அண்ணாகண்ணன்
 
இடரெழுந்து இடையறாது இடறவைக்கும் போதிலும்
தொடரிழந்து தொடர்பிழந்து தொடருமின்னல் ஆயினும்
படரிடுக்கண் படையெடுத்து, திசைமறைத்து நிற்பினும் 
சுடரெடுத்து, புதிரவிழ்த்து, துயரொழித்து மீட்டுவோம்.
 
சிறகடக்கி, சிறுவளைக்குள் சிரமொடுங்கி நிற்பினும்
வறுமையோடு வெறுமையோடு தனிமைசூழ நிற்பினும்
நிறமிழந்து நிதியிழந்து கதியிழந்த போதிலும்
அறமிழக்க வில்லையின்னும் அறமிழக்க வில்லையே!
 
அச்சமென்னும் கிருமியெங்கள் உச்சிமீது ஏறுதோ!
நச்செரித்து ஆலகாலம் உட்செரித்து வெல்லுவோம்
உச்சரிக்கும் தமிழெடுக்க, மூச்சிறுக்கம் நேர்ப்படும்
ஆச்சரிய அனுபவங்கள் ஆயிரமாய் ஏற்படும்!
 
விலகலென்ற காட்சியிலும் கலகலென்று தோன்றுவோம்
வலிகளுண்டு என்றபோதும் வழிகளுண்டு காட்டுவோம்
இளவலோடும் முறுவலோடு அளவளாவும் நாள்வரும்
உலகளாவி இனிதுலாவி உளம்குலாவிப் பாடுவோம்!
 
தீர்வறியும் கூர்வரியும் சீர்வரியும் ஏந்துவோம்
நேர்வரியில் வேர்வரியில் பூவிரிய நீந்துவோம்
ஊர்விரியும் பார்விரியும் உளம்விரியும் மேலுமே
சார்வரியில் நலம்திகழும், நல்லின்பம் கூடுமே! 
———————————————————————————————-
 
 
———————————————————————————————-
அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

———————————————————————————————-

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தீர்வறியும்  சார்வரி

  1. வணக்கம்! நான் என் முகநூல் பதிவுகளை நிறுத்தி ஒரு திங்கள் ஆகிவிட்டது. அகத்திணைக் காட்சிகளின் சித்திரிப்புக்கான நேரம் என்று பலரும் கருதி அது பற்றிய பதிவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். என் மானுடச் சமுதாயம் திசையறியாப் பறவைபோல் திகைத்து நிற்கிற இந்த விஷப் பொழுதில் அத்தகைய செயல்கள் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாகவே எனக்கு இசைவில்லையென்றால் விலகிவிடுவேன். யாருக்கும் துன்பமில்லையல்லவா? திரு.கண்ணன் படித்துக் காட்டிய பாடலைக் கேட்டேன். இது கவிதையா? இசைப்பாடலா? தொடைவிகற்பங்கள் சரியாக இருக்கிறதா? எந்த வகைப் பாடல்? என்ன இனம்? ஒற்றுப் பிழை இருக்கிறதா? சித்திரை ஒன்று தமிழ் வருடந்தானா? அறுபது வருடங்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் இல்லையே? வடமொழிச் சொற்கள் கலந்துள்ளனவா? என்பன போன்ற ஆய்வுகள் எல்லாம் இந்தப் பாடலில் இந்தப் பொழுதில் நடத்துவது அறியாமை என்பது என் கருத்து. ஒரு மென்மையான மனத்தின் ஆதங்க அதிர்வுகள். நம்பிக்கையை முன்னெடுக்கும் நகர்வுகள்.

    உணர்ச்சி, கற்பனை, வடிவம், உள்ளடக்கம் என்னும் இலக்கியக் கட்டுமானங்கள் இருக்கட்டும். மனித சமுதாயம் இருந்தால்தானே? வீடு இருந்தால்தானே ஓடு மாற்றலாம்! வீடு நிலைப்பதற்காகப் பாடிய பாட்டு இது.

    “இடரெழுந்து இடையறாது இடறவைக்கும் போதிலும்
    தொடரிழந்து தொடர்பிழந்து தொடருமின்னல் ஆயினும்”

    என்னும் வரிகளில்எம் மானுடத்தின் அகவேதனையையும்

    “சிறகடக்கி, சிறுவளைக்குள் சிரமொடுங்கி நிற்பினும்
    வறுமையோடு வெறுமையோடு தனிமைசூழ நிற்பினும்”

    என்னும் வரிகளில் எம் மானுடத்தின் நடப்பியல் துன்பத்தையும்

    “வலிகளுண்டு என்றபோதும் வழிகளுண்டு காட்டுவோம்”

    என்னும் வரியில் மனஉறுதி மற்றும் நம்பிக்கையையும்

    “நச்செரித்து ஆலகாலம் உட்செரித்து வெல்லுவோம்”

    என்னும் வரியில் சிவ தத்துவத்தையும் தன்னையும் அறியாமல் பதிவு செய்திருக்கும் இந்த உள்ளத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி! இது திறனாய்வுக்குரிய பாடலன்று. அனைவருக்குமான கூட்டு வழிபாடு. வல்லமை பெறுவோம்! மங்கலம் பெறுவோம்!

  2. அருமையான பதிவு. கருத்தாழமும் காலம் சார்ந்த உணர்வுகளும் கலந்த சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.

    க. பாலசுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *