படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
ஆழியும் ஓடங்களும் அவற்றின் அருகிருக்கும் மனிதர்களுமாக ‘ஆழிசூழ் உலகை’க் கறுப்பு வெள்ளை நிழற்படமாக்கி நம் பார்வைக்குத் தந்திருக்கின்றார் திரு. முகம்மது ரபி. இப்படத்தை படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு ராமலக்ஷ்மி. படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி!
”வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே” எனும் பழைய திரைப்படப் பாடல் நினைவலைகளில் மோதுகின்றது.
கூடவே…” நீர்வழிப் படூஉம் புணைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம்” எனும் கணியன் பூங்குன்றனின் மணிமொழியும் நெஞ்சில் ஒலிக்கின்றது.
கற்பனைக்கு நல்விருந்தாய் விளங்கும் இக்காட்சிக்குப் பொற்பான கவியெழுதிக் காத்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களை வரவேற்று அவர்களின் கவியமுதைப் பருகிவருவோம்!
*****
”பயந்தனை விரட்டு! விதைநெல்லாய்த் தனித்திரு! வியந்திட வாழலாம் மீண்டெழுந்து!” என்று நம்பிக்கையை அள்ளித் தெளித்திருக்கின்றார் கவிதையில் திரு. செண்பக ஜெகதீசன்.
தனித்திரு விழித்திரு…
பயண மெல்லாம் பாதியிலே
பறவை விலங்கினம் வீதியிலே,
துயரில் வீழ்ந்ததே மனிதயினம்
தூய்மை தானே தேவையினி,
பயந்தே யிருந்தால் பலனில்லை
படகை ஓட்டு தனிமையிலே,
வியந்திட வாழலாம் மீண்டெழுந்தே
விதைநெல் லாயிரு தனித்திருந்தே…!
*****
”கருப்பு மனமும் கருப்புப் பணமும் வேண்டாம்; வெள்ளை மனமும் வெள்ளைப் பணமும் கொள்வோம்! வாழ்வினில் வெல்வோம்!” என்று நன்மொழி நவில்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.
கடல்நீரும் வானும்
கரையோரப் படகுகளும்
கரைத்திட்டு மணலும்
அக்காட்சி காணும் மனிதர்களும்
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
நிறம் மாறித்தான் போயினவோ?
அதன் உரிய வண்ணம் தெரிவதற்கு
ஒருபோதும் வாய்ப்பில்லை!
கருப்பு நிறம் பணத்தளவில்
கருப்புநிறம் மனத்தளவில்
என்றொரு எண்ணம் வேண்டாம்
வெண்மை நிறம் பணத்தளவில்
வெண்மை நிறம் மனத்தளவில்
என்றே நாளும் வாழ்ந்திடலாம்
இனிதே நாளும் உயர்ந்திடலாம்
*****
”பொறாமைத் தீயில் பொசுங்கினாலும் அழுக்காறில்லா ஆன்றோனாய்க் காட்டிக்கொண்டேன்; கயமை உள்ளே களிநடனம் புரிந்தாலும் உத்தமனாய் விடியல்நோக்கிக் காத்திருந்தேன்!” என்று மானுட மனத்தின் முரண்பாடுகளை அருமையாய் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
முரண்பாடு
மனக்கடலில் ஆசையலைப்
பேரிரைச்சல் போட்டு ஆட
முகந்தனிலே அமைதி காட்டி
மௌனத்தாழ்ப் போட்டிருந்தேன்!
கயமையது உள்ளிருந்து
களிநடனம் புரிகையிலே
விடியல் நோக்கிக் காத்திருக்கும்
வேடமதைத் தாங்கி நின்றேன்!
பொறாமைத் தீயில் நாளும்
பொசுங்கி வெந்து போனாலும்
அழுக்காறு ஏதுமில்லா
ஆன்றோனாய்க் காட்டிவைத்தேன்
பெருவெள்ளம் தாண்டி நின்றும்
கரைசேர மனமில்லாப் படகாக
ஆசை நீரில் தத்தளிக்கும்
தக்கையென உழலுகின்றேன்!
முரண்பாட்டின் மொத்த உரு
அசுரனாய் உள் வளர்ந்து நிற்க
முற்றும் துறந்த முனிவனென
முகங்காட்டி நிற்கின்றேன்!
*****
”சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து, எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும் ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும் அலைகளும் அசைவுகளும் மட்டும் ஓய்வதில்லை” என்று மனித மனத்தின் சலனத்தைக் கவிதையில் அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. கார்கில் ஜெய்.
கட்டுமனம், பாய்மனம், உல்லாச மனம் எனப் பலமனம்
நினைவலைகளில் ஆடிக்கொண்டே இருப்பதனால்
எந்த மனமும் ஆழ்வதில்லை; ஆழ்ந்தது மீள்வதில்லை
பரந்த வானமும், பரந்த நீலமும் வழிந்து விழுந்தது போலிருக்கும்
பரந்த கடலில் சிறகை விரித்துப் பறந்த பறவைகள் போல்
தேடிச்சென்றது எதுவோ கிடைத்தது எதுவோ
சூரியன் தூங்கியதும் கரை திரும்பும் மனங்கள்
சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து
அல்லது கசியும் ஓட்டையோடு
எக்கருவி எந்தச் சூத்திரம் கொண்டும்
ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும்
அலைகளும் அசைவுகளும் மட்டும் ஓய்வதில்லை
அடுத்தநாள் இருக்கும்போதும்…
கரையேறுதல் எப்போது?
*****
தம் எண்ண அலைகளின் உதவியால், படத்தில் காணப்படும், அசையாப் படகுகளையும் அழகாய் அசைத்துக் காட்டியிருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
விடயம்
கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள்
கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்
மட்டுப்படா முனைப்புகளின் விளைவுதரும் மானிகள்
கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்
கேள்விக்குறியாய் முதுகுவளையும் செயன்மை
அன்றாட வாழ்வின் ஆதாரம் தேடும் உயிர்மை
பொன்னோடம் ஏறிப் பொழுதுபோக்கும் இளமை
தன்னாவி இனிக்க ஏறத்துடிக்கும் குழுமை
தாவிச்செல்லும் இளமை வேகம்
தாங்கிநிற்கும் சுமையின் போகம்
ஓடநினைக்கும் குழந்தைச் சொந்தம்
மடுத்துக் காக்கும் தந்தை பந்தம்
எல்லாம்;
கண்ணாரக் காணும் காட்சி சொல்லும்
எண்ணாரத் தொகுப்பாய் அமையும் விடயம்!
”கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள், கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்; கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்!” என்று படகுகளின் பண்பையும் பயனையும் நயமாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர், திருமிகு. ச. கண்மணி கணேசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.