Tag: எம். ஜெயராம சர்மா

  • அவர் இரங்க வேண்டுவமே !

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 
    கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத்
    தமிழ்நாடு வந்தாராம்
    தமிழர் வெறியாய் ஓடித்திரிவதைத்
    தெரிவினில் கண்டாராம்
    காரணம் புரியா நிலையில் கடவுள்
    கைகட்டி நின்றாராம் !

    தோரணம் கட்டித் தமிழர்கள் எல்லாம்
    துடிப்புடன் நின்றாரும்
    ஆரது ஆட்சியைப் பிடிக்கிற தென்று
    அடிபட்டுக் கொண்டாராம்
    வாயிலே வந்ததை வார்த்தைகள் கொட்டி
    வாக்குகள் கேட்டனராம் !
    தோழமை என்றவர் சொல்லிலே சொல்லி
    சொத்தெலாம் குவித்தனராம்
    நாளைய வளர்ச்சி எதனையும் எண்ணா
    நல்லதைச் சுருட்டினராம்
    வேரொடு களைவோம் ஊழலை என்றவர்
    விண்ணென உயர்ந்தனராம்
    வியர்வையில் நின்றவர் அத்தனை பேருமே
    விக்கித்து நின்றனராம் !
    மதுவினை ஒழிப்போம் என்றுமே சொன்னவர்
    மதுக்கடை திறந்தனராம்
    மதியினை இழந்து மற்றவர் நின்றிட
    மரமென இருந்தனராம்
    நீதியைக் கையில் எடுத்துமே நின்று
    நிட்டூரம் செய்தனராம்
    சாதியைக் காட்டி சமயத்தைக் காட்டிய
    சரித்திரம் படைத்தனராம் !

    வேதனையில் மக்கள் வாழ
    விதம்விதமாய் வீடு கட்டி
    காதலுடன் கார் வாங்கி
    கணக்கின்றிப் பணம் பதுக்கி
    உலக வங்கி அனைத்திலுமே
    உழைப்பின்றி வந்த பணம்
    உபயோகப் படும் என்று
    ஒதுக்கி வைப்பார் பக்குவமாய் !
    படிப்பறியார் உடுப்பறியார் படுத்திருக்க இடமறியார்
    பசியாற வழியின்றி பரிதவிக்கும் நிலையினிலே
    துடித்தெழுந்து ஓடிவந்து துயர்துடைக்கும் மனமின்றி
    அடித்தெழுந்து பேசுகின்றார் ஆட்சியிலே அமர்வதற்கு !
    காந்திபோட்டி போடவில்லை கவிதாகூர் விரும்பவில்லை
    சாந்திமனம் கொண்டவர்கள் சண்டைதனை விரும்பவில்லை
    சரியான தேர்தலெனின் சண்டைக்கே இடமில்லை
    சனநாயகம் தளைக்கச் சரியான வழிசமைப்போம் !
    குத்து வெட்டு அத்தனையும்
    சுத்தி வந்து பார்த்துவிட்டு
    சத்தியமாய் தமிழ் நாட்டை
    தான் நினைப்ப தில்லையென
    உத்தமராம் எம் கடவுள்
    உடனடியாய்ச் சென்று விட்டார்
    அத்தனைபேர் மனம் மாற
    அவர் இரங்க வேண்டுவமே !

    Share
  • பாவலரே வாழ்த்துகின்றேன் !

     

     

         எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    barathidasan
     பாரதியைப் பின்பற்றி பாட்டெழுதிக் குவித்தவரே
     பாரதிரத் தமிழ்மொழியை பார்த்துவிட நினைத்தவரே
     தூரநோக்குப் பார்வையுடன் துணிவுகொண்டு உரைத்தவரே
     பாரதியால் வாழ்த்துப்பெற்ற பாவலரே வாழ்த்துகின்றேன்.!

      சீர்திருத்தம் பலசொல்ல சிறப்பான உவமைகண்டாய்
      ஆருக்கும் அஞ்சாமல் அற்புதமாய் கவிபடைத்தாய்
      போரொக்கும் சொற்கொண்டு புத்துணர்வுக் கவிதந்தாய்
      புதுவைநகர் கொடையாக புறப்பட்டு வந்தனையே !

                       சுப்பு      ரத்தினமாய்
                       சுந்தரத்   தமிழ்பாடி
                       பாரதி       தாசனாய்
                       பரிணாமம் பெற்றாயே
                       எப்பவுமே நாம்படிக்க
                       இங்கிதமாய் கவிதந்த
                       எங்களது கவிமன்னா
                       என்றுமே வாழுகிறாய் !

                         பாரதியின் வாரிசாய்
                         பலகவிஞர் வந்தாலும்
                         பாரதி தாசனாய்
                         நீமட்டும் விளங்குகிறாய்
                         பாரதியால் ஆசிபெற்ற
                         பைந்தமிழின் காவலனே
                         ஊரெல்லாம் உன்பாட்டை
                         உணர்ச்சியுடன் படிக்கின்றார் !

                         தமிழை உயிரென்றாய்
                         தமிழை அமுதென்றாய்
                         தமிழை இனிதென்றாய்
                         தமிழே நிகரென்றாய்
                         தமிழைப் படிப்போர்க்கு
                         தரமான கவிதந்தாய்
                         அமுதான தமிழ்க்கவியே
                         அழிவென்றும் உனைக்கில்லை !

    Share
  • சித்திரையை வரவேற்போம் !

     எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 
     
    unnamed
     
                    உள்ளமெலாம் உவகை  கொள jeya
                               ஊரெல்லாம் மகிழ்ச்சி பொங்க
                    வெள்ளமென மக்கள் எலாம் 
                                வீதியிலே நிறைந்து  நிற்க
                     உள்ளூரின் கோவில் தனில்
                               ஊர்வலமாய் தேர் அமர்ந்து
                      வண்ண மயில் வாகனார்
                                  வடிவாக வலம் வருவார் !
     
                       எண்ணம் எலாம் இனிப்பாக
                                   எல்லோரும் இணைந்து அங்கே
                       இழுத்து நிற்போம் தேரதனை
                                        எங்கள் ஊரே திரண்டுநிற்கும் 
                        புத்தாடை தனை உடுத்தி
                                       புதுத்தெம்பு மனத் திருத்தி
                       அத்தனை பேர் கைகளுமே
                                       அத்தேரின் வடம் பிடிக்கும் !
     
               எத்தனையே கனவுகளை எல்லோரும் மனத்திருத்தி
               ஏங்கிய முகத்தோடு இறைவனையே பார்த்துநிற்பர்
               எதிர்காலம் இன்பமாய் இருப்பதற்கு அருளிடென
               எம்பெருமான் முருகனது தேரிழுப்பார் எல்லோரும் !
     
               சித்திரையின் தேரோட்டம் சீக்கிரமாய் வரவெண்ணி
               அத்தனைபேர் உள்ளங்களும் ஆவலாய் காத்திருக்கும்
                முத்திக்கு வித்தான முழுமுதலின் தேரிழுத்தால்
                எத்திக்கும் எவர்வாழ்வும் எழிலோங்கி விளங்கிடுமே !
     
               ஊரெல்லாம் கூடிநின்று தேரிழுக்கும் சித்திரையை
               உவப்புடனே வரவேற்று உளம்மகிழ்ந்து நின்றிடுவோம்
               யாரோடும் பகைகொள்ளா நல்லமனம் தருகவென
               மால்மருகன்  முருகனிடம் மனமார வேண்டிநிற்போம் !
     
               வெளிநாட்டில் உள்ளவரும் விரும்பித்தேர் இழுக்கின்றார் 
               வேலவனே வினைதீர்த்து விரும்பியதைக் கொடுத்திடென
               சீலமுடன் நாம்வாழ சித்திரையை வரவேற்போம் 
               ஞாலமதில் நாம்சிறக்க நற்குமரா அருள்தருவாய் !
     
               எத்திக்கு இருந்தாலும் சித்திரையை வரவேற்போம்
               அத்தனைபேர் வாழ்வினிலும் ஆனந்தம் பெருகிடவே
               சொத்தாக இருக்குமெங்கள் சொந்தங்கள் சேர்ந்திடவே
               சித்திரையில் சிரித்தென்றும் சிறப்புடனே இருந்திடுவோம் !
     
               மூத்தோரை அரவணைத்து முத்தங்கள் கொடுத்திடுவோம்
               சாத்திரங்கள் பார்த்தாலும் சரியாகச் செயற்படுவோம் 
               ஏற்றிவைத்த பாரமெல்லாம் இறக்கிவைக்க முயன்றிடுவோம்
               எங்கள்வாழ்வில் சித்திரையால் இனிமைவர வேண்டிநிற்போம் !
     
              புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புதுமைபல பார்த்தாலும்
              நலம்விளைக்கும் சித்திரையை நாம்மறத்தல் நன்றல்ல 
              நமதுகலை பண்பாடு நம்மனத்தில் இருந்துவிடின்
              நல்லதொரு சித்திரையை நாளெல்லாம் பார்த்திடலாம் ! 
     
               சித்திரையில் சிரித்திடுவோம் சிந்தனையை வளர்த்திடுவோம்
               அத்தனைபேர் மனங்களிலும் அன்புவரச் செய்திடுவோம் 
               சத்தியத்தைக் கடைப்பிடிப்போம் சன்மார்க்க வழிசெல்வோம்
               சித்திரையைச் சிறப்பாக்க சேர்ந்துநிற்போம் வாருங்கள் !
    Share
  • ஆனந்தம்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    அழகானபெண் பார்க்க
    அனைவருக்கும் ஆனந்தம்
    அடுக்குமாடித் தனதாக்க
    அப்படியோர் ஆனந்தம்
    நினைப்பதெல்லாம் நடந்துவிடின்
    நித்தமுமே ஆனந்தம்
    ஆனந்தம் தனையடைய
    அனைவருமே துடிக்கின்றார்!

    ஆனந்தம் எனநினைக்கும்
    அத்தனையும் வந்தாலும்
    அப்போதும் எவர்மனமும்
    ஆனந்தப் படுவதில்லை
    அடையாத பலவற்றை
    அடையவில்லை எனுமேக்கம்
    ஆனந்த வழியினிலே
    அஸ்திரமாய் வந்துநிற்கும்!

    வீடுபல வாங்கிடுவார்
    விதம்விதமாய் உடுத்திடுவார்
    ஆடுமாடு பண்ணையெல்லாம்
    அவர்சொத்து ஆகிநிற்கும்
    கார்காராய்க் குவித்திடுவார்
    காணிபல வாங்கிடுவார்
    கணக்கின்றி வங்கிகளில்
    காசையெல்லாம் போட்டிடுவார்!

    அரசியலும் செய்திடுவார்
    அறிஞர்சபை ஏறிடுவார்
    அதிகாரம் அத்தனையும்
    அவரெடுத்துக் கொண்டிடுவார்
    என்றாலும் அவர்மனத்தில்
    ஏக்கமே நிறைந்திருக்கும்
    ஆனந்தம் என்பதங்கே
    அடியோடு மறைந்திருக்கும்!

