மனுமுறைகண்ட வாசகம் …. நற்சிந்தனை ….1

முனைவர் .பா.மஞ்சுளா

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ ……..

நல்லவர்கள் என்பதற்கு அறிஞர், சான்றோர் ,பழி பாவத்துக்கு அஞ்சி நடப்பவர்கள் என்று பொருள் தருகிறது அகராதி. நாம் செய்யும் செயல்களை வைத்து நமது பாவ, புண்ணிய கணக்கு வருகிறது. பிறருக்கு தீங்கு தரும் செயல்களை எல்லாம் பாவ செயல்கள் என்றும் , நல்லது செய்யும் செயலை புண்ணிய செயலாகவும் நாம் கொள்ளலாம். அடுத்தவர் மேன்மைக்கு செய்யும் காரியம் புண்ணியம், அவர்களது வீழ்ச்சிக்கு செய்யும் காரியம் பாவம் எனக் கூறலாம். நமது நினைவால், செயலால் அடுத்தவரின் இதயத்தில் சின்னக் கீறல்கூட ஏற்படாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கை. இதைத்தான் வள்ளலார் தனது மனுமுறை கண்ட வாசகத்தில் முதல் வரியாகக் கூறுகிறார். எவ்வளவு உயர்வான சிந்தனை ஒரு மனிதன் என்பவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. அடுத்தவரின் உணர்வுகளை அறிந்துகொண்டு வாழும்போது மற்றவர்களை குறைசொல்ல மாட்டார்கள் ஏனென்றால் உயிரை மாய்ப்பதை விட நமது குணத்தை மாய்ப்பது பெரும் குற்றம்.  இதைத்தான் வள்ளுவரின் குறளில்,

‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு’

தீயினால் எற்பட்ட காயத்தை விட, சொற்களால் உண்டாகிறது வடு என்றும் நமது நினைவில் நிலைத்து இருக்கும். அதுவே இரணமாக மாறி உள்ளே வடுவாக நீடிக்கிறது. நினைவால் சொல்லால், செயலால் அடுத்தவர் மீது பூ சொரிந்து வாழ்வது நல்ல ஒரு செயலாகும். நமது எண்ணத்தை தூய்மைப்படுத்தி உள்ளத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கி, நாம் இறைவனை சிந்திக்கின்ற போது மனம் விழிப்புணர்வு பெறும். அப்போது எவ்வுயிரையும் தீங்கு செய்ய மனம் ஏற்காது .

‘எவ்வுயிரையும்தன்னுயிர் போல் எண்ண வேண்டும்’

என்பார் வள்ளலார், அந்த உளவியல் எண்ணமே உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தால் மனம் உற்சாகத்துடன் எந்த செயலையும் நாம் செய்யும் போது ஒரு வகையான மனதிருப்தி ஏற்படும் . நமது செயல்களே உலகத்திற்கு அளவுகோல்களாக மதிக்கப்படும் .அவ்வகையில் வாழ்கின்ற மானிடம் சிறக்கும் அங்கு பண்பாட்டுக் கருவூலமாக மக்கள் இருப்பார்கள் .

நல்லோர் மனதை குளிர செய்யலாம்.

தொடரும்………

முனைவர் .பா.மஞ்சுளா
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ் .எஸ் .எம்.கலை அறிவியல் கல்லூரி
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க