ஒளவையாரின் ஆத்திசூடி அமைப்பும் நிலைப்பாடும்

0

முனைவர் சொ.சேதுபதி
தமிழ்த்துறைத் தலைவர்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி- 605003
sethukabilan@gmail.com

ஆத்திசூடி என்பது ஓர் அடியில் அறம் உரைக்கும் நீதிநூல் ஆகும். தமிழ்மொழியில் உள்ள உயிர். மெய் மற்றும் உயிர்மெய்யெழுத்துக்களை முதலாக உடைய  சொற்களைக் கொண்டு தொடங்கும் ஒவ்வோர் அடியிலும், ஓர் அறச் செய்தியைச் சொல்லுவது இதன் மரபாகும். இந்த நூலை இயற்றிய ஒளவையார், ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்திப் பாடி’த் தொடங்குகிறது. ஆத்திசூடி எனத் தொடங்குவதால், இந்நூலுக்கு ஆத்திசூடி என்றே பெயர் அமைந்திருக்கிறது. இதேபோல், ஒளவையார் பாடிய மற்றொரு அறநூல், கொன்றைவேந்தன் ஆகும். அதுவும் ‘கொன்றை வேந்தன்’ என்று தொடங்குவதால், அப்பெயர் பெற்றது.

தமிழ் எழுத்துகளை முதலாகக் கொண்டு அமைந்த நூல்கள் இவை என்பதால், இந்த நூல்களின் தொடக்கச் சொற்களே இந்நூல்களுக்குப் பெயர்களாக அமைந்திருப்பதும் பொருத்தம்தான்.

ஒளவையாரின் ஆத்திசூடியும் தமிழ் எழுத்துக்களும்

தமிழின் எழுத்துக்கள் மொத்தம் முப்பதாகும். அவை, ‘அகரம்’ தொடங்கி, னகர இறுவாயான, ‘ன்’ வரையிலான எழுத்துக்களாகும். இதனை,

“எழுத்தெனப் படுவ
அகர முதல்
னகர இறுவாய் முப்பஃதென்ப” (தொல்.எழுத்து.நூன்மரபு – 1)

என்று தொல்காப்பியர் சொல்கிறார். எழுத்துக் முதல், சார்பு என இருவகைப்படுகின்றன. அவற்றுள் முதல் எழுத்தானது உயிர் (12), மெய் (18) இவை இரண்டும் இணைந்து எண்ணிக்கையில் முப்பது (30) ஆகிறது. இதனைப் பவணந்திமுனிவர்,

“உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” (நன்னூல் – எழுத்து- 59)
என்கிறார்; மேலும், சார்பு எழுத்துக்கள் பத்தினை,
“உயிர்மெய், ஆய்தம், உயிரளபு, ஒற்றளபு
அஃகிய, இ,உ,ஐ,ஒள, மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும் (நன்னூல் – எழுத்து- 60)

எனச் சூத்திரம் சொல்லி எடுத்துரைக்கிறார். அவை, உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகியனவாகும்.

தொல்காப்பியர், முதல் எழுத்துக்களுள் முதலாவதாகிய உயிர் எழுத்துகளை, அ’ முதல் ‘ஒள’ வரையிலாக, (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள) பன்னிரண்டு என வகைபிரித்துக் காட்டுகிறார்.

“ஒளகார இறுவாய்ப்
பன்னீரெழுத்தும் உயிரென மொழிப” (தொல்.எழுத்து.நூன்மரபு-8)

அதுபோல், மெய்யெழுத்துக்களை, ‘க்’ முதல் ‘ன்’ வரை, (க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்) பதினெட்டு எனக் கணக்கிட்டுக் காட்டுகிறார்.

“னகர இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப” (தொல்.எழுத்து.நூன்மரபு-9)

இவையிரண்டும் சேர்ந்து வருகிற உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஆகின்றன. இதை,

“உயிர்மெய் இரட்டுநூற்றெட்டு” (நன்னூல்- எழுத்து- 61)

என்று பவணந்திமுனிவர் சொல்கிறார். உயிரும் மெய்யும் இணைந்து வரும் எழுத்துக்கள், தமக்குரிய புள்ளியை விட்டுவிட்டு, அகரத்தோடு கூடியும் பின்னர் உள்ள பதினொரு உயிர்எழுத்துக்களோடு உருவு திரிந்தும் உயிர்ப்புறும் என்று இவ்விரு இலக்கண ஆசிரியர்களும் பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றனர்.

“புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவுரு ஆகி யகரமோ(டு) உயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும்
ஆயீரியல உயிர்த்தல் ஆறே.” (தொல்.எழுத்து.நூன்மரபு-17)

“புள்ளிவிட்டு அவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை உயிரொடு உருவு திரிந்தும்
உயிர்அள வாயநன் வடிவொழித் திருவயிற்
பெயரொடும் ஒற்றுமுன்னாய் வரும் உயிர்மெய்.” (நன்னூல்- எழுத்து- 89)

இவற்றுள், மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டுகின்றது நன்னூல்.

“பன்னீ ருயிரும் க,ச,த,ந, ப,ம,வ, ய
ஞ,ங ஈரைந்துயிர்மெய்யும் மொழிமுதல்” (நன்னூல்- எழுத்து- 102)
“உ,ஊ,ஒ,ஓ,வலவொடு வம்முதல்” (நன்னூல்- எழுத்து- 103)
“அ,ஆ,உ,ஊ,ஒ,ஒள யம்முதல்” (நன்னூல்- எழுத்து- 104)
“அ.ஆ,எ,ஒவ்வோ டாகும் ஞம்முதல்” (நன்னூல்- எழுத்து- 105)

இவற்றுள் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, அகரத்துடன் இணைந்த உயிர்மெய்யெப்யெழுத்துக்கள் பதினெட்டு, இவற்றோடு மொழிமுதல் வருகிற உயிர்மெய் வருக்க எழுத்துக்கள் ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்குகிற கட்டளைகளை ஒளவையார் தம் ஆத்திசூடியில் பயன்படுத்தியிருக்கிறார்.

ஒளவையாரின் ஆத்திசூடியில் உயிர் வருக்கமும் உயிர்மெய் வருக்கமும்

ஒளவையாரின் ஆத்திசூடியானது, ‘அ’கரம் தொடங்கி, ‘வோ’காரம் வரையிலான, எழுத்துக்களை முதலாகக் கொண்டு, மொத்தம் 109 எழுத்துக்களுக்கும், ஓர் அடியில் உலக அறன் உரைப்பதாக அமைந்துள்ளது.

தொடக்கமாக, ‘அ’கரம் தொடங்கி, ‘ஒள’காரம் வரை உள்ள உயிர் வருக்க எழுத்துக்களை முதலாகக் கொண்டு, ‘அறம் செய விரும்பு’ – ‘ஒளவியம் பேசேல்’ வரை பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுக்கும் ஆத்திசூடிக் கட்டளைகள் அமைகின்றன.

தனிநிலை, ஆய்தம் என்று குறிக்கப்பெறும் ‘ஃ’ மொழி முதலில் வராது என்பதால், ‘அ’கரத்தை முன்வைத்து, ‘அஃகம் சுருக்கேல்’ என்று அமைகிறது. அதுபோல், ‘ங’ மொழி முதல் வராதது. ஆனால், அந்த எழுத்தைச் சுட்டிக் காட்டுவதற்காக, மொழிமுதலில் அதனை அமைத்து, ‘ஙப்போல் வளை’ என்று ஒளவையார் பாடியது அறமுரைக்கும் பாங்கின் மணிமுடி என்றே கொள்ள வேண்டும்.

‘ங’கர வருக்க எழுத்துக்களான, ஙா, ஙி,ஙீ, ஙு, ஙூ,ஙெ, ஙே, ஙை, ஙொ,ஙோ, ஙௌ ஆகியவை பெரிதும் பயன்படாதவை என்றாலும், ஙகர வருக்கத்தில் தோன்றிய காரணத்தால் அழியாது இருக்கின்றன. இத்தனை எழுத்துக்களையும், ‘ங’ வளைத்துக் காப்பதுபோல், சுற்றத்தைப் பேணிக் காக்கிற அறமும் தேவை என்பதால், ‘ஙப்போல்’ என்ற உவமையைத் தந்து ‘வளை’த்துக் கொள்ளச் சொல்கிறார் ஒளவையார்.

உயிர் எழுத்துக்களாகிய பன்னிரண்டு எழுத்துக்களோடு, மெய்யெழுத்துக்களாகிய 18 எழுத்துக்களும் சேர்ந்து உண்டாகும் முப்பது எழுத்துக்கள் (12+18=30) உயிர்மெய் வருக்க எழுத்துக்கள் ஆகின்றன.

‘க்+அ=க’, இதுபோல், ஏனைய 17 மெய்யெழுத்துக்களும், ‘அ’கர உயிர் எழுத்துடன் இணைந்து முறையே, ங,ச.ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனப் பதினேழு எழுத்துக்களாக உருவாகின்றன. ஆக, மொத்தம் பதினெட்டு எழுத்துக்களுக்கும் பதினெட்டுக் கட்டளைகள் ஒளவையாரின் ஆத்திசூடியில் பாடப்பெற்றுள்ளன.

ஆக, உயிர் எழுத்துக்கள் – 12, ஆய்த எழுத்து –  1, அகர உயிர்மெய் எழுத்து 18 ஆகிய முதல் எழுத்துக்களை முன்வைத்து அமைந்த சொற்களில், 31 கட்டளைகளை ஒளவையார் பிறப்பித்துள்ளார்.

இவற்றை அடுத்து, பிற உயிர் எழுத்துக்களுடன் இணைந்த மெய்யெழுத்துகளுள் மொழி முதலாவதாக வரக்கூடியவற்றையும், மொழி முதலாக வர இயலாத நிலையில், அகர, இகர, உகர எழுத்துக்களை முதற்கொண்டு  வரக்கூடியவற்றையும் வைத்து, 78 கட்டளைகளைத் தந்துள்ளார்.

அவற்றுள், ட, ண, ய, ர, ல, ழ,ள,ற.ன ஆகிய ஒன்பது எழுத்துக்கள் மொழிமுதல் வராதவை. எனவே, அவை ‘அ’கர, ‘இ’கர உயிர் எழுத்துக்களை முன்னதாகக் கொண்டு அமைகின்றன. ‘அ’கரத்தை முதலாகக் கொண்டு அமைந்த எழுத்துக்கள், ர, ழ, ற, ன ஆகிய நான்காகும். ‘இ’கரத்தை முன்வைத்து அமைந்தவை, ட, ண, ய,ல,ள, என ஐந்தாகும். அவை பின்வருமாறு:

ர – அரவம் ஆட்டேல் (25)
ழ – அழகு அலாதன செய்யேல் (28)
ற – அறனை மறவேல் (30)
ன – அனந்தல் ஆடேல் (31)
ட  – இடம்பட வீடு எடேல் (18)
ண – இணக்கம் அறிந்து இணங்கு (19)
ய – இயல்பு அலாதன செய்யேல் (24)
ல – இலவம் பஞ்சில் துயில் (26)
ள – இளமையில் கல் (29)

மொழி முதலாக வரும் வகர வருக்க எழுத்துக்களுள்ளும் மொழிமுதல் வாரா நான்கு எழுத்துக்களுக்கு, உகர, ஒகர, ஓகார உயிர் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:

வு – உத்தமனாய் இரு (103)
வூ – ஊருடன் கூடிவாழ் (104)
வொ – ஒன்னாரைத் தேறேல் (108)
வோ – ஓரம் சொல்லேல் (109)

ஒளவையாரின் ஆத்திசூடியில், ஙகர, ஞகர எழுத்துக்கள் போக, ஏனைய அதன் வருக்க எழுத்துக்களில் தொடர்கள் இல்லை. அதுபோலவே, ட,ண,ய,ர,ல,ழ,ள,ற,ன ஆகியவற்றின் வருக்க எழுத்துக்களுக்கும் தொடர்கள் இல்லை. மேலும், சௌ, தௌ, நௌ, பௌ, மௌ, வெள ஆகிய எழுத்துக்களுக்கான தொடர்கள் இல்லை.

வாழ்தல் வேண்டின்…

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது வாழ்வு.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (நிலையாமை- 339)

என்கிறார் திருவள்ளுவர்.

“யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்” (தாயுமானவர், பரிபூரணானந்தம்-  10)

என்கிறார் தாயுமானவர். உண்பது, உறங்குவது, விழிப்பது என்கிற அளவில் நகரும் வாழ்வில் இருப்பது எப்போது? இயங்குவது எப்படி என்கிற நிலைகளில்தான் நிலையாமையை எதிர்கொண்டு நிலைக்கின்ற ஆற்றலை மனிதகுலம் பெறுகிறது. அதுவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பதாகிறது. அதற்கான வழிமுறைகளை எழுத்துவருக்கங்களின் வரிசையில் எடுத்துச் சொன்னாலும், அதனைப் பொருண்மை அடிப்படையில் பொருத்திப் பார்ப்பதும் தேவையாய் இருக்கிறது.

உறங்குதல், விழித்தல் என்பது அன்றாட நிகழ்வு. எப்படி உறங்குவது எப்போது எழுவது என்பதற்கு இரு கட்டளைகள் இடுகிறார். இலவம் பஞ்சில் துயில் (26) என்கிற ஒளவையார், வைகறைத் துயில் எழு (107) என்று எழுப்பிவிடுகிறார். அதுபோல் கற்றலும் நிற்றலும். கற்றலுக்கு உரியன எண்ணும், எழுத்தும். அதனால், எண் எழுத்து இகழேல் (7) என்கிறார். அதனைக் கற்றலே மனித வாழ்வின் அடிப்படைக் கடப்பாடு. அதிலும் இளமையில் கற்றலே ஏற்புடையது என்பதால், இளமையில் கல் (29) என்கிறார். எதனைக் கற்பது என்ற கேள்வி கூடவே எழுதல் இயல்பு. அதற்குப் பதில், நூல் பல கல் (71).

‘கற்றதனால் ஆய பயன்என் கொல்?’ எனக் கேட்ட திருவள்ளுவர், ’வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ (கடவுள் வாழ்த்து-2) என்றார். ஒளவையாரோ, தெய்வம் இகழேல் (61) என்கிறார். இப்போக்கு அவர் காலத்திலேயே வந்துவிட்டதுபோலும். அந்தவகையில், கற்றலின் மூலமாக அகற்றிக் கொள்ளவேண்டியவை நான்கு. அவையாவன, 1. கீழ்மை அகற்று (35) 2. கௌவை அகற்று (43) 3. தீவினை அகற்று (58) 4.பேதைமை அகற்று (84) மேலும், கற்கும் முறைமையில் கேள்வி முதன்மையானது. எனவே, கேள்வி முயல் (39) என்றார். இந்த முயற்சிக்கு எதிரிகளாவன நான்கு. அவற்றுக்குக் ‘கெடுநீரார் காமக் கலன்’ என்றே பெயர் சூட்டுகிறார் திருவள்ளுவர்.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்” (மடியின்மை- 605)

என்பது குறள். இதில், நெடுநீர்மை- தாமதம்; மறவி- மறதி; மடி- சோம்பல்; துயில்- தூக்கம். இவை நான்கும் கெடுநீரார் காமக்கலன்- இதற்கு, ‘இறக்கும் இயல்பினையுடையார்  விரும்ப  ஏறும் மரக்கலம்’ என்று விளக்கம் கொடுக்கிறார் பரிமேலழகர்.

வாழ்தல் வேண்டி, மரக் கலம் ஏறி, பொருள் தேடப் போனவர்கள் நம் முன்னோர். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ (கொன்றைவேந்தன் – 39) என்றும் ஒளவையார் கூறியிருக்கிறார். ஆனால், திருவள்ளுவரோ, இறப்பதற்கென்றே விரும்பி ஏறுவோர்க்குரிய மரக்கலம் என்று இவற்றைக் குறிக்கின்றார். இதற்கு மறுதலையான அறங்களைத் தம் ஆத்திசூடியில் ஒளவையார் குறித்திருப்பது சிறப்புக்குரியது. தாமதம் போக்குதற்கு உரிய செயல்பாடு, விரைவு. அதற்காக, தூக்கி வினை செய் (60) என்றும், நன்மை கடைப்பிடி (66) என்றும் கட்டளையிடுகிறார்.  சோம்பலுக்கு எதிர், முயற்சி. சோம்பித் திரியேல் (54) சையெனத் திரியேல் (52) சோம்பலுடனும், பெரியோர் ‘சீ’ என வெறுக்கும்படியாகவும் திரியாதே’ என்று எச்சரிக்கிறார். மாற்றாக, தக்கோன் எனத் திரி (55) என்கிறார். அடுத்தது மறதி. நன்றி மறவேல் (21) அறனை மறவேல் (30) சீர்மை மறவேல் (47) என்ற மூன்று கட்டளைகள் முறையே பிறப்பிக்கப்பெறுகின்றன. இதே வேளையில், கடிவது மற (32) என்று சொன்னதையும் மறந்துவிடலாகாது. நான்காவது துயில், நீடுதுயில் மரணம் நிகர்த்தது. எனவே, அனந்தல் ஆடேல் (31) என்கிறார். கைக் கொள்ள வேண்டிய அறங்களைப்போலவே, கைவிடலாகாதனவாக,  ஊக்கமது கைவிடேல் (6) குணமது கைவிடேல் (36) என்பனவற்றையும் அவர் எடுத்துரைக்கின்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ…

ஒளவையாரின் ஆத்திசூடியானது, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டிய அறநெறிகளை எடுத்துரைக்கும் அழகிய கட்டளைக் கொண்டது. வாழ்தலுக்குரிய கட்டளைகளாக, ஐந்தினை அவர் பிறப்பித்துள்ளார்.

உடலும் உயிரும் ஒன்றி வாழ்தல் எவ்வுயிர்க்கும் இயல்பு. மனித வாழ்வோ, வாழ்வாங்கு வாழ்தற்குரியது. இதற்கு, வாழ்வித்து வாழ்தல் என்று பொருள். பிறவுயிர்களுக்குப் பயன்படுமாறு, அவற்றை வாழ்வித்துத் தானும் வாழ்தலே வாழ்வு. அதனால்தான், கிழமைப்பட வாழ் (34) என்கிறார் ஒளவையார். கிழமை என்பதற்கு உரிமை என்று பொருள். உடலும் உயிரும் பிறருக்கு உரிமையாகும்படியாகப் பயனுற வாழ்தல் என்பது பெறுதற்குரிய பொருள்.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு” (புகழ்- 231)

என்கிறது திருக்குறள். இவற்றுக்கு இன்றியமையாதது பொருள். எனவே, பொருளையும் புகழ்ந்தாரையும் போற்றுதல் வாழ்தலின் இன்றியமையாக்கூறுகள். எனவே, ‘போற்றிவாழ்’ என்ற முடிவுடன், புகழ்ந்தாரைப் போற்றி வாழ் (81), பொருள்தனைப் போற்றி வாழ் (86) என்று சொல்லப்பெற்றது. அடுத்த கட்டளைகள், வாழிடத்தோடு தொடர்புடையவை.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” (ஒழுக்கமுடைமை-140) என்கிறது திருக்குறள். ஆத்திசூடியோ, தேசத்தோடு ஒட்டி வாழ் (62) என்கிறது. உலகநெறிகட்கும் வழிகாட்டுவது நாட்டுநெறி. எனவே, தேசத்தோடு பொருந்தி வாழ்தல் கடப்பாடாகிறது. அதற்கேற்ப, ஊருடன் கூடி வாழ் (104) என்றும் பிறிதொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றது. அவ்வாறு இல்லாமல், ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (கொன்றைவேந்தன்-6) என்றும் அவரே எச்சரித்திருக்கிறார். இங்கு ஊரும், தேசமும், உலகமும் உயர்ந்தோரை முன்னிறுத்திச் சொல்லப்பெற்றது என்பதையும் மறந்துவிடக்கூடாது. “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” (தொல¢காப¢ப¤யம¢, பொருள¢, மரப¤யல¢ 96) என்கிறது தொல்காப்பியம்.

உயிரினும் சிறந்தது ஒழுக்கம்

உயிரினும் சிறந்ததான ஒழுக்கத்தை வலியுறுத்திய வள்ளுவம் அதனையும் ஓர் உடைமையாக்கி, ‘ஒழுக்கமுடைமை’ என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே படைத்துள்ளது. அதனை அடியாகக் கொண்ட ஒளவையார், ஒழுகு என்ற சொல்லுடனான இரண்டு கட்டளைகளைத் தன் ஆத்திசூடியில் ஒளவையார் தருகிறார்.

‘ஒப்புரவறிதல் அறிதல்’ என்ற திருக்குறள் அதிகாரத்தின் பிழிவாக 1. ஒப்புரவு ஒழுகு (10) என்பதைக் கொள்ளலாம். அதிலும் நேர்மை தவறாமல் இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, 2. நேர்பட ஒழுகு (73) என்றும் கட்டளையிடுகிறார். இதற்கு மறுதலையாவது, கரத்தல். அதாவது மறைத்தல். இயன்றதை மறைக்காமல் கொடுத்தலும், இயற்றுதற்குக் காரணமான கைத்தொழிலையும் மறைக்காது செய்தலும் அறமாகும் என்பதால், இயல்வது கரவேல் (3), கைவினை கரவேல் (40) என்பன சொல்லப்பெற்றன.

எதிர் எதிர் நிலைகளில் பிறக்கும் கட்டளைகள்

ஒளவையாரின் ஆத்திசூடியில் உடன்பாட்டுநெறியாகச் சொல்லப்பெற்றவை 52 கட்டளைகள். எதிர்நிலை யாகச் சொல்லப்பெற்றவை, 57 கட்டளைகள். அவற்றுள், நேருக்கு நேர் எதிரானவையாக நிறுத்திப் பார்க்கத் தக்கன பல. ஒருவகையில் இதுவோர் உத்தியே போலக் கவனத்திற் கொள்ளத்தக்கதாக அமைவதையும் இங்கு கவனத்திற் கொள்ளலாம். அக்கட்டளைகள் பின்வருமாறு:

1. விரும்பு  X  விரும்பேல்

ஒளவையார் விதித்த ஆத்திசூடிக் கட்டளைகளுள், ‘விரும்பு’ என்றும், அதற்கு எதிர்நிலையாக விரும்பேல் என்றும் சொல்லப்பெற்ற கட்டளைகள், முறையே மூன்றாகும்.

அறம் செய விரும்பு (1) இதற்கு எதிர்நிலையாக உணர்த்தப்பெற்ற அறம், கொள்ளை விரும்பேல். (41) அறத்திற்கு எதிரானது கொள்ளை. ‘அறம் செய விரும்பு’ என்கிற ஒளவையார். ‘கொள்ளை’க்கு அடுத்து வேறெந்தச் சொல்லையும் இடாமல், ‘விரும்பேல்’ என்கிறார். கொள்ளையின்பால் விருப்பம் வந்துவிட்டாலே அதைச்செய்வதற்கு நிகராகிவிடுகிறது. அது சூதினும் தீது. அறம் செய்வதற்குப் பொருள் தேவை என்ற நிலையில் கொள்ளையிட்டு அறம் செய்யலாம் என்று நினைத்துவிட்டாலே அறம் மீறிய அபாயம் நேரும். எனவே, அறம் செய விரும்புவதோடு கொள்ளையை விரும்பாதிருப்பதும் இன்றியமையாதது என்று சுட்டுகிறார். அதுபோலவே, தானமும், சூதும்.  விரும்பிய வண்ணம் தானம் பண்ணச் சூதினைக் கைக்கொண்டுவிடக்கூடாது. அதனால்தான், தானமது விரும்பு (56) என்ற ஒளவையார், சூது விரும்பேல் (49) என்றும் சொல்கிறார்.

வித்தை விரும்பு (101) வித்தையாவது கல்வி. அது பெறும் வாயில் கேள்வி. செவிக்குணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்கு ஈய வேண்டும். அதுவும் சிறிது என்கிறது திருக்குறள். அறிவின் கூர்மை பெறத் தடையாவது மிகையுணவு. நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டால், கல்வியின் சுவை பெற இயலாது எனவே, வித்தை விரும்புதலுக்கு எதிர்நிலை அறமாக மீதூண் விரும்பேல் (91) சொல்லப்பெற்றது.

2. செய்  X  செய்யேல்

பருவத்தே பயிர் செய் (22), செய்வன திருந்தச் செய் (50), திருமாலுக்கு அடிமை செய் (57) ஆகிய கட்டளைகளுக்கு நேராகக் கருத்தில் கொள்ள வேண்டியவை, இயல்பு அலாதன செய்யேல் (24), அழகு அலாதன செய்யேல் (28) ஆகியனவாகும்.

தூக்கி வினை செய் (60), நாடு ஒப்பன செய் (67), நெற்பயிர் விளைவு செய் (72) ஆகியவற்றுக்கு நேர் எதிர், வேண்டி வினை செயேல் (106) – இங்கு வினை என்பது தீவினையைக் குறிக்கிறது. .

3. இணங்கு  X  இணங்கேல்

‘அறிவில்லாத சிற்றினத்தாருடனும், மூர்க்கக்குணம் கொண்டவர்களுடனும்’ இணங்காதே என்பதற்கு, பையலோடு இணங்கேல் (85) மூர்க்கரோடு இணங்கேல் (93) என்னும் இரு கட்டளைகளைப் பிறப்பித்த ஒளவையார்,  இதற்கு மாற்றாக, இணக்கம் அறிந்து இணங்கு (19) என்று ஒரே கட்டளையை நிறுத்துகிறார்.

4. ஒழி  X  ஒழியேல்

கெடுப்பது ஒழி (38), கோதாட்டு ஒழி (42) என ஒழிக்கத்தக்கனவான இரண்டினைச் சுட்டும் ஒளவையார், ஓதுதலை ஒழிக்கக்கூடாது என்கிறார்; ஓதுவது ஒழியேல் (11) என்பது அவர்தம் கட்டளை.

5. உரை  X  உரையேல்

சொல்லுதல், உரைத்தல், பேசுதல், பகர்தல், கூறல், விளம்பல் ஆகியன, உரைத்தல் எனும் பொருள்தரு சொற்களாகும். நயம்பட உரைக்கச் சொல்லும் ஒளவையார், நொய்ய உரைக்காதே என்றும் கூறுகிறார்.

“நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று” (பயனில சொல்லாமை – 197)
என்பது குறள்நெறி. அதுவே,
“பயனில சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.” (பயனில சொல்லாமை- 196)

என்றும் சொல்கிறது. நயனில, பயனில சொல்லாமை சிறந்த பண்பு என்பது இதன்வழி பெறப்படுகின்றது. இவ்விரு குறட்பாக்களின் அடிப்படையில், ஞயம்பட உரை (17), நொய்ய உரையேல் (75) என்னும் இரு கட்டளைகளையும் பிறப்பிக்கின்றார். மொழிவது அற மொழி (97) என்ற அவரே, அதற்குத் துணைசெய்யும்,  மேன்மக்கள் சொல் கேள் (95) என்று கட்டளையிடுகிறார். கூடவே, தையல் சொல் கேளேல் 63) என்றும் சொல்கிறார்.

சொல்லக்கூடாதவை என்று அவர் சொல்வன ஐந்தாகும். அவை, கண்டொன்று சொல்லேல் (14), சுளிக்கச் சொல்லேல் (48), மிகைபடச் சொல்லேல் (90), பிழைபடச் சொல்லேல் (79), ஓரம் சொல்லேல் (109). இந்த வரிசையில், பகரேல், கூறேல், விளம்பேல், எனக் கொண்டு முடியும் கட்டளைகள் மூன்றாக அமைகின்றன. அவை, பழிப்பன பகரேல் (77), வாது முற்கூறேல் (100), உடையது விளம்பேல் (5) ஆகியனவாகும். கூடவே, பேசேல் எனக்குறிக்கும் ஒளவியம் பேசேல் (12), சித்திரம் பேசேல் (46), வல்லமை பேசேல் (99), வெட்டெனப் பேசேல் (105) நான்கு கட்டளைகளும் பிறக்கின்றன.

6. உண்  X  உண்ணேல்

இவ்வுலக வாழ்விற்கு இன்றியமையாதது உணவு.

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே” (மணிமேகலை, பாத்திரம்  பெற்ற காதை- 95-96)

என்று மணிமேகலை பேசும். தான் உண்டு வாழ்வதை விடவும், தம்முடன் வாழ்வோரையும் உண்பித்து வாழ்வது உயர்வு. ஆதலால், ஐயம் இட்டு உண் (9) என்று கட்டளையிடுகிறார். அதற்குத் தேவையான உணவு உற்பத்தியாதல் தேவை. அதற்ககாகப் பூமி திருத்தி, உழவுத் தொழில் புரிந்து உண்க என்ற நிலையில், பூமி திருத்தி உண் (82) என்கிறார். இது நெறி. இந்தப் பண்பு, பற்றாக மாறி, தனக்கான பூமியை விரிவுபடுத்த விழைந்து, நெறிபிறழ்ந்த வெறியாவதால்தான் போர் முதலான புன்மை நேருகிறது. எனவே, மண் பறித்து உண்ணேல் (23) என்றும் மறுதலையாகக் கட்டளைபிறப்பித்து மக்களைக் காக்கிறார்.

7. ஆடு X ஆடேல்

வாரம் ஒருமுறை, சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லும் ஒளவையார், சனி நீராடு (16)என்று கட்டளையிடுகிறார். சனி – என்பதற்குக் குளிர்ந்த நீர் என்று பொருள் கொண்டு, குளிர்ந்த நீரில் குளிக்கச் சொல்லியதாகவும் பொருள் உரைப்பர். அதற்கு மறுதலையாக, நீர் விளையாடேல் (6) அனந்தல் ஆடேல் (31) என்றும் சொல்கிறார். நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்களுள், தீயுடனும் நீருடனும் விளையாடுதல் தவிர்க்க வேண்டும் என்பர். ’தீ விளையாட்டு விளையாடாதே’ என்பது இன்றளவும் சிற்றூர்களில் சொல்லப்பெறும் அறிவுரை. அதேபோல், ‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்பதும் நீர்நிலையை முன்வைத்துச் சொல்லப்பெறும் அறநெறி. அனந்தல் என்பது தூக்கம். நீரில் மூழ்குதல் போல, தூங்குதலைத் தூக்கத்தில் மூழ்குதல், துயிலில் ஆழ்தல் என்றும் சொல்வது உண்டு. தூக்கத்தில் இலயித்தல் கூடாது என்பதால், ’அனந்தல் ஆடேல்’ என்று கட்டளை பிறப்பிக்கிறார். திருக்குறள் காட்டும்,‘கெடுநீரார் காமக்கலன்கள்’ நான்கனுள்  துயிலும் ஒன்று.

8. நில்  X  நில்லேல்

கடறக் கற்று கற்றவழியில் நிற்கச் சொல்வது திருக்குறள். நில் என்பதன் நீட்சி நிலைபேறு. அதற்கான நிலையில், சக்கர நெறி நில் (44), பீடு பெற நில் (80), வீடு பெற நில் (102) எனும் மூன்று கட்டளைகளைப் பிறப்பிக்கிறார். இதில் சக்கர நெறி என்பது அரசாணைவழி நிற்றல். பீடு என்பது பெருமைக்குரியது. சிலம்பில்,  பிரிந்த கணவனைச் சேர்வதற்கு, சோமகுண்டம் சூரிய குண்டம் ஆகிய நீர்நிலைகளில் மூழ்கிக் காமனைத் துதிக்கச் சொன்ன, தோழி தேவந்தியின் கூற்றை மறுத்துக் கண்ணகி, ‘பீடன்று’ (சிலப்பதிகாரம், கனாத்திறம் உரைத்த காதை- 64) என்று மொழிந்ததை இங்கு நினைவுகூரலாம். அரசநெறிநின்று, வாழ்வியல் அறம்பேணிப் பீடுற நின்றால் வீடுபேறு அடையலாம் என்பது தெளிவு. இதற்கு மறுதலையாக, முனைமுகத்து நில்லேல் (92) என்றும் சொல்கிறார். அழிவுத்தொழிலான போர்த்தொழிலுக்குரிய போர்முனையில் முன் நில்லாதே என்பது அவர்தம் போரமைதிக்குரிய வழிகாட்டு நெறியாகும். அது கருதியே, போர்த்தொழில் புரியேல் (87) என்றும் கட்டளையிடுகிறார். எடுத்ததற்கெல்லாம் போரும் பூசலும் கொண்டிருந்த அக்காலத் தமிழகத்தில், ஒளவையாரின் இவ் வமைதிக் கட்டளை, எத்துணை புரட்சிகரமானது என்பது நினைந்து போற்றத்தக்கது.

9. சேர் – அகல் – பிரியேல் – இரு

உறவுநிலையில் சுற்றமும் நட்பும் இணக்கத்திற்குரியன. சேர்தலும், சேர்ந்து இருத்தலும், பிரியாது இருத்தலும் போலவே, சேரக்கூடாத இடத்து அகல்வதும் இன்றியமையாதன என்பதை ஏழு கட்டளைகளில் ஒளவையார் எடுத்துரைக்கின்றார்.

இணக்கம் அறிந்து இணங்கு (19) என்று ஏற்கெனவே கட்டளையிட்ட அவர், சேர வேண்டிய இடம் குறித்தும் இரு கட்டளைகள் பிறப்பித்துள்ளார். அதில் ஒன்று நட்பு. அதற்கான கட்டளை, சேரிடம் அறிந்து சேர் (51) என்பதாகும். பெரியாரைத் துணைக் கொள் (83) என்பதும் அதனோடு பொருந்தும் அறமாகும். அதேபோல் இருத்தலும் உயர்வுக்குரியது. அதற்கான கட்டளை சான்றோர் இனத்து இரு (45). சேர்தலில் மற்றொன்று, உறவு. பிறப்பால் எய்துகிற சுற்றத்தாரைவிடச் சேர்ந்து வாழக்கூடிய அகவாழ்வுக்குத் துணையாகும் பெண்மையைச் சேர்தல் என்ற நிலையில், மெல்லி னல்லாள் தோள்சேர் (94) என்ற கட்டளையைப் பிறப்பிக்கின்றார். சேர்தலுக்குரிய இவ்விரு கட்டளைகளுக்கும் துணைமையாக இருத்தல் என்ற நிலையில், உத்தமனாய் இரு (103) என்ற கட்டளை அமைகிறது. இவற்றுக்கு மறுதலையாகக் காமவயப்பட்ட நிலையில், பொருட்பெண்டிருடனான தொடர்பை விட்டுவிலகியிருக்கச் சொல்லி அவர் இடும் கட்டளை, மைவிழியார் மனை அகல் (96) என அமைகின்றது. சேர்வது எவ்வளவு சிறப்பிற்குரியதோ, அதேபோலச் சேர்ந்தாரைப் பிரியாமல் இருப்பதும். அந்நிலையில், கூடிப் பிரியேல் (37) என்றும் நிலையில் பிரியேல் (68) என்றும் அவர் கூறிய கட்டளைகள் ஏற்புடையனவாகும்.

ஆத்திசூடியின் அற்புத மந்திரம்

அஃகம் சுருக்கேல் (13), அரவம் ஆட்டேல் (25), ஈவது விலக்கேல் (4), தோற்பன தொடரேல் (65), நுண்மை நுகரேல் (70), நைவினை நணுகேல் (74), ஒன்னாரைத் தேறேல் (108) என்றெல்லாம் எதிர்நிலையில் இருந்து இன்றியமையாத அறங்களை எடுத்துரைத்த ஒளவையார், ஆறுவது சினம் (2), மோகத்தை முனி (98), ஏற்பது இகழ்ச்சி (8) காப்பது விரதம் (33) என்பனவாகிய மந்திரத் தொடர்களையும் அமைத்துக் காட்டுகிறார்.

இவற்றுள் எல்லாம் மணிமுடியாகத் திகழும் வாசகம், ஙப் போல் வளை (15) என்பதாகும். மொழி முதலில் வருதற்கு வாய்ப்பே இல்லாததோடு, இதன் வருக்க எழுத்துக்களான எதுவும் எழுத்துவழக்கிலோ, பேச்சு வழக்கிலோ பயன்படாது இருந்தாலும், அவற்றை, ங எனும் எழுத்து இழுத்து வளைத்துஅழியாது காத்துப் பேணுகிறது. அதுபோல், தன்னைப் பேணுதலோடு, தன் வருக்கத்தையும் தாங்கிப் பேணுதல் மனிதர்களின் கடப்பாடு அல்லவா? தன்னை இவ்வுலகிற்குத் தந்த தாயையும் தந்தையையும் பேணுதல் ( தந்தை தாய்ப் பேண்-20)  தவறாது புரியவேண்டிய அறமல்லவா? தன்னுயிர் போலே மன்னுயிர் யாவையும் தாங்கிக் காத்தல் ஙப்போல் வளைக்கும் நல்லறம் என்பதால், அதுவே, இவ்விலக்கியத்தின் அற்புத மந்திரம் ஆகிறது.

அதனால்தான், இந்த ஆத்திசூடிக்குப் பின்னர் புதிய ஆத்திசூடி பாடிய மகாகவி பாரதி, இந்த (ங) எழுத்தைத் தன் கட்டளைகளில் இடம்பெறாத வண்ணம் விட்டுக் கொடுத்து மரியாதை செலுத்தினார் போலும்.

நிறைவாக…

சிறார் இலக்கியத்துள் இன்னும் அழியாத நிலைபெற்றுள்ளவை ஒளவையாரின் ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும் ஆகும். எழுத்தை எழுத்தாகவே பயிலாமல், எண்ணத்துடன் இணைத்து, வாழ்வியல் தளத்தில் பின்னர் இருந்து பயன்தரத்தக்க நன்னெறிகளை உள்ளடக்கியவை இவை. நினைவில் நிறுத்திக் கொள்ள ஏதுவாய், ஒற்றைத் தொடரில் மந்திரம் போல் அமைந்த கட்டளைகளின் தொகுதி. எழுத்து வருக்க வரிசையிலும், பொருண்மைப் பொருத்த அமைப்பிலும் வைத்துப் பொருள் கொள்ளத் தக்க வாழ்வியல் சீலங்களின் வகைப்பாடாக இது திகழ்கிறது.

ஆத்திசூடியின் அனைத்துக் கட்டளைகளும், தனித்தொடர்களாக மனனம் செய்யவும் சொல்லிப்பழகவும் பயன்படுவனபோல் அமைந்தாலும் வாழ்க்கைப் போக்கில், பேச்சுவழக்கில், சொல்வதாகவோ, கேட்பதாகவோ புழக்கத்திற்கு வருகிறபோது, அவை அறம் உணர்த்தும் நுண்பொருள்களாக மனதில் இருந்து புலப்படும் என்பதால், இளமையில் கற்பிக்க ஏதுவாக ஒளவையாரால் பாடப்பெற்றன என்பதே உண்மை.

எழுதப்பட்ட காலத்தேவைக்கேற்ப, இவற்றின் பாடுபொருள் அமைகிறது என்பதால் இவற்றுள் சில கட்டளைகள் இலகுவாகத் தோன்றலாம். ஆனால், அடுத்த தலைமுறைக்கு வேண்டிய அறங்களைப் போதிக்கப் புதிய ஆத்திசூடி பிறக்கவும், பிற ஆத்திசூடி வகைகள் பெருகவும் இதுவே தாய் ஆத்திசூடியாக இருந்து உரமளித்திருக்கிறது என்பதே வரலாற்றுப் பெருமை.

துணைநின்றவை

1. இளவரசு.சோம, (ப-ஆர்), நன்னூல் விருத்தியுரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1990,
2. ஒளவையார் அருளிச் செய்த ஆத்திசூடி- மூலமும் உரையும், சென்னை- மதராஸ் ரிப்பன் எந்திரச்சாலை, சென்னை, 1913.
3. சிற்பி பாலசுப்பிரமணியம், முனைவர் சொ.சேதுபதி, தமிழ் இலக்கிய வரலாறு, கவிதா பப்ளிகேஷன், சென்னை, 2010.
4. சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியத் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1008.
5. செல்லப்பன்.சு.சிலம்பொலி, சிலப்பதிகாரம் தெளிவுரை, பாரதி பதிப்பகம், சென்னை. 2000.
6. சொக்கலிங்கம்.பேராசிரியர் சு.ந., தாயுமானவர் பாடல் தொகுப்பு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2009.
7. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரைவளம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2014.
8. நவபாரதி, (தொ-ஆர்) மகாகவி பாரதியார் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 2014.
9. பாலசுப்பிரமணியன். கு.வெ.,  தொல்காப்பியம் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2019.
10. வேங்கடசாமி நாட்டார். ந.மு. (உ.ஆர்),  கொன்றைவேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2007
11. வேங்கடசாமி நாட்டார். ந.மு, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை, 2005.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.