    போதுமென்ற மனமிருந்தால்
    பூத்துவிடும் ஆனந்தம்
    பொருள்வந்து குவிவதிலே
    பூத்துவிடா ஆனந்தம்
    ஆனந்தம் தனைத்தேடி
    அலைந்தோடிப் போகாதீர்
    அகமளவில் நிறைவுகொளல்
    அதுவன்றோ ஆனந்தம்!

     

     

    Share
  • பாவலரே வாழ்த்துகின்றேன் !

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    images
    பாரதியைப் பின்பற்றி பாட்டெழுதிக் குவித்தவரே
    பாரதிரத் தமிழ்மொழியை பார்த்துவிட நினைத்தவரே
    தூரநோக்குப் பார்வையுடன் துணிவுகொண்டு உரைத்தவரே
    பாரதியால் வாழ்த்துப்பெற்ற பாவலரே வாழ்த்துகின்றேன்.!

    சீர்திருத்தம் பலசொல்ல சிறப்பான உவமைகண்டாய்
    ஆருக்கும் அஞ்சாமல் அற்புதமாய் கவிபடைத்தாய்
    போரொக்கும் சொற்கொண்டு புத்துணர்வுக் கவிதந்தாய்
    புதுவைநகர் கொடையாக புறப்பட்டு வந்தனையே !

    சுப்பு ரத்தினமாய்
    சுந்தரத் தமிழ்பாடி
    பாரதி தாசனாய்
    பரிணாமம் பெற்றாயே
    எப்பவுமே நாம்படிக்க
    இங்கிதமாய் கவிதந்த
    எங்களது கவிமன்னா
    என்றுமே வாழுகிறாய் !

    பாரதியின் வாரிசாய்
    பலகவிஞர் வந்தாலும்
    பாரதி தாசனாய்
    நீமட்டும் விளங்குகிறாய்
    பாரதியால் ஆசிபெற்ற
    பைந்தமிழின் காவலனே
    ஊரெல்லாம் உன்பாட்டை
    உணர்ச்சியுடன் படிக்கின்றார் !

    தமிழை உயிரென்றாய்
    தமிழை அமுதென்றாய்
    தமிழை இனிதென்றாய்
    தமிழே நிகரென்றாய்
    தமிழைப் படிப்போர்க்கு
    தரமான கவிதந்தாய்
    அமுதான தமிழ்க்கவியே
    அழிவென்றும் உனைக்கில்லை !

    Share
  • சிவாகமங்களும் திருமுறைகளும் புலப்படுத்தும் வாழ்வியல் (2)

    எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS  

       முன்னாள் கல்வி இயக்குனர் … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

        

    திருமுறைகள் வாழ்வியலுடன்

         திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட இடமே திருக்கோவில்தானே ! திருமுறைகள் பாடப்பட்ட இடமும் திருக்கோவில்கள் தானே ! திருமுறை பாடிய அருளாளர்களை இறைவன் ஆட்கொண்ட இடமும் கோவில் அல்லவா? எனவே கோவிலின் இன்றியமையாமை திருமுறைகளால் தெட்டென வெளிப் படுகிறதல்லவா?

         பக்தி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணே வாழ்வியலோடுதான் இணைகின் றது.அடியார்களை அரவணைத்து நாயன்மார்கள் ஊர்கள் தோறும் சென்று அங்குள்ள கோவில்களைத் துப்பரவு செய்து அங்குள்ள இறைவனைத் துதி பாடிப் பக்தியையும் பக்தி இயக்கத்தையும் வளர்த்தார்கள் அல்லவா?சமூக மயப்படுத்தலில் சம்பந்தப் பெருமானும் , அப்பர் சுவாமிகளும், சுந்தரப் பெருமானும் ஈடுபடாவிட்டால் எங்கள் சமயம் இந்தளவு உயர்ச்சியைப் பெற்றிருக்குமா? எங்களது திருக்கோவில்களும் இன்றுவரை நிலை பெற்றிருக் கத்தான் முடியுமா ? இவை யாவற்றுக்கும் காரணம் சமயத்தையும் கோவிலை யும் வாழ்வியலோடு இணைத்தமை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

          ” தோடுடைய செவியன் ” என்னும் முதல் வாக்கைச் சம்பந்தப் பெருமான் வாயிலிருந்து வரச் செய்த இடமே சீர்காழியில் அமைந்த தோணியப்பர் கோவில்தானே ! ” பித்தாப் பிறை சூடி ” எனச் சுந்தரரை இறைவன் பாடுமாறு பணித்த இடமும் திருக்கோவில் அல்லவா ? ” கூற்றாயின வாறு விலக்ககலீர்” என அப்பரைப் பாடவைத்த இடமும் திருக்கோவில்தானே ! எனவே திருமுறை கள் கோவிலை மைய மாகக்கொண்டே வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல  கோவிலை சமூக நிறுவனமாக்கி வாழ்வியலோடு இணைத்த வகையிலும் திருமுறைகளின் பங்கு மிகவும் முக்கியமானதென்றே கொள்ளவேண்டும்.

          ” நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா

              நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு ” ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் சென்றால் நிலை பெறலாம் என்னும் உறுதியை அப்பர் வாழ்வியல் கருத்தாகக் கோவிலுடன் இணைத்துக் காட்டியிருப்பது நோக்கத் தக்கதாகும்.

          ” மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் ” என்று மக்களுக்கு நம்பிக்கை தருமாறு கூறி – அதற்கு ” கழுமல வளநகர் ” பெருமானை வழிபட வேண்டும்.அவரே என்றும் துணையிருப்பார் என அக்கோவிலையே காட்டி நிற்கிறார் சம்பந்தப் பெருமான்.

          இவையெல்லாம் உளவியல் சார்ந்த வாழ்வியலாகக் கோவிலுடன் இணைகிறதல்லவா?

         அன்றாடம் வீட்டைப் பெருக்குகின்றோம்.கழுவிச் சுத்தம் செய்கின்றோம். வீட்டில் விளக்கு ஏற்றி மகிழ்கின்றோம். பூக்களை பறிக்கின்றோம்.அவற்றை மாலையாக்கிச் சூடி இன்பம் அடைகின்றோம்.இவையெல்லாம் வாழ்வோடு ஒன்றிவிட்ட சம்பவங்கள். இவற்றையெல்லாம் இறைவன் உறைகின்ற கோவிலை நோக்கித்திருப்பினால் எப்படி இருக்கும் என அப்பர் நினைத்தார். அந்த நினைப்புத்தான் சரியைத் தொண்டாகி திருமுறை வாயிலாக மக்கள் வாழ்வியலுடன் இணைந்து வந்தது.

          நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

               நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்

          புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

               பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

           தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

                  சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்

            அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்

                ஆரூரா என்றென்றே அலறா நில்லே

     

         இது வாழ்வியலைக் கோவிலுடன் சேர்த்துவிட்ட மிகச்சிறந்த உத்தி எனலாம்.இந்த உத்தியை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். எவராலும் செய்யக்கூடிய இலகுவான வழிபாட்டு முறையும் நல்லதொரு சரியைத் தொண்டும் எனலாம்.இதற்கு எந்தவிதமான படிப்பபோ, அறிவு   நுணுக்கமோ தேவையில்லை.

         மனத்தை உடையவன் மனிதன்.அந்த மனிதனுக்கு நண்பனும் எதிரியும் அவனுடைய மனம்தான்.இதனால் மனத்தை ஒருநிலைப் படுத்தினால் வாழ்வு சிறப்படையும் என்பது உளவியலாகும்.இந்த உளவியல் மக்களது வாழ்வியல்

    ஆகும்.மன ஒருநிலைப் பாட்டுக்குக் கோவில்கள் முக்கியம் என்பதை திரு முறைகள் வாயிலாக அருளாளர்கள் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

            இசை மனிதனை இசைவிப்பது. அந்த இசையினைக் கோவில்கள் தோறும் அரூளாளர்களான திருமுறை தந்தவர்கள் பரப்பினார்கள். இறைவனை இசைவடிவினனாகக் கண்டார்கள்.இதனால் திருமுறைகளைப் பண்ணோடு கோவில்கள் தோறும் பாடிப்பரவினார்கள்.தாம் பாடியதோடு மட்டுமே நின்று விடாமல் தம்மோடு மக்களையும் இணைத்துக்கொண்டே பாடினார்கள். இசையொடு பாடப் படும்பொழுது மனமானது அந்த இடத்திலேயே லயித்து நின்றுவிடும். இந்த உளவியலைத் திருமுறையாளர்கள் உணர்ந்து கோவிலுடன் இசையை இணைத்து அதனை வாழ்வியல் நெறியாக்கி விட்டனர்.                                                                              

         ” ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே “

         ” இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் – இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் “

       ” குழல் ஒலி யாழ் ஒலி கூத்தொலி ஏத்தொலி – எங்கும் குழாம் பெருகி ”       ” சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் – தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ” “விழவோடொலி மிகு தகுமாடக சாலை – முழவோடிசை நடமுன் செயு ” “வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர ” –    என்றெல்லாம் இசையோடு கோவில் வழிபாட்டை இணைத்து அதற்குள் மக்களையும் உள்வாங்கிய திருமுறைகளின் வாழ்வியல் நோக்கானது வியந்து போற்றத் தக்கதாக இருக்கிறதல்லவா ?                                                                        வாழ்வியலுடன் ஆகமங்களும் திருமுறைகளும் இணையும் பாங்கு                                              

        பக்தி இலக்கியம் என்பது தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழி யிலும் நாம் கண்டுகொள்ளமுடியாது.அந்தப் பக்தி இலக்கியமானது கோவிலையும் , வழிபாட்டையும் , இறைவனது அருட்திறத்தையும் புலப் படுத்தி நிற்பதாகும். இந்தப் பக்தி இலக்கியத்தில் திருமுறைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும்.திருமுறைகளின் பெரும்பங்கு கோவிலை மையப்படுத்தியே வந்திருக்கிறது. திருமுறைகள் யாவுமே கோவிலையும் வழிபாட்டையும், மனித ஒழுக்கத்தையும், வாழும் விதத்தையும், இல்லறத்தின் தன்மையையும், சமூகக் கட்டமைப்பையும், எடுத்துக் காட்டுகின்றன என்பது முக்கிய அம்சமாகும். இவை யாவும் வாழ்வியலின் இன்றியமையாத அங்கங்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதே.

       கோவில் என்பது வெறுமனவே வழிபடும் இடமாக மட்டும் விளங்கவில்லை. கோவில்களை ஆறுதல் தரும் இடமாக அடியவர்கள் கண்டார்கள். அப்பர் , சம்பந்தர், சுந்தரர் , மணிவாசகர் யாவரும் – கோவிலை மையமாக வைத்துக் கொண்டே … பல தொண்டுகளைத் தொடக்கி இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் திருமுறைகளின் வாயிலாக நாம் கண்டு கொள்ளுகின்றோம்.

       செல்லும் வழியெல்லாம் யாருக்கு என்ன நேரிடினும் அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை இறையருளாலும், மற்றவர் உதவி பெற்றும் அருளாளர்கள் ஆற்றியிருக்கிறார்கள் என்னும் செய்திகளையெல்லாம் திருமுறைகளின் வாயிலாக அறிகின்றோம்.

        கோவில்களும் வழிபாட்டு முறைகளும் சமூகத்தில் வாழும் மக்களின் நலன்களை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் என்று எடுப்பதும் பொருத்தமானதே.மனிதனைப் பண்படுத்தவும், மனித நேயச் சிந்தனைகளை வளர்க்கவும், பொதுநல உணர்வை நிலைபெறச் செய்யவும், கோவில்களும் வழிபாடும் துணைசெய்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.உண்மையான வழிபாட்டு உணர்வின் முதிர்ச்சி சமூகத்துக்கு உதவுவதே ஆகும்.இதனால் த்தான் கோவில் என்பது வாழ்வியலாகிவிட்டது.

          திருமுறைகள் கோவிலை மையமாக வைத்துக்கொண்டே பணிகள் பலவற்றை ஆற்ற வழிப்படுத்தியதைக் காண்கின்றோம்.

       ” என்கடன் பணி செய்து கிடப்பதே ” என்னும் அப்பரின் வாக்கு திருமுறையின் நிலையைக் காட்டுகிறதல்லவா ?

     பசிப்பிணி போக்க உதவியமை, முத்தியில் கூட தான் மட்டுமே பெற்றுக் கொள்ளாமல் மற்றவர்களும் இடமளித்தமை, தனியாகவும் கூட்டாகவும் மக்கள் மத்தியில் துன்பம் நிகழ்ந்த பொழுது உதவி துயர் துடைத்தமை, சமரச நோக்கத்தைக் கடைப்பிடித்து சமநிலையைக் காட்டியமை, ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்றபடி செயற்பட்டமை இவையெல்லாம் கோவிலை மையமாக வைத்தே ஆற்றப் பட்டிருக்கின்றது என்பதைத் திருமுறைகள் வாயிலாக அறிகின்ற பொழுது திருமுறைகள் என்பது தனியே வெறும் பாடல்களாக இல்லாமல் சிறந்த வாழ்வியல் நெறியாகவும் விளங்கி இருக்கிறது என்பதை மறுதுரைக்க முடியாதல்லவா ?

        ஆகமங்களில் கூறப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம், பற்றி திருமுறைகளும் விளக்கி நிற்கின்றன.ஆகமங்களில் கூறப்பட்ட கோவில் அமைப்புக்களின் பெயர்கள் வித்தியாசப் பட்டாலும் – திருமுறைகளும்  கோவில்களைப் பற்றியும் அவற்றின் அமைப்புப் பற்றியும் விளக்கி நிற்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

      ஆகமங்களும் திருமுறைகளும் சைவத்தின் இரண்டு கண்கள். இரண்டையும் பிரித்து வித்தியாசம் காண்பது பொருத்தமற்றதே.

      ” ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ” என்னும் மணிவாசகப் பெருமானின் இக்கூற்றே இதற்கு அரண்செய்து நிற்கிறதல்லவா?

        ஆகமங்கள் சமஸ்கிருத மொழியில் இருக்கின்றன. திருமுறைகள் தெள்ளிய தமிழில் அமைந்திருக்கின்றன. ஆகமங்களை இறைவனே அருளினார் என்பதே நம்பிக்கை.அதேவேளை திருமுறைகளும் இறைவனது அருள்பெற்ற அடியார்க ளின் வாக்குகளே என்பதும் நோக்கத்தக்கது.எனவே திருமுறைகளும், சைவ ஆகமங்களும் இறைவனது அருளினைத் தாங்கி நிற்பன என்பதில் பெருமை இருக்கிறதல்லவா ?

       இறைத்தன்மை பெற்ற சிவாகமங்களும் திருமுறைகளும் கோவிலைப் பற்றிக் கூறிய அனைத்தும் மக்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்ற வகையிலேயே இருக்கின்றன அல்லவா? இவற்றை மனக்கொண்டு பார்க்கும் பொழுது கோவில் என்பது வாழ்விய லோடு இணைந்தே இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகி நிற்கிறது

       இவற்றை எல்லாம் நோக்குமிடத்து சிவாகமங்களும், திருமுறைகளும் கோவிலையும் அவைசார்ந்த விஷயங்களையும் வாழ்வியலாகவே கருதி இருக்கின்றன என்பது புலனாகின்றது.

                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                                      

     

    Share
  • நிற்கிறார் நிலைத்து என்றும் !

     எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    சமயத்தின் சாறாய்நின்று சரித்திரம் படைத்த வள்ளல்
    இமயத்தின் உயரமாகி இகத்துளோர் மதிக்க நின்றார்
    சமயத்தை மட்டுமின்றி சமூகத்தை மனதிற் கொண்டு
    சன்மார்க்கம் உணர்த்திநின்ற சங்கரர் தாழ்கள் போற்றி !

    மாசறு மனத்தனாகி மாண்புறு செயல்கள் ஆற்றி
    பூசைகள் தாமுமாற்றி பூதலம் சிறக்கச் செய்தார்
    வாசனை பரப்பிநிற்கும் மறுவற்ற மலராய் நின்ற
    ஈசனின் தோற்றமிக்க எந்தையின் நாமம் வாழ்க !

    தெய்வத்தின் குரலைத்தந்து தீமைகள் அகன்றே போக
    வையத்தில் வாழ்ந்துநின்ற மாமணி அவரே ஆவர்
    சொல்லிலே சுவைகள் சேர்த்து சுருதியின் கருத்தும்சேர்த்து
    நல்லதைச் சொல்லிச் சென்ற நாயகன் நாமம்வாழ்க !

    நீண்டதோர் காலம்வாழ்ந்தார் நிமலனை மனதிற் கொண்டார்
    பூண்டநல் விரதத்தாலே புவியிலே புனிதர் ஆனார்
    ஆண்டவன் அவரேயென்று அனைவரும் தொழுது ஏற்ற
    அருங்குணங் கொண்டுநின்ற அவர்நாமம் என்றும் வாழ்க !

    இல்லறம் துறந்தயெந்தை ஏகினார் இறை தொண்டாற்ற
    நல்லறம் ஆற்றி நிற்க நயமுடன் பலதைச் சொன்னார்
    சொல்லறம் காத்து நிற்க தூய்மையைய மனதில் கொண்ட
    தொல்லறம் மிக்க எங்கள் தூயவர் நாமம் வாழ்க !

    ஊரெலாம் எந்தை சென்றார் உபதேசம் ஆற்றிநின்றார்
    பாரெலாம் பண்பு ஓங்கப் பாதங்கள் பதியச்சென்றார்
    வாரங்கள் மாதங்களாக மக்களின் இடத்தே சென்று
    வேதங்கள் சாரம்தன்னை விளக்கிய வள்ளல் வாழ்க !

    ஆற்றிய உரைகள் யாவும் அனைத்துமே வேதமாகும்
    சாற்றிய மேற்கோள் யாவும் தத்துவக் குவியலாகும்
    சேற்றிலே கிடந்த மக்கள் செழுமையாய் வாழவெண்ணி
    நாற்றென நின்ற ஆசான் நாமத்தைப் போற்றிநிற்போம் !

    ஆசியநாட்டில் தோன்றி அனைவரும் போற்ற நின்றார்
    பேசிய வார்த்தை எல்லாம் பெரும்பயன் பெற்றதாகும்
    காசினி உள்ளார்மீது கருணையைப் பொழிந்த வள்ளல்
    ஆசியை வேண்டிப் பல்லோர் அவரடிபணிந்தே நின்றார் !

    புத்தராம் யேசுகாந்தி புனிதராம் நபிகள் தோன்றி
    தத்துவம் உரைத்த நாட்டில் சங்கரர் தோன்றிநின்றார்
    அத்தனை பேர்க்கும் மேலாய் அவர்பணி ஓங்கிற்றென்று
    நித்தமும் நினைப்பதாலே நிற்கிறார் நிலைத்து என்றும் !

    எளிமையைச் சொந்தமாக்கி இனிமையை மனதில் தேக்கி
    தனிமையில் இறையைநாடித் தவநிலை கொண்ட வள்ளல்
    அழிவுடை எண்ணம்போக அறிவினை ஊட்டி எங்கும்
    நிறைவுடை மனத்தைநாட நின்றவர் நாமம் வாழ்க !

    Share
  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து ..

     

    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    images
    வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென
    தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும்
    அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென
    வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது !

    பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே
    நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது
    யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால்
    பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை !

    சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே
    இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும்
    சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே
    மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை !

    அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது
    உரங்கொண்ட கருத்தெல்லாம் உயிரோட்டம் பெறுகிறது
    வரமாகவந்து நிற்கும் வள்ளுவரின் குறளெமக்கு
    அரணாக நிற்பதனால் அகமகிழ்ந்து நிற்போமே !

    காலத்தால் அழியாத கருத்தனைத்தும் கொண்டதனால்
    ஞாலத்தில் குறளெமக்கு நற்றுணையாய் இருக்கிறது
    சீலத்தைப் புகட்டுவதாய் திருக்குறளே இருப்பதனால்’
    காலத்தைப் புலப்படுத்தும் கண்ணெனவே திகழ்கிறது !

    மொழிபெயர்புப் பலகண்ட முழுமைபெற்ற நூலாக
    தெளிவான கருக்கொண்ட திருக்குறளே திகழ்கிறது
    ஒளிவிளக்காய் என்றும்குறள் உலகினுக்கே இருப்பதனால்
    உயர்பெருமை தமிழுக்கே உரித்தாகி நிற்கிறது !

    குறள்படித்தால் குறையகலும் குறள்படிப்போம் வாருங்கள்
    குறள்படித்தால் குணம்சிறக்கும் குறள்வீட்டில் வைத்திருங்கள்
    அறங்கொண்ட வாழ்வுவர அனைவருமே குறள்கற்போம்
    திறம்கொண்ட குறளொன்றே தீர்வான மருந்தாகும் !

    வள்ளுவத்தை படித்தறியார் வாழ்வதிலே ஏதுபயன்
    தெள்ளுதமிழ் பொக்கிஷமாய் திருக்குறளே இருக்குதன்றோ
    உள்ளமெலாம் திருக்குறளை உட்செலுத்தி வைத்துவிடின்
    வையகத்தில் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்
    ( உலகத் திருக்குறள் பேரவை – காஞ்சிபுரமாவட்டம் நடத்திய
    கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை 31/01/2016 )

    Share
  • ஆண்டவனை வேண்டுகின்றேன் !

    ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

    வல்லமையை உருவாக்கி வாழ்ந்திடுக தமிழென்று
    நல்லதொரு தீர்மானம் எடுத்துநின்ற அண்ணாகண்ணன்
    சொல்லவொணா துயரத்தால் சோகமதில் மூழ்கிவிட்டார்
    அல்லல்நின்று அவர்மீள ஆண்டவனை வேண்டுகின்றேன் !

    தமிழறிஞர் அப்பாவை தானிழந்து நிற்குமவர்
    தளர்வுநிலை போவதற்கு தான்வேண்டி நிற்கின்றேன்
    அமுதானதமிழ் மொழியை அணைத்துநின்ற அப்பாவை
    அவர்பிரிந்து விட்டநிலை அடிமனதைத் தொடுகிறதே !

    மேகலா துயர்கண்டு மேனியெலாம் சிலிர்க்கிறது
    சோகமாய் நிற்குமவர் சுமையகன்று வரவேண்டும்
    தாகமாய் தமிழ்வளர்க்கும் தமிழ்நாட்டுக் குடும்பமதன்
    சோகமதில் பங்குகொண்டு துயருற்று நிற்கின்றேன் !

    தந்தையை இழந்து வாடும் அண்ணாகண்ணன், மேகலா , மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து .. உங்கள் தந்தையாரின் ஆன்மா நற்கதி
    அடைய இறைவனப் பிரார்த்திக்கின்றேம்.

    Share
  • எமைப்பார்த்து நகைத்துவிடும்!

     -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
    தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
    இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
    இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும்!

    பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
    துட்டகுணம் மிக்கோராய்த் தூய்மையற்று நிற்குமவர்
    பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
    காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது!

    பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
    கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நிற்கின்றார்
    கேடுகெட்ட செயலாற்றிக் கிராதகராய் மாறுமவர்
    பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே!

    படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
    பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
    மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
    நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார்!

    கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
    போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
    காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
    மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார்!

    கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
    கண்திறந்து பார்த்தவர்க்குக் கருத்துரைக்க வந்தாலும்
    கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டுக்
    காசையே அணைத்தபடிக் கண்ணியத்தைப் பாரார்கள்!

     

     

    Share
  • ஆனந்தம் பெற்றிடுவோம் !

     

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

    1935500_928017080628561_6456010672372628722_n

    குடியரசு நாளதனில் குடியொழிக்க நினைந்திடுவோம்
    அடிமைமனம் எமைவிட்டு அகன்றுவிட எண்ணிடுவோம்
    திடமுடனே இந்தியாவை நிலைநிறுத்த முனைந்திடுவோம்
    தீமைசெய்வார் மனந்திருந்த திட்டங்கள் வகுத்திடுவோம் !

    அரசியலார் மனங்களிலே அறமோங்கச் செய்திடுவோம்
    அசிங்கமுடை அரசியலார் அவைவிட்டு ஓட்டிடுவோம்
    உரிமையொடு கடமைதனை உணர்த்தியே நின்றிடுவோம்
    உள்ளமெலாம் சுதந்திரத்தின் உயர்கருத்தை விதைத்திடுவோம் !

    காந்தியொடு காமராசர் வாழ்ந்தவிந்த நாட்டினிலே
    காட்டாச்சி செய்வாரை கழுவேற்றி வதைத்திடுவோம்
    நீதிசொன்ன திருக்குறளை நித்தமுமே படித்துநின்று
    போதிப்போம் பொறுப்புடனே புனிதமெமை சேர்ந்தணைய !

    சாதிபற்றிப் பேசாமல் சாதிப்போம் இமயமென
    வாதிட்டுவாதிட்டு வைகத்தில் என்ன கண்டோம்
    ஆதிக்கம் ஆணவத்தை அறவேநாம் துறந்துவிட்டு
    அன்புகொண்டு அரவணைத்து ஆனந்தம் பெற்றிடுவோம் !

    Share
  • முத்தமிழ் வித்தகர்!

     -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
    மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
    கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
    கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
    இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்   Swami-Vipulananda
    இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
    எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
    எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும்!

    ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைத்தீவில்
    ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
    துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
    அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே!

    விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
    நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
    சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
    செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே!

    ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
    கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
    பண்டிதராய் இருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
    பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார்!

    பேராசிரியராய்ப் பெருமையுடன் பணி ஆற்றி
    ஆராத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
    தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
    யாருமே தொட்டிராத யாழ்தொட்டு நூல்செய்தார்!

    பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
    அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
    இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
    முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே!

    துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
    அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
    துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றிக்
    கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும்!

    ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
    மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
    பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவுமாகித்
    தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்!

     

     

    Share
  • அருமருந்தே காளியம்மா!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     பல்லவி

    எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது காளியம்மா
             மண்ணிலே நல்லவண்ணம் வாழுதற்குத் துணையானாய்     (எண்ணமெலாம்)

     

     அனுபல்லவி

       கண்ணாலே உனைப்பார்த்தால் கவலையெல்லாம் தீருமம்மா
             கண்மணியே காளியம்மா காலடியைப் பற்றுகின்றோம்              (எண்ணமெலாம்)
            சரணம்


              தீராத காதலுடன் தினமும்வரும் அடியவரை
              நோகாமல் காத்திடுவாய் நுண்ணறிவின் இருப்பிடமே
              ஆராதனை செய்து அனுதினமும் பாடுகின்றோம்
              நேராக எமைபார்த்து நின்னருளைத் தருவாயே!

              மருதமர நிழலினலே வாழுகின்ற தாயேநீ
              உரிமையுடன் வருமடியார் உள்ளமதில் உறைந்திடம்மா
              வருவினைகள் எமையணுகா வகையினிலே காத்திடுவாய்
              அருமருந்தே காளியம்மா அனைவருமே தொழுகின்றோம்             (எண்ணமெலாம்)  

     

     

     

     

    Share
  • நம்வாழ்வு விடிந்திடட்டும்!

      -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட
    உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும்
    நல்லவைகள் நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று
    நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும்!pongal - jayaramasarma

    இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல்
    முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று
    அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று
    உயர்ச்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம்!

    நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல்
    ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள்
    நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர்
    சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும்!

    மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும்
    மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே
    கோபமொடு கொடுமழையும் குளிர்காற்றும் சேர்ந்ததனால்
    மார்கழியை நினைப்பதற்கே மக்களெலாம் நடுங்குகின்றார்!

    நடுக்கமுறும் மனம்திரும்ப நம்வாசல் பொங்கல்வரும்
    இறுக்கமெலாம் இறங்கிவிட இன்பமாய்ப் பொங்கிடுவோம்
    பொறுப்புடனே பொங்கல்செய்தால் பூரிப்புவரு மென்றெண்ணி
    புத்தரிசி தனைப்பெற்றுப் பொங்கல்பொங்கி மகிழ்ந்திடுவோம்!

    சஞ்சலத்தில் உழன்றாரைச் சாதிமதம் பாராது
    நெஞ்சார உதவிநின்ற நீள்கரங்கள் உடையாரைக்
    கொஞ்சி யவர்கைபற்றிக் கூடவே வைத்தபடி
    அஞ்சாமல் பொங்கல்செய்து அவர்கையிற் கொடுத்திடுவோம்!

    பட்டாசு மத்தாப்பு புத்தாடை அத்தனையும்
    இட்டமுடன் இருந்துவிடின் இனித்துவிடாப் பொங்கலென்பர்
    துட்டகுணம் அட்டகாசம் துயர்ப்படுத்தும் அத்தனையும்
    பட்டென்று அகலுதலே பாங்கான பொங்கலாகும்!

    மக்களது மனங்களிலே மாற்றம்பல வருவதற்கும்
    மக்களெலாம் தோழமையில் மகிழ்ந்தென்றும் இருப்பதற்கும்
    தைத்திங்கள் வருகின்ற தைப்பொங்கல் அமைகவென
    முத்திக்கு வித்தான முழுமுதலை வேண்டிநிற்போம்!

    கோவில்சென்று கும்பிடுவோம் குறைசொல்லல் தவிர்த்திடுவோம்
    பாவநிறை செயலையெல்லாம் பள்ளமதில் புதைத்திடுவோம்
    தூய்மைநிறை பெரியோரைத் தொட்டுநின்று வணங்கிடுவோம்
    வாய்மைகொண்ட மனத்தோடு வாழவெண்ணிப்  பொங்கிடுவோம்!

     

     

    Share
  • சிறப்புடனே வந்திடுவாய்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    புத்தாண்டே  நீவருக
    புதுச்சேதியுடன் வருக
    சொத்தாக நினைக்கின்றோம்
    சுமையகற்ற நீவருக
    மொத்தமுள்ள முடைநாற்றம்
    அத்தனையும் களைந்துவிட்டுச்   newyear
    சுத்தநிறை சுகமனைத்தும்
    சுமந்துவர வேண்டுகின்றோம்!

    எங்களது வாழ்வினிலே
    இடர்கள்வந்து மோதாமல்
    சங்கடங்கள் தீர்த்துவிடச்
    சந்தோஷத்துடன் வருக
    மங்களங்கள் கொண்டுவந்து
    மனமகிழச் செய்துவிடச்
    செங்கதிரேன் போலநீயும்
    சிறப்புடனே வந்திடுவாய்!

    ஏழையொடு பணக்காரர்
    இயைந்துமே இருப்பதற்கு
    வேளைவரும் எனவெண்ணி
    விடியலையே வேண்டுகிறோம்
    நாளைவரும் புத்தாண்டே
    நற்சேதியுடன் வந்து
    நல்லவொரு ஆண்டாக
    யாவர்க்கும்  அமைந்துவிடு!

    உலகமெல்லாம் நல்லாட்சி
    ஓங்கிவர வேண்டுகின்றோம்
    நிலவுலகில் சமதர்மம்
    நிலைத்துவிட நினைக்கின்றோம்
    விளைநிலங்கள் வீணாகப்
    போவதையும் வெறுக்கின்றோம்
    நலமுடனே வளம்பெருக
    நல்லாண்டே வந்திடுவாய்!

    அரசியலார் மனசாட்சி
    அறிந்துணர வேண்டுகின்றோம்
    ஆதீனம் அத்தனையும்
    ஆண்டவனை நினைந்திடட்டும்
    நீதித்துறை அத்தனையும்
    நிமிர்ந்துநிற்க வேண்டிடுவோம்
    நிம்மதியைத் தருவதற்கு
    நீவருவாய் புத்தாண்டே!

    உளம்மகிழ வந்திடுவாய்
    உன்வரவு சிறந்திடட்டும்
    மனதிலுறை அத்தனையும்
    வண்ணமுறத் தந்துவிடு
    எண்ணமெலாம் இனித்துவிட
    இனியமுகம் கொண்டுநீயும்
    எழிலுடனே வந்திடுவாய்
    எங்களுக்குப் புத்தாண்டாய்!

     

     

    Share