இலக்கியம்கவிதைகள்

ஆனந்தம்!

-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

அழகானபெண் பார்க்க
அனைவருக்கும் ஆனந்தம்
அடுக்குமாடித் தனதாக்க
அப்படியோர் ஆனந்தம்
நினைப்பதெல்லாம் நடந்துவிடின்
நித்தமுமே ஆனந்தம்
ஆனந்தம் தனையடைய
அனைவருமே துடிக்கின்றார்!

ஆனந்தம் எனநினைக்கும்
அத்தனையும் வந்தாலும்
அப்போதும் எவர்மனமும்
ஆனந்தப் படுவதில்லை
அடையாத பலவற்றை
அடையவில்லை எனுமேக்கம்
ஆனந்த வழியினிலே
அஸ்திரமாய் வந்துநிற்கும்!

வீடுபல வாங்கிடுவார்
விதம்விதமாய் உடுத்திடுவார்
ஆடுமாடு பண்ணையெல்லாம்
அவர்சொத்து ஆகிநிற்கும்
கார்காராய்க் குவித்திடுவார்
காணிபல வாங்கிடுவார்
கணக்கின்றி வங்கிகளில்
காசையெல்லாம் போட்டிடுவார்!

அரசியலும் செய்திடுவார்
அறிஞர்சபை ஏறிடுவார்
அதிகாரம் அத்தனையும்
அவரெடுத்துக் கொண்டிடுவார்
என்றாலும் அவர்மனத்தில்
ஏக்கமே நிறைந்திருக்கும்
ஆனந்தம் என்பதங்கே
அடியோடு மறைந்திருக்கும்!

போதுமென்ற மனமிருந்தால்
பூத்துவிடும் ஆனந்தம்
பொருள்வந்து குவிவதிலே
பூத்துவிடா ஆனந்தம்
ஆனந்தம் தனைத்தேடி
அலைந்தோடிப் போகாதீர்
அகமளவில் நிறைவுகொளல்
அதுவன்றோ ஆனந்தம்!

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க