Year: 2020

  • (Peer Reviewed)அருந்தமிழ் வளர்க்கும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்

    (Peer Reviewed)அருந்தமிழ் வளர்க்கும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்

    முனைவர் சொ. அருணன்,
    முனைவர் பட்ட மேலாய்வாளர்,
    தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3.

    [காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ரூசா 2.0 நிதி ஆய்வுத் திட்டத்தின்கீழ் எழுதப்பட்ட கட்டுரை]

    *****

    அறிமுகமாக…

    காலங்காலமாகத் தமிழ்மொழி போற்றி வளர்க்கப்பட்ட பெருமைக்குரியது. இயல்பில் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் சிறப்பு தமிழுக்கு இருந்தபோதும் சில திருவிடங்களில் தன்னை இருத்தி வளர்த்ததாகத் தமிழே வரலாறு மொழிகிறது. மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் தங்களுடைய உயிர்க்கு இணையாகக் கருதி வளர்த்தபோதினும்கூடத் தமிழ், பாண்டிய மன்னர்களின் சங்கத்தில் இருந்து வளர்ந்ததாகவே பெருமைப்பட்டுக் கொள்கிறது. அதுபோலவே தமிழை உலகில் உள்ள அத்தனை சமயங்களும் கொண்டாடிய போதினும்கூட அது தன்னைச் சைவத்திற்கு உரியதாகவே நிலைநிறுத்திக் கொள்கிறது. அதனாலேயே சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்குக என்னும் நிறைமொழி தோன்றியது. அவ்வாறு தமிழைப் போற்றி வளர்த்த திருவிடங்களின் வரிசையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குத் தனிச்சிறப்பு எக்காலத்தும் உண்டு. இக்கட்டுரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தமிழ்ப் பணிகளைக் குறித்து விளக்குவதாக எழுகிறது.

    குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தோற்றம்

    குருபரம்பரை

    திருக்கயிலாயப் பரம்பரையின் வழியாகத் தோன்றிய பதினெட்டுச் சுத்த சைவ ஆதீனங்களுள் மிகவும் தொன்மையானது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனமாகும். திருக்கயிலாய மலையில் சிவபெருமான் சிவஞானபோதத்தை, திருநந்தி தேவருக்கு உணர்த்தியருளினார்.  அந்தச் சிவஞானச் செல்வத்தைத் தம் அருமை மாணாக்கராகிய சனற்குமார முனிவருக்கு அருளிச் செய்தார் திருநந்தி தேவர். சனற்குமார முனிவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த சத்தியஞானதரிசினிக்கு அருளினார்.  அவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த பரஞ்சோதி முனிவருக்கு அருளிச் செய்தார்.  இது திருக்கயிலாயத்தில் நிகழ்ந்தது.  ஆதலின் திருநந்திதேவர் முதலிய நால்வரும் இந்தப் பரம்பரையிலே “தேவசந்தானத்தார்” எனவும் “அகச் சந்தானத்தார்” எனவும் வழங்கப் பெறுவர்.

    இந்த வரிசையில் பூலோகத்தில் அவதரித்திருந்த சுவேதவனப் பெருமாள் என்னும் குழந்தைக்கு அந்தச் சிவஞானபோதம் கிட்டிற்று. பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண்பதற்காகப் பொதிய மலைக்குச் செல்லும் வழியில் இந்தக் குழந்தைத் திருவீதியில் விளையாடிக் கொண்டிருந்தவேளையில் அதன் பக்குவநிலையுணர்ந்து சிவஞானபோதத்தை உபதேசித்தார். மேலும் அவருக்கு மெய்கண்டார் என்னும் திருப்பெயரையும் சூட்டினார். மெய்கண்டார் தாம் பெற்ற சிவஞானபோதத்தை அருள்நந்திக்கு உபதேசம் செய்தார். அத்தகு அருள்பெற்ற அருள்நந்தி தேவரின் அருமைச் சீடர்களுள் ஒருவராகத் தோன்றியவர்தான் திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வராகிய திருவருள்திரு தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். இளம் வயதிலேயே தம் பக்தியின் ஆற்றலால் அந்தண வடிவில் இறைக்காட்சிப் பேறு பெற்றதோடு ‘அருள்நந்தியிடம் சென்று சேர்க’ என்னும் அருளாணையும் பெற்றார்.

    திருவண்ணாமலை ஆதீனத் தோற்றம்

    பின்னர் திருவருள் வழிகாட்டத் திருவண்ணாமலையிலிருந்து ஆட்சி புரிந்த வீரவல்லாளன் என்னும் ஆட்சியாளனிடத்துச் செய்த ஓர் அற்புதத்தால் சீடர்களும் திருமடமும் தோன்றி வரலாறாக நிலைத்தது. ஆதீனத்தின் குருமுதல்வரின் 60-வது அகவையில் கி.பி.1310இல் திருவண்ணாமலை ஆதீனம் தோற்றம் பெற்றது.

    பிரான்மலையில் ஆதீனத் தோற்றம்

    இந்தக் குருமரபில் 17ஆம் பட்டமாக வந்துதித்தவர் திருவருள்திரு நாகலிங்க தேசிகர் ஆவார். இவர் தலயாத்திரையாகத் திருச்சுழியலுக்கு வந்திருந்த வேளையில் தரிசனம் வேண்டி வந்த இராமநாதபுர மன்னர் இரகுநாதசேதுபதி இராமேசுவரத்துக்கு வரவேற்றதோடு இந்த மண்ணிலே சுவாமிகள் இருந்து அருளாட்சி புரிய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர்தம் வேண்டுகோளை ஏற்று 1690-இல் இராமநாதபுர எல்லையாக இருந்த பிரான்மலை என்று தற்காலத்து அழைக்கப்படும் வேள்பாரியின் பறம்புமலையில் (திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பெற்ற திருக்கொடுங்குன்றமும் இதுவேயாகும்) இருந்து அருளாட்சி புரிந்து வந்தார்கள்.

    குன்றக்குடி ஆதீனத் தோற்றம்

    இவ்வாறு 17ஆம் பட்டத்திலிருந்து 30ஆம் பட்டம் குருமூர்த்திகள் வரையிலும் பிரான்மலையிலிருந்து அருளாட்சிபுரிந்து வந்தனர். இந்நிலையில் 28ஆம் பட்டம் ஞானப்பிரகாச தேசிகர் குன்றக்குடி சண்முகநாதப் பெருமான்மீது பெரும்பக்தி பூண்டவரானார். குன்றக்குடியையே அவர்மனம் நாடிற்று. அவருடைய திருவெண்ணம் கி.பி.1778-இல் திருவருள்திரு மருதநாயக தேசிகர் ஆட்சிக் காலத்தில் பலிதமுற்றுப் பிரான்மலையிலிருந்த திருமடம் குன்றக்குடிக்கு வந்து நிலைபெற்றது.

    அன்றிலிருந்து இன்றுவரை வாழையடி வாழையாக வளர்ந்தும் சிவத்தொண்டும் தமிழ்த்தொண்டுமாகச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் தனது பணிகளைத் தொடர்ந்து நிகழ்த்தி மண்ணுலக உயிர்களுக்கெல்லாம் இன்னல் தீர்க்கும் அருமருந்தினைப் போல விளங்கி வருவது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஆகும்.

    அருந்தமிழ் போற்றிய ஆதீன குருமூர்த்திகள்

          குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வர்கள் அனைவரும் பண்பாடு நிறைந்த அருளாளர்களாக விளங்கியவர்கள். திருவருளையே குருவருளாகக் கொண்டு தம்வாழ்வைத் தவவாழ்வாகப் பூண்டொழுகியவர்கள். சிவஞானமாகிய தெள்ளமுதை மக்களுக்குக் குறைவிலாது வழங்கியவர்கள். அவர்களுள் தமிழ்த்தொண்டு புரிந்த குருமூர்த்திகளும் உளர். 17ஆம் பட்டமாக விளங்கிய திருவருள்திரு நாகலிங்கதேசிகர் சைவத்தையும் தமிழையும் இருகண்களெனக் கொண்டு இயங்கியவர். சிவநெறி பேணிய சீலர். மக்களிடம் அன்பையும் தமிழையும் ஒருசேர வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார். இவர், தான் மேற்கொண்ட தலயாத்திரையின் மூலம் தன்னை நாடி வந்த அன்பர்களுக்கெல்லாம் பக்திநெறியை மனத்தில் ஆழ விதைத்தவர். இவருடைய காலத்திலேயே ஆதீனம் பிரான்மலையில் தோற்றம் பெற்றது.

          பிரான்மலையிலிருந்து அருளாட்சி புரிந்தவர்கள் ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபட்டுச் சிறந்தனர். பிரான்மலை, (பிரான்மலை உட்கிடைக்கோயில் சதுர்வேதி மங்கலம்) திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி, தேனாச்சியம்மன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி புரிந்தனர்.  அன்றுமுதல் இன்றுவரை ஆதீனத்தின் குருமூர்த்திகள் தொடர்ந்து பிரான்மலை வகை ஐந்து கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி செய்து வருகின்றனர்.  பிரான்மலையில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் அனைவரும் அருளும் தவமும் அறமும் அருந்தமிழ்ப் பெருக்கும் நிறைந்தவர்களாக விளங்கினர்.

          38ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக சுவாமிகள் காலத்தில் ஆதீனம் மிகச் சிறந்து விளங்கியது. இவர்கள் காலத்தில் கி.பி.1864-இல் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் குன்றக்குடி ஆதீனத் திருமடத்துக்கு வந்தார்; சிறந்த சொற்பொழிவு நிகழ்த்தினார்.  குருமகா சந்நிதானம் அவர்கள் நாவலரை நன்கு பாராட்டி, எந்த ஆதீனமும் செய்யாத வகையில் புதிதாகச் சிவிகை (பல்லக்கு) செய்வித்து அதில் அமரச்செய்து ஊர்வலச் சிறப்பும் செய்வித்தருளினார்.

          அதுபோலவே மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திருப்பெருந்துறையில் திருப்பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்றிய பின்னர் குன்றக்குடிக்கு வருகை தந்தார்.  குருமகாசந்நிதானம் அவர்கள் வித்துவானைச் சில நாள்கள் குன்றக்குடியில் தங்க வைத்து அவர்களுக்குத் தக்க சன்மானமும் வழங்கியபின், பல்லக்கு வைத்துக் காரைக்குடி வரை அனுப்பி வைத்தார்கள்.

          மேலும், தமிழ்ப் புலமை மிக்க ‘சிலேடைப் புலி’ எனப் பெயர் பெற்ற வேம்பத்தூர் பிச்சு ஐயரைக் கொண்டு குன்றக்குடி சண்முகநாதப் பெருமானுக்கு உலா இயற்றச் செய்தருளினார்கள். இந்நூலில் ஆதீனத்திற்குட்பட்ட ஐந்து கோயில்களிலும் நடைபெறும் சிறப்புகளைப் பற்றி அழகாகப் பாடப்பெற்றுள்ளது.

    “நந்தி பரம்பரையில் நல்(கு) அருணைஆதீனத்(து)
    இந்(து) அணிவோன் வாயால் இனி(து) இயம்ப-வந்திலகு
    சைவாகமம் விளங்கத் தாரணியில் ஆலயங்கள்
    மைவார் பைங்கூழ்போல மன்னி நிற்ப—மெய் வாய்ந்த
    சீராரும் தெய்வ சிகாமணியென்றே உதித்துப்
    பாராள் குருமரபில் பார்க்கரன்போல்—ஏராரும்
    தன்மகர்த்தாவாகி இந்தத் தாரணியெல்லாம் புகழும்
    சின்மயனாம் ஆறுமுக தேசிகன்.”  

    என்று ஆதீனத்தைப் பற்றியும் குருமகாசந்நிதானம் அவர்களைப் பற்றியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

          39-ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் மகாவித்துவானாகத் திகழ்ந்தவர்கள்; தணிகைப் புராணம், பெரிய புராணம், மெய்கண்ட நூல்கள், பண்டார சாத்திரம் முதலியவற்றை நன்கு போதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பெரிய ஆறுமுக தேசிக சுவாமிகள் காலத்தில் யாழ்ப்பாணம் தில்லைநாத பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்ற ஞானவந்தாதி, தெய்வசிகாமணி நான்மணிமாலைப் பதிப்புக்கு இவர்களருளிய சிறப்புப் பாயிரம் (அப்போது திருவாவடுதுறைத் தம்பிரானாக இருந்தார்கள்) இவர்களது பெரும்புலமைக்குச் சான்றாக விளங்குவது ஆகும்.  இவர்கள் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தார்கள்;  தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களுக்குச் சிலப்பதிகாரத்தின் சிறந்த ஏட்டுப் பிரதியை உதவியருளினார்கள்.

    தமிழ்த்தாத்தாவின் பெருமிதம்

    குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் பணியாற்றி வந்த அப்பாப்பிள்ளை என வழங்கும் சுவாமிநாத பிள்ளை பெரும்புலவராகத் திகழ்ந்தவர்.  உ.வே.சா. அவர்களை மிதிலைப்பட்டி முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்று மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய பழைய ஏட்டுப் பிரதிகள் கிடைக்கும்படிச் செய்தவர்;  ஐயர் அவர்கள் இவரால் இந்தப் பக்கத்தில் வழங்கிய பல வரலாறுகளை அறிந்து கொண்டார்.  இதனால் இவரைப் பலபடப் பாராட்டித் தமது ‘என் சரித்திரம்’ நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

          “திருப்பெருந்துறையிலிருந்து குன்றக்குடி சென்று ஆதீன கர்த்தரையும் அங்கே சின்னப்பட்டத்தில் இருந்த என் நண்பர் ஆறுமுக தேசிகரையும் (இவர் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங்கேட்டவர்) கண்டு பேசினேன். மடத்தின் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப் பிள்ளையைக் கண்டு தமிழ் ஏட்டுச் சுவடிகள் இருக்குமிடத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்ததை ஞாபகப்படுத்தினேன். அவர் ‘இருங்கள்’ என்று சொல்லி உள்ளே சென்று ஒரு சுவடியைக் கொணர்ந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன். சிலப்பதிகாரம் மூலமும் மணிமேகலை மூலமும் அதில் இருந்தன. சிலப்பதிகாரத்தைப் புரட்டிப் பார்த்தேன். மூலம் முற்றும் இருந்தது. பிரதி மிகவும் திருத்தமாகக் காணப்பட்டது. ‘இந்தச் சுவடி எங்கே கிடைத்தது?’ என்று கேட்டேன். ‘முதலைப்பட்டியில் ஒரு கவிராயர் வீடு இருக்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான ஏடுகள் உள்ளன. அங்கிருந்து எடுத்து வந்தேன்’ என்றார். அன்று பிற்பகலே ஆதீனகர்த்தர் உத்தரவு பெற்று அப்பாப் பிள்ளையுடன் மிதிலைப்பட்டி சென்று அந்தக் கவிராயர் வீட்டை அடைந்தேன். அப்போது அங்கே இருந்த கவிராயரது பெயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பது. அவரைக்கண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டிலுள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தேன். அவர் வீடு தமிழ்மகள் ஆலயமாகத் தோன்றியது. குருடனுக்குக் கண் கிடைத்தது போல எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டாயிற்று.”

