Tag: க.பாலசுப்பிரமணியன்

  • இலக்கியம் எழுதாத நட்பு .. (ஐந்தாம் பகுதி )

    க. பாலசுப்பிரமணியன்

     

    நண்பனே…
    கொஞ்சம் நில்…
    என் இன்பக்கோட்டையின்
    வாயிலின் கதவுகளை
    யாரோ தட்டுகிறார்கள் !

    ஏன் நண்பா சிரிக்கின்றாய்?
    உனக்கு அவர்களை அடையாளம்
    தெரியுமா?

    உருக்குலைந்த உடல்கள்
    ஒன்றாய் .சேர்ந்ததுபோல்..
    உருத்தெரியாத உருவங்கள்
    நடுக்காட்டில் ஓலமிட்டது போல்……

    அந்த ஒலி
    ஏன் புரியாத பயத்திற்கு
    முன்னுரை எழுதுகிறது?

    பனிக்குள் புதைந்த நெருப்பைப்போல் ..
    இளமைக்குள் மறைந்த முதுமை போல்
    இருளுக்குள் ஒளிந்த பயத்தைப் போல் ..

    நம்பிக்கையின் வேர்களில்..
    நச்சை உமிழ்ந்துகொண்டு…

    காலங்கள் காத்து நின்ற..
    நமது நட்பின் ..
    ஆணிவேர்களை அசைத்துக்கொண்டு..

    பயத்துக்குப் பாதுகாவலனாய்
    சந்தேகத்தின் சகோதரனாய் ..

    ஓ!
    இவைகளுக்குப் பெயர்தான்
    துன்பங்களா?

    துன்பங்கள்..
    அதிர்ஷ்டத்தேரின் ஓட்டத்திற்கு
    முட்டுக்கட்டையாய் ..

    ஆரம்பத்திலேயே….
    முடிவைத்தேடும்..
    முதுகலையாய் ..

    என்னையே நான்
    வீழ்த்திக்கொள்ள
    ஏதுவாய்…

    நண்பனே !
    துன்பத்திற்கு ..
    வாழ்வில்…
    ஏன் தோரணம் காட்டுகிறோம் ?

    வலிகள் ..
    சங்கடங்கள்…
    பிரிவுகள்..
    துன்பத்திற்குத் தோள்கொடுப்பதேன்?

    யாருடைய கருவில்
    துன்பம்..
    உயிர்த்து எழுந்தது ?

    அமைதியான வாழ்வில் ..
    அழிவின் தூதுவனாய் ..
    அலைகள் ஆர்ப்பரிக்கும்
    சுனாமியாய் ………

    தனக்குத் தானே தவிலடித்துக்கொண்டு..
    கோஷங்கள் போட்டுக்கொண்டு..
    விழா எடுத்துக்கொண்டு…

    என்னோடு போரிட ..
    இவைகளுக்கு …
    ஏன் இத்தனை ஆசை ?

    கார்மேகத்தில்..
    கண்சிமிட்டும் மின்னலைப் போல்..
    கலங்கவைக்கும் இடியினைப்போல்….

    கண நேரத்தில்..
    வரும் போகும்…!

    பாவம் !
    யாருக்குத் தெரியும் ..
    இவைகளுக்கு
    வாழ்வு குறைவென்று ?

    காற்றடித்தால் ஓடிவிடும் !
    கனவுலகில் மறைந்துவிடும்.!
    கண்ணீரில் கரைந்துவிடும் !

    அறிவுக்கண்களுக்கு ..
    இவை தெரிவதில்லை…
    அசையாத உள்ளங்களுக்கு
    இவை அடையாளம் காட்டுவதில்லை !

    துன்பம் எது?

    இருப்பதில் அடங்குவதா?
    இயலாமையில் வாடுவதா?
    இசைவின்றி வாழுவதா?

    தோல்வியில் துவளுவதா?
    துணிந்து எழுந்திட மறுப்பதா?

    தன்னலம் போற்றுவதா ?
    பிறர்நலம் பேணுவதா?

    துன்பத்தைக் கண்டு
    துன்பமுறும் நெஞ்சங்களில்
    எஞ்சி நிற்பது என்ன?

    வந்ததும் ஒன்றுமில்லை..
    போவதும் ஒன்றுமில்லை..
    அறிந்தவர் மாய்ந்ததில்லை..
    அறியாதார் வாழ்ந்ததில்லை..

    துன்பம்…
    என் நிழலுக்கு ..
    நான் எழுதிக்கொடுக்கும்
    அடிமை சாசனம்!

    கன்றாகப் பின் நின்று…
    களிப்புடன் உன் நிழலில்..
    காலங்கள் கழித்திட்டால்

    துன்பங்கள் வந்திடுமோ?
    துயரங்கள் நின்றிடுமோ?

    நண்பனே…
    நான் அறிவேன்…
    உன் உள்ளம்..

    யாரறிவார் உன் வலிகள் ?
    உன் துயர்கள்..?”

    உன் பாதச்சுவடுகளில் …
    என் பாதங்களை அமர்த்தும் பொழுது..
    உன் வலிகள் …
    உன் துயரங்கள் ….
    என் உள்ளுணர்வுகளில்…

    பிண்டங்களின்..
    அண்டங்களின் ..
    கோள்களின் ..
    துயரங்கள்…
    அனைத்தையும் சுமந்தும் நீ..

    முகத்தில் என்றும்..
    அமைதியுடன்..
    புன்னகையுடன்..

    அனைத்தையும் கடந்ததாலோ?

    நீ.. ?
    ஆள்பவனா?
    ஆண்டவனா?

    நண்பா..
    நீ யாராயிருந்தாலும் ..
    கைப்பிடித்து வருவேன் !

    “யாமிருக்க பயமேன்?”
    என்று…
    நீ எனக்கும்..
    நான் உனக்கும்..

    காலங்கள் சென்றாலும்
    கறைபடியா நட்பன்றோ?

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 38

    க. பாலசுப்பிரமணியன்

    வகுப்பறை ஒரு நாடக மேடை

    education-1-1-1

    பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான கற்றலின் முறையில் அதிகமான ஈடுபாடு இருக்கும். இதன் பொருள் அவர்கள் மற்ற முறைகளில் கற்றுக்கொள்வதில்லையென்றோ அல்லது மற்ற முறைகளில் அவர்களுக்கு அறிமுகம் அல்லது பழக்கம் இல்லை என்றோ கூறிவிட முடியாது. மேற்கூறப்பட்ட எல்லா முறைகளும் அனைவரிடமும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களுக்கு உகந்த முறையில் கற்றலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..

    ஆகவே, வீடுகளில் குழந்தைகளின் படிப்பு முறைகளிலும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கும் நேரத்திலும் இந்த வேறுபாடான முறைகளுக்குத் தகுந்தாற்போல் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் தேவையான சூழ்நிலைகளை உண்டாக்குதல் அவசியமாகின்றது.

    வகுப்பறையில் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் மாணவனைப் பார்த்து “ஏண்டா, நான் இங்கே நின்று கத்திக்கொண்டிருக்கின்றேன். நீ சன்னலையே பார்த்துக்கொண்டிருக்கிறாய் ” என்று கடிந்து கொள்வதும், வீட்டில் தன் மகனுக்கருகில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கும் தந்தை ” புத்தகத்தைப் பாருடா ; அங்கே என்ன நடந்தால் உனக்கென்ன ” என்று அங்கலாய்ப்பதும், கண்களாலும் பார்வைகளாலும் பக்கத்தில் இருக்கும் காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருக்கும் மாணவனின் நிலையை வெளிக்காட்டுகின்றது..

    இதேபோல் ஆசிரியர் கேள்விகளை முடிக்கும் முன்னேயே எழுத்து அதற்குச் சரியாகவோ அல்லது தவறாகவோ பதில் சொல்லும் மாணவனைப் பார்த்து ஆசிரியர் “என் கேள்வியை முடிக்க விடுடா.. அதற்கப்புறம் பதில் சொல்லு ” என்று சொல்வதும், தாயின் வார்த்தைகளுக்கு முடிக்க நேரம் கொடுக்காமல் ” நீ சொல்றது புரியுதம்மா.. ஆனால் “என்று சொல்ல “என்னடா புரிந்தது? நான் சொல்லி முடிக்கவே இல்லை ” என்று வருத்தப்படும் தாயினைக் காணும்பொழுது இரண்டாம் வகையைச் சேர்ந்த “செவிச்செல்வத்தை” நம்பி இருக்கின்ற மாணவர்களின் நிலை நமக்குப் புரிகின்றது.

    ஆகவே, வகுப்பறைகளில் ஒரே மாதிரியாகப் பாடங்களை நடத்தும் பொழுது அது எந்த வித முறையில் கற்றாலும் மாணவர்களை சேர்ந்து அடைவதில்லை. தங்கள் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கும் நேரத்தில் அதற்குப் பலவிதமான உத்திகளைக் கையாளுதல் அவசியம். கற்பித்தல் என்ற செயல் உணர்வு பூர்வமாக இருந்தால் தான் கற்றல் சிறப்பாக அமைய வாய்ப்புண்டு.

    எனக்கு ஆங்கிலத்தில் செகப்பிரியரின் (Shakespeare) நாடகங்களை பேராசிரியர் நடத்திய பொழுது “Hamlet” என்ற நாடகத்தில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார். நடையுடை பாவனைகள், குரல், உணர்வுகள் அந்த பாத்திரத்தியே மீண்டும் பிறப்பித்ததுபோல் இருக்கும் . அதேபோல் கம்ப ராமாயணத்தை நடத்திய பேராசிரியர் குஹனும் இராமனும் சந்தித்த காட்சியை விளக்கியது நினைவை விட்டு அகல முடியாதது.. ஏழாவது வகுப்பில் Wordsworth என்ற ஆங்கிலக் கவிஞரின் “Daffodils” என்ற பாடலை நடத்தும் பொழுது ஆசிரியர் அந்த மலரைப் போல் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.!
    இதனால்தான் ஒரு வகுப்பறையை ஒரு “நாடக மேடை” என்று சொல்லுகின்றனர். இதில் ஆசிரியர் மட்டுமல்ல, கற்கும் மாணவர்களும் பங்கேற்கும் பொழுது அங்கே கற்றல் மிகச் சிறப்பாக நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    கற்றல் என்பது ஒரு புத்தகத்தின் முன் அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் வரை உள்ள தகவல்களை வெளியிடுவது அல்ல. கற்றல் புத்தகம் மூலமாக மட்டுமன்றி, புத்தகத்திற்கு வெளியேயும் அப்பாலும் நடைபெறுகின்ற ஒரு செயல். ஒரு சிறப்பான கற்றல் சூழ்நிலையில் புத்தகத்திற்கு உள்ளே இருக்கும் தகவல்களை வாழ்க்கை நெறிகளோடும் தத்துவங்களோடும் செயல்பாடுகளோடும் இணைத்துச் செல்வதே ஆகும்.

    “பரீட்சைக்குத் தயார் செய்வதன்றோ வகுப்பறையின் நோக்கம் ” என்று நினைப்பதும் “இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கின்றது ” என்று காரணங்கள் தேடிக்கொண்டிருப்பதும் கற்றலின் நோக்கத்தையும் மேன்மையையும் குறைப்பதாக அமையும்.

    “சொல்லுங்கள்.. நான் மறந்துவிடுவேன். கற்பியுங்கள்…நான் நினைவில் வைத்துக்கொள்கின்றேன்… என்னை ஈடுபடுத்துங்கள்… நான் கற்றுக்கொள்கிறேன். ” என்று மேதை பெஞ்சமின் பிராங்கிளின் (Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn. Benjamin Franklin) கூறியது எல்லாக் காலங்களுக்கும் எல்லாக் கற்றல் சூழ்நிலைகளுக்கும் வெகுவாகப் பொருந்தும்.

    (தொடரும் )

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு.. (முதல் பகுதி)

    க. பாலசுப்பிரமணியன்

     

    இலக்கியம் எழுதாத நட்புக்கு

    இதயத்தில் காவியம் படைக்கிறேன் !

    இலக்கணத்தில் சிறைப்படாத நட்புக்கு

    இலக்கியம் தேடுகிறேன் !

     

    இயற்கையை இசைக்கின்ற நண்பனின்

    இசையில் ராகமாய் நிற்கிறேன் !

    சொல்லுக்குப் பொருளாய்

    பொருளுக்குச் சொல்லாய்

    சுவையூட்டும் சுதந்திரனின்

    சுவையை ரசிக்கிறேன் !

     

    கண்திரைக்குப் பின்னிருந்து

    கைப்பிடித்து வழிநடத்தும்

    கள்வனவன் !

    கருத்துக்குள்  நுழையாமல்

    கற்பனையோடு விளையாடும்

    காலத்தின் தலைவன் !

     

    கடவுளென்ற பெயர் அவனுக்கு ..

    கற்றவர்கள் சொன்னார்கள் !

    கற்றதனால் நானும் அழைத்தேன்

    கடவுளென்று கைப்பிடித்த நண்பனையே !

     

    நொடிகள் மணித்துளிகளாய்

    மணிகள் நாட்களாய்

    நாட்கள் ஆண்டுகளாய்

    ஆண்டுகள் யுகங்களாய்

    கழிந்த போதும் …

    கைப்பிடித்த என்னை

    கைகழுவாத நண்பன்  !

     

    இனியதோர் பயணம்..

    அமைதியான பயணம்…

    அவன் பேசுவதில்லை ..

    நான் ஏனென்று கேட்பதில்லை…

     

    இருண்ட பூமியில் ..

    வறண்ட நிலத்தில் ..

    காலைக் கதிரின்

    முதல் முத்தம் போல்

    சருகான இலைகளை

    அவன் பாதங்கள் தொடும்போது ..

    தெறிக்கின்ற தீப்பொறிகள்..

    பாதைக்கு பாலமிடும் !

     

    முந்திய இரவில்

    மூச்சடிக்கிய காற்று

    முன்மொழிந்த பனிமுத்துக்கள் ..

    காலையின் கண்களைக் கண்டதும்

    சோம்பல் முறித்துச்

    சுகம் தேடும் !

     

    புதியதோர் உலகம்

    கண்டதுபோல் ..

    புண்படாத புன்னகைகள்

    சிறகடித்து விண் செல்லும் !

     

    இலைச்சருகல்கள் இசையமைக்க

    இணையில்லாச்  சுகத்தினிலே..

    தென்றலோர் தெம்மாங்கு பாட………

    ஒளி படரும் !

    ஒலி பாடும் !

    .

    நிலை மறந்து..

    நானும் என் நண்பனும்

    கைகோர்த்து..

    அமைதியாய்..

     

    எங்கே போகிறோம்?..

    எனக்குத் தெரியாது..

    அவன் சொல்லவில்லை..

    நான் கேட்கவில்லை..

     

    இனிதான பயணம்..

    அமைதியான பயணம் !

     

    மந்தையில் செல்லும் ஒரு ஆடு போல

    தலையை அசைத்துக்கொண்டு..

    அவனருகில்..

    நான்……..!!

     

    சில நேரங்கள் சிந்தனையில்..

    சில நேரங்கள் கற்பனையில்

    சோர்வின்றி..

     

    அவனிடம் கேட்க என்னிடம்

    கேள்விகள் இல்லை..!

    வினாக்களுக்கு விடையளிக்கும்

    வழக்கம் அவனுக்கில்லை !

     

    போகுமிடமெங்கென்று…

    புரியாமல்..

    ஒன்று மட்டும் உண்மை

    இது ஒரு அர்த்தமுள்ள பயணம்..

    புதியதோர் இலக்குநோக்கி..

    புரியாததைப்  புரிந்துகொள்ள……

    அறியாததை அறிந்துகொள்ள…….

     

    பாதையெல்லாம் சோதனைகள்

    புதுப் புது இரகசியங்கள்..

    புலனுக்குப் புரிந்ததெப்படி ?

     

    நாங்கள் இருவரும்..

    கைகோர்த்து..

    அமைதியாய்..

    புரிந்துகொள்ள முயற்சிக்காமல்..

    கேள்விகளின்றி…

    பதில்களின்றி…

     

    என் நண்பனுக்கு

    எப்படி நன்றிசொல்வது?

    அவனைப் போற்றியா ?

    அவனை வாழ்த்தியா?

    தெரியவில்லை..

    அமைதியாகச் செல்கிறேன்..

    அவன் கைப்பிடித்து ..!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -37

    க. பாலசுப்பிரமணியன்

    கற்பதில் சில முறைகள்

    education-1-1

    “படிச்சிருக்கேன்… ஆனால் பரிட்சை ஹாலில் வந்து மறந்து போச்சு ” என்று அங்கலாய்க்கும் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.  “வீட்டிலே எழுதறப்போ சரியா எழுதிறான். ஆனால் பள்ளிக்கூடத்திலே டெஸ்ட் வைத்தால்  அங்கே பொய் முழிக்கிறான் ” என்று தனது இரண்டாவது வகுப்பில் படிக்கும் குழந்தையைப் பற்றி ஆசிரியர்களிடம் குறை சொல்லாத பெற்றோர்கள் மிகக் குறைவு.

    படித்தது எப்படி மண்டையில் ஏறுகிறது? அது எப்படி நினைவில் அமைகின்றது? எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றது? மறந்து போவதற்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா? மறந்து போவதற்கும் சூழ்நிலைகளுக்கும் சம்பந்தம் உண்டா? நினைவில் வைத்துக் கொள்ளுதல் ஒரு கலையா? அது சிலருக்கு மற்றும் கிடைத்த வரமா? பல கேள்விகள் நம் முன்னே எழுகின்றன?

    ஒருவர் கற்கும் முறைக்கும் அந்த கற்றல் நினைவில் அமைவதற்கும் நெருக்கமான உறவு உண்டு என்று கற்றலில் ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    கற்கும் முறைகளைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

    1. visual Learners ( கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்ளுபவர்கள்)
    2. Auditory Learners (காதுகளால் கேட்டுக் கற்றுக்கொள்ளுபவர்கள் )
    3. Kinesthetic Learners

    (செயல் முறைகளால் கற்றுக்கொள்ளுபவர்கள்)

    இதில் ஏதோ ஒரு முறையில் வல்லமை பெற்றவர்கள் மற்ற முறைகளால் கற்றுக்கொள்ளும்பொழுது அவர்களுடைய ஆர்வம், திறன், கற்கும் நேரம், கற்றலின் சாதனை ஆகியவை பெருமளவில் பாதிக்கப் படுகின்றன.

    உதாரணமாக, கண்ணால் பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்களின் சில பொதுவான  பண்புகள் :

    1. இவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே படித்துக்கொண்டிருப்பார்கள். அதிகமாக இடத்தை விட்டு விலக மாட்டார்கள்.
    2. இவர்கள் புத்தகத்தை பார்த்த வண்ணம் இருப்பார்கள். படிக்கும்பொழுத்து மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.
    3. இவர்கள் கவனம் புத்தகத்தில் இருப்பதால் சுற்றி நடக்கும் செயல்களால் அதிகம் பாதிக்கப் பட மாட்டார்கள்.
    4. கவனச் சிதறல்கள் இவர்கள் உணர்வுகளை பாதிக்கும்.
    5. படிக்கும் பொழுது தங்கள் புத்தகங்களில் கோடுகளாலோ அல்லது வரைபடங்களாலோ குறிப்புகளை எழுதிக்கொண்டிருப்பார்கள்.

    6.வகுப்பறைகளில் ஆசிரியர்கள்                                           சொல்லிக்கொடுப்பதைக் கேட்காமல் கரும்பலகைகளையோ அல்லது சன்னல்கள் வழியாக வெளியே நோட்டம் விடுவது இவர்களுக்குப் பழக்கம்

    1. படங்கள் வரைதல், அலங்கரித்தல், எழுதி காண்பித்தல் ஆகியவற்றில் வல்லுநர்கள்.
    2. இவர்கள் கையெழுத்து பொதுவாக அழகாகவும், தெளிவாகவும் இருக்கும். புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் நன்றாக அலங்கரிக்கப் பட்டிருக்கும்

    மாற்றாக,செவிகளை அதிகமாக பயன்படுத்திக் கற்றுகொள்ளுபவர்கள் (Auditory Learners ) பின் பற்றும் சில பண்புகள் :

    1. பொதுவாக இவர்கள் படிக்கும் பொழுது வாய்விட்டு சத்தமாகப் படிப்பார்கள்.
    2. தான் படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆர்வம் இவர்களுக்கு உண்டு.
    3. படிக்கும் பொழுது வேறு யாராவது பேசிக்கொண்டிருந்தால் இவர்களிடம் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புண்டு.

    ‘4.படிக்கும்பொழுது பாடல்கள் கேட்பது, நடுவே தொலைக்காட்சிகளை பார்ப்பது அவர்களுக்கு கைவந்த கலை.

    1. ஆசிரியர்களிடமோ, மற்றவர்களிடமோ கேள்விகள் கேட்பதும், விளக்கங்கள் நாடுவதும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
    2. வகுப்பறைகளில் மற்றவர்களோடு அடிக்கடி பேசுவது , ஒலிகள் எழுப்புவது, தங்கள் பேச்சினால் மற்றவர்கள் கவனத்தைத் தம் பக்கம் ஈர்ப்பது இவர்களுக்குப் பிடிக்கும்
    3. . பள்ளிகளின் விழாக்களில் பேசுதல், பாடுதல், விழாக்களை ஒருங்கிணைத்தல், விருந்தாளின் விருந்தோம்பல் ஆகியவற்றில் வல்லுநர்கள்.
    4. இவர்கள் கையெழுத்து ஒழுங்கின்றி கோணலாக (slanting and wavy) இருக்க வாய்ப்புண்டு. கேள்விகளுக்கான பதில்களை முன்னுக்குப் பின்னாக எழுதுவது இவர்கள் வழக்கம்.

    இதற்க்கு முற்றும் மாற்றாக, செயல் முறையில் கற்போர் (Kinesthetic learners ) கீழ்கண்ட பண்புகளை பிரதிபலிக்கக் கூடியவர்கள்:

    1. இவர்கள் பொதுவாக ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க மாட்டார்கள்.. நடந்து கொண்டே படித்தல் இவர்களுக்குப் பிடிக்கும்.
    1. இவர்களுக்கு நடப்பதற்கு அதிக இடம் தேவைப் படுவதால் வீட்டில் மொட்டை மாடி, பூங்காக்கள் மற்றும் திறந்த வெளிகளில் படிப்பதை விரும்புவர்.
    1. வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தால் கால்களை நீட்டிக்கொண்டோ, மடக்கிக்கொண்டோ, படுக்கையில் படுத்துக்கொண்டோ, சோபாக்களில் முடங்கிக்கொண்டோ படிப்பது இவர்களுக்கு வழக்கம்.
    2. வகுப்பறைகள் ஒரு இடத்தில் மாறாது சுற்றிக்கொண்டோ அல்லது ஆசிரியர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் எடுபிடி வேலைகள் செய்வதோ இவர்களுக்கு மனநிறைவைத்த தரும்.
    3. இருக்கும் இடத்தில் பென்சிலாலோ அல்லது வேறு உபகாரணங்களோ ஓசைகள் எழுப்புவது, தாளங்கள் போடுவது, பொருள்களை அடிக்கடி இடம் மாற்றுவது இவர்களுக்கு விருப்பமான செயல்.
    4. பள்ளிகளில் ஓடி ஆட்டி வேலை செய்வது, உடல் பயிற்சி மற்றும் பந்தயங்களில் கலந்து கொள்ளுதல், நாடங்களில் நடித்தல், தலமைப் பொறுப்புக்கள் ஏற்பது இவர்களுக்குப் பிடிக்கும்.
    5. இவர்கள் புத்தங்கள், அலமாரிகள் அனைத்தும் அநேகமாகத் தாறுமாறாக இருக்கும்.
    6. நோட்டுப் புத்தங்கள் அட்டைகளில் எழுதுவது, ஒரு ஒழுங்கான பாங்கின்றி எழுதுவது அவர்களின் பொதுவான பழக்கம்.

