நாங்குநேரி வாசஸ்ரீ

 12. மெய்ம்மை

பாடல் 111

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை – நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.

வரிசையாய் வளையல்கள் அணிந்தவளே!
வேண்டி இரப்போர்க்குத் தர இயலாப்
பொருளை இல்லை எனச் சொல்லுதல்
பழியன்று  உலகியற்கையே
கொடுப்பதாய் ஆசைகாட்டிப் பலநாள்
கழிந்தபின் இல்லையென்றல்
செய்நன்றி மறப்பதினும் சீரிய குற்றமாம்.

பாடல் 112

தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! – அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

தக்கசான்றோரும் அல்லாதாரும்
தத்தம் குணங்களில் எப்போதும்
குறைதல் இல்லாதிருப்பர்
கசக்காது வெல்லம் எவர் தின்றாலும்
கசக்கும் வேப்பங்காய் தேவரே தின்றாலும்.

பாடல் 113

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் – ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.

குளிர்ந்த மலைகளுடை நாட்டின்
வேந்தனே! செல்வம் உள்ள காலத்தே
நெருங்கிய உறவினர் பலர் இருப்பர்
நட்சத்திரங்களை விட அதிகமாய்
நலிந்து வறுமையுறும் காலம்
உறவினராய்த் தொடர்பவர்
உரிமையுடன் ஒருசிலரே.

பாடல் 114

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.

குற்றமற்ற இவ்வுலகில் நிலைத்துக்
காணப்படுவதாய்த் தோன்றும்
அறம் பொருள் இன்பம் எனும்
அம் மூன்றனுள் நடுவிலுள்ள
பொருளை அடைந்தோன் அதன்
பொருட்டு முதலிலுள்ள அறத்தையும்
இறுதியிலுள்ள இன்பத்தையும் அடைவான்
இதனைப் பெறாதவன் கொல்லன்
இரும்பை உலையிலிட்டு காய்ச்சுவது
போலும் வறுமையுற்று வருந்துவான்.

பாடல் 115

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

நல்ல பசுவின் கன்றானால்
நல்விலைபோகுமதன் இளங்கன்றும்
படிக்காதவராய் இருப்பினும்
பணக்காரரின் வாய்ச்சொற்கள்
பயன்கருதி ஏற்றுக்கொள்ளப்படும்
சிறிதே ஈரமுள்ள காலத்தே உழும்
சமயம் கொழு உட்செல்லாது
மேலே நிற்பதுபோல்
மேலுக்குத் தலையசைத்து
கேட்பதுபோல் தோன்றினாலும்
வறியவனின் வாய்ச்சொற்கள் ஒரு
வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

பாடல் 116

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் – தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

அகன்ற கண்களையுடையவளே!
பேய்ச்சுரைக்காயை உப்புடன்நெய்
பால் தயிர் பெருங்காயம் சேர்த்துச்
சமைத்தாலும் கசப்பு அடங்காததுபோல்
விரிவாக மெய்யறிவு நூல்களை
வாசித்துணர்ந்தாலும் எப்பொழுதும்
அடக்கமில்லாமல் இருப்பவர்
அடங்காமலே இருப்பர்.

பாடல் 117

தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரோடு பட்டது – புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும்.

புன்னையின் அழகிய
பூமணம் வீசும் சோலைகள்சூழ்
கடற்கரையுடை வேந்தனே!
தம்மை நிந்திப்பவரை அவர்
தொடங்குமுன் தயைபாராமல்
தாம் நிந்திக்கக்கடவர்
அவரோடு தமக்குண்டாகிய
தொடர்பால் வருவதுதான் என்ன?
வரவேண்டிய நன்மைதீமை எவர்க்கும்
வினைப்பயனால் வந்தே தீரும்.

பாடல் 118

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.

பசுக்கள் உருவத்தால் வேறுபடினும்
பாலின் நிறத்தில் வேறுபாடில்லை
தருமமும் பால்போல் ஒரு
தன்மையுடைத்தே எனினும்
ஆற்றும் வழிமுறைகள்
அப்பசுக்களின் உருவங்கள்
போல் பலவாம்.

பாடல் 119

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
கடைபோக செல்வம்உய்த்தார்.

ஆராய்ந்து நோக்கின் ஒரு பழிச்சொல்
அற்று வாழ்ந்தவர் யார்?
ஒரு தொழிலின்றிவாழ்ந்தவர் யார்?
எவர் வாழ்வின் இடையே துன்பம்
எய்தாதவர்? வாழ்நாள் முழுவதும்
செல்வத்தை அனுபவித்தோர் யார்?

பாடல் 120

தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை; – ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண்டுஓடும் பொழுது..

தம்மோடு உயிருக்குத் துணையாய் வருவது
தாம் செய்த நல்வினையன்றி வேறில்லை
அதுவரை ஆடை அணிகளால் பாதுகாத்த
அழகுடம்பும் உயிருக்குத் துணையாய் வராது
எமன் உயிரைப் பறித்துக்கொண்டு ஓடும்காலம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *