இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17
அவ்வைமகள்
17. நேர்படப் பேசி எளிவந்து வெகுண்டு
ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதத்தை எழுதிய ஐசக்சன், ஜாப்ஸை, நேர்காணல் கண்டே ஒவ்வொன்றையும் உண்மையாக எழுதினார் என்பது அனைவரும் அறிந்த சேதி. இவ்வாறன நேர்காணல்களில், ஐசக்சன் பற்பல கேள்விகளை ஜாப்ஸிடம் கேட்பதுண்டு.
ஒருசமயம், ஐசக்சன் கேட்கிறார்:
“நீங்கள் உங்கள் தொழில்நுட்பப் பணியில், உங்களிடம் பணிபுரிபவர்களிடம், கராறாகவும் தயவு தாட்சணியம் பார்க்காமலும், அழுத்தமாகப் பேசுவது ஏன்?”
இனிமையாகப் பேசினால் இன்னமும் கூட வெற்றி கிடைத்திருக்குமோ என்ற ஆதங்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வியாகவே, ஐசக்சனின் இந்தக் கேள்வி அமைந்திருக்கிறது.
இக்கேள்விக்கு ஜாப்ஸ் அளித்த பதிலைக் காண்போம்:
“இது மக்களுக்கான படைப்புப் பணி; சாதாரணப் பொது மக்களின் தேவையை, விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனது அலுவலகத்தில் இருக்கும் அனைவருடைய ஒட்டுமொத்தக் கடமை. அதிலே, எவருக்கும் எவ்விதமான அனுசரிப்பும், விட்டுக்கொடுத்தலும் கூடாது. சமுதாயம் தழுவியத்தான விசாலப் பார்வையோடு பொருட்களை உருவாக்குகிற இடத்தில், தனிப்பட்டவர்கள், தங்கள் குறுகிய பார்வையைத் தியாகம் செய்தே ஆக வேண்டும்.
ஓட்டுமொத்தமாய் அனைவருக்கும் ஒரே இலக்கு, ஒன்றேயான விசாலப் பார்வை எனும்போது இங்கே, ஒட்டுமொத்தமான சிதறலில்லாத கவனம் ஒவ்வொவொரு நபருக்கும் தேவை. அடுத்து, காலவிரயம் இல்லமால் பணிகள் நடக்கவேண்டும். போட்டி நிறைந்த இந்தத் தொழில்நுட்ப உலகத்தில், ஒவ்வொவொரு நொடியும், ஒவ்வொவொரு முயற்சியும் முதலீடு.
எனவே, செய்யும் வேலையின் எதிர்பார்ப்புக்களை, அதன் நுட்பங்களை, என்னுடன் பணிபுரிபவர்களுக்கு, நான் வெகு நேர்மையாக, உண்மையாக, ஒளிவுமறைவின்றி, தெள்ளத்தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.
எனவே, நான் நேர்படப் பேசுகின்றேன். தப்பு என்றால் அதை தப்பு என்று வெகுத் தெளிவாக, நேரிடையாக, உடனடியாக அத்தருணத்திலேயே சொல்லியாகவேண்டும் என்பது என் கடமை. அதுவே என் இயல்பு.
இதைவிடச் சிறப்பாகப் பேசவேண்டும் என்றால் சொகுசாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும், Gentlemen Club ல் வேண்டுமானால் அதனை எதிர்ப்பார்க்கலாம். அங்கே எல்லோரும் டை கட்டிக்கொண்டு இருப்பார்கள் – வெல்வெட் பூச்சு போட்டு பிறர் மனம் நோகாதபடி, நாசூக்கு மொழியில் (Brahmin language) பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது எனக்குத் தெரியாத ஒன்றும் கூட.
நான் கலிபோர்னியாவின் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவன். நேரிடையாக, ஒளிவுமறைவு இன்றி, பிறர் முகத்தில் உறைக்கும்படி பேசுவது மட்டுமே எனக்குத் தெரியும். அதை மட்டுமே நான் செய்வேன்.