    வடமொழி வளர்த்த ஆதீனம்

       தமிழகத்து உள்ள ஏனைய ஆதீனங்களை விடவும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வடமொழிநூல்கள் பல இயற்றப் பெற்றுள்ளன. சிவஞான போதத்திற்குச் சிறந்த வியாக்கியானமும், பெளஷ்கர ஆகமத்திற்குச் சிறந்த விருத்தியும் ஞானப் பிரகாச முனிவர் செய்துள்ளார்.  மேலும் ஞானப்பிரகாச முனிவரால் இயற்றப் பெற்ற வடமொழி நூல்கள் வருமாறு:

    1. சித்தாந்த சிகாமணி
    2. பிரமாண தீபிகை
    3. பிரசாத தீபிகை
    4. அஞ்ஞான விவேசனம்
    5. சிவயோக சாரம்
    6. சிவயோக ரத்னம்
    7. சிவாகமாதி மகான்மிய சங்கிரகம்

    ஆகியனவாகும்.

    தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பணிகள்

          இந்த ஆதீனத்தின் 45ஆவது குருமகாசந்நிதானமாகத் திகழ்ந்த திருவருள்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் தம் அருட்பணியால் மக்கள் உள்ளமெல்லாம் நிறைந்து ‘குன்றக்குடி அடிகளார்’ என்னும் சிறப்புப் பெயரால் போற்றப் பெற்றவராவார். காலப்போக்கில் ‘அடிகளார்’ என்ற உயர்தனிச் சொல்லே அவர் பெருமை விளக்குவதாயிற்று.

    அடிகளார் பெருமான் சித்தாந்தச் செந்நெறிக்கும் செந்தமிழ் மொழிக்கும், தமிழகத்து மக்களுக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றியுள்ள தொண்டுகள் நாடறிந்தவை.

          சைவ சமய சாத்திர தோத்திர நூல்களைப் பயின்று தெளிந்தவர்கள்; தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் துறைபோகியவர்கள்;  ஆங்கில மொழிப் புலமை உடையவர்கள். உலகின் பல்வேறு சமய நூல்களையும் தத்துவ நூல்களையும் ஆழ்ந்து பயின்று சிந்தித்தவர்கள். உலகிலுள்ள பல்வேறு அரசியல், ஞான நூல்களையும் கற்றவர்கள்; அறிவியல் நூல்களைப் பயின்றவர்கள்; சமுதாய வரலாற்றை ஊன்றிக் கற்றவர்கள்; சமுதாய நிகழ்வுகளைப் பாடமாகக் கொண்டு படித்தவர்கள்; படித்து வருபவர்கள்; உழைப்பையே தவமாகக் கொண்டவர்கள்.  தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள்.  இவர்கள் செய்துள்ள தொண்டு அளப்பரியது என அடிகளார்தம் அரும்பணிகளைப் பட்டியலிடுகிறார் குன்றக்குடி ஆதீனப்புலவர் மரு. பரமகுரு.

          இனிய எளிய முழக்கம் போலான தம் உரையால் சொற்பெருக்காற்றிச் செவி மடுத்தோர் உள்ளமெல்லாம் சைவத்தையும் தமிழையும் தழைக்கச் செய்த பெருமகனார் இவர். தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பலபகுதிகளுக்கும் உலகில் பல நாடுகளுக்கும் இவரது செஞ்சொற்பெருக்கு சென்று சேர்ந்தது. ஆதீனப் பணிகளிலும் நிர்வாகப் பணிகளிலும் பலவித மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு வருங்காலத்திற்கான பன்னோக்குத் திட்டங்களையும் புகுத்திய பெருமைக்குரியவர். தமிழையும் சைவத்தையும் மானுடநேயத்தையும் பரப்பவும் நிலைநிறுத்தவும் இவர் தோற்றுவித்த அமைப்புகள் பலவாகும். அவற்றுள் தமிழ்நாடு தெய்விகப் பேரவை, திருக்குறள் பேரவை, திருவருள் பேரவை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    நாத்திகம் கையோங்கியிருந்த காலத்து அதற்கு மாற்றாகக் ‘கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயில்களும்’ என்னும் உயர்கோட்பாட்டை நிறுவிச் சமயப்பெருமையையும் ஆலயச் சிறப்பையும் நிலைநாட்டியவர்கள். சமயப் பணிகளுக்கு இணையாகச் சமுதாயப் பணிகளையும் பெரும்பணிகளையும் மக்களைப் பரத்திற்கு ஈடேற்றும் ஆன்மீகப் பணிகளோடு புறத்திற்கு வழிகாட்டும் அறிவியல் பணிகளிலும் ஆழ்ந்தும் அயராதும் உழைத்த குருமகா சன்னிதானத்தை மக்கள் உள்ளன்போடு ‘தமிழ்மாமுனிவர்’ என்று போற்றியழைத்தனர். சமூகக் களத்தில் வீறுகொண்ட போராளியாகவே திகழ்ந்தவர். இவரைப் போற்றித் துதித்த சான்றோர்கள் பலராவர். அவர்களுள், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாராட்டுப் பா ஒன்று சான்றாகப் பின்வருமாறு அமைகிறது.

    செய்ய தமிழும் சிவநெறியும் சிறக்கத் தொண்டு புரிந்திடுவோன்
    ஐயன் குன்றக்குடி அடிகள் அருணா சலதே சிகநாதன்
    தையல் பாகன் தண்ணருளால் சமயச் செங்கோல் இனிதோச்சி
    வையம் புகழப் பல்லாண்டு வாழ்க! வாழ்க!  வாழ்கவே!  

    குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தமிழ்ப் பணிகள்

          குன்றக்குடி அடிகளார் பெருமானைத் தொடர்ந்து 46-ஆவது பட்டமேற்று அருளாட்சி புரிந்து வருபவர் திருவருள்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள். அடிகளார் என்னும் பெயர் இவருக்கும் பொருந்துவதாயிற்று. அமுதனைய தமிழ்மொழியால் ஈர்ப்புடை முழக்கக் குரலால் தமிழகம் மற்றும் அயலகங்களில் அருந்தமிழ் வளர்ப்பதோடு மிகுசைவத் துறைவிளங்கவும் மானுடம் தழைத்தோங்கவும் அருட்பெருக்காற்றி வரும் பெருமைக்குரியவர். ஆலயத் திருப்பணிகள், அறங்காவல் நிர்வாகம் முதலியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிச் சிறக்கச் செய்பவர்.

          ஆதீனப் பணிகளோடு முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றும் தகையராய்ச் சமயப்பணிகளுடனும் சமுதாயப் பணிகளுடன் அயராது தவப்பணி புரிந்து வருபவர். எழுத்தாலும் இன்னுரையாலும் புரட்சிக் கருத்துகளை மக்களிடம் விதைத்து ஞானப்பயிர் வளர்த்து வரும் போற்றுதற்குரியவர்.

    நிறைமுகமாக…

     ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்னும் மந்திரமொழிக்கேற்பக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரையாகத் தொடங்கி இன்றளவும் இப்புவி உள்ளளவும் அருந்தமிழ்ப் பணிகளையும் சைவப் பெரும்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் உலக மேன்மைக்கும் மானுட குலத்துக்கும் என்றும் ஈடேற்றம் தரும் வண்ணம் இயங்கும் என்பதனை இக்கட்டுரை சற்றே எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

    *****

    கருவி நூல்கள்”

    1. குன்றக்குடி, திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலைஆதீன வரலாறு, வித்துவான் சு.சுவர்ண காளீச்சுரன், சார்வரி ஆவணி–பூரட்டாதி, ஆதீனச் சீடர்கள் வெளியீடு.
    2. ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம், வே. கனரத்தின உபாத்தியாயர், யாழ்ப்பாணம் நாவலர் நூற்றாண்டு விழாச் சபையினரால், மறுபிரசுரமாக வெளியிடப்பட்டது.
    3. என் சரித்திரம்–மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள், 1982. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதைய்யர் நூல் நிலையம்,  சென்னை—1941.
    4. மயூரகிரிக் கோவை, கோடகுடி சே.சர்க்கரை இராமசாமிப் புலவர் கீலக, ஆனி, (15 கி.பி. 1908)
    5. தமிழ் இலக்கிய வரலாறு–பதினாறாம் நூற்றாண்டு, மு.அருணாசலம், 1976. காந்தி வித்யாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், தஞ்சை ஜில்லா.
    6. சைவ சமய வளர்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், 1958 ஒளவை நூலகம்—சென்னை.
    7. திருவாவடுதுறைஆதீனத்து மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் I&II  மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர், 1940. டாக்டர். சுவாமிநாதையர் பப்ளிகேஷன்ஸ், சென்னை–5.
    8. மயூரகிரி என்னும்குன்றக்குடி ஷண்முகநாதருலா, பிரமஸ்ரீ சிலேடைப்புலி பிச்சுவையர்–1938.
    9. திருவண்ணாமலைத் தல விளக்கம், பதிப்பாசிரியர்: சீ.ஈ.எஸ்.பெருமாள், 1968. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேவஸ்தானம்
    10. திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ தேவசிகாமணி தாண்டவராஜ தேசிக பண்டார சந்நிதி அவர்கள் பேரில் இயற்றப்பட்ட சாஹித்தியங்கள்.

    ********************************************************************************

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தோற்றம், வளர்ச்சி, ஆதீனம் தமிழோடு வடமொழிக்கும் ஆற்றிய தொண்டுகள், இந்த ஆதீனத்தில் பணியாற்றி வந்த பெரும்புலவர் சுவாமிநாதப் பிள்ளை என்பவர் வாயிலாகத் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையருக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றின் ஓலைச்சுவடிகள் கிடைத்தமை, அதனை நன்றியோடு அவர் தம்முடைய ’என் சரித்திரத்தில்’ பதிவு செய்திருப்பது எனப் பல செய்திகளை இந்த ஆய்வுக்கட்டுரையில் அறியத்தந்திருக்கின்றார் ஆய்வாளர்.

    குன்றக்குடி ஆதீனத்தின் புகழ்பெற்ற ஆதீனகர்த்தரான குன்றக்குடி அடிகளாரின் சமயப் பணிகள், சமூகப்பணிகள் போன்றவையும் அவரைத் தொடர்ந்து பொன்னம்பல அடிகளார் இப்போது ஆற்றிவருகின்ற அரும்பணிகளும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்ந்துகண்ட புதிய முடிபுகள் என்று குறிப்பிடத்தக்க வகையில் ஏதும் கட்டுரையில் இல்லாதபோதினும், குன்றக்குடி ஆதீனம் குறித்து நல்லதோர் அறிமுகத்தை இக் கட்டுரை தருகின்றது எனலாம்.

     

     

     

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 14

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 14

    அவ்வைமகள்

    14. எளிவந்த எளிமை  

     உலகத்திலேயே மிகவும் சிக்கலான விடயம் ஒன்று உண்டென்றால் அது தான் எளிமை.

    ஆம்! “எளிமை” தான் அத்தனைச் சிக்கல் நிறைந்தது. எளிமையாக எழதுவது, எளிமையாகப் பேசுவது, எளிமையான கருவிகளை – பொருட்களை உருவாக்குவது என்பதெல்லாம் எளிமையின் முத்தாய்ப்பான வெளிப்பாடுகள்.

    இவ்வாறாக எளிவந்து எளிமை படைப்போர்கள் உலகத்தில் எப்போதோ அபூர்வமாய் உதிக்கிறார்கள். வள்ளுவனுக்குப் பிறகு ஒன்றே முக்கால் வரியில் ஒரு இலக்கியத்தை, அவன் போல் எளிவந்து எழுதிப்போந்த ஒருவனை இவ்வுலகம் இதுகாறும் காணவில்லை.

    அவ்வையின், இரண்டே இரண்டு சொற்களைக் கொண்ட “ஆத்திசூடியும்” நான்கே நான்கு சொற்களைக் கொண்ட “கொன்றைவேந்தனும்” நாவை வருடிச் சொடுக்கெடுக்கும் நேர்த்தித் திறன் மிக்க எளிமை கொண்டவை. அவ்வையின் ஆத்திசூடியில் ஆடித்திளைத்த பாரதி, தானும் கூட ஒரு புதிய ஆத்திச்சூடியைப் படைத்து ஆத்திசூடிக்கு ஆத்திச்சூட்டி மகிழ்ந்தான். எளிமையின் அசாத்தியக் கவர்ச்சியை – ஆற்றலை இன்னமும் சொல்லவும் வேண்டுமோ?

    தற்காலத்தில், “ஹைக்கூ” எனப்படும் குறுங்கவிதை வகையை அறிவோம். இன்று, ஹைக்கூ கவிதை எழுதுவோர்கள் உலகிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையிலேதான் இருக்கிறார்கள்! வெறும் பதினேழு (5-7-5) சொற்கள் போதும் இக்கவிதையை எழுதுவதற்கு. எளிமை என்றால் அத்தனை எளிமை! ஆனால், அதை எழுத ஆளில்லை! காரணம் அதிலுள்ள சவால்!!

    சொல்லப்போனால் இன்றைய ஹைக்கூ பெரிதும் விதிகள் தளர்த்தப்பட்டிருக்கிறதான  கவிதை வடிவமே. “ரெங்கா” (Renga), என்பதான பெயரில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றியதான  ஒரு கவிதை வகையின் பல்லவி “ஹோக்கு” என்று வழங்கப்பட்டு வந்தது. ஹோக்கு எழுதுவது என்பது வெகுபல நிறைத்த சவால்களை உடைத்ததாய் இருதிருக்கிறது. அடுத்து. “ரெங்கா” என்பது “ரெங்கு” (Renku) வாக மாறி, விதித்தளர்வு பெற்று, படிப்படியாக, இன்னும் கொஞ்சம் எளிமையை இழந்தது. அப்புறம், இன்னமும் கொஞ்சம் விதித் தளர்வு ஏற்பட்டு, பல்லவியான ஹோக்குவையே ஒரு தனிக் கவிதைப் பாணியாகத் எடுத்துக் கொள்ளுவது என்று முடிவு செய்யபட்டது. அது தொட்டு, ஹோக்கூ எனும் பெயரை, ஹைக்கூவாக மாற்றி, பற்பல வகைகளில் மேலும் விதித் தளர்வுகள் ஏற்படுத்திய வகையில், இன்றைய ஹைக்கூ இளைத்து நிற்கிறது. ஆனால், இந்நிலையில் கூட, அதன் எளிமை சவால் நிறைந்த கடினமாய் இருக்கிறது என்றால் எளிமையில் இருக்கக் கூடிய கடினத்தை, சிக்கலை, நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்.

    ஆக, எளிமை என்பது சுலபமானது அன்று என்பது வெள்ளிடை மலை.

    ஆனால், இவ்வுலக வாழ்க்கையில், எளிமை தான் விரும்பப்படுவது – வேண்டப்படுவது – இன்றியமையாதது.

    சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை – சுத்திக்கு மிஞ்சின ஆயுதமில்லை – என்பார்கள்.

    மிகவும் எளிமையான விடயங்களான சுக்கும் சுத்தியலுமில்லாமல் வீடிருக்க வாய்ப்பில்லை அல்லவா?

    ஆக, எளிமையானவை எவையோ அவையே வலிமையானவை – அவையே இன்றியமையாதவை – என்பது விளங்கும்.

    கணினி உலகத்தில் முதல் தலைமுறைக் கணினிகளை தற்போதையக் கணினிகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இன்றைய கணினிகள் எத்தனை எளிமையாகி இருக்கின்றன என்பது புரியும்.

    அதுபோன்றே, கணினிகளில் செருகிப் பயன்படுத்தும் நினைவுப் பெட்டகங்கள் (Memory Storage Devices) எத்தனை எளிதாயிருக்கின்றன என்பதை நினைக்கும்போது மயிர்க்கூச்செறிகிறது. காந்தத் துளை அட்டைகள் (Magnetic Punch Cards), ப்ளாப்பி தட்டுகள். சி டி தட்டுகள், யு எஸ் பி பேனாச் செருகி, மினி யு எஸ் பி பேனாச் செருகி, மைக்ரோ யு எஸ் பி பேனாச் செருகி, நேனோ யு எஸ் பி பேனாச் செருகி என எளிமையை நாம் சேர்த்துக்கொண்டே வந்திருக்கிறோம். இதுபோன்றே எஸ் டி அட்டைகளிலும் தொடர்ச்சியாக எளிமை சேர்ந்து கொண்டே இருக்கிறது.

    காரணம்? இவற்றின் எளிமையே இன்றைய மக்களின் வாழ்வாதாரம் என்பதால்.

    காந்தத் துளை அட்டையிலிருந்து ஒரு மைக்ரோ யு எஸ் பி வருவதற்கு எத்தனை ஆண்டுகள ஆயின என்று பாருங்கள் – ஏறக்குறைய 50 ஆண்டுகள்.

    இந்த 50 ஆண்டுகளிலும் நாம் ஒரு நினைவுப் பெட்டகத்தையோ அல்லது ஒரு கணினியையோ எளிமைப்படுத்துவதற்காக கொடுத்திருக்கிற முயற்சி, உழைப்பு, முதலீடு, ஆகியனவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், எளிமை என்பது எத்தனைக் கடினமான பணி – காலம் வேண்டுகிற பணி என்பது விளங்கியிருக்கும்.

    ஒரு தொழிநுட்பத் துறயில், எளிமை என்பது சாதிக்கப்படவேண்டுமேன்றால் அங்கே மகத்தான திட்டம் இருக்க வேண்டும். நீண்ட கால மற்றும் குறுகிய கால மைற்கற்கள் விவரம் வேண்டும், ஏற்படக்கூடிய இலாப நட்டங்கள் பட்டியலிடப்பட்டாக வேண்டும்; வெற்றி தோல்விகளுக்கு ஏற்றார் போன்ற தகவமைப்பு வேண்டும், நிதிவேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக, அசைக்கமுடியாத உறுதியும், “இது நடக்கும் – நடந்தே யாகும்” என்கிற நம்பிக்கை வேண்டும் – அதற்கும் மேலாக, விசுவாசமான் ஊழியர்கள் வேண்டும்.

    கணினிகளும் நினைவாற்றல் பெட்டகங்களும் எளிமையாகின பரிணாம வளர்ச்சியில், எளிமை ஏற்றப்பட ஏற்றப்பட, கணினிகளின் – நினைவாற்றல் பெட்டகங்களின் – சக்தியானது (Power) அதிகரித்துக்கொண்டே போவதை நாம் நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருகிறோம் என்பது பேருண்மை.

    நாம் இன்னொன்றையும் கவனிக்கிறோம்: கணினிகள் எளிமையானதால். நினைவாற்றல் பெட்டகங்கள் எளிமையானதால், ஒட்டுமொத்த மனித குலத்தின், திறன் அதிகரித்திருக்கிறது – தொலைத்தொடர்புகள் விரைவு பட்டிருக்கின்றன. உலகமே ஒரு கைப்பிடிக்குள் என்பதான ஏகாந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஆக, எளிமை என்பது மனிதகுலத்தின்  சக்தியை, திறனை, பலத்தை அதிகரிக்கும் சத்தியத்தை நாம் வெகு யதார்த்தமாகப் பார்க்கிறோம்.

    கணினிகளை எளிமைப்படுத்தி, அனைவர் கைகளிலேயும் எளிமையான கணினிகளை ஆனந்தமாய்த் தழுவ விட்ட பெருமை ஸ்டீவ் ஜாப்சிற்கு உண்டு என்றால் சமயத்தை –– எளிமையாக்கி, மக்களின் சிந்தையிலே எளிமையானதொரு சமயத்தை ஆனந்தமாய்த்  தழுவவிட்ட பெருமை வள்ளலாரைச் சேரும்.

    கணினி என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று ஜாப்சும் சமயம் என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று வள்ளலாரும் சொல்லாமல் சொல்லிப்போன பெற்றியை நம் சிந்தையில் பொருத்திப் பார்க்கிற போது – இவர்கள் இருவரும் ஒப்பிலா மணிகள் என்றே நாம் உணர்ந்து கொள்கிறோம்.

    இவ்வாறு நாம் பேசும்போது, கணினியை சமயத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது போல் சிலருக்குத் தோன்றலாம். கணினியையும் சமயத்தையும் ஒப்பிடுவது நம் இலக்கு அல்ல. ஆனால், கணினி என்பது இன்றைய மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கு எத்தனை முக்கியமானதோ அத்தனை முக்கியமானது சமயமும் என்கிற புரிதல் கிடைக்குமெனில், வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் இரு பெருமனிதர்களை நாம் புரிந்துகொள்ளுவதற்கு அதுவே ஒரு சிறந்த துவக்கப் புள்ளியாகும்.

    ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகளை எளிமைப்படுத்தும்போது நேரிட்ட பல சுவையான நிகழ்வுகள் உண்டு. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இருக்கிற நிலையிலே, எளிமை பற்றிய அவரது பொன்னான கூற்று ஒன்றினை முதலில் பார்ப்போமாக:

    “That’s been one of my mantras – focus and simplicity. Simple can be harder than complex: You have to work hard to get your thinking clean to make it simple. But it’s worth it in the end because once you get there, you can move mountains.”

    “கவனச்செறிவும் எளிமையுமே எனது மந்திரங்கள் – எளிமை என்பது சிக்கலையும் விடச் சிக்கலானது.  உன் எண்ணம் எளிமையாவதற்கு, நீ கடினப்பட்டு முயன்று உனது எண்ண நிலையைத் தூய்மைப்படுத்த வேண்டும். அவ்வாறான, கடின முயற்சி எத்தனை மதிப்புடையது என்பது இறுதியில் விளங்கும் ஏனென்றால், அங்கே (எளிமைக்கு) சென்று விட்டாயென்றால், நீ மலைகளை அசைக்கமுடியும்!”

    எளிமை என்பதற்கு இருக்கிற பராக்கிரம ஆற்றலை ஸ்டீவ் ஜாப்சை விட விவரமாக எடுத்துச் சொல்லியவர்கள் எவருமில்லை.

    அவருக்கு முன் எளிமையைப் பற்றிப் பூடகமாக, சுருங்கச்சொல்லிப் போந்தவர்கள் சிலருண்டு: லியனார்டோ டா வின்சி (ஏப்ரல் 14/15,  1452 – மே 2. 1519); வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26,1892); ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18,1955)

    “எளிமை என்பது நுட்பத்தின் முத்தாய்ப்பு” (Simplicity is the ultimate sophistication) – லியனார்டோ டா வின்சி.

    “எளிமை வெளிப்பாட்டின் மகிமை” “Simplicity is the Glory of Expression” – வால்ட் விட்மன்

    எந்த ஒன்றையும் எளிமையாக்குங்கள் – எளிதாக்காதீர்கள்  “Make Everythig Simple not Simpler” – ஐன்ஸ்டீன்.

    இக்கூற்றுக்கள் மூன்றும் சங்கமித்து மிளிருமுகமாக அமைவது ஸ்டீவ் ஜாப்ஸின் கூற்று என்று எடுத்துக்கொண்டாலும், எளிமை என்பது யாதென செய்முறையாக   (practical)  ஒரு விளக்கத்தைத் தந்த முதல் மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. ஏனெனில் எளிமையை, கணினியில் தத்ரூபமாக நிலைநாட்ட அவர் தந்த முற்சிகளும், அம்முயற்சிகளுக்கு அவர் தந்த மாபெரும் உழைப்பு என்னும் மூலதனமும் மட்டுமே எளிமையின் செய்முறையைப் பிறருக்குச் சொல்லுமளவுக்கு அவரைத் தயார் செய்தது.

    அவருக்கு முன்னே, எளிமைக்கான எளிமைச் செய்முறையை பிரம்மாண்டமானதொரு தொழிலில், ஒரு தொழில் நுட்பச் சவாலாக எடுத்துக் கொண்டு  நிலை நாட்டவேண்டிய வாழ்க்கைப் பேறு, அதாவது கொடுப்பினை பிறருக்கு இல்லை என்பதும் புலப்படுகிறது.

    இந்நேரத்தில், நம் கவனத்திற்கு இன்னொன்றும் வருகிறது; ஸ்டீவ் ஜாப்சிற்கு அவரது எளிமை மந்திரத்துக்கு அடித்தளம் போடுவதற்கு ஏதுவாக, எளிமையை வேராகக் கொண்டு வளர்ந்தெழுந்த இந்தியச் சிந்தனை அவரிடம் இருந்ததாக நாம் உணர்கிறோம்.

    தியானமுறைகளைப் பயில இந்தியா வந்து, இங்கு தங்கியிருந்து, பயின்று சென்றிருக்கிறவர் என்ற முறையிலும், பொதுவாகவே சிலபல தருணங்களில் இந்தியப் பரிபாஷைகளை எடுத்தாள்கிற மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதாலும், எளிமை என்பது கருவிலேயே, எண்ண நிலையில் எழவேண்டிய ஒன்று  என்பதை அவர் துரிதமாகவே அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார் என்றே நம்மால் ஊகிக்க முடிகிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருமாறு எண்ணிறந்த நேரடியான தனித்தனிச் சம்பவங்கள், இப்போது நம் வசம் இல்லை என்றாலும் “நேர்க் காணல்” முறையில் ஐசக்சனால் எழுதப்பட்ட அவரது வாழ்க்கைச் சரிதத்தில் [1] ஸ்டீவ் ஜாப்ஸின் பல கூற்றுக்களில் உள்ள இந்தியச் சிந்தனையின் சாயலை, நாம் புறக்கணிக்க முடியாது. இதுபற்றி நாம் பின்னால் பேசவும் இருக்கிறோம்.

    இந்தியச் சிநதனை என்பது எளிதானதல்ல ஆனால் எளிமையானது. “எளிமையால் மலைகளை அசைக்க முடியும்”  என்கிற ஸ்டீவ் ஜாப்சின் கூற்று, மலைகளின் தொகுப்பாக, மாவல்லமை பெற்று நின்ற பிரிட்டிஷ் அரசை, தனது எளிமை என்னும் ஒற்றை நெம்புகோலால் அனயாசயமாய்ப்  புரட்டிப்போட்ட அண்ணல் காந்தியடிகளின் (அக்டோபர் 2, 1869 – சனவரி 30,1948) செயல் சாதனையின் வெளிப்பாடே என்று நாம் கொள்ளலாம். இந்த வெளிப்பாட்டை வெறும் வாய்மொழியோடு ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுத்திக்கொள்ளவில்லை. நேரடியாக செய்து காட்டிச் சென்றிருக்கிறார் – அதுவும் அதி சிக்கலான அவரது துறையில்.

    கணினித்துறை என்பது சும்மா அல்பசொல்பமானதல்ல. மிகுந்த போட்டிகளும் வர்த்தகச் சவால்களும், தொழில்நுட்பச் சவால்களும், பல வேலைப் பணியார்களின் மனிதாயுதச் சவால்களும் நிறைந்தது அது. அதுமட்டுமல்ல அது ஒரு உலகாய்ந்த துறை; நொடிப்பொழுதும், “கண்கொத்திப் பாம்பைப்போல்” பிறர் பார்த்துக் கொண்டிருக்கிற பார்வை உள்ளதான துறை. அத்தகையதொரு துறையில், அந்தரத்தில், அப்பட்டமாய் நின்றபடி, வெட்டவெளிச்சமாய், நாட்டவர் மருளவும், கேட்டவர் வியக்கவும், பார்த்தவர்க் கிறங்கவும், எளிமையை எளிவந்து சாதித்துக் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸின் சாதனை உலக வரலாற்றில் நீங்காத இடம் பெரும் தன்மையதுதான்.

    அவருள் இருந்த எளிமைச் சார்பின் தன்மை தான் ஸ்டீவ் ஜாப்ஸின் இந்தச் சாதனைக்கு அடித்தளமாய் அமைந்தது என்பதை நாம் வலியுறுத்த வேண்டிய தேவை இல்லை.

    (மேலும் பேசுவோம்)

    துணைநூற் பட்டியல்

    [1] Walter Issacson (2011). Steve Jobs, Simon & Schuster, 656 pp.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 12

    பழகத் தெரிய வேணும் – 12

    நிர்மலா ராகவன்

     (குடும்பச் சுற்றுலா)

    “அடுத்தமுறை, உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் போகும்போது, என்னையும் அழைத்துப் போகிறாயா?” கேட்டது என் எட்டு வயதாகியிருந்த பேரன். நான் எங்காவது அயல்நாடு போய்விட்டு, கதைகதையாகச் சொல்வதைக் கேட்டு, அவனுக்கும் ஆர்வம் பிறந்திருந்தது.

    அப்படி என்ன கதை?

    தற்போது கிழக்கு மலேசியா என்று அழைக்கப்படும் போர்னியோ காட்டுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.

    காட்டில் ஆங்காங்கு சிறு குடில்கள். ஜன்னலோரமாக வைத்திருக்கும் வாழைப்பழத்தை வெளியிலிருந்து உரிமையுடன் எடுத்துச் சாப்பிடும் குரங்குகள். குடிலுக்கு வெளியே இருந்த மரத்தில் பின்னிப் பிணைந்த நாகம். இவையெல்லாம் நகர்ப்புறத்தில் காணக் கிடைக்காத அனுபவங்கள்.

    ‘இங்கு குழாய்த்தண்ணீர் சிவப்பாக இருக்கும். மரங்களின் வேரால் அப்படி ஆகிறது. ஆனால், சுத்தமான நீர்தான்,’ என்று முதலிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.

    குளியலறைக்குப் போனவள், அங்கு ஒரு தவளை இருப்பதைக் கண்டு, வெளியே ஓடி வந்தேன்.

    ‘வேண்டுமென்றுதான் ஒவ்வொரு குளியலறையிலும் ஒன்றை விட்டிருக்கிறோம். அப்போதுதான் கொசுத்தொல்லை இருக்காது!’ என்ற விளக்கம் கிடைத்தது.

    ‘தவளையை மிதித்துத் தொலைக்கப் போகிறோமே!’ என்று பயந்தபடி குளிக்க வேண்டியிருந்தது.

    JUNGLE TREKKING என்று காட்டு வழியில் நடப்பதற்குப் புறப்பட்டேன். அதுதான் முதன்முறை. என்ன எதிர்பார்ப்பது என்று புரியாததால் உற்சாகமாக இருந்தது.

    என்னைப்போன்ற அனுபவமற்றவர்களுக்கு என்று ஒன்று, இரண்டு என்று பாதைகளின் எண்களைக் குறித்திருந்தார்கள். முதல் பாதையில் ஆரம்பித்தேன். பாதி வழிக்குள் எப்படியோ, நான்காவது பாதைக்கு மாற்றி அழைத்துப் போய்விட்டாள் மகள். மொத்தமே ஐந்துதான்.

    இந்தக் கடினமான பாதையில் ஒரு மரக்கிளையிலிருந்து அடுத்த நிலைக்குக் குதிக்க வேண்டும். இடையே ஒரு மீட்டர்!

    எனக்கோ, அறுபது வயது. அப்படியே மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

    “’யோசிச்சுப் பாரும்மா. இந்த நிமிடம் போர்னியோ காட்டில் மரங்களின் மீதும், மலைப்பாதைகளின்மேலும் ஏறி, இறங்கும் இந்தியப்பாட்டி நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய்!”

    “பயமாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்துவிட்டால், பயம் போய்விடும்,” என்றெல்லாம் பலவாறாக மகள் சமாதானப்படுத்த, நீண்ட மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குதித்தேன்.

    என்னைத் தனியாகத் திரும்பிப்போகச் சொல்லிவிட்டு, என் மகள் மீண்டும் ஏறினாள்.

    நான் போகும் வழியில் ஒரு PROBOSCIS குரங்கு உட்கார்ந்திருந்தது. பெரிய உருவம். தும்பிக்கைபோல் ஒன்று. நட்டநடுவிலா இப்படி உட்கார்ந்திருக்கும்!

    இம்மாதிரி தருணங்களில்தான் பக்தி அதிகரித்துவிடுகிறது.

    நான் அதற்கு மிக அருகில் நடந்துபோனேன். அது கவனிக்கவேயில்லை. சில சமயங்களில் நாம் அடையும் அச்சம் அனாவசியம் என்று புரிந்தது.

    அடுத்த சில மணி நேரம், நாற்காலியில் உட்கார்ந்திருந்த நிலையிலும் என் கால்கள் தாமாக ஆடியபடி இருந்தன.

    ‘நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டது போலிருக்கிறதே!’ என்று எழுந்த கவலை அதேபோல் பக்கவாட்டில் கால்கள் ஆட நடந்த இரு இளம்பெண்களைப் பார்த்ததும் சிரிப்பாக மாறியது.

    முன்பின் பழக்கமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் எதை எதையோ சந்திக்க வேண்டியிருக்கும்.

    நேபாளத்தில்

    காட்மாண்டுவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த சிட்வான் (CHITWAN) என்ற இடத்திற்குப் போனோம். அக்காட்டில் யானைகளை வளர்க்கிறார்கள்.

    ஒரு யானைமேல் கால்களை இரு பக்கங்களிலும் தொங்கவிட்டு அமர்ந்தபடி காட்டினூடே பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.

    அவ்வப்போது, ‘எல்லாரும் முன்னால் நகருங்கள்,’ என்று அதன்மேல் அமர்ந்திருந்த நால்வரிடம் உத்தரவு பிறப்பிப்பார் யானைப்பாகன். அடுத்து, யானை ஒரு மேட்டிலிருந்து குதித்து, ஆற்றுக்குள் நடக்கும். பயமும் மகிழ்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு எழுந்தன.

    அங்கு விதவிதமான பறவைகள், அசையாது, இறந்ததுபோல் கிடந்த முதலைகள்.

    வழியில் ஒரு குட்டி யானை அம்மாவின் அடியிலிருந்த நிழலில் படுத்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. சற்று வளர்ந்தபின்னர், அதையும் பழக்குவார்கள் என்று கேட்டபோது வருத்தமாக இருந்தது.

    இன்னொரு குட்டி அதன் ஆகாரமான தழைகளை மணலில் புரட்டி, அதைத் தன் தலைமேல் தட்டிக்கொண்டது. தன் தாய் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கும்.

    அடுத்து, வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது புரியாது, மீண்டும் மணலில் புரட்டி எடுத்து, தலையில் தட்டி, என்று திரும்பத் திரும்ப அதே காரியத்தைச் செய்தது எங்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைத்தது.

    நீண்ட யானைச் சவாரிக்குப்பின் இறங்கவே சிரமப்பட்டேன். காலில் தசைநார் கிழிந்துபோக, ஆறுமாத காலம் நொண்டியபடிதான் நடக்க முடிந்தது.

    ‘செலவு, நோய்நொடி எல்லாவற்றையும் தவிர்க்க இருக்கும் இடத்திலேயே சௌக்கியமாக இருக்கலாமே!’ என்று பார்த்தால் முடியுமா? வீட்டில் செய்த காரியத்தையே செய்துகொண்டிருப்பது சலிப்பைத்தான் தரும்.

    முன்னேற்பாடாக, தேவைப்படும் ஆடைகளையோ, மருந்துகளையோ எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

    (நீண்ட பயணத்திற்கு உலர்ந்த திராட்சையை அவ்வப்போது மென்றால், சோர்வு ஏற்படுவதில்லை. சிசுக்களை விமானத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் காதில் பஞ்சை அடைத்தால், ஓயாமல் கதறி அழமாட்டார்கள்).

    உணவு, உறக்கம்

    என் ‘சாதனை’களைக் கேட்ட பின்னர், தானும் இம்மாதிரியான சாகசங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என் பேரனுக்கு.

    எனக்குத் தயக்கமாக இருந்தது.

    “நீ சாப்பிடப் படுத்துவாயே! வெளியில் என்ன கிடைக்கிறதோ, அதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்”.

    மறுநாளிலிருந்து வீட்டில் என்ன சமைக்கிறோமோ, அவைகளையெல்லாம் ‘பிடிக்காது, பழக்கமில்லை,’ என்றெல்லாம் வழக்கம்போல் ஒதுக்காது, மிளகாய் வற்றல், கறிவேப்பிலையைக்கூடச் சாப்பிட ஆரம்பித்தான்!

    நீண்ட பயணத்தின்போது தூங்கினால்தான் இறங்கியபின்னர் உற்சாகத்துடன் சுற்றிப்பார்க்க முடியும். ஓயாமல் பேசிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ சென்றால், ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது உடல் களைத்து, எதையும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது.

    குழந்தைகளுக்கு லஞ்சம்

    பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய நேரிட்டால், சிறுவர்களுக்குப் பொறுமை மீற, நமக்கு அவர்களை சகிக்க முடியாது போய்விடும்.

    “பேசாம இருந்தா, அடுத்த தடவை கார் நிக்கறபோது, ஒனக்கு ரெண்டு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்,” என்று ஆசை காட்டுவேன்.

    சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். உண்மை பேசும் குணமும் தானே வரும்.

    “ஒனக்கு மட்டும்தான் ரெண்டு!” என்று, அவன் என்னவோ மிக நல்ல குழந்தை என்பதுபோல் சொல்லிக்காட்ட, அவனுக்குப் பெருமையாகிவிடும். பயணம் தொடரும்போது, முடிந்தவரை தொந்தரவு கொடுக்காது இருப்பான்.

    குழந்தைகளுடன் சுற்றுலா போவதால் நன்மை அவர்களுக்கு மட்டுமல்ல.

    ‘வெளியூருக்குப் போனா, மத்தியானம் தூங்க வேண்டாம்னு அம்மா சொல்லிட்டா!’ என்று நான்கு வயதில் என் மகள் குதூகலித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

    அறிவு முதிர்ச்சி

    புதிய இடங்களில் பழக்கமில்லாத மொழி, கலாசாரத்தைப்பற்றி அறிவது அறிவு முதிர்ச்சியை அளிக்கிறது. அதிகாரம் செய்வதைவிட மரியாதையாகப் பிறரை நடத்துவது நல்ல பலனை அளிக்கும் என்று புரிந்துபோகிறது. நம்மிடமிருந்து மாறுபட்ட எவரையும் ஏற்கும் குணம் வருகிறது.

    வீடு திரும்பியபின், எந்த வயதினரும் எப்போதும் செய்துவந்த காரியங்களைச் செய்ய உற்சாகம் காட்டுவார்கள்.

    காலப்போக்கில், பெற்றோரைவிட்டு வெகுதொலைவு சென்றாலும், சிறுவயதில் குடும்பத்துடன் கழித்த சில தருணங்கள் நினைவில் நிலைத்து, மகிழ்ச்சியைத் தரும்.

    அவை வாழ்க்கையில் ஏற்படும் இடர்களால் ஒரேயடியாக இடிந்து போய்விடாது நம்மைக் காக்கும்.

    Share
  • வேங்கட வேட்கை

    வேங்கட வேட்கை

    கவித்தலம் கை. அறிவழகன்

    காப்புச் செய்யுள்

    (இன்னிசை வெண்பா)

    வேங்கட வேட்கை விருப்புடன் பாடியே
    தீங்கினை நீக்கித் திருமலைக்குச் செல்ல:
    திரைவிரி காவிரித் தீந்தமிழ் ஆற்றங்
    கரைகிடந்த கண்ணா அருள்.

    (கலிவிருத்தம்)

    முத்தமிழ் உவப்பானை முகில்வண்ண மூர்த்தியைப்
    புத்தியில் உறைவானைப் பொழிலேழு மலையானை
    வித்தகக் கண்ணனை வேதத்தின் நாயகனைச்
    சித்தம் நிறைந்திடச் சேவிப்ப தெந்நாளோ?

    உருக்கிடும் உருவானை உளத்துளே நிறைவானைப்
    பெருக்கிடும் விழிநீர் மல்கப் பிணைத்திடும் அன்பினாலே
    திருக்கண்டு பொன்மேனி கண்டு திருப்பதியான்
    இருக்கின்ற எழிலுருவை எப்போது காண்பேனோ?

    ஆயனை அலர்மேல் மங்கை போற்றும்
    நேயனை நெடுங்கடல் வண்ண நிமலனைத்
    தூயநீர் அருவி துளிர்த்திடும் வேங்கடத்தே
    தாயனையத் தலைவனைத் தரிசிப்ப தெந்நாளோ?

    கங்குல் விளக்கானைக் கருத்ததனில் நிறைந்தானை
    எங்குலக் கொழுந்தானை எவ்வுயிருக்கும் நாயகனைத்
    தெங்கிள நீர்ச்சுவைத் திருவேங்கட மலையானைப்
    பொங்கிடத் தரிசித்துப் பூரிப்ப தெந்நாளோ?

    பொங்கரவில் அணைவானைப் புரிதுயில் நிறைவானைச்
    சிங்கமுக உருவானைச் சிதறுந்தேன் ஒன்றாகித்
    தங்குமலர்த் தாமரை தமிழ்வேங் கடத்தே
    செங்கமலக் கண்ணனைச் சேவிப்ப தெந்நாளோ?

    எண்ணிய எண்ணத்தை ஈடேற்றும் நாயகனைப்
    புண்ணிய நல்வினை பொழிந்திடும் தேவனை
    மண்ணிலே உயர்ந்த மாமலை வேங்கடத்தில்
    கண்ணினால் கண்டே கரையேறு வதெந்நாளோ?

    முத்தி தருவானை மூவுலகும் காப்பானை
    எத்திசையும் போற்றும் ஏழு மலையானைப்
    பத்திப் பெருக்குடனே பாதமலர் தான்வணங்கி
    அத்தி வரதரையும் அடிதொழுவ தெந்நாளோ?

    செந்துவர்வாய்ச் சங்கனைச் சீரிமிகு சக்கரம்
    தந்தோள் சூடிய தாமோ தரனை
    எந்துயர் தீர்ப்பானை ஏழுமலை வேங்கடனை
    முந்தியே தரிசித்து மூழ்குவதும் எந்நாளோ?

    சீதை நாயகனைச் செங்கண் திருமாலைக்
    கோதை மாலை சூடிய கோவிந்தனை
    வேத முதல்வனை வேங்கட மலையானைத்
    தீதறத் திருவிழி காண்பதுவும் எந்நாளோ?

    குலம்காக்க வேண்டும் கோவிந்தா என்றும்
    நலம்காத் தருள்வாய்; நாராயணா என்றும்
    தலம்போற் றுகின்ற தமிழ்வேங் கடத்தே
    பலர்போற்றுந் தமிழால் பாடுவதும் எந்நாளோ?

                               (வேறு)

    (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

    கண்ணுளே பாவை யானாய்
    கருத்துளே யாவும் ஆனாய்
    மண்ணுளே மரமும் செடியும்
    மற்றுள அனைத்தும் ஆனாய்
    தண்ணொளிக்  கதிராய் ஆனாய்
    தமிழெலாம் நீயே ஆனாய்
    விண்பொழி மழைபோல் ஆங்கே
    வேங்கடம் நின்றாய் நீயே!

    உன்னையே தொழுதேன் என்றும்
    உணர்வுடன் மகிழ்வாய் நின்றே
    என்னையும் ஏற்பாய் என்றே
    எழுமலை துதிக்கின் றேனே
    அன்னையே அத்தன் நீயே
    அன்பினோர் வடிவம் நீயே
    இன்னுமோ உறக்கம் கொண்டாய்
    ஏழையேன் தவிக்கின் றேனே!

    Share
  • ஏறன் சிவா துளிப்பாக்கள்

    ஏறன் சிவா துளிப்பாக்கள்

    ஏறன் சிவா

    வீசப்பட்ட விதைகள்
    முளைத்து வந்தது
    நம்பிக்கை!

                   ****

    துள்ளியோடிய அணில்
    ஏறி அமர்ந்துகொண்டது
    மனத்தில்!

                    ****

    சோற்றுக்கே வழியில்லை
    வீடு கட்டுகிறான்
    சிலம்பப் பயிற்சி!

                    ****

    வீட்டுக்கு வரும் விருந்தினர்
    ஓடி ஓடி வரவேற்கிறான்
    நாய்க்குட்டி!

                     ****

    யாரும் மதிக்காததால்
    வெளியிலேயே நின்றுவிட்டது
    செருப்பு!

                      ****

    ஆற்றில் விழுந்த பொம்மை
    அடித்துச் செல்கிறது
    மழலையின் மனம்!

                       ****
    நூலகம் மூடப்பட்டதும்
    புதிதாகத் திறக்கப்பட்டது
    மதுக்கடையும் சிறைச்சாலையும்!

                       ****
    கைவிடப்பட்ட குழந்தைகள்
    குப்பையில் தேடுகிறார்கள்
    தங்கள் வாழ்க்கையை!

                       ****

    கோடைக்காலப் பயிர்கள்
    வாடுகிறது
    உழவனின் குடும்பம்!

                        ****

    நனைக்காமலேயே நம்மைக்
    குளிப்பாட்டி விடுகிறது
    குளிர்ந்த தென்றல்!

    Share
  • நாலடியார் நயம் – 5

    நாலடியார் நயம் – 5

    நாங்குநேரி வாசஸ்ரீ

     5. தூய் தன்மை

    பாடல் 41

    மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
    நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை – யாக்கைக்கோர்
    ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
    காக்கை கடிவதோர் கோல்

    மாந்தளிரின் மேனியுடை இள
    மங்கை நல்லாளே! என
    விளித்துப் பிதற்றும் அறிவுடையோர்
    விரைவில்அழியும் உடம்பின்
    இழிவை எண்ணிப் பாராரோ?
    ஈயின் சிறகு அளவு
    தோல் அறுந்தாலும்
    வழியும் குருதிநோக்கி
    வரும் காக்கையை
    விரட்ட ஒரு கொம்பு
    வேண்டும் என உணர்வீர்.

    பாடல் 42 

    தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
    மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் – மீப்போர்வை
    பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
    பைம்மறியாப் பார்க்கப் படும்

    கண்ணுக்குத்தெரியா துளைகள் பல
    கொண்டு அசுத்தங்களை மறைக்கும்
    மேற்போர்வைத் தோலினால்
    மிக்க பெருமை கொண்டு
    விளங்கும் இவ்வுடம்பு
    விருப்பம்தரும் அத்தோலால்
    ஆசைமேலிட்டு காம வயப்படாது
    அசுத்தம் மறைக்கப்படாத
    பை போல் நினைந்து உட்புறம்
    காண்கின் உண்மை புரியும்.

    பாடல் 43

    தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
    பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
    உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
    கண்டுகை விட்ட மயல்.

    உண்ணும் தொழிலால்
    உடலுள் அழுக்கு மிகுமென்று
    பெரியோர் விலக்கிவிட்ட
    ஆசை எனும் மயக்கத்தால்
    ஆகுகின்ற உடல்நாற்றம்
    மணம் தரும் பொருட்களை
    மென்று தின்பதாலோ
    வாசனை மலர்களை
    வகையாய்ச் சூடிச் செய்யும்
    பொய் அலங்காரத்தாலோ
    போகிடுமோ?

    பாடல் 44

    தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
    கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
    உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
    கண்ணீர்மை கண்டொழுகு வேன்

    உள்ளிருக்கும் நீர் நீக்கின்
    தோண்டிய நுங்கு போல்
    தோன்றும் கண்களைத்
    தெளிந்தநீர்க் குவளை என்றோ
    கரையில் புரளும் கயலென்றோ
    கூர் வேற்படை என்றோ
    கூறி இன்புறும் அற்பமனிதர்கள்
    என்மனத்தைத் துன்புறுத்த
    எச்சமயத்திலும் விடுவேனோ?

    பாடல் 45

    முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
    கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
    எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
    பல்லென்பு கண்டொழுகு வேன்

    எல்லோரும் காணும்படி சுடுகாடு
    எங்கும் சிந்திக்கிடக்கும்
    பல்லாகிய எலும்புகளைப்
    பார்த்தபின்னும் பற்றற்று
    ஒழுகும் நான் பெண்களின்
    ஒளிமிகு பற்களை
    முல்லை அரும்புகள் என்றும்
    முத்துப் போன்றவை என்றும்
    பிதற்றும் மேலான நூலறிவு
    பெறாக் கீழ்மக்கள் எம்
    உள்ளத்தைத் துன்புறுத்த
    உறுதியற்று விடுவேனோ?

    பாடல் 46

    குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
    தொடரும் நரம்பொடு தோலும் – இடையிடையே
    வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
    எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்

    குடலும் கொழுப்பும்
    குருதியும் எலும்பும்
    நன்கு கட்டப்பட்ட
    நரம்பும் தோலும்
    இவற்றினிடைத் தோன்றும்
    தசைகளும் நிணமும்
    தாங்கிய இவைகளுள்
    குளிர்ந்த மாலை சூடிய இக்
    கோதை எப்பகுதியை உடையவள்?

    பாடல் 47

    ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
    கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் – பேதை
    பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
    கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

    அழுக்குகள் ஊறி
    அவ் வெறுக்கத்தக்க
    ஒன்பது துளைகளை
    உடைய புலன்களையும்
    அசுத்தக் குழம்பு உட்சிதறி
    அலைமோதும் உடம்பையும்
    கண்டும் அறிவில்லாதான்
    கண்கவரும் மேல்தோலால்
    கவரப்பட்டு அழகிய
    பெருத்த தோளுடையவளே!
    பாங்கான வளையல்கள்
    அணிந்தவளே! என விளித்து
    அறிவில்லாது பிதற்றுவான்.

    பாடல் 48

    பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
    கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் – மண்டிப்
    பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
    முடைச்சாகாடு அச்சிற்று உழி

    உடம்பெனும் பண்டத்தின்
    உண்மை இயல்பறியாதோர்
    சந்தனப் பூச்சையும்
    சூடும் மலர்மாலையையும்
    பாராட்டி மகிழ்ந்திடுவர்
    முடைநாற்றம் கொண்ட
    மனித உடம்பெனும் வண்டியின்
    அச்சுபோலாம் உயிர் பிரிந்தபின்
    ஆணும் பெண்ணுமாய் வலிமிகு
    கழுகுகள் கூடிப் புரட்டிக்
    குத்தி உண்பதை அவர்கள்
    கண்டதில்லையோ?

    பாடல் 49

    கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
    குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி – ஒழிந்தாரைப்
    போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
    சாற்றுங்கொல் சாலச் சிரித்து

    இடுகாட்டில் காணப்படும்
    இறந்தவர்களின் தலைகள்
    அச்சந்தரும் தோற்றம் கொண்ட
    ஆழ்பள்ளக் கண்களுடன்
    சாகாது நிற்கும் மற்றவர்
    சகிக்க முடியாதபடி
    ஏளனமாய்ச் சிரித்து
    இவ்வுடம்பின் தன்மை
    இத்தகையது என உணர்த்தி
    நல்லறம் போற்றி
    நல்வழியில் நில்லுங்கள்
    எனச் சொல்லுகின்றனவோ?

    பாடல் 50

    உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
    செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் – செயிர்தீர்ந்தார்
    கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
    பண்டத்துள் வைப்ப திலர்

    இறந்தவர் வெண்மண்டை ஓடுகள்
    இருப்பவர் அஞ்சும்படி நகைத்து
    இல்லறத்தில் இறுமாந்து
    இருப்போரின் குற்றம் போக்கும்
    உடல்மயக்கமெனும் குற்றம் நீங்கியோர்
    உண்மையை உணர்ந்துப் பின்னர்
    இவ்வுடம்பின் இயல்பு
    இத்தகையதுதான் என
    அறிந்து தம் உடம்பை
    அரிதான ஒரு பொருளாய்
    அதிசயித்துப் பாராட்ட விழைந்திலர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 254

    படக்கவிதைப் போட்டி – 254

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஆழியும் ஓடங்களும் அவற்றின் அருகிருக்கும் மனிதர்களுமாக ‘ஆழிசூழ் உலகை’க் கறுப்பு வெள்ளை நிழற்படமாக்கி நம் பார்வைக்குத் தந்திருக்கின்றார் திரு. முகம்மது ரபி. இப்படத்தை படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு ராமலக்ஷ்மி. படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி!

    ”வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
    ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே”
    எனும் பழைய திரைப்படப் பாடல் நினைவலைகளில் மோதுகின்றது.

    கூடவே…” நீர்வழிப் படூஉம் புணைபோல்
    ஆருயிர் முறைவழிப் படூஉம்
    ” எனும் கணியன் பூங்குன்றனின் மணிமொழியும் நெஞ்சில் ஒலிக்கின்றது.

    கற்பனைக்கு நல்விருந்தாய் விளங்கும் இக்காட்சிக்குப் பொற்பான கவியெழுதிக் காத்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களை வரவேற்று அவர்களின் கவியமுதைப் பருகிவருவோம்!

    *****

    ”பயந்தனை விரட்டு! விதைநெல்லாய்த் தனித்திரு! வியந்திட வாழலாம் மீண்டெழுந்து!” என்று நம்பிக்கையை அள்ளித் தெளித்திருக்கின்றார் கவிதையில் திரு. செண்பக ஜெகதீசன்.

    தனித்திரு விழித்திரு…

    பயண மெல்லாம் பாதியிலே
    பறவை விலங்கினம் வீதியிலே,
    துயரில் வீழ்ந்ததே மனிதயினம்
    தூய்மை தானே தேவையினி,
    பயந்தே யிருந்தால் பலனில்லை
    படகை ஓட்டு தனிமையிலே,
    வியந்திட வாழலாம் மீண்டெழுந்தே
    விதைநெல் லாயிரு தனித்திருந்தே…!

    *****

    ”கருப்பு மனமும் கருப்புப் பணமும் வேண்டாம்; வெள்ளை மனமும் வெள்ளைப் பணமும் கொள்வோம்! வாழ்வினில் வெல்வோம்!” என்று நன்மொழி நவில்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கடல்நீரும் வானும்
    கரையோரப் படகுகளும்
    கரைத்திட்டு மணலும்
    அக்காட்சி காணும் மனிதர்களும்
    கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
    நிறம் மாறித்தான் போயினவோ?
    அதன் உரிய வண்ணம் தெரிவதற்கு
    ஒருபோதும் வாய்ப்பில்லை!

    கருப்பு நிறம் பணத்தளவில்
    கருப்புநிறம் மனத்தளவில்
    என்றொரு எண்ணம் வேண்டாம்
    வெண்மை நிறம் பணத்தளவில்
    வெண்மை நிறம் மனத்தளவில்
    என்றே நாளும் வாழ்ந்திடலாம்
    இனிதே நாளும் உயர்ந்திடலாம்

    *****

    ”பொறாமைத் தீயில் பொசுங்கினாலும் அழுக்காறில்லா ஆன்றோனாய்க் காட்டிக்கொண்டேன்; கயமை உள்ளே களிநடனம் புரிந்தாலும் உத்தமனாய் விடியல்நோக்கிக் காத்திருந்தேன்!” என்று மானுட மனத்தின் முரண்பாடுகளை அருமையாய் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    முரண்பாடு

    மனக்கடலில் ஆசையலைப்
    பேரிரைச்சல் போட்டு ஆட
    முகந்தனிலே அமைதி காட்டி
    மௌனத்தாழ்ப் போட்டிருந்தேன்!

    கயமையது உள்ளிருந்து
    களிநடனம் புரிகையிலே
    விடியல் நோக்கிக் காத்திருக்கும்
    வேடமதைத் தாங்கி நின்றேன்!

    பொறாமைத் தீயில் நாளும்
    பொசுங்கி வெந்து போனாலும்
    அழுக்காறு ஏதுமில்லா
    ஆன்றோனாய்க் காட்டிவைத்தேன்

    பெருவெள்ளம் தாண்டி நின்றும்
    கரைசேர மனமில்லாப் படகாக
    ஆசை நீரில் தத்தளிக்கும்
    தக்கையென உழலுகின்றேன்!

    முரண்பாட்டின் மொத்த உரு
    அசுரனாய் உள் வளர்ந்து நிற்க
    முற்றும் துறந்த முனிவனென
    முகங்காட்டி நிற்கின்றேன்!

    *****

    ”சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து, எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும் ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும் அலைகளும் அசைவுகளும் மட்டும் ஓய்வதில்லை” என்று மனித மனத்தின் சலனத்தைக் கவிதையில் அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. கார்கில் ஜெய்.

    கட்டுமனம், பாய்மனம், உல்லாச மனம் எனப் பலமனம்
    நினைவலைகளில் ஆடிக்கொண்டே இருப்பதனால்  
    எந்த மனமும் ஆழ்வதில்லை; ஆழ்ந்தது மீள்வதில்லை 
    பரந்த வானமும், பரந்த நீலமும் வழிந்து விழுந்தது போலிருக்கும்
    பரந்த கடலில் சிறகை விரித்துப் பறந்த பறவைகள் போல் 
    தேடிச்சென்றது எதுவோ கிடைத்தது எதுவோ
    சூரியன் தூங்கியதும் கரை திரும்பும் மனங்கள்
    சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து 
    அல்லது கசியும் ஓட்டையோடு
    எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும் 
    ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும் 
    அலைகளும் அசைவுகளும்  மட்டும் ஓய்வதில்லை
    அடுத்தநாள் இருக்கும்போதும்…
    கரையேறுதல் எப்போது?

    *****

    தம் எண்ண அலைகளின் உதவியால், படத்தில் காணப்படும், அசையாப் படகுகளையும் அழகாய் அசைத்துக் காட்டியிருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    விடயம்

    கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள்
    கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்
    மட்டுப்படா முனைப்புகளின் விளைவுதரும் மானிகள்
    கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்

    கேள்விக்குறியாய் முதுகுவளையும் செயன்மை
    அன்றாட வாழ்வின் ஆதாரம் தேடும் உயிர்மை
    பொன்னோடம் ஏறிப் பொழுதுபோக்கும் இளமை
    தன்னாவி இனிக்க ஏறத்துடிக்கும் குழுமை

    தாவிச்செல்லும் இளமை வேகம்
    தாங்கிநிற்கும் சுமையின் போகம்
    ஓடநினைக்கும் குழந்தைச் சொந்தம்
    மடுத்துக் காக்கும் தந்தை பந்தம்
    எல்லாம்;
    கண்ணாரக் காணும் காட்சி சொல்லும்
    எண்ணாரத் தொகுப்பாய் அமையும் விடயம்!

    ”கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள், கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்; கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்!” என்று படகுகளின் பண்பையும் பயனையும் நயமாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர், திருமிகு. ச. கண்மணி கணேசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கனவென்னும் கட்டெறும்பு

    கனவென்னும் கட்டெறும்பு

    கவிதை: அண்ணாகண்ணன்
    வாசிப்பு: அண்ணாகண்ணன், ஷைலஜா

    இந்தக் கவிதையை ஒலி வடிவில்  இங்கே கேட் கலாம்.

     

    காய்ச்சலா என்று கேட்டு
    நெற்றியில் கையை வைத்தாய்.
    இல்லாத காய்ச்சல் சூடு
    ஜிவ்வென ஏறக் கண்டேன்.

    வேர்க்குதா என்று கேட்டு
    மேலாக்கால் துடைத்து விட்டாய்.
    இல்லாத வேர்வை பொங்கி
    என்மேனி மூழ்கக் கண்டேன்.

    தூசியா என்று கேட்டு
    இதழ்குவித்து ஊதி விட்டாய்.
    உலகமே தூசியாச்சு
    உன்னிதழ் உலக மாச்சு.

    கோணலா வகிடு என்று
    சீப்பினால் சிலை வடித்தாய்.
    மேகமாய் மிதந்து சென்று
    காற்றுக்குத் தலை கொடுத்தேன்.

    பசிக்குதா என்று கேட்டு
    ஒற்றைவாய் ஊட்டிவிட்டாய்.
    உறுபசி தன்னைத் தின்று
    உயிர்ப்பசி ஊறக் கண்டேன்.

    தூங்கென்று சொல்லிவிட்டுத்
    தூரத்தில் புள்ளி யானாய்.
    கனவென்னும் கட்டெறும்பு – என்
    காலத்தைக் கடிக்குதேடி.

    http://annakannan-kavithaigal.blogspot.com/2006/03/blog-post.html
    ——————————————
    Pic courtesy: https://www.maxpixels.net

    ——————————————

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எழுவகைப் பெண்கள் – 14

    எழுவகைப் பெண்கள் – 14

    அவ்வைமகள்

    தலைப்பின்னல் எனும் மருத்துவச்  சூட்சுமம்

    அந்த இராணுவ அதிகாரிக்கு, தலைமுடி பற்றி, சிலபல நல்ல கேள்விகள் இருந்தன. அவற்றுள் முதலாவதாக மிக முக்கியமானதாக எதை எடுத்துகொள்ளலாம் என அவரையே கேட்டேன். “தலைப் பின்னல்” என்றார்.

    அவர் சொன்னார்: நான் பொதுவாகக் கேள்விப்பட்டது அல்லது வலைத்தளத்தின் மூலம் தெரிந்துகொண்டது என்னவென்றால் பின்னல் சடை போடுவது என்பது உங்களது பாரம்பரிய பழக்கம் என்று. ஏறக்குறைய எங்கள் நாட்டுப் பூர்வீக இந்தியர்கள் கூட நீள்முடி உள்ளவர்கள் – அவர்களில் பெண்கள் ஏன் ஆண்களும் கூட, உங்களைப்போலவே பின்னல் சடை போட்டுக் கொள்பவர்கள். உங்கள் இருவருக்கும் இவ்விஷயத்தில் உள்ள ஒற்றுமை ஆச்சரியப்படவைக்கிறது. ஆப்பிரிக்கப் பெண்களும் பின்னல் போட்டுக் கொள்கிறார்கள் – அவை உங்கள் இரு இந்தியர்களின் பின்னலில் இருந்து மாறுபட்டது. அவர்கள், சிறுசிறு பின்னல்களை பல எண்ணிக்கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

    இந்தத் தலைப்  பின்னலின் பின்னணிதான் என்ன? காரணம் இல்லாமல் பின்னல் ஒரு பண்பாடாக வர வாய்ப்பில்லை என்பது என் கருத்து என்றவர், கொஞ்சம் இழுத்துப் பேசலானார்.

    ஆனால், தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் உங்கள் பெண்களுக்கு  இப்போது இந்திய சாயல் குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. குட்டைமுடியும் விரித்த கூந்தலும் அதிகம் இருக்கிறது, ஆங்காங்கே சில பின்னல் தலைகள் காணப்படுகின்றன அவ்வளவே. அந்தக் குறைந்த பின்னல் தலைகளில் பிரெஞ்சு மாடல் பின்னல்களை அடிக்கடிக் காணமுடிகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியப்பெண்கள் இப்போது ஐரோப்பிய சாயலில் தெரிகிறார்களே தவிர இந்தியர்களாகத் தெரியவில்லையே என்றார்.

    நீங்கள் சரியாகவே எங்களை நோட்டம் விட்டிருகிறீர்கள். Modernism – நவீனம் என்ற பெயரில் எங்கள் சமுதாயம், பாரம்பரிய கலாச்சாரத்திலிருந்து கொஞ்சம் வேகமாகவே விலகுவது வெளிப்படையாகவே தெரிவது உண்மைதான். ஆனால், நன்மை தரக்கூடிய கலாச்சாரப் பழக்கங்களைத் தவிர்ப்பதுதான் வருத்தமான விஷயம் என்றேன்.

    அப்படி என்றால், நான் கருதியது சரிதான்! நீங்கள், தலைப் பின்னல் என்பது நன்மை தரும் வழக்கம் என்று சொல்வதாக உணர்கிறேன் அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.

    உங்கள் பூர்விக இந்தியர்களையும் – இந்தியாவின் இந்தியர்களான எங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது மிகவும் சரியே. பல்வேறு விஷயங்களில் நாங்களும் அவர்களும் ஒருவரே. ஒற்றைப்பின்னல் மட்டுமல்ல; இரட்டைப் பின்னல், எசஸ்கட் மடித்துக் கட்டுதல் என பல்வேறு ஒற்றுமைகள் எங்களுக்கு உண்டு. குழந்தைகள வளர வளர, அவர்களது பருவத்துக்குத் தேவையான படி, பின்னல்கள் மற்றும், கட்டுக்கள் அமைப்போம். அதே போன்ற பழக்கம் செவ்விந்தியர்களிடமும்  இருக்கிறது. பின்னலை, நார் அல்லது பருத்தி நூற்கயிறு,  அல்லது பட்டு நூற்கயிறு போட்டு கட்டும் பழக்கமும் இரு இந்திய வகையினரிடமும் இருக்கிறது (இப்பொழுதெல்லாம் பாலிஎஸ்தர் ரிப்பங்களுக்கும் ரப்பர் பாண்டுகளுக்கும் மாறியாயிற்று) என்று தொடர்ந்தேன்.

    உங்கள் பூர்விகக் குடிகளான இந்தியர்கள் செவ்விந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சிலபல விளக்கங்கள் இருந்தாலும், ஒரு சில வரலாற்று நூல்களில், எம் சமுகமான, தமிழ் சமூகத்திற்கும், செவ்விந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது காட்டப்படுள்ளது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எடுத்துகாட்டாக, வில்லியம் ப்ரெச்காட் (William Prescott ) 1847, எழுதி வெளியிட்டிருந்த “The Conquest of Mexico and Peru” புத்தகத்தில், இதுபற்றிப் பேசியிருப்பதாக நான் அறிந்ததுண்டு. இதனை நினைவு கூர்ந்து, 2014ல் எங்கள் மொழியில் வெளிவந்திருந்த ஒரு முகநூல் (Horror – அமானுஷ்யம்) கட்டுரையும் உண்டு.

    எங்கள் தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைப் பற்றிக் கூறுபவர்கள், “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்குடி என்பார்கள்!”

    அமரிக்க இந்தியர்கள் சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியதாகக் கணக்குண்டு. எங்கள் சமூகத்தினர், பன் நெடுங்காலமாகவே, கடல் கடந்து, உலகெங்கும்,  எங்கெங்கோ பரவிப்போய் ஆட்சிகள் அமைத்தும் குடியேறியும் வாழ்ந்ததாகப் பேச்சு உண்டு. இந்த வரலாறுகள் பல எழுதப்படாமலேயே அழிந்ததும், எழுதியும் அழிந்ததும் உண்டு என்பர். வரலாற்றில், பாண்டித்தியம் இல்லாதவள் என்பதால் இதுபற்றி இப்போது அதிகமாகப் பேசும் தகுதி எனக்கில்லை.

    ஆனால், இங்கு நான் கவனித்த, படித்த, மற்றும் கேட்ட விஷயங்களிலிருந்து மிகப்பல்வேறு ஒற்றுமைகள் எங்கள் இரு இந்தியர்களுக்கும் இருக்கிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும்.

     

     

     

     

     

     

     

       Superstock.com, saved by Pinterest

    https://www.pinterest.com/pin/474355773230225719/

    Pinterest saved by Zarina Jenae

    இங்கே, இரண்டு தற்காலப் பெண்களின் படங்களைப் பார்ப்போம். இடது படம் – செவ்விந்தியப் பெண்ணின் பின்புறம்; வலது புறம் உள்ளது தமிழப் பெண்ணின் பின்புறம். தலைமுடியின் நிறம் மற்று அமைப்பு, பின்னும் விதம், ஆகியன ஒன்றே போல் இருக்கின்றன அல்லவா?

    அடுத்து, இரு இந்திய சமூகங்களுக்கும், தலைமுடி பற்றியுள்ள சிந்தனைகள் மற்றும் அவர்களது, தலைமுடி சார்ந்த பழக்கவழக்கங்கள் பால் நம் கருத்தைச் செலுத்துவோமேயானால், ஆச்சரியத்தக்க ஒற்றுமைகள் இருப்பது உண்மையே.

    இரு இந்திய சமூகங்களுக்குமே தலைமுடி என்பது மிகப் புனிதமான பொருள். அது எத்தனைப் புனிதமானது என்றால், கடவுளுக்காகக் காணிக்கையாகத் தரப்படும் மிக உயர்ந்த தகுதியுடைய ஓரே உடற்பகுதி என்பது அவர்களுடைய கருத்து.

    என் அம்மாவின் பாட்டி, நான் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்தபோது, எனக்குத் தலை பின்னிக்கொண்டே ஒரு நாள் சொல்லியிருக்கிறாள், “தலைமுடிங்கறது – ஒடம்போட முக்கியமான உறுப்பு – ஒவ்வொரு முடிக்கும் தெய்வீக ஆற்றலால, உணர்வு இருக்கு –  கண்ணிருக்கு.  ஒவ்வொரு முடியும் – நீ தூங்கறபோது கூட முழிச்சிகிட்டே இருந்து ஒன்னச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டே இருக்கும். தூங்கற போது ஆபத்துலேர்ந்து ஒன்னைக் காப்பாத்தும். நீ தூங்கிக் கிட்டிருக்க, அப்ப, யாரோ வெளி ஆளுங்க உன்னை நோக்கி வராங்கன்னா, நீ திடுக்குனு எழுந்துடுவ – அதுக்கு முடி தான் கரணம்.”

    “அப்ப, நம்ம முடிக்கு நம்ம வீட்டு ஆளுங்க யாரு – வெளி ஆளுங்க யாருன்னு தெரியுமா?” பாட்டி என்று கேட்டேன். ஆமாம், நீ என்ன பண்றே – மத்தவங்க ஒன்னச் சுத்தி என்னென்ன பண்றாங்கன்னு அது போட்டோ பிடிச்சு வச்சிக்கும்! அதனாலத்தான் முடிக்கு மதிப்பு கொடுத்து பத்திரமா பாதுகாத்து வச்சுக்கணும்.”

    “தலையை நல்லப் படிய வாரி, பின்னல்போட்டு நுனியை மடிச்சிக் கட்டணும், இல்லைனா உடம்புல இருக்க சக்தியெல்லாம் உடம்புலேர்ந்து வெளியே போயிடும்!” என்று சொன்னாள் என்றேன்.

    அந்த ராணுவ அதிகாரி குறுக்கிட்டார்: “தலைமுடி ஒரு உடல் உறுப்பு போன்றதா? கேட்கவே வேடிக்கையாய் இருக்கிறது! நகத்தைப் போல வெட்டி வீசக்கூடிய ஒரு பொருள் – உயிரற்ற ஒரு உதிரிப்பாகம் – முடி இல்லாமலேயே உயிர்வாழவும் முடியும் – அதுவே உதிர்ந்து வேறு கொட்டுகிறது. இப்படியிருக்க, தலைமுடியை ஒரு புனிதப்பொருள் என்று நீங்கள் கூறுவது ஒரு மூடநம்பிக்கை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.” அதே போன்று, தலைமுடிக்கு உணர்வு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது என்றார்.

    தலைமுடி பற்றிய சிலவற்றைப் பார்த்து விட்டு தலைமுடி புனிதமானது என்கிற, இந்தியர்கள் கருத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போமே என்றேன். அவரும் உடன்பட்டார். தொடர்ந்தேன்.

    இப்போது, செவ்விந்தியர்களைக் கவனிப்போம்: “தலை முடி என்பது உடலின் மைய நரம்பு மண்டலத்தின் வெளிப்புறத் தொடர்ச்சி” என்கின்றனர் அவர்கள். இந்தக் காணொளிகளைப் பாருங்கள் என்று காண்பித்தேன்.

    https://www.youtube.com/watch?time_continue=18&v=hxl9PgKGTX4&feature=emb_logo

    அவர் அக்காணொளியைக் கண்டபின், செவ்விந்தியர்களின் கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் – அதற்கு முன்பாக, இந்த இரண்டு படங்களைக் காட்டுகிறேன் – அவற்றையும்  பார்த்தபின்பு நீங்கள் உங்கள் முடிவைச் சொல்லல்லாம் என்றேன். நமது மைய நரம்பு மண்டலத்தின் இரண்டு படங்களை, அவருக்கு வலைதலத்திளிருந்து இரண்டு படங்களை எடுத்துக் காண்பித்தேன். (அவை இங்கே தரப்பட்டுள்ளன).


    https://www.aplustopper.com/nervous-system-sense-organs-icse-solutions-class-10-biology/

    https://www.pnas.org/content/107/48/20610

    அந்த இருபடங்களைப் பார்த்த வினாடி, உணர்ச்சி ததும்ப, மொழி மறந்து, கடவுளே! உன் கைவண்ணத்தின் அற்புதம் தான் என்னே (Lord! What a marvelous handiwork!)  என்றார். ஆமாம்! உங்கள் அம்மவின் பாட்டி என்ன சொன்னார் என்று சொன்னீர்களோ, அதையே அந்த செவிந்தியரும் சொல்கிறாரே! நமக்குள்ளே ஏற்படும் உள்ளணர்வுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டு என்று அவர் ஆணித்தரமாய்ச் சொல்லுகிறாரே! தலைமுடியை பக்தி சிரத்தையோடு மதிக்கவேண்டும் என்கிறாரே!  என்று பூரித்தார் .

    அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, இப்போது. இந்தக் காணொளியில் இன்னொரு செவ்விந்தியர் கூறுவதைக்  கேளுங்கள் – குறிப்பாக, 9.26 – 11.45 என்றேன்.

    https://www.youtube.com/watch?v=OKZI-4GExQk

    பார்த்தார். உண்மையாகவா? நம் தலைமுடியை, நம் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர, பிறர் தொடுவதை அனுமதிக்கக் கூடாதா? அத்தனை சுயமான விஷயமா முடி? என்றவர். இவ்வாறெல்லாம் சொல்வதைப் பிறர் நம்ப மாட்டர்களே அறிவியல் சான்று இல்லாமல் என்றார்.

    ஒருவரது தலைமுடி, அவருக்கென பிரத்யேகமாக கடவுள் தயாரித்து அனுப்பி இருப்பதை இப்போது அறிவியல் உலகம் உறுதிப் படுத்திவிட்டதே என்றேன்.

    விளக்கமாய் சொல்லுங்களேன் என்றார்.

    குற்றவியல் அறிவியல் தட நிபுணர்கள், தலைமுடியை, மைக்ராஸ்கோப்பின், கீழ் வைத்துப் பார்த்து, அந்த முடி எந்த இனத்தவரின் முடி என்று டக்கென்று சொல்லிவிடுவார்கள். தலைமுடியை வைத்துப் பார்த்தால் உலகத்தில் மொத்தம் மூன்றே மூன்று இனங்கள் தாம் உண்டு: வெள்ளையர்கள், ஆப்பிரிக்கர்கள, மங்கோலிய ஆசியர்கள் (அல்லது ஐரோப்பிய ஆசியர்கள்) என்று.

    இவ்வாறு தலைமுடி, தடவியலில், ஆட்களின் இனத்தை அடையாளம் கண்டு பிடிக்க உதவி வந்து கொண்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள், இன்னொரு படி மேலே போய் புதியதொரு தலைமுடி உபாயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால், ஒருவரது முடியின் வேரில் உள்ள டி என் ஏ வைப் பரிசோதித்தால் அந்த நபரது மரபணு புரிந்துவிடும் என்று.

    இதனால் என்ன லாபம் என்று கேட்டீர்கள் என்றால், இனிவரும் காலத்தில் மரபணுப் பரிசோதனைக்கு, இரத்தம் தேவை இல்லை. முடியின் வேர் போதும். (சமீப காலமாக, இரத்த மரபணுப் பரிசோதனைகளில் சில சிக்கல்கள் எழுந்தமையால் மரபணுப் பரிசோதனைக்கென மாற்று வழிகளைக் காணும் நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது). இந்த இணைப்பைப் பாருங்கள் என்று அவரிடம் பகிர்ந்தேன்.

    https://www.mynewlab.com/blog/why-hair-analysis-could-become-an-alternative-to-dna-testing/

    நன்றி தெரிவித்தவர், அதற்கு அடுத்து கேட்டார்: அந்த இரண்டாவது காணொளியில், அந்தச் செவ்விந்தியர் சொன்னது என் கவனத்தை கவர்ந்தது. இனிப்புப் புல் சேர்த்து அவர்கள் தலைப் பின்னல் பின்னிக் கொள்கிறார்கள்  என்று – அது போன்ற பழக்கங்கள் உங்களுக்கும்  உண்டா என்றார்.

    ஆமாம்! வாழைமட்டையில், பூக்களைத் தைத்து, ஜடை தயாரித்து பின்னலின் மேல் தைத்துக் கொள்வது, தாழைமடல்களைக் கொண்டு பின்னலுக்கு மேலே உறை தைப்பது, பின்னலுக்கு மேலே, மூளைப் பகுதியில், நறுமணமும், குளிர்ச்சியும் தரக்கூட்டிய பூக்களையும், தவனம், மரிக்கொழுந்து போன்ற வாசனைச் செடிகளையும் நெருக்கமாகத் தொடுத்து அணிந்து கொள்வது – இவை எல்லாம் எங்களது பழக்கம். நங்கள் வாழும் தட்பவெப்ப நிலை செவ்விந்தியர்களின் தட்பவெப்ப நிலையை விட அதிகம் என்பதால், நாங்கள் இன்னமும் ஒரு படி மேலே போய் தலைமுடியைப் பாதுகாக்கிறோம்.

    மேலும், குஞ்சம் வைத்து, தலைப்பின்னலைப் பின்னி விசேஷ நாட்களில் அணிந்து கொள்வது எங்கள் இளம் பெண்களின் பழக்கம். இவ்வாறு செய்யும்போது, குஞ்சம் சரியாக, இடுப்பில், பிட்டத்திற்கு மேல் இடித்து நிற்கும். முதுகுத்தண்டு வளையாமல், கழுத்துக்கு பலம் சேர்த்து நிமிர்த்தும்  ஒரு எளிய அழகுப் பயிற்சி இது. குட்டையான தலைமுடி உள்ளவர்கள் கூட சவுரி எனப்படும் செயற்கை முடி நீட்பான்களை உபயோகித்து, குஞ்சம் சேர்த்து இவ்வாறு, பின்னலை நீட்டி, பின் இடுப்பின் பள்ளத்தில் இடிக்குமாறு அழகு படுத்திகொள்வார்கள்.  ஒரு தலைமுறைக்கு முன்பு வரையிலும் கூட, இது சர்வ சாதாரண பழக்கமாய் இருந்தது. என்றேன்.

    அப்படியென்றால், உங்கள் பின்னலில் மருத்துவச் சூட்சுமம் உண்டு என்று சொல்லலாமா? என்றார்.

    – (மேலும் பேசுவோம்)

    Share
  • நாலடியார் நயம் – 4

    நாலடியார் நயம் – 4

    நாங்குநேரி வாசஸ்ரீ

     4. அறன் வலியுறுத்தல்

    பாடல் 31

    அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
    புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
    மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
    தவத்தால் தவஞ்செய்யா தார்

    இவ்வீட்டினுள்ளே இருப்பவர்தாம்
    இனிய வாழ்வு வாழ்பவர் என
    அண்ணாந்து நோக்கி வீட்டின்
    அருகே சென்று முயற்சித்தும்
    உயர்ந்தோக்கி நிற்கும் வீட்டின்
    உட்செல்ல இயலாத மன
    வருத்தத்துடன் வாயிலைப் பற்றி
    வருந்தி நிற்பர் எவரெனில்
    தம் முற்பிறப்பிலும் கூட
    தருமம் செய்யாதோர்.

    பாடல் 32

    ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
    போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே – ஓவாது
    நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
    சென்றன செய்வது உரை.

    அளவற்ற செல்வம் விரும்பி
    அதற்காகவே உழைத்து
    பெருஞ்செல்வம் சேர்த்து
    பெருவாழ்வு வாழ்ந்து
    தருமம் செய்ய மறந்து
    தன்னுயிர் நீப்போம்
    என்றுணராது வாழும்
    எம் மடநெஞ்சமே!
    முயற்சித்து வாழ்ந்தாலும்
    முடியும் உன் வாழ்நாட்கள்
    எஞ்சிய நாளிலாவது
    என் செய்வாய்? மறுமைக்காக.

    பாடல் 33

    வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
    மனத்தின் அழியுமாம் பேதை – நினைத்ததனைத்
    தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
    எல்லை இகந்தொருவு வார்

    தீவினையால் பெரும்
    தீங்கு நேரும் காலம்
    பெருமூச்செரிந்து மனதுள்
    பெரும் கவலையுற்று
    அழிவர் அறிவில்லாதோர்.
    அத்தீவினைப் பயனை
    மனதுள் நினைந்து அது
    முற்பிறப்பில் செய்த
    பாவத்தின் பலன் என
    பக்குவாய் ஏற்று
    அமைதியாய் அனுபவிக்கும்
    அறிவுடையோர் பிறவித்
    துன்பத்தின் எல்லையைத்
    துரிதமாய்க் கடப்பர்.

    பாடல் 34

    அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
    பெரும் பயனும் ஆற்றவே கொள்க – கரும்பூர்ந்த
    சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
    கோதுபோல் போகும் உடம்பு.

    பெறுதற்கரிய இம்மனித உடலை
    பெற்றோம் புண்ணிய பயனால்
    பெற்ற அவ்வுடலைக் கொண்டு
    பெருந்தருமம் செய்க!
    கரும்பின் சாறுபோல்
    காலத்திற்கும் உதவும் அது
    உயிரற்று அழியும் உடம்போ
    உதவாத சக்கை போலாம்.

    பாடல் 35

    கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
    துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
    வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
    வருங்கால் பரிவ திலர்

    ஆட்டிய கரும்பின் சாற்றில்
    ஆகிய வெல்லக்கட்டியை
    முற்காலத்தில் கொண்டோர்
    முன்னே கிடக்கும் சக்கை
    தீப்பற்றி எரியும் நேரம்
    துன்புற்று வருந்தார்
    நல்லறம் செய்து
    நல் பிறவிப்பயன் உற்றவர்
    எமன் வரும் நேரம்
    எண்ணித் துன்பம்கொள்ளார்.

    பாடல் 36

    இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
    பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
    ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
    மருவுமின் மாண்டார் அறம்

    இன்றைக்கோ அன்றைக்கோ
    என்றைக்கோ என எண்ணாது
    எப்போதும் எமன் உம் பின்னால்
    நிற்பதாய் நினைத்துக்கொண்டு
    நீக்கிவிடுங்கள் தீச்செயல்களை
    முடிந்த வரையில்
    புகழுடைப் பெரியோர்
    போற்றிய தர்மத்தைப்
    புரிந்து வாழ்வீர்.

    பாடல் 37

    மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
    எத்துணையும் ஆற்றப் பலவானால் – தொக்க
    உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
    கிடந்துண்ணப் பண்ணப் படும்

    மனிதப் பிறவியால்
    மண்ணுலகில் ஆகும் செயல்
    ஆராய்ந்து நோக்கின்
    அளவிற் பலவாம்
    நரம்பும் தசையும் கூடிய
    நம் உடம்பையே கவனித்து
    வாழ்ந்திராது சுவர்க்கம்
    வாய்த்து இன்பம் நுகர
    நல்லறம் செய்து
    நலமாய் வாழ்வீர்.

    பாடல் 38

    உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
    இறப்ப நிழற்பயந் தாஅங்கு – அறப்பயனும்
    தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
    வான்சிறிதாப் போர்த்து விடும் .

    மிகச்சிறு ஆலம்விதை
    மரமாகி நிழல்தருவது போல்
    அறத்தால்வரும் பயன்
    அற்பமாய் இருப்பினும்
    தகுதியுடையவர் கையில்
    தங்கிச் சேர்ந்தால்
    ஆகாயமும் அற்பமாகுமளவு
    அளவிற்பெரியதாகி
    அதனை மூடிப் போர்த்தும்.

    பாடல் 39

    வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
    வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
    வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
    வைகலை வைத்துணரா தார். .

    தினந்தோரும் நாள் கழிவதை
    திரும்பத்திரும்பப் பார்த்திருந்தும்
    அறிந்துகொள்ளாதார்
    ஆயுட்காலம் தொடர்ந்து
    குறைவதை உணராது
    நிலையாக இருப்பதாய்
    நினைத்து இன்புறுவர்.

    பாடல் 40

    மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
    ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
    ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
    நீட்டித்து நிற்கும் எனின்

    இழிவான காரியம் செய்து
    இனிய உணவு ஊட்டுவதனால்
    இவ்வுடம்பு உறுதியுடன்
    இனிதே நீண்ட நாள் நிலைக்குமெனும்
    இக்கூற்று உண்மையானால்
    மானமெனும் அருமை
    மிக்க அணிகலன் நீக்கி
    கை ஏந்துதல் எனப்படும்
    கீழான அவமானத்துடன்
    பெரும்பாலும் வாழ்வேன்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 76 (மன்றுளே)

    சேக்கிழார் பாடல் நயம் – 76 (மன்றுளே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மன்றுளே  திருக்கூத்   தாடி  அடியவர்  மனைகள் தோறும்
    சென்றவர்  நிலைமை  காட்டும்  தேவர்கள்  தேவர் தாமும்
    வென்றஐம்   புலனால் மிக்கீர்  விருப்புடன்  இருக்க  நம்பால்
    என்றுமிவ்   விளமை  நீங்காது  என்றெழுந்   தருளி   னாரே !

    தில்லைத் திருநகரில் தாம் இளமையில் எடுத்துக்கொண்ட சூளுறவால் தம் மனைவியாரை மனத்தாலும் தீண்டாமல்  வாழ்ந்த  திருநீலகண்டர் ‘திருத்தொண்டர்  வரலாற்றில் முதலிடம் பெற்ற தனியடியார்’ என்ற சிறப்பைப் பெற்றார். அவரை ஆட்கொண்ட காமத்தை வென்று, தம்மை ஆட்கொண்ட  இறைவனிடமே தம் மனம், மொழி, செயல்களை முழுமையாகச் செலுத்தி ‘அற்புறு புணர்ச்சியின்மை அயல் அறியாமல்‘ வாழ்ந்தார். இறைவன் திருவோடு தந்து செய்த சோதனையால் தம் மனைவியாருடன்  குளத்தில் மூழ்கித்  தம் நேர்மையை உறுதி செய்தார்.

    அவரும் மனைவியாரும் ஒரு தண்டினைப் பற்றிக் கொண்டு திருக்குளத்தில் மூழ்கி எழுந்த போது, முதுமைக்குரிய அறிகுறிகள் மறைந்து, இளமை வடிவுடன்  விளங்கினர். இத்தனைக்  காலம் இருந்த முதுமை நீங்கி , இளமைக்  கோலம் பெற்றபோது, உள்ளமும் திருந்தி இறையருளை நாடும் நினைவுடன் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மூழ்கிய திருக்குளம்  இப்போதும் ‘’இளமை யாக்கினார் குளம்‘’ என்ற பெயருடன் விளங்குகிறது! திருநீலகண்டரின் உள்ளம் தடுமாறக் காரணமாக அமைந்தது தேவைக்கு மேல் சேர்த்த செல்வமே என்பதற்கும், எப்போதும் அவருள்ளத்தில் சுடர்விட்ட பக்தி   மேலெழுந்து அவர் இன்பியல் வாழ்வைப் புறக்கணித்த மாற்றத் துக்கும்  அவர்தம் மனைவியார் செய்த எச்சரிக்கையும், திருநீலகண்டத்தின் பால் அவர் வைத்த பெரும்பற்றும்  காரணமாயின!

    ஆகவே கணவனும் மனைவியும் இணைந்து செய்யும் செயலே அவர்கள் வாழ்வின் வளத்துக்கும், நலத்துக்கும் அடிப்படையாகும் என்ற உண்மையைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார். மீண்டும் இளமை பெற்ற உடலும், எழுச்சி பெற்ற  உள்ளமும். இடைவிடாது கூறும் திருநீலகண்டம் என்ற உறையும் உடைய செவ்விய அடியார்களாக  அவர்கள்  ஊரினர் போற்ற விளங்கினர். ஆகவே, திருவம்பலத்திலே திருக்கூத்து ஆடி, அடியார்களது மனைகள் தோறும் போய் அவர்களது உண்மை நிலையினை உலகறியக் காட்டுகின்ற தேவ தேவராகிய சிவபெருமானும்“, (நாயனாரையும் மனைவியாரையும் நோக்கி) “வென்று அடிப்படுத்தப் பட்ட ஐம்புலன்களினாலே மிக்கு விளங்குபவர்களே! நீங்கள் இப்போது எமதருளால் மீளப் பெற்றஇந்த இளமை என்றும் நீங்காதநிலையுடன் எம்மிடத்திலே இருப்பீர்களாக!“ என்று அருளிச்செய்து தமது நிறைவு நிலையினுள்ளே எழுந்தருளிப்போயினார். என்ற பொருளில் இத்திருப்பாடல் அமைந்தது.

    இப்பாடலில் இறைவன் கூத்தாடும் மன்றம் நம் மனமே என்பதும், அவர் ஆடும் திருக்கூத்து நம் உள்ளத்தின் இயல்பே என்பதும், அத்திருக்கூத்தின் அசையா அசைவாக நம் மனம் அசையம் என்பதும் , ‘’மன்றுளே திருக்கூத்தாடி ‘’ என்ற தொடர் விளக்குகிறது.

    இறையவன் திருக்கூத்தாடும் போதே அடியார் உள்ளம் தோறும், அவர் தம் இல்லந்தோறும் எழுந்தருளுபவன் என்பதை , ‘’அடியவர் மனைகள் தோறும் சென்று ‘’ என்ற தொடர் விளக்குகிறது. அடியவர்கள் இருக்குமிடந்தோறும் தாமே சென்று வலிய அவர்களை ஆட்கொள்ளுந் திறத்தாலே உலகத்தையும் அறிவுறுத்தி ஆட்கொள்வது எமது பெருமானது அருட்பெருக்கின் இயல்பு. உயிர்களை வழிப்படுத்தி ஆட்படுநெறியிற் செலுத்தும். இதுவே அவரது ஐந்தொழில் திருக்கூத்தினியலும் பொருளுமாம்.  இதனை இப்புராணமே

    “திருமனையி லொருவழியே
    தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம்
    உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் றாமணை வார்.“

    என்றும்  பாடுகிறது. மேலும் திருவாசகம்

    ‘’இங்கு நம்   இல்லங்கள்  தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப்  பொற்பாதம்  தந்தருளுஞ்  சேவகனை ‘’ என்றும் ,

    ‘’பந்தணை  விரலியும்  நீயும்  நின்னடியார்
    பழங்குடில்  தொறும்எழுந் தருளிய பரனே‘’ என்றும் பாடியதை நினைவுகூர்ந்தே சேக்கிழார் இப்பாடலை எழுதியுள்ளார். அவ்வடியார் நிலையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் தேவர்களின் தலைவராகிய இறைவனே அடியாரின் முன் எழுந்தருளி, ‘’ஐம்புலனையும்  வென்று மற்றையோரினும் மேலாகிச் சிறந்த வர்களே ‘’ என்று அழைத்தார்.

    ஐம்புலன்களும் வெல்லப்பட்டமையால் இவர்கள் சொல்வழி அவை ஏவல் கேட்டு அமைந்து நின்றன. ஏனையோர்களை, அவை, தம்மைப் பின்பற்றி நடக்குமாறு கீழ்ப்படுத்தித் தாம் மேலோங்கி நிற்பன. ஆதலின் ஏனையோர்களது நிலைகள் கீழ்ப்பட்டனவே. இவர்களோ ஐம்புலனை வென்றதனால் நிலைமையில் மேலோங்கியவர்கள்.

    “தம்மை யைந்து புலனும் பின்செல்லுந் தகையார்“

    –  என்று  சண்டீசர்புராணம்  கூறுகின்றது. “ஐந்தவித்தான்“ என்ற குறளில் புலன்களிற் செல்கின்ற அவாவைந்தனையும் அடக்கினான் எனப் பரிமேலழகரும், நுகர்ச்சியாகிய ஐந்தினையும் துறந்தான் என மணக்குடவரும் உரை விரித்தது காண்க.

    எனவே புலன்களைந்தும் நின்றன; ஆயின் அவற்றிற் செல்லும் அவாவும், அது காரணமாக வரும் நுகர்ச்சியும் இல்லையாயின என்க. இங்கு நாயனாரிடத்தும் மனைவியாரிடத்தும் ஐம்புலனும் இருந்தன. மெய்யுறு புணர்ச்சி ஒன்றொழிய இல்வாழ்வாரும் அடியாரும் செய்யும் எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றினர். புலன்கள் தம் செயலற்று இவர்கள் வசமாய்த் தாழ்ந்து நின்றன என்பதாம். ஐம்புலன்களையும் ஒடுக்கி அசைவற்றிருக்கும் யோகநிலை வேறு; அவற்றை அடிப்படுத்தித் தம்வழி நிறுத்தி அவற்றின்கட் செல்லும்  அவாவை இறை வழிபாட்டிற்செலுத்தி நிற்றல் வேறு.

    “வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறும்
    சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி“

     என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இதனையே இந்நூல் ,

    ‘’வென்றஐம்   புலனால் மிக்கீர்  விருப்புடன்  இருக்க  நம்பால்
    என்றும்  இவ்விளமை  நீங்காது’’

    என்று பாடுகிறது. இருக்க – வியங்கோள் – இருப்பீர்களாக. இவ்விளமை நீங்காது விருப்புடன் நம்பால் என்றுமிருக்க என்றியைத்துக்கொள்க. என்றும் மாறுபாடின்றி ஒரு தன்மையனாகவுள்ள இறைவன்பா லிருப்பவர்களே என்றும் மாறுபடாத இளமையோடிருக்க வல்லவர்கள். காலகாலனது சார்பினாலே அவர்கள் காலத்தை – மரணத்தை – வென்றவர்களாகலான் என்பது. அன்றியும் ஏனையோர் யாவரையும் சாகச்செய்யும் விடத்தை உண்டு சாவாமலும் மூவாமலும் இருக்கும் சிவபெருமானொருவனே மூவாத இளமை தர வல்லவன் என்றலுமாம். இறைவனை  “சாவாமூவாச் சிங்கமே“ –  என்று  திருப்புகலூர்த் திருத்தாண்டகம்  பாடுகிறது.

    விஷ்ணு, பிரமன், இந்திரன், சந்திரன் முதலிய தேவர்களும் அவ்வவர் சரிதங்களால் அறியக் கிடக்கின்றபடி, ஐம்புலன் வெல்லமாட்டாது ஒவ்வோர் குற்றங்களுக்காளாயினர்; இங்கு நமது நாயனாரும் மனைவியாருமே புலன் வென்று மிக்கார்கள் என்பார்,  இவ்விடத்துத் தேவர்கள் தேவன் என்ற பெயராற் கூறினார் என்ற குறிப்புமாம். இதுவறை “நின்றா“ ராகிய அவரை இருக்க என்றார் என்ற குறிப்பு நினைந்து மகிழத்தக்கது..

    இப்பாடலால் அடியாரின் ஆழ்மனத்தே இருந்த இறைப்பற்று தூண்டப் பெற்று மேலெழுந்ததும், அதற்கு இல்லறத்தாரின் திடமான பக்தியே காரணம் என்பதும், ஐம்புலனையும் அடக்கி வாழும் இல்லறத்துறவே சிறந்தது என்பதும், இது தேவர்களை விடவும் உயர்வை நமக்கு அளிக்கும் என்பதும், இதனை நாமும் பயின்று உயரலாம் என்பதும், ‘’ஐம்புலனை வென்றார் வீரமே வீரம்!’’ ஆதலால் உண்மையான  புலனடக்கம் வெற்றி தரும் என்பதும் புலனாகின்றன!

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-19

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-19

    தி. இரா. மீனா

    ஜோதர மாயண்ணா

    பிஜ்ஜள மன்னனிடம் யானைப் படைத் தலைவராகப் பணியாற்றியவர்.” சோமநாதாலிங்கா “என்பது இவரது முத்திரையாகும். சொல் செயல் தூய்மை, குருவின் பெருமை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

    “பிற பெண்கள் பார்வதியெனச் சொல்லி
    நம்மை நடத்திச் சென்றது குரு வார்த்தை.
    என்னைச் சரணனின் மனைவியென
    நடத்திச் சென்றது குருவசனம்.
    மனைவியர் அனைவரும் குருவின் சதியரென
    நடத்திச் சென்றது குருவசனம்
    குருவின் வார்த்தை என்னை வழி நடத்திச் சென்றது
    குருவின் வார்த்தை என்னை அமைதிப்படுத்தியது
    குருவின் வார்த்தை என்னை
    சம்பு சோமநாதலிங்கத்தோடு ஐக்கியமாக்கியது“

    டக்கேய பொம்மண்ணா

    இவருக்கு டக்கேய மாரய்யா என்றொரு பெயருமுண்டு. நாட்டுப்புறக் கலைஞர். சிவசரணராவதற்கு முன்பு மாரியம்மனைத் தலைமேலேந்தி துடியை இசைத்துக் கொண்டு இரந்து பிழைப்பு நடத்தியவர். ”காலாந்தக பீமேஸ்வரலிங்க“ இவரது முத்திரையாகும். வசனங்களில் நாட்டுப்புறக் கலைத் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.

    1. “கையில் ஆயுதமேந்திப் போரிடும் போது
    போராடுவது மனமா, கையா, ஆயுதமா ?
    அங்கம், இலிங்கம் கூடும் போது
    உறவாவது அங்கமா, இலிங்கமா, ஆன்மாவா?
    இதை அறிந்தால்
    காலாந்தக பீமேஸ்வரலிங்கத்தை அறிந்ததாம். “

    2. “ஆற்று வெள்ளத்தில் படகோட்டியுடன் உதவியுடன்
    அவன் பின் செல்வது போல
    உடலின் புலன்கள் என்ற ஆற்று நீரில்
    இலிங்கமெனும் படகோட்டியின் துணையோடு
    பின் தொடர வழி காட்டுவாய்
    காலாந்தக பீமேஸ்வரலிங்கமே”

    3. “சிற்பியின் கையில் கல் நிலையழிந்து அடையாளமானது
    குருவின் கையில் பாறை அழிந்து இலிங்கமானது
    சரணரின் சிந்தனையில் இலிங்கம் நிலையானது
    சிந்தை புலனோடிணைந்து காலாந்தக பீமேஸ்வரனானது“

    4. “மனைவியின் பண்பைக் கணவன் பார்க்க வேண்டுமேயன்றி
    கணவன் பண்பை மனைவி பார்க்கலாமா? எனல் தவறு.
    சதியின் தொடுதல் பதிக்குக் கேடல்லவா?
    பதியின் தொடுதல் சதிக்குக் கேடல்லவா?
    அங்கமொன்றின் கண்கள் இரண்டில்
    ஒன்று பழுதானால், எது பழுதானதெனப் புரிந்தால்
    காலாந்தக பீமேஸ்வரலிங்கத்தைப் புரிந்து கொள்ளலாம்”

    டோகர கக்கய்யா 

    மாளவத்திலிருந்து கல்யாண் வந்தவர். தலித் பரம்பரையைச் சேர்ந்தவர். தோல் பதனிடும் காயகம் இவருடையது கல்யாணில் புரட்சி நடந்த போது  சென்ன பசவரோடு ஏர் கலப்பையைக் கொண்டு சென்றவர். கக்கேரியில் ஐக்கியமானவர். அங்கு இவர் பெயரில் சமாதி, ஏரி ஆகியனவுண்டு. “அபிநவ மல்லிகார்ச்ஜூனா” இவரது முத்திரையாகும்.

    1.“குலத்தின் குறைவு தங்கள் கைபட்டு மாயமானது
    சாதியாலான தீட்டு உங்களைத் தொட்டபின்பு மாயமானது
    இலிங்கத்தின் தீண்டல் ஐம்புலன்களை மாயமாக்கியது
    அந்தரங்கத்திற்குள் ஞானவெளி புகுந்து அதை மாயமாக்கியது
    சம்சார பந்தம் நீக்கியதால் மனஇருள் மாயமானது
    அபிநவ மல்லிகார்ஜூனனே
    உன்னைத் தொட்டு நானும் மாயமானேன்.”

    2.“ஓ, இலிங்கத் தந்தையே !
    தாழ்குலத்தில்  பிறக்கவைத்தாய்
    உன்னைத் தொடாமல் வருந்தினேன்
    கை தொடாவிட்டாலும் மனம் தொடாதோ?
    அபிநவ மல்லிகார்ஜூனனே“

    தளவார காமிதேவய்யா

    கல்யாண் நகரைச் சேர்ந்த இவரது காயகம் கிராமத் தலையாரி. “காமஹரப்பிரிய ராமநாதா “இவரது முத்திரையாகும்.

    1. “காளையாக இருந்துகொண்டு ஏர் சுமக்கமறுப்பது முறையா ?
    சேவகனாக இருந்துகொண்டு ஆணைகேட்க மறுப்பது முறையா?
    சரணனாகி குருவைக் கடைபிடிக்காமலிருப்பது முறையா ?
    காமஹரப்பிரிய இராமநாதனே”

    2. “வியாபாரத்தில் ஆதாயம் இல்லையென்றால்
    அது வியாபரமாகுமா? அதைச் செய்வதேன்?
    குருலிங்க ஜங்கமத்துக்கு புகழ் கருதிச் செய்வது
    மூலமில்லாமல் ஆதாயம் தேடுவது போன்றதே
    காமஹரப்பிரிய இராமநாதனே”

    துருகாஹி ராமண்ணா

    சரணர்களின் வீட்டுப் பசுக்களை மேய்க்கும் காயகம் இவருடையதாகும். ”கோபதிநாத விஸ்வேஸ்வரலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும். தொழில் அனுபவத்தை ஆத்ம அனுபவத்தோடு சேர்த்துக் கூறுவதாக  வசனங்களின் போக்குள்ளது.

    “ஒரு கம்பு கொண்டு வெவ்வேறு பசுக்களைக்
    கட்டுப்படுத்துவது போல வெவ்வேறுபட்டவர்களை
    ஏக சிந்தனையில் வைத்து, மும்மலம் கொண்டவரை விலக்கி
    இறைவனோடு தன்னை இணைப்பது
    கோபதிநாத விஸ்வேஸ்வரலிங்கம் அறிவதற்கு வழி.”

    தெலுகேச மசணய்யா

    பசுக்களை மேய்க்கும் காயகம் இவருடையதாகும். இவரது பெயரிலுள்ள தெலுகேச அடைமொழி இவர் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ”தெலுகேசுவரா“ என்பது இவரது முத்திரையாகும்.

    1.“அழகானவனாக இருப்பின் மகளிர் அவனைப் போற்றவேண்டும்
    கொடையாளனாக இருப்பின் யாசிப்போர் போற்றவேண்டும்
    வீரனாக இருப்பின் பகைவர் போற்ற வேண்டும்
    நீசன் தன்னையே போற்றிக் கொள்வான்
    ஒருவன் தெலுகேஸ்வரனின் பக்தனாயின்
    தேவன் புகழ்வதோடு உலகமும் பாராட்டும்“

    2.“அங்கத்தின் மீது இலிங்கமிருப்பது
    குருவின் கருணையைப் பெற்றதற்கு சாட்சி.
    அங்கத்தின் மீது இலிங்கம் இல்லையெனில்
    குருவின் கருணை கிடைப்பது எப்படி?
    இலிங்க தீட்சை இல்லையெனில் குருவின் கருணையுண்டோ?
    ஒருவன் அம்மாதிரியான பேச்சுக்கள் கேட்கக் கூடாது
    உடலில் இலிங்கம் அணிவது ஒழுக்கமாகும்
    இல்லையெனில் ஒழுக்கமில்லையென்பேன் தெலுகேஸ்வரனே”

    [தொடரும்]

    Share
  • தீர்வறியும்  சார்வரி

    தீர்வறியும்  சார்வரி

    அண்ணாகண்ணன்
     
    இடரெழுந்து இடையறாது இடறவைக்கும் போதிலும்
    தொடரிழந்து தொடர்பிழந்து தொடருமின்னல் ஆயினும்
    படரிடுக்கண் படையெடுத்து, திசைமறைத்து நிற்பினும் 
    சுடரெடுத்து, புதிரவிழ்த்து, துயரொழித்து மீட்டுவோம்.
     
    சிறகடக்கி, சிறுவளைக்குள் சிரமொடுங்கி நிற்பினும்
    வறுமையோடு வெறுமையோடு தனிமைசூழ நிற்பினும்
    நிறமிழந்து நிதியிழந்து கதியிழந்த போதிலும்
    அறமிழக்க வில்லையின்னும் அறமிழக்க வில்லையே!
     
    அச்சமென்னும் கிருமியெங்கள் உச்சிமீது ஏறுதோ!
    நச்செரித்து ஆலகாலம் உட்செரித்து வெல்லுவோம்
    உச்சரிக்கும் தமிழெடுக்க, மூச்சிறுக்கம் நேர்ப்படும்
    ஆச்சரிய அனுபவங்கள் ஆயிரமாய் ஏற்படும்!
     
    விலகலென்ற காட்சியிலும் கலகலென்று தோன்றுவோம்
    வலிகளுண்டு என்றபோதும் வழிகளுண்டு காட்டுவோம்
    இளவலோடும் முறுவலோடு அளவளாவும் நாள்வரும்
    உலகளாவி இனிதுலாவி உளம்குலாவிப் பாடுவோம்!
     
    தீர்வறியும் கூர்வரியும் சீர்வரியும் ஏந்துவோம்
    நேர்வரியில் வேர்வரியில் பூவிரிய நீந்துவோம்
    ஊர்விரியும் பார்விரியும் உளம்விரியும் மேலுமே
    சார்வரியில் நலம்திகழும், நல்லின்பம் கூடுமே! 
    ———————————————————————————————-
     
     
    ———————————————————————————————-
    அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழரின் நாக்கு!

    தமிழரின் நாக்கு!

    ஏறன் சிவா 

    மீன்புலிவில் வேந்தருடை
    மெய்யுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர்
    வான்முட்டும் வரலாற்றை
    வகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — இங்கே
    காண்!தமிழர் அறிவியலைக் கணத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — பாரில்
    நான்தமிழன் எனப்பெருமை
    நவில்வதற்குத் தமிழர்நா கூசாது!

    வெல்நாட்டுப் போர்வெற்றியை
    விளக்குதற்குத் தமிழர்நா கூசாது!  — அவர்
    வல்கோட்டைக் கட்டியதை
    வாயுரைக்கத் தமிழர்நா கூசாது! — அணைக்
    கல்கோட்டைக் காலத்தைக்
    கணித்துரைக்கத் தமிழர்நா கூசாது! – தமிழ்ச்
    சொல்கோட்டைப் பெரிதென்றுச்
    சூளுரைக்கத் தமிழர்நா கூசாது!

    நெல்விளைக்கும் வேளாண்மையின்
    நெறியுரைக்கத் தமிழர்நா கூசாது! — கருங்
    கல்விளைக்கும் சிற்பத்தின்
    கலையுரைக்கத் தமிழர்நா கூசாது! — அங்கே
    பல்துறையின் பண்புகளைப்
    பகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — திரு
    வள்ளல்களின் கொடைத்திறனின்
    வளமுரைக்கத் தமிழர்நா கூசாது!

    பொன்வளத்துக் குன்றேறிப்
    புகழுரைக்கத் தமிழர்நா கூசாது! — தங்கள்
    மண்வளத்து எழிலுரைக்க
    மணித்துளியும் தமிழர்நா கூசாது! — இரு
    கண்போன்ற இலக்கியத்தின்
    கடலுரைக்கத் தமிழர்நா கூசாது! — வாழும்
    தென்மொழியின் திறமுரைக்கத்
    தீநடுவும் தமிழர்நா கூசாது!

    அம்பாலே உலகாண்ட
    அழகுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர்
    தம்அறமும் மறம்;திறமும்
    சாற்றுதற்குத் தமிழர்நா கூசாது! — கொண்ட
    அன்பாலே இழந்ததனை
    அடித்துரைக்கத் தமிழர்நா கூசாது! — ஆனால்
    தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில்
    தமிழரோடு தமிழ்ப்பேசத் தான்கூசும்!

    Share