க. பாலசுப்பிரமணியன்

“மல்லிகைப்பூ என்ன விலை?”  என்று வடக்கு மாசி வீதி விநாயகர் கோவிலுக்கு எதிர் நடைபாதையில் அமர்ந்திருந்த பூக்காரியிடம் சம்பந்தம் கேட்டார்.

” நூறு பத்து ரூபா ” என்று அவள் சொன்னதும் அவருக்குத்  தூக்கி வாரிப் போட்டது.

“என்ன யானை விலை சொல்லறே?”

“சந்தையிலே பூ கிடையாது சார். அதுவும் இன்னிக்கி வெள்ளிக்கு கிழமை.. டிமாண்ட் அதிகம். ” என்று ஆங்கிலம் கலந்த தமிழில் அவள் சொன்னதும் நல்ல விவரம் தெரிந்தவள் என்று அவருக்கு புரிந்தது.

அவன் நினைவு பின்னோக்கிச் சென்றது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே மதுரையில் தினம் அம்மன் சன்னதி அருகில் உள்ள மொத்த வியாபார பூக்கடைக்குச் சென்று பூ வாங்கி வந்ததும், அதை சிறிது நேரம் தொடுத்து விற்பதற்காகத் தன் தாயாரிடம் கொடுத்ததும் அவர் நினைவுக்கு வந்தது..

எட்டாவது வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாள் வடக்கு வெளிவீதியில் உள்ள தன் பள்ளிக்குத் தாமதமாகச் சென்றதும் “ஏண்டா லேட்?” என்று ஆசிரியர் கேட்ட பொழுது “சார், அவன் பூத்தொடுக்கறதிலே நேரத்தை மறந்திருப்பான் சார்…” என்று சக மாணவன் கிண்டலடிக்க அனைவரும் சிரித்ததும் அவருக்கு நினைவில் வந்தது.

அது மட்டுமா? தினம் சில மல்லிகைப் பூக்களையும் அதோடு ஒரு மரிக்கொழுந்தையும் தான் நோட்டுக்குள் வைத்து அடுத்த நாள் அதை முகர்ந்து பார்க்கும் பொழுது கிடைத்த ஆனந்தமும் ஞாபகத்தில் இருந்தது.

சம்பந்தம் ஒரு ஏழைக்கு குடும்பத்தில் மதுரையில் பிறந்தவர். அவர் தந்தை மணிநகரத்தில் ஓர் மோட்டார் ரிப்பேர் செய்யும் கடையில் மெக்கானிக்காக இருந்தார், தாயார். வீட்டைக் கவனித்த படியே மாலையில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பத்தாம் வகுப்புவரை இவர் படிப்பு முடிந்தவுடன் அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் உதவியாளராகச் சேர்ந்த அவர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு மேலாளர் பதவிவரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.

பக்கத்திலிருந்தவர் பூக்காரியிடம் பேச்சுக்கு கொடுக்க, சம்பந்தம் ” அஞ்சு நூறு குடும்மா ” என்று ஒரு ஐமபத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அப்படியே அந்தப் பூவை நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலில் கொடுத்து வேண்டி நின்றார்.

“பிள்ளையாரப்பா. பிறந்ததிலேந்து அறுபது வருடமா உன்னோட நிழலிலே இந்த ஊரிலேயே வாழ்ந்தாச்சு.. இப்போ இந்த மண்ணை விட்டு போக வெச்சுட்டியே… எப்படி நித்தம் உன்னைக் காணாமல் இருப்பேன்?” என்று கண்களில் வந்த நீரை துடைத்துக்கொண்டே நின்றபோது விநாயகர் சிலையிலிருந்து விழுந்த ஒரு மலர் அவருக்கு கிடைத்த ஆசியாக மனத்தைத் தேற்றிக் கொண்டார்.

கோடை மழைக்கு அடிப்போட்டு வானம் கருத்துக் கொண்டு வந்தது.. மணி ஐந்து. வீட்டுக்குச் சென்று எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் வண்டியைப் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவரை துரிதப் படுத்தியது.

மதுரை இரயில்வே ஸ்டேஷனில் மழை பெய்துகொண்டு இருந்தது. பல இரயில்கள் தாமதமாக இயங்கிக்கொண்டிருந்தன. மழை ஈரத்திலிருந்து தப்பிப்பதற்காக பயணிகள் கிடைத்த இடத்தில் கும்பலாக அமர்ந்திருந்தனர்.

சம்பந்தம் தன் மனைவி மங்களத்துடன் அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தார். அவரிடம் மூன்று பெட்டிகளும் இரண்டு பெரிய பைகளும் இருந்தன.. ஊரில் உள்ள வீட்டைக் காலி செய்து வீட்டுக் கிளம்புவதென்றால் சும்மாவா? அவர் மனம் மிகவும் கனத்திருந்தது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஊரை வீட்டுக் கிளம்புவதை நினைத்து வலி. வேறென்ன செய்ய? அவருடைய ஒரே மகன், சென்னையில் வேலை கிடைத்த பின்னே  அங்கேயே தங்கிவிட்டான். “என்ன இருந்தாலும் சென்னை சென்னைதான் அப்பா. அங்கே இருக்கிற வாழ்க்கை இங்கே கிடைக்குமா?” என வேண்டாத விதண்டாவாதம் பேசி அவரை ஒத்துக்கொள்ள  வைத்தான்.

திருமணம் ஆன பிறகு அங்கேயே ஒரு வீடு வாங்கிவிட்டு வாழ்க்கை பயணத்தைக் தொடங்கிவிட்டான். தந்தையும் தாயையும் ஊரைக் காலிசெய்து கொண்டு வரச் சொல்லி கட்டாயப் படுத்த இவரும் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ள வேண்டியதாதாயிற்று,

ஆழ்ந்த சிந்தனையிலிருந்த அவரை இழுத்தது ஒரு பெண் குரல்.. “என்ன சார்.. நல்ல இருக்கீங்களா.. எத்தனை வருஷம் ஆச்சு உங்களை பார்த்து?…எங்கே ஊருக்கா?”

ஒரு நிமிடம் அவளைக் கூர்ந்து கவனித்த அவர் சற்று அதிர்ந்து விட்டார். இவள் எங்கே வந்தாள்? அதுவும் இந்த நேரத்தில்?  ஒரு நிமிடம் தன் மனைவி மங்களத்தை உற்று நோக்கினார். அவள் கவனம் வேறு எங்கோ இருந்தது அவருக்கு  அமைதி அளித்தது.

மீண்டும் அவர் மலரும் நினைவுகளில்..

தினம் காலையில் குளித்து திருநீறு பூசி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்து வரும் பாதையில் வடக்கு மாசி வீதியில் விநாயகரையும் கண்ணனையும் தரிசனம் செய்து வருவது அவர் வழக்கம்.

மாலையில் வேலையிலிருந்து திரும்பும் பொழுது டவுன் ஹால் ரோடில்  மனைவிக்காக இரண்டு முழம் மதுரை மல்லிகையும் அருகிலுள்ள பட்சணக் கடையிலிருந்து ஏதாவது தின்பண்டமும் வாங்கிவருவதும் அவர் அன்றாடப் பழக்கம். திருமணம் ஆனது முதலே மனைவி மங்களம் ஒரு சந்தேகப் பிராணி.

கோவிலுக்குப் போகும் பொழுதுகூட “என்னங்க, இப்படி வேகமாகப் போனா, நான் என்று நினைத்துக்கொண்டு வேற யாராவது பெண்ணோட கையைப் பிடித்துக்கொண்டு போயிடப் போறீங்க.. ” என்று சொல்வாள்

“மங்களம், கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆச்சு, பையன் பெரியவனாகி விட்டான். இனிமே ஏதுக்கு இந்தமாதிரி நினைப்பெல்லாம்?” என்று பதிலளித்தார்.

“அப்படி இல்லீங்க.. எந்தப் புற்றிலே எந்த பாம்பு இருக்கோ.. கவனமாக இருப்பது நல்லது இல்லியா?” அவர் பதில் சொல்லவில்லை.

அப்படித்தான். ஒரு நாள்..தமுக்கம் மைதானத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சிக்கு சென்றபொழுது டிக்கெட் வாங்க இவர் முன்னே செல்ல, அங்கே பெண்டிர் கூட்டம் அதிகமாக இருக்க, “கொஞ்சம் இப்படி வாரீங்களா.. கொஞ்சம் ஓரமா நில்லுங்க.. நான் போய் டிக்கெட் வாங்கறேன். அங்க போய் யார் மேலயாவது இடித்து வம்பை விலைக்கு வாங்கவா?”  பதில் சொல்லாமல் அவர் பின் வாங்கிக் கொண்டார். மங்களத்தின் இந்த சந்தேகம் அவளிடம் ஊறிப்போயிருந்ததால் அவருக்கு அதைக்கேட்டு பழக்கமாகி விட்டது.

அப்படித்தான் ஒரு நாள். மீனாட்சி தரிசனம் செய்து விட்டு டவுன் ஹால் ரோடு வழியாக வரும் பொழுது அங்கிருந்த பூக்காரியிடம் “ஒரு இருப்பது ரூபாக்கி பூக்குடும்மா ” என்ற அவர் சொல்ல  “என்ன சார் விசேஷம் இன்னிக்கி? எப்போதும் பத்து ரூபாய்க்கு வாங்குவே ?  பையன் நல்ல இருக்கானா சார்? எட்டாம் கிளாஸ் பாஸ்  பண்ணிட்டானா சார்?” என்று அவள் கேட்க மங்களம் தன்  கணவரைத் திரும்பிப் பார்த்தாள். இது ஒரு எரிமலையாக வெடிக்கும் என்பது அவருக்குத் தெரியாது.

அன்று மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தபொழுது அவள் “என்ன இருந்தாலும் அந்த பூக்காரிக்கு வாய்க்கொழுப்பு”  அவர் பதில் சொல்லவில்லை.

“தினம் அவள்கிட்டே தான் பூ வாங்குவீங்களா?” அவர் மறுக்க வில்லை. “உங்க சரித்திரம் முழுக்கச் சொல்றாளே? பையன் எட்டாம் கிளாஸ் படிக்கற வரைக்கும் தெரிஞ்சுருக்கே?” இப்பவும் அவர் பதில் சொல்லவில்லை.

“ஏங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்” என்று அவள் சொல்ல..பொறுமை இழக்காமல் அவர் “மங்களம்..ஒரு நாள் பையனோட கோவிலிருந்து வரப்போ மழை பெய்தது என்று அந்தத் துணிக்கடையோரம் ஒதுங்கினேன். இவளும் அங்கே தான் இருந்தாள். அப்போதான் பையனைப் பற்றிக்கேட்டாள் .. சொன்னேன். ” என்றவர், நிறுத்தாமல்..”பாவம்.. அவளுக்கு ஒரே பொண்ணு. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாளாம். புருஷன் இவளை விட்டுட்டு வேற யாரோடயோ ஓடிட்டானாம்.. கஷ்டப்படறேன்னு அழுதா.. “

“ஓஹோ, அதுதான் உருகிட்டீங்களாக்கும் ” என்று அவள் சொல்ல, சம்பந்தம் மனம் உடைந்து கண்டிக்க, வார்த்தைகள் தடித்து ஒரு வாரம் இருவரும் பேசிக்கொள்ள வில்லை

அன்று முதல் வேலையிலிருந்து திரும்பும் போது மல்லிகைப் பூ வாங்கி வரும் பழக்கம் நின்றது.. சில முறை மங்களம் “பூ வாங்கலீங்களா” என்று கேட்கும் பொழுது “வாசலில் வரும் வாங்கிக்கொள்” என்று சொல்லிவிடுவார். அவர் மனதில் அந்த மல்லிகைப்பூ படுத்திய காயம் அப்படி..

“என்ன சார்.. ஏதோ நினைப்பில்…” அந்த ரயில் நிலையத்தில் அருகில் அமர்ந்த அந்தப் பெண்மணி கேட்க “இவள் அந்தப் பூக்காரி” என்ற உணர்வு அவருக்கு வந்தது.. மங்களம் சற்றே திரும்பிப் பார்த்தாள் ..”நல்லா இருக்கீங்களா அம்மா… அய்யாவைப் பார்த்து எத்தனையோ வருஷம் ஆச்சு.. அப்போல்லாம் தினம் என்கிட்ட மல்லிகைப்பூ வாங்கிண்டு போவாரு.. என் பொண்ணு பள்ளிக்கூட பீஸ் கட்ட அம்பது ரூபா பணம் கூட குடுத்தாரு… நல்ல மனுஷன் . . நான் மெட்ராஸ் போறேன். பொண்ணு அங்கே கல்யாணம் ஆகி மாப்பிளையோட இருக்கா. அவங்களுக்கும் சொந்தம் ஏதும் கிடையாது.. அம்மா.. நீ ஏன் தனியா இன்னும் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கே.. இங்கே வந்துடுன்னு சொல்லிச்சு.. அதான்.. ” என்று சொன்னவள், தன் பையைத் திறந்து மல்லிகைப் பூ பந்து ஒன்றை எடுத்து மங்களத்தின் கையில் கொடுத்து “வச்சிக்கம்மா.. ஏதோ கொடுக்கணும்னு தோணிச்சு.. எங்கே இருந்தாலும் நல்லா இருங்க..”

மங்களம் தன் கணவரின்  முகத்தைப் பார்த்தாள் ..

அவர் மதுரை மல்லிகையின் வாசத்தைத் தன் மனதில் முகர்ந்து கொண்டிருந்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *