சேக்கிழார் பாடல் நயம் – 76 (மன்றுளே)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
மன்றுளே திருக்கூத் தாடி அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்காது என்றெழுந் தருளி னாரே !
தில்லைத் திருநகரில் தாம் இளமையில் எடுத்துக்கொண்ட சூளுறவால் தம் மனைவியாரை மனத்தாலும் தீண்டாமல் வாழ்ந்த திருநீலகண்டர் ‘திருத்தொண்டர் வரலாற்றில் முதலிடம் பெற்ற தனியடியார்’ என்ற சிறப்பைப் பெற்றார். அவரை ஆட்கொண்ட காமத்தை வென்று, தம்மை ஆட்கொண்ட இறைவனிடமே தம் மனம், மொழி, செயல்களை முழுமையாகச் செலுத்தி ‘அற்புறு புணர்ச்சியின்மை அயல் அறியாமல்‘ வாழ்ந்தார். இறைவன் திருவோடு தந்து செய்த சோதனையால் தம் மனைவியாருடன் குளத்தில் மூழ்கித் தம் நேர்மையை உறுதி செய்தார்.
அவரும் மனைவியாரும் ஒரு தண்டினைப் பற்றிக் கொண்டு திருக்குளத்தில் மூழ்கி எழுந்த போது, முதுமைக்குரிய அறிகுறிகள் மறைந்து, இளமை வடிவுடன் விளங்கினர். இத்தனைக் காலம் இருந்த முதுமை நீங்கி , இளமைக் கோலம் பெற்றபோது, உள்ளமும் திருந்தி இறையருளை நாடும் நினைவுடன் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மூழ்கிய திருக்குளம் இப்போதும் ‘’இளமை யாக்கினார் குளம்‘’ என்ற பெயருடன் விளங்குகிறது! திருநீலகண்டரின் உள்ளம் தடுமாறக் காரணமாக அமைந்தது தேவைக்கு மேல் சேர்த்த செல்வமே என்பதற்கும், எப்போதும் அவருள்ளத்தில் சுடர்விட்ட பக்தி மேலெழுந்து அவர் இன்பியல் வாழ்வைப் புறக்கணித்த மாற்றத் துக்கும் அவர்தம் மனைவியார் செய்த எச்சரிக்கையும், திருநீலகண்டத்தின் பால் அவர் வைத்த பெரும்பற்றும் காரணமாயின!
ஆகவே கணவனும் மனைவியும் இணைந்து செய்யும் செயலே அவர்கள் வாழ்வின் வளத்துக்கும், நலத்துக்கும் அடிப்படையாகும் என்ற உண்மையைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார். மீண்டும் இளமை பெற்ற உடலும், எழுச்சி பெற்ற உள்ளமும். இடைவிடாது கூறும் திருநீலகண்டம் என்ற உறையும் உடைய செவ்விய அடியார்களாக அவர்கள் ஊரினர் போற்ற விளங்கினர். ஆகவே, திருவம்பலத்திலே திருக்கூத்து ஆடி, அடியார்களது மனைகள் தோறும் போய் அவர்களது உண்மை நிலையினை உலகறியக் காட்டுகின்ற தேவ தேவராகிய சிவபெருமானும்“, (நாயனாரையும் மனைவியாரையும் நோக்கி) “வென்று அடிப்படுத்தப் பட்ட ஐம்புலன்களினாலே மிக்கு விளங்குபவர்களே! நீங்கள் இப்போது எமதருளால் மீளப் பெற்றஇந்த இளமை என்றும் நீங்காதநிலையுடன் எம்மிடத்திலே இருப்பீர்களாக!“ என்று அருளிச்செய்து தமது நிறைவு நிலையினுள்ளே எழுந்தருளிப்போயினார். என்ற பொருளில் இத்திருப்பாடல் அமைந்தது.
இப்பாடலில் இறைவன் கூத்தாடும் மன்றம் நம் மனமே என்பதும், அவர் ஆடும் திருக்கூத்து நம் உள்ளத்தின் இயல்பே என்பதும், அத்திருக்கூத்தின் அசையா அசைவாக நம் மனம் அசையம் என்பதும் , ‘’மன்றுளே திருக்கூத்தாடி ‘’ என்ற தொடர் விளக்குகிறது.
இறையவன் திருக்கூத்தாடும் போதே அடியார் உள்ளம் தோறும், அவர் தம் இல்லந்தோறும் எழுந்தருளுபவன் என்பதை , ‘’அடியவர் மனைகள் தோறும் சென்று ‘’ என்ற தொடர் விளக்குகிறது. அடியவர்கள் இருக்குமிடந்தோறும் தாமே சென்று வலிய அவர்களை ஆட்கொள்ளுந் திறத்தாலே உலகத்தையும் அறிவுறுத்தி ஆட்கொள்வது எமது பெருமானது அருட்பெருக்கின் இயல்பு. உயிர்களை வழிப்படுத்தி ஆட்படுநெறியிற் செலுத்தும். இதுவே அவரது ஐந்தொழில் திருக்கூத்தினியலும் பொருளுமாம். இதனை இப்புராணமே
“திருமனையி லொருவழியே
தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம்
உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் றாமணை வார்.“
என்றும் பாடுகிறது. மேலும் திருவாசகம்
‘’இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை ‘’ என்றும் ,
‘’பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே‘’ என்றும் பாடியதை நினைவுகூர்ந்தே சேக்கிழார் இப்பாடலை எழுதியுள்ளார். அவ்வடியார் நிலையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் தேவர்களின் தலைவராகிய இறைவனே அடியாரின் முன் எழுந்தருளி, ‘’ஐம்புலனையும் வென்று மற்றையோரினும் மேலாகிச் சிறந்த வர்களே ‘’ என்று அழைத்தார்.
ஐம்புலன்களும் வெல்லப்பட்டமையால் இவர்கள் சொல்வழி அவை ஏவல் கேட்டு அமைந்து நின்றன. ஏனையோர்களை, அவை, தம்மைப் பின்பற்றி நடக்குமாறு கீழ்ப்படுத்தித் தாம் மேலோங்கி நிற்பன. ஆதலின் ஏனையோர்களது நிலைகள் கீழ்ப்பட்டனவே. இவர்களோ ஐம்புலனை வென்றதனால் நிலைமையில் மேலோங்கியவர்கள்.
“தம்மை யைந்து புலனும் பின்செல்லுந் தகையார்“
– என்று சண்டீசர்புராணம் கூறுகின்றது. “ஐந்தவித்தான்“ என்ற குறளில் புலன்களிற் செல்கின்ற அவாவைந்தனையும் அடக்கினான் எனப் பரிமேலழகரும், நுகர்ச்சியாகிய ஐந்தினையும் துறந்தான் என மணக்குடவரும் உரை விரித்தது காண்க.
எனவே புலன்களைந்தும் நின்றன; ஆயின் அவற்றிற் செல்லும் அவாவும், அது காரணமாக வரும் நுகர்ச்சியும் இல்லையாயின என்க. இங்கு நாயனாரிடத்தும் மனைவியாரிடத்தும் ஐம்புலனும் இருந்தன. மெய்யுறு புணர்ச்சி ஒன்றொழிய இல்வாழ்வாரும் அடியாரும் செய்யும் எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றினர். புலன்கள் தம் செயலற்று இவர்கள் வசமாய்த் தாழ்ந்து நின்றன என்பதாம். ஐம்புலன்களையும் ஒடுக்கி அசைவற்றிருக்கும் யோகநிலை வேறு; அவற்றை அடிப்படுத்தித் தம்வழி நிறுத்தி அவற்றின்கட் செல்லும் அவாவை இறை வழிபாட்டிற்செலுத்தி நிற்றல் வேறு.
“வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறும்
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி“
என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இதனையே இந்நூல் ,
‘’வென்றஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ்விளமை நீங்காது’’
என்று பாடுகிறது. இருக்க – வியங்கோள் – இருப்பீர்களாக. இவ்விளமை நீங்காது விருப்புடன் நம்பால் என்றுமிருக்க என்றியைத்துக்கொள்க. என்றும் மாறுபாடின்றி ஒரு தன்மையனாகவுள்ள இறைவன்பா லிருப்பவர்களே என்றும் மாறுபடாத இளமையோடிருக்க வல்லவர்கள். காலகாலனது சார்பினாலே அவர்கள் காலத்தை – மரணத்தை – வென்றவர்களாகலான் என்பது. அன்றியும் ஏனையோர் யாவரையும் சாகச்செய்யும் விடத்தை உண்டு சாவாமலும் மூவாமலும் இருக்கும் சிவபெருமானொருவனே மூவாத இளமை தர வல்லவன் என்றலுமாம். இறைவனை “சாவாமூவாச் சிங்கமே“ – என்று திருப்புகலூர்த் திருத்தாண்டகம் பாடுகிறது.
விஷ்ணு, பிரமன், இந்திரன், சந்திரன் முதலிய தேவர்களும் அவ்வவர் சரிதங்களால் அறியக் கிடக்கின்றபடி, ஐம்புலன் வெல்லமாட்டாது ஒவ்வோர் குற்றங்களுக்காளாயினர்; இங்கு நமது நாயனாரும் மனைவியாருமே புலன் வென்று மிக்கார்கள் என்பார், இவ்விடத்துத் தேவர்கள் தேவன் என்ற பெயராற் கூறினார் என்ற குறிப்புமாம். இதுவறை “நின்றா“ ராகிய அவரை இருக்க என்றார் என்ற குறிப்பு நினைந்து மகிழத்தக்கது..
இப்பாடலால் அடியாரின் ஆழ்மனத்தே இருந்த இறைப்பற்று தூண்டப் பெற்று மேலெழுந்ததும், அதற்கு இல்லறத்தாரின் திடமான பக்தியே காரணம் என்பதும், ஐம்புலனையும் அடக்கி வாழும் இல்லறத்துறவே சிறந்தது என்பதும், இது தேவர்களை விடவும் உயர்வை நமக்கு அளிக்கும் என்பதும், இதனை நாமும் பயின்று உயரலாம் என்பதும், ‘’ஐம்புலனை வென்றார் வீரமே வீரம்!’’ ஆதலால் உண்மையான புலனடக்கம் வெற்றி தரும் என்பதும் புலனாகின்றன!
