. இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் அர்ப்பணிப்போடு போராடிக்கொண்டிருந்த போராளிகளுக்கு நம்பிக்கை தீபமாக விளங்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோசலிஸ்டுகள் உருவாகிப் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கம் மேலும் ஆழமாக வேர்விடவும், இரண்டாம் உலகப்போர் முடிவில் கிடைத்த எழுச்சியின் தொடர்ச்சியாக உழைப்பாளி மக்களைத் திரட்டி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டுவரவும் சோவியத் ஒன்றியத்தின் துடிப்புமிக்க இயக்கம் பேரெழுச்சியாக அமைந்தது.

    கல்வியறிவு, பண்பாட்டு வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு, விண்வெளி சாதனைகள், வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியில் அசாத்திய இலக்குகளை எட்டியது என சோவியத் ஒன்றியம் சாதித்தவை முதலாளித்துவ வல்லுனர்களாலும் புறந்தள்ள முடியாதவை.

    ஆனாலும், எண்பதுகளின் இறுதியில் மிகயீல் கோர்பச்சேவ் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காலத்தில் வேகமாக நடைபெற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில், சோவியத் ஒன்றியம் சிதறுண்டது. சோசலிசம் நழுவவிடப்பட்டது. பொதுவுடைமை தத்துவ நடைமுறைப்படுத்தலில் நீண்ட கால இடைவெளியில் ஏற்பட்ட தவறுகள், பிறழ்வுகள், பலவீனங்கள் இவற்றின் விளைவாக, ஏகாதிபத்திய சக்திகளின் பண்பாட்டு ஊடுருவலும், அரசியல் சதிகளும், இராணுவப் பொருளாதாரத்திற்கு பெரும்பான்மை நிதியைச் செலவிடத் தூண்டவுமாக வசதியாக அமைந்துபோனது. வாராது போல வந்த மாமணியை மனிதகுலம் தோற்றது இப்படித்தான் நடந்தது.

    ak3

    முதலாளித்துவ இதழான டைம் ஏட்டில் அண்மையில் வெளியாகி இருக்கும் கட்டுரை, சோவியத் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், முதலாளித்துவ நாடுகள் தங்களால் முடியாதனவற்றை ஒரு சோசலிச அரசு சாதித்துக் கொண்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வகுத்த திட்டங்களைப் பற்றிப் பேசுகிறது. சோவியத் சாதனைகளை நேரடியான முறையில் போற்றுகிறது.

    இன்று ஏகாதிபத்திய அமெரிக்காவில், 99 சதவீத மக்கள், ஒரு சதவீத பெருஞ்செல்வந்தர்கள் நலனுக்காகச் சுரண்டப்படுவதா என்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சந்தைப் பொருளாதாரத்தின் சாபத்தில் சிக்கிய பல நாடுகள் மாற்றுப் பொருளாதாரத்தை சிந்திக்கின்றன. நமது நாட்டிலும், தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பட்டு வருகின்றன. வறுமையில் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்ட விவசாய மக்களுக்கு மாற்று உலகு குறித்த நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் சோவியத் புரட்சியின் நூற்றாண்டு விடிகிறது.

    மக்ஸீம் கார்க்கி, ஆண்டன் செகாவ், டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ் ….என அற்புதமான இலக்கிய படைப்பாளிகள் மூட்டிய கனல் அது. எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை என்ற தத்துவ தரிசனம் அது. நவம்பர் புரட்சி, ஒரு நாட்டின் வெளிச்சமல்ல. புதிய உலகின் ஒட்டுமொத்த விடியலுக்கான கீதம் அது.

    ‘இந்த பூமி முழுவதும் விடியும் வரை….’என்றுதான், பரிணாமனின் அந்தப் பாடல் நிறைவு பெறுகிறது.

    ******************

    நன்றி: உழவன் உரிமை (நவம்பர் 2016 )

    Share
  • படக்கவிதைப் போட்டி – (85)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14923890_1136003453120519_745771355_o

    14632920_1115220431865488_7907781929998685268_nசாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 12.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • காவிரி புரக்கும் நாடு – 2

    -மேகலா இராமமூர்த்தி

    பொருநராற்றுப்படை, பாடலின் இறுதியில் காவிரி வளத்தைக் கவிபாட, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைக் காவியமாக்குதற்கென்றே எழுதப்பட்ட பட்டினப்பாலையோ (பட்டினம் என்றாலே அந்நாளில் காவிரிப்பூம்பட்டினத்தைத்தான் குறித்தது; இன்று பட்டணம் என்பது சென்னையைக் குறிப்பதுபோல்!) காவிரியின் தன்னேரிலாச் சிறப்பைப் பாடலின் தொடக்கத்திலேயே பாங்குறப் பகர்ந்துவிடுகின்றது.

    வசையற்ற வெண்மீனாகிய சுக்கிரன், தன் இருப்பிடமான வடதிசையிலிருந்து நீங்கித் தென்திசை சென்றாலும், (சுக்கிரன் தெற்கே சென்றால் மழைவளம் குறையும் என்பது அன்றைய மக்களின் நம்பிக்கை.) மழைத்துளியையே உணவாய்க் கொள்ளும் வானம்பாடி, மழையின்றித் தேம்புமாறு வான் பொய்த்தாலும், மலைத்தலையிலிருந்து புறப்பட்டுப் புகாருக்குள் புகுந்துவரும் காவிரிப்பாவை ’தான்’ பொய்ப்பதில்லை. அவள்தரும் அரும்புனல் எங்கும் பரந்திருக்க, புகாருக்கு என்ன குறை? வயல்களெல்லாம் பொன்கொழிக்கத்தான் ஏது தடை? என்று காவிரியின் புகழ்பாடுகின்றது ஒப்பிலாப் புலவர் உருத்திரங்கண்ணனாரின் கட்டிக்கரும்பனைய பட்டினப்பாலை.  

    ”வசையில்புகழ்  வயங்குவெண்மீன்
    திசைதிரிந்து தெற்கேகினும்
    தற்பாடிய தளியுணவிற்
    புள்தேம்பப்  புயன்மாறி
    வான்பொய்ப்பினும் தான்பொய்யா
    மலைத்தலைய கடற்காவிரி
    புனல்பரந்து  
    பொன்கொழிக்கும்…”  (பட்டின: 1-7)

    %e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8dபுகார் நகரில் எப்போதும் முப்போகம் விளையும் வயல்களின் பச்சைப்பசேல் காட்சி காண்போரைக் கவர்ந்திழுக்கின்றது. அவற்றின் அருகிலுள்ள கொட்டில்களில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுவதால் எழும் நன்மணம் நாசியைத் துளைக்கிறது! பாகு காய்ச்சுவதால் உருவாகும் கரும்புகை பட்டு, வயல்களில் முகமலர்ந்து சிரிக்கும் கள்கமழ் நெய்தலின் மென்மலர்கள் வாடுகின்றன.

    அப்போது, கம்பீரநடைபோட்டபடி கழனியருகே வருகின்றார் ஓர் எருமைக் குழவியார் (எருமைக்கன்று); சுற்றுமுற்றும் பார்க்கிறார். ஆளரவமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வயலில் புயலென இறங்கி நெற்கதிர்களை வயிறுபுடைக்கத் தின்கிறார். பிறகு? கண்ணைச்சுற்றிக்கொண்டு உறக்கம் வருகின்றது அவருக்கு! ’உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு’ எனும்போது எருமையார் எம்மாத்திரம்! தள்ளாடியபடியே வயலைவிட்டு வெளியே வருகின்ற அவருடைய கண்கள் எதையோ தேடுகின்றன. ஆ… கண்டுபிடித்துவிட்டார்! அது வேறொன்றுமில்லை…விளைந்தநெல்லின் குவியலால் நெடிதுயர்ந்துநிற்கும் நெற்கூடுதான் அது! அதனருகில் வந்தவர் நீண்டிருந்த அதன்நிழலில் நிம்மதியாய்ப் படுத்துறங்கத் தொடங்கிவிட்டார். நிழலில் உறங்கும் இயல்புடையது எருமை என்பதை ’நிழலிடை உறங்கும் மேதி’ என்று கம்பரும் ’இராமகாதை’யில் பதிவுசெய்திருப்பதை இங்கே ஒப்பிட்டு மகிழலாம். காவிரிப்பூம்பட்டினத்தில் எருமையாய்ப் பிறக்கவும் பேறுபெற்றிருக்க வேண்டும் போலும்!

    ”…விளைவறா  வியன்கழனிக்
    கார்க்கரும்பின்  கமழாலைத்
    தீத்தெறுவிற்  கவின்வாடி
    நீர்ச்செறுவின்  
    நீள்நெய்தற்
    பூச்சாம்பும்  புலத்தாங்கண்
    காய்ச்செந்நெற்  கதிரருந்து
    மோட்டெருமை  முழுக்குழவி
    கூட்டுநிழல்  துயில்வதியும்…”
     (பட்டின: 8-15) என்று நாம் மேற்கண்ட காட்சிகளைச் சுவையோடு விளக்கிச் செல்கின்றது பட்டினப்பாலை.

    கழனிகளின் கண்கொள்ளாக்காட்சியை இதுவரை நமக்கு அற்புதமாய் விளக்கிவந்த கண்ணனார், அடுத்து நம்மை அழைத்துச்செல்வதோ புகார்நகரச் செல்வந்தர் ஒருவரின் அகன்றவீட்டின் முற்றத்துக்கு!

    அந்த வளமனையின் நெடியமுற்றத்தில் அறுவடைசெய்த நெல் காயவைக்கப்பட்டிருக்கின்றது. விதவிதமாய்ப் பொன்னணிகள் அணிந்த எழில்மிகு பெண்ணொருத்தி அங்கே நெல்லைக் காத்தபடி அமர்ந்திருக்கின்றாள். அப்போது, காயும் நெல்லைக் கவர்ந்துசெல்ல விரும்பிச் சில கோழிகள் மெதுமெதுவாய் வீட்டினுள்ளே வரக்காண்கிறோம். அவற்றைக் கண்டதுதான் தாமதம்…அந்த மாதரசி தன் காதில் அசைந்தாடிக்கொண்டிருந்த பொன்குழையைக் (இற்றை நாளைய ஜிமிக்கி) கழற்றி வீசினாள். அதுகண்ட கோழிகள் பயங்கொண்டு அவ்விடத்தைவிட்டுப் பறந்தன. குழையோ தாழ்வாரத்தில் சென்று வீழ்ந்துகிடந்தது. அந்தக்குழையை எடுத்து அவ்வழகி மீண்டும் அணிந்துகொள்வாள் என்று நாம் எதிர்பார்த்திருக்க, அவளோ அதனைச் சற்றும் சட்டைசெய்யாது தன் இருப்பிடத்திலேயே அசையாது அமர்ந்திருக்கின்றாள்!

    அவ்வேளையில், பொன்னாலான கிண்கிணிகள் இன்னொலியெழுப்ப, ஓர் அழகுச்சிறுவன் நடைவண்டி ஓட்டியபடி அத்தாழ்வாரத்தில் வருகின்றான். திடீரென்று அவன் நடைவண்டியின் வேகம் தடைப்பட்டது. குனிந்து பார்க்கிறான்; தன் தமக்கையின் காதணி அங்கே வேகத்தடையாய் மாறியிருப்பது கண்டு அதனை அப்புறப்படுத்துகிறான். இதையெல்லாம் பார்த்திருக்கும் நாம் அவர்களின் வளவாழ்வுகண்டு வியந்துதான் போகிறோம்!

    ”…சுடர்நுதல் மடநோக்கின்
    நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
    கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
    பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
    முக்காற் சிறுதேர் முன்வழி
    விலக்கும்…(பட்டின: 21-25)

    அவ்வீட்டிலிருந்து புறப்படும் நமக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் ”செல்வர்கள் மட்டுந்தான் வாழ்கிறார்களோ…வறிஞர்களே இல்லையோ?” என்றோர் ஐயம் எழத்தான் செய்கிறது. ”இல்லை…இல்லை வறிஞர்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள்” என்பதைச் சற்றுத்தூரத்தில் நம் கண்ணிற்படும் ’அறக்கூழ்ச்சாலை’ ஒன்று மெய்ப்பிக்கின்றது.

    அறக்கூழ்ச்சாலை என்ற பெயர் புழக்கத்திலில்லாத புதிய ஒன்றாக ஒலிக்கின்றதா?

    இன்று ’அன்னசத்திரம்’ என்றும் ’தருமசாலை’ என்றும் வடமொழியில் நாம் வழங்கிவருகிறோமே அவற்றைத்தான் ’அறக்கூழ்ச்சாலை’ என்று அழகுத் தமிழில் அன்று அழைத்திருக்கின்றனர் நம் முன்னோர் என்பதை உரையாசிரியர்கள் வாயிலாய் அறிகின்றோம். நற்காரியங்கள் செய்து இம்மைக்குப் புகழும், மறுமைக்குப் புண்ணியமும் தேடவிரும்பிய புகார்நகரச் செல்வர்கள், அறக்கூழ்ச்சாலை நடத்தி வறியோரின் வயிற்றுப்பசியை விரட்டினர்.

    இதோ…அறக்கூழ்ச்சாலைக்கு வெகு அருகில் வந்துவிட்டோம்; உள்ளேசென்று அங்கு நடப்பதைக் கவனிப்போம்!

    அகன்ற வட்டில்களில் அங்கே சோறு பொங்கப்படுவதைப் பாருங்கள். சோறாக்கியபின் கவனத்தோடு கஞ்சிவடிக்கின்றனர் ’மடைவாலுவர்’. (சோறாகிவிட்டது என்று விசிலடித்து அழைக்க அன்று மின்சாரக் குக்கர் இல்லை என்பதை நினைவில் கொள்க!). வடித்த கஞ்சியோ தெருக்களிலெல்லாம் ஆறுபோலப் பரந்தொழுகுகின்றது. அந்தக் கஞ்சியாற்றில் நின்றபடி இரண்டு எருதுகள் பொருததாலே (சண்டையிட்டதாலே) அந்த ஆறு சேறாகிவிட்டது. ஆயினும், சிறிதுநேரத்தில் காய்கதிர்ச்செல்வனின் வெப்பத்தால் அது காய்ந்துவிட்டது. அடுத்து, அந்தத் தெருவழியே ஒரு தேர்வரக் காண்கிறோம். கடுகிவரும் அத்தேரின் ஓட்டத்தால், காய்ந்திருந்த கஞ்சியின் புழுதி எங்கும் பரந்தெழுந்து, அருகிலுள்ள மாடமாளிகைகளின் வெண்சுவர்களிலெல்லாம் படிந்து மாசூட்டிய காட்சியானது, ’வெண்ணீறணிந்த களிற்றின்’ தோற்றத்தையல்லவா ஒத்திருக்கின்றது!

    ”…திருத்துஞ்சுந்  திண்காப்பிற்
    புகழ்நிலைஇய மொழிவளர
    அறநிலைஇய அகனட்டிற்
    சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
    யாறுபோலப்  பரந்தொழுகி
    ஏறுபொரச் சேறாகித்
    தேரொடத்  துகள்கெழுமி
    நீறாடிய களிறுபோல
    வேறுபட்ட வினையோவத்து
    வெண்கோயில்
    மாசூட்டும்…” (பட்டின: 41-50)

    காவிரிப் பாசனத்தால் கழனிகள் முப்போகம் விளைவதும், செல்வமகளிர் நெல்லைக் காக்கப் பொன்னையே கழற்றி எறிவதும், காவிரிப்பூம்பட்டினத்தின் அட்டிற்சாலைகளில் சோறுவடித்த கஞ்சியானது ஆறாய்ப் பெருகியோடுவதும் நினைக்குந்தொறும் வியக்கவைப்பவை!

    (தொடரும்)

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (29)

    நிர்மலா ராகவன்

    பயிரை மேய்ந்த வேலி

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

    “அந்தப் பெண்ணின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட குரல் ஆசிரியர்களின் பொது அறையில் என்னெதிரில் வந்து அமர்ந்திருந்தவருடையது. ஐம்பதுக்கு மேற்பட்ட வயதையே தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பதினான்கு வயது மாணவிகளைத் தம் இச்சைக்குப் பணிய வைக்கத் தயங்காதவர் அவர்.

    `வதைக்கு உள்ளானால், உடனே எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிறரிடம் அதைப் பகிர்ந்துகொண்டு, அதை நிறுத்தும் வழியைப் பார்க்கவேண்டும்!’ என்று நான் வகுப்பில் எப்போதோ கூறியதை நினைவு வைத்துக்கொண்டு, இரண்டு மாணவிகள் என்னிடம் அவருடைய லீலைகளைத் தெரிவித்திருந்தனர்.

    நான் பள்ளிக்கூடத்தின் மேலிடத்துக்குப் புகார் செய்ததை அறிந்து, என்னை வசப்படுத்திக்கொள்ள நினைத்திருப்பார்!

    தான் செய்த தவறு சரிதான் என்று என்னை நம்ப வைக்க முயற்சி செய்கிறாரா? எனக்கு ஆத்திரம் பெருகியது. விருட்டென எழுந்து அப்பால் சென்றேன்.

    “இவள் மிகவும் ANTI-SOCIAL! பிறருடன் கலகலப்பாகப் பழகத் தெரியவில்லை,” என்று என்னைப்பற்றிய குற்றச்சாட்டை ஒருத்தியிடம் கூறியிருக்கிறார். எல்லாம், அது என் காதில் விழுந்து, நான் இளகிவிடுவேனோ என்ற நப்பாசைதான்!

    “இந்தமாதிரி மனிதரை என் நண்பர் என்று கூறிக்கொள்வதைவிட, நான் உம்மணாமூஞ்சியாகவே இருந்துவிட்டுப்போகிறேன்!” என்றேன், அலட்சியமாக.

    தான் செய்வது காதில் விழுந்தாலும், மற்றவர்கள், `பெண்கள் விரும்பித்தானே இப்படி செய்கிறார்!’ என்று அவரை ஆதரிக்க, அவர் வேறு பல முயற்சிகளைக் கையாண்டார். தினமும் ஏதாவது கேக் வகைகளோ, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களோ வாங்கிவந்து, தலைமை ஆசிரியையிடம் கொடுத்து, எல்லா ஆசிரியர்களுக்கும் விநியோகிக்கச் செய்வார்.

    என் முறை வந்ததும், நான் அதை வாங்க மறுத்துவிடுவேன். வற்புறுத்துவார்கள், ஒவ்வொரு நாளும். என் பதில் என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கும்: `NO THANKS’.

    விளையாட்டுத் தினத்தன்று மாணவ மாணவிகளுக்குப் பரிசுப்பொருட்கள் வாங்க நிறைய காசு கொடுத்தார். அது போதாதா, பிறரது கணிப்பில் அவர் உயர!

    அந்த சமயம், `பாலியல் வதை’ என்ற தலைப்பில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதாக அறிவித்திருந்தார்கள். ஒரு தினசரியின் சார்பில் நான் கலந்துகொண்டேன்.

    `ஒரு மாணவி தான் வதைப்படும்போது, அதை பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ தெரிவிக்க வேண்டும்,’ என்றாள் நிகழ்ச்சியை நடத்துபவள்.

    “ஆசிரியரே வதைத்தால்?’ என்னையுமறியாமல் என் குரல் எழும்பியது.

    என் குரலுக்கென ஒரு தனி மூளை உண்டு. பல சந்தர்ப்பங்களில், நானே எதிர்பாராமல், அது ஆக்ரோஷமாகக் கிளம்பிவிடும்.

    ஒரு பிடி கிடைத்த மகிழ்ச்சியுடன், என்னை நிறையக் கேள்வி கேட்டாள். பலமான வற்புறுத்தலுக்குப் பிறகு, எந்த மாநிலம் என்று மட்டும் சொன்னேன்.

    அடுத்த நாளே ஆரம்பித்தது தலைவலி. மேலதிகாரிகள் என்னை விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள்.
    “எதற்காக இப்படிச் செய்தீர்கள்?”

    “என் பேரக்குழந்தைகளுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடம் என்பது ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்!”

    “நல்லவேளை, என் குழந்தைகள் இருவரும் ஆண்கள்!” என்றான் ஒரு மடையன்.

    “இதைக் கேளுங்கள்!” என்று ஆரம்பித்து, எங்கள் பள்ளியில் ஒரு பையனிடம் மாடிப்படியிலேயே முறைகேடாக ஒரு தாற்காலிக ஆசிரியர் நடந்துகொண்டதை நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன்.
    அவர்கள் பதறிப்போனார்கள். உண்மையிலேயே எனக்கு அந்த ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. என்னிடம் கூறியதோ ஒரு ஆண். அவரையும் நான் விட்டுக்கொடுக்கவில்லை.

    “தொலைகாட்சிக்கு ஏன் போனீர்கள்? யாரிடமாவது சொல்லியிருக்கலாமே!”

    “பள்ளிக்கூடத்தில் இதுபற்றி நான் பலமுறை புகார் கொடுத்தும், ஒருவரும் எதுவும் செய்யவில்லை. அந்த மனிதருக்குப் பயந்து, சில பெண்கள் பள்ளிக்கூடத்துக்கே வருவதில்லை!” என்று பொங்கினேன். “ஆசிரியர் ஒருவர் அதெப்படி ஒரு பெண்ணைத் தனியாக அழைத்துப்போய், தகாத முறையில் நடக்கலாம்?”

    அவர்கள் சற்று அயர்ந்து போனார்கள்.

    “நீங்களும்தான் இப்போது தனியாக எங்கள் இருவருடன் இருக்கிறீர்கள்!” என்றான் இன்னொரு மடையன்.

    “நான் இங்கு — தலைமை ஆசிரியையின் அறைக்கு — வந்திருப்பது எல்லாருக்கும் தெரியும்,” என்று பதிலடி கொடுத்தேன்.

    அவர்கள் கேள்விக்கணையால் என்னை துளைத்ததைப் பொறுக்க முடியாது, “இங்கு தப்பு செய்தது நான் இல்லையே! என்னை ஏன் இப்படிப் போட்டு வாட்டுகிறீர்கள்?” என்றேன்.

    “எங்கள் கலாசாரத்தில் இதெல்லாம் தப்பே இல்லை, தெரியுமா?” என்றபோது, நான் பதிலே சொல்லவில்லை. வெறித்தபடியிருந்தேன்.

    சம்பந்தப்பட்ட ஆசிரியரும் பெண்ணும் ஓரினம். நான் வேற்றினத்தவள். அதுதான் அவர்களுக்கு ஆத்திரம், `இவள் என்ன நம்மைக் காட்டிக்கொடுப்பது?’ என்று.

    நடந்தது தப்புதான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், பிரச்னையே இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டுவிட்டால், அதற்கான தீர்வைத் தேடவேண்டாமே!

    (அதுவரை பள்ளிக்கூடங்களில் இம்மாதிரியான செக்ஸ் வதை நடப்பதாக எவரும் வெளியில் சொல்லவில்லை. இப்போது, இருபத்து ஐந்து வருடங்களுக்குப்பின், அம்மாதிரிக் குற்றம் புரியும் ஆசிரியர்களை வேறொரு பள்ளிக்கு மாற்றம் செய்தால் போதாது, எங்காவது அலுவலகத்தில் மேசைமுன் உட்காரும் வேலை கொடுத்துவிடலாம் என்று யோசிக்கிறார்கள்).