நான் அழுத்தமாகப் பேசுகிறவன் தான். ஆனால், நான் என்ன பேசுகிறேன் எப்படிப் பேசுகிறேன், எதற்காக அவ்வாறு பேசுகிறேன் என்று தெரிந்து பேசுகிறவன்.
இது வாழ்வாதாரம். இது தொழிற்கூடம் – இது வியாபாரப் பொருள் செய்யுமிடம் – இங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோரும் வேலை செய்யக் கடைமை பட்டவர்கள் – அதுவும் பிறருக்கு, நாங்கள் விற்றுக் காசாக்கவேண்டிய கணினிக்கருவிகளைத் தயார் செய்கிறவர்கள் நாங்கள் – இங்கே எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் முகமன் செய்ய – முகத்துதி செய்ய என்ன தேவை இருக்கிறது? என்று சாட்டையால் அடிப்பது போல விருட்டெனப் பேசும் ஜாப்ஸின் பதிலில் எத்துணைப் பொருள் பொதிந்திருக்கிறது என்பதை நினைத்து நம்மால் நம்மால் உண்மையிலேயே பெருமை கொள்ளமுடிகிறது.
இங்கே தான், அரசியல்வாதிகளின் மொழிக்கும் ஜாப்ஸைப் போன்ற அறிவாளிகளின் – அறிவியலாளர்களின் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கிறோம்.
பொய்யை மெய்யாகத்தோன்றுமாறும், படுகொலைகளை நியாயப்படுத்துவதாகவும், வாக்காளர்களின் கண்களை மறைத்து, அவர்களின் மதியை மயக்கி மாயா ஜாலம் செய்து அவர்களை வசியப்படுத்தும் கவர்ச்சிப் பொறிகளான சொற்களைப் பிரயோகிக்கும் அரசியல்வாதிகள் இந்த சமுதாயத்திற்கு எத்துணை பாதகம் விளைக்கிறார்கள் என்பது கண்கூடு.
அரசியல் பரிபாஷைகள் மற்றும் அரசியல் மொழியின் பொருள் இலக்கணத்தை பலரும் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். இதில், குறிப்பிடத்தக்கவர் ஜுனியர் கீ என்பவர் [1]; அரசியல் மொழி பற்றி கீ என்ன சொல்லுகிறார் என்றால்: ஆண்டான் – அடிமை; அதிகாரம் – அடக்குமுறை ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் போதிப்பதானதுதான் அரசியல் மொழி. அரசியல் மொழி என்பது வெகு கவனத்தோடு உருவாக்கப்பட்டு எடுத்தாளப்படுவது. அரசியல் மொழியைப் பிரயோகிப்போர் – தன்னின் பிடிவாதத் தன்மையிலும் சுயநல வெறியிலும், எந்த மாறுதலையும் ஏற்படுத்திக்கொள்வதைத் தடுத்தும், மாறுதல்கள் பிறரில், குறிப்பாக ஏழை எளியோர்களில் கட்டாயம் நிகழ்வதை உறுதி செய்வதுமான ஒரே குறிக்கோளோடு வசியமும் நஞ்சும் கலந்த மாயையான மொழியில் பேசுகிறார்கள்.
சமுதாயத்திலே, பிரிவினை மனப்பான்மையையும், பேதங்கள் நிலைப்பாடுபெறுமாறும் பேசப்படும் கபடமான அரசியல் மொழியை, அலுவலகத்திலே பயன்படுத்தினால் அது சுரண்டலுக்கும், சுயநலத்துக்கும், கொத்தடிமைகளாய் பணியாட்களைப் பயன்படுத்தப் பயன்படுமே தவிர, அங்கே, பணியாளிர்களின் வளர்ச்சியையோ, அவர்களின் ஊக்கம் மிக்க ஆக்கபூர்வமான கிரியாசக்தியையோ தூண்டவியலாது என்பது வெள்ளிடைமலை. இன்று பல அரசுநிறுவனங்களும் அரசுசார் நிறுவனங்களும் இத்தகைய நிர்வாகக் கோளாறுகளால் சிதிலப்பட்டு, சீரழிவதை நாம் கண்டவாறுதான் இருக்கிறோம்.
இதுபோன்றே அரசியல்வாதிகள் நடத்துகின்ற. நடிகநடிகையர் நடத்துகிற பல்வேறு நிறுவனங்களும், கல்விக்கூடங்களும் கூட, சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணை செய்யாத, கவர்ச்சிப் போதையில் மக்களை திசைதிருப்பி சீரழிப்பதையும் நாம் கண்டவாறு இருக்கிறோம்.
எனவே, நிர்வாகத்த்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் அரசியல் சார்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதோடு அரசியல் பரிபாஷைகளை உபயோகிக்காத பேராண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது தெளிவு.
சொல்லப்போனால், ஜாப்ஸ் அரசியல்வாதிகளைப் பற்றி அறியாதவர் அல்லர். அரசியல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவர் வெகுவாகவே அறிந்தவர். அதுவும் ஒரு டெக் கம்பெனியை நடத்துவது என்றால் அரசியல் உலகத்தின் பிடியில் சிக்காமல் தப்புவது கடினம். அதுவும் அமெரிக்க அரசியலின் பூடகமும் நெருக்கடிகளும் வித்தியாசனவை. இங்கு, தொழில் நடத்த வேண்டுமென்றால் அரசியல்வாதிகளுக்கு Lobbying செய்தாக வேண்டும். அதாவது, அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கும், அவர்களது ஜீவிதத்திற்கும் என, வாஷிங்டன் டி.சி யில், அரசியல்வாதிகளுக்குப் பணம் மொய் எழுதினாலொழிய, அவர்கள் தொழிற்கூடங்களின் பிரச்சினைகளை செவிமடுக்கவும் மாட்டார்கள்.
இவ்வாறான நெருக்கடி இருக்கும் ஒரு நிலையில், அரசியலை மிக தைரியத்தோடும் உறுதியோடும் எதிர்த்த ஒரே தொழிலதிபர் ஜாப்ஸ்! அரசியல்வாதிகள் வந்துதான் தன் தொழில் நடக்கவேண்டும் என்கிற தேவையை அடியோடு எடுத்தெறிந்த ஜாப்ஸின் அசாத்திய தைரியத்தை இன்றும் என்றும் உலகு புகழ்ந்தபடி இருக்கும்.
ஜாப்ஸின் வாழ்நாள் வரையில் ஆப்பிள் நிறுவனம் வாஷிங்க்டன் டி.சி. யின் பக்கம் தலைசாய்க்கவில்லை என்றால் அந்த வீரத்தின் உரத்தை நீங்களே புரிந்து கொள்ளமுடியும்.
தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் பிறருக்கு அஞ்சி பயந்து நடந்துகொள்ளக்கூடாது. தவறு ஒன்று நடக்கும்போது, அதைத் தவறு என்று சுட்டிக்காட்ட மறுப்பவன் எப்படித் தலைவனாக முடியும் என்பது ஜாப்ஸின் மிகப்பெரிய வினா.
அரசியல் தலைமை, அரசின் தலைமை, அலுவலகத் தலைமை, குடும்பத்த தலைமை என, சிறிதோ பெரிதோ என்ற வித்தியாசமின்றி, தலைமைக்கென சிறப்பு குணாதிசயங்கள் இருப்பதை வெகு தெளிவாகக் கண்டவர் ஜாப்ஸ்.
தலைமைக்குரிய சிறப்பு குணாதிசயங்களில் அவர் முதலாகக் கருதியது அச்சமின்மையையே!
அச்சமின்மையை, இறைவனின் குணாதிசயமாக வேதம் கூறுகிறது. அரசனை இறைவனோடு ஒப்பிட்டுப் பேசுவது உலகின் பல நாடுகளிலும் இருப்பதான ஒரு பழக்கம்.
இது வழி, ஜாப்ஸின், தலைவர்கள் அச்சமற்றவர்களாக இருக்கவேண்டும் என்கிற கருத்து வேதவாக்கு நடைமுறைக்கானது, வெற்று மொழியாய் நிற்பதற்கானது அன்று என்பதை வலியுறுத்துகிறது. இவ்வழியில் பார்த்தால், வெளிப்படையாக, உள்ளது உள்ளவாறு – அது பிறரது மனதைப் புண்படுத்தும் எனினும் கூட, தலைவன் சொல்லியாகவேண்டும் என்கிற கடப்பாட்டில் உள்ளான் என்பதை ஜாப்ஸ் வாழ்நாள் முழுதும் நடந்துகாட்டியே சென்றார்.
சுவாமி சிவானந்தா தனது “Conqest of Fear” எனும் நூலில் [2] கூறுகிறார்: “அச்சமின்மை என்பது உன் பிறப்புரிமை” என்று.
இதையேதான், நாவுக்கரசரும், தேவாரப் பதிகத்தில்,
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.
அரசியலிலிருந்து, அரசியல் மொழியிலிருந்து புறத்தே நின்று செய்வதே தொழில் தர்மம் என்பது தான் ஜாப்ஸின் தாரக மந்திரமாய் இருந்தது எனலாம்.
திருநாவுக்கரசர் சொன்னதுபோல, வீழ்ச்சியைத் தழுவாது, நரக வேதனையில் இடர் படாது, தேங்கி நில்லாது, ஏமாப்பு எய்தாது, மனப் பிணியும் சோர்வும் கொள்ளாது, எவருக்கும் அடிபணிதல் செய்யாது, இவ்வுலகில் தொழிற்கூடங்கள் நடத்தவேண்டுமென்றால் நேர்படப் பேசித் தெளிவுறுத்தும் அச்சமின்மை மட்டுமே தேவை என்பது ஜாப்ஸின் அசைக்கமுடியாத உறுதி.
இவ்வகையில், அமெரிக்க அதிபர். ஓபாமா பற்றி ஜாப்ஸ் குறிப்பிட்ட சில கருத்துக்களும் கூட வெகு பிரபலம். அவற்றை நாம் இங்கே சற்று சிந்திப்பதும் பொருத்தமுடைத்ததாய் இருக்கும்.
ஜாப்ஸ் சொல்கிறார்: “நான் ஒபாமாவின் தலைமை கண்டு மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். அவர் தலைவனாக இருந்து தலைமைப்பொறுப்பில் மற்றவர்களை வழிநடாத்த சிரமப்படுகிறார்.”
“ஒபாமா எல்லோருக்கும் முகஸ்துதி செய்கிறார், எவரையும் கடிந்துவிடக்கூடாது என்றே நடந்துகொள்கிறார்.”
ஒரு நாட்டின் தலைவருக்கு எல்லோருக்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஓங்கிக் கேட்கும் ஜாப்ஸின் துணிச்சலான வாசகம் இன்றும் என்றும் வரலாற்று ஏடுகளிலே நிலைத்த பதிவாகவே காலம் வெல்லும்.
ஒரு மாபெரும் நாட்டின் புகழ்மிக்க அதிபரை பற்றி இப்படிப்பேசுவது சரியா என்றால், “எனக்கு அத்தகைய பயம் ஏதும் இல்லை, நான் என்னுடைய தலைமைப்பணியில் குளறுபடி ஏதும் இல்லாமல் இருக்கிறேன்!”
“ஆப்பிள் நிறுவனத்திறகு 30,000 உற்பத்திப் பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் ஆனால் இங்கே அமெரிக்கர்கள் எவரும் பொறியாளர்களாகப் பணிசெய்யும் கல்வித் தகுதியோ அல்லது பயிற்சித்தகுதியோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.” எனவே, Dream Act எனப்படும் ஏற்பாட்டின் மூலம், வெளிநாட்டு பொறியியல் மாணவர்களுக்கு, அமெரிக்காவில் வேலைசெய்ய விசா வழங்கவேண்டும் என்றது ஜாப்ஸின் ஆலோசனை.
ஆனால், Dream Act க்கு, அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டபோது, ஒபாமா இந்த Dream Act ஐ அவரால் ஏன் அமுலுக்குக் கொண்டு வரமுடியவில்லை என விளக்கம் அளித்தார்.
ஒபாமாவின் விளக்கத்திற்கு பதிலிறுப்பவராக, ஜாப்ஸ் என்ன சொன்னார் என்றால்: “ஒரு நாட்டின் புத்திசாலியான தலைவராக இருந்து கொண்டு தனது கையாலாகாத்தனத்துக்கு ஒபாமா விளக்கம் அளிப்பது என்னை நிரம்ப கோபப்படுத்துகிறது!”
“இந்த அரசு தொழிற்கூடங்களுக்கு நட்பாயில்லை. ஒரு தொழிற்கூடத்தைத் தொடங்கவோ நடத்தவரோ இங்கே, ஆயிரம் முட்டுக்கட்டைகள் – தடைகள் – அனாவசியச் செலவுகள்! ஆப்பிள் நிறுவனத்திற்கு, சீனாவில் 70,000 உற்பத்திப் பொறியாளர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள். நம்மால் வெளிநாட்டிலே வேலை செய்து கொள்ளமுடியும். ஆனால் இங்கு எதுவும் நடக்காது. ஒபாமா ஒருமுறைக்கு மேல் மீண்டும் ஆட்சிக்கு வரவியலாத நிலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறார்.”
ஜாப்ஸ் தன்மீது வீசிய விமரிசனங்களை ஒபாமா எவ்வாறு பொறுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால், “அமெரிக்கக் கல்வி பழுதாகிப்போன பயனற்ற கல்வி – இதனை அமெரிக்க அதிபர் சீர்படுத்தியாகவேண்டும். இங்கு ஒரு ஆண்டுக்கு பதினோரு மாதங்கள் என்று – ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிவரையிலும், பள்ளிக்கூடங்கள் நடக்கவேண்டும்” என்று ஜாப்ஸ் சொன்ன மாத்திரத்தில் அதனைக் கூர்ந்து கவனித்தவரானார் ஒபாமா, தனது கட்சிக்காரர்களிடம், ஜாப்ஸ் சொல்வதுபோல, 30,000 உற்பத்திப் பொறியாளர்களைப் பயிற்சி தந்து, தயார்படுத்த நாம் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று பேசினார். அதோடு நின்றாறில்லை, ஒபாமா, ஜாப்ஸிடம் இதுபற்றி தொலைபேசியிலும் இருமுறை பேசினார்.
ஓபாமா – ஜாப்ஸ் இருவரின் தொடர்பு இன்னமும் கூட அடுத்த நிலைக்குப் போனது – இருவரும் ஒரு முறை நேரிலே சநதித்தனர். ஜாப்ஸும் கூட ஒபாமாவின் அரசியல் வெற்றிக்குக் கொஞ்சம் உதவவும் கூட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
ஒரு நாட்டின் அதிபர், ஒரு சாதாரண தொழிற்கூடத் தலைவரை, நாடி, அறிவுரையும் ஆலோசனையும், உதவியையும் பெற்றது இன்றுவரை, உலக அதிசயமே!
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
என்று வள்ளுவர் கூறியது நம் நினைவிற்கு இப்போது வருகிறது. இக்குரலுக்கு பொழிப்புரை தந்திருக்கிற பலரும், இக்குறளைச் சரியாகப் பொழித்த்துரைக்கவில்லை என்றே இப்போது நம்மால் உணரமுடிகிறது.
நிரந்தினிது என்கிற பதத்தை சுவை பட, இனிமையாக என்று அனைத்துப் பொழிப்புரையாளர்களும் கூறுகிறார்கள்.
ஜாப்ஸ் என்றும் ஒருபோதும் இனிமையான வார்த்தைகளைத் தெரிந்து எடுத்துக் பேசுகிறவர் இல்லை. ஆனால், ஆணித்தரமான, அழுத்தமான, புரிதலும், தெளிவும், ஊக்கமும் தருவதான எளிமையான, நேரடிச் சொற்களை, விரைவாகக் கூறி, கேட்போருள் சிந்தனை எழுச்சியையும், துரிதமான செயல்முனைப்பையும் ஊட்டுபவர்.
சொல்லப்போனால், ஜாப்ஸ் பலசமயங்களில், தனது சகப் பணியாளர்களிடம், ஏன் சில நிருபர்களிடம் கூட, மலிவான, சகஜன, தாழ்வான மொழியாடலைப் பயன்படுத்துபவர் தான். இவ்வாறு, இனிமையில்லாத அழுத்தமான சொல்லாடலைக் கொண்டவராக ஜாப்ஸ் இருந்தபோதும், அவரது வாக்கை உலகம், வெறுப்பின்றி உளப்பூர்வமாக இனிதே விரைந்து கேட்டு, செயலாற்ற விரும்பிய தன்மையை நாம் அறிந்தவராதலால், “இனிது” என்பதை சொல்பவரிடமிருந்து விலக்கி, கேட்பவர்களுக்குப் பண்பாகத் தருவது சிறப்பு தரும் என்றே முடிவு செய்யத் தோன்றுகிறது.
எனவே, “சொல்லுதல் வல்லார்ப் பெறின், நிரந்தினிது விரைந்து தொழில் கேட்கும் ஞாலம” என்று சீர்படுத்தி இக்குறளுக்கு, பொழிப்புரை தருதல் பொருத்தமாக அமையும் என்று உணர்கிறோம். ஒரு சொல் செயலாக மாறவேண்டும் என்றால் அங்கே சொல் இனிமை வேண்டுமா – சொற்கோர்வை வேண்டுமா – எதுகை மோனை நயங்கள் வேண்டுமா என்று பார்த்தால் – இவையெல்லாம் தேவையில்லை என்றே நம்மால் இப்போது சொல்லமுடியும்.
சொல்லப்பட்டச் சொற்களுக்கு, கேட்பவரின் இசைவும் ஏற்பும், இவ்வார்த்தைக்கு, நான், செயல் வடிவம் தந்தேயாக வேண்டும் என்கிற உளஎழுச்சியும் உருவாகுமேயானால், அப்போது மட்டுமே ஒரு சொல் செயலாக மாறும். மறறெப்போதும் அல்ல.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
என்று பிறிதொரு குறளிலே வள்ளுவர், ஒருவரது சொல்வன்மையை, கேட்டாரைப் பிணிக்கும் தன்மையிலும் – கேளாரையும் கேட்குமாறும், கேட்டு நடக்குமாறும் வேட்கை கொள்ளச் சொல்லும் தன்மையிலும் நிறுத்துவத்தைக் காண்க.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
என்றபடியாக, எந்தத் தடையையும் எல்லாத் தடையையும் தகர்த்துத் தாண்டி எளிமையும், சுருக்கமும் கலந்த, நேரடியான துரித சொற்களாலும், சோர்வற்ற உழைப்பாலும், அச்சமென்பதை வீசியெறிந்து விட்டு செம்மார்ந்த சகஜ வாழ்க்கை வாழ்ந்து போனவர் ஜாப்ஸ்.
எனவே தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிசெய்த ஸ்கல்லி ஜாப்ஸை, “செயல்வீரர் – தான் சொல்வதை – தானே நடத்திக் காட்டுபவர் மட்டுமல்ல – அவர் சொல்வதை மற்றவர்களும் ஏற்று, அவர் சொன்னதை திறம்படச் செயல் வடிவமாக, செய்துகாட்டுமாறு செய்பவர்!”
(மேலும் பேசுவோம்)
துணை நின்றவை
1. V.O. Key, Jr. (1948). Politics, Parties & Pressure Groups. New York: Thomas Y. Crowell Company, Second Edition, p. 3.
2. sri swmai sivananda (1997). Conquest of Fear. Shivananda Nagar: Divine Life Society, Fifth Edition.
