க. பாலசுப்பிரமணியன்

மூளையின் மடல்களும் கற்றலும்  

education-1-1

ஒலி, ஒளி, உணர்வுகள் மற்றும் உடலில் ஏற்படும் பல தாக்கங்களை அறிந்து அதை மின்னதிர்வுகளாக மூளைக்கு அனுப்பி அங்கே ஒருங்கிணைத்து ஒரு கருத்தின் கருவாகவும் பொருளாகவும் மூளை நமக்குத் தருகின்றது. இத்தனை வேலைகளையும் செய்வதற்கு அது எடுத்துக்கொள்ளும் நேரம் மிகச் சொற்பமே. இத்தனை செயல்களையும் மூளை செய்வதற்கு ஏதுவாக மூளையின் உள்ளே பல மடல்கள் இருந்து ஒவ்வொன்றும் சில செயல்களை நிறைவேற்றுவதில் உதவி புரிகின்றன.

மூளை நரம்பியல் வல்லுநர்கள் இவற்றை பொதுவாக நான்கு மடல்களாக நமக்கு விளக்குகின்றனர். அவையாவன:

  1. Frontal Lobe (மூளையின் முன் மடல்)
  2. Occipital Lobe (மூளையின் பின் புறத்து மடல்)
  3. Parietal Lobe (மூளையின் சுவர் மடல்)
  4. Temporal Lobe (நெற்றிப்பொட்டு மடல் )

 இந்த நான்கு மடல்களும் கற்றலுக்கு ஏதுவாக பல செயல்களை செய்கின்றன.

மூளையின் முன் புறத்து மடல் (Frontal Lobe ) , அறிதல், புரிதல், சிந்தித்தல், தற்காலிக நினைவுகள் போன்றவற்றை செயல் படுத்தி இவைகள் நீண்ட கால பரிமாணங்களாக மாறும் வரை நிலைபெறச்செய்து காப்பாற்றுகின்றன.

மூளையின் பின் புறத்து மடல் (Occipital Lobe) ஒளி, ஒலி சம்பந்தப்பட்ட அதிர்வுகள், நினைவுகள், உணர்வுகள் ஆகியவற்றைத் தம்மிடம் தக்கவைத்துக்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் உதவுகின்றன.

மூளையின் சுவர் மடல்கள் (Parietal Lobe) கூரிய சிந்தனை, (critical thinking ), புத்தி கூர்மை, கவனம், போன்ற பல செயல்களுக்கு உதவியாக இருக்கின்றன.

மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் அமைந்துள்ள பொட்டு மடல்கள் (Right and lieft Temporal lobes) நமது உணர்வுகளின் தாக்கம், வேகம் மற்றும் மாறுபட்ட சிந்துக்கும் திறன்களை உதவியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கற்றலின் பல பரிமாணங்களை நமது மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நமக்கு மூளையின் சிறப்பும் கற்றலின் சிறப்பும் வெளிப்படுகின்றது.

மூளையின் இத்தனை பகுதிகளையும் இணைத்து அங்குள்ள நியூரான்கள் ஒரு வலையமைப்பு உண்டாக்கி மூளையின் உள்ளே ஒரு மிகப்பெரிய வலைத்தளத்தையே (neural network) அமைத்து பாதுகாத்து கண்காணித்து வருகின்றன. உடலின் தாக்கங்களை உள்ளதிர்வுகளாக ஏற்று அவற்றை பல உறுப்புகளுடன் பரிமாறிக்கொண்டு செயல்படுவதில் இந்த நியூரான்களின் வேகம் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது. அது மட்டுமல்ல, நியூரான்களின் இந்த வலையமைப்புகள் உடலின் ஒவ்வொரு அசைவையும், உணர்வின் தாக்கங்களையும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும்பொழுது அதன் வலையமைப்புக்கள் மாறிவிடுகின்றன. ஆகவே இந்த வலையமைப்புக்களின் மாற்றம் ஒரு தொடர் கதையாக அமைகின்றது. இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்க்கான நோபல் பரிசை  2000 ம் ஆண்டு பெற்ற எரிக் காண்டல் என்ற மூளை நரம்பியல் நிபுணரின் கருத்துப்படி இந்தத் தொடர்மாற்றங்கள் கற்றலுக்கு அடிப்படையாகவும் அறிவின் பரிமாணங்களில் மாற்றலுக்கு முன்னோடியாகவும் திகழ்கின்றன.

ஆகவே, ஒரு பள்ளிக்குச் செல்லும் மாணவனின் மூளையின் வலையமைப்புக்கள் காலையில் இருக்கும் வண்ணம் மாலையில் இருப்பதில்லை.. அதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. இதன் காரணமாக காலையில் அவன் கற்ற பாடங்களின் கருத்துக்களின் தாக்கம் மாலைவரை அதே பரிமாணங்களில் இருக்கும் என்றோ, அதன் நினைவலைகள் அப்படியே மூளையில் பாதுக்காக்கப்படுமென்றோ நினைப்பதும், எதிர்பார்ப்பதும் தவறு. ஒரு நேரத்தின் கற்றல்கள், அதன் பரிமாணங்கள், தாக்கங்கள் , காலம் நேரம்,சுற்றுச்சூழ்நிலைகள், ஒரு தனிப்பட்ட மாணவரின் மனநிலைகள் ஆகியவற்றிற்க்குத் தகுந்தவாறு மாறுபட்டும், பாதிக்கப்பட்டும், பண்பட்டும் இருக்க அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. இதை நாம் கருத்தில் கொண்டால் ஏன் கற்றலின் வகைகளும் தரங்களும் நோக்கங்களும் கற்பவர்களிடையே மாறுபட்டு இருக்கின்றது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *