க. பாலசுப்பிரமணியன்

சூழ்நிலைகள் கற்றலை பாதிக்குமா?

education-1

” படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி.. ஆனால் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சூழ்நிலைகள் கிடைக்கின்றன? சரியான சூழ்நிலைகள் இல்லாத போதும், தெரு விளக்குகளில் படித்தவர்களும் அகல் விளக்குகளின் அருகில் அமர்ந்து படித்தவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவில்லையா? ” என்று என் நண்பர் சென்ற இதழைப் படித்தபின் எழுப்பிய கேள்விகள் முற்றிலும் உண்மையானவை. படிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள் என்னவென்றுதான் முந்தைய இதழில் பார்த்தோமே தவிர, அவை இருந்தால் தான் நம்மால் படிக்க முடியுமென்றோ சாதிக்க முடியுமென்றோ சொல்லப்படவில்லை.

தேவை, ஆர்வம், உள்நோக்கம் (Motivation), ஈர்ப்பு போன்ற பல வித காரணங்களால் கற்றலின், படிப்பின் நோக்கம், திறன், அளவு ஆகியவை பாதிக்கப் படுகின்றன. வாழ்க்கையில் பல சாதனைகளை செய்தவர்களின் கற்றல் மிக நெருக்கமான சூழ்நிலைகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று உள்ளது. “சாதிக்க வேண்டும்” என்ற உள்ளுணர்வும் உந்துதலும் ஒருவரிடம் இருக்கும் பட்சத்தில் கற்றலுக்கான விருப்பும் ஆர்வமும் அவர்களுக்குத் தானாக வரும்..

ஒண்டிக்குடித்தனத்திலும் ஓட்டு வீடுகளிலும் வாழ்ந்துகொண்டு படிக்க இடமில்லாமல் நூலகங்களையும் தோட்டங்களிலும் தெரு விளக்குகளிலும் உட்கார்ந்து கிடைத்த நேரத்தில் படித்து சிறப்பாகக் கற்றவர்கள் பல்லாயிரம். ஆகவே சிறப்பான கற்றலுக்கு நல்ல உள்நோக்கமும் உந்துதலும் தேவை. இவை தானாகவே ஒரு நபருக்கு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். சில நேரங்களில் முன்மாதிரிகளைப் பார்த்தும் அவர்களுடைய சாதனைகளையும் வாழ்க்கைக் கோட்பாடுகளையும் பார்த்தும் அல்லது பெற்றோர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலாலும் இப்படிப்பட்ட உந்துதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் முன்பு பல வீடுகளில் குழந்தைகள் படிப்பதற்கு புத்தகங்கள் கூட இல்லாத அல்லது வாங்க முடியாத சூழ்நிலைகள் இருந்தது. அப்பொழுது பழைய புத்தகக் கடைகளிலும் அல்லது உற்றார் உறவினர்கள் வீடுகளிலுருந்தும் புத்தகங்களை வாங்கி அவற்றை சரி செய்து ஆண்டு முழுவதும் உபயோகித்த குழந்தைகள் பலருண்டு.. பல நேரங்களில் வீடுகளில் ஒரு குழந்தை படித்த புத்தகத்தை அடுத்த குழந்தைக்காக பேணிக்காத்தது உண்டு.. அப்படிப்படித்த குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, மன நல வளர்ச்சி மற்றும் சாதனைத் திறன்கள் எந்த வயதிலும் குறைந்ததில்லை.

இந்தக் கருத்தை வலியுறுத்தக் காரணம் – வசதிகளும் சொகுசான சூழ்நிலைகளும் இருந்தால் தான் படிப்பும் கற்றலும் சிறப்பாக இருக்கும் என்ற தவறான கருத்து எவர் மனதிலும் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். வறுமையும் இல்லாமையும் முன்னேற்றத்திற்குத் தடங்கலாக நிச்சயமாக இருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்தத் தடங்கல்களை ஒருவரின் தன்னம்பிக்கையின் மூலமும் விடாமுயற்சியின் மூலமும் வென்று விடலாம் என்பதும் அசைக்க முடியாத உண்மை.

பல சாதனையாளர்களின் வாழ்க்கைச் சரிதத்தை  பார்க்கும்பொழுது அவர்கள் சந்தித்த சோதனைகளும் தடங்கல்களும் எவ்வாறு அவர்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிகோலியுள்ளன என்பது தெள்ளத்  தெளிவாக விளங்கும்.

மேலும் எல்லாவிதமான வசதிகளுமுடைய பள்ளிகளில் படித்தால் தான் சிறந்த கற்றல் ஏற்படும் என்பதும் ஒரு தவறான கருத்து. ஒரு பள்ளியின் தரம் அதனுடைய கட்டிடத்தாலோ, அங்குள்ள வசதிகளாலோ அல்லது அங்கு செலுத்தப்படும்  படிப்புக்கான கட்டணத்தாலோ மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. தரமான, கோட்பாடுகளும், தொழிலில் ஈடுபாடுடைய ஆசிரியர்களாலும் மற்றும் கல்வியின் தரத்தில் உறுதி பூண்ட நிர்வாகத்தாலும் தான்  நிர்ணயிக்கப் படுகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் பல தரப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சாதிக்கும் திறன் (Achievement level) அலசப்பட்டது. இதில் தெரிந்த ஒரு உண்மை – வசதி வாய்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சாதிக்கும் உந்துதலைவிட  பல நடுத்தர மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களுக்கு அதிகம் இருந்தது. ஆகவே, சில நேரங்களில் வசதிகள் அனைத்தும் இருந்தாலும் அவை உண்மையான அறிவு மற்றும் மன நல வளர்ச்சிக்கு உதவுவதாக இல்லாமல் இருக்கலாம்.

ஆகவே கற்றலுக்குச் சாதகமான சூழ்நிலைகள் தேவை .. ஆனால் கற்றலுக்கான ஒரு ஆர்வம், தேவை இருக்கும் பொழுது அதற்கான சூழ்நிலைகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *