நாலடியார் நயம் – 13

நாங்குநேரி வாசஸ்ரீ
13 .தீவினை அச்சம்
பாடல் 121
துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு – தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
சுடுகாடுகள் துயரத்தைக்
கொடுக்கும் இல்வாழ்க்கையில்
கிடந்துழன்று அவற்றினின்று
பற்றுவிடும் வழிஅறியாதாரின்
பிணத்தை உடையன
அற்பரின் வயிறுகளோ
அதிகளவு பறவைகளுக்கும்
விலங்குகளுக்கும் சுடுகாடுகளாம்.
பாடல்122
இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் – சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
வண்டுகள் ஒலிக்கும் காட்டில்
வாழும் கவுதாரியையும் காடையையும்
பிடித்துக் கூட்டில் அடைப்பவர்
பகைவர்களுக்கு அடிமையாய்
காலில் விலங்கு பூட்டப்பட்டு
வலிய பயனில்லா
வட்டை நிலத்திலோ
கழனிகளிலோ அடிமையாய்
வேலை வாங்கப்படுவர்.
பாடல் 123
அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
அக்காலத்தில் (முற்பிறப்பில்) நண்டைப் பிடித்து
அதன் காலை ஒடித்து
விரும்பித்தின்ற தீவினை
வந்தடைந்த போது
உள்ளங்கை சங்குமணிபோல்
உருத்தோன்ற விரலெல்லாம்
குறைந்தழுகித் துயரம் தரும்
குட்ட நோய் உண்டாகப் பெறுவர்.
பாடல் 124
நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
நெய்யைப்போல் நன்மை செய்வனவும்
நெருப்பிலிட்டுக் காய்ச்சும்நேரம்
உடலில் பட்டால் எரிக்கும்படி
காய்ந்து துன்பநோய் தருவதுபோல்
நல்லொழுக்கம் தவறா நல்லோரும்
கடும் தீயவரைச் சார்ந்தால்
கொடும் தீமையே புரிவர்.
பாடல் 125
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் – வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
பெரியோர் நட்பு பிறைச்சந்திரன்
போல் படிப்படியாய் நாளும் வளரும்
சிற்றறிவுடையோர் நட்பு வானத்தே
தோன்றும் முழு வட்ட நிலா போல்
தினந்தோறும் சிறுத்துத் தானே
தேய்ந்து குறைந்துவிடும்.
பாடல் 126
சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
நற்குணமுள்ளவர் என மதித்து
நட்பு கொள்கிறாய்!
நட்புகொண்டவரிடம் நற்குணம்
இல்லையெனில் சார்ந்தவனே கேள்!
அது வாசனை மிகு சந்தனம்
அங்குள்ளது என நினைத்து
செப்பைத் திறந்தவன் உள்ளே
சர்ப்பத்தைக் கண்டது போலாம்.
பாடல் 127
யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் – சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
மலைச் சாரல்களில் ஒளிவிடும்
மணிகள் மிகு நாட்டின் வேந்தனே!
கேள்! மனதை ஆராய்ந்தறியும்
வல்லமையுடையோர் எவருளர்?
மக்களின் மனம் வேறு
மனிதன் நினைத்தபடி செய்யாது
மேலுக்கு வஞ்சனையாய் ஆற்றும்
செயல்கள் வேறு.
பாடல் 128
உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை – தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
தெளிந்த அருவிநீர் சேற்றைத்
தள்ளி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே!
மனதால் விரும்பாது வஞ்சகமாக
மயக்கும் உறுதியான செயல்செய்பவரின்
மிகுநட்பு மனதில் குற்றமுள்ளதாய் நிற்கும்.
பாடல் 129
ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் – ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
பகைகொண்டு வீசிய ஒளிமிகும் வாள்
பகைவர் கையில் அகப்பட்டால்
தைரியத்தைக் கெடுப்பது உறுதி
தீயோர்க்குச் செய்த உதவி
இம்மை மறுமையிலும் தொடர்ந்து
வருத்தலால் அத் தீயொரிடமிருந்து
விலகி இருத்தல் நல்லது.
பாடல் 130
மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! – எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
மனமே! மனையாளிடத்து ஆசை விடமாட்டாய்
மக்கட்செல்வத்துக்கு பொருள் சேர்க்க ஏங்கி
எவ்வளவு காலம் வாழப்போகிறாய்?
அற்பகாலமாயினும் செய்யும்
அறச்செயலாலன்றி உயிருக்கு
அடையும்படியான நற்பயன் வேறுஇல்லை.