    இவ்வகையான கற்றல் முறைகள், அதனோடு சேர்ந்த பழக்க வழக்கங்கள், கற்போரின் திறன், கற்களின் ஆழம், நினைவாற்றல் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நினைவாற்றல்களையும் கற்றலின் திறன்களையும் எவ்வாறு சிறப்பிக்கலாம் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  •   மதுரை மல்லி ……………

    க. பாலசுப்பிரமணியன்

    “மல்லிகைப்பூ என்ன விலை?”  என்று வடக்கு மாசி வீதி விநாயகர் கோவிலுக்கு எதிர் நடைபாதையில் அமர்ந்திருந்த பூக்காரியிடம் சம்பந்தம் கேட்டார்.

    ” நூறு பத்து ரூபா ” என்று அவள் சொன்னதும் அவருக்குத்  தூக்கி வாரிப் போட்டது.

    “என்ன யானை விலை சொல்லறே?”

    “சந்தையிலே பூ கிடையாது சார். அதுவும் இன்னிக்கி வெள்ளிக்கு கிழமை.. டிமாண்ட் அதிகம். ” என்று ஆங்கிலம் கலந்த தமிழில் அவள் சொன்னதும் நல்ல விவரம் தெரிந்தவள் என்று அவருக்கு புரிந்தது.

    அவன் நினைவு பின்னோக்கிச் சென்றது.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே மதுரையில் தினம் அம்மன் சன்னதி அருகில் உள்ள மொத்த வியாபார பூக்கடைக்குச் சென்று பூ வாங்கி வந்ததும், அதை சிறிது நேரம் தொடுத்து விற்பதற்காகத் தன் தாயாரிடம் கொடுத்ததும் அவர் நினைவுக்கு வந்தது..

    எட்டாவது வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாள் வடக்கு வெளிவீதியில் உள்ள தன் பள்ளிக்குத் தாமதமாகச் சென்றதும் “ஏண்டா லேட்?” என்று ஆசிரியர் கேட்ட பொழுது “சார், அவன் பூத்தொடுக்கறதிலே நேரத்தை மறந்திருப்பான் சார்…” என்று சக மாணவன் கிண்டலடிக்க அனைவரும் சிரித்ததும் அவருக்கு நினைவில் வந்தது.

    அது மட்டுமா? தினம் சில மல்லிகைப் பூக்களையும் அதோடு ஒரு மரிக்கொழுந்தையும் தான் நோட்டுக்குள் வைத்து அடுத்த நாள் அதை முகர்ந்து பார்க்கும் பொழுது கிடைத்த ஆனந்தமும் ஞாபகத்தில் இருந்தது.

    சம்பந்தம் ஒரு ஏழைக்கு குடும்பத்தில் மதுரையில் பிறந்தவர். அவர் தந்தை மணிநகரத்தில் ஓர் மோட்டார் ரிப்பேர் செய்யும் கடையில் மெக்கானிக்காக இருந்தார், தாயார். வீட்டைக் கவனித்த படியே மாலையில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பத்தாம் வகுப்புவரை இவர் படிப்பு முடிந்தவுடன் அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் உதவியாளராகச் சேர்ந்த அவர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு மேலாளர் பதவிவரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.

    பக்கத்திலிருந்தவர் பூக்காரியிடம் பேச்சுக்கு கொடுக்க, சம்பந்தம் ” அஞ்சு நூறு குடும்மா ” என்று ஒரு ஐமபத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அப்படியே அந்தப் பூவை நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலில் கொடுத்து வேண்டி நின்றார்.

    “பிள்ளையாரப்பா. பிறந்ததிலேந்து அறுபது வருடமா உன்னோட நிழலிலே இந்த ஊரிலேயே வாழ்ந்தாச்சு.. இப்போ இந்த மண்ணை விட்டு போக வெச்சுட்டியே… எப்படி நித்தம் உன்னைக் காணாமல் இருப்பேன்?” என்று கண்களில் வந்த நீரை துடைத்துக்கொண்டே நின்றபோது விநாயகர் சிலையிலிருந்து விழுந்த ஒரு மலர் அவருக்கு கிடைத்த ஆசியாக மனத்தைத் தேற்றிக் கொண்டார்.

    கோடை மழைக்கு அடிப்போட்டு வானம் கருத்துக் கொண்டு வந்தது.. மணி ஐந்து. வீட்டுக்குச் சென்று எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் வண்டியைப் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவரை துரிதப் படுத்தியது.

    மதுரை இரயில்வே ஸ்டேஷனில் மழை பெய்துகொண்டு இருந்தது. பல இரயில்கள் தாமதமாக இயங்கிக்கொண்டிருந்தன. மழை ஈரத்திலிருந்து தப்பிப்பதற்காக பயணிகள் கிடைத்த இடத்தில் கும்பலாக அமர்ந்திருந்தனர்.

    சம்பந்தம் தன் மனைவி மங்களத்துடன் அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தார். அவரிடம் மூன்று பெட்டிகளும் இரண்டு பெரிய பைகளும் இருந்தன.. ஊரில் உள்ள வீட்டைக் காலி செய்து வீட்டுக் கிளம்புவதென்றால் சும்மாவா? அவர் மனம் மிகவும் கனத்திருந்தது.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஊரை வீட்டுக் கிளம்புவதை நினைத்து வலி. வேறென்ன செய்ய? அவருடைய ஒரே மகன், சென்னையில் வேலை கிடைத்த பின்னே  அங்கேயே தங்கிவிட்டான். “என்ன இருந்தாலும் சென்னை சென்னைதான் அப்பா. அங்கே இருக்கிற வாழ்க்கை இங்கே கிடைக்குமா?” என வேண்டாத விதண்டாவாதம் பேசி அவரை ஒத்துக்கொள்ள  வைத்தான்.

    திருமணம் ஆன பிறகு அங்கேயே ஒரு வீடு வாங்கிவிட்டு வாழ்க்கை பயணத்தைக் தொடங்கிவிட்டான். தந்தையும் தாயையும் ஊரைக் காலிசெய்து கொண்டு வரச் சொல்லி கட்டாயப் படுத்த இவரும் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ள வேண்டியதாதாயிற்று,

    ஆழ்ந்த சிந்தனையிலிருந்த அவரை இழுத்தது ஒரு பெண் குரல்.. “என்ன சார்.. நல்ல இருக்கீங்களா.. எத்தனை வருஷம் ஆச்சு உங்களை பார்த்து?…எங்கே ஊருக்கா?”

    ஒரு நிமிடம் அவளைக் கூர்ந்து கவனித்த அவர் சற்று அதிர்ந்து விட்டார். இவள் எங்கே வந்தாள்? அதுவும் இந்த நேரத்தில்?  ஒரு நிமிடம் தன் மனைவி மங்களத்தை உற்று நோக்கினார். அவள் கவனம் வேறு எங்கோ இருந்தது அவருக்கு  அமைதி அளித்தது.

    மீண்டும் அவர் மலரும் நினைவுகளில்..

    தினம் காலையில் குளித்து திருநீறு பூசி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்து வரும் பாதையில் வடக்கு மாசி வீதியில் விநாயகரையும் கண்ணனையும் தரிசனம் செய்து வருவது அவர் வழக்கம்.

    மாலையில் வேலையிலிருந்து திரும்பும் பொழுது டவுன் ஹால் ரோடில்  மனைவிக்காக இரண்டு முழம் மதுரை மல்லிகையும் அருகிலுள்ள பட்சணக் கடையிலிருந்து ஏதாவது தின்பண்டமும் வாங்கிவருவதும் அவர் அன்றாடப் பழக்கம். திருமணம் ஆனது முதலே மனைவி மங்களம் ஒரு சந்தேகப் பிராணி.

    கோவிலுக்குப் போகும் பொழுதுகூட “என்னங்க, இப்படி வேகமாகப் போனா, நான் என்று நினைத்துக்கொண்டு வேற யாராவது பெண்ணோட கையைப் பிடித்துக்கொண்டு போயிடப் போறீங்க.. ” என்று சொல்வாள்

    “மங்களம், கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆச்சு, பையன் பெரியவனாகி விட்டான். இனிமே ஏதுக்கு இந்தமாதிரி நினைப்பெல்லாம்?” என்று பதிலளித்தார்.

    “அப்படி இல்லீங்க.. எந்தப் புற்றிலே எந்த பாம்பு இருக்கோ.. கவனமாக இருப்பது நல்லது இல்லியா?” அவர் பதில் சொல்லவில்லை.

    அப்படித்தான். ஒரு நாள்..தமுக்கம் மைதானத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சிக்கு சென்றபொழுது டிக்கெட் வாங்க இவர் முன்னே செல்ல, அங்கே பெண்டிர் கூட்டம் அதிகமாக இருக்க, “கொஞ்சம் இப்படி வாரீங்களா.. கொஞ்சம் ஓரமா நில்லுங்க.. நான் போய் டிக்கெட் வாங்கறேன். அங்க போய் யார் மேலயாவது இடித்து வம்பை விலைக்கு வாங்கவா?”  பதில் சொல்லாமல் அவர் பின் வாங்கிக் கொண்டார். மங்களத்தின் இந்த சந்தேகம் அவளிடம் ஊறிப்போயிருந்ததால் அவருக்கு அதைக்கேட்டு பழக்கமாகி விட்டது.

    அப்படித்தான் ஒரு நாள். மீனாட்சி தரிசனம் செய்து விட்டு டவுன் ஹால் ரோடு வழியாக வரும் பொழுது அங்கிருந்த பூக்காரியிடம் “ஒரு இருப்பது ரூபாக்கி பூக்குடும்மா ” என்ற அவர் சொல்ல  “என்ன சார் விசேஷம் இன்னிக்கி? எப்போதும் பத்து ரூபாய்க்கு வாங்குவே ?  பையன் நல்ல இருக்கானா சார்? எட்டாம் கிளாஸ் பாஸ்  பண்ணிட்டானா சார்?” என்று அவள் கேட்க மங்களம் தன்  கணவரைத் திரும்பிப் பார்த்தாள். இது ஒரு எரிமலையாக வெடிக்கும் என்பது அவருக்குத் தெரியாது.

    அன்று மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தபொழுது அவள் “என்ன இருந்தாலும் அந்த பூக்காரிக்கு வாய்க்கொழுப்பு”  அவர் பதில் சொல்லவில்லை.

    “தினம் அவள்கிட்டே தான் பூ வாங்குவீங்களா?” அவர் மறுக்க வில்லை. “உங்க சரித்திரம் முழுக்கச் சொல்றாளே? பையன் எட்டாம் கிளாஸ் படிக்கற வரைக்கும் தெரிஞ்சுருக்கே?” இப்பவும் அவர் பதில் சொல்லவில்லை.

    “ஏங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்” என்று அவள் சொல்ல..பொறுமை இழக்காமல் அவர் “மங்களம்..ஒரு நாள் பையனோட கோவிலிருந்து வரப்போ மழை பெய்தது என்று அந்தத் துணிக்கடையோரம் ஒதுங்கினேன். இவளும் அங்கே தான் இருந்தாள். அப்போதான் பையனைப் பற்றிக்கேட்டாள் .. சொன்னேன். ” என்றவர், நிறுத்தாமல்..”பாவம்.. அவளுக்கு ஒரே பொண்ணு. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாளாம். புருஷன் இவளை விட்டுட்டு வேற யாரோடயோ ஓடிட்டானாம்.. கஷ்டப்படறேன்னு அழுதா.. “

    “ஓஹோ, அதுதான் உருகிட்டீங்களாக்கும் ” என்று அவள் சொல்ல, சம்பந்தம் மனம் உடைந்து கண்டிக்க, வார்த்தைகள் தடித்து ஒரு வாரம் இருவரும் பேசிக்கொள்ள வில்லை

    அன்று முதல் வேலையிலிருந்து திரும்பும் போது மல்லிகைப் பூ வாங்கி வரும் பழக்கம் நின்றது.. சில முறை மங்களம் “பூ வாங்கலீங்களா” என்று கேட்கும் பொழுது “வாசலில் வரும் வாங்கிக்கொள்” என்று சொல்லிவிடுவார். அவர் மனதில் அந்த மல்லிகைப்பூ படுத்திய காயம் அப்படி..

    “என்ன சார்.. ஏதோ நினைப்பில்…” அந்த ரயில் நிலையத்தில் அருகில் அமர்ந்த அந்தப் பெண்மணி கேட்க “இவள் அந்தப் பூக்காரி” என்ற உணர்வு அவருக்கு வந்தது.. மங்களம் சற்றே திரும்பிப் பார்த்தாள் ..”நல்லா இருக்கீங்களா அம்மா… அய்யாவைப் பார்த்து எத்தனையோ வருஷம் ஆச்சு.. அப்போல்லாம் தினம் என்கிட்ட மல்லிகைப்பூ வாங்கிண்டு போவாரு.. என் பொண்ணு பள்ளிக்கூட பீஸ் கட்ட அம்பது ரூபா பணம் கூட குடுத்தாரு… நல்ல மனுஷன் . . நான் மெட்ராஸ் போறேன். பொண்ணு அங்கே கல்யாணம் ஆகி மாப்பிளையோட இருக்கா. அவங்களுக்கும் சொந்தம் ஏதும் கிடையாது.. அம்மா.. நீ ஏன் தனியா இன்னும் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கே.. இங்கே வந்துடுன்னு சொல்லிச்சு.. அதான்.. ” என்று சொன்னவள், தன் பையைத் திறந்து மல்லிகைப் பூ பந்து ஒன்றை எடுத்து மங்களத்தின் கையில் கொடுத்து “வச்சிக்கம்மா.. ஏதோ கொடுக்கணும்னு தோணிச்சு.. எங்கே இருந்தாலும் நல்லா இருங்க..”

    மங்களம் தன் கணவரின்  முகத்தைப் பார்த்தாள் ..

    அவர் மதுரை மல்லிகையின் வாசத்தைத் தன் மனதில் முகர்ந்து கொண்டிருந்தார்.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -36

    க. பாலசுப்பிரமணியன்

    சூழ்நிலைகள் கற்றலை பாதிக்குமா?

    education-1

    ” படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி.. ஆனால் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சூழ்நிலைகள் கிடைக்கின்றன? சரியான சூழ்நிலைகள் இல்லாத போதும், தெரு விளக்குகளில் படித்தவர்களும் அகல் விளக்குகளின் அருகில் அமர்ந்து படித்தவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவில்லையா? ” என்று என் நண்பர் சென்ற இதழைப் படித்தபின் எழுப்பிய கேள்விகள் முற்றிலும் உண்மையானவை. படிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள் என்னவென்றுதான் முந்தைய இதழில் பார்த்தோமே தவிர, அவை இருந்தால் தான் நம்மால் படிக்க முடியுமென்றோ சாதிக்க முடியுமென்றோ சொல்லப்படவில்லை.

    தேவை, ஆர்வம், உள்நோக்கம் (Motivation), ஈர்ப்பு போன்ற பல வித காரணங்களால் கற்றலின், படிப்பின் நோக்கம், திறன், அளவு ஆகியவை பாதிக்கப் படுகின்றன. வாழ்க்கையில் பல சாதனைகளை செய்தவர்களின் கற்றல் மிக நெருக்கமான சூழ்நிலைகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று உள்ளது. “சாதிக்க வேண்டும்” என்ற உள்ளுணர்வும் உந்துதலும் ஒருவரிடம் இருக்கும் பட்சத்தில் கற்றலுக்கான விருப்பும் ஆர்வமும் அவர்களுக்குத் தானாக வரும்..

    ஒண்டிக்குடித்தனத்திலும் ஓட்டு வீடுகளிலும் வாழ்ந்துகொண்டு படிக்க இடமில்லாமல் நூலகங்களையும் தோட்டங்களிலும் தெரு விளக்குகளிலும் உட்கார்ந்து கிடைத்த நேரத்தில் படித்து சிறப்பாகக் கற்றவர்கள் பல்லாயிரம். ஆகவே சிறப்பான கற்றலுக்கு நல்ல உள்நோக்கமும் உந்துதலும் தேவை. இவை தானாகவே ஒரு நபருக்கு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். சில நேரங்களில் முன்மாதிரிகளைப் பார்த்தும் அவர்களுடைய சாதனைகளையும் வாழ்க்கைக் கோட்பாடுகளையும் பார்த்தும் அல்லது பெற்றோர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலாலும் இப்படிப்பட்ட உந்துதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

    சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் முன்பு பல வீடுகளில் குழந்தைகள் படிப்பதற்கு புத்தகங்கள் கூட இல்லாத அல்லது வாங்க முடியாத சூழ்நிலைகள் இருந்தது. அப்பொழுது பழைய புத்தகக் கடைகளிலும் அல்லது உற்றார் உறவினர்கள் வீடுகளிலுருந்தும் புத்தகங்களை வாங்கி அவற்றை சரி செய்து ஆண்டு முழுவதும் உபயோகித்த குழந்தைகள் பலருண்டு.. பல நேரங்களில் வீடுகளில் ஒரு குழந்தை படித்த புத்தகத்தை அடுத்த குழந்தைக்காக பேணிக்காத்தது உண்டு.. அப்படிப்படித்த குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, மன நல வளர்ச்சி மற்றும் சாதனைத் திறன்கள் எந்த வயதிலும் குறைந்ததில்லை.

    இந்தக் கருத்தை வலியுறுத்தக் காரணம் – வசதிகளும் சொகுசான சூழ்நிலைகளும் இருந்தால் தான் படிப்பும் கற்றலும் சிறப்பாக இருக்கும் என்ற தவறான கருத்து எவர் மனதிலும் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். வறுமையும் இல்லாமையும் முன்னேற்றத்திற்குத் தடங்கலாக நிச்சயமாக இருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்தத் தடங்கல்களை ஒருவரின் தன்னம்பிக்கையின் மூலமும் விடாமுயற்சியின் மூலமும் வென்று விடலாம் என்பதும் அசைக்க முடியாத உண்மை.

    பல சாதனையாளர்களின் வாழ்க்கைச் சரிதத்தை  பார்க்கும்பொழுது அவர்கள் சந்தித்த சோதனைகளும் தடங்கல்களும் எவ்வாறு அவர்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிகோலியுள்ளன என்பது தெள்ளத்  தெளிவாக விளங்கும்.

    மேலும் எல்லாவிதமான வசதிகளுமுடைய பள்ளிகளில் படித்தால் தான் சிறந்த கற்றல் ஏற்படும் என்பதும் ஒரு தவறான கருத்து. ஒரு பள்ளியின் தரம் அதனுடைய கட்டிடத்தாலோ, அங்குள்ள வசதிகளாலோ அல்லது அங்கு செலுத்தப்படும்  படிப்புக்கான கட்டணத்தாலோ மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. தரமான, கோட்பாடுகளும், தொழிலில் ஈடுபாடுடைய ஆசிரியர்களாலும் மற்றும் கல்வியின் தரத்தில் உறுதி பூண்ட நிர்வாகத்தாலும் தான்  நிர்ணயிக்கப் படுகிறது.

    முப்பது ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் பல தரப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சாதிக்கும் திறன் (Achievement level) அலசப்பட்டது. இதில் தெரிந்த ஒரு உண்மை – வசதி வாய்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சாதிக்கும் உந்துதலைவிட  பல நடுத்தர மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களுக்கு அதிகம் இருந்தது. ஆகவே, சில நேரங்களில் வசதிகள் அனைத்தும் இருந்தாலும் அவை உண்மையான அறிவு மற்றும் மன நல வளர்ச்சிக்கு உதவுவதாக இல்லாமல் இருக்கலாம்.

    ஆகவே கற்றலுக்குச் சாதகமான சூழ்நிலைகள் தேவை .. ஆனால் கற்றலுக்கான ஒரு ஆர்வம், தேவை இருக்கும் பொழுது அதற்கான சூழ்நிலைகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -35

    க. பாலசுப்பிரமணியன்

    எப்படி எப்போது படிக்கவேண்டும்?

    education

    பல வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப்  பற்றிச் சொல்லும் பொழுது:

    ” படிக்கும் போது இவனுக்கு கவனமே இருப்பதில்லை”;

    “ஏண்டா. கன்னத்திலே கைவைத்துக்கொண்டு தலையை குனிந்துகொண்டு படிக்கிறே?”;

    “நீ படிக்கிற இடத்திலே புத்தகத்தில் வெளிச்சமே விழலே.. என்னதான் படிக்கிறாயோ?”

    “இப்படி உட்கார்ந்து படித்தால் முதுகிலே கூனல் விழுந்து விடும்”

    “படிக்கும்பொழுது எதுக்கு ஐ போனைக் காதிலே  வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு படிக்கிறாய்?”

    “சோபாவிலே படுத்துக்கொண்டு படிச்சா எப்படி மண்டையிலே ஏறும்?” – என்றெல்லாம் சொல்லுவதை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

    படித்தல் என்பது ஒரு தனி நபருடைய ஈடுபாடான செயல். அது ஒவ்வொருவரின் உள்ளுணர்வுகளை ஒட்டி வேறுபட வாய்ப்பிருக்கின்றது. இருந்தாலும் பொதுவாக படிப்பத்தைச்  சீர்படுத்த சில விதிமுறைகள் உள்ளன. அந்த கோட்பாடுகளை பின்பற்றும் பொழுது அந்தச் செயல் சிறப்பாக அமைகின்றது. .

    உதாரணமாக:

    1. படிப்பதற்க்கென்று ஒதுக்கப் பட்ட இடத்தில் அமர்ந்து படித்தல் நலம்.
    2. படிக்கும் இடம் அமைதியான இடமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
    3. படிக்கும் இடம் சுத்தமாக இருத்தல் அவசியம்.
    4. படிக்கும் இடத்தில் கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் பொருள்களை நீக்கிவிட வேண்டும்,
    5. படிக்கும் இடத்தில் வெளிச்சம் நன்றாக வரவேண்டும்.
    6. படிக்கும் இடம் காற்றோட்டமாக இருத்தல் நல்லது,
    7. நிமிர்ந்து உட்கார்ந்து படித்தல் கவனத்தை அதிகரிக்க வாய்ப்பு தரும்.
    8. படிக்க ஆரம்பிக்கும் முன் சில நிமிடங்கள் கண்களைமூடி கவனத்தை நிலைநிறுத்தினால் கவனம் சிதறாது.
    9. படிக்கும் நேரத்தில் தொலைபேசி, தொலைக்காட்சி, அலைபேசி, கணினி ஆகியவற்றை அந்த இடத்தில் இருந்து நீக்குதல் நல்லது.
    10. எதை படிக்கவேண்டும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்தல் நல்லது.
    11. கண்கள் சோர்வாக இருக்கும் பொழுது படிப்பதை தவிர்ப்பது நல்லது.
    12. மூளை சோர்வடைந்த நிலையில் இருக்கும்போது படித்தலைத் தவிர்த்தல் நலம்.
    13. செடிகொடிகள் சன்னலருகில் இருக்கும் இடங்களில் அமர்ந்து படித்தல் பயன் தரும்.
    14. மெல்லிய இசை அலைகள் படிப்பதற்கான சூழ்நிலையை மேம்படுத்தும்.
    15. கடின உழைப்பிற்குப் பின் ஓய்வின்றி படித்தலைத் தவிர்க்க வேண்டும்.

    மேலும் வாகனங்களில் பயணம் செய்யும்பொழுது படித்தல் அதிக பலனைத் தராது. மேலும் அது நீண்ட நாட்கள் தொடரும்போது கண்களுக்கு உபாதைகளை ஏற்படுத்தலாம்.

    மூளை செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் மூளையின் கற்கும் திறனை வகைப்படுத்தும் வகையில் வலது மூளை மற்றும் இடது மூளையின் சிறப்புத் திறன்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

    இதைப் பற்றி தனது ( Brain Based Learning ) “மூளை சார்ந்த கற்றல் ” என்ற புத்தகத்தில் எரிக் ஜான்சன் என்பவர் வலது மூளை- இலக்கியம், இசை, மொழிவல்லமை, கலைத்திறன்கள் போன்றவற்றிக்கு உறுதுணையாகவும், இடது மூளை -கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், மற்றும் தர்க்க சம்பந்தமான கற்றலுக்கு உறுதுணையாகவும் இருப்பதை விளக்கியுள்ளார். மேலும் மூளை- வலது மூளைத் திறன்களையும், இடது மூளைத்திறன்களையும் மாறி மாறி உபயோகப் படுத்துவதாகக் கூறியுள்ளார். ஆகவே, ஒரு சாதாரண மனிதனின் மூளை 90 நிமிடங்கள் வலது சார்புடையதாகவும் அடுத்த 90 நிமிடங்கள் இடது சார்புடையதாகவும் வேலை செய்வதாகவும், இதுபோன்று  24 மணி நேரத்தில் 18 முறை மாற்றங்கள் நடப்பதாகவும் ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார். இதன் பொருள் அந்த நேரத்தில் மூளையின் மாற்றுப் பகுதி வேலை செய்யாது என்பதல்ல. அதனுடைய தாக்கம் சற்று குறைவாக இருக்கலாம் என்பதே. தற்போது மூளையின் இருபகுதிகளும் இணைந்து வேலை செய்யும் (Whole Brain Learning) திறன்களைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் வெளி வந்துள்ளன.

    ஆகவே, படிக்கும் பொழுது பாடங்களையும் நேரத்திற்கும் மூளையின் செயல்பாடுகளுக்குத்  தக்கபடியும் மாற்றியமைத்தல் படிப்பு பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளிக்கூடங்களில் பாடங்களுக்கான அட்டவணை அமைக்கும் பொழுது கற்றலுக்கான விஷயங்களை இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைத்தல் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    (தொடரும்)

    Share
  • “மீண்டும் போ-டிப்ஸ் ” (ஆலிவர் கோல்ட்ஸ்மித் மன்னிப்பாராக !!)

    க. பாலசுப்பிரமணியன்

    “ஆறு மணி ஆச்சு, சீக்கிரம் எழுந்திரும்மா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா, காலையிலே எந்திருதோம்மா, குளிச்சோம்மான்னு இல்லாம, இப்படியா தூங்கிக்கொண்டு….” பதஞ்சலி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுவதைக்கண்ட அவர் மனைவி பார்வதி..”கொஞ்சம் கேளுங்கோ.. அவ ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுக்கொண்டிருந்தா.. தூங்கினா தூங்கிட்டுப்போறா கொஞ்ச நேரம் ” தன் மகள் ஜெயந்திக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு வர…

    ஜெயந்தி தன்னுடைய தூக்கத்திலே ஒரு புன்முறுவலுடன் ” அப்பா.. வாசல்ல யாரோ கதவைத் தட்டுகிறார்கள் பாருங்கோ” என்று சொல்ல, கதவைத் திறந்து பார்த்து விட்டு “ஒருத்தருமில்லை. இந்தக் காலையிலே யார் நம்ம வீட்டுக்கு வரப்போறா ” என்கிறார்.

    பதஞ்சலி ஒரு சாதாரண நல்ல மனிதர். கும்பகோணத்தில் மூதாதையர் காலம் முதல் குடியிருப்பு. சிறு வயது முதலே அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வேலை. அந்த விநாயகர்தான் அவருக்குத் துணை.

    காலை ஆறு மணி முதல் பகல் பதினொன்று வரை கோவிலில் இருப்பார். பின் மதியம் வீட்டில் உணவு அருந்தி விட்டு சிறிய தூக்கம். மீண்டும் மாலை நாலரை முதல் இரவு ஒன்பது வரை கோவிலே கதி .. பார்வதி காலையிலே குளித்துவிட்டு கோவிலுக்கு நைவேத்தியத்திற்கு ஏதாவது பண்ணிக் கொடுப்பார். அதே போல் மாலையிலும்…

    அவர்களுக்கு ஒரே மகள்.. ஜெயந்தி ..பத்தொன்பது வயது.. அருகிலுள்ள பெண்கள் கல்லூரியில் பட்டப் படிப்பு ..இரண்டாவது வருடம்… ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பு.  அவளுக்கு ஆசை அதிகம்.. தூக்கத்தில் எங்கெங்கெல்லாம் அவள் உலா போவாள் என்று அவளுக்கே தெரியாது.

    “அப்பா… சரியாய் பாருங்கோ வாசலிலே யாரோ நிக்கறா.. “

    பதஞ்சலி மீண்டும் கதவைத் திறக்க… “ஹல்லோ .. மிஸ்டர். பதன்..எலி ..வீடு இதுதானே” .

    அதிசயமாக அந்த உருவத்தைப் பார்த்தவர் “பதன் எலி இல்லை.. நான் பதஞ்சலி..” என்று திருத்த.. “சாரி.. ” என்று வந்தவர் தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள ..

    பதஞ்சலி வந்தவரைக் கூர்ந்து கவனிக்கிறார்.. ஒல்லியான தேகம். சுமார் 5 அடி 9 அங்குலம் உயரம். சிவப்பும் வெள்ளையும் கலந்த ஒரு வண்ணம்.. தலைமுடி மஞ்சளும் வெள்ளையும் கலந்தது போன்ற தோற்றம்..

    பல கிழிசல் துணிகளை எடுத்துத் தைத்தது போல் பல வண்ணங்களுடய ஒரு சட்டை.. நீலத்தில் ஒரு ஜீன்ஸ் பாண்ட் .. அதிலும் சில ஓட்டைகள்.. தலையில் கருநிறத்தில் ஒரு நீளமான தொப்பி..கையில் ஒரு நீளக் கம்பு.. (வாக்கிங் ஸ்டிக் போல).. மொத்தத்தில் பதஞ்சலிக்கு அவருடைய ஊர் குடுகுடுப்பாண்டி புதிய வேடம் புனைந்து  வந்தது போலிருந்தது…

    “இவரைப் பார்த்தால் நம்ம ஊர்க்காரர் மாதிரித் தெரியலேயே.. இங்கிலாந்தா.. அமெரிக்காவா ..இல்லை.. வேறே ஏதாவது நாடா… ” பதஞ்சலியால் ஊகிக்க முடியவில்லை.

    “நான்.. போ… ” என்று சொல்லிக்கொண்டே தான் கையை அவரிடம் குலுக்குவதற்காகக் கொடுக்க, தயங்கிய பதஞ்சலி “நமஸ்காரம் ..” என்று கைகுவிக்க, ” நான்.. போ.. டிப்ஸ் .. லண்டனிலேந்து ” அவன் சொன்னது, ஏதோ உருகிய உலோகம் தரையில் விழும் போது போடும் சத்தத்தைப் போல் அவர் காதில் விழுந்தது..

    அவனை உள்ளே வரச்சொல்லலாமா இல்லை வெளியிலிருந்தே கைகழுவி விடலாமா என்று அவர் யோசிக்கும் தருவாயில், ஒரு வெளிநாட்டுக்காரனை வாசலில் கண்ட ஆனந்தத்தில் பார்வதி   “ஏன்னா, வந்தவாளை உள்ளே வரச்சொல்லுங்கோ ..” என்று ஒரு நாற்காலியை இழுத்துப்போட அவர் முழிக்கிறார்.

    போ-டிப்ஸ் அடுத்த வார்த்தைக்கு காத்துக்கொண்டிராமல் “ஜெயந்தி எங்கே?” என்று ஆங்கிலத்தில் கேட்டதும் பதஞ்சலிக்கு தூக்கிவாரிப் போடுகிறது.

    “இவனுக்கு ஜெயந்தியை  எப்படித் தெரியும்? ” என்றும் சந்தேகம் எழுந்தது.

    “ஏண்டி.. சீக்கிரம் எழுந்திரு.. உன்னைப் பார்க்க வெளி நாட்டுலேந்து யாரோ வந்திருக்கா .. முகத்தைக் கழுவிண்டு ஓடி வா…” ஏதோ பெண் பார்க்க தான் மகளை தயார் படுத்தவது போன்ற ஒரு உணர்வு அவளுக்கு.

    ஜெயந்தி கண்ணாடி முன் நின்றுகொண்டு தான் முகத்தையும் புடவையையும் ஒருமுறை சரி செய்து கொண்டாள். கருப்பு மையிடும் பென்சிலைக்கொண்டு தான் புருவத்தையும் சற்றே சரிசெய்து கொண்டு, அம்மா தயாராக வைத்திருந்த காப்பி டம்பளரை எடுத்துக்கொண்டு போவின் முன்னே “காப்பி” என்று சொல்லிக்கொண்டே நீட்டினாள்.

    “ஹாய் பேபி,  எப்படி இருக்கே?” என்று ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே தான் கையை அவளிடம் நீட்டினான். ஜெயந்தியும் ஒரு முறை தன் அப்பாவைப் பார்த்துக்கொண்டே கைகுலுக்குவதற்க்காக கையை முன் நீட்டினாள்.

    “கண்றாவி .. கண்றாவி ” என்று மனதுக்குள்ளே உறுமிக்கொண்டே பதஞ்சலி தன்னுடைய பெண்ணின் தைரியத்தைக் கண்டு சற்றே வியந்தார். “பரவாயில்லே.. படிக்க வைத்ததுக்கு நல்ல தைரியம் வந்திருக்கு.. எல்லாரையும் சமாளிக்கறாளே” என்ற பெருமிதம் பார்வதிக்கு..

    “தாங்க்ஸ் ஜெயந்தி.. காபி இஸ் வெரி நைஸ்..  ” என்று பாராட்டிக்கொண்டே தன் அருகில் இருந்த மோடாவை இழுத்துப் போட்டு ” ப்ளீஸ் .. உட்காருங்க…” என்று சொல்ல ஜெயந்தி மோடாவில் அமர பதஞ்சலிக்குக் கோபம் உச்சந்தலையைத் தொட்டது..

    ஜெயந்தியை இவனுக்கு எப்படித் தெரியும்? இவர்கள் முன்னதாக சந்த்தித்திருக்கிறார்களா? சாத்தியமில்லையே .. என நினைத்த பதஞ்சலியின் மனம் பல வேறு கோணங்களில் சிந்திக்க .ஆரம்பித்தது.

    ஒருவேளை.. போன வருடம் லீவுக்கு சென்னையில் தான் மச்சினன் வீட்டுக்கு சென்று இருந்தபோது பழக்கம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டது.. “இருக்கலாம். மச்சினனும் காதல் கல்யாணம் தானே.. “ அவன் மனசு எப்படி இருந்திருக்கும்? ஜெயந்தியை வைத்து அவன் தன்னை பழி வாங்குகிறானோ என்றும் நினைத்தார்.

    “டார்லிங்.. லேடி பிரௌன், லார்ட் பிரௌன் ரெண்டு பெரும் உன்னை ரொம்ப விசாரிச்சாங்க..உன்னுடைய சிரிப்பை எப்போதும் பாராட்டுவாங்க.. :” என்று போ ஆங்கிலத்தில் சொல்ல, “தாங்க்ஸ்” என்று ஜெயந்தி பதில் கொடுத்ததை பார்த்த அவருக்கு முதலில் எப்படி அவனை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்ற சிந்தனை தோன்றியது..

    “ஏம்மா. ஜெயந்தி.. காலையிலே அவர்  டிபன் ஏதாவது சாப்பிடுவாரா.. தேங்காய் சட்னி அரைக்கட்டுமா” என்று பார்வதி சொன்னவுடன் பதஞ்சலி அவளை முறைத்துப் பார்த்தார்.  கொஞ்சம் விட்டால் இவனை வீட்டோடு மாப்பிளையாக ஆக்கிக் கொண்டு விடுவாளோ என்ற பயமும் ஏற்பட்டது.

    ” ஞாபகம் இருக்கா ஜெயந்தி… லண்டன் ஹைட் பார்க்கல நாம ரெண்டு பெரும் கைகோர்த்துக்கொண்டு போகும் பொழுது எப்படி எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள் என்று.. அப்புறம் தேம்ஸ் நதிக்கரையோரம்…   .”

    ஜெயந்தி மனத்திற்குள் சிரித்த்துக்கொண்டாள்..

    “நாசமாய் போச்சு… இவன் என்ன என்னலாமோ சொல்றானே.. இந்தப் பெண்ணும் எல்லாத்துக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டு இருக்காளே…என்ன நடக்கறதுன்னு ஒண்ணுமே புரியலியே..” என்று பதஞ்சலியின் மனம் படபடத்தது…

    “சீக்கிரம் படிப்பை முடித்து விட்டு வா. உன்னை மறுபடியும் லண்டனுக்கு அழைத்துக்கொண்டு போகணும். ” என்று போ சொன்னபோது பதஞ்சலிக்கு கொஞ்சம் தலை சுற்ற ஆரம்பித்தது..

    “சார்… உங்களுக்கு என்ன வேணும்.. நீங்க யாருன்னே எங்களுக்குத் தெரியாது.. என்ன வேணும் சொல்லுங்கோ..எங்களுக்கு வேற வேலை நிறைய இருக்கு… ” பதஞ்சலி படபடவெனப் பேசினார்.

    “ஐ வாண்ட் ஜெயந்தி… எனக்கு ஜெயந்தி வேணும்.. அவளை நான் லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகணும் “

    பதஞ்சலி ஜெயந்தியின் முகத்தை சற்றே கூர்ந்து நோக்கினார். அவள் மௌனம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

    பார்வதியோ தன் பெண்ணின் பிரசவத்திற்கு லண்டன் போனால் எப்படி இருக்கும் என்ற கனவில் இறங்கிவிட்டாள்

    “”பகவானே.. ஜகத்பாலகா ..இது என்ன சோதனை…” என்று நொந்து கொண்டே பதஞ்சலி குளியலறையை நோக்கி சென்றார்.. “முழுகிடறேன்.. தலை முழுகிடறேன் ..” என்று சொல்லிக்கொண்டே அண்டாவிலிருந்து நாலு சொம்பு தண்ணீரை மட மடவென்று தலையில் கொட்டிக்கொண்டவர்..அப்படியே ஒரு சொம்பு தண்ணீரை ஜெயந்தி தலையில் கொட்டிவிட…

    “அப்பா… அப்பா… தலையிலே தண்ணி கொட்டாதீங்கோ.. ” என்று அலறிக்கொண்டே எழுந்த ஜெயந்தி

    “போ.. போ டிப்ஸ் எங்கே.? போயிட்டாரா.. நீங்க அவரை விரட்டிட்டேளா? லண்டனுக்கே திரும்பிட்டாரா? ” என்று கேட்டாள்.

    “போ.. வாவது.. வாவாவது .. ஏதாவது கனவு கண்டாயா?” என்று பார்வதி தன் மகளை உலுக்கிவிட…

    “என்னடி கனவு?… நல்லதா?.. பொல்லாததா?… காலையிலே கனவு கண்டால் பலிக்கும்னு சொல்லுவாங்களே.. என்னடி கனவு கண்டே ?” என்று தந்தை அங்கலாய்க்க ..

    படுக்கையை விட்டு எழுந்த ஜெயந்தியின் உடலிலிருந்து அவள் முந்திய இரவு படித்துக் கொண்டிருந்த ஆங்கில பாடப் புத்தகம் கீழே விழ…

    “பரவாயில்லே.. மேடம்.. ஆலிவர் கோல்ட்ஸ்மித்தோட “போ-டிப்ஸ் ” பாடத்தை நல்லாவே  நடத்தினாங்க ” என்று அவள் மனம் சூளுரை சொல்ல…

    அவள் கண்கள் வாசலை நோக்கி ஓடின.. ஒரு வேளை போ-டிப்ஸ் வெளியே வந்து நிற்பானோ என்ற சந்தேகத்தில்..!!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 34

    க.பாலசுப்பிரமணியன்

    படித்தலும் கற்றலும்

    education

    “அவனைப் பார்த்தாயா, எவ்வளவு வேகமாக பொருள் அறிந்து படிக்கிறான்.. நீயும் படிக்கிறாயே…” என்று குழந்தைகளைப் பார்த்து  அங்கலாய்க்கும் பெற்றோர்களின் குரல் காதில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது..

    மற்ற வீட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மட்டுமின்றி கூடப்பிறந்தவர்களோடும் ஒப்பிட்டிப்பார்க்கும் மனம்  குடும்பங்களில் உண்டு. இது நமது மனத்தின் அன்பின் ஆதங்கத்தில் பிறந்த சொற்களாக இருந்தாலும் அறியாமையின் அறிகுறியாகவே வெளிப்படுகின்றது..

    முன்பே சொன்னபடி ஒரு காட்சியைப் பார்க்கின்ற கண்கள் அந்த ஒளி அலைகளை பிரித்து மூளையின் வெவ்வேறு பாகங்களுக்கு அனுப்புகின்றது. உதாரணமாக ஓடுகின்ற ஒரு நாயைப் பார்க்கும் நமது கண்கள் அதன் உருவ வடிவங்களை நேர் கோடுகளாகவும், வட்டங்களாகவும் மற்றும் பல வடிவங்களாகவும் பதிவு செய்கின்றது. அதே நேரத்தில் அந்த நாயின்  வண்ணங்கள், அதன் நீள அகல பரிமாணங்கள் அனைத்தும் அலசப்பட்டு மூளையின் வெவ்வேறு இடங்களுக்குச்  செல்கின்றன. .. அதே நேரத்தில் குறைத்துக் கொண்டு ஓடுகின்ற அந்த நாயின் ஒலி அலைகளும் காதில் பதிவு செய்யப்பட்டு மூளையின் வெவ்வேறு பாகங்களுக்கு அனுப்பபடுகின்றன. மேலும் ஓடுகின்ற அந்த நாயின் வேகம், நகர்வு, தூரம், திசை அனைத்தும் கண்களால் பரிசீலிக்கப்பட்டு மூளையின் பல்வேறு பாகங்களைச் சென்று அடைகின்றன. . இத்தனையும் சேர்த்து மூளை கண்ணிமைக்கும் நேரத்தின் ஒரு சிறிய விழுக்காட்டிற்குள் ” இந்த கரிய மற்றும் வெள்ளை வண்ணம் கொண்ட நாய் மிகவும் அதிகமாக குறைத்துக்கொண்டே தெரு முனையை நோக்கி வேகமாகச் செல்கின்றது.” என்ற ஒரு பொருளை நமக்கு அறிவிக்கின்றது.

    இந்த செயல் எல்லா மனிதருடைய மூளையிலும் ஒரே மாதிரியாகவும் ஒரே நேரப் பரிமாணங்களிலும் நடப்பதில்லை. இந்த மாறுபட்ட அறிதல் புரிதல் செயல்கள் ஒவ்வொரு தனி மனிதனுடைய கற்றலின் திறனை நிர்ணயிக்கின்றது. அப்படியிருக்கும் போது ஒரு புத்தகத்தை படிக்கும் மாணவன்  முடிக்கும் நேரம், வேகம், திறன் ஆகியவை அவனுக்குத் தனிப்பட்டதாகவே  அமையும்.ஆகவே எந்த இரு மாணவர்களின் படிக்கும் திறனை ஒப்பிடுதல் அறிவுபூர்வமான செயலாகத் தெரியவில்லை. ஆனால் இந்த செயல்களின் திறனை பயிற்ச்சிகள் மூலம் மேம்படுத்தலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர் . படிக்கும் திறனை மேம்படுத்த “வேகமாகப் படித்தலுக்கான” (Speed Reading) பயிற்ச்சிகள், புரிதலை மேம்படுத்துவதற்காக “மெதுவாகப் படித்தலுக்கான” (Slow Reading) பயிற்ச்சிகள்  அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. மேலும் கவிதை படித்தல் (Poetry Reading), கதை படித்தல்,(Story Reading) நாடகம் படித்தல் (Drama Reading) போன்ற உத்திகள் கையாளப்படுகின்றன.

    படித்தல் என்பது ஒரு உணர்வு சார்ந்த செயலாக இருத்தல் அவசியம். படிக்கும் கருத்தை உணர்வுபூர்வமாக படிக்கும் பொழுது அது மனதில் படிவது மட்டுமின்றி நிரந்தர நினைவுக்கு (Long term Memory) அடிப்படையாகவும் அமைகிறது. சில நேரங்களில் வற்புறுத்தலால் குழந்தைகள் பாடங்களைப் படிக்கும் பொழுது அது அவர்கள் செய்யும் ஒரு கடமையின் நிர்வாகமாகவே இருக்குமன்றி உண்மையான கற்றலுக்கு வழி வகுக்காது.

    புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்வது கற்றலில் ஒரு பங்குதான். படிக்கும் பொழுது படிப்பவரின் உடல்நிலை, மனநிலை, உணர்வுநிலை ஆகியவை அதை பாதிக்கின்றன.  படிக்கின்ற எல்லா விஷயங்களும் அறிதலிலும் புரிதலிலும் முடிவதாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. மற்றும் படிக்கின்ற வேகமும் முறைகளும் படிக்கின்ற விஷயத்தைப் பொறுத்ததே.

    உதாரணமாக கதைகளைப் படிக்கின்ற வேகத்திலே நாம் கவிதைகளைப் படிப்பதில்லை. ஏனென்றால் கவிதைகளைப் படிக்கும் பொழுது அதன் பொருள் உள்வாங்கிக்கொள்ள (meaning making) கதைகளைவிட அதிக நேரமாகின்றது. அதேபோல்தான் நாடகங்களைப் படிப்பதைபோல் கட்டுரைகளையும் வர்ணனைகளையும் படிப்பதில்லை.

    சில புத்தகங்களைப் படிக்கும்பொழுது நாம் மேலெழுந்தவாரியாகப் படிக்கின்றோம். மற்ற சில புத்தகங்களைப் படிக்கும் பொழுது ஓரிரு பக்கங்களைப் படிப்பதற்க்கே அதிக நேரமும் கவனமும் எடுத்துகொள்கின்றோம். இதைப் பற்றி அழகாகச் சொல்லுகின்ற ஆங்கிலக் கட்டுரையாளர் பிரான்சிஸ் பேகன்  (“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”) சில புத்தகங்களை படிக்கும்பொழுது நாம் அவற்றை சுவைக்கவேண்டும்  சிலவற்றை அப்படியே விழுங்க வேண்டும். மற்றும் சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்” என்று கூறுகின்றார்.

    அவர் கூறுவது புத்தகங்களை அல்ல; புத்தகங்களில் உள்ள கருத்துக்களை !!

    (தொடரும்)

    Share
  •   சௌதாமினி …………

    க. பாலசுப்பிரமணியன்

    அவள் ஒரு காவியமா?  குறுநாவலா?  சிறுகதையா? … யாருக்குத் தெரியும் ?

    காலையிலே கதிரவனின் முதல் கதிர் வெளிவரும் போது மலர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிபோல அவள் வார்டுக்குள் “குட் மார்னிங் ” என்று சொல்லிக்கொண்டு வரும்பொழுது அந்த வார்டு பூத்து மலரும்..

    “;ஹாய்… சௌ…” காயத்ரி அவளுக்கு பதில் சொல்லி இருவரும் தங்கள் வலது கைகளால் ஒருவரை ஒருவர் தட்டிக்கொள்ள… படுக்கையில் இருந்துகொண்டும் பாதி எழுந்துகொண்டும் இருக்கின்ற நோயாளிகள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை…

    ” என்ன பாட்டி… நல்லா தூங்கினீங்களா ? ராத்திரி தூங்கறத்துக்கு மாத்திரை தந்தாங்களா? இப்போ வலி எப்படி இருக்கு?” சௌதாமினியின் கேள்விக்கணைகளை வழக்கம்போல் எதிர்பார்த்த பாட்டி “பரவாயில்லை கண்ணா. உன்னை பார்த்ததுமே பாதி வலி போயிடுத்து… ” என்று சொல்ல அவள் முகத்தில் ஒரு சிரிப்புக் கீறல் ..

    சௌதாமினி ஒரு செவிலி.. அந்த ஆஸ்பத்திரியில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறாள். அவளுக்கு சொந்த ஊர் திருச்சூர் அருகில் உள்ள ஒரு கிராமம்.

    குரலில் பணிவு.. முகத்தில் அமைதி.. பழகுவதில் கனிவு…ஒரு சகோதரியாக.. ஒரு தாயாக.. ஒரு தோழியாக.. ஒரு தேர்ந்த செவிலியாக… மற்றவர்கள் மனநிலை அறிந்து பழகும் பெண்…

    “என்ன  சார் காலையிலே உடம்பெல்லாம் துடைத்து விட்டார்களா? தூக்க கலக்கமெல்லாம் போயிடுத்தா?  சங்கரைக் கூப்பிடவா? கொஞ்சம் நடக்கிறீங்களா?”  பாஸ்கரனுக்கு ஒரு புதிய சக்தி வந்தது போன்ற உணர்வு.. “தாங்க்ஸ்,  சிஸ்டர். எல்லாம் கரெக்ட்டா நடக்குது…”

    சித்ரா பௌர்ணமியன்று கள்ளழகர் ஒவ்வொரு மண்டபமாக அமர்ந்து மரியாதைப்பெற்று வருவதுபோல், இவளும் ஒவ்வொரு படுக்கை அருகிலும் சென்று இனித்துப் பேசி அவர்களின் மனத்திற்கு மருந்து கொடுத்து வருவது ஒரு கண்கொள்ளாக் காட்சி…

    ” என்ன .சார்.. கொஞ்ச நேரத்திலே டிஃபின் வந்துடும். ரெடியாயிட்டீங்களா?” என அந்த முதியவரிடம் கேட்க, அவர் முகம் சுளிப்பதுகண்டு “என்ன,,, இன்னிக்கும் அதே இட்லியான்னு கேட்கறீங்களா?” என்று அவர் பாவனையின் உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு கேட்க, அவர் தலை அசைக்கிறார்…

    “கொஞ்சம் இருங்க.. கேன்டீன்ல சொல்லி மீன்குழம்பும் சிக்கன் பிரியாணியும் கொண்டு வர சொல்றேன்.. அப்போதான் இங்கேயே இன்னொரு வாரம் தங்கலாம்..” என கிண்டலடிக்க அந்த வார்டே சிரிக்கின்றது..

    “இந்தாங்க உங்க மாத்திரை..” என்று காலை தலையணை மேலே வைத்துப் படுத்திருக்கும் அந்த இளைஞரிடம் கொடுக்க..”நாலுதான் சார்…காலையிலே நாலுதான்… மீதி பதினாறு பின்னாலே தொடரும்…” மலையாள உச்சரிப்பில் அவள் பேசும் தமிழும் கேட்பதற்கு இனியதாகவே இருக்கும்.

    “பாட்டி.. என்ன சாப்பிடலை.. எல்லாம் அப்படியே இருக்கு ..””வேண்டாம்மா .. பிடிக்கலை..”

    “இல்லை. சாப்பிடணும்.. கொஞ்சம் எனக்காக…” கையில் உணவை எடுத்து ஊட்டுகின்றாள். “வேண்டாம்மா..”

    “ஒருவாய்.. உங்க பெண்ணுக்காக..”

    சிரித்துக்கொண்டே அந்தக் கிழவி.. “உன்னை மாதிரி ஒரு பொண்ணு வீட்டில இருந்தால் போதும்  நாட்டில முதியோர் இல்லமே இருக்காது. ” சௌதாமினி சிரித்துக் கொண்டே “பாட்டி.. நல்லா பேசறீங்க..” என்று பதிலளிக்கிறாள்.

    அந்த அறையின் நடுவில் போடப்பட்ட மேசைமீது நோயாளிகள் சம்பந்தப்பட்ட உள்ளீட்டுக்களை பதிவு செய்துகொண்டிருந்த சௌதாமினி திடீரென்று திரும்பி “டேய், லூசு..” என்று சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞனைப் பார்த்து அழைக்க நான் சற்று வியந்தேன்..

    இது என்ன விளையாட்டா? நட்பின் பரிமாணமா? அந்த இளைஞன் இவளை பார்த்து தன் ஆள்காட்டிவிரலால் ஜாடை காட்டி “கொன்னுடுவேன்” என்று சிரித்துக்கொண்டு  செல்கிறான்.

    சிறிதுநேரம் கழித்து என்னை நோக்கி வந்த சௌதாமினியிடம் ” அவர் யார்” எனக்கேட்டேன். ” டாக்டர் சார்.”

    “அவரைப் போய் லூசுன்னு சொல்றீங்க..”

    “பிரண்ட் சார்.  எங்க ஊர் பையன். “

    “இருந்தாலும் எல்லார் முன்னாலேயும் அவரைப் போய் லூசுன்னு சொன்னா, அவங்க என்ன நினைப்பாங்க .”

    சௌதாமினியின் தலையும் கண்களும் கீழே விழுந்தன.. ” சாரி சார் ..அவர் தப்பா நினைக்க மாட்டார்..”

    “இல்லேம்மா.. அவர் தப்பா நினைக்கவிட்டாலும் மற்றவர்கள் அவரை மதிப்பார்களா?”

    அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் தான் தவறை உணர்ந்து விட்டாள் எனப் புரிந்தது.

    “என்னம்மா.. நர்சிங் படிச்சிருக்கய்யா “

    “ஆமாம் சார். M  Sc நர்சிங்.. “

    “எப்படிம்மா எல்லாரோடையும் இவ்வளவு அன்பா நட்போட இருக்க முடியறது?” அவள் பதில் சொல்லவில்லை..

    “திருமணம் ஆயிடுத்தா?”

    சிரித்துக்கொண்டே  “இரண்டு  பெண்கள்.. முதல் பெண் ஐந்தாம் வகுப்பு ரெண்டாவது பெண் மூன்றாம் வகுப்பு…”

    ” உங்கள் கணவர்…?”

    தான் விழிகளை சற்றே மேல்தூக்கி இதெல்லாம் உங்களுக்குத் தேவையா என்று கேட்பதுபோல் வைத்துக்கொண்டு..

    “நீங்க எங்க அப்பா மாதிரி. அதனாலே சொல்றேன்… நான் சிங்கிள் .. நான் ஷிப்ட்ல வேலைக்கு வந்ததாலே என் கணவரும் ஷிப்ட்ல குடும்பம் வைத்துக்கொண்டார்.  அதனாலே பிரிந்து விட்டோம். மூன்று வருஷம் ஆச்சு.”

    என் கண்களின் ஓரத்தில் கசிந்த நீரை அவள் பார்க்கத் தவறவில்லை.

    “ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க சார். இதெல்லாம் வாழ்க்கையிலே யதார்த்தம். ஒரு பெரியவர் சொல்லிருக்கார்.. Life is a  Challenge – Meet it ; Life is a game – play it “..

    ஏதோ அழைப்பு வர அவள் அந்த இடத்திலிருந்து சென்று விட்டாள் .

    சில மணி நேரம் கழித்து தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி “சார்.. டூட்டி நேரம் முடிந்து போச்சு. நான் கிளம்பறேன்.. நாளைக்கு நான் வரும்போது நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிருப்பீங்க.. நான் சொன்னதை மறந்துடாதீங்க…”

    அவள் முகத்தைப் பார்த்தேன். “அதான் சார்.. Life is a  Challenge – Meet it ; Life is a game – play it “..

    “வீட்டில எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க.. கொஞ்சம் சிரித்துக்கொண்டே இருங்க.. இப்படி உம்முன்னு இருக்காதீங்க…”

    அவள் அந்த வார்டை விட்டு கிளம்ப எல்லாருடைய கண்களும் அவள் சென்ற பாதையை பார்த்துக்கொண்டிருந்தது.

    வீட்டுக்கு வந்ததும் வரவேற்பு அறையில் இருந்த கீதோபதேசம் படத்தைப் பார்த்தேன்… “கண்ணன் முகத்தைப் பார்த்தால் சௌதாமினி முகம் மாதிரியே இருக்கில்ல?” என் மனம் எழுப்பிய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

    Share
  • மீராவின் காதல்…..

    க. பாலசுப்பிரமணியன்

     

    கற்சிலையே நீயென்றார்   கண்ணாயென் காதலனே !

    கையிரண்டில் உனையணைத்துக்  காலமெல்லாம் வாழ்வேனே !

    கனவெல்லாம் நீயிருக்க கண்ணிரண்டும் நீர்வடிக்க

    காசினியில் உன்னையன்றி வேறொன்றும் அறியேனே !

     

    கருவண்ணம் நீயென்று யார் சொன்னது ?

    கருவிழியால் பார்த்ததாலே அது வந்தது !

    கருநாகம் வால்பிடித்துக்  கண்ணா! நீயாட

    கண்களெல்லாம் கைகோர்த்து முன் நின்றது !

     

    முன்னிரவும் பின்னிரவும் மனமெல்லாம் உனைத்தேட

    கண்ணருந்தும் விருந்தாக கருவிழியில் நின்றாய் !

    விண்மறந்து  மண்மறந்து உனை நினைத்ததும்

    வண்ணமெல்லாம் உனதென்றே கார்மேகம் சொன்னது !

     

    கருஞ்சடையில் பீலிசூடி குழலூதி நின்றாய் !

    கண்ணா ! காலமெல்லாம் உன்பின்னே நின்றது !

    கோவினங்கள் கூட்டத்திலே நீ மறைந்தாய்

    கோபியர்கள் ஆட்டத்திலே என்னை மறந்தாய் !

     

    கோட்டையினைத் துறந்து கூடிடவே வந்தேன்

    பாட்டையிலே உன் குழலில் என்னை மறந்தேன் !

    சாட்டையடி வாழ்க்கையிலே சமரசங்கள் இல்லை

    சாரதியே !  காதலிலே கலியுகத்தைத் துறந்தேன் !

     

    கொடியவிடத்தைக் குடித்த பின்னும் மரணமில்லை !

    கருநாகம் தீண்டிடவும்  கடுகளவும் பயமில்லை !

    கோகுலனே! துணையிருப்பாய்!கோமகனே! காத்திருப்பாய் !

    கோதையுடன் ஆடுகையில் கொஞ்சமெனை நீநினைப்பாய் !

     

    தஞ்சமென்று வந்தோரை வஞ்சமின்றி ஏற்ப்பவனே !

    மஞ்சமென்று வந்தேன் நெஞ்சமுனது நாடி !

    கொஞ்சிவிட ஆசையில்லை கோதையவள் மாற்றி

    எஞ்சிவிட்ட வாழ்வினையே வாழ்ந்திடுவேன் தாள்போற்றி !

     

     

    Share
  • குற்றாலச் சாரலிலே ……

    க. பாலசுப்பிரமணியன் 

     

    பொதிகையிருந்து பூத்துவரும் புதுப்புனலே

    பொழிந்துவிடும் பொலிவுடனே குற்றாலத்தில் ..

    பொங்குதமிழில்  புன்சிரிக்கும் கவிதையென

    புதுமணமே முகர்ந்துவிடும் மலைச்சாரல் !

     

    எதுகையின்றி மோனையின்றி தாளமின்றி

    இசைபாடும் இலையசைத்து மரங்கள் !

    கலையரசி யாழிசையைக் கவர்ந்துவந்து

    காதருகே கவிபாடும் கருவண்டுகளே !

     

    மங்குஸ்தான் பழம்பறித்து மகிழ்ந்திருக்கும்

    மந்தியெல்லாம்  மலையோர மரங்களிலே !

    மலைச்சாரல் நீர்நனைந்து மலர்களெல்லாம்

    மண்வீழ்ந்து மாலைதன்னை கோர்க்கும் !

     

    வானமுதம் வழிந்ததுபோல் வளைந்துவரும்

    வாசமுடை மூலிகையுடன் தேனருவி !

    வான்தெறிக்கும் நீர்திவலையில்  வானவில்லாட

    வள்ளலென பெருகிவரும் ஐந்தருவி !

     

    கைநனைத்துக் கால்நனைத்துத் தலைநனைத்து

    உடல்நனைக்க உளம்நனைத்திட ஓடும் !

    கடுகெண்ணை நல்லெண்ணெய் தலையூரக்

    களைப்பெல்லாம் நீரினிலே கரைந்தோடும் !

     

    தூதுவளை  வல்லாரை  நெல்லிப்பொடியோடு

    தூக்கம்வர நல்லதொரு ஜாதிக்காயும்

    தூயமனம்காண  மோனமுடன் யோகத்தையும்

    முதுகலையாய் ஓதிவிடும் யோகியர்கள் !

     

    மேகங்களைத் தலைசுமந்த மோகத்திலே

    புவியரசி காதலிலே மலையரசன்  !

    வேழங்கள் அசைந்தாடி நடப்பதுபோல்

    வேகமின்றி அரவணைக்கும் தென்றல் !

     

    கண்திறந்து பார்த்தோருக்கு காட்சியங்கே

    கயிலைநாதன் கயல்விழியின் திருக்கோலம் !

    கண்மூடி மலையருவி முன்னிருந்தால்

    காலம்மறந்து ஞாலம்மறக்கும் நல்யோகம் !

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 33

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றல் சிறப்புற  எவ்வளவு தூக்கம் தேவை ?

    education

    ” வகுப்பில் தூங்கி வழியாதே. போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா…” என்று ஒரு முறையாவது மாணவர்களைப் பார்த்துக் கூறாத ஆசிரியர்களே இருக்க முடியாது. விருப்பமில்லாத பாடங்கள், சோர்வுற்ற மனநிலை, ஆசிரியர்களிடம் ஈடுபாடற்ற தன்மை, உடல் சோர்வு, உணவு வகைகள் மற்றும் உண்ணும்  முறைகளால்   தூக்க நிலை  ஊக்கப்படுத்தப்பட்டு கற்றலில் மற்றும்  கவனத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது .

    நல்ல தூக்கமின்மை கற்றலை வெகுவாக பாதிக்கும் என்று  ஆராய்ச்சிகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சராசரியாக மூளை தொடர்ந்து 16  மணி நேரம் வேலைபார்த்தபின் களைப்புற்று தூக்கத்தைத் தழுவுகின்றது. சிலருக்கு தூக்கம் 6 அல்லது 7 மணி நேரம்  போதுமானதாக உள்ளது. இந்த நேரம் ஒரு தனி மனிதருடைய உடல்வாகு மற்றும்  பல பரிமாணங்களால் நிச்சயிக்கப் படுகின்றது. எனவே அனைவரையும்  ஒரே மாதிரியான நேரப் பரிமாணங்களில் கட்டுபடுத்துவதோ அல்லது வகைப் படுத்துதலோ  தவறாகின்றது.

    “ஒரு மனிதனுக்குள்ளே தூக்கத்திற்கும் விழிப்பிற்க்கும் இடையே ஒரு மிகப்பெரிய போராட்டமே நடக்கிறது” என்று மூளை அறிவியல் நிபுணர் ஜான் மெடீனா என்பவர் கூறுகின்றார். ஒரு தனி மனிதனுக்கு தூக்கம் ஒரு நாள் நிறைவு பெறவில்லையென்றால் அதை  உடலும் மூளையும் “தூக்கக் கடன் “(sleep Debt) கணக்கில்  சேர்த்து விடுகின்றன. இந்தக் கடன் சுமை கற்றலை கிட்டத்தட்ட 30 விழுக்காடுகள் குறைக்கின்றன என்றும், இந்தச் சுமையின் அதிகரிப்பும் கற்றலும் எதிர் விகிதத்தில் இருப்பதாகவும்  காணப்பட்டுள்ளது. ஆகவே தூக்கத்தை விலக்கி அதிக நேரம் கண்விழித்துப் படிப்பது மூளையின் ஆரோக்கியத்திற்க்குக் கெடுதலாக இருப்பதோடு மட்டுமின்றி நல்ல நினைவின் அடித்தளங்களை ஆட்டிவிடுகின்றன.

    “அன்றைய பாடங்களை அன்றே படி” என்று சொல்லப்படுவதும் “பாடங்களை  திரும்பத் திரும்பப் படி” என்று பல காலங்களாகக் கொடுக்கப்பட்ட அறிவுரை மூளையின் இயற்கையான குணங்களுக்கு ஏற்றதாக அமைந்ததாம்.

    தூக்கம் பாதிக்கப்படும் நிலையில் கற்றலில் கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன:

    1. கவனமின்மை
    2. நினைவுச் சிதறல்
    3. ஆர்வக் குறைவு
    4. மன அழுத்தம்
    5. அமைதியின்மை
    6. வெறுப்பு
    7. தேவையற்ற கோபம்
    8. கருத்து ஒருங்கிணைப்பின்மை
    9. செயலில் தாமதம்
    10. தளரும் புத்திகூர்மை

    ஆகவே சரியான நிறைவான தூக்கம் எவ்வாறு கற்றலுக்குத் தேவைப் படுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். மேலும் நம்முடைய தூக்கத்திற்கான அட்டவணைகள் எப்படியிருந்தாலும் நமது உடல் தனக்கான அட்டவணையை தானே தயாரித்துக் கொள்கிறது. இதை உயிரி கடிகாரம் (Bio -clock ) என்று  அழைப்பார்கள். இந்த கடிகாரத்தை நாம் மாற்றி அமைக்க நினைக்கும் பொழுதில் அதனால் உடல் ஹார்மோன்களின் செயல்கள் பாதிக்கப்பட்டு பலவிதமாக உடல்நிலை மற்றும் அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

    தூக்க நேரங்களை மாற்றி அமைத்து கற்றலைத் தொடரும் நிலையில் மூளையில் அதற்க்கான வலைத்தளங்கள் வலுவாக அமைவதில்லை. மாற்றாக நல்ல தூக்கத்தின் போது மூளை பல வினாக்களுக்கு அமைதியாக பதிலைத் தேடி வைத்துக்கொள்வதாகவும் கருதப்படுகின்றது.

    ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டெலீவ் என்ற ஒரு வேதியல் ஆராய்ச்சியாளர் தன்னுடைய ஆராய்ச்சியின் வினாக்களுக்கு தூக்கத்தில் பதில் கண்டதாகக் கூறப்படுகின்றது. இதே போல கெகுலே என்ற விஞ்ஞானி தன் கண்டுபிடிப்பிற்கு தூக்கத்தில் கண்ட கனவே காரணம் என்று சொன்னதாக பரவலாகக் கூறப்படுகின்றது.

    சிக்கல் தீர்த்தல் (Problem Solving ), நெருக்கடி மேலாண்மை (Crisis Management) போன்ற பல சீரிய அறிவுத்திறன்களுக்கு  நல்ல  தூக்கத்தின் தேவையை வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

    தற்காலத்தில் மாணவர்கள் தூங்கும் நேரத்திற்கு முன் அதிக நேரம் கண்விழித்து அலைபேசிகளில் பேசிக்கொண்டிருத்தலும், உரை செய்திகளை (Text message)  அனுப்புதலும் மூளையின் ஓய்வுக்கும் அமைதியான உறக்கத்திற்கும் ஏதுவானதாக இல்லை என்று உணரப்படுகிறது.  இதனால் தூங்கும் நேரத்தில் மூளையில் நினைவு அழுத்தங்கள் ஏற்பட்டு கற்றலின் ஆழத்தையும் திறனையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுவது மட்டுமின்றி மனநல வல்லுனர்களும்  கருதுகின்றனர்.

    (தொடரும்)

    Share
  • “நான்” என்னும் ஒரு நாடகம்  

    க. பாலசுப்பிரமணியன்

     

    கரையோரம் கால்நனைத்துக் கடல்மீளும் அலைபோல

    காற்றிழுக்கக் கரைசேரும் என்னுயிரே!

    கார்மேகம் இடையிடையே கண்சிமிட்டும் மின்னலைப்போல்

    களிப்படைந்த புலன்காட்டும் புன்சிரிப்பே!

     

    வானுயரப் பறக்கின்ற நீர்த்திவலை நிலம்காட்டும்

    வண்ணம்போல் வானவில் கனவுகளே !

    வாடாத மலரென்றும் வாசம்வரும் நித்தமென்றும்

    வாழ்க்கையை வாழ்த்துகின்ற மனமே !

     

    போகுமிடம் தெரியாத புதிரென்று புரிந்தபின்னும்

    போகத்திலே விடைதேடும் வாழ்வே !

    போதாத மனம்கொண்டு புகலிடம் தேடிச்சென்று

    போராடி புலியாட்டம் போடும் ஆசைகளே !

     

    முதல் இதுவென்றும் முடிவு அதுவென்றும்

    முன்னறியாப் பிறவியன்றோ நான் !

    முடியாத விளையாட்டிலென்னை முதலாக வைத்து

    முன்வினைக்குப் பழிதீர்க்கும் படலமிதோ?

     

    புலியாக, நரியாக, புள்ளாகப் புழுவாக

    புவியரசாய் நான் போடாத வேடமில்லை !

    புரியாத கதையிதுவும் முடிகின்ற நேரத்தில்

    புரியாமல் எனைக்கண்டே நான் நகைக்கின்றேன் !

    Share
  • அபிராமியே.. எழில்ராணியே !!!

    க. பாலசுப்பிரமணியன்

     

    ஒரு நாளும்  இரு விழியும்  போதுமோ உனைக்காண,

    ஒரு குரலும் ஒரு மொழியும் போதுமோ உனைப்பாட,

    ஓருயிரும் ஒருலகும்  போதுமோ உன்னருள்நாட,

    உலகாளும் அபிராமியே ! உளமாளும் எழில்ராணியே !

     

    நிறைஞானி நிலைமறந்து நிறைநிலவாய் நினைந்திடவே

    காரிருளில் ஒளிர்நிலவாய் வலம்வந்த ஓங்காரியே !

    பிறைதன்னை தலைசூடி பித்தான பரமேசன்

    பிணிதீர்க்க சரிபாதி உடல்கொண்ட சாம்பவியே !

     

    குலம்காத்து நலம்காத்து மனம்காத்து உயிர்காத்து

    விடையீசன் துணைகாத்து வினைதீர்க்கும் விசாலாட்சியே !

    மலையரசன் மகளாகி கலையரசன் துணையாகி

    அருளரசின் தாயான மாமேரு மலைவாசியே !

     

    விடியாத பிறவிக்கும் விதிமுடிக்கும் கூற்றுக்கும்

    இடையான வாழ்விற்கு வழிகாட்டும் இசைஞானியே!

    சிலையாக நீயிருந்தும் கலைக்கரும்பாக இனிக்கின்றாய் !

    விளையாட என்னைவைத்து விதியென்று சொல்கின்றாய்!

     

    வித்தாக வினையாக சொத்தாக சுகமாக

    விளையாத கனியாக வாசலில் நிற்கின்றாய்!

    அறியாத அறிவுக்கும் புரியாத புதிருக்கும்

    நினையாத நினைவுக்கும் அப்பாலே அழைக்கின்றாய்!

     

    பூவாகக் கனியாகப்  பொழிலாக எழிலாக

    பூங்காற்றின் இதமாக அறிகின்றேன் பூங்குயிலே !

    பொலிவாக நடைபயின்று பூபாரம் இறக்கிடவே

    புதுநிலவாக ஒளிதந்து புலன்காப்பாய் அபிராமியே!

    Share