Year: 2020

  • படக்கவிதைப் போட்டி 256-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 256-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டைத் தம் படக்கருவிக்குள்  பத்திரப்படுத்திவந்து படக்கவிதைப் போட்டி 256க்கு வழங்கியிருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள படமிது. திருமிகு. ராமலக்ஷ்மிக்கு என் நன்றி!

    ”கொரோனா வைரசுக்குப் பயந்து பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது; சிறுத்தையே வெளியில் வா!” என்று நாம் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ந்து பாடும்நாள் எந்நாளோ தெரியவில்லை.

    சிந்தனையைத் தூண்டும் இந்தப் படத்திற்கு கவிவடித்துத் தர நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    ”பணிபோனதால் பூட்டும் போனது; வாட்டும் நோயது தொற்றிடாமல் வீட்டிலிருப்போம் பாதுகாப்பாய்!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வீட்டிலிருப்போம்…

    பூட்டும் போனதே பணியின்றி
    புதிதாய் வந்தநோய்ப் பகையாலே,
    வீட்டைப் பூட்டத் தேவையில்லை
    வெளியே செல்ல வேண்டாமே,
    வாட்டும் நோயது தொற்றிடாமல்
    வருந்திடா திருப்போம் வீட்டினுள்ளே,
    ஓட்டி யதனை விரட்டும்வரை
    ஒன்றா யிருப்போம் ஒட்டாமலே…!

    *****

    பூட்டின் உபயோகத்தை, மனிதர்கள் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் இந்த இக்கட்டான காலத்திலும் பூட்டு சுதந்தரமாக வெளியுலகைப் பார்க்கும் வேடிக்கையை, திருடனிடம் செல்லுபடியாகாத பூட்டின் சாமர்த்தியத்தை எனப் பூட்டு குறித்த தம் சிந்தனைகளை மூன்று கவிதைகளில், வெவ்வேறு கோணங்களில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. காந்திமதிநாதன்.

    கவிதை 1

    ஒருநாள் தேவைப்படுவாய் என்றுதான் பூட்டே உன்னை வேலியினில் பத்திரமாக்கி இருக்கிறேன்…

    வேண்டாத பொருளென எதுவும் இல்லாத உலகில்
    வேண்டும் பொருளாகிய உன்னைப் பார்வை படும்படி பத்திரப்படுத்தி இருக்கிறேன்!

    அறிவைத் திறப்பது நூல் என்றால் உன்னைத் திறப்பது சாவி!

    அன்பைத் திறப்பது மனிதநேயம் என்றால் உன்னைத் திறப்பதும் சாவி!

    மவுனம் கடைப்பிடிக்க வாய்க்கு வார்த்தை பூட்டு என்றால் தேவைப்படும் நேரத்தில் பூட்டே நீ பூட்ட தேவைப்படுவதால் இப்போது கண்முன்னே பூட்டப்பட்டு இருக்கிறாய்!

    தனிமைச்சிறையில் நீ மட்டுமில்லை என் பூட்டே

    உலக மாந்தர்கள் பலர் ஊரடங்கு தனிமைச் சிறையில்!

    நீயாவது வெளி உலகைக் காண்கிறாய்

    உன்னை தொங்கவிட்டு வீட்டிற்குள் யானோ ஒரு மண்டலம் நோக்கி!

    *****

    கவிதை 2

    உபயோகமில்லை என நினைக்காதே! உபயோகப்படுவாய் என நினைத்தே பாதுகாப்பான இடத்தில்! பாதுகாக்க இடமா இல்லையெனக் கேட்கலாம்.. பத்திரமாக உன்னை வைத்து இருப்பதே யான் கொரானாவில் இருந்து தப்பிக்கவே…காலை மதியம் இரவு மூன்று வேளையும் உணவு உண்ண வருவார்கள் வீடற்றோர்..வீடிருந்தும் கையில் காசற்றோர்..வெளி மாநில என் இந்திய சொந்தங்கள்…காலை ஆறு மணிக்கு உன்னைத் திறந்து இரவு பத்து மணி வரையில்தான் பாதுகாப்பாக இங்கே தொடங்குகிறாய்!

    எந்தக் கைரேகையும் உன்மீது பட்டு நான் தொட்டுவிட்டால் எனது தொண்டு தடைப்படுமே என்பதாலே
    எவர் கண்ணிலும் படாமல் என் கண்களுக்கு படும்படி!

    *****

    கவிதை 3

    சாவி இல்லையேல் பூட்டே நீயில்லை..யாரிடம் சாவி இருக்கிறதோ அவருக்கே நீ சொந்தம்..திருடனிடம் செல்லாது உனது வைராக்கியம்.. குறுக்கு வழியில் செல்வதற்குத்தான் நீயும் வழி விடுகிறாய்..பலப்பல பூட்டுகள் உடைக்கப்பட்டு தான் கொலை கொள்ளைகள்…உடைபட வேண்டாமே என்பதற்காகப் பாதுகாப்புத் தேடிக் கொண்டாயோ?

    *****

    பசுமைச் செடிக்குக் காவலாய்ப் பூட்டுப் போட்டது சரியே என்று தம்முடைய முதல் கவிதையில் உரைக்கும் திருமிகு. சுதா மாதவன், பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்கும் காலத்தின் கோலத்திற்கு வருந்திப் பசுமையை எங்கும் கொணர்ந்து பாரதத்தைச் செழிக்கச் செய்வோம் எனச் சூளுரைக்கின்றார் இரண்டாவது கவிதையில்.

    கவிதை 1

    பசுமைச் செடிக்குக் காவல்போடப் பூட்டு
    சரியே
    இல்லையெனில்
    வரைபடம் வரைந்து வானுயரடுக்கு மாடி ஆகிடுமோ?
    விலைக்கு வாங்கக் கூட்டம் ஏராளமிருக்க
    பசுமைச் செடிக்குப் பூட்டு
    சரியே!

    *****

    கவிதை 2

    பசுமைச் செடிகளைப் பார்க்கும்போது
    பரவசம் மனதில் தோன்றுதே!
    செழுமையின் பிரதிபலிப்பேயெனச்
    சிந்தனை கொள்ளத் தோன்றுதே

    பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்க
    இன்றைய காலம் உருவானதே
    வளமிகு ஆற்றின் மணலை அள்ளி
    பணம் தினம் பார்க்கத் தோணுதே!

    பாய்ந்தோடும் நதிக்கரையினிலே
    பலமிகு வீடுகள் உருவானதே
    ஏரினை உழுதுச் சோற்றினைப் புடைக்கும்
    விவசாயி கண்ணில் ஏக்கம்தான் தெரியுதே!

    இவைகளைத் தவிர்த்து எங்கும் பசுமையைக் கொணர்ந்து
    வளமிகு வாழ்வை உருவாக்குவோம்!
    நோயினாலான சிவப்பு மண்டலம்
    பசுமையாய் மாற்றிப்
    பாரதம் செழிக்க உதவுவோம்!
    நாம் இந்தியரென்றே உணர்த்துவோம்!

    *****

    கொரோனாவை எதிர்த்துக் கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் இந்த உலக யுத்தத்தில் மானுட வாழ்க்கையே வீட்டுக்குள் முடங்கிப்போனது! வேலியில் இட்ட பூட்டு நம் வழி அடைத்ததை விளக்க எவருமில்லை. எனினும், இந்தப் பூட்டைத் திறக்க நாளை புதிய சாவி கிட்டும்! பூமிப்பந்து மீண்டும் புதிதாய்ச் சுற்றும் என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    கத்தியின்றி ரத்தமின்றி
    யுத்தமொன்று நடக்குது
    இருட்டுக்குள் எதிரியைத்தேடி
    என்னென்னவோ நடக்குது

    வெறிச்சோடிய வீதிகளில்
    விலங்குகள்தான் அலையுது
    வீட்டிற்குள் முடங்கிக் கிடந்து
    விரக்தியிலே மனம் தவிக்குது

    மூக்குமூடி வாய்பொத்தியே
    திருமணங்கள் நடக்குது
    எடுத்துச் செல்ல ஆட்களின்றி
    இறுதி யாத்திரைகள் நகருது

    பாதிக்கப்பட்டோர்
    பலியானோர்
    மீண்டோர்
    பட்டியலைப் பார்த்துப் பார்த்து
    பார்வை கூட மங்குது

    மூன்று திங்களாய்க்
    கொரானா என்னும்
    ஒற்றைச் சொல்லில்தான்
    உலகம் முழுமையும் சுழலுது

    எங்கிருந்தோ எதிலோ வந்து
    எங்கிருப்போர் உயிரையெல்லாம்
    ஏலம் விட்டுச் சிரிக்குது
    உலகாண்ட தேசமெல்லாம்
    செயல் மறந்து நிற்கிறது

    வேலியில் இட்ட பூட்டு அது
    வழி அடைத்தது எவ்வாறு
    விபரம் சொல்ல எவருமில்லை
    நாளை இந்த நிலை் மாறுமென
    நம்பிக்கைத் தரவும் யாருமில்லை

    ஆனாலும்
    பூட்டைத் திறக்க
    புதிய சாவியொன்று
    நிச்சயமாய்க் கிடைக்கும்
    பூமிப்பந்து அன்று
    புதிதாய்ச் சுற்றும்!

    *****

    பழமைப் பூட்டுக்கு இடப்பட்ட புது வேலியிது என்று மொழியும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன், அமைதியை அகிம்சையை அடிமைத்தனமென்று ஒதுக்கி வன்மத்தை, வன்முறையை வீரமென்று உரைக்கும் நம் புன்மையைச் சாடுகின்றார் தம் கவிதையில்.

    புது வேலி

    புதுமைகள் புகும் நல்வேளையிலே
    கலாசாரக் காவலன் நாமென்று கூவிப்
    பழமை என்னும் பூட்டுக்குப்
    புது வேலி செய்து காவலிட்டோம்..

    கண்ணியமான அன்பதனைக்
    கடிவாளம் போட்டு ஒதுக்கி வைத்தோம்
    காமக்களிக் கூத்தினையே – உண்மைக்
    காதல் என்றே காட்சி செய்தோம்..

    அமைதி சாந்தி அகிம்சையெலாம்
    அடிமைத்தனம் என்றொதுக்கி
    வன்மமும் வன்முறையும் வீரமென்று
    வருந்தலைமுறைக்குப் பாடம் சொன்னோம்..

    உண்மை நேர்மை என்பதெல்லாம்
    வெற்றிக்குதவா வீண்செயலாக்கி
    பொய்யும் புரட்டும் திறமையென – புதுத்
    தத்துவம் சொல்லி வாழுகின்றோம்…

    *****

    பூட்டுக்குள்ளே நல்ல கருத்துக்களென்னும் அதிர்வேட்டுக்களை வைத்து வெடிக்கச் செய்திருக்கும் கவிவலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பூட்டு

    எங்கெங்கோ தேடுகிறேன்
    இங்கேயா நீயிருந்தாய் ?
    வேலியின் மீதுன்னை
    வேண்டாமெனத் தொங்கவிட்டோம்

    வண்ணக் கதவுகளை உன்னை
    வைத்துப் பூட்டிடலாம் – எங்கள்
    எண்ணக் கதவுகளை – எதைவைத்துப்
    பூட்டுவது ?

    என்னுள்ளே எண்ணங்கள் வந்து
    ஏதேதோ பந்தலிடும் – ஒன்றிரண்டு
    உன்னிடத்தில் நான் இங்கு
    உரைத்திட வந்துள்ளேன்!

    எப்படிக் கேட்பதன்று பூட்டே உனக்கு
    ஏன் இத் தயக்கம் ? உனக்குத்தான்
    இரு செவிக்கு பதில் ஓர் துளை
    இருக்கிறதே! கேள்.

    இயற்கையை மறந்து விட்டு
    இயந்திரமாகிவிட்டோம்…
    விழிகளை விற்று விட்டு
    வீண் ஓவியங்கள் வாங்கிவிட்டோம்

    உல்லாச வாழ்வதனில்
    உயர் மூத்தோர் சொல் மறந்தோம்
    கொரோனாவின் கரங்களால்
    கோரமாகிப் போய் விட்டோம்.

    ஊரடங்கு வந்து எங்கள் காதுகளில்
    உரைத்தது, அது எங்களுக்கும் உறைத்தது
    விண்ணகத்து மூத்தோர் உரை
    விரைவாகப் புரிந்து கொண்டோம்

    சுத்தமும், விலகலுமே
    சுகமென்று அறிந்து கொண்டோம்
    திறவுகோலைக் கண்டுகொண்டு
    திறந்து விட்டோம் மனப் பூட்டை

    சீர்க் காவலரும், மருத்துவரும் ,
    செவிலியரும், துப்புரவுத் தோழர்களும்
    பாங்காக உழைத்தார்கள் பாரினிலே
    பூட்டே எங்களுக்குப் புரிந்தது தெளிவாக.

    வேட்கைகளை விட்டொழித்தோம்
    விடியல் வரக் காத்திருந்தோம்
    அன்பு சூழ் உலகு என்று
    அனைவருமே அறிந்து கொண்டோம்.

    ”பூட்டே கேள்!” என்று விளித்து, உல்லாச வாழ்வதனில் உயர் மூத்தோர் சொல் மறந்தோம்! ஊரடங்கு எங்கள் காதில்வந்து உரைத்ததும்தான் மூத்தோர் மொழியின் அருமை எங்களுக்கு உறைத்தது! மனப்பூட்டைத் திறந்துவிட்டோம்! அன்புசூழ் உலகே அழகானது என்று உணர்ந்துவிட்டோம்!” என்று இன்றைய வாழ்க்கைச் சூழலை எதார்த்தமாகத் தம் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

    அண்ணாகண்ணன்

    எனது யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியாக, அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இந்த முதல் பதிவில், முகநூல் (பேஸ்புக்) நண்பரும் வல்லமை வாசகருமான சுதா மாதவன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன்.

     

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள், யோசனைகள், கருத்துகள், பின்னூட்டங்கள் இருந்தால், வீடியோவில் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒளவையாரின் ஆத்திசூடி அமைப்பும் நிலைப்பாடும்

    ஒளவையாரின் ஆத்திசூடி அமைப்பும் நிலைப்பாடும்

    முனைவர் சொ.சேதுபதி
    தமிழ்த்துறைத் தலைவர்
    பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
    புதுச்சேரி- 605003
    sethukabilan@gmail.com

    ஆத்திசூடி என்பது ஓர் அடியில் அறம் உரைக்கும் நீதிநூல் ஆகும். தமிழ்மொழியில் உள்ள உயிர். மெய் மற்றும் உயிர்மெய்யெழுத்துக்களை முதலாக உடைய  சொற்களைக் கொண்டு தொடங்கும் ஒவ்வோர் அடியிலும், ஓர் அறச் செய்தியைச் சொல்லுவது இதன் மரபாகும். இந்த நூலை இயற்றிய ஒளவையார், ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்திப் பாடி’த் தொடங்குகிறது. ஆத்திசூடி எனத் தொடங்குவதால், இந்நூலுக்கு ஆத்திசூடி என்றே பெயர் அமைந்திருக்கிறது. இதேபோல், ஒளவையார் பாடிய மற்றொரு அறநூல், கொன்றைவேந்தன் ஆகும். அதுவும் ‘கொன்றை வேந்தன்’ என்று தொடங்குவதால், அப்பெயர் பெற்றது.

    தமிழ் எழுத்துகளை முதலாகக் கொண்டு அமைந்த நூல்கள் இவை என்பதால், இந்த நூல்களின் தொடக்கச் சொற்களே இந்நூல்களுக்குப் பெயர்களாக அமைந்திருப்பதும் பொருத்தம்தான்.

    ஒளவையாரின் ஆத்திசூடியும் தமிழ் எழுத்துக்களும்

    தமிழின் எழுத்துக்கள் மொத்தம் முப்பதாகும். அவை, ‘அகரம்’ தொடங்கி, னகர இறுவாயான, ‘ன்’ வரையிலான எழுத்துக்களாகும். இதனை,

    “எழுத்தெனப் படுவ
    அகர முதல்
    னகர இறுவாய் முப்பஃதென்ப” (தொல்.எழுத்து.நூன்மரபு – 1)

    என்று தொல்காப்பியர் சொல்கிறார். எழுத்துக் முதல், சார்பு என இருவகைப்படுகின்றன. அவற்றுள் முதல் எழுத்தானது உயிர் (12), மெய் (18) இவை இரண்டும் இணைந்து எண்ணிக்கையில் முப்பது (30) ஆகிறது. இதனைப் பவணந்திமுனிவர்,

    “உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” (நன்னூல் – எழுத்து- 59)
    என்கிறார்; மேலும், சார்பு எழுத்துக்கள் பத்தினை,
    “உயிர்மெய், ஆய்தம், உயிரளபு, ஒற்றளபு
    அஃகிய, இ,உ,ஐ,ஒள, மஃகான்
    தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும் (நன்னூல் – எழுத்து- 60)

    எனச் சூத்திரம் சொல்லி எடுத்துரைக்கிறார். அவை, உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகியனவாகும்.

    தொல்காப்பியர், முதல் எழுத்துக்களுள் முதலாவதாகிய உயிர் எழுத்துகளை, அ’ முதல் ‘ஒள’ வரையிலாக, (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள) பன்னிரண்டு என வகைபிரித்துக் காட்டுகிறார்.

    “ஒளகார இறுவாய்ப்
    பன்னீரெழுத்தும் உயிரென மொழிப” (தொல்.எழுத்து.நூன்மரபு-8)

    அதுபோல், மெய்யெழுத்துக்களை, ‘க்’ முதல் ‘ன்’ வரை, (க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்) பதினெட்டு எனக் கணக்கிட்டுக் காட்டுகிறார்.

    “னகர இறுவாய்ப்
    பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப” (தொல்.எழுத்து.நூன்மரபு-9)

    இவையிரண்டும் சேர்ந்து வருகிற உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஆகின்றன. இதை,

    “உயிர்மெய் இரட்டுநூற்றெட்டு” (நன்னூல்- எழுத்து- 61)

    என்று பவணந்திமுனிவர் சொல்கிறார். உயிரும் மெய்யும் இணைந்து வரும் எழுத்துக்கள், தமக்குரிய புள்ளியை விட்டுவிட்டு, அகரத்தோடு கூடியும் பின்னர் உள்ள பதினொரு உயிர்எழுத்துக்களோடு உருவு திரிந்தும் உயிர்ப்புறும் என்று இவ்விரு இலக்கண ஆசிரியர்களும் பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றனர்.

    “புள்ளி இல்லா எல்லா மெய்யும்
    உருவுரு ஆகி யகரமோ(டு) உயிர்த்தலும்
    ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும்
    ஆயீரியல உயிர்த்தல் ஆறே.” (தொல்.எழுத்து.நூன்மரபு-17)

    “புள்ளிவிட்டு அவ்வொடு முன்னுரு வாகியும்
    ஏனை உயிரொடு உருவு திரிந்தும்
    உயிர்அள வாயநன் வடிவொழித் திருவயிற்
    பெயரொடும் ஒற்றுமுன்னாய் வரும் உயிர்மெய்.” (நன்னூல்- எழுத்து- 89)

    இவற்றுள், மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டுகின்றது நன்னூல்.

    “பன்னீ ருயிரும் க,ச,த,ந, ப,ம,வ, ய
    ஞ,ங ஈரைந்துயிர்மெய்யும் மொழிமுதல்” (நன்னூல்- எழுத்து- 102)
    “உ,ஊ,ஒ,ஓ,வலவொடு வம்முதல்” (நன்னூல்- எழுத்து- 103)
    “அ,ஆ,உ,ஊ,ஒ,ஒள யம்முதல்” (நன்னூல்- எழுத்து- 104)
    “அ.ஆ,எ,ஒவ்வோ டாகும் ஞம்முதல்” (நன்னூல்- எழுத்து- 105)

    இவற்றுள் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, அகரத்துடன் இணைந்த உயிர்மெய்யெப்யெழுத்துக்கள் பதினெட்டு, இவற்றோடு மொழிமுதல் வருகிற உயிர்மெய் வருக்க எழுத்துக்கள் ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்குகிற கட்டளைகளை ஒளவையார் தம் ஆத்திசூடியில் பயன்படுத்தியிருக்கிறார்.

    ஒளவையாரின் ஆத்திசூடியில் உயிர் வருக்கமும் உயிர்மெய் வருக்கமும்

    ஒளவையாரின் ஆத்திசூடியானது, ‘அ’கரம் தொடங்கி, ‘வோ’காரம் வரையிலான, எழுத்துக்களை முதலாகக் கொண்டு, மொத்தம் 109 எழுத்துக்களுக்கும், ஓர் அடியில் உலக அறன் உரைப்பதாக அமைந்துள்ளது.

    தொடக்கமாக, ‘அ’கரம் தொடங்கி, ‘ஒள’காரம் வரை உள்ள உயிர் வருக்க எழுத்துக்களை முதலாகக் கொண்டு, ‘அறம் செய விரும்பு’ – ‘ஒளவியம் பேசேல்’ வரை பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுக்கும் ஆத்திசூடிக் கட்டளைகள் அமைகின்றன.

    தனிநிலை, ஆய்தம் என்று குறிக்கப்பெறும் ‘ஃ’ மொழி முதலில் வராது என்பதால், ‘அ’கரத்தை முன்வைத்து, ‘அஃகம் சுருக்கேல்’ என்று அமைகிறது. அதுபோல், ‘ங’ மொழி முதல் வராதது. ஆனால், அந்த எழுத்தைச் சுட்டிக் காட்டுவதற்காக, மொழிமுதலில் அதனை அமைத்து, ‘ஙப்போல் வளை’ என்று ஒளவையார் பாடியது அறமுரைக்கும் பாங்கின் மணிமுடி என்றே கொள்ள வேண்டும்.

    ‘ங’கர வருக்க எழுத்துக்களான, ஙா, ஙி,ஙீ, ஙு, ஙூ,ஙெ, ஙே, ஙை, ஙொ,ஙோ, ஙௌ ஆகியவை பெரிதும் பயன்படாதவை என்றாலும், ஙகர வருக்கத்தில் தோன்றிய காரணத்தால் அழியாது இருக்கின்றன. இத்தனை எழுத்துக்களையும், ‘ங’ வளைத்துக் காப்பதுபோல், சுற்றத்தைப் பேணிக் காக்கிற அறமும் தேவை என்பதால், ‘ஙப்போல்’ என்ற உவமையைத் தந்து ‘வளை’த்துக் கொள்ளச் சொல்கிறார் ஒளவையார்.

    உயிர் எழுத்துக்களாகிய பன்னிரண்டு எழுத்துக்களோடு, மெய்யெழுத்துக்களாகிய 18 எழுத்துக்களும் சேர்ந்து உண்டாகும் முப்பது எழுத்துக்கள் (12+18=30) உயிர்மெய் வருக்க எழுத்துக்கள் ஆகின்றன.

    ‘க்+அ=க’, இதுபோல், ஏனைய 17 மெய்யெழுத்துக்களும், ‘அ’கர உயிர் எழுத்துடன் இணைந்து முறையே, ங,ச.ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனப் பதினேழு எழுத்துக்களாக உருவாகின்றன. ஆக, மொத்தம் பதினெட்டு எழுத்துக்களுக்கும் பதினெட்டுக் கட்டளைகள் ஒளவையாரின் ஆத்திசூடியில் பாடப்பெற்றுள்ளன.

    ஆக, உயிர் எழுத்துக்கள் – 12, ஆய்த எழுத்து –  1, அகர உயிர்மெய் எழுத்து 18 ஆகிய முதல் எழுத்துக்களை முன்வைத்து அமைந்த சொற்களில், 31 கட்டளைகளை ஒளவையார் பிறப்பித்துள்ளார்.

    இவற்றை அடுத்து, பிற உயிர் எழுத்துக்களுடன் இணைந்த மெய்யெழுத்துகளுள் மொழி முதலாவதாக வரக்கூடியவற்றையும், மொழி முதலாக வர இயலாத நிலையில், அகர, இகர, உகர எழுத்துக்களை முதற்கொண்டு  வரக்கூடியவற்றையும் வைத்து, 78 கட்டளைகளைத் தந்துள்ளார்.

    அவற்றுள், ட, ண, ய, ர, ல, ழ,ள,ற.ன ஆகிய ஒன்பது எழுத்துக்கள் மொழிமுதல் வராதவை. எனவே, அவை ‘அ’கர, ‘இ’கர உயிர் எழுத்துக்களை முன்னதாகக் கொண்டு அமைகின்றன. ‘அ’கரத்தை முதலாகக் கொண்டு அமைந்த எழுத்துக்கள், ர, ழ, ற, ன ஆகிய நான்காகும். ‘இ’கரத்தை முன்வைத்து அமைந்தவை, ட, ண, ய,ல,ள, என ஐந்தாகும். அவை பின்வருமாறு:

    ர – அரவம் ஆட்டேல் (25)
    ழ – அழகு அலாதன செய்யேல் (28)
    ற – அறனை மறவேல் (30)
    ன – அனந்தல் ஆடேல் (31)
    ட  – இடம்பட வீடு எடேல் (18)
    ண – இணக்கம் அறிந்து இணங்கு (19)
    ய – இயல்பு அலாதன செய்யேல் (24)
    ல – இலவம் பஞ்சில் துயில் (26)
    ள – இளமையில் கல் (29)

    மொழி முதலாக வரும் வகர வருக்க எழுத்துக்களுள்ளும் மொழிமுதல் வாரா நான்கு எழுத்துக்களுக்கு, உகர, ஒகர, ஓகார உயிர் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:

    வு – உத்தமனாய் இரு (103)
    வூ – ஊருடன் கூடிவாழ் (104)
    வொ – ஒன்னாரைத் தேறேல் (108)
    வோ – ஓரம் சொல்லேல் (109)

    ஒளவையாரின் ஆத்திசூடியில், ஙகர, ஞகர எழுத்துக்கள் போக, ஏனைய அதன் வருக்க எழுத்துக்களில் தொடர்கள் இல்லை. அதுபோலவே, ட,ண,ய,ர,ல,ழ,ள,ற,ன ஆகியவற்றின் வருக்க எழுத்துக்களுக்கும் தொடர்கள் இல்லை. மேலும், சௌ, தௌ, நௌ, பௌ, மௌ, வெள ஆகிய எழுத்துக்களுக்கான தொடர்கள் இல்லை.

    வாழ்தல் வேண்டின்…

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது வாழ்வு.

    “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு” (நிலையாமை- 339)

    என்கிறார் திருவள்ளுவர்.

    “யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
    உறங்குவதும் ஆகமுடியும்” (தாயுமானவர், பரிபூரணானந்தம்-  10)

    என்கிறார் தாயுமானவர். உண்பது, உறங்குவது, விழிப்பது என்கிற அளவில் நகரும் வாழ்வில் இருப்பது எப்போது? இயங்குவது எப்படி என்கிற நிலைகளில்தான் நிலையாமையை எதிர்கொண்டு நிலைக்கின்ற ஆற்றலை மனிதகுலம் பெறுகிறது. அதுவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பதாகிறது. அதற்கான வழிமுறைகளை எழுத்துவருக்கங்களின் வரிசையில் எடுத்துச் சொன்னாலும், அதனைப் பொருண்மை அடிப்படையில் பொருத்திப் பார்ப்பதும் தேவையாய் இருக்கிறது.

    உறங்குதல், விழித்தல் என்பது அன்றாட நிகழ்வு. எப்படி உறங்குவது எப்போது எழுவது என்பதற்கு இரு கட்டளைகள் இடுகிறார். இலவம் பஞ்சில் துயில் (26) என்கிற ஒளவையார், வைகறைத் துயில் எழு (107) என்று எழுப்பிவிடுகிறார். அதுபோல் கற்றலும் நிற்றலும். கற்றலுக்கு உரியன எண்ணும், எழுத்தும். அதனால், எண் எழுத்து இகழேல் (7) என்கிறார். அதனைக் கற்றலே மனித வாழ்வின் அடிப்படைக் கடப்பாடு. அதிலும் இளமையில் கற்றலே ஏற்புடையது என்பதால், இளமையில் கல் (29) என்கிறார். எதனைக் கற்பது என்ற கேள்வி கூடவே எழுதல் இயல்பு. அதற்குப் பதில், நூல் பல கல் (71).

    ‘கற்றதனால் ஆய பயன்என் கொல்?’ எனக் கேட்ட திருவள்ளுவர், ’வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ (கடவுள் வாழ்த்து-2) என்றார். ஒளவையாரோ, தெய்வம் இகழேல் (61) என்கிறார். இப்போக்கு அவர் காலத்திலேயே வந்துவிட்டதுபோலும். அந்தவகையில், கற்றலின் மூலமாக அகற்றிக் கொள்ளவேண்டியவை நான்கு. அவையாவன, 1. கீழ்மை அகற்று (35) 2. கௌவை அகற்று (43) 3. தீவினை அகற்று (58) 4.பேதைமை அகற்று (84) மேலும், கற்கும் முறைமையில் கேள்வி முதன்மையானது. எனவே, கேள்வி முயல் (39) என்றார். இந்த முயற்சிக்கு எதிரிகளாவன நான்கு. அவற்றுக்குக் ‘கெடுநீரார் காமக் கலன்’ என்றே பெயர் சூட்டுகிறார் திருவள்ளுவர்.

    “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்” (மடியின்மை- 605)

    என்பது குறள். இதில், நெடுநீர்மை- தாமதம்; மறவி- மறதி; மடி- சோம்பல்; துயில்- தூக்கம். இவை நான்கும் கெடுநீரார் காமக்கலன்- இதற்கு, ‘இறக்கும் இயல்பினையுடையார்  விரும்ப  ஏறும் மரக்கலம்’ என்று விளக்கம் கொடுக்கிறார் பரிமேலழகர்.

    வாழ்தல் வேண்டி, மரக் கலம் ஏறி, பொருள் தேடப் போனவர்கள் நம் முன்னோர். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ (கொன்றைவேந்தன் – 39) என்றும் ஒளவையார் கூறியிருக்கிறார். ஆனால், திருவள்ளுவரோ, இறப்பதற்கென்றே விரும்பி ஏறுவோர்க்குரிய மரக்கலம் என்று இவற்றைக் குறிக்கின்றார். இதற்கு மறுதலையான அறங்களைத் தம் ஆத்திசூடியில் ஒளவையார் குறித்திருப்பது சிறப்புக்குரியது. தாமதம் போக்குதற்கு உரிய செயல்பாடு, விரைவு. அதற்காக, தூக்கி வினை செய் (60) என்றும், நன்மை கடைப்பிடி (66) என்றும் கட்டளையிடுகிறார்.  சோம்பலுக்கு எதிர், முயற்சி. சோம்பித் திரியேல் (54) சையெனத் திரியேல் (52) சோம்பலுடனும், பெரியோர் ‘சீ’ என வெறுக்கும்படியாகவும் திரியாதே’ என்று எச்சரிக்கிறார். மாற்றாக, தக்கோன் எனத் திரி (55) என்கிறார். அடுத்தது மறதி. நன்றி மறவேல் (21) அறனை மறவேல் (30) சீர்மை மறவேல் (47) என்ற மூன்று கட்டளைகள் முறையே பிறப்பிக்கப்பெறுகின்றன. இதே வேளையில், கடிவது மற (32) என்று சொன்னதையும் மறந்துவிடலாகாது. நான்காவது துயில், நீடுதுயில் மரணம் நிகர்த்தது. எனவே, அனந்தல் ஆடேல் (31) என்கிறார். கைக் கொள்ள வேண்டிய அறங்களைப்போலவே, கைவிடலாகாதனவாக,  ஊக்கமது கைவிடேல் (6) குணமது கைவிடேல் (36) என்பனவற்றையும் அவர் எடுத்துரைக்கின்றார்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ…

    ஒளவையாரின் ஆத்திசூடியானது, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டிய அறநெறிகளை எடுத்துரைக்கும் அழகிய கட்டளைக் கொண்டது. வாழ்தலுக்குரிய கட்டளைகளாக, ஐந்தினை அவர் பிறப்பித்துள்ளார்.

    உடலும் உயிரும் ஒன்றி வாழ்தல் எவ்வுயிர்க்கும் இயல்பு. மனித வாழ்வோ, வாழ்வாங்கு வாழ்தற்குரியது. இதற்கு, வாழ்வித்து வாழ்தல் என்று பொருள். பிறவுயிர்களுக்குப் பயன்படுமாறு, அவற்றை வாழ்வித்துத் தானும் வாழ்தலே வாழ்வு. அதனால்தான், கிழமைப்பட வாழ் (34) என்கிறார் ஒளவையார். கிழமை என்பதற்கு உரிமை என்று பொருள். உடலும் உயிரும் பிறருக்கு உரிமையாகும்படியாகப் பயனுற வாழ்தல் என்பது பெறுதற்குரிய பொருள்.

    “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதிய மில்லை உயிர்க்கு” (புகழ்- 231)

    என்கிறது திருக்குறள். இவற்றுக்கு இன்றியமையாதது பொருள். எனவே, பொருளையும் புகழ்ந்தாரையும் போற்றுதல் வாழ்தலின் இன்றியமையாக்கூறுகள். எனவே, ‘போற்றிவாழ்’ என்ற முடிவுடன், புகழ்ந்தாரைப் போற்றி வாழ் (81), பொருள்தனைப் போற்றி வாழ் (86) என்று சொல்லப்பெற்றது. அடுத்த கட்டளைகள், வாழிடத்தோடு தொடர்புடையவை.

    “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” (ஒழுக்கமுடைமை-140) என்கிறது திருக்குறள். ஆத்திசூடியோ, தேசத்தோடு ஒட்டி வாழ் (62) என்கிறது. உலகநெறிகட்கும் வழிகாட்டுவது நாட்டுநெறி. எனவே, தேசத்தோடு பொருந்தி வாழ்தல் கடப்பாடாகிறது. அதற்கேற்ப, ஊருடன் கூடி வாழ் (104) என்றும் பிறிதொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றது. அவ்வாறு இல்லாமல், ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (கொன்றைவேந்தன்-6) என்றும் அவரே எச்சரித்திருக்கிறார். இங்கு ஊரும், தேசமும், உலகமும் உயர்ந்தோரை முன்னிறுத்திச் சொல்லப்பெற்றது என்பதையும் மறந்துவிடக்கூடாது. “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” (தொல¢காப¢ப¤யம¢, பொருள¢, மரப¤யல¢ 96) என்கிறது தொல்காப்பியம்.

    உயிரினும் சிறந்தது ஒழுக்கம்

    உயிரினும் சிறந்ததான ஒழுக்கத்தை வலியுறுத்திய வள்ளுவம் அதனையும் ஓர் உடைமையாக்கி, ‘ஒழுக்கமுடைமை’ என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே படைத்துள்ளது. அதனை அடியாகக் கொண்ட ஒளவையார், ஒழுகு என்ற சொல்லுடனான இரண்டு கட்டளைகளைத் தன் ஆத்திசூடியில் ஒளவையார் தருகிறார்.

    ‘ஒப்புரவறிதல் அறிதல்’ என்ற திருக்குறள் அதிகாரத்தின் பிழிவாக 1. ஒப்புரவு ஒழுகு (10) என்பதைக் கொள்ளலாம். அதிலும் நேர்மை தவறாமல் இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, 2. நேர்பட ஒழுகு (73) என்றும் கட்டளையிடுகிறார். இதற்கு மறுதலையாவது, கரத்தல். அதாவது மறைத்தல். இயன்றதை மறைக்காமல் கொடுத்தலும், இயற்றுதற்குக் காரணமான கைத்தொழிலையும் மறைக்காது செய்தலும் அறமாகும் என்பதால், இயல்வது கரவேல் (3), கைவினை கரவேல் (40) என்பன சொல்லப்பெற்றன.

    எதிர் எதிர் நிலைகளில் பிறக்கும் கட்டளைகள்

    ஒளவையாரின் ஆத்திசூடியில் உடன்பாட்டுநெறியாகச் சொல்லப்பெற்றவை 52 கட்டளைகள். எதிர்நிலை யாகச் சொல்லப்பெற்றவை, 57 கட்டளைகள். அவற்றுள், நேருக்கு நேர் எதிரானவையாக நிறுத்திப் பார்க்கத் தக்கன பல. ஒருவகையில் இதுவோர் உத்தியே போலக் கவனத்திற் கொள்ளத்தக்கதாக அமைவதையும் இங்கு கவனத்திற் கொள்ளலாம். அக்கட்டளைகள் பின்வருமாறு:

    1. விரும்பு  X  விரும்பேல்

    ஒளவையார் விதித்த ஆத்திசூடிக் கட்டளைகளுள், ‘விரும்பு’ என்றும், அதற்கு எதிர்நிலையாக விரும்பேல் என்றும் சொல்லப்பெற்ற கட்டளைகள், முறையே மூன்றாகும்.

    அறம் செய விரும்பு (1) இதற்கு எதிர்நிலையாக உணர்த்தப்பெற்ற அறம், கொள்ளை விரும்பேல். (41) அறத்திற்கு எதிரானது கொள்ளை. ‘அறம் செய விரும்பு’ என்கிற ஒளவையார். ‘கொள்ளை’க்கு அடுத்து வேறெந்தச் சொல்லையும் இடாமல், ‘விரும்பேல்’ என்கிறார். கொள்ளையின்பால் விருப்பம் வந்துவிட்டாலே அதைச்செய்வதற்கு நிகராகிவிடுகிறது. அது சூதினும் தீது. அறம் செய்வதற்குப் பொருள் தேவை என்ற நிலையில் கொள்ளையிட்டு அறம் செய்யலாம் என்று நினைத்துவிட்டாலே அறம் மீறிய அபாயம் நேரும். எனவே, அறம் செய விரும்புவதோடு கொள்ளையை விரும்பாதிருப்பதும் இன்றியமையாதது என்று சுட்டுகிறார். அதுபோலவே, தானமும், சூதும்.  விரும்பிய வண்ணம் தானம் பண்ணச் சூதினைக் கைக்கொண்டுவிடக்கூடாது. அதனால்தான், தானமது விரும்பு (56) என்ற ஒளவையார், சூது விரும்பேல் (49) என்றும் சொல்கிறார்.

    வித்தை விரும்பு (101) வித்தையாவது கல்வி. அது பெறும் வாயில் கேள்வி. செவிக்குணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்கு ஈய வேண்டும். அதுவும் சிறிது என்கிறது திருக்குறள். அறிவின் கூர்மை பெறத் தடையாவது மிகையுணவு. நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டால், கல்வியின் சுவை பெற இயலாது எனவே, வித்தை விரும்புதலுக்கு எதிர்நிலை அறமாக மீதூண் விரும்பேல் (91) சொல்லப்பெற்றது.

    2. செய்  X  செய்யேல்

    பருவத்தே பயிர் செய் (22), செய்வன திருந்தச் செய் (50), திருமாலுக்கு அடிமை செய் (57) ஆகிய கட்டளைகளுக்கு நேராகக் கருத்தில் கொள்ள வேண்டியவை, இயல்பு அலாதன செய்யேல் (24), அழகு அலாதன செய்யேல் (28) ஆகியனவாகும்.

    தூக்கி வினை செய் (60), நாடு ஒப்பன செய் (67), நெற்பயிர் விளைவு செய் (72) ஆகியவற்றுக்கு நேர் எதிர், வேண்டி வினை செயேல் (106) – இங்கு வினை என்பது தீவினையைக் குறிக்கிறது. .

    3. இணங்கு  X  இணங்கேல்

    ‘அறிவில்லாத சிற்றினத்தாருடனும், மூர்க்கக்குணம் கொண்டவர்களுடனும்’ இணங்காதே என்பதற்கு, பையலோடு இணங்கேல் (85) மூர்க்கரோடு இணங்கேல் (93) என்னும் இரு கட்டளைகளைப் பிறப்பித்த ஒளவையார்,  இதற்கு மாற்றாக, இணக்கம் அறிந்து இணங்கு (19) என்று ஒரே கட்டளையை நிறுத்துகிறார்.

    4. ஒழி  X  ஒழியேல்

    கெடுப்பது ஒழி (38), கோதாட்டு ஒழி (42) என ஒழிக்கத்தக்கனவான இரண்டினைச் சுட்டும் ஒளவையார், ஓதுதலை ஒழிக்கக்கூடாது என்கிறார்; ஓதுவது ஒழியேல் (11) என்பது அவர்தம் கட்டளை.

    5. உரை  X  உரையேல்

    சொல்லுதல், உரைத்தல், பேசுதல், பகர்தல், கூறல், விளம்பல் ஆகியன, உரைத்தல் எனும் பொருள்தரு சொற்களாகும். நயம்பட உரைக்கச் சொல்லும் ஒளவையார், நொய்ய உரைக்காதே என்றும் கூறுகிறார்.

    “நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று” (பயனில சொல்லாமை – 197)
    என்பது குறள்நெறி. அதுவே,
    “பயனில சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கட் பதடி எனல்.” (பயனில சொல்லாமை- 196)

    என்றும் சொல்கிறது. நயனில, பயனில சொல்லாமை சிறந்த பண்பு என்பது இதன்வழி பெறப்படுகின்றது. இவ்விரு குறட்பாக்களின் அடிப்படையில், ஞயம்பட உரை (17), நொய்ய உரையேல் (75) என்னும் இரு கட்டளைகளையும் பிறப்பிக்கின்றார். மொழிவது அற மொழி (97) என்ற அவரே, அதற்குத் துணைசெய்யும்,  மேன்மக்கள் சொல் கேள் (95) என்று கட்டளையிடுகிறார். கூடவே, தையல் சொல் கேளேல் 63) என்றும் சொல்கிறார்.

    சொல்லக்கூடாதவை என்று அவர் சொல்வன ஐந்தாகும். அவை, கண்டொன்று சொல்லேல் (14), சுளிக்கச் சொல்லேல் (48), மிகைபடச் சொல்லேல் (90), பிழைபடச் சொல்லேல் (79), ஓரம் சொல்லேல் (109). இந்த வரிசையில், பகரேல், கூறேல், விளம்பேல், எனக் கொண்டு முடியும் கட்டளைகள் மூன்றாக அமைகின்றன. அவை, பழிப்பன பகரேல் (77), வாது முற்கூறேல் (100), உடையது விளம்பேல் (5) ஆகியனவாகும். கூடவே, பேசேல் எனக்குறிக்கும் ஒளவியம் பேசேல் (12), சித்திரம் பேசேல் (46), வல்லமை பேசேல் (99), வெட்டெனப் பேசேல் (105) நான்கு கட்டளைகளும் பிறக்கின்றன.

    6. உண்  X  உண்ணேல்

    இவ்வுலக வாழ்விற்கு இன்றியமையாதது உணவு.

    “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே” (மணிமேகலை, பாத்திரம்  பெற்ற காதை- 95-96)

    என்று மணிமேகலை பேசும். தான் உண்டு வாழ்வதை விடவும், தம்முடன் வாழ்வோரையும் உண்பித்து வாழ்வது உயர்வு. ஆதலால், ஐயம் இட்டு உண் (9) என்று கட்டளையிடுகிறார். அதற்குத் தேவையான உணவு உற்பத்தியாதல் தேவை. அதற்ககாகப் பூமி திருத்தி, உழவுத் தொழில் புரிந்து உண்க என்ற நிலையில், பூமி திருத்தி உண் (82) என்கிறார். இது நெறி. இந்தப் பண்பு, பற்றாக மாறி, தனக்கான பூமியை விரிவுபடுத்த விழைந்து, நெறிபிறழ்ந்த வெறியாவதால்தான் போர் முதலான புன்மை நேருகிறது. எனவே, மண் பறித்து உண்ணேல் (23) என்றும் மறுதலையாகக் கட்டளைபிறப்பித்து மக்களைக் காக்கிறார்.

    7. ஆடு X ஆடேல்

    வாரம் ஒருமுறை, சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லும் ஒளவையார், சனி நீராடு (16)என்று கட்டளையிடுகிறார். சனி – என்பதற்குக் குளிர்ந்த நீர் என்று பொருள் கொண்டு, குளிர்ந்த நீரில் குளிக்கச் சொல்லியதாகவும் பொருள் உரைப்பர். அதற்கு மறுதலையாக, நீர் விளையாடேல் (6) அனந்தல் ஆடேல் (31) என்றும் சொல்கிறார். நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்களுள், தீயுடனும் நீருடனும் விளையாடுதல் தவிர்க்க வேண்டும் என்பர். ’தீ விளையாட்டு விளையாடாதே’ என்பது இன்றளவும் சிற்றூர்களில் சொல்லப்பெறும் அறிவுரை. அதேபோல், ‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்பதும் நீர்நிலையை முன்வைத்துச் சொல்லப்பெறும் அறநெறி. அனந்தல் என்பது தூக்கம். நீரில் மூழ்குதல் போல, தூங்குதலைத் தூக்கத்தில் மூழ்குதல், துயிலில் ஆழ்தல் என்றும் சொல்வது உண்டு. தூக்கத்தில் இலயித்தல் கூடாது என்பதால், ’அனந்தல் ஆடேல்’ என்று கட்டளை பிறப்பிக்கிறார். திருக்குறள் காட்டும்,‘கெடுநீரார் காமக்கலன்கள்’ நான்கனுள்  துயிலும் ஒன்று.

    8. நில்  X  நில்லேல்

    கடறக் கற்று கற்றவழியில் நிற்கச் சொல்வது திருக்குறள். நில் என்பதன் நீட்சி நிலைபேறு. அதற்கான நிலையில், சக்கர நெறி நில் (44), பீடு பெற நில் (80), வீடு பெற நில் (102) எனும் மூன்று கட்டளைகளைப் பிறப்பிக்கிறார். இதில் சக்கர நெறி என்பது அரசாணைவழி நிற்றல். பீடு என்பது பெருமைக்குரியது. சிலம்பில்,  பிரிந்த கணவனைச் சேர்வதற்கு, சோமகுண்டம் சூரிய குண்டம் ஆகிய நீர்நிலைகளில் மூழ்கிக் காமனைத் துதிக்கச் சொன்ன, தோழி தேவந்தியின் கூற்றை மறுத்துக் கண்ணகி, ‘பீடன்று’ (சிலப்பதிகாரம், கனாத்திறம் உரைத்த காதை- 64) என்று மொழிந்ததை இங்கு நினைவுகூரலாம். அரசநெறிநின்று, வாழ்வியல் அறம்பேணிப் பீடுற நின்றால் வீடுபேறு அடையலாம் என்பது தெளிவு. இதற்கு மறுதலையாக, முனைமுகத்து நில்லேல் (92) என்றும் சொல்கிறார். அழிவுத்தொழிலான போர்த்தொழிலுக்குரிய போர்முனையில் முன் நில்லாதே என்பது அவர்தம் போரமைதிக்குரிய வழிகாட்டு நெறியாகும். அது கருதியே, போர்த்தொழில் புரியேல் (87) என்றும் கட்டளையிடுகிறார். எடுத்ததற்கெல்லாம் போரும் பூசலும் கொண்டிருந்த அக்காலத் தமிழகத்தில், ஒளவையாரின் இவ் வமைதிக் கட்டளை, எத்துணை புரட்சிகரமானது என்பது நினைந்து போற்றத்தக்கது.

    9. சேர் – அகல் – பிரியேல் – இரு

    உறவுநிலையில் சுற்றமும் நட்பும் இணக்கத்திற்குரியன. சேர்தலும், சேர்ந்து இருத்தலும், பிரியாது இருத்தலும் போலவே, சேரக்கூடாத இடத்து அகல்வதும் இன்றியமையாதன என்பதை ஏழு கட்டளைகளில் ஒளவையார் எடுத்துரைக்கின்றார்.

    இணக்கம் அறிந்து இணங்கு (19) என்று ஏற்கெனவே கட்டளையிட்ட அவர், சேர வேண்டிய இடம் குறித்தும் இரு கட்டளைகள் பிறப்பித்துள்ளார். அதில் ஒன்று நட்பு. அதற்கான கட்டளை, சேரிடம் அறிந்து சேர் (51) என்பதாகும். பெரியாரைத் துணைக் கொள் (83) என்பதும் அதனோடு பொருந்தும் அறமாகும். அதேபோல் இருத்தலும் உயர்வுக்குரியது. அதற்கான கட்டளை சான்றோர் இனத்து இரு (45). சேர்தலில் மற்றொன்று, உறவு. பிறப்பால் எய்துகிற சுற்றத்தாரைவிடச் சேர்ந்து வாழக்கூடிய அகவாழ்வுக்குத் துணையாகும் பெண்மையைச் சேர்தல் என்ற நிலையில், மெல்லி னல்லாள் தோள்சேர் (94) என்ற கட்டளையைப் பிறப்பிக்கின்றார். சேர்தலுக்குரிய இவ்விரு கட்டளைகளுக்கும் துணைமையாக இருத்தல் என்ற நிலையில், உத்தமனாய் இரு (103) என்ற கட்டளை அமைகிறது. இவற்றுக்கு மறுதலையாகக் காமவயப்பட்ட நிலையில், பொருட்பெண்டிருடனான தொடர்பை விட்டுவிலகியிருக்கச் சொல்லி அவர் இடும் கட்டளை, மைவிழியார் மனை அகல் (96) என அமைகின்றது. சேர்வது எவ்வளவு சிறப்பிற்குரியதோ, அதேபோலச் சேர்ந்தாரைப் பிரியாமல் இருப்பதும். அந்நிலையில், கூடிப் பிரியேல் (37) என்றும் நிலையில் பிரியேல் (68) என்றும் அவர் கூறிய கட்டளைகள் ஏற்புடையனவாகும்.

    ஆத்திசூடியின் அற்புத மந்திரம்

    அஃகம் சுருக்கேல் (13), அரவம் ஆட்டேல் (25), ஈவது விலக்கேல் (4), தோற்பன தொடரேல் (65), நுண்மை நுகரேல் (70), நைவினை நணுகேல் (74), ஒன்னாரைத் தேறேல் (108) என்றெல்லாம் எதிர்நிலையில் இருந்து இன்றியமையாத அறங்களை எடுத்துரைத்த ஒளவையார், ஆறுவது சினம் (2), மோகத்தை முனி (98), ஏற்பது இகழ்ச்சி (8) காப்பது விரதம் (33) என்பனவாகிய மந்திரத் தொடர்களையும் அமைத்துக் காட்டுகிறார்.

    இவற்றுள் எல்லாம் மணிமுடியாகத் திகழும் வாசகம், ஙப் போல் வளை (15) என்பதாகும். மொழி முதலில் வருதற்கு வாய்ப்பே இல்லாததோடு, இதன் வருக்க எழுத்துக்களான எதுவும் எழுத்துவழக்கிலோ, பேச்சு வழக்கிலோ பயன்படாது இருந்தாலும், அவற்றை, ங எனும் எழுத்து இழுத்து வளைத்துஅழியாது காத்துப் பேணுகிறது. அதுபோல், தன்னைப் பேணுதலோடு, தன் வருக்கத்தையும் தாங்கிப் பேணுதல் மனிதர்களின் கடப்பாடு அல்லவா? தன்னை இவ்வுலகிற்குத் தந்த தாயையும் தந்தையையும் பேணுதல் ( தந்தை தாய்ப் பேண்-20)  தவறாது புரியவேண்டிய அறமல்லவா? தன்னுயிர் போலே மன்னுயிர் யாவையும் தாங்கிக் காத்தல் ஙப்போல் வளைக்கும் நல்லறம் என்பதால், அதுவே, இவ்விலக்கியத்தின் அற்புத மந்திரம் ஆகிறது.

    அதனால்தான், இந்த ஆத்திசூடிக்குப் பின்னர் புதிய ஆத்திசூடி பாடிய மகாகவி பாரதி, இந்த (ங) எழுத்தைத் தன் கட்டளைகளில் இடம்பெறாத வண்ணம் விட்டுக் கொடுத்து மரியாதை செலுத்தினார் போலும்.

    நிறைவாக…

    சிறார் இலக்கியத்துள் இன்னும் அழியாத நிலைபெற்றுள்ளவை ஒளவையாரின் ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும் ஆகும். எழுத்தை எழுத்தாகவே பயிலாமல், எண்ணத்துடன் இணைத்து, வாழ்வியல் தளத்தில் பின்னர் இருந்து பயன்தரத்தக்க நன்னெறிகளை உள்ளடக்கியவை இவை. நினைவில் நிறுத்திக் கொள்ள ஏதுவாய், ஒற்றைத் தொடரில் மந்திரம் போல் அமைந்த கட்டளைகளின் தொகுதி. எழுத்து வருக்க வரிசையிலும், பொருண்மைப் பொருத்த அமைப்பிலும் வைத்துப் பொருள் கொள்ளத் தக்க வாழ்வியல் சீலங்களின் வகைப்பாடாக இது திகழ்கிறது.

    ஆத்திசூடியின் அனைத்துக் கட்டளைகளும், தனித்தொடர்களாக மனனம் செய்யவும் சொல்லிப்பழகவும் பயன்படுவனபோல் அமைந்தாலும் வாழ்க்கைப் போக்கில், பேச்சுவழக்கில், சொல்வதாகவோ, கேட்பதாகவோ புழக்கத்திற்கு வருகிறபோது, அவை அறம் உணர்த்தும் நுண்பொருள்களாக மனதில் இருந்து புலப்படும் என்பதால், இளமையில் கற்பிக்க ஏதுவாக ஒளவையாரால் பாடப்பெற்றன என்பதே உண்மை.

    எழுதப்பட்ட காலத்தேவைக்கேற்ப, இவற்றின் பாடுபொருள் அமைகிறது என்பதால் இவற்றுள் சில கட்டளைகள் இலகுவாகத் தோன்றலாம். ஆனால், அடுத்த தலைமுறைக்கு வேண்டிய அறங்களைப் போதிக்கப் புதிய ஆத்திசூடி பிறக்கவும், பிற ஆத்திசூடி வகைகள் பெருகவும் இதுவே தாய் ஆத்திசூடியாக இருந்து உரமளித்திருக்கிறது என்பதே வரலாற்றுப் பெருமை.

    துணைநின்றவை

    1. இளவரசு.சோம, (ப-ஆர்), நன்னூல் விருத்தியுரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1990,
    2. ஒளவையார் அருளிச் செய்த ஆத்திசூடி- மூலமும் உரையும், சென்னை- மதராஸ் ரிப்பன் எந்திரச்சாலை, சென்னை, 1913.
    3. சிற்பி பாலசுப்பிரமணியம், முனைவர் சொ.சேதுபதி, தமிழ் இலக்கிய வரலாறு, கவிதா பப்ளிகேஷன், சென்னை, 2010.
    4. சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியத் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1008.
    5. செல்லப்பன்.சு.சிலம்பொலி, சிலப்பதிகாரம் தெளிவுரை, பாரதி பதிப்பகம், சென்னை. 2000.
    6. சொக்கலிங்கம்.பேராசிரியர் சு.ந., தாயுமானவர் பாடல் தொகுப்பு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2009.
    7. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரைவளம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2014.
    8. நவபாரதி, (தொ-ஆர்) மகாகவி பாரதியார் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2014.
    9. பாலசுப்பிரமணியன். கு.வெ.,  தொல்காப்பியம் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2019.
    10. வேங்கடசாமி நாட்டார். ந.மு. (உ.ஆர்),  கொன்றைவேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2007
    11. வேங்கடசாமி நாட்டார். ந.மு, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை, 2005.

    Share
  • நாலடியார் நயம் – 13

    நாலடியார் நயம் – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    13 .தீவினை அச்சம்

    பாடல் 121

    துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
    மக்கள் பிணத்த சுடுகாடு – தொக்க
    விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
    புல்லறி வாளர் வயிறு.

    சுடுகாடுகள் துயரத்தைக்
    கொடுக்கும் இல்வாழ்க்கையில்
    கிடந்துழன்று அவற்றினின்று
    பற்றுவிடும் வழிஅறியாதாரின்
    பிணத்தை உடையன
    அற்பரின் வயிறுகளோ
    அதிகளவு பறவைகளுக்கும்
    விலங்குகளுக்கும் சுடுகாடுகளாம்.

    பாடல்122

    இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
    கரும்பார் கழனியுள் சேர்வர் – சுரும்பார்க்கும்
    காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
    கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

    வண்டுகள் ஒலிக்கும் காட்டில்
    வாழும் கவுதாரியையும் காடையையும்
    பிடித்துக் கூட்டில் அடைப்பவர்
    பகைவர்களுக்கு அடிமையாய்
    காலில் விலங்கு பூட்டப்பட்டு
    வலிய பயனில்லா
    வட்டை நிலத்திலோ
    கழனிகளிலோ அடிமையாய்
    வேலை வாங்கப்படுவர்.

    பாடல் 123

    அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
    துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
    அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
    பழவினை வந்தடைந்தக் கால்.

    அக்காலத்தில் (முற்பிறப்பில்) நண்டைப் பிடித்து
    அதன் காலை ஒடித்து
    விரும்பித்தின்ற தீவினை
    வந்தடைந்த போது
    உள்ளங்கை சங்குமணிபோல்
    உருத்தோன்ற விரலெல்லாம்
    குறைந்தழுகித் துயரம் தரும்
    குட்ட நோய் உண்டாகப் பெறுவர்.

    பாடல் 124

    நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
    எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்
    கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
    கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

    நெய்யைப்போல் நன்மை செய்வனவும்
    நெருப்பிலிட்டுக் காய்ச்சும்நேரம்
    உடலில் பட்டால் எரிக்கும்படி
    காய்ந்து துன்பநோய் தருவதுபோல்
    நல்லொழுக்கம் தவறா நல்லோரும்
    கடும் தீயவரைச் சார்ந்தால்
    கொடும் தீமையே புரிவர்.

    பாடல் 125

    பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
    வரிசை வரிசையா நத்தும் – வரிசையால்
    வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
    தானே சிறியார் தொடர்பு.

    பெரியோர் நட்பு பிறைச்சந்திரன்
    போல் படிப்படியாய் நாளும் வளரும்
    சிற்றறிவுடையோர் நட்பு வானத்தே
    தோன்றும் முழு வட்ட நிலா போல்
    தினந்தோறும் சிறுத்துத் தானே
    தேய்ந்து குறைந்துவிடும்.

    பாடல் 126

    சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
    சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
    சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
    பாம்பகத்துக் கண்ட துடைத்து.

    நற்குணமுள்ளவர் என மதித்து
    நட்பு கொள்கிறாய்!
    நட்புகொண்டவரிடம் நற்குணம்
    இல்லையெனில் சார்ந்தவனே கேள்!
    அது வாசனை மிகு சந்தனம்
    அங்குள்ளது என நினைத்து
    செப்பைத் திறந்தவன் உள்ளே
    சர்ப்பத்தைக் கண்டது போலாம்.

    பாடல் 127

    யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
    தேருந் துணைமை யுடையவர் – சாரல்
    கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
    மனம்வேறு செய்கையும் வேறு.

    மலைச் சாரல்களில் ஒளிவிடும்
    மணிகள் மிகு நாட்டின் வேந்தனே!
    கேள்! மனதை ஆராய்ந்தறியும்
    வல்லமையுடையோர் எவருளர்?
    மக்களின் மனம் வேறு
    மனிதன் நினைத்தபடி செய்யாது
    மேலுக்கு வஞ்சனையாய் ஆற்றும்
    செயல்கள் வேறு.

    பாடல் 128

    உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
    கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை – தெள்ளிப்
    புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
    மனத்துக்கண் மாசாய் விடும்.

    தெளிந்த அருவிநீர் சேற்றைத்
    தள்ளி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே!
    மனதால் விரும்பாது வஞ்சகமாக
    மயக்கும் உறுதியான செயல்செய்பவரின்
    மிகுநட்பு மனதில் குற்றமுள்ளதாய் நிற்கும்.

    பாடல் 129

    ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
    ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் – ஆக்கம்
    இருமையும் சென்று சுடுதலால் நல்ல
    கருமமே கல்லார்கண் தீர்வு.

    பகைகொண்டு வீசிய ஒளிமிகும் வாள்
    பகைவர் கையில் அகப்பட்டால்
    தைரியத்தைக் கெடுப்பது உறுதி
    தீயோர்க்குச் செய்த உதவி
    இம்மை மறுமையிலும் தொடர்ந்து
    வருத்தலால் அத் தீயொரிடமிருந்து
    விலகி இருத்தல் நல்லது.

    பாடல் 130

    மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
    எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! – எனைத்தும்
    சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
    உறுபயனோ இல்லை உயிர்க்கு.

    மனமே! மனையாளிடத்து ஆசை விடமாட்டாய்
    மக்கட்செல்வத்துக்கு பொருள் சேர்க்க ஏங்கி
    எவ்வளவு காலம் வாழப்போகிறாய்?
    அற்பகாலமாயினும் செய்யும்
    அறச்செயலாலன்றி உயிருக்கு
    அடையும்படியான நற்பயன் வேறுஇல்லை.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 22

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 22

    தி. இரா. மீனா

    பசவேசர் தொடர்ச்சி

    16. “பனைமரத்தடியில் பால்குடமிருந்தால்
    பால்குடமென்று சொல்லமாட்டார்கள் குடமென்பார்
    இந்த நிந்தனையின் சிந்தனையைப் பொறுக்க மாட்டான்
    கூடலசங்கமதேவன்“

    17. “இசையின் நுணுக்கம் தெரியாது
    இசைவரிகளின் அளவு தெரியாது
    தாளகதி தெரியாது
    இசைக்கருவியை மீட்டிடத் தெரியாது
    அமுதகணம் தேவகணமறியேன்
    கூடலசங்கதேவனே ,உனக்குக் கேடு ஏற்படாமல்
    நான் விரும்பியபடி பாடுவேன்“

    18. “நெய்யின் சுவைக்கு ஈட்டியை நக்கும்
    நாய் போன்றது என்வாழ்வு
    உலகப்பற்று என் மனதை விடவில்லை
    இதைப் பொறுப்பது உனது தர்மம் கூடலசங்கமதேவனே“

    19. “உலகில் பெரியதொரு கடைவைத்து
    நம்மகாதேவ வணிகசெட்டி உட்கார்ந்திருந்தார்
    ஒன்றான மனமெனில் ’சட்’ டெனப் பேசுவார்;
    இருமனமென்றால் பேசமாட்டார்
    தம்படி இழக்கமாட்டார், அரைத் தம்படி பயனடையார்
    நம்கூடலசங்கமதேவன் புத்திசாலி“

    20. “இசைப்பிரியன் சிவனென்பார் அவன் இசைப்பிரியனல்லன்!
    வேதப்பிரியன் சிவனென்பார் அவன் வேதப்பிரியனல்லன்!
    நாதமிசைத்த இராவணனுக்கு ஆயுள் பாதி ஆனதே !
    வேதமோதிய பிரம்மன் தலையறுந்து போனதே!
    நாதப்பிரியனுமில்லை, வேதப்பிரியனுமில்லை
    பக்திப்பிரியன் நம்கூடலசங்கமதேவன்“

    21. “நாளை வருவது இன்றே நமக்கு வரட்டும்
    இன்று வருவது இப்போதே வரட்டும்
    இதற்கு அஞ்சுவது யார்?
    “ஜாதய்ய மரணம் துருவம்“ – என
    கூடலசங்கதேவன் எழுதியதைத் திருத்த
    ஹரிபிரம்மானாலும் இயலாது“

    22. “ஆயுள் முடிந்தாலன்றி மரணமில்லை
    சொன்ன சொல் தவறினாலன்றி வறுமையில்லை
    உலகத்தவர் பழிச்சொல்லுக்கு அஞ்சுவதேனோ?
    கூடலசங்கமதேவரின் துணைகிடைத்த பின்னும்?

    23. “நீரைக் கண்டால் மூழ்குவார்
    மரத்தைக் கண்டால் சுற்றுவார்
    வற்றிப் போகும் தண்ணீரையும் காயும் மரத்தையும்
    நம்புபவர்கள் உன்னை எப்படியறிவார்கள்
    கூடலசங்கமதேவனே?”

    24. “நீருக்கு ஆம்பல் அழகு, கடலுக்குத் திரையழகு
    பெண்ணுக்கு குணமழகு, வானிற்குப் பிறையழகு
    கூடலசங்கமனின் அடியாருக்கு
    நெற்றியின் நீரழகாம்“

    25. “பாவம் புண்ணியம் அவரவர் விருப்பம்
    ’ஐயா’ என்றால் மோட்சம் ’அடே’ என்றால் நரகம்
    இறைவனே! சரணனே வெற்றி உண்டாகட்டும் உனக்கு.
    “வாழ்க நீ” எனச் சொல்வதிலேயே
    கைலாசமுள்ளது கூடலசங்கமதேவனே“

    26. “மாரியும் மாகாளியும் வேறில்லை
    மாரியென்றாலென்ன?
    கண்கள் தவறாகப் பார்த்தால் மாரி
    நாக்கு தவறாகப் பேசினால் மாகாளி
    கூடலசங்கமதேவனின் நினைவை மறந்தால் அது மாரி.”

    27. “சமத்துவ அன்பு, சமத்துவ இன்பம்
    சமத்துவ சுகம் அறியவில்லையெனில்
    இலிங்கம் வணங்கி என்ன பயன்?
    கூடலசங்கமதேவனை வழிபட்டு
    நதியுள்  நதி இணைந்தது போல இல்லையெனில்
    இலிங்கம் வணங்கிப் பயனென்ன?”

    28. “உலகின் குறையத் திருத்த நீங்கள் ஏன் முயல்கிறீர்கள்
    உங்கள் உடல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
    உங்கள் மனங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
    அடுத்த வீட்டுத் துன்பத்திற்காக அழுபவர்களை
    கூடலசங்கமதேவன் நம்புவதில்லை”

    29. “வேடன் பிடித்துவரும் முயலுக்கு விலைகொடுப்பார்
    அரசன் பிணமெனில் பொடிக்காசும் தரமாட்டார்
    முயலினும் கீழானது மனித வாழ்க்கை
    கூடலசங்கம சரணரை நிறைமனதுடன் நம்புவாய்“

    30. “மனதிற்குப் பிடிக்காத கணவன்
    மனதில் நிலைப்பதில்லை தோழி
    சிவனல்லாது வேறு புருஷர்கள்
    எனக்குப் பிடிக்காது தோழி
    கன்னியாயிருக்கும் போது கூடினேன்
    சிறுவயதில் உன்னுடன் வாழ்ந்தேன்
    உன் ஆணை ஐயனே கூடலசங்கமதேவனே”

    31. “என்னென்பேன் என்னென்பேன் ஒன்றிரண்டானதை?
    என்னென்பேன் என்னென்பேன் இரண்டொன்றானதை?
    என்னென்பேன் என்னென்பேன் அழியாப் பெருமையை?
    வள்ளல் கூடலசங்கமதேவன் தானேயறிவான்“

    32. “வழிபாடுள்ளவரை இலிங்கத்தைப் பாடினேன்
    பேச்சுள்ளவரை ஜங்கமரைப் பாடினேன்
    நாவுள்ளவரை பிரசாதத்தைப் பாடினேன்
    இம்மூன்றும் அழிந்தபிறகு என்னையே பாடினேன்
    கூடலசங்கமதேவனே!”

    33. “சம்சாரமென்பது காற்றில் உள்ள விளக்கு
    செல்வமென்பது சந்தைக்கூட்டம்
    இதை நம்பிக் கெடவேண்டாம் – செல்வமென்பது
    மறக்காமல் கூடலசங்கமதேவனுக்குச் செய்யும் பூஜை”

    34. “பூலோகமென்பது இறைவனின் நாணயச்சாலை
    இங்கு செல்லுபடியெனில் அங்கும் செல்லுபடியாவார்
    இங்கு செல்லுபடியில்லையெனில் அங்கும் இல்லை
    கூடலசங்கமதேவனே.”

                                              [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 79 (என்ன)

    சேக்கிழார் பாடல் நயம் – 79 (என்ன)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    என்ன   அவ்வுரை   கேட்டுஇயற்   பகையார்
            ‘’யாதும்  ஒன்றும்என்   பக்கல்   உண்டாகில்
    அன்ன   தெம்பிரான்   அடியவர்   உடைமை;
            ஐயம்   இல்லைநீர்  அருள்செயும்’’   என்ன
    ‘’மன்னு    காதலுன்   மனைவியை   வேண்டி
              வந்தது    இங்கு”என   அங்கணர்    எதிரே
    சொன்ன   போதிலும்    முன்னையின்   மகிழ்ந்து
              தூய   தொண்டனார்   தொழுதுரை   செய்வார்!  

    இயற்பகை நாயனாரை நோக்கி நீறு பூசிய அந்தணராயும், தூர்த்த வேடம் உடையவராயும் ஊரார்முன் ஒரு சிவனடியாராகச் சிவபெருமானே இயற்பகையார் வாழும் தெருவில் நடந்து வந்தார். அவருடைய  திருமேனியில் இருவகை வேடமும் பொலிந்தது! அவ்வாறு  வந்த சிவனடியார் இயற்பகையார்  வாழும்  இல்லத்து  வாயிலில்  புகுந்து நின்றார். இயற்பகையாரோ, ‘’எந்தையாகிய  சிவபிரான் அடியார் எழுந்தருளினார்!‘’ என்றெண்ணி எப்போதும் நின்ற இன்பம் மிக்க ஆதரவுடைய உள்ளத்தில்  பேரன்பு  ததும்ப  அவர்முன் சென்று வணங்கினார்;  சிறப்பு மிக்க பாத பூசைகள் செய்து, ‘’எம் முன்னோர்கள் செய்த பெருந்தவத்தின் விளைவாகவோ, என் முன் எழுந்தருளினீர்?’’ என்று போற்றினார்.

    அங்கே வஞ்சனையுடன் வந்த மறையவர் ‘’கொன்றைமலர் அணிந்த சடையை யுடைய சிவபிரானடியார்கள் தம் விருப்பத்தைக் கூறி வேண்டினால், குற்றமாயினும் அதனை   மிகச்சிறந்த குணமே என்றெண்ணி அதனைச் சிறிதும் மறுக்காமல் வழங்குவீர் என்று ஊரார் கூறிய உண்மையைக்  கேள்வியுற்றேன்! இன்று, இங்கு  உங்களிடம் ஒரு பொருளை வேண்டி வந்துள்ளேன்! அதற்க்கு நீர் இசைந்தால் நான் என் கருத்தைக் கூறுவேன்!’’ என்றார்.

    அதனைக் கேட்ட இயற்பகையார் ‘’நீங்கள் விரும்பிய பொருள் யாதாயினும், அப்பொருள் என்னிடம் இருக்குமாயின், அப்பொருள் எம்பிரான் அடியவர்க்கே  உரியதாகும்;  இதில் சிறிதும் ஐயமில்லை; நீங்கள் விரும்பும் பொருள் இன்னது என்று தெளிவாகக் கேட்டருள்க‘’ என்று பணிவுடன் கூறினார். அடியாராகிய  அந்தணர், ‘’மிகுந்த காதலுடன் இருக்கும் உன் மனைவியையே வேண்டிப் பெற்றுக்  கொள்ள இங்கே வந்தேன்’’ என்றார். அவர்தம் இவ்வேண்டுகோளை தம் எதிரே அஞ்சாது நின்று கேட்டபோதிலும், அதற்காக  உள்ளம் கலங்காமல், முன்பு இருந்த மகிழ்ச்சியைவிட மிக்க மகிழ்ச்சி  கொண்டு, தூய்மைமிக்க தொண்டராகிய இயற்பகை நாயனார், மீண்டும் அந்த அந்தணரைப் பணிவுடன் வணங்கினார்.

    இப்பாடலில் ‘’யாதும்’’ என்ற சொல் எப்பொருளாக இருந்தாலும் என்ற பொருளை உடையது. மேலும் ‘’ஒன்றும்‘’ என்ற சொல்லுக்கு, ஒப்பற்றது, உயர்ந்தது, என்றும் நான் பிரியக்கூடாத என் தனித்த உடமை என்றெல்லாம் கருதத்  தக்கது  என்பது பொருள். ‘’எம்பிரான் அடியவர் உடைமை’’ என்ற தொடருக்கு, ‘’எளியேன் முன் வந்து நின்ற  தேவரீராகிய எம் தலைவரின் உடைமையே!‘’ என்பது கருத்து.

    இறைவன் அடியார்களை இறைவனாகவே கருதி வணங்குவதும், அவர்கள் எழுந்தருளும் இல்லங்களைக் கோயிலாகவே கருதி வழிபடுதலும் அடியார் செயல் என்பதைச் சிவஞான போதம்,

    ‘’மாலற  நேயம்  மலிந்தவர்  வேடமும்,
     ஆலயம் தானும்  அரண் எனது தொழுமே!’’

    என்று கூறுகிறது. மாணிக்க வாசகர் இறைவனை ‘’ உடையாய் ‘’ என்று கூறியதும் இதைக் கருதியே! மேலும்,

    ‘’உற்றாரை  யான் வேண்டேன்  ஊர்வேண்டேன்  பேர்வேண்டேன் ..
     குற்றாலத்     தினிதுறையும்    கூத்தாஉன்  குரைகழற்கே
     கற்றாவின்   மனம்போலக்  கசிந்துருகி  வேண்டுவனே‘’

    என்று பாடுகிறார், அப்பரடிகளோ

    ‘’கனியினும் கட்டி    பட்ட  கரும்பினும்
     பனிம   லர்க்குழல்   பாவைநல்   லாரினும்
    தனிமு   டிக்கவித்   தாளும்   அரசினும்
    இனியன் தன்னடைந்   தார்க்குஇடை  மருதனே ‘’  

    என்ற  பாட்டில் ‘பாவை நல்லாரினும் இனியன்’ என்கிறார்; சுந்தரர்,

    ‘’மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்!’’ என்று தம் உறவுகளின் மேலுள்ள புற்றுக்களை நீக்கி,  இறைவன் திருவடியையே பற்றினார். திருவாதவூரடிகள் புராணம்,

    “உருப்பொ லாதவர்  இழிகுலத்  தவர்நல்
         லொழுக்க மில்லவர்  என்று நம்மளவில் 
    விருப்பி லாதவர்  எனினும்  மெய்ந்நீறும்  
         மிக்க  சாதன வேடமும் கண்டால்  
    தரிப்பி லாதுசென்று எதிருற வணங்கித்  
        தக்க போனகம்  அளித்தவர்க்கு எளிதா   
    விருப்பர் தாமவ ரடியவர்க் கடியார் 
           என்பர் யான்எனது எனும்செருக் கறுப்பார்.”

    என்று பாடுகிறது. ஆகவே இயற்பகை நாயனாரின் மனம் இறைவனையும் சிவனடியாரையுமே  எல்லாவற்றிலும் மேலாகக்  கருதியது. மேலும் இப்பாடலில்,

    ‘’அங்கணர் எதிரே சொன்ன போதிலும்’’ என்ற தொடரால், அவர் மனைவியின் மேல் எனக்கு ஆசை, என்று புறத்தே போய்ச் சொன்னாலும் உடனே அது கேட்டுமிகவும் வெகுள்வார் உள்ள உலகில்,’’ தமக்கு எதிரே நின்று அந்தணர் சொன்ன போதிலும்’’ என்ற பொருள் புரிகிறது. அதன் பின் ‘’முன்னையின் மகிழ்ந்து, தொழுதுரை   செய்வார்! ‘’ என்ற தொடரால்  கேட்பதற்கு முன் இருந்ததை விட அதிகமாக உள்ளத்தில் மகிழ்ந்தார் இயற்பகையார் என்பதும், மீண்டும் அந்த அந்தணரை முன்பைவிட அதிகமாகத் தொழுதார் என்பதும்   புலனாகின்றது.

    கம்பராமாயணத்தில் வசிட்டர் கூறியதைக் கேட்ட  தசரதன்,

    ‘’மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை
     பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அப்பெருவில்
     இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம்
     உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்’’

    என்ற பாடலை நினைவூட்டுகிறது. இயற்பகையாரின் உண்மையான உளப்பாங்கினை  உரியவாறு எடுத்துக்  காட்டும் சேக்கிழாரின் திறம் போற்றுதற்கு உரியது.

    Share
  • Annakannan Ideas 41: Smart Bin

    Annakannan Ideas 41: Smart Bin

    Here is my idea of Smart Bin, which I had submitted in the Startup India – WhatsApp Grand Challenge on 10th March 2019. But, in the end of April 2020, read a news with the title: IIT-supported start-up develops smart bin system to prevent coronavirus. It is similar to my idea; but, I have more enlarged vision & explained here.

     

    (To subscribe my YouTube channel, please click here: http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாலடியார் நயம் – 12

    நாலடியார் நயம் – 12

    நாங்குநேரி வாசஸ்ரீ

     12. மெய்ம்மை

    பாடல் 111

    இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
    வசையன்று வையத் தியற்கை – நசையழுங்க
    நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
    கொன்றாரின் குற்றம் உடைத்து.

    வரிசையாய் வளையல்கள் அணிந்தவளே!
    வேண்டி இரப்போர்க்குத் தர இயலாப்
    பொருளை இல்லை எனச் சொல்லுதல்
    பழியன்று  உலகியற்கையே
    கொடுப்பதாய் ஆசைகாட்டிப் பலநாள்
    கழிந்தபின் இல்லையென்றல்
    செய்நன்றி மறப்பதினும் சீரிய குற்றமாம்.

    பாடல் 112

    தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
    எக்காலுங் குன்றல் இலராவர்! – அக்காரம்
    யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
    தேவரே தின்னினும் வேம்பு.

    தக்கசான்றோரும் அல்லாதாரும்
    தத்தம் குணங்களில் எப்போதும்
    குறைதல் இல்லாதிருப்பர்
    கசக்காது வெல்லம் எவர் தின்றாலும்
    கசக்கும் வேப்பங்காய் தேவரே தின்றாலும்.

    பாடல் 113

    காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
    மேலாடு மீனின் பலராவர் – ஏலா
    இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
    தொடர்புடையேம் என்பார் சிலர்.

    குளிர்ந்த மலைகளுடை நாட்டின்
    வேந்தனே! செல்வம் உள்ள காலத்தே
    நெருங்கிய உறவினர் பலர் இருப்பர்
    நட்சத்திரங்களை விட அதிகமாய்
    நலிந்து வறுமையுறும் காலம்
    உறவினராய்த் தொடர்பவர்
    உரிமையுடன் ஒருசிலரே.

    பாடல் 114

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவணது எய்த இருதலையும் எய்தும்
    நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
    அடுவது போலும் துயர்.

    குற்றமற்ற இவ்வுலகில் நிலைத்துக்
    காணப்படுவதாய்த் தோன்றும்
    அறம் பொருள் இன்பம் எனும்
    அம் மூன்றனுள் நடுவிலுள்ள
    பொருளை அடைந்தோன் அதன்
    பொருட்டு முதலிலுள்ள அறத்தையும்
    இறுதியிலுள்ள இன்பத்தையும் அடைவான்
    இதனைப் பெறாதவன் கொல்லன்
    இரும்பை உலையிலிட்டு காய்ச்சுவது
    போலும் வறுமையுற்று வருந்துவான்.

    பாடல் 115

    நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
    கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
    புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
    செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

    நல்ல பசுவின் கன்றானால்
    நல்விலைபோகுமதன் இளங்கன்றும்
    படிக்காதவராய் இருப்பினும்
    பணக்காரரின் வாய்ச்சொற்கள்
    பயன்கருதி ஏற்றுக்கொள்ளப்படும்
    சிறிதே ஈரமுள்ள காலத்தே உழும்
    சமயம் கொழு உட்செல்லாது
    மேலே நிற்பதுபோல்
    மேலுக்குத் தலையசைத்து
    கேட்பதுபோல் தோன்றினாலும்
    வறியவனின் வாய்ச்சொற்கள் ஒரு
    வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

    பாடல் 116

    இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
    அடங்காதார் என்றும் அடங்கார் – தடங்கண்ணாய்
    உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
    கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

    அகன்ற கண்களையுடையவளே!
    பேய்ச்சுரைக்காயை உப்புடன்நெய்
    பால் தயிர் பெருங்காயம் சேர்த்துச்
    சமைத்தாலும் கசப்பு அடங்காததுபோல்
    விரிவாக மெய்யறிவு நூல்களை
    வாசித்துணர்ந்தாலும் எப்பொழுதும்
    அடக்கமில்லாமல் இருப்பவர்
    அடங்காமலே இருப்பர்.

    பாடல் 117

    தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
    என்னை அவரோடு பட்டது – புன்னை
    விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
    உறற்பால யார்க்கும் உறும்.

    புன்னையின் அழகிய
    பூமணம் வீசும் சோலைகள்சூழ்
    கடற்கரையுடை வேந்தனே!
    தம்மை நிந்திப்பவரை அவர்
    தொடங்குமுன் தயைபாராமல்
    தாம் நிந்திக்கக்கடவர்
    அவரோடு தமக்குண்டாகிய
    தொடர்பால் வருவதுதான் என்ன?
    வரவேண்டிய நன்மைதீமை எவர்க்கும்
    வினைப்பயனால் வந்தே தீரும்.

    பாடல் 118

    ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
    பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்
    ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
    உருவு பலகொளல் ஈங்கு.

    பசுக்கள் உருவத்தால் வேறுபடினும்
    பாலின் நிறத்தில் வேறுபாடில்லை
    தருமமும் பால்போல் ஒரு
    தன்மையுடைத்தே எனினும்
    ஆற்றும் வழிமுறைகள்
    அப்பசுக்களின் உருவங்கள்
    போல் பலவாம்.

    பாடல் 119

    யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
    யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
    இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
    கடைபோக செல்வம்உய்த்தார்.

    ஆராய்ந்து நோக்கின் ஒரு பழிச்சொல்
    அற்று வாழ்ந்தவர் யார்?
    ஒரு தொழிலின்றிவாழ்ந்தவர் யார்?
    எவர் வாழ்வின் இடையே துன்பம்
    எய்தாதவர்? வாழ்நாள் முழுவதும்
    செல்வத்தை அனுபவித்தோர் யார்?

    பாடல் 120

    தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
    யாங்கணும் தேரின் பிறிதில்லை; – ஆங்குத்தாம்
    போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
    கூற்றம் கொண்டுஓடும் பொழுது..

    தம்மோடு உயிருக்குத் துணையாய் வருவது
    தாம் செய்த நல்வினையன்றி வேறில்லை
    அதுவரை ஆடை அணிகளால் பாதுகாத்த
    அழகுடம்பும் உயிருக்குத் துணையாய் வராது
    எமன் உயிரைப் பறித்துக்கொண்டு ஓடும்காலம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    இத்தொடரில் பெண்பால் சிற்றில் பருவத்தில் அடுத்து நாம் காணப்போகும் நூல் தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஆகும். இதில் இப்பருவம் மிகவும் சிறப்பாக, அழகிய நயங்களுடன் பத்துப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது.

    உலகுக்கே அன்னையான சிவகாமி எனும் உமையவள் அண்டகோடிகளை, பிரம்மாண்டங்களைத் தோற்றுவிப்பதனை, சிறுவீடுகட்டி அவள் விளையாடுவதாக நயம்பட உரைக்கிறார். காஞ்சிப்பதியில் சிவபிரான் அம்மைக்கு இருநாழி நெல் அளித்ததனையும் அம்மை அதனைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி உலகங்களைப் புரந்ததாகவும் காஞ்சிப்புராணத்தில் காண்பதற்கியைய, இங்கும் அக்கருத்தை எடுத்தோம்புகிறார்.

                ‘…………………………………………..
             அட்டதிக்கும் கால்கள்நட்டு நெடுமேரு
                       நடுவு அசையாததூண் நிறுத்தி
             …………………………………………….
                       விளை பச்சைநெல் இருநாழியில்
             பல்லுயிரும் உண்டு தேக்கிட்டிடும்
                       ……………………………………..
             திடமருவு பெருவீடு கட்டி விளையாடும்
                       உமை சிறுவீடு கட்டியருளே!’1

    ‘ஆ ப்ரஹ்ம கீட ஜனனீ’ என லலிதா சகஸ்ரநாமம் அன்னையை ஏத்துகின்றது. பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம். படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.

    பின்னொரு பாடலில் அன்னை கட்டிடும் சிறுவீட்டின் அமைப்பினை விளக்கியுள்ளமை, உடற்கூற்றியலில் விளக்கப்பட்டுள்ள மனித உடலின் அமைப்பை ஒத்துள்ளது வியக்கத்தக்கதாகும். தசை எனப்படும் மண்ணினை வைத்தும் தூண்களாகிய கால்களை வைத்தும், உடல் எனப்படும் சுவரை அமைத்தும், வீட்டினைத் தாங்கக் கைம்மரங்கள் என்னும் இரு கரங்களை வைத்தும் அமைக்கிறாள்; உடலில் உள்ள ஒன்பது துளைகளை ஒன்பது வாயில்களாக அமைக்கிறாள்; கூரை மரங்களை நரம்புகளால் முறையாகக் கட்டுகிறாள்; அதன்மீது மண்பூசுவது போன்று தோலைப் போர்த்து, மயிர்க்கற்றைகளால் கூரையையும் வைக்கிறாள். வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகுத்து அனுபவிக்க கண்களை விளக்குகளாக ஏற்றுகிறாள். இவ்வாறு அனைத்துயிர்களும் வாழும்பொருட்டு எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட வலிமைமிக்க பலவீடுகளை, அதாவது பற்பல உயிர்களுக்காக அவை வாழும் உடலெனும் வீடுகளைத் தோற்றுவித்தும், அழித்தும், பின்னும் தோற்றுவித்தும் இடையறாது அருள்விளையாட்டுப் புரிகிறாள். உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு இலட்சம் எனப் புராணங்கள் விளக்குகின்றன. அனைத்தையும் அவற்றிற்குரிய வீடுகளாகிய உயிர்க்கூடுகளில் வகைவகையாகப் படைக்கிறாள் என அதியற்புதமாக இப்பாடல் விளக்குகின்றது.

                ‘மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
                       சுவர்வைத்து வலியகைம் மரமும்வைத்து
             வாசல் ஒன்பதுவிட்டு மோட்டுவளை
                       பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
             பண்புற்றிடக் கட்டிமேலே லாம்தோலுடன்
                       பலமயிர்க் கற்றை இட்டு
             …………………………………………….
             எண்பத்து நான்குநூறா யிரம்பேதமாய்
                       இனிய சிறுவீடு தோறும்
             ………………………………………….
    திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
             உமை சிறுவீடு கட்டியருளே2!’

    இழைக்கப்படும் சிறுவீடானது, மனித உடலின் கைகள், கால், தோல், மயிர் போன்ற பல பாகங்களுக்கும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டிருப்பது மிக்க அருமை. உடற்கூற்றியல் எனும் அறிவியல் பகுப்பு இதில் முழுமையாக ஒரேபாடலில் அருமையாக விளக்கப் பெற்றுள்ளது தமிழுக்குப் பெருமை!

    சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:

    ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.

    எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.

                வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
             ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
                       பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
             எல்லவே சாக்கிரம் கனவொடு
                       சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
             …………………………………………………….
             பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
                       பொற்பாவை விளையாடி அருளே3!

    (பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)

    சிவகாமி அன்னையைச் சிறுவீடு கட்டியருள வேண்டிடும் புலவர் பெருமகனார், தில்லையில் உள்ள பொன்மன்றின் அமைப்பினை விளக்கி அவ்வண்ணமே ஒரு சிறுவீட்டினைக் கட்டியருள சிவகாமியம்மையை வேண்டுகிறார்.

    சிதம்பரம் கோயிலின் அமைப்பு, மனித உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்4 என்பது திருமூலர் வாக்கு. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசங்களைக் (Layers) கொண்டமைந்துள்ளது. அதே போன்று சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்  உள்ளன. மனித இதயம் இடப்புறம் அமைந்திருப்பதுபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாது இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை  மூச்சுவிடுகிறான். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் உள்ள ஓடுகளை 72,000 ஆணிகள் இணைக்கின்றன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்படுகிறது.

    இப்பிள்ளைத்தமிழினை இயற்றிய நல்லதுக்குடி கிருட்டிணையர் பொன்மன்றின் அமைப்பினை இன்னுமே விரிவாக விளக்கி அதனைச் சிவகாமியம்மை எவ்வாறு கட்டுகிறாள் என விளக்குகிறார். இது அன்னை மனித உயிர்களைப் படைக்கும் பாங்கினை அழகுற விளக்குகிறது.

    பொன்மன்றில் விளங்கும் பிரமபீடத்திற்கு ஆறு சாத்திரங்களையும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைப் பெரிய தூண்களாகவும் அமைக்கிறாள். இருபத்தெட்டு சிவாகமங்கள், ஐம்பெரும் பூதங்கள், பதினெண் புராணங்கள் ஆகியவை சிறிய தூண்களாகவும் உத்திரங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்துநான்கும் அழகிய வரிச்சல்களுடன் பொருந்திய கைம்மரங்களாக பொருத்தப்பட்டு, அவைமீது ஒளிவீசும் தங்க ஓடுகள் 21,600 வைத்து அவற்றை 72,000 ஆணிகளால் பொருத்தி இணைத்து, மேலும் இருநூற்றுஇருபத்துநான்கு புவனங்களையும் தாமரைமலரின் வடிவில் ஆக்கிய தட்டுக்களாகவும் சைவசித்தாந்தத் தத்துவங்களான தொண்ணூற்றாறு தத்துவங்களையும் பலகணிகளாக ஆக்கி, ஒன்பது கலசங்களை மனித உடலின் ஒன்பது வாயில்களாக அமைத்து சிற்றம்பலம் எனும் உறுதியான வீட்டினைக் கட்டுகிறாள் அன்னை. பின்னர் அங்கு தானே இறைவனுடன் குடிகொள்கிறாள்.

    இவ்வாறு அரியதான எம்மை, எமது மனித உடலைப் படைத்தருளுமுகமாக சிறுவீடு கட்டியருளுக என வேண்டுவதாக அமைந்த பாடலிது.

                ஆறு சாத்திரம் நாலுவேதம் அதிதூண்
                       ஆகமங்கள்………………….
             ……………………………………………………
                       மரம்நாட்டி எழுபத்து இரண்டாயிரம்
             ………………………………………
             கூறு தொண்ணூற்றாறு தத்துவம் பலகணிகள்
                       கும்பம் ஒன்பது வாசலும்
             …………………………………………………..
                       விமலையே! சிறுவீடு கட்டியருளே5!

    பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார். இன்னும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் பல பாடல்களும் பல சமயக் கருத்துக்களையும் விளக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    மற்றும் ஒரு பெண்பால் பிள்ளைத்தமிழான ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ், சிறுமியரின் சிற்றில் பருவத்தை அழகுறப் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளது. இதன் ஆசிரியர் (பெயர் தெரியக் கிடைக்கவில்லை) ஆண்டாளைத் திருமகளாகவே கொண்டு அக்கருத்துக்களிலேயே பாடல்களைப் பாடியுள்ளார்.

    சிற்றில் பருவத்துப் பத்துப்பாடல்களில் ஆறு மட்டுமே கிடைத்துள்ளன. ஆயினும் கருத்து நயமும் உவமை உருவகங்களும் வைணவத்தின் பொருண்மைகளும் செறிந்த பாடல்கள் இவை. சமயத் தத்துவங்களை அழகுறப் பொதிந்துகொண்டு விளங்குகின்றன.

    மேருமலையை ஆதாரமாகக் கொண்டும், மற்ற மலைகளை இடைத்தூண்களாக வைத்தும் செய்விக்கப்பட்ட மணிமண்டபம் உனது கொலுமண்டபம். மேலும், காவல் நிறைந்த  புறமனைகள் ஏழும் கடலால் சூழப்பட்ட ஏழுதீவுகள் ஆகியனவும் பள்ளியறை முதலான அமைப்புகளாவன. இவை பூமியாகிய நிலாமுற்றத்திற்கு அரணாகின்றன. சுடரும் கதிரவன் விளக்காகிறான். அண்டச்சுவரும், கடலையே அகழியாகவும் கொண்டு, பொன்னுலகம் ஐந்தினையும் உப்பரிகைகளாகக் கொண்டு விளங்கும் அருமையான வீட்டைக் காக்கும் பெண்ணரசியே! உலகிற்கு அன்னையான புதுவை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) வாழ் திருமகளே! தென்னரங்கேசன் முதலான ஐந்து பேரும் குடிபுகுவதற்காக நினது சிற்றிலை இழைப்பாயாக! என வேண்டும் பாடல்.

    இவ்வைந்து பேரும் திருமாலின் ஐந்து வடிவங்களே! தென்னரங்கேசன்- ஸ்ரீரங்கத்து அரங்கன், திருமலையில் குடிகொண்ட திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையில் அமர்ந்த பிரான், திருத்தண்கா அப்பன், வடபத்ரசாயி எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பெருமாள் ஆகியோராவர்.

                ஆதார மேருபூ தரநள் ளிடைத்தூண
                       மருவரைக ளெண்டிசைக்கா
             …………………………………………..
             பூதாதி வழிவந்த வண்டபித் தியுமாப்
                      பொரும்புறக் கடலகழியாப்
             பொன்னுலக முதலைந்தும் உப்பரிக் கையதாப்
                       …………………………………….
             சீதார விந்தமலர் வளவயற் புதுவையுட்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே
             தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே6

    இப்பருவத்துப் பாடல்கள் அனைத்தும் பெண்மகவு இழைக்கும் சிறுவீடானது எவ்வாறு மனித உடலை ஒத்துள்ளது எனவும், பராசக்தி எனும் அன்னை எங்ஙனம் நம்மைப் படைத்துப் புரந்தளிக்கிறாள் என்றும் பலவித நயங்களில் கூறியுள்ளமை மிக உயர்வாக உள்ளன.

                                                                                                                          (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2, 3, 5. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    4. திருமந்திரம்- திருமூலர்
    6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

    Share
  • குறளின் கதிர்களாய்…(299)

    குறளின் கதிர்களாய்…(299)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்… (299)

    ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.

           – திருக்குறள் -156 (பொறையுடைமை)

    புதுக் கவிதையில்…

    தமக்குத்
    தீங்கு செய்தோரைத்
    தண்டித்தவனுக்குக் கிடைப்பது
    அன்று
    ஒருநாளைய இன்பமே..

    ஒறுக்காமல் அதனைப்
    பொறுத்து விட்டவனுக்குப்
    பூமி அழியும் நாள்வரைப்
    புகழ் நிலைத்திடுமே…!

    குறும்பாவில்…

    தீங்கு செய்தவரைத் தண்டிப்பவனுக்குக்
    கிடைப்பது ஒருநாள் இன்பமே, அதைப்பொறுத்து
    விட்டவனுக்கு உலகுள்ளவரைப் புகழே…!

    மரபுக் கவிதையில்…

    துன்பம் தமக்குத் தந்தவர்கள்
         துடிக்கும் படியே ஒறுத்திட்டால்,
    அன்றைய ஒருநாள் மட்டும்தான்
         அவனுக் குரிய இன்பமதே,
    நின்றதைப் பொறுத்தே ஒறுத்திடாமல்
         நிறைந்த மனத்துடன் மன்னித்தால்,
    இன்று மட்டும் இன்பமல்ல
         இப்புவி உளவரைப் புகழாமே…!

    லிமரைக்கூ..

    தீங்கு செய்தோரை இகழ்ந்து
    தண்டிப்பவனுக்கு ஒருநாளே இன்பம், பொறுத்தவனைப்
    புவியுள்ளவரைப் பேசுவர் புகழ்ந்து…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும் பொறும வேணும்,
    ஒலக வாழ்க்கயில பேர்சொல்ல
    ஒசந்த கொணமாம் பொறும வேணும்..

    தனக்கொருவன் தீங்குசெஞ்சா
    அவனப் புடிச்சித்
    தண்டன குடுப்பவனுக்கு
    அந்த ஒருநாள் மட்டுமே இன்பம்,
    ஆனா
    அவன மன்னிச்சித் தண்டனகுடுக்காம
    உட்டவனுக்கு
    ஒலகம் அழியும்வரப்
    பேரும்புகழும் நெலைக்குமே..

    அதால
    வேணும் வேணும் பொறும வேணும்,
    ஒலக வாழ்க்கயில பேர்சொல்ல
    ஒசந்த கொணமாம் பொறும வேணும்…!

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17

    அவ்வைமகள்

    17. நேர்படப் பேசி எளிவந்து வெகுண்டு

    ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதத்தை எழுதிய ஐசக்சன், ஜாப்ஸை, நேர்காணல் கண்டே ஒவ்வொன்றையும் உண்மையாக எழுதினார் என்பது அனைவரும் அறிந்த சேதி. இவ்வாறன நேர்காணல்களில், ஐசக்சன் பற்பல கேள்விகளை ஜாப்ஸிடம் கேட்பதுண்டு.

    ஒருசமயம், ஐசக்சன் கேட்கிறார்:

    “நீங்கள் உங்கள் தொழில்நுட்பப் பணியில், உங்களிடம் பணிபுரிபவர்களிடம், கராறாகவும் தயவு தாட்சணியம் பார்க்காமலும், அழுத்தமாகப் பேசுவது ஏன்?”

    இனிமையாகப் பேசினால் இன்னமும் கூட வெற்றி கிடைத்திருக்குமோ என்ற ஆதங்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வியாகவே, ஐசக்சனின் இந்தக் கேள்வி அமைந்திருக்கிறது.

    இக்கேள்விக்கு ஜாப்ஸ் அளித்த பதிலைக் காண்போம்:

    “இது மக்களுக்கான படைப்புப் பணி; சாதாரணப் பொது மக்களின் தேவையை, விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனது அலுவலகத்தில் இருக்கும் அனைவருடைய ஒட்டுமொத்தக் கடமை. அதிலே, எவருக்கும் எவ்விதமான அனுசரிப்பும், விட்டுக்கொடுத்தலும் கூடாது. சமுதாயம் தழுவியத்தான விசாலப் பார்வையோடு பொருட்களை உருவாக்குகிற இடத்தில், தனிப்பட்டவர்கள்,  தங்கள் குறுகிய பார்வையைத் தியாகம் செய்தே ஆக வேண்டும்.

    ஓட்டுமொத்தமாய் அனைவருக்கும் ஒரே இலக்கு, ஒன்றேயான விசாலப் பார்வை எனும்போது இங்கே, ஒட்டுமொத்தமான சிதறலில்லாத கவனம் ஒவ்வொவொரு நபருக்கும் தேவை. அடுத்து, காலவிரயம் இல்லமால் பணிகள் நடக்கவேண்டும். போட்டி நிறைந்த இந்தத் தொழில்நுட்ப உலகத்தில், ஒவ்வொவொரு நொடியும், ஒவ்வொவொரு முயற்சியும் முதலீடு.

    எனவே, செய்யும் வேலையின் எதிர்பார்ப்புக்களை, அதன் நுட்பங்களை, என்னுடன் பணிபுரிபவர்களுக்கு, நான் வெகு நேர்மையாக, உண்மையாக, ஒளிவுமறைவின்றி, தெள்ளத்தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.

    எனவே, நான் நேர்படப் பேசுகின்றேன். தப்பு என்றால் அதை தப்பு என்று வெகுத் தெளிவாக, நேரிடையாக, உடனடியாக அத்தருணத்திலேயே சொல்லியாகவேண்டும் என்பது என் கடமை. அதுவே என் இயல்பு.

    இதைவிடச் சிறப்பாகப்  பேசவேண்டும் என்றால் சொகுசாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும், Gentlemen Club ல் வேண்டுமானால் அதனை எதிர்ப்பார்க்கலாம். அங்கே எல்லோரும் டை கட்டிக்கொண்டு  இருப்பார்கள் –  வெல்வெட் பூச்சு போட்டு பிறர் மனம் நோகாதபடி, நாசூக்கு மொழியில் (Brahmin language) பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு  பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது எனக்குத் தெரியாத ஒன்றும் கூட.

    நான் கலிபோர்னியாவின்  நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவன். நேரிடையாக, ஒளிவுமறைவு இன்றி, பிறர் முகத்தில் உறைக்கும்படி பேசுவது மட்டுமே எனக்குத் தெரியும். அதை மட்டுமே  நான் செய்வேன்.

    நான் அழுத்தமாகப் பேசுகிறவன் தான். ஆனால், நான் என்ன பேசுகிறேன் எப்படிப் பேசுகிறேன், எதற்காக அவ்வாறு பேசுகிறேன் என்று தெரிந்து பேசுகிறவன்.

    இது வாழ்வாதாரம். இது தொழிற்கூடம் – இது வியாபாரப் பொருள் செய்யுமிடம் – இங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோரும் வேலை செய்யக் கடைமை பட்டவர்கள் – அதுவும் பிறருக்கு, நாங்கள் விற்றுக் காசாக்கவேண்டிய  கணினிக்கருவிகளைத் தயார் செய்கிறவர்கள் நாங்கள் – இங்கே எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் முகமன் செய்ய – முகத்துதி செய்ய என்ன தேவை இருக்கிறது? என்று சாட்டையால் அடிப்பது போல விருட்டெனப் பேசும் ஜாப்ஸின் பதிலில் எத்துணைப் பொருள் பொதிந்திருக்கிறது என்பதை நினைத்து நம்மால் நம்மால் உண்மையிலேயே பெருமை கொள்ளமுடிகிறது.

    இங்கே தான், அரசியல்வாதிகளின் மொழிக்கும் ஜாப்ஸைப் போன்ற அறிவாளிகளின் – அறிவியலாளர்களின் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கிறோம்.

    பொய்யை மெய்யாகத்தோன்றுமாறும், படுகொலைகளை நியாயப்படுத்துவதாகவும், வாக்காளர்களின் கண்களை மறைத்து, அவர்களின்  மதியை மயக்கி மாயா ஜாலம்  செய்து அவர்களை வசியப்படுத்தும் கவர்ச்சிப் பொறிகளான சொற்களைப் பிரயோகிக்கும் அரசியல்வாதிகள் இந்த சமுதாயத்திற்கு எத்துணை பாதகம் விளைக்கிறார்கள் என்பது கண்கூடு.

    அரசியல் பரிபாஷைகள் மற்றும் அரசியல் மொழியின் பொருள் இலக்கணத்தை பலரும் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். இதில், குறிப்பிடத்தக்கவர் ஜுனியர் கீ என்பவர் [1]; அரசியல் மொழி பற்றி கீ என்ன சொல்லுகிறார் என்றால்: ஆண்டான் – அடிமை; அதிகாரம் – அடக்குமுறை ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் போதிப்பதானதுதான் அரசியல் மொழி. அரசியல் மொழி என்பது வெகு கவனத்தோடு உருவாக்கப்பட்டு எடுத்தாளப்படுவது. அரசியல் மொழியைப் பிரயோகிப்போர் – தன்னின் பிடிவாதத் தன்மையிலும் சுயநல வெறியிலும், எந்த மாறுதலையும் ஏற்படுத்திக்கொள்வதைத் தடுத்தும், மாறுதல்கள் பிறரில், குறிப்பாக ஏழை எளியோர்களில்   கட்டாயம் நிகழ்வதை உறுதி செய்வதுமான ஒரே குறிக்கோளோடு வசியமும் நஞ்சும் கலந்த மாயையான மொழியில் பேசுகிறார்கள்.

    சமுதாயத்திலே, பிரிவினை மனப்பான்மையையும், பேதங்கள் நிலைப்பாடுபெறுமாறும் பேசப்படும் கபடமான அரசியல் மொழியை, அலுவலகத்திலே பயன்படுத்தினால் அது சுரண்டலுக்கும், சுயநலத்துக்கும், கொத்தடிமைகளாய் பணியாட்களைப் பயன்படுத்தப்  பயன்படுமே தவிர, அங்கே, பணியாளிர்களின் வளர்ச்சியையோ, அவர்களின் ஊக்கம் மிக்க ஆக்கபூர்வமான கிரியாசக்தியையோ தூண்டவியலாது என்பது வெள்ளிடைமலை. இன்று பல அரசுநிறுவனங்களும் அரசுசார் நிறுவனங்களும் இத்தகைய நிர்வாகக் கோளாறுகளால் சிதிலப்பட்டு, சீரழிவதை நாம் கண்டவாறுதான் இருக்கிறோம்.

    இதுபோன்றே அரசியல்வாதிகள் நடத்துகின்ற. நடிகநடிகையர் நடத்துகிற பல்வேறு நிறுவனங்களும், கல்விக்கூடங்களும் கூட, சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணை செய்யாத, கவர்ச்சிப் போதையில் மக்களை திசைதிருப்பி சீரழிப்பதையும் நாம் கண்டவாறு இருக்கிறோம்.

    எனவே, நிர்வாகத்த்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் அரசியல் சார்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதோடு அரசியல் பரிபாஷைகளை உபயோகிக்காத பேராண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்  என்பது தெளிவு.

    சொல்லப்போனால், ஜாப்ஸ் அரசியல்வாதிகளைப் பற்றி  அறியாதவர்  அல்லர். அரசியல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவர் வெகுவாகவே அறிந்தவர். அதுவும் ஒரு டெக் கம்பெனியை நடத்துவது என்றால் அரசியல் உலகத்தின் பிடியில் சிக்காமல் தப்புவது கடினம். அதுவும் அமெரிக்க அரசியலின் பூடகமும் நெருக்கடிகளும் வித்தியாசனவை. இங்கு, தொழில் நடத்த வேண்டுமென்றால் அரசியல்வாதிகளுக்கு Lobbying செய்தாக வேண்டும். அதாவது, அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கும், அவர்களது ஜீவிதத்திற்கும் என, வாஷிங்டன் டி.சி யில், அரசியல்வாதிகளுக்குப் பணம் மொய் எழுதினாலொழிய, அவர்கள்  தொழிற்கூடங்களின்  பிரச்சினைகளை செவிமடுக்கவும் மாட்டார்கள்.

    இவ்வாறான நெருக்கடி இருக்கும் ஒரு நிலையில், அரசியலை மிக தைரியத்தோடும் உறுதியோடும் எதிர்த்த ஒரே தொழிலதிபர் ஜாப்ஸ்! அரசியல்வாதிகள் வந்துதான் தன் தொழில் நடக்கவேண்டும் என்கிற தேவையை அடியோடு எடுத்தெறிந்த ஜாப்ஸின் அசாத்திய தைரியத்தை இன்றும் என்றும் உலகு புகழ்ந்தபடி இருக்கும்.

    ஜாப்ஸின் வாழ்நாள் வரையில் ஆப்பிள் நிறுவனம் வாஷிங்க்டன் டி.சி. யின் பக்கம் தலைசாய்க்கவில்லை  என்றால் அந்த வீரத்தின் உரத்தை நீங்களே புரிந்து கொள்ளமுடியும்.

    தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் பிறருக்கு அஞ்சி பயந்து நடந்துகொள்ளக்கூடாது. தவறு ஒன்று நடக்கும்போது, அதைத் தவறு என்று சுட்டிக்காட்ட மறுப்பவன் எப்படித்  தலைவனாக முடியும் என்பது ஜாப்ஸின் மிகப்பெரிய வினா.

    அரசியல் தலைமை, அரசின் தலைமை, அலுவலகத் தலைமை, குடும்பத்த தலைமை  என, சிறிதோ பெரிதோ என்ற வித்தியாசமின்றி, தலைமைக்கென சிறப்பு குணாதிசயங்கள் இருப்பதை வெகு தெளிவாகக் கண்டவர் ஜாப்ஸ்.

    தலைமைக்குரிய சிறப்பு குணாதிசயங்களில் அவர் முதலாகக் கருதியது அச்சமின்மையையே!

    அச்சமின்மையை, இறைவனின் குணாதிசயமாக வேதம் கூறுகிறது. அரசனை இறைவனோடு ஒப்பிட்டுப் பேசுவது உலகின் பல நாடுகளிலும் இருப்பதான ஒரு பழக்கம்.

    இது வழி, ஜாப்ஸின், தலைவர்கள் அச்சமற்றவர்களாக  இருக்கவேண்டும் என்கிற கருத்து வேதவாக்கு நடைமுறைக்கானது, வெற்று மொழியாய் நிற்பதற்கானது அன்று என்பதை  வலியுறுத்துகிறது. இவ்வழியில் பார்த்தால், வெளிப்படையாக, உள்ளது உள்ளவாறு – அது பிறரது மனதைப் புண்படுத்தும் எனினும் கூட, தலைவன் சொல்லியாகவேண்டும் என்கிற கடப்பாட்டில் உள்ளான் என்பதை ஜாப்ஸ் வாழ்நாள் முழுதும் நடந்துகாட்டியே சென்றார்.

    சுவாமி சிவானந்தா தனது “Conqest of Fear” எனும் நூலில் [2]  கூறுகிறார்: “அச்சமின்மை என்பது உன் பிறப்புரிமை” என்று.

    இதையேதான், நாவுக்கரசரும், தேவாரப் பதிகத்தில்,

    நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்;
    நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்;
    ஏமாப்போம்பிணி அறியோம்பணிவோம் அல்லோம்;
    இன்பமே எந்நாளும்துன்பமில்லை.

    அரசியலிலிருந்து, அரசியல் மொழியிலிருந்து புறத்தே நின்று செய்வதே தொழில் தர்மம் என்பது தான் ஜாப்ஸின் தாரக மந்திரமாய் இருந்தது எனலாம்.

    திருநாவுக்கரசர் சொன்னதுபோல, வீழ்ச்சியைத் தழுவாது, நரக வேதனையில் இடர் படாது, தேங்கி நில்லாது, ஏமாப்பு எய்தாது, மனப் பிணியும் சோர்வும் கொள்ளாது, எவருக்கும் அடிபணிதல் செய்யாது, இவ்வுலகில் தொழிற்கூடங்கள் நடத்தவேண்டுமென்றால் நேர்படப் பேசித் தெளிவுறுத்தும் அச்சமின்மை மட்டுமே தேவை என்பது ஜாப்ஸின் அசைக்கமுடியாத உறுதி.

    இவ்வகையில், அமெரிக்க அதிபர். ஓபாமா பற்றி ஜாப்ஸ் குறிப்பிட்ட சில கருத்துக்களும் கூட வெகு பிரபலம். அவற்றை  நாம் இங்கே சற்று சிந்திப்பதும் பொருத்தமுடைத்ததாய் இருக்கும்.

    ஜாப்ஸ் சொல்கிறார்: “நான் ஒபாமாவின் தலைமை கண்டு மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். அவர்  தலைவனாக இருந்து தலைமைப்பொறுப்பில் மற்றவர்களை வழிநடாத்த சிரமப்படுகிறார்.”

    “ஒபாமா எல்லோருக்கும் முகஸ்துதி செய்கிறார், எவரையும் கடிந்துவிடக்கூடாது என்றே நடந்துகொள்கிறார்.”

    ஒரு நாட்டின் தலைவருக்கு எல்லோருக்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஓங்கிக் கேட்கும் ஜாப்ஸின் துணிச்சலான வாசகம் இன்றும் என்றும் வரலாற்று ஏடுகளிலே நிலைத்த பதிவாகவே காலம் வெல்லும்.

    ஒரு மாபெரும் நாட்டின் புகழ்மிக்க அதிபரை பற்றி இப்படிப்பேசுவது சரியா என்றால், “எனக்கு அத்தகைய பயம் ஏதும் இல்லை, நான் என்னுடைய தலைமைப்பணியில் குளறுபடி ஏதும் இல்லாமல் இருக்கிறேன்!”

    “ஆப்பிள் நிறுவனத்திறகு 30,000 உற்பத்திப் பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் ஆனால் இங்கே அமெரிக்கர்கள் எவரும் பொறியாளர்களாகப் பணிசெய்யும் கல்வித் தகுதியோ அல்லது பயிற்சித்தகுதியோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.” எனவே, Dream Act எனப்படும் ஏற்பாட்டின் மூலம், வெளிநாட்டு பொறியியல் மாணவர்களுக்கு, அமெரிக்காவில் வேலைசெய்ய விசா வழங்கவேண்டும் என்றது ஜாப்ஸின் ஆலோசனை.

    ஆனால், Dream Act க்கு, அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டபோது, ஒபாமா இந்த Dream Act ஐ அவரால் ஏன் அமுலுக்குக் கொண்டு வரமுடியவில்லை என விளக்கம் அளித்தார்.

    ஒபாமாவின் விளக்கத்திற்கு பதிலிறுப்பவராக, ஜாப்ஸ் என்ன சொன்னார் என்றால்: “ஒரு நாட்டின் புத்திசாலியான தலைவராக இருந்து கொண்டு தனது  கையாலாகாத்தனத்துக்கு ஒபாமா விளக்கம் அளிப்பது என்னை நிரம்ப கோபப்படுத்துகிறது!”

    “இந்த அரசு தொழிற்கூடங்களுக்கு நட்பாயில்லை. ஒரு தொழிற்கூடத்தைத் தொடங்கவோ நடத்தவரோ இங்கே, ஆயிரம் முட்டுக்கட்டைகள் – தடைகள் – அனாவசியச் செலவுகள்! ஆப்பிள் நிறுவனத்திற்கு, சீனாவில் 70,000 உற்பத்திப்  பொறியாளர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள். நம்மால் வெளிநாட்டிலே வேலை செய்து கொள்ளமுடியும். ஆனால் இங்கு எதுவும் நடக்காது. ஒபாமா ஒருமுறைக்கு மேல் மீண்டும் ஆட்சிக்கு வரவியலாத நிலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறார்.”

    ஜாப்ஸ் தன்மீது வீசிய விமரிசனங்களை ஒபாமா எவ்வாறு பொறுத்துக் கொண்டார் என்று  தெரியவில்லை. ஆனால், “அமெரிக்கக் கல்வி பழுதாகிப்போன பயனற்ற கல்வி –  இதனை அமெரிக்க  அதிபர் சீர்படுத்தியாகவேண்டும். இங்கு ஒரு ஆண்டுக்கு பதினோரு மாதங்கள் என்று – ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிவரையிலும், பள்ளிக்கூடங்கள் நடக்கவேண்டும்” என்று ஜாப்ஸ் சொன்ன மாத்திரத்தில் அதனைக் கூர்ந்து கவனித்தவரானார் ஒபாமா, தனது கட்சிக்காரர்களிடம், ஜாப்ஸ் சொல்வதுபோல, 30,000 உற்பத்திப் பொறியாளர்களைப் பயிற்சி தந்து, தயார்படுத்த நாம் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று பேசினார். அதோடு நின்றாறில்லை, ஒபாமா, ஜாப்ஸிடம் இதுபற்றி தொலைபேசியிலும் இருமுறை பேசினார்.

    ஓபாமா – ஜாப்ஸ் இருவரின் தொடர்பு இன்னமும் கூட அடுத்த நிலைக்குப் போனது – இருவரும் ஒரு முறை நேரிலே சநதித்தனர். ஜாப்ஸும்  கூட ஒபாமாவின் அரசியல் வெற்றிக்குக் கொஞ்சம் உதவவும் கூட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

    ஒரு நாட்டின் அதிபர், ஒரு சாதாரண தொழிற்கூடத் தலைவரை, நாடி, அறிவுரையும் ஆலோசனையும், உதவியையும் பெற்றது இன்றுவரை, உலக அதிசயமே!

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

    என்று வள்ளுவர் கூறியது நம் நினைவிற்கு இப்போது வருகிறது. இக்குரலுக்கு பொழிப்புரை தந்திருக்கிற பலரும், இக்குறளைச் சரியாகப் பொழித்த்துரைக்கவில்லை என்றே இப்போது நம்மால் உணரமுடிகிறது.

    நிரந்தினிது என்கிற பதத்தை சுவை பட, இனிமையாக என்று அனைத்துப் பொழிப்புரையாளர்களும் கூறுகிறார்கள்.

    ஜாப்ஸ் என்றும்  ஒருபோதும்  இனிமையான வார்த்தைகளைத் தெரிந்து எடுத்துக் பேசுகிறவர் இல்லை. ஆனால், ஆணித்தரமான, அழுத்தமான, புரிதலும், தெளிவும், ஊக்கமும் தருவதான எளிமையான, நேரடிச் சொற்களை, விரைவாகக் கூறி,  கேட்போருள் சிந்தனை எழுச்சியையும், துரிதமான செயல்முனைப்பையும்  ஊட்டுபவர்.

    சொல்லப்போனால், ஜாப்ஸ் பலசமயங்களில், தனது சகப் பணியாளர்களிடம், ஏன் சில நிருபர்களிடம் கூட, மலிவான, சகஜன, தாழ்வான மொழியாடலைப் பயன்படுத்துபவர் தான். இவ்வாறு, இனிமையில்லாத அழுத்தமான சொல்லாடலைக் கொண்டவராக ஜாப்ஸ் இருந்தபோதும்,  அவரது வாக்கை உலகம், வெறுப்பின்றி உளப்பூர்வமாக இனிதே விரைந்து கேட்டு, செயலாற்ற விரும்பிய தன்மையை நாம் அறிந்தவராதலால், “இனிது” என்பதை சொல்பவரிடமிருந்து விலக்கி, கேட்பவர்களுக்குப்  பண்பாகத் தருவது சிறப்பு தரும் என்றே முடிவு செய்யத் தோன்றுகிறது.

    எனவே, சொல்லுதல் வல்லார்ப் பெறின்நிரந்தினிது விரைந்து தொழில் கேட்கும் ஞாலம” என்று சீர்படுத்தி இக்குறளுக்கு, பொழிப்புரை தருதல் பொருத்தமாக அமையும் என்று உணர்கிறோம்.  ஒரு சொல் செயலாக மாறவேண்டும் என்றால்  அங்கே சொல் இனிமை வேண்டுமா – சொற்கோர்வை வேண்டுமா – எதுகை மோனை நயங்கள் வேண்டுமா என்று பார்த்தால் –  இவையெல்லாம் தேவையில்லை என்றே நம்மால் இப்போது சொல்லமுடியும்.

    சொல்லப்பட்டச் சொற்களுக்கு, கேட்பவரின் இசைவும் ஏற்பும், இவ்வார்த்தைக்கு, நான், செயல் வடிவம் தந்தேயாக வேண்டும் என்கிற உளஎழுச்சியும் உருவாகுமேயானால், அப்போது மட்டுமே  ஒரு சொல் செயலாக மாறும். மறறெப்போதும் அல்ல.

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்

    என்று பிறிதொரு குறளிலே வள்ளுவர், ஒருவரது சொல்வன்மையை, கேட்டாரைப் பிணிக்கும் தன்மையிலும் – கேளாரையும் கேட்குமாறும்,  கேட்டு நடக்குமாறும்  வேட்கை கொள்ளச் சொல்லும் தன்மையிலும் நிறுத்துவத்தைக் காண்க.

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

    என்றபடியாக, எந்தத் தடையையும் எல்லாத் தடையையும் தகர்த்துத் தாண்டி எளிமையும், சுருக்கமும் கலந்த, நேரடியான துரித சொற்களாலும், சோர்வற்ற உழைப்பாலும், அச்சமென்பதை வீசியெறிந்து விட்டு செம்மார்ந்த சகஜ வாழ்க்கை வாழ்ந்து போனவர் ஜாப்ஸ்.

    எனவே தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிசெய்த ஸ்கல்லி ஜாப்ஸை, “செயல்வீரர் – தான் சொல்வதை – தானே நடத்திக் காட்டுபவர் மட்டுமல்ல – அவர் சொல்வதை மற்றவர்களும் ஏற்று, அவர் சொன்னதை திறம்படச்  செயல் வடிவமாக, செய்துகாட்டுமாறு செய்பவர்!”

    (மேலும் பேசுவோம்)  

    துணை நின்றவை

    1. V.O. Key, Jr. (1948).  Politics, Parties & Pressure Groups. New York: Thomas Y. Crowell Company, Second Edition, p. 3.
    2. sri swmai sivananda (1997). Conquest of Fear.  Shivananda Nagar: Divine Life Society, Fifth Edition.

    Share
  • உள்ளே.. உள்ளே!

    உள்ளே.. உள்ளே!

    கவியோகி வேதம்

    வானம் வரையும் ஓவியத்துள்-ஒரு
    மயக்க மருந்தே இருக்குதப்பா!
    மோனம் சொல்லும் சொற்களுக்குள்-ஒரு
    முனிவன் இருத்தல் தெரியுதப்பா!

    விண்ணில் புகையும் முகிலுக்குள்-ஒரு
    விருந்தே சமைதல் புரியுதப்பா!
    மண்ணில் அதுவே கர்ப்பமப்பா!-அது
    மனிதன் உணவாய்ப் பிறக்குதப்பா!

    இழையும் காற்றில் ரகசியத்தை-நம்
    “எடிஸன்’ கண்டான்! விளக்காச்சு!
    நுழையும் ஒலியைப் பிசைந்திடவும் -அது
    நுட்பக் கணினி என்றாச்சு!

    ஆம்!
    மனமே எழுத்தின் கருவூலம்!-அதில்
    வார்த்தைக் கவிதை ஒருஜாலம்!
    இனிப்பின் உள்ளே பலபுரட்சி!-நீ
    இதனை ஆய்ந்தால் வரும்மிரட்சி!

    ‘உள்ளே பார்த்தல்’- ஓர்அறிவாம்!-அதில்
    உண்மை ஒளிரும்! கண்டறிவாய்!
    உள்ளே என்றும் நான்உள்ளேன்-கூட
    ஒருவன் உள்ளான்! கண்டுகொண்டேன்!

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 6

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 6

    மீ. விசுவநாதன்

    சன்யாசம் தந்தார் குருதேவர்

    பூவி னாலே செய்த
    பொன்னாம் கரத்தி னாலே
    காவி உடையும், தண்ட
    கமண்ட லமுமே தந்து
    ஆவி சேர்த்த ணைத்து
    அன்புச் சீட ரோடு
    சேவிக் கவேண்டி அங்கே
    சேர்ந்தார் அதிஷ் டானம் !  (51)

    மகாவாக்கிய உபதேசம்

    மகத்தாம் மந்தி ரமான
    “மகாவாக் யத்தை”ச் சீடன்
    அகத்தில் பதியும் வண்ணம்
    அபிந வவித்யா தீர்த்த
    ஜகத்கு ருவேதான் ஓத
    ஜகமே பக்தி யாலே
    முகத்தில் இன்பம் பொங்க
    ஓமென் றோதிற் றம்மா !  (52)

    ஸ்ரீ பாரதீ தீர்த்தரானார்”

    சார தைமுன் வைத்து
    சாளக் கிராம பூஜை
    ஆரா தனைகள் செய்ய
    அப்ப டியேசீ டனும்தன்
    நேரா னகுரு பூஜை
    செய்ய, குருசீ டர்கு
    பார தீதீர்த் த“ராகப்
    பட்டம் தந்த ழைத்தார்!  (53)

    தேவதா தர்சனம்

    சார தாவின் முன்பு
    சற்றே தியானம் செய்து
    தோர ணகண நாதன்
    தோத்தி ரமும்செய் திட்டார்
    நேரே சங்க ரர்சந்
    நிதிமுன் வேண்டிக் கொண்டு
    நீரோ டும்துங் கையை
    நெருங்கி அக்கரை சேர்ந்தார் ! (54)

    சிஷ்ய சுவாமிகளின் பெருமை

    மாலை தரிச னத்தில்
    வந்த பக்தர் பார்த்து
    பாலை நிகர்த்த சீடர்
    பண்பை மெச்சி மெச்சி,
    “மேலாம் குருவின் ஆசி
    மேலும் கிடைக்க நீங்கள்
    காலம் தோறும் பக்தி
    கவனம் செய்க” என்றார்!  (55)

    குருவைப் போற்றுக

    “சீடர் தேர்வில் நன்கு
    தேர்ச்சி பெற்று விட்டேன்
    நாடு போற்றும் வண்ணம்
    ஞானி ஒருவர் தன்னைத்
    தேடித் தந்து வாணி
    சிந்தை குளிர வைத்தாள் !
    கூடி வந்து உங்கள்
    குருவைப் பணிக” என்றார் ! (56)

    ஸ்ரீ சாரதா பீடத்தின் ஆசார்யர்கள்

    பாரம் பர்யம் மிக்க
    பாரே போற்றும் பீடம் !
    ஆரம் பமுத லாக
    அமைந்த யோகி யர்கள்
    ஈரம் மிகுந்த நெஞ்சும்
    ஈசன் உருவு மாக
    நேரம் காலம் எல்லாம்
    பிரும்மத் தியானம் செய்வோர்! (57)

    பார தீதீர்த் தர்“அப்
    பண்பு வம்சம் வந்தோர் !
    நார தமுனி போல
    ஞானச் செல்வ ராவார் !
    பேரும் புகழும் வேண்டார்
    பேசாப் பொழுதை வேண்டி
    ஊரும் உலகும் வாழ
    உள்ளே தவமி ருப்பார் !  (58)

    பெருமை மிகு ஸ்ரீ பாரதீ தீர்த்தர்

    தெளிந்த நீரைப் போல
    நிறைந்து கற்ற தெல்லாம்
    எளிய உவமை மூலம்
    எடுத்துச் சொல்லும் நேர்த்தி
    உளியால் சிற்பம் செய்யும்
    உயர்ந்த சிற்பிக் கீடாய்க்
    களிப்பார் கற்றோர்; சொல்லில்
    கரைவார் எளியோர் அங்கே! (59)

    வித்யை விநயம் ரெண்டும்
    விரும்பி இவரைத் தேடி
    பக்தி செய்யும் ; வீணாம்
    பகட்டு விலகி ஓடும்;
    முக்தி நெறியைச் சொன்ன
    மூல குருவின் ஆசி
    சக்தி அளிப்ப தாலே
    சரித்தி ரத்தில் நின்றார் !  (60)

    Share
  • திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    திருக்கடவூரில் கால சம்ஹார விழா

    மரபின் மைந்தன் முத்தையா

    திருக்கடவூரில் இன்று கால சம்ஹார விழா – கால சம்ஹார மூர்த்திக்கு அபிடேக ஆராதனை

    சூலமேந்தி வீறு கொண்டான் சூரசம்ஹாரன்
    சூட்சுமமாய் அருள வந்தான் ஏழைப் பங்காளன்
    கால காலன் கருணை கொண்டான் காத்து ரட்சிக்க
    கழல்களிலே மலர்கள் தூவி நாமும் அர்ச்சிக்க

    மார்க்கண்டேயன் அழுத போது முன்னே வந்தவன்
    மார்க்கமுண்டு எனும் உறுதி நமக்குத் தந்தவன்
    காக்க வேண்டும் காக்க வேண்டும் காலகாலனே
    காலமறிந்து சூலம் வீசு எங்கள் ஈசனே

    Share
  • மதுரை குஞ்சரத்தம்மாள்

    மதுரை குஞ்சரத்தம்மாள்

    முனைவர் ம.குமரவேல்
     
    (ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? அந்தக் கொடிய வரலாற்றைப் படியுங்கள்)
     
    1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம், தாது வருடப் பஞ்சம் என அழைக்கப்படுகிறது. வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைக்கூடத் தோண்டி எடுத்துத் தின்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கைக் கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்துத் தின்று உயிர் பிழைத்துக் கிடந்த கொடிய பஞ்சமது.
     
    கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிறுடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது. பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அதில் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கதை, குஞ்சரம் அம்மாவினுடையது.
     
    குஞ்சரம், தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.
     
    தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.
     
    கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
     
    பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
     
    வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.
     
    இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போகிறாள் என்று பெருந்தனக்காரர்கள் பேசிக்கொண்டனர். அவளின் செய்கை, அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊற்றும் செய்தி கேட்டு மக்கள் வந்துகொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக, துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்கக் குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.
     
    தேவையின் பயங்கரம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி, தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள். தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில்தான் கலெக்டர் கஞ்சித் தொட்டியைத் திறக்க முன் வந்தார். ஒரு வகையில் அதற்குக் குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு, கஞ்சித் தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.
     
    பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு, எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துகளை உலையிலே போட்டாள்.
     
    கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி, தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்குப் பசிப்பிணி தீர்த்தது.
     
    தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்துக் கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு, கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.
     
    அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள், யாரைப் பற்றிப் பேச யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில்கூடக் குஞ்சரத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக் கிடந்தாள்.
     
    ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு  விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய். தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கியபொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இதுதான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.
     
    நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் இரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப் புரண்டு கதறியழுதனர். அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல, வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.
     
    அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையலிட்டு வணங்கித் தெய்வமாக்கிக் கொண்டனர், மாமதுரை மக்கள்.
    Share