    அவர்கள் சற்று திக்குமுக்காடிவிட்டு, “ம்.. அவரையும் விசாரிப்போம்,” என்றார்கள். ஸ்ருதி இறங்கியிருந்தது.

    அதன்பின் அந்தக் கபட ஆசிரியரை இன்னும் அதிகமாக வறுத்தெடுத்து, அவரது காலம் முடிவதற்குள், ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.

    அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் நடுங்கினார். எனக்கு நிறைவாக இருந்தது.

    அவரது சொரூபம் புரியாத மாணவர்கள், ஒரு காரை மலர்களால் அலங்கரித்து, மேளதாளத்துடன் தடபுடலாக அவரை வழியனுப்பினார்களாம். இதுவும் நான் கேள்விப்பட்டதுதான். என்னைத்தான் வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து விட்டிருந்தார்களே!

    குற்றம் செய்தவர்கள் தப்பிக்க, தட்டிக் கேட்பவர்களைப் படாத பாடு படுத்துகிறது அதிகார வர்க்கம்.
    இதனால்தான், `மற்றவர்கள் எப்படியோ தொலைகிறார்கள்! நாம் நன்றாக இருந்தால் சரி!’ என்று பலரும் அசிரத்தையாக இருக்கிறார்கள்.

    பிறகு, `இது கலிகாலம்! அதனால்தான் உலகம் ஒரேயடியாக சீர்கெட்டுக் கிடக்கிறது!’ என்று எதையோ பழிப்பார்கள், தாமும் இவ்வுலகத்தின் ஓர் அங்கம்தான் என்பது புரியாது.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 51

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையின் மடல்களும் கற்றலும்  

    education-1-1

    ஒலி, ஒளி, உணர்வுகள் மற்றும் உடலில் ஏற்படும் பல தாக்கங்களை அறிந்து அதை மின்னதிர்வுகளாக மூளைக்கு அனுப்பி அங்கே ஒருங்கிணைத்து ஒரு கருத்தின் கருவாகவும் பொருளாகவும் மூளை நமக்குத் தருகின்றது. இத்தனை வேலைகளையும் செய்வதற்கு அது எடுத்துக்கொள்ளும் நேரம் மிகச் சொற்பமே. இத்தனை செயல்களையும் மூளை செய்வதற்கு ஏதுவாக மூளையின் உள்ளே பல மடல்கள் இருந்து ஒவ்வொன்றும் சில செயல்களை நிறைவேற்றுவதில் உதவி புரிகின்றன.

    மூளை நரம்பியல் வல்லுநர்கள் இவற்றை பொதுவாக நான்கு மடல்களாக நமக்கு விளக்குகின்றனர். அவையாவன:

    1. Frontal Lobe (மூளையின் முன் மடல்)
    2. Occipital Lobe (மூளையின் பின் புறத்து மடல்)
    3. Parietal Lobe (மூளையின் சுவர் மடல்)
    4. Temporal Lobe (நெற்றிப்பொட்டு மடல் )

     இந்த நான்கு மடல்களும் கற்றலுக்கு ஏதுவாக பல செயல்களை செய்கின்றன.

    மூளையின் முன் புறத்து மடல் (Frontal Lobe ) , அறிதல், புரிதல், சிந்தித்தல், தற்காலிக நினைவுகள் போன்றவற்றை செயல் படுத்தி இவைகள் நீண்ட கால பரிமாணங்களாக மாறும் வரை நிலைபெறச்செய்து காப்பாற்றுகின்றன.

    மூளையின் பின் புறத்து மடல் (Occipital Lobe) ஒளி, ஒலி சம்பந்தப்பட்ட அதிர்வுகள், நினைவுகள், உணர்வுகள் ஆகியவற்றைத் தம்மிடம் தக்கவைத்துக்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் உதவுகின்றன.

    மூளையின் சுவர் மடல்கள் (Parietal Lobe) கூரிய சிந்தனை, (critical thinking ), புத்தி கூர்மை, கவனம், போன்ற பல செயல்களுக்கு உதவியாக இருக்கின்றன.

    மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் அமைந்துள்ள பொட்டு மடல்கள் (Right and lieft Temporal lobes) நமது உணர்வுகளின் தாக்கம், வேகம் மற்றும் மாறுபட்ட சிந்துக்கும் திறன்களை உதவியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

    இவ்வாறு கற்றலின் பல பரிமாணங்களை நமது மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நமக்கு மூளையின் சிறப்பும் கற்றலின் சிறப்பும் வெளிப்படுகின்றது.

    மூளையின் இத்தனை பகுதிகளையும் இணைத்து அங்குள்ள நியூரான்கள் ஒரு வலையமைப்பு உண்டாக்கி மூளையின் உள்ளே ஒரு மிகப்பெரிய வலைத்தளத்தையே (neural network) அமைத்து பாதுகாத்து கண்காணித்து வருகின்றன. உடலின் தாக்கங்களை உள்ளதிர்வுகளாக ஏற்று அவற்றை பல உறுப்புகளுடன் பரிமாறிக்கொண்டு செயல்படுவதில் இந்த நியூரான்களின் வேகம் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது. அது மட்டுமல்ல, நியூரான்களின் இந்த வலையமைப்புகள் உடலின் ஒவ்வொரு அசைவையும், உணர்வின் தாக்கங்களையும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும்பொழுது அதன் வலையமைப்புக்கள் மாறிவிடுகின்றன. ஆகவே இந்த வலையமைப்புக்களின் மாற்றம் ஒரு தொடர் கதையாக அமைகின்றது. இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்க்கான நோபல் பரிசை  2000 ம் ஆண்டு பெற்ற எரிக் காண்டல் என்ற மூளை நரம்பியல் நிபுணரின் கருத்துப்படி இந்தத் தொடர்மாற்றங்கள் கற்றலுக்கு அடிப்படையாகவும் அறிவின் பரிமாணங்களில் மாற்றலுக்கு முன்னோடியாகவும் திகழ்கின்றன.

    ஆகவே, ஒரு பள்ளிக்குச் செல்லும் மாணவனின் மூளையின் வலையமைப்புக்கள் காலையில் இருக்கும் வண்ணம் மாலையில் இருப்பதில்லை.. அதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. இதன் காரணமாக காலையில் அவன் கற்ற பாடங்களின் கருத்துக்களின் தாக்கம் மாலைவரை அதே பரிமாணங்களில் இருக்கும் என்றோ, அதன் நினைவலைகள் அப்படியே மூளையில் பாதுக்காக்கப்படுமென்றோ நினைப்பதும், எதிர்பார்ப்பதும் தவறு. ஒரு நேரத்தின் கற்றல்கள், அதன் பரிமாணங்கள், தாக்கங்கள் , காலம் நேரம்,சுற்றுச்சூழ்நிலைகள், ஒரு தனிப்பட்ட மாணவரின் மனநிலைகள் ஆகியவற்றிற்க்குத் தகுந்தவாறு மாறுபட்டும், பாதிக்கப்பட்டும், பண்பட்டும் இருக்க அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. இதை நாம் கருத்தில் கொண்டால் ஏன் கற்றலின் வகைகளும் தரங்களும் நோக்கங்களும் கற்பவர்களிடையே மாறுபட்டு இருக்கின்றது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

    தொடரும்..

    Share
  • சென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்

    -முனைவர் மு. இளங்கோவன்

     

    tt

    தனித்தமிழ் இயக்கத்திற்கு அறிஞர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம் சென்னை, நீலாங்கரையில் 06.11.2016 (ஞாயிறு) காலை 10 மணிமுதல் மாலை வரை நடைபெறுகின்றது.

    திரு. இ. பி. கனகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கவும், பாவலர் இரா. தேவதாசு அவர்கள் முன்னிலையுரையாற்றவும் பாவலர் செவ்வியன் அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.

    காலை 10 மணிக்கு அமையும் முதல் அமர்வில் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் க. தமிழமல்லன் அவர்களும், நீலாம்பிகையாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மறை. திரு. தாயுமானவன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

    பிற்பகல் 3 மணிக்கு அமையும் இரண்டாம் அமர்வில் தேவநேயப் பாவாணரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும் தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் பொற்கோ அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

    தமிழ்ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

    இடம்: அறிஞர் செவ்வியன் இல்லம், 311, 5 ஆம் தெற்குக் குறுக்குத் தெரு, கபாலீசுவரர் நகர், நீலாங்கரை, சென்னை- 600115

    நிறுத்தம்: நீலாங்கரை காவல் நிலையம் நிறுத்தம் எதிரில்.

    தொடர்புக்கு: 99624 61632 / 97916 29979

    Share
  • சூரியகாந்தனின் ‘எதிரெதிர் கோணங்கள்’ நாவலில் பெண்ணியம்          

    ச.சங்கர்

    முன்னுரை

    படைப்பிலக்கியத்தின் பொதுத்தன்மைகளைக் கொண்டு பல கோட்பாடுகள் உருவாகின. அவ்வாறு உருவான கோட்பாடுகளில் ஒன்று பெண்ணியம். பெண் படும்பாடுதான் பெண்ணியப் படைப்புகளின் அடிப்படைத்தளமாக அமைந்துள்ளது. இதற்கு ஆண்படுத்தும் பாடுகள் மட்டுமின்றிச் சமூகச்சூழல்களும் கலாசாரமும் மதமும் அடிப்படைக்காரணமாக அமைகின்றன. சூரியகாந்தனால் எழுதப்பட்ட நாவல்கள் பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் சிக்கல்களைத் தமது அனுபவங்களாக முன் வைத்துள்ளன. இவருடைய எதிரெதிர் கோணங்கள் நாவலின்வழி பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளையும், பெண்ணியச் சிந்தனைகளையும் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பெண்ணியம்விளக்கம்

    பெண்ணியம் என்பது உலகளாவியது; இஃது உலகில்உள்ள அனைத்து மனித குலத்துள்ளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் முன்னேற்றத்தை விமர்சிக்க ஏற்பட்டது எனலாம். இது பெண்களின் சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்துவதாகும்.

    `Feminism` என்ற ஆங்கிலச்சொல் Femina என்ற இலத்தீன் சொல்லிலிருந்து `மருவி` வந்ததாகும். Femina என்றால் பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளன என்பது பொருளாகும். இச்சொல் முதலில் பெண்களின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிடவே வழங்கப்பட்டது. பின்பே பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்காக எடுத்தாளப்பட்டது.1

    1889இல் Womanism என்ற சொல் பெண்களின் உரிமைப் பிரச்சினையையும் அதனடிப்படையிலான போராட்டத்தையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. 1890ஆம் ஆண்டு Womanism என்ற சொல்லினிடத்தை Feminism  என்ற சொல் பெற்றது. 1894ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் முதன்முதலில் இச்சொல் எடுத்தாளப்பட்டது. Feminism என்ற சொல்லுக்குத் தன்வாழ்வின் மூலம் அர்த்தம் ஏற்படுத்திக் கொடுத்தவர் ரேஸ்ரேசே என்ற பெண்மணி ஆவார்.2 பெண்ணியம் என்ற சொல்லாடல் பெண்விடுதலைக்கான கோட்பாட்டுப்பதிவாக அமைந்துள்ளது.

    இலக்கியங்களில் பெண்ணியம்

    மனித வாழ்வின் பிரதிபலிப்பே இலக்கியம். இலக்கியங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கின்றன. இலக்கியங்கள் பெண்ணிய உணர்வின் அடிப்படையில் எழுந்தவையாக இருந்தாலும் வாசகர்களின் மனநிலைக்கு ஏற்ப இன்பமாகவோ, துன்பமாகவோதான் அதன் முடிவு அமைந்திருக்கும். பெண்ணிய உணர்வுடன் எழுதப்படும் இலக்கியங்கள் பெண்களின் மனஉணர்வுகள் பண்புகள் பிரச்சனைகள் போன்றவற்றைக் கூறுகின்றன.

    சூரியகாந்தனும் பெண்ணியமும்

         பெண்ணியத்தை மையப்படுத்தி பல படைப்பாளிகள் பல படைப்புகளை படைத்து வருவதை காண்கிறோம். ஒவ்வொரு படைப்பாளியும் இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைப்பெறக்கூடிய நிகழ்வுகளை அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்பத் தம்முடைய படைப்புகளில் படைக்கின்றனர். அந்த வகையில் சூரியகாந்தனும் தம்முடைய படைப்புகளின் வாயிலாகப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களையும் பெண்ணியம் குறித்த செய்திகளாகச் சுட்டிக்காட்டுகிறார்.

    எதிரெதிர் கோணங்கள் நாவலில் சமூகக் கொடுமைகள்

         இன்றைய சமூகத்தில் பெண்களுக்குப் பல்வேறு கோணங்களில் இருந்து ஏதாவது ஒரு வகையில் துன்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் சூரியகாந்தனின் எதிரெதிர் கோணங்கள் நாவலில் சீனிவாசனின் மூத்தமகள் பாக்யரதி கஸ்தூரிராஜ் அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெர்சனல் ஸ்டெனோவாகப் பணிபுரிந்து வருகிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் அஸிஸ்டெண்ட் மேனேஜர் ராபர்ட்டைக் காதலித்து வந்தாள். தன் காதல் வீட்டுக்குத் தெரியும்முன்பே தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ராபர்ட்டைக் கேட்க, குடும்பச் சூழ்நிலையையும் மதத்தையும் காரணம்காட்டித் தன் தாய் சம்மதத்தோடுதான் திருமணம் இல்லையேல் உன்வீட்டில் பார்க்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொள் என்று கூறித் தப்பித்துக்கொள்ளும் ஆண்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.

    சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏராளம் நிகழ்கின்றன. குறிப்பாக, திருமணம் செய்யப்பட்ட பெண்களின் கொடுமைகள் குடும்பம் சார்ந்தும், உறவுகள் சார்ந்தும் நிகழ்வதைக் காணமுடிகிறது. திருமணம் நிகழ்ந்து கணவன் தனது தவறான நடவடிக்கை அல்லது தற்செயலாக அவன் இறத்தலுக்கு மனைவியே காரணம் என்ற தவறான எண்ணம் மக்கள் மனத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இதனைச் சூரியகாந்தனும் தனது எதிரெதிர் கோணங்கள் நாவலில் “துக்கம் விசாரிக்க வந்தவர்களில் பெரும்பாலோர் பாக்யரதியை கபோதித்தனத்தோடும், கழிசடைத்தனத்தோடும் ஒரு மாதிரியாக வெறித்துப் பார்த்தனர். கால் முதல் தலை வரையிலும் கண்களால் அளந்தனர். தாலி கழுத்தில் ஏறின பதினஞ்சாம் நாளே உனக்கு இந்தக்கதி வந்துடுத்தே… எம் மகளே” (ப-129). என அலமேலு தலையில் அடித்துக்கொண்டு அழுததையும் தாலிச்சரடு கழுத்தை விட்டு நீங்கின மறுநாளே கங்காதரன் வீட்டார் தாங்கள் போட்டிருந்த நகைகளையும் இவளிடமிருந்து கழட்டிக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டும் அவலங்களைக் குறிப்பிட்டும் தாலி ஏறுவதற்கும், தாலி அறுபடுவதற்கும் பெண்ணே காரணம் என்ற சமூக அவலத்தைப் புலப்படுத்துகின்றார்.

    கணவனால் ஏற்படும் கொடுமைகள்

    திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பர். பாக்யரதி வாழ்க்கையில் அது நரகமாகிப் போனது. காதலனால் கைவிடப்பட்டவள் பெற்றோர் சம்மதத்துடன் பார்சல் சர்வீஸ் ஒன்றில் வேலைசெய்த கங்காதரனைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவளின் காதல் வாழ்க்கையைத் தெரிந்துகொண்ட கங்காதரன் ஒவ்வொரு நாளும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக்குகின்றான். “உன்னைத் தாண்டி உத்தமி…… நாங் கேட்டது கூட காதில் விழலையா? உன்னோட மாஜி காதலனோட நெனப்பு இப்ப வந்துடுச்சோ…. சொல்லேண்டி உங்களோட காதல் லீலைகளை… சிதம்பரம் பூங்காவிலேயும், ரேஸ்கோர்ஸ் ரோட்டிலேயும் பார்த்தவனாச்சே”3 என்னோட பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னைக்கட்டி வெச்சிட்டானா உங்கப்பங்காரன்.” என்று ஒவ்வொரு நாளும் தன் மனைவியை அடித்தும், உதைத்தும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்துகின்றான். போதை தலைக்கு ஏறிய உடன் வண்ண, வண்ண நீலப்படங்களை வைத்துக்கொண்டு அதில் உள்ளது போல் தன்னுடன் இருக்க வேண்டும் என வற்புறுத்தி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் மிருகங்களுக்கு மத்தியில் தன் குடும்ப கௌரவத்திற்காகவே போராடும் பெண்களின் உளக்குமுறலைக் குறிப்பிடுகிறார்.

    பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்

    ஆண்களையும் பெண்களையும் சமமாகக் கருதும் இக்காலகட்டத்தில் ஒரு சிலர் பெண்களைப் போகப்பொருளாகவே கருதுவதையும், பணிபுரியும் இடத்தில் பெண்கள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் சூரியகாந்தனின் எதிரெதிர் கோணங்கள் நாவலில் காணலாம். கல்பனா பிரியா அட்வடைஸிங் ஏஜென்ஸியில் பணிபுரிந்து வருகிறார் அதே கம்பெனியில் வேலை செய்யும் அசோக் ஓனர் இல்லாத சமயங்களில் அவளிடம் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, ஆசை வார்த்தைகளைக் கூறுவது, தொட்டுப் பேசுவது, அவள் அழகை வர்ணிப்பது என சக இடத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காணமுடிகின்றது.

          கல்பனாவின் குடும்ப சூழ்நிலையையும் அவளுடைய குடும்ப வறுமை நிலையையும் நன்கு புரிந்துகொண்ட முதலாளி கணேசமூர்த்தி அவளைத் தன்னுடைய இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்துவதையும் யாருமில்லா சமயத்தில் அவளை அடைய நினைப்பதையும், அதற்காக ஆசைவார்த்தைகளைக் கூறுவதையும் காணமுடிகிறது. “நெக்ஸ்ட் மன்த்லேர்ந்து உனக்கு இருநூறு இல்லெ ஐந்நூறு ரூபாய் அதிகப் படுத்தலாம்னு ஃபீல் பன்றேன்”4 என்று சொல்லிக்கொண்டே தோளில் படர்ந்த கைகள் மெல்ல மெல்ல இறுகிக் கீழ்நோக்கி இறங்குவதை உணர்ந்து கொண்ட இவள் `அய்யோ……இந்த அநியாயத்தை என்னால் அனுமதிக்க முடியாது என்று ஒரே தள்ளாக அந்த ஆளைத் தள்ளிவிட்டாள்”5 இவ்வாறு பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் கல்பனா அதை வெளியில் சொல்லமுடியாமல் மனதளவில் புழுங்குவதையும் வேலைக்கு செல்லும் பெண்கள் தன் குடும்ப கௌரவத்தைக் காக்கத் தன் பிரச்சனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உணர்ச்சிகளை மனதில் அடக்கிக் கொண்டு வாழ்ந்து வருவதையும் காண முடிகின்றது. 

    முடிவுரை

    சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அவலங்களையும் அவர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய கொடுமைகளையும் ஆசிரியர் தம்முடைய எதிரெதிர் கோணங்கள் நாவலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். எதிரெதிர் திசைகள் ஒரு மையத்தில் சந்தித்தால் புதிய பாதைகள் உருவாகும். எதிரெதிர் கோணங்கள் ஒரு நோக்கில் சிந்தித்தால் புறப்பாடுகள் சமமாகும். உணர்ச்சிபூர்வமாகச் சிந்தித்தவள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கத்தொடங்குகிறாள். பெற்றோர்களை, சகோதரிகளை, சிநேகிதிகளைத் தனக்குத் துரோகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்கும் பண்புடையவளாக சூரியகாந்தன் தன் நாவலில் பெண்ணியச் சிந்தனைகளை சுட்டுகிறார்.

    அடிக்குறிப்பு

    [1].  பெண்ணியம் – முனைவர் இரா.பிரேமா – ப.11
    2. பெண்ணியம் – முனைவர் இரா.பிரேமா – ப.12
    3. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.139.
    4. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.62.
    5. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.63

    *****

    ச.சங்கர்
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    எஸ்.கே.எஸ்.எஸ்.கலைக்கல்லூரி
    திருப்பனந்தாள்.

     

    Share
  • தண்டனை

    க. பாலசுப்பிரமணியன்

    நாட்டின் தலைநகரான புதுடில்லியில் நேற்றும் இன்றும் காணக்கிடைக்காத காட்சி… உண்மை…. கண்களை அகலமாய் திறந்து பார்த்தாலும் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களோ அல்லது மனிதர்களோ  கண்ணில் பட மாட்டார்கள் .. இது பனிமூட்டமல்ல.. புகைமண்டலம்! குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சுமார் 1800 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன.

    மாலை நேரத்தில் காற்றில் மிதந்துநின்ற கரித்துகள்களும் தூசியும் மற்றும் விஷத்தன்மை வாய்ந்த கலவைப் பொருள்களும் கீழிறங்கி வந்து புகைமண்டலமாக மனிதர்கள் மூச்சு விடுவதற்கே தடையாகவும் ஆபத்தாகவும் அமைந்தது. சுவாசிப்பதில் சாதாரணமாக இருக்கும் மனிதர்களுக்கே இந்த கதியென்றால் ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இருப்பவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம்… என்ன கொடுமையிது!

    மனிதர்களுடைய அடிப்படைத்தேவையான காற்றே கலப்படமாகி சுவாசிக்க முடியாமல் போனால்.. நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்? இதற்க்கு என்ன காரணம்? இதற்கு யார் பொறுப்பு?

    உடனே மத்திய அமைச்சரவை கூடி அபாய மணியை அடித்தது.. டில்லியின் ஆளுநர் மந்திரிசபையின் கூட்டத்தைக் கூட்டினார்.. டில்லியின் முதலமைச்சர் தன்னுடைய மந்திரிசபையைக் கூட்டினார்… இன்னும் சில நாட்களுக்கு கட்டுமானத் தொழில் மற்றும் ஜெனரேட்டர் இயக்குதல் போன்றவை தடைசெய்யப்பட்டன. இதெல்லாம் சரி.. இவையெல்லாம் எரியும் நெருப்பை அணைக்கும் செயல்கள்தானே? இவற்றிற்கான மூலகாரணங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா?

    சில ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு காரில் ஐந்து நிமிடத்தைக் கடந்த தூரத்தை இன்று கடக்க அரைமணி நேரம் ஆகின்றது.. அத்தனை நெரிசல்.. அலை அலையாகக் கார்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கார்..

    நாம் தேவைகளை அதிகரித்துக்கொண்டு விட்டோம் .. ஆனால் உண்மையில் அவை தேவைகளா? இல்லை பல நேரங்களில் நமது தேவையற்ற ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் நாம் இயற்கையை பயன்படுத்திக்கொண்டும் மாசுபடுத்திக்கொண்டும் இருக்கின்றோமா?  சிந்திக்க வேண்டிய நேரம்..

    இன்று புதுதில்லியில் நடப்பது நாளை மும்பையில் நடக்கும். இன்னொருநாள் பெங்களூரிலோ அல்லது சென்னையிலோ நடக்கும். இது ஒரு நகரத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல.. இது ஒரு சமுதாயத்தின் சிந்தனையின் தேக்கத்தையும் பொறுப்பற்றத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

    நேற்று விமானத்தில் ஏறும் பொழுது பலர் அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர்.. “இந்த நிலைமைக்கு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது. என்ன செய்யப்போகின்றது?” இந்த மாதிரி பேச்சுக்களில் ஏதோ அரசாங்கத்திற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நாம் சிந்திக்கிறோம்… உண்மைதான்.. ஒரு அரசாங்கத்தின் கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் நல்லபடியாக கண்காணிக்கப்பட்டால் இந்த நிலைமை வாராது இருக்கலாம். ஆனால் இதற்கு முக்கிய காரணம் முழுமையாக சமுதாய நோக்கும் போக்கும்தானே?

    இந்த தண்டனை யாருக்கு யார் கொடுத்தது?

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விரைவாகச் சுற்றிய பூர்வப் பூமியின் வேகம் எப்படிக் குறைந்தது ?

    aj

    பொங்கி வரும் பெருநிலவைப்
    புகழாத கலைஞர் இலர் !
    மங்கிப் போன
    கரி முகத்தில் கால் வைத்தார் !
    முழு நிலவுக்குத்
    தங்க முலாம் பூசுவது
    வெங்கதிர்ப் பரிதி  !
    கடல் அலைகள் எழுப்பும் நிலவு !
    அச்சின்றி நகர்வது !
    அங்கிங் கெனாதபடி
    எங்கும் முகப் பருக்கள் !  பெருங்குழிகள் !
    சுற்றியும் சுழலாத பம்பரம் !
    ஒருமுகம் காட்டும் !
    மறுமுகம் மறைக்கும் !
    புவியை மோதிய முரண்கோள்
    நிலவை உருவாக்கும் !
    பூமியின் வேகம் குறைந்தது !
    புல்லினம், புழுவினம், புள்ளினம்
    உயிரினம் தோன்றின !
    புவிச் சுழற்சி நின்று போனால்
    நிரந்தர அழிவு, நேரும்
    பிரளயம் !

    +++++++++++++++++

    early-earth-spin-altered
     
    பூர்வப் பூமியின் பெருவேகம் எப்படிக் குறைந்தது ?
    பல்லாண்டுகளாக பழைய கணிப்புப்படி, நிலவு பூமிக்கு வெகு அருகில் இருந்ததாகவும், அப்போது பூமி தன்னச்சில் தன்னைச் சுற்ற 5 மணி நேரம் எடுத்ததாகவும் முடிவு செய்யப்பட்டது.  இந்தக் கணிப்பின் மூலமே “பூதத் தாக்கல் நியதி” [The Giant Impact Theory] ஊகிப்பானது.  அதன்படி பூர்வீகப் புவியை செவ்வாய்க் கோள் அளவு முரண்கோள் ஒன்று மோதி, விளைந்த துணுக்களால் நிலவு தோன்றியது என்னும் கோட்பாடு நிலையானது.
     Is Earth a Satellite to the Moon
    பூமி – நிலவின் பண்டை வரலாற்றைப் புதிய கோட்பாடு கணினிப் போலி மாடலில் [Theoretical Computer Modelling] இட்டுப் பார்த்ததில், பூதத் தாக்குதலில் உருவான நமது துணைக்கோள் நிலவு, பூமியின் அச்சைப் பேரளவு சாய்த்து, சுழற்சியை வெகு  விரைவாகச் சுற்றவிட்டுப் போனது என்று முடிவை உறுதியாக்கியது.  பூதத் தாக்குதலுக்குப் பிறகு என்ன நேர்ந்தது என்பதைப் போலி கணினி மாடலில் [Computer Simulations] போட்டு ஆராய்ந்ததில், “பெரு உதை” [Big Whack] நிகழ்ச்சி பற்றி விளக்கம் கிடைத்தது.  அதாவது பிள்ளை நிலாவின் [இளம் நிலவு]  சுற்றுவீதி [Orbit] சிறிது சிறிதாய்ப் பெரிதானது.  பூமியின் சுழற்சி வேகம் பேரளவில் குறைந்து, சரிந்த அச்சு மட்டச் சுற்றுவீதிக்கு [Ecliptic] ஒப்பிச் சற்று நேராகத் தற்போதைய [23.5 டிகிரி] நிலைக்குப் படிப்படியாக மாறியது. மேலும் போலிக் கணினி மாடல்களில், பெரிய துணைக்கோள் கொண்ட அண்டக் கோள்களில், மிதமான காலநிலையும், உயிரின வசிப்பும் வாய்க்க வசதி இருக்குமா என்ற வினாவுக்கும் விடை காண முடியும்.
    பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாக, விஞ்ஞானிகள் பூமியை விட்டு [ஆண்டுக்கு 1.5″ வீதம்] நிலவு மிகமிக மெதுவாக அப்பால் செல்கிறது என்றும், பூமியின் சுழற்சி அதே சமயம் வேகம் குறைந்து வருகிறது என்றும் அறிந்திருந்தார்கள்.  காரணம், நிலவு உண்டாக்கும் பேரலைகளின் சக்தி கடற்கரைகளைத் தொடும்போது, மெதுவாய் வலுவிழந்து விரைய மாகிறது.  இந்த சக்தி, பூமியின் சுழற்சித் தணிவிலிருந்துதான் வந்திருக்க முடியும்.  அதாவது பூமியின் சுழற்சி மெதுவாகி 5 மணிநேர நாள் நீண்டு, நீண்டு தற்போதைய  24 மணிநேர நாளாய் நீண்டுவிட்டது.
    இந்தக் கணினி போலி மாடல்களில்  சில முக்கிய பௌதிக நிகழ்ச்சிகள் எடுத்தாளப் படாமல் இருக்கலாம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு [2012] காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குக் & ஸாரா ஸ்டீவார்ட் [Cuk & Sara Stewart] ஆகியோர் விஞ்ஞான இதழில் ஓர் விளக்கவுரையை வெளியிட்டார்.  அதன்படி பூதத் தாக்குக்கு முன்பு, பூமி வெகு, வெகு வேகமாய்ச் சுமார் 2 மணிநேர நாளில் சுற்றியதாக அறிவிப்பு இருந்தது.

    Protoplanet Impact

    “பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.” 

    வில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    காலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.

    மில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)

    இருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக மேதை (1564-1616)

    Fig 1 The Theia Planet Theory

    நமது பூமிக்கு நிலவு தோன்றி எத்தனை மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன ?

    பரிதி மண்டலம் தோன்றி சுமார் 95 மில்லியன் ஆண்டுகட்குப் பிறகு ஏற்பட்ட ஓர் அண்டக்கோள் மோதலில் நமது பூமியின் நிலவு உருவானது என்று  2014  ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவந்த “இயற்கை இதழில்” [Nature Journal]  அண்டக்கோள் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்.   இந்த புதிய தகவல் தெரிவிப்பது என்ன வென்றால், 4.470 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நமது பூர்வப் புவியோடு [Proto-Earth] செவ்வாய்க் கோள் வடிவத்தில், ஓர் அண்டம் மோதிச் சிதறிய தூசித் துணுக்குகளே நிலவாக உருண்டு திரண்டது என்று தெரிகின்றது.  இந்தக் கால ஆண்டு கணிப்பு எண்ணிகையில் 32 மில்லியன் ஆண்டுகள் குறைந்தோ, கூடியோ இருக்கலாம்.  சூரிய மண்டலம் சுமார் 4.567 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டாகி உள்ளது என்பது இப்போதைய துல்லிய மதிப்பீடு.   பூதளத்தில் கண்டெடுத்த பூர்வீக விண்கற்கள் மாதிரிகளின் [Oldest Meteorites] வயதை வைத்து அந்த மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.  பூமியானது சூரியன் தோன்றிய முதல் 150 மில்லியன் ஆண்டுகளில் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருத்தும் வெளியானது..

    Moon birth Era

    இந்த மோத நிகழ்ச்சியில் நிலவு தோன்றியதுடன், நமது பூமியின் இறுதி வடிவமும் முடிவானது என்றும் புதிதாக அறிவிக்கிறார்.   அப்போது பூமியின் உட்கருவில் உள்ள திரவ உலோகங்கள் பெருங்கனல் தள நிலையை விட்டு மையத்துக்குச் சுருங்கின.  முன்கூறிய மதிப்பீட்டு அறிவிப்பில் பரிதி மண்டலம் தோன்றிய (30 -200) மில்லியன் ஆண்டு கட்குப் பிறகு நிலவு உருவானது என்பது நிலவி வந்தது.   அந்தக் கால மதிப்பீடுகள் யாவும், பூமியில் கதிர்வீசிக் காணப்படும் பாறைத் தாதுக்களின் மூலகக் கதிரியக்கத் தேய்வு [Radioactive Decay of unstable Elements] வீதத்தைக் கணக்கிட்டு விஞ்ஞானிகள் கணித்தவையே.

    2014 ஏப்ரல் 2 ஆம் தேதி  இயற்கை விஞ்ஞான இதழில் வெளியான புதிய முறை வேறானது.   அந்த முடிவு ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க விண்கோள் விஞ்ஞானிகள் [Planetary Scientists] தயாரித்த “கணனிப் போலி மாடல்” [Computer Simulation Model] மூலம் அறிந்தவையே.   அந்தக் கணனி மாடல் பூர்வீகச் சூரிய குடும்பத்தில் எப்படித் தூசி, துணுக்குப் பாறைகள் சேர்ந்து திரண்டு “சிசுக்கருக் கோள்கள் ” [Planetesimals] ஆயின என்று ஆராயப் பட்டன.  இவையே பின்னர் நாமறிந்த புதன், வெள்ளி, புவி, செவ்வாய், நிலவுச் சிசுக் கோள்களாய்த் [Planetary Embryos] உருண்டு திரண்டன.  ஒவ்வோர் கோள் மோதலிலும் படிமானப் பிண்டத் துணுக்குகள் சேர்ந்து தாக்கப் பட்ட கோளின் வடிவம் பெருத்தது. பூமியைப் பொருத்த வரையில் நிலவு மோதச் சிறலில் மொத்த நிலவு நிறையில் 0.5% அளவுப் படிமானம் சேர்ந்துள்ளது.    அந்த சான்று முறைகள் மூலம் நமது புவிக்கோள் உருவாக 95 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்றும், சூரிய மண்டலத்தில் நீர்க்கோள் பூமியே உருவாக நீண்ட காலம் ஆனது என்றும் விஞ்ஞானி அலெக்ஸாண்ரோ மார்பிடெல்லி கூறுகிறார்.

    Earth Moon comparision

    சூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான நீர்மயப் பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப் படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    சூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை.  பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன.  ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின ?  திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன.  அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.

    Moon formation

    அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிப் பாறைகள்        

    பரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை.  செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள்.  பூமிக்கு ஒரு துணைக்கோள்.  வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள்.  அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை  (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர்.  கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது.  இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது.  பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது.  அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது.  அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.

    1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன.  நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன.  அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன !  அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது !  அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

    வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள்.  ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது.  தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது !   அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது.  அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

    நிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்  

    நிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :

    1.  நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.

    2.  நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை.  அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).

    3.  பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes).  அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.

    நிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்

    பூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார்.  முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்ப்பாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    1.  பிளவு நியதி (The Fission Theory) 

    இந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு  சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது.  தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது !  அந்தப்  பகுதியி லிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து.  இதற்கு ஒரு காரணம்.  பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது.  வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும்.  அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ?  ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்க வில்லை.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    The big impact

    2. கைப்பற்று நியதி (The Capture Theory)

    இந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது.  நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை.  காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    3. குளிர்த்திண்மை நியதி (The Condensation Theory) 

    சூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது !  அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது.  அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    4. பூதத் தாக்கு நியதி அல்லது விலக்கு வளைய நியதி (The Giant Impact Theory or The Ejected Ring Theory)

    பெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது.  இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது.  சிதறிய துணுக்குகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது.  மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன !  நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்விகளுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு.  சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

    உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

    1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள்.  பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது.  அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப் படுகிறது.  அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

    50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது !  அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)

    10 (a).  http://physicsforme.com/2011/09/19/how-common-are-earth-moon-planetary-systems/  [September 19, 2011]

    11.  http://en.wikipedia.org/wiki/Protoplanet  [December 23, 2013]
    12. http://www.space.com/55-earths-moon-formation-composition-and-orbit.html [June 21, 2013]
    13. http://www.space.com/25320-moon-evolution-photo-timeline-gallery.html [April 2, 2014]
    14. http://www.space.com/25322-moon-formation-wild-theories.html [April 2, 2014]
    15. http://en.wikipedia.org/wiki/Moon [April 11, 2014]
    16.http://www.ndtv.com/article/world/scientists-date-moon-at-4-47-billion-years-5037041[April 2, 2014]

    17.  http://spaceplace.nasa.gov/review/dr-marc-earth/earth-rotation.html

    18.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/10/the-planet-that-collided-with-early-earth-creating-the-moon-caused-it-to-spin-on-its-side.html?  [October 31, 2016]

    19.  http://howldb.com/p/1-november-2016-did-early-earth-spin-on-its-side-news-astronomy-now-online-1o0hmo  [November 1, 2016]

    20.  https://en.wikipedia.org/wiki/Earth%27s_rotation  [November 4, 2016]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com [ November 4, 2016] [R-3]

    Attachments area
    Share
  • ஆறுபடைவீடு (6) – திருத்தணிகை

    க. பாலசுப்பிரமணியன்

    morepic_9647486

    கந்தா கந்தாவெனக் கொஞ்சியே அழைத்திட

    இந்தோ இந்தோவென வந்திடும் மயிலே!

    குமரா குமராவெனக் கனிவுடன் கூப்பிட

    வந்தேன் வந்தேனென வந்திடும் வேலே!

     

    பொல்லா நினைவுகள் பொடியாய் விழுந்திடும்

    எல்லாத் திசையிலும் துணையாய் நிற்கும்

    கல்லா மனிதருக்கும் கலங்கரை விளக்கம்

    கந்தாவெனும் சொல்லே காலங்கள் கடத்தும் !

     

    வென்றெனென்று சொல்லிட வாழ்வில் இல்லை

    கொன்றைஅணிந்த குமரன் வரும் வரை !

    நன்றேநன்றே நாளும்  உந்தன் நினைவுகள்

    குன்றில்வாழும் குமரா குறைகள் களைவாய் !

     

    படியாய் படியாய் வாழ்வில் படிப்படியாய்

    பிடியாய் மனமே கந்தனைப் பிடியாய்

    படியாத்  துயரங்கள் பனியாய் மறைய

    முடிவாய் முதலாய் முருகனை வைப்பாய் !

     

    இடியின் முழக்கம் நிலத்தின் நடுக்கம்

    இசையாய் இனிக்கும் இதயத்தில் இருந்தால்

    இமையனின் மகனே ! இணையில்லாக் குமரா !

    இதயத்தில் அமர்ந்திடு இருதுணை அணைத்து !

     

    தனியாய் வந்தேன் விடைகள் தேடி

    தணிகை நாதா ! சஷ்டியில் வேண்டி

    தடைகள் நீக்கிடத் தருணம் இதுவே

    தருவாய் அருளை வருவாய் வேலா !

    Share