-மேகலா இராமமூர்த்தி

பொருநராற்றுப்படை, பாடலின் இறுதியில் காவிரி வளத்தைக் கவிபாட, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைக் காவியமாக்குதற்கென்றே எழுதப்பட்ட பட்டினப்பாலையோ (பட்டினம் என்றாலே அந்நாளில் காவிரிப்பூம்பட்டினத்தைத்தான் குறித்தது; இன்று பட்டணம் என்பது சென்னையைக் குறிப்பதுபோல்!) காவிரியின் தன்னேரிலாச் சிறப்பைப் பாடலின் தொடக்கத்திலேயே பாங்குறப் பகர்ந்துவிடுகின்றது.

வசையற்ற வெண்மீனாகிய சுக்கிரன், தன் இருப்பிடமான வடதிசையிலிருந்து நீங்கித் தென்திசை சென்றாலும், (சுக்கிரன் தெற்கே சென்றால் மழைவளம் குறையும் என்பது அன்றைய மக்களின் நம்பிக்கை.) மழைத்துளியையே உணவாய்க் கொள்ளும் வானம்பாடி, மழையின்றித் தேம்புமாறு வான் பொய்த்தாலும், மலைத்தலையிலிருந்து புறப்பட்டுப் புகாருக்குள் புகுந்துவரும் காவிரிப்பாவை ’தான்’ பொய்ப்பதில்லை. அவள்தரும் அரும்புனல் எங்கும் பரந்திருக்க, புகாருக்கு என்ன குறை? வயல்களெல்லாம் பொன்கொழிக்கத்தான் ஏது தடை? என்று காவிரியின் புகழ்பாடுகின்றது ஒப்பிலாப் புலவர் உருத்திரங்கண்ணனாரின் கட்டிக்கரும்பனைய பட்டினப்பாலை.  

”வசையில்புகழ்  வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புள்தேம்பப்  புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து  
பொன்கொழிக்கும்…”  (பட்டின: 1-7)

%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8dபுகார் நகரில் எப்போதும் முப்போகம் விளையும் வயல்களின் பச்சைப்பசேல் காட்சி காண்போரைக் கவர்ந்திழுக்கின்றது. அவற்றின் அருகிலுள்ள கொட்டில்களில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுவதால் எழும் நன்மணம் நாசியைத் துளைக்கிறது! பாகு காய்ச்சுவதால் உருவாகும் கரும்புகை பட்டு, வயல்களில் முகமலர்ந்து சிரிக்கும் கள்கமழ் நெய்தலின் மென்மலர்கள் வாடுகின்றன.

அப்போது, கம்பீரநடைபோட்டபடி கழனியருகே வருகின்றார் ஓர் எருமைக் குழவியார் (எருமைக்கன்று); சுற்றுமுற்றும் பார்க்கிறார். ஆளரவமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வயலில் புயலென இறங்கி நெற்கதிர்களை வயிறுபுடைக்கத் தின்கிறார். பிறகு? கண்ணைச்சுற்றிக்கொண்டு உறக்கம் வருகின்றது அவருக்கு! ’உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு’ எனும்போது எருமையார் எம்மாத்திரம்! தள்ளாடியபடியே வயலைவிட்டு வெளியே வருகின்ற அவருடைய கண்கள் எதையோ தேடுகின்றன. ஆ… கண்டுபிடித்துவிட்டார்! அது வேறொன்றுமில்லை…விளைந்தநெல்லின் குவியலால் நெடிதுயர்ந்துநிற்கும் நெற்கூடுதான் அது! அதனருகில் வந்தவர் நீண்டிருந்த அதன்நிழலில் நிம்மதியாய்ப் படுத்துறங்கத் தொடங்கிவிட்டார். நிழலில் உறங்கும் இயல்புடையது எருமை என்பதை ’நிழலிடை உறங்கும் மேதி’ என்று கம்பரும் ’இராமகாதை’யில் பதிவுசெய்திருப்பதை இங்கே ஒப்பிட்டு மகிழலாம். காவிரிப்பூம்பட்டினத்தில் எருமையாய்ப் பிறக்கவும் பேறுபெற்றிருக்க வேண்டும் போலும்!

”…விளைவறா  வியன்கழனிக்
கார்க்கரும்பின்  கமழாலைத்
தீத்தெறுவிற்  கவின்வாடி
நீர்ச்செறுவின்  
நீள்நெய்தற்
பூச்சாம்பும்  புலத்தாங்கண்
காய்ச்செந்நெற்  கதிரருந்து
மோட்டெருமை  முழுக்குழவி
கூட்டுநிழல்  துயில்வதியும்…”
 (பட்டின: 8-15) என்று நாம் மேற்கண்ட காட்சிகளைச் சுவையோடு விளக்கிச் செல்கின்றது பட்டினப்பாலை.

கழனிகளின் கண்கொள்ளாக்காட்சியை இதுவரை நமக்கு அற்புதமாய் விளக்கிவந்த கண்ணனார், அடுத்து நம்மை அழைத்துச்செல்வதோ புகார்நகரச் செல்வந்தர் ஒருவரின் அகன்றவீட்டின் முற்றத்துக்கு!

அந்த வளமனையின் நெடியமுற்றத்தில் அறுவடைசெய்த நெல் காயவைக்கப்பட்டிருக்கின்றது. விதவிதமாய்ப் பொன்னணிகள் அணிந்த எழில்மிகு பெண்ணொருத்தி அங்கே நெல்லைக் காத்தபடி அமர்ந்திருக்கின்றாள். அப்போது, காயும் நெல்லைக் கவர்ந்துசெல்ல விரும்பிச் சில கோழிகள் மெதுமெதுவாய் வீட்டினுள்ளே வரக்காண்கிறோம். அவற்றைக் கண்டதுதான் தாமதம்…அந்த மாதரசி தன் காதில் அசைந்தாடிக்கொண்டிருந்த பொன்குழையைக் (இற்றை நாளைய ஜிமிக்கி) கழற்றி வீசினாள். அதுகண்ட கோழிகள் பயங்கொண்டு அவ்விடத்தைவிட்டுப் பறந்தன. குழையோ தாழ்வாரத்தில் சென்று வீழ்ந்துகிடந்தது. அந்தக்குழையை எடுத்து அவ்வழகி மீண்டும் அணிந்துகொள்வாள் என்று நாம் எதிர்பார்த்திருக்க, அவளோ அதனைச் சற்றும் சட்டைசெய்யாது தன் இருப்பிடத்திலேயே அசையாது அமர்ந்திருக்கின்றாள்!

அவ்வேளையில், பொன்னாலான கிண்கிணிகள் இன்னொலியெழுப்ப, ஓர் அழகுச்சிறுவன் நடைவண்டி ஓட்டியபடி அத்தாழ்வாரத்தில் வருகின்றான். திடீரென்று அவன் நடைவண்டியின் வேகம் தடைப்பட்டது. குனிந்து பார்க்கிறான்; தன் தமக்கையின் காதணி அங்கே வேகத்தடையாய் மாறியிருப்பது கண்டு அதனை அப்புறப்படுத்துகிறான். இதையெல்லாம் பார்த்திருக்கும் நாம் அவர்களின் வளவாழ்வுகண்டு வியந்துதான் போகிறோம்!

”…சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி
விலக்கும்…(பட்டின: 21-25)

அவ்வீட்டிலிருந்து புறப்படும் நமக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் ”செல்வர்கள் மட்டுந்தான் வாழ்கிறார்களோ…வறிஞர்களே இல்லையோ?” என்றோர் ஐயம் எழத்தான் செய்கிறது. ”இல்லை…இல்லை வறிஞர்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள்” என்பதைச் சற்றுத்தூரத்தில் நம் கண்ணிற்படும் ’அறக்கூழ்ச்சாலை’ ஒன்று மெய்ப்பிக்கின்றது.

அறக்கூழ்ச்சாலை என்ற பெயர் புழக்கத்திலில்லாத புதிய ஒன்றாக ஒலிக்கின்றதா?

இன்று ’அன்னசத்திரம்’ என்றும் ’தருமசாலை’ என்றும் வடமொழியில் நாம் வழங்கிவருகிறோமே அவற்றைத்தான் ’அறக்கூழ்ச்சாலை’ என்று அழகுத் தமிழில் அன்று அழைத்திருக்கின்றனர் நம் முன்னோர் என்பதை உரையாசிரியர்கள் வாயிலாய் அறிகின்றோம். நற்காரியங்கள் செய்து இம்மைக்குப் புகழும், மறுமைக்குப் புண்ணியமும் தேடவிரும்பிய புகார்நகரச் செல்வர்கள், அறக்கூழ்ச்சாலை நடத்தி வறியோரின் வயிற்றுப்பசியை விரட்டினர்.

இதோ…அறக்கூழ்ச்சாலைக்கு வெகு அருகில் வந்துவிட்டோம்; உள்ளேசென்று அங்கு நடப்பதைக் கவனிப்போம்!

அகன்ற வட்டில்களில் அங்கே சோறு பொங்கப்படுவதைப் பாருங்கள். சோறாக்கியபின் கவனத்தோடு கஞ்சிவடிக்கின்றனர் ’மடைவாலுவர்’. (சோறாகிவிட்டது என்று விசிலடித்து அழைக்க அன்று மின்சாரக் குக்கர் இல்லை என்பதை நினைவில் கொள்க!). வடித்த கஞ்சியோ தெருக்களிலெல்லாம் ஆறுபோலப் பரந்தொழுகுகின்றது. அந்தக் கஞ்சியாற்றில் நின்றபடி இரண்டு எருதுகள் பொருததாலே (சண்டையிட்டதாலே) அந்த ஆறு சேறாகிவிட்டது. ஆயினும், சிறிதுநேரத்தில் காய்கதிர்ச்செல்வனின் வெப்பத்தால் அது காய்ந்துவிட்டது. அடுத்து, அந்தத் தெருவழியே ஒரு தேர்வரக் காண்கிறோம். கடுகிவரும் அத்தேரின் ஓட்டத்தால், காய்ந்திருந்த கஞ்சியின் புழுதி எங்கும் பரந்தெழுந்து, அருகிலுள்ள மாடமாளிகைகளின் வெண்சுவர்களிலெல்லாம் படிந்து மாசூட்டிய காட்சியானது, ’வெண்ணீறணிந்த களிற்றின்’ தோற்றத்தையல்லவா ஒத்திருக்கின்றது!

”…திருத்துஞ்சுந்  திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப்  பரந்தொழுகி
ஏறுபொரச் சேறாகித்
தேரொடத்  துகள்கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில்
மாசூட்டும்…” (பட்டின: 41-50)

காவிரிப் பாசனத்தால் கழனிகள் முப்போகம் விளைவதும், செல்வமகளிர் நெல்லைக் காக்கப் பொன்னையே கழற்றி எறிவதும், காவிரிப்பூம்பட்டினத்தின் அட்டிற்சாலைகளில் சோறுவடித்த கஞ்சியானது ஆறாய்ப் பெருகியோடுவதும் நினைக்குந்தொறும் வியக்கவைப்பவை!

(தொடரும்)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *