Tag: சு.கோதண்டராமன்

  • வளவன் கனவு-5

    சு.கோதண்டராமன்

    களப்பிரர்

     vallavan-kanavu11

    நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
    ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
    பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
    சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே

    -சம்பந்தர்

     

    கி.பி. 250 முதல் 575 வரை உள்ள காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. அப்பொழுது தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கக் கூடிய கல்வெட்டுகளோ, பட்டயங்களோ, இலக்கியங்களோ இல்லை. கருநாடகத்திலிருந்து களப்பிரர் என்னும் கூட்டத்தார் படையெடுத்து வந்து சேர சோழ பாண்டிய அரசர்களை வென்று அடிமைப்படுத்தினர் என்பது மட்டு்ம் தெரிகிறது.

    அப்பொழுது சோழ நாட்டின் நிலப்பரப்பு பெரிதாக இருந்தது. சோழன் மீண்டும் வலிமை பெறக் கூடாது என்பதற்காக அந்நாட்டின் பல பகுதிகளைக் களப்பிரர்கள் பல குறுநில மன்னர்களுக்குப் பிரித்துக் கொடுத்துக் கப்பம் கட்டம் செய்தனர். கரிகால் சோழன் தலைநகராகக் கொண்டு ஆண்ட உறையூர் சோழர்கள் கையை விட்டுப் போய் விட்டது. தஞ்சாவூருக்குக் கிழக்கே உள்ள சிறு பகுதி மட்டும் சோழநாடு என்ற பெயருடன் இருந்தது. எனவே சோழர்கள் தங்கள் குல முன்னோனான மனுநீதிச் சோழன் ஆண்ட ஆரூரைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்தன. சோழநாடு முழுமையையும் மீட்டுப் பழைய பெருமையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.

    சிறு பகுதியாக இருந்தாலும் காவிரியால் வளம் பெற்ற சோழநாட்டில் செல்வத்திற்குக் குறைவில்லை. ஒரு பெரிய படை திரட்டிக் குறுநில மன்னர்களைத் தன் வசப்படுத்திக் களப்பிரர்களிடமிருந்து விடுதலை பெறத் தேவையான செல்வம் சோழ மன்னர்களிடம் இருந்தது. ஆனால் அதற்குத் தேவையான மக்கள் ஒத்துழைப்பு இல்லை.

    சமண சாக்கிய சமயங்கள் தமிழ்நாட்டில் நுழைந்து கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. துவக்க காலத்தில் அவை மகாவீரர், புத்தரின் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றுவோரைக் கொண்டிருந்தன. கடவுள் என்று ஒன்று உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவை  உண்மை, அகிம்சை, பேராசையின்மை, புலனடக்கம், கள்ளுண்ணாமை ஆகியவற்றைப் பரப்பி மக்களைப் பண்படுத்தின. இவ்வுலகில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் மறு பிறவி இல்லாத நிலையான முத்தியை அடையலாம் என்று போதித்தன. சமண சாக்கியத் துறவிகளை மக்கள் போற்றி ஆதரித்தனர்.

    நாத்திகத்தையும் அறநெறியையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது பண்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம். பெரும்பாலான மக்களை அறநெறியில் நிலைக்கச் செய்வது இறைவன் தண்டிப்பான் என்ற அச்சம்தான். அச்சமே கீழ்களது ஆசாரம் என்றார் வள்ளுவரும்.

    சில நூற்றாண்டுகளுக்குப் பின் நாளடைவில் மக்களுக்கு அறநெறி நாட்டம் குறைந்தது. கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு முத்தி என்ற நிலை உண்டு என்பதிலும் சந்தேகம் வந்தது. இருக்கிறதோ இல்லையோ என்று ஐயத்திற்குள்ளான மறு உலகுக்காக இன்று நம்மை நாம் ஏன் வருத்திக் கொள்ள வேண்டும், இன்றைய ஆசையை இன்றே நிறைவேற்றிக் கொள்வோம் என்று எண்ணம் ஓங்கியது.

    மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே ஒழுக்கம் தவறி வாழத் தலைப்பட்டனர். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து வாழ்வதும், ஆடையின்றித் திரிவதும், குளிக்காமல், பல் துலக்காமல் உண்பதும், தவம் என்ற பெயரில் போதை தரும் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர்.

    புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் இத்தகைய நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டனர். இந்தக் கலாசாரம் பரவியதால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொண்டது.

    அறநெறியைக் கடைப்பிடித்த சமணர்களும் இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தியதால் போர் புரியும் மனப்போக்கு மக்களிடையே இல்லாமல் போயிற்று. இதனால் வீரமுள்ள ஒரு படையை உருவாக்குவது என்பது மன்னர்களுக்கு இயலவில்லை. தமிழ் மன்னர்கள் களப்பிரர்களிடம் அடிமைப்படுவதற்குக் காரணமான இப்பண்பு அவர்கள் மீண்டும் தலைதூக்குதலையும் தடுத்துக் கொண்டிருந்தது.

    முந்திய காலங்களில் சோழியப் பிராமணர்கள் இறை உணர்வையும் அற உணர்வையும் போதித்து மக்களை நல்வழிப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போதோ, பிராமணர்களிலேயே பலர் சமண சாக்கிய சமயத்தைத் தழுவினர். எஞ்சி இருந்தவர்கள் சிறுபான்மையர் ஆகிவிட்டபடியால் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் உண்டு தன் வழிபாடு உண்டு என்று இருந்தனர்.

    எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. இதை முதலில் உணர்ந்தவர்கள் சோழர்கள்தாம். பல்லவ, பாண்டிய மன்னர்களில் சிலர் சமணத்தைத் தழுவியிருந்தனர். ஆனால் சோழர்கள் சமணத்தின் சிறந்த பண்புகளைப் போற்றினாலும் கூட முழுமையாகச் சமணத்துக்கு மாறாமல் தங்கள் பழைய சமயக் கொள்கையில் உறுதியாக நின்றனர்.

    அம்மையாரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த செந்தீ வளவனுக்குச் சோழநாட்டை மீண்டும் பெருமையுறச் செய்வதற்கான வழி அதில் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது.

    செந்தீ வளவன் அம்மையாரின் பாடல்களை முழுவதும் கேட்டார். அவற்றின் இலக்கியச் சுவையை ரசித்தார். ஆழ்ந்த பக்திச் சுவையை மெச்சினார். ஆனால் அம்மையார் குறிப்பிடும் தெய்வம், பனித்த சடையும் பால் வெண்ணீறும் அணிந்த தெய்வம் எது என்பது அவருக்குத் தெரியவில்லை. மாரியம்மன், ஐயனார் போன்ற தொல் பழம் கிராமியத் தெய்வமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. அதை வேதநாயகன்  என்று அம்மையார் குறிப்பிடுகிறார். அவர் அறிந்தவரை வேதத்தில் சுடுகாட்டில் நடனமாடும் தெய்வம் எதுவும் இல்லை. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வர வர மிகுந்து வந்தது.

    அறிவானும் தானே அறிவிப்பான் தானே என்று அம்மையார் கூறுவது போல, அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை மனதில் ஏற்படுத்திய இறைவனே அறிவிப்பானாகவும் வந்து உபதேசம் செய்வார் என்று வளவன் நம்பினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

    தொடரும்

    Share
  • வளவன் கனவு-3

    சு.கோதண்டராமன்

    vallavan kanavu

    புதிய பாடல் புதிய தெய்வம்

    ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து

    கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து பேசி

    மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்

    பிறவாமைக் காக்கும் பிரான்

    -அம்மையார்.

    சோழ மன்னர் செந்தீ வளவன் கொலு மண்டபத்தில் வந்து அமர்ந்தார். அவர் முகம் கவலைக் குறியைக் காட்டியது. தலைமை அமைச்சர் அச்சுதப் பிரமராயரை நோக்கி, “பிரமராயரே, நம் மனிதர்கள் நர்மதைக்கரைக்குப் போய் மூன்று மாதம் ஆகிறது. இன்னும் வரவில்லை, அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லையே” என்றார்.

    “வந்துவிடுவார்கள் மன்னா. கவலை வேண்டாம். எப்படியும் போக ஒரு மாதம், வர ஒரு மாதம் ஆகும். மேலும் ஆங்கிரஸ பிரமராயர் போன காரியத்தைச் செவ்வனே முடித்துக்கொண்டுதானே வரவேண்டும். நாடுவிட்டு நாடு குடியேறுவது என்பது எளிதான செயல் அல்லவே? அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் யோசனை செய்து சம்மதித்தபின் அவர்களை ஒன்று கூட்டிக் கொண்டு வரவேண்டும். இதற்கு நான்கு மாத காலம் ஆகும். நேற்று வந்த ஒற்றர் செய்தியின்படி, வர விரும்புபவர்கள் அனைவரும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அதாவது முந்தாநாள், கார்வான் நகரில் கூட வேண்டும் என்று ஆங்கிரஸர் அறிவித்து இருக்கிறார். நேற்று புறப்பட்டிருப்பார்கள். இன்று கடல் பயணத்தைத் தொடங்கியிருப்பார்கள்.”

    “நம் அமைச்சர் ஆங்கிரஸரின் திறமையில் நமக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் நீண்ட கடற்பயணம் ஆயிற்றே, புயல் போன்ற இயற்கை உற்பாதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்பது தான் நம் கவலைக்குக் காரணம்.”

    “நம் மாலுமிகள் திறமையானவர்கள். எந்தப் புயல் வெள்ளமானாலும் பாதுகாப்பாகப் படகைச் செலுத்துவதில் வல்லவர்கள். மேலும் இது புயல் வீசும் காலமும் அல்ல. கடுங்கோடை. இன்னும் ஒரு மாதம் போனால் மேற்குப் பகுதிகளில் பெரு மழை தொடங்கிவிடும். அதற்குள் அவர்கள் வந்து விடுவார்கள். லகுலீசர் காப்பார். கவலை வேண்டாம் மன்னா.”

    லகுலீசர் பெயரைக் கேட்டவுடன் அரசரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

    ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு நாள். அரசர் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது ஒரு புலவர் வந்தார். வழக்கம்போல மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வதற்காக வருவோரில் ஒருவர் என்று  நினைத்த மன்னருக்கு அவர் பேசிய முதல் சொல்லே அதிர்ச்சியைத் தந்தது.

    “மன்னா, இப்பொழுது நான் சொல்லப் போகும் பாடல் உங்களைப் புகழ்ந்து பாடப்பட்டதும் அல்ல, என்னால் இயற்றப்பட்டதும் அல்ல. மேலும் நான் பரிசு பெறவும் வரவில்லை. மன்னர் தயவால் என்னுடைய நிலம் எனக்குப் போதுமான வருவாய் தருகிறது.  பாடலைப் படிக்கவா?”

    “படியும்.”

    அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

    அழகால் அழல்சிவந்த வாறோகழலாடப்

    பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

    தீயாடு வாய்இதனைச் செப்பு.        

    சுடலையில் தீயின் நடுவே கையில் தீயேந்தி நடனமாடுபவனைப் பார்த்துப் புலவர் கேட்கிறார், “உன் கையின் சிவப்பு நிறத்தால் தீ சிவந்ததா அல்லது அத்தீயினால் உன் கை சிவந்ததா ?

    “அடடா, என்ன கற்பனை நயம்! மேலே படியும்.”

    காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

    வேலையே போன்றிலங்கும் வெண்ணீறுமாலையின்

    தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு

    வீங்கிருளே போலும் மிடறு.

        காலை நேரத்துச் சிவந்த வானம் அவனது திருமேனிக்கும், உச்சி வேளை வெண்ணிற வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறைகின்ற ஞாயிற்றின் கதிர்கள் அவனது விரிந்த சடைக்கும், கருத்த இரவு அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின.

    “ஆஹா, என்ன சிறப்பான உவமை! மேலே படியும்.”

    இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ

    மருளின் மணிநீலம் என்கோஅருளெமக்கு

    நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்

    ஒன்றுடையாய் கண்டத் தொளி.

    இறைவா, உன் கண்டத்தில் உள்ள ஒளி பொருந்திய கருமைக்கு உவமையாக எதைக் கூறுவேன்? இருளையா, மாமேகத்தையா, நீல மணியையா ?

    “என்கோ, என்கோ என்ற தொடர் என்னை எங்கோ உயர்த்திச் செல்கிறது. என்ன அழகான சொல் பிரயோகம்! இன்னும் இருக்கிறதா?”

    “நிறைய உள்ளது மன்னா. சொற்சுவை மட்டுமல்ல. இறைவனிடத்து அவர் காட்டும் அன்புச் சுவையும் சிறப்புடைத்து. இதைக் கேளுங்கள்.”

    இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

    படரும் நெறிபணியா ரேனும்சுடருருவில்

    என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்

    கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

        என் துன்பத்தை அவர் தீர்க்காவிட்டாலும், என் மேல் இரக்கம் கொள்ளாவிட்டாலும், நான் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும் எலும்பு மாலை அணிந்து, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் கொண்ட அன்பு மாறாது.                                                                     

    அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

    அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்பவர்ச்சடைமேல்

    பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

    காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

        நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் அவ்வப் பிறவிகளிலும், தன் நீண்ட சடையில் பிளவுபட்ட திங்களைச் சூடிய பெம்மானுக்கே அடிமையராய் வாழ்வோம். அவரல்லாத பிறர்க்கு ஒருபோதும் ஆளாக மாட்டோம்.                                                              

    வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்

    காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்

    வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது

    கில்லேன மாஎன்றான் கீழ்.

     

        வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானைச் சோதிப்பதற்கு மாலவனும் பன்றி உருவெடுத்து கீழே தோண்டிச் சென்று ‘என்னால் முடியவில்லை அம்மா’ என்றான்.

    “புலவரே, இந்தப் பாடல்களில் போற்றப்பட்டுள்ள தெய்வம் யார் என்று தெரியவில்லையே. அவர் வேதத்துக்கு ஆதியன் என்று பேசப்பட்டாலும் அவர் வேத தெய்வமாகவும் தெரியவில்லை. கிராமியத் தெய்வமாகவும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் அந்தத் தெய்வத்தின் மேல் புலவர் செலுத்தும் அன்பு மிக ஆழ்ந்தது, உறுதியானது. இதை இயற்றியவர் யார்? இது போன்று இன்னும் எத்தனை பாடல்கள் உள்ளன?”

    “மன்னா, இது என் தந்தையார் எழுதி வைத்த சுவடி. அவர் என் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார். இந்தச் சுவடி என் வீட்டுப் பரணில் இருந்தது. இது பேயார் என்ற ஒரு பெண்பால் புலவர் இயற்றியது என்று என் தாய் சொல்லி அறிந்தேன்.  படித்துப் பார்த்ததில் சிறப்பாக இருக்கவே, சிறப்புடைய பொருள்கள் அரசர்க்கே உரியன என்ற வழக்குப்படி சமூகத்தில் இதைத் தெரிவிக்க வந்தேன். மொத்தம் 143 பாடல்கள் உள்ளன. இது எந்தத் தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை நான் அறியவில்லை.”

    “புலவரே, நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்கள். முழுவதையும் படித்துக் காட்டிவிட்டுப் போகலாம். அமைச்சரே, இந்தப் பாடலை நீர் கேட்டிருக்கிறீரா, இதை எழுதியது யார் தெரியுமா?”

    “பேயார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரைக்காலைச் சேர்ந்தவர். அவர் ஏதோ பேய் பிடித்த பெண் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் இவ்வளவு அழகிய பாடல்களை இயற்றியிருப்பார் என்று நான் இதுவரையில் அறியவில்லை.”

    “அமைச்சரே, அவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லும்.”

    “உத்தரவு மன்னா.”

        புலவர் அமைச்சர் காட்டிய விடுதியில் தங்கினார். அரசருக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து பாடல்களைப் படித்துப் பொருள் கூறி வந்தார்.

    Share
  • வளவன் கனவு – 2

    புதிய வானம், புதிய பூமி

    சு.கோதண்டராமன்

    நர்மதாயை நமப் ப்ராத: நர்மதாயை நமோநிசி

    நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹி மாம் விஷஸர்ப்பத:

    -வடமர்களின்  சந்தியாவந்தன மந்திரம்

    (நர்மதையே உன்னைப் பகலும் இரவும் வணங்குகிறேன். விஷப்பாம்புகளிடமிருந்து என்னைக் காப்பாயாக.)

    vallavan kanavu

    ஒவ்வொரு படகிலும் இருந்த மக்கள் நர்மதை நதியின் இரு கரையிலும் உள்ள பல வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்.  அவர்கள் கற்ற வேதமும், சோழ மன்னனின் அழைப்பும் அவர்களை இன்று இணைத்திருக்கிறது. அவர்கள் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

    எல்லோரும் வெளிப்பார்வைக்கு உற்சாகமாகத் தோன்றினாலும் அனைவர் மனதிலும் உள்ளூர ஒரு அச்சம் இருந்து வந்தது. ‘புதிய தேசத்துக்குப் போகிறோம். அது எப்படி இருக்குமோ, தெரியவில்லை. அங்கு மலையே இல்லையாம், கங்கைக்கரை போல சமதரையாக இருக்குமாம். அங்குள்ள தட்ப வெப்பம் வித்தியாசமாக இருக்குமாம். குளிரும் குறைவு, வெய்யிலும் குறைவு என்கிறார்கள். மழைக்காலத்தில் மழை பெய்யாமல் சரத் காலத்தில் பெய்யுமாம். காவிரியில் சில மாதங்கள் தான் தண்ணீர் ஓடுமாம். தண்ணீருக்குக் கஷ்டப்பட வேண்டி இருக்குமோ’ என்றெல்லாம் பல வகையான சந்தேகங்கள்.

    ‘எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ளலாம். மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு நம்மை அழைக்க வந்தவர்களைப் பார்த்தால் நல்ல மனிதர்களாகத்தான் தெரிகிறது. சோழ தேசத்தில் எல்லோரும் அப்படியே இருப்பார்களா? சரி, பசுபதிநாதனும் நர்மதை நதியும் நமக்கு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் துணை இருப்பார்கள். அவர்களிடம் பாரத்தை ஒப்படைத்து விட்டுக் கவலையற்று இருப்போம்’ என்று சமாதானம் செய்து கொண்டார்கள்.

    ‘பிறந்த மண், உறவினர்கள், பழகிய மனிதர்கள் இவர்களைப் பிரிவது தான் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது? ஒரு தேசத்தின் நன்மைக்காக ஒரு ஊரையே பலியிடலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இங்கு நாம் சோழ தேசத்தின் நன்மைக்காகச் செல்கிறோம். பிறந்த மண், உறவினர் என்ற அற்ப ஆசைகளைப் பலியிடத் தான் வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டார்கள்.

    ‘நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நமக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் நம் சௌக்கியத்தை மட்டும் பார்த்தால் போதுமா? லோகக்ஷேமம் தானே பிராமணனின் தர்மமாகச் சொல்லப்பட்டிருக்கிறது? சோழ தேசத்தைப் புனருத்தாரணம் செய்ய நம் உதவி தேவை என்று சொல்லும் போது என் சௌக்கியம் தான் பெரிது என்று சொல்ல முடியுமா?

    ‘சோழதேச அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி அவந்தி அரசர் பறையறைந்து அறிவிக்கும்போது பல நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தார். வேதம் கற்காதவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுள்ளவர்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் வரக்கூடாது என்று விதித்திருந்தார்கள். ஒரு தாய்க்கு ஒரு மகனாக இருப்பவர்களும், மூத்த மகனாக இருப்பவர்களும் பெற்றோரை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்றும் கூறினார்கள். இதில் ஒரு சிலர்தான் தேற முடியும். அவர்களும் தன் சொந்த சௌக்கியத்தைக் காரணம் காட்டி வரவில்லை என்றால் அது தர்மமாகாது.

    ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வேலி நிலம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேலி என்றால் எவ்வளவு பெரியது என்று தெரியவில்லை. ஜீவனத்துக்குத் தேவையானது கொடுப்பார்கள் என்று நம்பலாம். அங்கு சோழ தேசத்தில் விவசாயம் செய்வது மிகச் சுலபமாம். மண் மிருதுவாக இருக்குமாம். மலைப் பிரதேசம் போலக் கடினமான தரை இல்லையாம். அந்த விவசாயம் கூட நாம் செய்ய வேண்டியது இல்லையாம். யாரோ பயிரிடுவார்கள், பாடுபடுவார்கள். விளைவில் ஆறில் ஒரு பகுதி நமக்கு வந்துவிடுமாம். வேதத்தை ஓதிக்கொண்டும் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் இருப்பது தான் நமது வேலை என்கிறார்கள். பார்ப்போம். துணிந்து வந்துவிட்டோம். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம். எல்லோரையும் காப்பாற்றும் ஈசன் நம்மை மட்டும் காக்காமல் இருந்து விடுவானா’ என்று பேசிக் கொண்டார்கள்.

    ஒவ்வொரு படகிலும் ஒரு சோழியப் பிராமணர் இருந்தார். நயினார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள் அவர்கள். கார்வான் பிராமணர்கள் தாங்கள் போய்ச் சேரும் இடம் பற்றிப் பல கேள்விகள் அவர்களிடம் கேட்டவண்ணம் இருந்தனர். அவர்களும் இவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி சோழ நாட்டின் பெருமைகளை எடுத்துக் கூறி வந்தனர்.

    “புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலை வேண்டாம். தமிழ் மக்கள் விருந்தோம்பும் பண்பு உள்ளவர்கள். உங்களை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள்.”

    “புதிய இடங்களுக்குப் போய்க் குடி அமர்வது எங்கள் சமூகத்திற்குப் புதியது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர்கள் மிச்ர (எகிப்து) தேசத்தில் நீலநதிக்கரையில் வாழ்ந்தவர்கள். அங்கு ஏற்பட்ட ஒரு கலவரத்தின் விளைவாக நாங்கள் கடல் கடந்து கொங்கணக் கடற்கரையில் குடியேறினோம். அங்கு நாங்கள் வேதம் கற்றுக் கொண்டோம். அது முதல் நாங்கள் சித்த பாவனர்கள் (தூய்மையான மனம் உடையவர்கள்) என்று அழைக்கப்பட்டோம். மீன் பிடித்தல் எங்களது குலத் தொழில். 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு சமணம் பரவிய போது மக்கள் மீன் உண்பதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். எங்கள் தொழிலுக்கு ஆதரவில்லாமல் போயிற்று. எனவே எங்கள் முன்னோர்கள் உள்நாட்டில் பற்பல வேலைகளில் அமர்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் வேதம் ஓதுதலைத் தொழிலாகக் கொண்டார்கள். அவர்களை நர்மதை நதிக்கரையில் குடியேற்றி உஜ்ஜயினி அரசர் ஆதரித்தார். இப்பொழுதும் அந்த வேதம்தான் எங்களைச் சோழநாட்டுக்கு அழைத்துப் போகிறது. எல்லாச் சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுக்கும் பண்பு எங்களிடம் உண்டு. அதனால்தான் இந்தக் குடியேற்றத்துக்குச் சம்மதித்தோம். சரி, உங்கள் பூர்விகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

    “நாங்கள் சோழியப் பிராமணர். சோழநாட்டின் பூர்விகக் குடிகள். பாண்டிய நாட்டிலும்  எங்களவர்கள் உண்டு. எங்களில் பல குழுக்கள் உண்டு. செந்தூர் என்னுமிடத்தில் திருசுதந்திரர் என்றும் மதுரையில் பட்டர் என்றும் ஆனைக்காவில் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் என்றும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயர் உண்டு. சோழர் தலைநகரமான ஆரூர்ப்பகுதியில் வாழ்பவர்களில் நயினார், பிரமராயர் என்று இரு குழுக்கள் உண்டு. பிரமராயர்கள் பெரும்பாலும் அரசுப் பதவிகளில் இருப்பார்கள். நான் நயினார் குலத்தைச் சேர்ந்தவன். கோயில், விண்ணகரங்களில் பூஜை செய்வது தான் எங்களுக்கு முக்கிய தொழில்.”

    “கோயில் என்றால் என்ன? விண்ணகரம் என்றால் என்ன?”

    “விஷ்ணுவை வழிபடும் இடத்துக்கு விண்ணகரம் என்று பெயர். காளி, மாரியம்மன் போன்ற கிராமிய தெய்வங்களை வழிபடும் இடத்துக்குப் பொது இல் என்று பெயர். வீரர்கள் இறந்தால் அங்கு ஒரு கல் நட்டு வருஷத்துக்கு ஒரு முறை பூஜை செய்வார்கள். அரசர் இறந்தால் அவர் நினைவாக நடப்பட்ட கல்லைச் சுற்றிச் சுவர் எடுத்து மேல் கூரை அமைப்போம். இது கோ இல், அதாவது, அரசரின் வீடு எனப்படும். இந்த நடு கல்லிற்குத் தினமும் எண்ணெய் தடவி நீர், பால் அபிஷேகம் செய்து உணவு படைப்பது வழக்கம்.”

    “சோழநாட்டின் நீர்வளம் பற்றிச் சொல்லுங்கள்.”

    “அங்கு உங்கள் ஊரில் வர்ஷ ருதுவில் மழை பெய்வது போல குடகு நாட்டிலும் பெய்யும். அது எங்கள் காவிரியில் வெள்ளத்தைக் கொண்டுவரும். அது முடிந்தவுடன் சரத் ருதுவில் எங்களுக்கு மழைக் காலம். ஆகவே எங்கள் நீர் வளத்துக்குப் பஞ்சம் இல்லை. காவிரி கொண்டுவரும் வண்டல் மண் எங்கள் வயல்களில் எல்லாம் படிந்து அதை வளப்படுத்துகிறது. சிறு முயற்சியிலேயே ஏராளமாக விளையும்.  உணவுக்குப் பஞ்சமே இல்லை. சோழநாடு சோறுடைத்து என்றும் சோற்றால் மடை அடைக்கும் சோழ நாடு என்றும் சொல்வார்கள்.”

    “உங்கள் நாட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள்? நாங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது  எப்படி?”

        “நாங்கள் பேசுவது தமிழ். அது தவிர அங்கு ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். முற்காலத்தில் வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர்கள் ஸம்ஸ்கிருதமும் பிராகிருதமும் மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இணைப்பு மொழியாக இருந்தது ஸம்ஸ்கிருதம்தான். முன்பு அறிஞர்கள் மத்தியில் மட்டும் இருந்த ஸம்ஸ்கிருதம், சமணம் பரவியதால் இப்பொழுது சாதாரண ஜனங்கள் வரை பரவி விட்டது. எனவே நீங்கள் என்னுடன் பேசும் ஸம்ஸ்கிருதத்தைக் கொண்டே சமாளித்துக் கொள்ளலாம். விரைவில் தமிழ் கற்றுக் கொள்ளவும் முடியும்.”

    கேட்ட விஷயமாக இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேட்பதில் அலுப்பு ஏற்படவில்லை. இதுவரை பார்த்திராத ஒரு புதிய வானம் புதிய பூமியைப் பற்றிய மனச் சித்திரம் முழுமையாகும் வரை இந்த மாதிரியான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்றன.

    சினோரிலிருந்து பாருகச்சம் துறைமுகம் ஐந்து காத தூரம். எதிர்த்துச் செல்லும் போது இதே தூரத்துக்கு மூன்று நாள் ஆயிற்று. இப்பொழுது நீரின் போக்கில் வந்ததால் ஒரே நாளில் பாருகச்சம் வந்துவிட்டன படகுகள். இரவு அங்கே தங்கினார்கள்.

    இனி கடல் பயணம் தான். படகின் பாய்கள் விரிக்கப்பட்டன. காற்று சாதகமாக இருந்தது. கரையை ஒட்டியே பயணம் செய்தனர். பகல் முழுவதும் பயணம். மாலையில் நீர் வசதி உள்ள இடத்தில் தங்கி உணவு சமைத்து உண்டு, உறங்கி, மறுநாள் விடியற்காலையில் எழுந்து ஆண்கள் அனுஷ்டானங்களைச் செய்ய, பெண்கள் அன்றைய பகலுக்கான உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டனர். உணவும் நீரும் படகில் ஏற்றப்பட்டன. மீண்டும் பகல் முழுவதும் பயணம். இப்படி ஒரு மாதம் போக வேண்டும்.

     தொடரும்

    Share
  • வளவன் கனவு- வரலாற்று நாவல் (1)

    சு. கோதண்டராமன்

     

    முன்னுரை

    களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. காரணம் அப்பொழுது என்ன நடந்தது என்பதைக் காட்டும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான். அந்தக்கால வரலாறுதானே எழுத முடியவில்லை, கற்பனை  செய்ய என்ன தடை? அதைத் தான் இந்த நாவலில் செய்திருக்கிறேன்.

    கற்பனை செய்ய உரிமை கிடைத்துவிட்டது என்பதற்காக அஸ்திவாரம் இல்லாமல் ஆகாயக் கோட்டை கட்டவில்லை. இந்த நாவலில் வரும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் ஆதாரம் உண்டு. அவை வலுவாக இல்லாமையால் ஒன்றுக்கு மேற்பட்ட ஊகங்களுக்கு இடம் அளிப்பவையாக உள்ளன. அவற்றில் ஒன்றை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். எதிர்த்தரப்பு ஊகமே சரியானது என்று நிரூபிக்கப்படும் வரையில் என்னுடையது கொடிகட்டிப் பறக்கும். யார் கண்டார்கள், என் ஊகம் உண்மையாகக் கூட ஏற்றுக் கொள்ளப்படலாம்.

    தலைப்பைப் பார்த்தவுடன் கல்கியும் அவரது பார்த்திபன் கனவும் தான் நினைவுக்கு வரும். அந்த எழுத்துலகச் சக்கரவர்த்தியால் பாதிக்கப்படாதவர் யார்? அவர் தரத்தை எட்ட முடிந்தவர் யார்?

    இதோ நானும் என் பொல்லாச் சிறகை விரித்து ஆடத் தொடங்குகிறேன். வரலாற்றுப் புதினம் என்ற பெயருக்குத் தகுதி உடையதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள்.

    1 நதிப் பயணம்

    வளவன் கனவு

    கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்

    ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

    – ரிக்வேதம்

    (கூட்டத்தின் தலைவரான உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுக்குள் அறிஞர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். ஒளி பொருந்தியவர்களில் சிறந்தவர். வேதத்திற்கு வேத நாயகராய் விளங்குபவரே, எங்களுடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அருள் பொலிவுடன் உமக்குரிய ஆசனத்தில் இங்கு எழுந்தருள்வீராக.)

    நர்மதை நதி ஓடிக்கொண்டிருந்தது. என்ன வேகம்! என்ன வேகம்! எதற்கு இந்த அவசரம்? கன்றின் குரல் கேட்டு ஓடும் பசுவைப் போலல்லவா வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் தன் இலக்கை நோக்கி ஓடுகிறது! கடலைச் சந்திக்க இவ்வளவு ஆர்வமா? கரையில் முளைகளில் கட்டப்பட்டிருந்த படகுகள் நீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும் போல அவற்றின் கயிறுகள் இழுத்துக் கொண்டு விறைப்பாக நின்றன.

    சினோர் நகரில் நதியின் வடகரையில் நின்றுகொண்டிருந்த ஆங்கிரஸ பிரமராயர் ஒரு கணம் அந்த நீர்ப் பெருக்கின் அழகில் மெய் மறந்து நின்றார். ‘நம் நாட்டுக் காவிரிக்கு இவ்வளவு வேகம் இல்லை. அது பெருகி வரும் நாட்களில் செக்கச்செவேல் என்று நுங்கும் நுரையுமாக இருப்பதைப் போல் இல்லாது இந்த நீர் எவ்வளவு தெளிவாக உள்ளது! மேலும் இது காவிரி போல் சில மாதங்கள் வறண்டு போகாமல் ஆண்டு முழுவதும் ஓடும் ஜீவநதியாக உள்ளது’ என்று மனதிற்குள் ஒப்பிட்டுக் கொண்டார்.

    மறுகணம் திடீரென்று விழிப்பு வந்தவர் போல அவர் தன்னைச் சுற்றிப் பார்வையிட்டார். இன்று அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. கடந்த   இரண்டு மாதமாக அலைந்த அலைச்சல் முடிவடைந்து அவருடைய வேலையில் இன்று ஒரு புதிய திருப்பம். இன்னும் ஒரு மாதத்திற்கு அவருக்கு ஓடும் நதியையோ, பாடும் குயிலையோ ரசிப்பதற்குத் தேவையான ஓய்வு இல்லை.

    “முதல் படகில் எல்லோரும் ஏறியாகி விட்டதா? பொறுப்பாளர் யார்?” என்று கேட்டவர் தன் கையில் இருந்த சுவடிக்கட்டிலிருந்து ஒரு ஓலையை எடுத்தார். “அம்ருத நயினார்” என்று விளித்தார். படகில் உட்கார்ந்திருந்த நயினார், “எல்லாம் சரியாக இருக்கிறது அமைச்சரே, என் வசம் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த முப்பது மனிதர்கள் இருக்கிறார்கள், எல்லோருக்கும் தேவையான உணவு இருக்கிறது. சோழநாட்டு மாலுமிகள் நால்வரும் இருக்கிறார்கள்.”

    “சரி, நீங்கள் புறப்படலாம். காழித் துறைமுகத்தில் சந்திப்போம்.” பச்சைக் கொடியை அசைத்தார் பிரமராயர்.

    படகில் உட்கார்ந்திருந்தவர்கள்,

    கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்

    ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

    என்று ஒரே குரலில் முழங்கினர். படகு புறப்பட்டது.

    பிரமராயர், “சரி, அடுத்த படகு தயாராக இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டுத் தன் கையில் இருந்த ஓலையைப் பார்த்து, ‘ஆனந்த நயினார்’ என்று படித்தார். “சித்தமாக உள்ளேன், அமைச்சரே. என் பொறுப்பில் முப்பது பேர் உள்ளனர். ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மாலுமிகள் ஆயத்தமாக உள்ளனர். உணவுப் பொருள் உள்ளது. உத்தரவு கிடைத்தால் நாங்கள் புறப்படுவோம்’ என்றார் அவர்.

    “சரி, போகலாம். காழியில் காத்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்றார். பயணிகளின் விநாயகர் துதியுடன் புறப்பட்டது படகு.

    இப்படியே 99 படகுகள் புறப்பட்டுச் சென்றன. நூறாவது படகில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ஆங்கிரஸ பிரமராயர் தானும் ஏறி அமர்ந்தார். படகு புறப்பட்டது. எல்லோரும் ’கணானாம் த்வா’ சொன்னார்கள்.  முடித்தபின் ஆங்கிரஸர் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் கேட்டார், “எல்லோரும் விநாயகரைக் குறித்து வேத மந்திரம் சொல்கிறீர்களே, அவர் வேத தெய்வமாகத் தெரியவில்லையே” என்றார்.

    அவர் மறுமொழி சொன்னார், “வேத தெய்வம் அல்ல என்றாலும் இங்கு நாங்கள் பரம்பரையாக வணங்கி வரும் தெய்வம். இடையூறு இல்லாமல் வேலை முடிவதற்கு நாங்கள் அவரைத்தான் வேண்டுவோம். அதற்காக இந்த வேத மந்திரத்தை ஓதுவது எங்கள் முன்னோர்களின் வழக்கம்” என்றார். ‘சோழநாட்டின் மாரியம்மன், ஐயனார் போல இவர் இந்த வட்டாரத்தின் தொல்பழம் தெய்வம் போலத் தோன்றுகிறது. எந்தத் தெய்வமாக இருந்தால் என்ன, எல்லாம் நல்லபடியாக நடந்தால்  சரிதான்’ என்று நினைத்துக் கொண்டார் ஆங்கிரஸர். படகில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை நோக்கிக் கும்பிட்டார்.

    கடந்த இரண்டு மாதமாக என்ன அலைச்சல் அலைந்திருக்கிறார்! சோழ நாட்டில் நடப்பதற்கும் இங்கு நடப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கு எல்லாம் சமவெளி. ஒரு நாளில் இரண்டு காத தூரம் நடக்கலாம். இங்கு மலைப் பகுதி. அரைக்காதம் நடப்பதற்குள் கால்கள் கெஞ்சுகின்றன. ‘இந்த மனிதர்கள் நம்மை விட உடல் வலிமையும் ஆன்ம வலிமையும் மிக்கவர்கள் தாம். இவர்களை பத்திரமாகச் சோழநாட்டுக்குக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும், விநாயகப் பெருமான் துணை புரிய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

    மாலுமிகள் லாகவமாகப் படகை ஓட்டிச் சென்றனர். அவர்களுக்குத் துடுப்புப் போட வேண்டிய வேலையே இல்லை. நீரின் போக்கில் போனதால் படகு மிக வேகமாக ஓடியது. பாறைகளில் மோதாமல் பார்த்துக் கொள்வது தான் அவர்களது வேலை. வரும்போது பட்ட சிரமத்தை நினைத்துக் கொண்டார். கடலில் அனாயாசமாகப் படகோட்டிய சோழ நாட்டு மாலுமிகளால் இந்த நதியில் எதிர்த்து வர முடியவில்லை. அதனால் பாருகச்சம் துறைமுகத்தில் உள்ளூர் மாலுமிகளை அமர்த்திக் கொண்டார். அவர்கள் மிக வலிமையானவர்கள். அவர்களும் உதவியதால் நீரின் போக்குக்கு எதிராகப் படகை ஓட்டி வர முடிந்தது.

    இந்த இரண்டு மாதத்தில் எத்தனை பேர் எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள்! அவந்தி தேசத்தின் சிற்றரசர் நம் சோழ மன்னனின் வேண்டுகோளைப் பெரிதாக மதித்து நமக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொடுத்தாரே! நேற்று கார்வான் நகரில் அந்த மூவாயிரம் பேர் கூடியிருந்தது தெய்விகமான காட்சியாக இருந்தது. இவர்கள் சோழநாட்டில் போய் இறங்கியதும் மன்னர் மிக மகிழ்ச்சி அடைவார். தேவதேவன் அருளால் மன்னர் விருப்பம் நிறைவேற வேண்டும். சோழநாடு முன்போல வலிமையும் புகழும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். சினோர் நகரம் சிறிது சிறிதாகக் கண் பார்வையிலிருந்து மறைந்தது.

    தொடரும்

    Share
  • வாழ்வாவது மாயம்

    சு. கோதண்டராமன்.

    வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேதத்திற்கும் தமிழ்த் திருமுறைகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு காணப்படுகிறது.

    வேதம் மனித வாழ்க்கையின் இனிய பகுதிகளைக் கொண்டாடுகிறது. திருமுறைகள் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

    வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. சாவைக் குறித்து அவர்கள் அஞ்சவில்லை. செத்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. முற்பிறவி, மறுபிறவி என்ற கருத்துருக்கள் அவர்கள் அறியாதவை. அவர்கள் இயற்கை அழகை ரசித்தார்கள். இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று கருதினர். இறைவனைச் சரணடைவதே துன்பம் நீக்க வழி என்று கருதினர்.

    திருமுறைகளில் இல்லறத்தை விடத் துறவறம் மேலானது என்ற கொள்கை போற்றப்படுகிறது. வாழ்க்கை துன்பமயமானது, அதிலிருந்து விடுதலை பெறவேண்டும், இறந்த பின் மீண்டும் பிறவா நிலையை அடையவேண்டும், உடல் இழிவானது, நமது புலன்கள் நமக்கு வஞ்சனையைச் செய்பவை, அவற்றை அடக்கி வாழவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.

    இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன?

    இடைக்காலத்தில் ஏற்பட்ட சமண சாக்கிய சமயங்கள் மக்களிடையே மறுபிறவி, கர்மாக் கொள்கைகளைப் பரப்பின. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கருத்தை வலியுறுத்திப் பிரசாரம் செய்தன. இச்சமயங்களைத் தழுவியவர்கள் மட்டுமில்லாது எல்லோரையுமே இந்தக் கொள்கைகள் கவர்ந்தன. தேவார மூவர் மற்றும் மணிவாசகர் பாடல்களில் இவற்றின் அழுத்தமான தாக்கத்தைக் காணலாம். உடலினை முன்னம் இழுக்கென்றிருந்தேன், அந்த அறியாமையிலிருந்து விடுபட்டேன் என்று திருமூலர் சொல்கிறார். ஆடற்பெருமானின் அழகைக் காண்பதற்காக மீண்டும் பிறக்கவும் ஆயத்தம் ஆகிறார் அப்பர். ஆனால் அவரும், சம்பந்தரும், சுந்தரரும், மணிவாசகரும் உடலை இழுக்கென்று கருதினர். அதிலிருந்து விடுபட்டுப் பிறவா நிலை அடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினர்.

    சுந்தரர் தேவாரத்தில் வாழ்க்கை துன்பமயமானது என்ற கருத்து மற்றவர்களை விட மிகுதியாகக் காணப்படுகிறது. அவற்றில் சில இடங்களைப் பார்ப்போம்.

    திருஎதிர்கொள்பாடித் தேவாரத்தில் சுந்தரர் கூறுகிறார்-
    இவ்வுலகில் மிகச் செல்வாக்குடன் வாழ்கிறோம் என்று இறுமாப்பு அடையவேண்டாம். இறந்தபின் இவை பயன்படா. நற்கதி அடையவேண்டும் என்றால் இறைவனைத் துதியுங்கள்.

    மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள்
    செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்
    வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
    அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்பதடைவோமே.

    பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. இறந்த பின் அடையவேண்டிய பிறவாநிலைக்கு ஆயத்தம் செய்துகொள்ளுங்கள். மனை வாழ்க்கை துயரமானது. இதிலேயே கிடந்து உழல வேண்டாம்.

    தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை
    மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
    நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்
    ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    நமது ஐம்புலன்களும் நமக்கு வஞ்சனையைச் செய்கின்றன. எனவே அவற்றின் வழிச் செல்லாமல் இறைவனை நாடி உய்வு பெறுங்கள்.

    வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
    யாவராலும் இகழப் பட்டு இங்கு அல்லலில் வீழாதே
    மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
    தேவர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    மனை வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது என்று ஏமாந்து விடாதீர்கள். அதில் துன்பமும் உண்டு. எனவே அதைக் கைவிட்டு இறைவனடி சேருங்கள்.

    இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை
    முன்பு சொன்ன மோழை மையான் முட்டை மனத்தீரே
    அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை அடிக ளடிசேரார்
    என்பர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    இப்பிறவியில் நமக்கு உறவினராய் வாய்த்தவர்கள் நமக்கு மறு உலகு அடைவதற்கு எந்த வகையிலும் உதவ மாட்டார்கள். எனவே அவர்களைக் கைவிட்டு இறைவனை நாடுங்கள்.

    தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்
    வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டுஞ்
    சிந்தை யீரே நெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்
    எந்தை கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.

    பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய். இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய். ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே; அதன் பொருட்டு, விரைந்து அறத்தைச் செய்யுங்கள்.

    வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்
    பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
    தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
    கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.

    உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதாதலை அறிகின்றிலீர்; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் செய்ய முடியுமோ? எனவே இப்பொழுதே, `திருக்கேதாரம்` என்று சொல்லுஙகள்.

    பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
    குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே
    அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு
    கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதாரமெனீரே.

    சிற்றின்பத்தில் மூழ்கி இராமல் யமன் வருமுன் இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழையுங்கள்.

    வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே
    நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி
    ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
    கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே.

    இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்கிறீர்களே, அப்பொதி பயனற்று ஒழிவதை அறியீரோ? அறிவை இழந்து நீவிர் குழியில் வீழ்வது, நும் வினைப்பயனேயாம். இதனை விடுத்து, சிவ பெருமானது இடம் திருக்கேதாரத்தைத் துதிமின்கள்.

    பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்
    மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்
    கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்
    கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.

    தேடிச் சோறு நிதம் தின்று ஒரு நாள் கூற்றுக்கு இரையாகும் வேடிக்கை மனிதரைப் போல நான் வீழக்கூடாது என்ற பாரதியின் பாடலை நினைவூட்டும் ஒரு பாடலில் சுந்தரர் கூறுகிறார்.

    உலகியலில் நின்றோர் இறக்கும்போது மற்றவர்கள் அவரைப் பற்றி, `நல்ல துணைவியை மணந்தார்; இல்லற நெறியிலே ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார்` என்று சொல்கிறார்கள். அடியேன் அத்தகைய சொல் பெற விரும்பவில்லை. நற்கதி அடைவதற்கான ஒரு வழியினைச் சொல்லியருள்.

    கல்வாய் அகிலுவங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
    நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நிலவெண் மதிசூ டியநின் மலனே
    நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
    சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

    சமண சாக்கிய சமயங்களுக்கும் சைவத்துக்கும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் வேறுபாடு இல்லை. ஆனால் சமண சாக்கிய சமயங்கள் துன்பத்தை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று போதித்தன. சைவமோ, வேதக் கருத்தை ஒட்டி, துன்பத்தைத் தீர்க்க ஒரே வழி இறைவனைச் சரணடைதல் என்றது.

    வேதம்+ சமணம்= சைவம் என்று சொல்லலாமா?

     

     

     

     
    படம் உதவி: imgsoup.com

     

    Share
  • இன்பமே எந்நாளும் துன்பமில்லை

    சு. கோதண்டராமன்.

     

    SHIVA_CHAKRA_by_VISHNU108ஒரு துன்பமில்லாத வாழ்வுதான் எல்லோரும் விரும்புகிறோம், ஆனால் யாரும் அப்படி வாழ முடிவதில்லை. துன்பத்துக்குக் காரணம் என்ன? ஆசையே என்று சமண சாக்கிய சமயங்கள் கூறுகின்றன. சமணத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த நாவுக்கரசர் ஆசைகளை முற்றிலுமாக ஒழித்துத் தானே துறவியாக வாழ்ந்தார்? அவருக்கு ஏன் சூலை நோய் ஏற்பட்டது? இது போன்ற விளக்கம் சொல்ல முடியாத துன்பங்களுக்குக் காரணம் முன்வினை என்கின்றன அச்சமயங்கள்.

    நமக்கு வரும் துன்பங்களை இரு வகையாகப் பிரிக்கலாம்- நிகழ்காலத் துன்பங்கள், வருங்காலத் துன்பங்கள். நாளைய துன்பங்களின் நினைவே நடுங்க வைக்கிறது. அதைத் தான் அச்சம் என்கிறோம். நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் நாள் முழுவதும் ஆயுள் முழுவதும் எதாவது ஒன்றுக்கு அஞ்சித்தான் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அரசன் தீயநெறியில் நடப்பவனாக இருந்தால் அவன் கொடுக்கவிருக்கும் தண்டனைக்கு அஞ்சி, உயிர் போய்விடுமோ என்று அஞ்சி நாமும் பொய்மை ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் விளைவாக நரகத்தில் இடர்ப்பட வேண்டியுள்ளது.

    அச்சமும் இன்பமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆயிரம் இன்பங்களுக்கு நடுவில் இருத்தி வைத்தாலும் எதிரில் அச்சம் தரும் பொருள் ஒன்று இருந்து விட்டால் அந்த இன்பங்களை அனுபவிக்க முடியுமா? எனவே துன்பத்தோடு கூட அச்சத்தையும் ஒழிக்க வேண்டும்.

    முன் வினைப்பயனாக விளைந்த துன்பங்களை நீக்குவது எப்படி? அவற்றை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று சமணம் சொல்கிறது. அவற்றிலிருந்து தப்பிக்க முயன்றால் மீண்டும் பிறந்து அனுபவிக்க நேரிடும். இந்தப் பிறவியிலேயே அனுபவித்துவிட்டால் மறுபிறவி இல்லாமல் போகும்.

    சமணத்துறவி நாவுக்கரசருக்குச் சூலை நோய் ஏற்பட்டது. அனுபவித்தால் தீர்ந்துவிடும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு அதை ஏற்றுக் கொண்டார். நோய் தீர்வதற்குப் பதிலாக, வர வர மிகுதிப்பட்டது. அவரால் தாங்க முடியவில்லை, கதறத் தொடங்கினார். தன் சகோதரியின் ஆலோசனையின் பேரில் சிவனைத் தஞ்சம் அடைந்தார். அதிகை வீரட்டானப் பெருமானிடம் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர், சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் என்று முறையிட்டார். நோய் நீங்கியது. அவர் ஒரு புதிய உண்மையைக் கண்டறிந்தார். துன்பம் நீங்க, ஆசையை ஒழித்தால் மட்டும் போதாது, ஆலமர் செல்வனிடம் முழுமையாகச் சரண் அடையவும் வேண்டும்.

    ஆசையும் முன்வினையுமே துன்பத்துக்குக் காரணம் என்ற கொள்கையைச் சமண சாக்கியங்களிலிருந்து ஏற்றுக் கொண்ட சைவம் துன்பத்திலிருந்து விடுபட ஒரு தீர்வையும் அளித்தது.

    நாவுக்கரசர் சமணம் விட்டுச் சைவத்திற்கு வந்து சேர்ந்தார். சமண குருமார்கள் அரசனிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தினர். அரசனின் பகைமை தொடர்ந்து துன்பம் தந்தது. நஞ்சு ஊட்டப்பட்டார், நீற்றறையில் தள்ளப்பட்டார், கடலில் தள்ளப்பட்டார். அவர் அஞ்சவும் இல்லை, துன்பப்படவும் இல்லை. உயிர் போவதைப் பற்றி அஞ்சுபவர்கள் தாம் அரசனுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும். இவருக்கோ நரகம் பற்றிய அச்சம் கூட இல்லை. எதற்கும் அச்சம் இல்லாததால் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்தப் பிணியும் நம்மைப் பிணிக்காது, இன்பமாக வாழ்வோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று முழங்கினார்.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

    தனக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதையும் அடுத்த பகுதியில் கூறுகிறார். அரசர்க்கெல்லாம் பேரரசனான சங்கரனுக்கு அடிமையாகத் தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டார் அவர். அவர் யாருக்கு, எதற்கு அஞ்ச வேண்டும்?

    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    இந்த அச்சமின்மை அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் தொனித்தாலும் சில பாடல்களில் அது தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,திருநீறும், பிறையும், புலித்தோல் ஆடையும், பவளம் போன்ற நிறமும், காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், கெடில ஆற்று நீரும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியவர்கள் நாம். ஆதலின் நமக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை.

    சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
    வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
    அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
    திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

    தனக்கு இன்றும் அச்சமில்லை, தன்னை அச்சுறுத்தக்கூடிய பொருள் நாளையும் தோன்றாது என்ற உறுதியைப் புலப்படுத்தி இப்படிப் பத்துப் பாடல்கள் பாடுகிறார்.

    சிவபெருமானிடத்தில் சரணடைய வேண்டுமென்றால் உலகாயத இன்பங்களில் பற்று விட வேண்டும். தன் இடையில் கட்டிய கந்தல் தவிர வேறு எதையும் உடமையாகக் கொள்ளமல், கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் தூங்கியவர் அவர். என்னைக் காப்பது அவன் கடன், இறை பணி செய்வது என் கடன் என்று வாழ்ந்தவர். அவருடைய கீழ்வரும் பாடலைப் பாருங்கள். அம்பலங்களில் பாய் முதலியன இன்றி பூமி மேலேயே படுத்துக் கிடக்கிறார். இவரது பொறுப்பைச் சிவன் ஏற்றுக் கொண்டுவிட்டான். இவர் ஏன் பணக்காரர்களைத் துதி பாடி வாழவேண்டும்?

    புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
    உடன்கிடந்தாற் புரட்டாள் பொய்யன்று மெய்யே
    இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
    இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
    துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்
    சொற் கேட்கக் கடவோமோ துரிசற்றோமே.

    இதன் எதிரொலியைச் சங்கரரின் பஜகோவிந்தத்தில் கேட்கிறோம்.

    ஸுரமந்திர தருமூலநிவாஸ: சய்யா பூதலமஜினம் வாஸ: I
    ஸர்வபரிக்ரஹ போக த்யாக: கஸ்ய ஸுகம் நகரோதி விராக: II

    கோயில் வாசலிலோ, மரத்தடியிலோ தங்கி, தரையில் படுத்து, மான் தோலை உடுத்தி, எல்லா சுகானுபவத்தையும் துறந்து வைராக்கியத்துடனிருப்பது அனைவருக்குமே சுகம்தானே!

    சிவனுக்கு மீளா ஆளாக ஆகிவிட்டதால் அவருக்கு வருங்காலத் துன்பமாகிய அச்சம் நீங்கியது மட்டுமல்ல, நிகழ்காலத் துன்பங்களும் நீங்கிவிட்டன. கடந்த பிறவியில் செய்த வினைகளும் செயலிழந்து போய்விட்டன என்கிறார்.

    அல்லல் என்செயும் அருவினை என்செயும்
    தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
    தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
    எல்லையில்லதோர் அடிமை பூண்டேனுக்கே.

    படம் உதவி: http://ledi-arafely.blogspot.com/2012/04/blog-post_6249.html

    Share
  • திருவாசகத்தில் பசு

    சு. கோதண்டராமன்.

    பக்தி மேலீட்டால் உருகிக் கசிந்த உள்ளத்திலிருந்து பொங்கிப் பீறிட்டு வெளிவந்து கேட்போர் உள்ளத்தையும் உருகிக் கசியவைப்பது திருவாசகம். காரிகை கற்றுக் கவி பாடியவரல்ல மணிவாசகர். ஆனால் அவரது படைப்பில் இலக்கியச் சிறப்புகளும் அடங்கி இருப்பது பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த இலக்கியச் சிறப்புகளில் ஒன்று உவமைகள் கையாளப்படும் பாங்கு. இவரது உவமைகள் கற்போரது உள்ளத்தில் கருத்தை அழுத்தமாகப் பதிய வைப்பதோடு அழகும் கூட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காணலாம்.

    மாணிக்கவாசகரின் உவமைகளுள் விலங்குகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றுள்ளும் மிக அதிகமாகப் பேசப்படுவது நாய். நன்றி உணர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டாலும் விலங்குகளில் மிகக் கீழானதாகக் கருதப்படுவது நாய்.

    இறைவனை மிக உயர்ந்தவனாகவும், தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கூறிக் கொள்வது பக்தர்களின் இயல்பு. மணிவாசகர் தன்னை மனிதரில் மிகத் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்காமல் நாயேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் இகழ்ந்து கொள்கிறார். நான் என்னும் செருக்கு முற்றிலும் ஒழிந்து விட்ட அவரது மனநிலையை இதிலிருந்து உணரமுடிகிறது.

    நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை-விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.

    அடிகள் தீட்டும் இந்த சொற்சித்திரத்தைப் பாருங்கள். ஒரு பசு மந்தை. பல பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறது.

    மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போல, தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.

    ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
    உன் தாளிணை அன்புக்கு
    ஆரா அடியேன் அயலே
    மயல் கொண்டு அழுகேனே.
    (திருச்சதகம் 87)

    பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தனது அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

    கடவுளை அடைய நம்முடைய பக்தி உணர்வு எவ்வளவு தீவீரமாக இருக்கவேண்டும் என்பதற்குத் திருவாதவூரார் காட்டும் உதாரணைத்தைப் பாருங்கள். புதிதாகக் கன்று ஈன்ற பசு தன் கன்றைச் சற்று நேரம் காணாவிட்டால் கூடக் கதறித் தீர்த்துவிடுகிறது. மேயச் சென்றால் கூட அதன் நினைவு கன்றிடமே உள்ளது. வயிறு நிரம்பியதும் அது கன்றிடம் திரும்பி வரும் வேகத்தையும் அதனை நக்கிக் கொண்டே பாலூட்டுவிக்கும் பாசத்தையும் பார்த்தவர்களுக்கு, கற்றா (கன்றை ஈன்ற பசு) போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற அவரது உவமையின் ஆழம் புரியும்.

    கூத்தா உன் குரைகழற்கே
    கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.
    (திருப்புலம்பல் 3)

    கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
    (போற்றித் திருவகவல் 73)

    திருவாசகம் முழுவதும் மணியிடை நூல்போல் ஊடுருவி நிற்பது ஒரே உணர்ச்சி. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான என்னை ஆண்டுகொண்ட கருணைத்திறம் எவ்வளவு பெரியது என்று வியந்து, அந்தச் சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே அது. மாட்டை உவமையாக்கி மணிவாசகர் அதை விளக்கும் அழகைக் காணுங்கள்.

    நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவர். இத்தகைய கன்றுக்கு நுந்து கன்று என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

    நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
    (திருக்கோத்தும்பி 10)

    மாடு சில சமயம் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ஆள்வாரிலி மாடு என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.

    …………………………….ஆள்வாரிலி மாடாவேனோ
    நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு
    மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே
    (கோயில் மூத்த திருப்பதிகம் 7)

    சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட
    ஊரேறாய் இங்கு உழல்வேனோ
    (திருச்சதகம் 53)

    மாடு தொடர்பான பொருட்களும் திருவாசகத்தில் நிறைய இடம் பெற்றுள்ளன. உவமிக்கமுடியாத சிவானந்தத்திற்கு உவமையாக தேன், கரும்புச்சாறு இவற்றுடன் பாலும் அவரால் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் தயிர் கடைதல் ஒரு தினசரி வேலை. மணிவாசகர் தயிர் கடையப்படுவதைக் கூர்ந்து கவனிக்கிறார். மத்துக்கும் தாழிக்கும் இடையில் தயிர் தான் என்ன பாடு படுகிறது! புலன்களால் அலைக்கழிக்கப்பட்டுப் பரம்பொருளில் நிலைகொள்ளாமல் தவிக்கும் தன் மனதுக்கு அதை உவமிக்கிறார்.

    மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
    தேனிலாவிய திருவருள் புரிந்தவென் சிவநகர் புகப்போகேன்
    (திருச்சதகம் 40)

    மத்துறு தண்டயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி
    வித்துறுவேனை விடுதிகண்டாய்
    (நீத்தல் விண்ணப்பம் 30)

    மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திட வுடைந்து
    தாழியைப் பாவு தயிர்போற் தளர்ந்தேன்
    (அடைக்கலப் பத்து 6)

    நிறைய மாடு உள்ளவர்கள் நெய்யை ஒரு குடத்தில் சேகரித்து வைத்திருப்பர். அது வீசும் மணத்தால் கவரப்பட்ட எறும்புகள் மெள்ள குடத்தின் மீது ஏறி உள்ளே இறங்கி நெய்யை அடைந்துவிடும். நெய்ப்பசை கால்களை அசையவிடாமற் செய்யவே, அவை திரும்பிச் செல்ல முடியாமல் நெய் மீது மிதக்கத் தொடங்கும்.

    மனிதனும் அப்படித்தான். புலன்களுக்கு மகிழ்ச்சி தரும் உலகப் பொருட்கள் பால் நாட்டம் கொண்டு அவற்றை அடைவதிலேயே தன் முயற்சி முழுவதும் செலவிடுகிறான். அந்தப் போகப் பொருட்களை அடைந்த பின் அவனால் மீள முடிவதில்லை. இறைநாட்டம் அவனுக்கு இயலாமற் போகிறது. வாழ்வின் லட்சியம் என்ன என்பதை உணராமல் உரிய கடமைகளைச் செய்யாமல் புலனின்பத்தை மெய்யென்று மயங்கி, செய்யக் கூடாததைச் செய்து அதிலேயே உழலும் நம் போன்றோரின் நிலையைத் தன் மேல் சார்த்தி மணிவாசகர் புலம்புகிறார்.

    உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
    வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
    பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா
    மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே
    (நீத்தல் விண்ணப்பம் 24)

    பசுவேறும் பரமனையே இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த வாதவூரர் பசுவை உவமையாக்கித் தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளது நம்மைப் பரவசப்படுத்துகிறது.

    படம் உதவி: தினமணி (http://blog.dinamani.com/?p=2062)

    Share
  • அப்பரடிகளின் உவமைகள்

    சு. கோதண்டராமன்.

    Captureஉவமை என்பது அணிகளுக்குள்ளே முதன்மையானது; பிற அணிகளுக்கு அடிப்படையானதும் கூட. உவமை அணியைப் பயன்படுத்தாத புலவர் இல்லை. திருநாவுக்கரசு நாயனாரும் இதனை விரிவாகப் பயன்படுத்துகிறார்.

    இறைவனின் புகழ் உரைக்கும் அதே வேளையில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பேசுவது அப்பரடிகளின் தனிச்சிறப்பு. அவரைத் தொடர்ந்து மணிவாசகரும், அருணகிரியாரும், பின்னர் ராமலிங்க வள்ளலாரும் இதே பாணியைப் பின்பற்றினர்.

    நாயனாரின் உவமைகளை பொருள் உவமை, நிகழ்வு உவமை என இருவகையாகப் பிரிக்கலாம். முத்து, பவளம், தேன், குன்று போன்ற உயர்ந்த பொருட்களை உவமையாக்குவது பொருள் உவமையாகும். இந்த உவமைகள் பெரும்பாலும் ஒரு சொல் அல்லது இரு சொல்லாக இருக்கும். பொதுவாக, இறைவனை வர்ணிக்கும்போது பொருள் உவமைகளைப் பயன்படுத்துகிறார்.

    வெள்ளிக் குன்றன்ன விடையான்
    கருமணிபோற் கண்டத்தழகன்
    முத்தினைப் பவளத்தை முளைத்த வெம் தொத்தினைச் சுடர் போலொளிப் பித்தனை
    சுடரைப் போலொளிர் சுண்ண வெண்ணீற்றனை
    கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

    ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

    தன் கீழ்மையைக் குறிப்பிடும்போது நிகழ்வு உவமைகளைப் பயன்படுத்துகிறார். சொல் தொடர்களாக உள்ள இவை ஒரு நிகழ்வாகவோ, ஒரு கதையின் சுருங்கிய வடிவமாகவோ அல்லது பழமொழியாகவோ இருக்கக் காண்கிறோம். அத்தகைய உவமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

    ஊருக்குப் புதியவன் ஒருவன் ஒரு குளத்துக்கு வருகிறான். அக்குளத்தின் ஆழம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். குளத்துக்கு ஒரு காவல்காரர் உண்டு. ஆனால் அவர் தன் கடமையைப் புறக்கணித்து எங்கோ போய்விட்டார். அந்நிலையில் குளக்கரையில் நின்று கொண்டிருந்த சிலரை அவன் வினவுகிறான். அவர்களோ வம்பர்கள். ‘குளத்தின் ஆழத்தை நீயே தெரிந்து கொள்’ என்று சொல்லி அவனைக் குளத்துக்குள் தள்ளிவிட்டார்கள். ஆழம் நிலை கொள்ளவில்லை. எந்தத் துறைப் பக்கம் சென்றால் கரையேற முடியும் என்பதை அறியாமல் அவன் தவிக்கிறான்.

    இந்த நிலையில் தான் இருப்பதாக அப்பர் தெரிவிக்கிறார். உய்யும் வழியை முறையாக அறிவிப்பாரின் நட்பு எனக்கு முன்னதாகக் கிடைக்கவில்லை. வீணர்களின் வார்த்தையைக் கேட்டு சமணம் என்னும் ஆழம் தெரியாத குளத்தில் விழுந்து தடுமாறி, சூலை நோயால் துன்புற்று நிற்கின்றேன். சிவபெருமானின் பெருமையை அறிந்தோரின் வார்த்தைகளை முன்னமே நான் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே என்று வருந்துகிறார்.

    காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொளென்று சொல்லி
    நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைகொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்
    வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் 4.1.5

    காம வயப்பட்டு இறைவனை மறந்து திரிவர் பலர். ஏதோ நல்வினைப் பயனால் அவர்களுக்கு இறையருள் நெறிக்குத் திரும்பும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஆனால் அவர்கள் மனமோ பழைய பொய்ந் நெறியிலேயே செல்ல விழைகிறது. உழுத வயலையே மறுபடியும் யாராவது உழுவார்களா? இந்தப் பேதை நெஞ்சம் மட்டும் ஏன் இப்படிப் பழைய பாதையிலேயே நாட்டம் கொள்கிறது என்று கேட்கிறார் அப்பர் பெருமான்.

    எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
    தொழுது போற்றி நின்றேனையுஞ் சூழ்ந்துகொண்டு
    உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
    இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே. 5.90.8

    நரி ஒன்று வாயில் கவ்விய நல்ல ஊனுடன் நீர் நிலையைக் கடந்து செல்லும் போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டு அதனை அடைய விரும்பி தன் வாயில் இருந்ததையும இழந்த கதை போல மக்கள் கிட்டாத பொருட் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிட்டியதாகிய சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். அத்தகையோருக்கும் சிவபெருமான் அருள் புரிவார்.

    நரிவரால் கவ்வச் சென்று
    நற்றசை இழந்தது ஒத்த
    தெரிவரால் மால்கொள் சிந்தை
    தீர்ப்பதோர் சிந்தை செய்வார் 4-27-5

    ஒரு நல்ல இல்லத்தரசி என்றால் நண்பகலில் பசிக்கும் என்பதை உணர்ந்து முற்பகலில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வாள். பேதையாக இருந்தால் முற்பகலை வீணே கழித்துவிட்டு, பசி வந்த பின் உணவு தயாரிக்க முற்படுவாள். அது போலப் பேதையாகிய நான் வாழ்வின் முற்பகுதியை வீணே கழித்து விட்டு, முதுமையில் உடல் நலிவுற்றபின் இறை வழியைத் தேடுகின்றேன் என்று தன்னை இகழ்ந்து கொள்கிறார் வாகீசப் பெருமான்.

    பின்பகல் உணங்கல் அட்டும்
    பேதைமார் போன்றேன் 4.28.1

    நீர்க் கரையில் நிற்கும் கொக்கு தனக்குத் தேவையான உணவைத் தேடிப் பெறுகிறது. மரத்தின் மீது அமர்ந்துள்ள கொக்கோ வயிற்றை நிரப்ப முயற்சி செய்யாமல் பசியால் வாடி வாய் விட்டு அலறுகிறது. அது போல மக்கள் துன்பத்தில் உழன்று அலறுகிறார்களே அன்றி உய்யும் வழியைக் கடைப்பிடிக்காமல் தீய குணங்கள் ஆகிய சரக்கைச் சுமந்து திரிகிறார்கள் என்கிறார் அடிகள்.

    மரக்கொக் காமென வாய்விட்டலறி
    சரக்குக் காவித் திரிந்து 5-75-1

    முன்னாள் சமணராகிய அவர் நகைப்புக்குரிய தன் பழைய நிலையை விவரித்து விட்டு, அதிலிருந்து தான் தப்பியதையும் கூறுகிறார்.

    சமணத் துறவிகள் பிச்சை உணவைக் கையில் ஏந்தி உண்பர். கைகளிலிருந்து நெய் கீழே சொட்டும்போது, அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாமல், கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமல் இருப்பதற்காகக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்பர். அத்தகைய கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய்யெனக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத் தீங்கினின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்தேன்.

    கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
    கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
    பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
    புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன் 6.11.9

    இறைவனை வழிபடுவதற்குரிய தலங்கள் உள்ளன. அங்கு சென்று உய்யும் நெறியிற் கலவாமல் மக்கள் இன்பத்தை எங்கெங்கோ தேடுகின்றனர். ஆற்றில் தொலைத்த பொருளைக் குளத்தில் தேடும் அறிவிலிகள் உண்டோ என்று வியக்கிறார் நாவுக்கரசர்.

    துன்மதியால்
    ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் தேடிய ஆதரைப்போற்
    காற்றிற் கெடுத்து உலகெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே. 4.97.6

    இறைவா, ஏன் அடியேனை அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்று செய்துவிட்டாய் என்று வினவுகிறார்.

    கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
    வித்தென்னைக் கோகுசெய்தாய் 4-100-2

    பயன் அற்ற பாழ் நிலத்தில், நல்ல நீரை வீணாகப் பாய்ச்சியது போன்ற தன் மடமையை வெளிப்படுத்துகிறார்.

    பாழுக்கே நீரிறைத்து
    வழியிடை வாழ மாட்டேன் 4-31-6)

    ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போலவும் தான் இருந்ததாக அப்பர் பெருமான் கூறுகிறார்.

    கழியிடைத் தோணி போன்றேன் 4.31.6

    செஞ்சுடர் விளக்கத்தில் (சூரிய உதயத்தில்) கூவுங் கோழியை விலக்குவார் உளரோ? கோழி தானே கூவித் தானே அடங்கும். அவ்வாறே தாம் தகாதன செய்யும் காலத்தில், விலக்குவாரின்மையால் தாமே செய்து தாமே ஓய்ந்ததைக் குறிப்பிடுகிறார்.

    விலக்குவார் இலாமையாலே
    விளக்கத்திற் கோழி போன்றேன் 4.31.5

    துன்பத்தை அனுபவித்தால் தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாகத் தான் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

    உற்றலாற் கயவர் தேறார்
    என்னும் கட்டுரையோடு ஒத்தேன் 4.31.8

    அப்பரடிகளின் தேவாரத்தில் பழமொழிப் பதிகம் என்றே ஒன்று உண்டு. பரம்பரைச் சைவராகிய அவர் சமண சமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்தது, பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கியது, சமணர்கள் செய்த செயல்களில் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றது, பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தது ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை உவமையாகக் காட்டுகிறார். அந்தப் பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

    சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பினேன்.

    கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே. 4.5.1

    கைப்பற்றுதற்கு எளிதாகவும், உண்பார்க்குச் சுவையை உடையதுமான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய், கைக்கொண்டாலும் உண்ணத் தகுதியற்றதாய் உள்ள காக்கையின் பின் சென்ற அறிவிலியைப் போன்றவன் நான்.

    முயல்விட்டுக்
    காக்கைப் பின் போனவாறே. 4.5.2

    அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவன்.

    அறமிருக்க
    மறம் விலைக்குக் கொண்டவாறே. 4.5.3

    திரவ வடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போன்றவன்.

    பனிநீராற்
    பாவை செயப் பாவித்தேனே. 4.5.4

    ஒருவன் ஏற்படுத்திய சண்டையில் அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவது போலத் துன்புற்றேன்.

    ஏதன் போர்க்கு
    ஆதனாய் அகப்பட்டேனே. 4.5.5

    இருட்டறையில் மலட்டுப் பசுவைப் பால் வேண்டிக் கறக்க முனைந்து உதைபடும் அறிவிலி நான்.

    இருட்டறையின்
    மலடு கறந்து எய்த்தவாறே. 4.5.6

    விளக்கு இருக்கும்போது, மின்மினியினுடைய தீயைக் குளிர் காயக் கொள்வாரைப் போன்றவன்.

    விளக்கிருக்க
    மின்மினித்தீக் காய்ந்தவாறே. 4.5.7

    மக்கள் குடியில்லாத ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்த அறிவில் வறிஞன்.

    பாழூரிற்
    பயிக்கம் புக்கு எய்த்தவாறே. 4.5.8

    செய்தற்குரிய செயலாகத் தவம் இருக்கும்போது, அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டேன்.

    தவமிருக்க
    அவஞ்செய்து தருக்கினேனே. 4.5.9

    மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்தேன்.

    கரும்பிருக்க
    இரும்பு கடித்தெய்த்தவாறே. 4.5.10

    அப்பரடிகள் மக்களின் பொதுவான இயல்பினைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு அவர்களுக்காக இறைவனை வேண்டுகிறார். அவர் தம்மிடம் இருப்பதாகக் கூறும் தீக்குணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளன. இந்த உவமைகளைக் கொண்டு அதை அழுத்தம் திருத்தமாக நம் உள்ளத்தில் பதிய வைப்பதன் மூலம் நம் குறைகளை நாம் உணர வைத்து முன்னேற வழி காட்டுகிறார் அவர்.

    படம் உதவி: http://www.artic.edu/aic/collections/artwork/34501

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 54

    சு. கோதண்டராமன்.

     

    என்னதான் இருக்கிறது வேதத்தில்

    இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி இது. கடந்த ஓராண்டு காலமாக இதைப் படித்து வந்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், குறிப்பாக, இதைப் பெரிய வாசகர் வட்டத்துக்கு வாரம் தோறும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை விரும்பி மேற்கொண்டு நிறைவேற்றிய திருமதி தேமொழிக்கும் என் நன்றிகள்.

    இந்நூல் புத்தக வடிவில் வெளிவருகிறது. கிழக்கு பதிப்பகத்தார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கிழக்கு பதிப்பகம் வெளியிடும் என் நூலின் பெயர்:

    “வேதம் – சந்தேகங்களும் விளக்கங்களும்”

    மே இரண்டாவது வாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். விலை ரூ. 175. பிரதி வேண்டுவோர் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

                       போன்- 9445 97 97 97, 94459 01234

    *************************************************************************************

    சந்தேகம் தீர்ந்தது

    [ நிறைவுப் பகுதி ]

    முன்னுரையில் பாமரனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் பார்த்தோம். அவற்றிற்கு அவன் பெற்ற விடைகளை இங்கு பார்ப்போம்.

    கடவுளுக்கு உருவம் உண்டா?

    வேதத்தில் உருவச் சிலைகளை வைத்து வழிபடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி சொல்வது போல தெய்வத்தை நேரே கண்டு தொழும் வழக்கம் தான் இருந்திருக்கிறது. அந்தத் தெய்வங்கள் ரிஷிகளின் கண்ணுக்குப் புலனாயினர். தேவர்கள் ஒளிமயமாக இருந்தார்கள். அவர்கள் தங்க ரதத்தில் ஏறி வந்தார்கள். அவர்களுக்கு கை கால்கள் இருந்தன. தாடி மீசைகள் கூட இருந்தது சொல்லப்படுகிறது. தெய்வத்தை நம் மனக்கண் முன் நிறுத்தும் முயற்சியாக உருவச் சிலைகளைப் பயன்படுத்தல் வேத சம்மதமானதே. இந்தத் தேவர்களுக்கெல்லாம் அப்பால் உள்ள பரம்பொருளோ உருவமற்று, குணமற்று, பெயரற்று ஸத் (இருக்கிறது) என்னும் சொல்லால் மட்டுமே குறிப்பிடப்படுவதையும் காண்கிறோம். எனவே உருவமற்ற பரம்பொருளை மனதால் தியானிப்பதும் வேத சம்மதமானதே.

    முத்தி என்பது எது?

    தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு வித புருஷார்த்தங்கள் ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவதும் அங்கு இல்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். இயற்கை அழகை ரசித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் சமூகத்திலும் ஏழைகள் இருந்தார்கள், தீமை செய்பவர்கள் இருந்தார்கள், தர்ம சிந்தனை இல்லாமல் கறாரான வணிகத் தனத்துடன் நடந்து கொண்டவர்களும் இருந்தார்கள். குடும்பத்தைக் கவனிக்காத சூதாடிகள் இருந்தார்கள். குற்றவாளிகள் இருந்தார்கள், பகைவர்கள் இருந்தார்கள், போர்கள் நடந்தன. இதனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    வாழ்க்கையின் லட்சியமாக அவர்கள் கருதியது அமரத்வம் அடைவதைத்தான். அமரத்வம் என்பது உடல் சாகாமல் வாழ்வது அல்ல. உடலுக்கு நூறாண்டு வேண்டிய அவர்கள் தன் குழந்தை, பேரக்குழந்தைகள் மூலம் வம்சம் விருத்தி அடைவதை அமரத்துவமாகக் கருதினர். சோமத்தை அருந்தி காலம் கடந்த நிலையில் திளைப்பதை தற்காலிக அமரத்துவ அனுபவமாகக் கருதினர். அருஞ் செயல்கள் செய்து அதனால் வரும் புகழ் மூலம் என்றென்றும் வருங்கால சந்ததியினர் மனதில் இடம் பிடிக்கும் அமரத்துவமே அவர்களது வாழ்வின் மிகப் பெரும் குறிக்கோள். இயற்கை நியதிப்படி வாழ்வதும் தேவர்களை வணங்குவதும் உணவு முதலான உலகியல் வசதிகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல. ஒளி உலகை அடைந்து ஒளிமயமாகச் சூரியன் போல, இந்திரன் போல, அக்னி போலப் புகழுடன் விளங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முக்கிய பிரார்த்தனை.

    முழு முதல் கடவுள் எது?

    வேதத்தில் பல வகையான தேவர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்களில் அம்சன் போன்ற சிலர் ரிக் வேத காலத்திலேயே செல்வாக்கு இழந்த நிலையில் காணப்படுகின்றனர். அக்னி தேவர்களுக்குள்ளே மிக இளையவர் என்று போற்றப்படுகிறார். அவர் அக்காலத்தில் புதிதாக ஏற்பட்ட தெய்வமாக இருக்கலாம். தேவ நிலையை அடைவது மனித வாழ்வின் குறிக்கோள் என நிர்ணயித்துள்ள வேதம் காலம் தோறும் புதுப் புது தெய்வங்கள் தோன்றுவதற்கும் இடம் அளிக்கிறது. அவரவர் விருப்பமான தெய்வத்தை வழிபடலாம். இந்தப் பெயர்கள் உருவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரம்பொருள் உள்ளது என்பதையும் வேதம் எல்லா இடங்களிலும் நினைவூட்டுகிறது. என் தெய்வம் சிறந்தது, இதுவே பரம்பொருள் என்று பேசுவது தவறு இல்லை. உன் தெய்வம் மட்டமானது என்று கூறுவது வேதத்திற்கு உகப்பானது அல்ல.

    சிவன் மேலானவரா, விஷ்ணு மேலானவரா?

    இருப்பது ஒன்று. அதைப் பலரும் பல விதமாகப் பேசுகின்றனர். ஒருவர் சிவன் என்று அழைக்கிறார். மற்றவர் விஷ்ணு என்கிறார். எப்படிப் பெயரிட்டாலும் அது அந்த ஒன்றையே குறிக்கும். காடன், மாடன், காட்டேரி என்று அழைத்தாலும் அது பரம்பொருளே. யெஹோவா, அல்லா என்று அழைக்கப்படுவதும் அதே பரம்பொருள் தான்.

    இறப்புக்குப் பின் என்ன?

    இறப்புக்குப் பின் என்ன ஆகிறது என்ற கவலை ஸம்ஹிதை இயற்றிய ரிஷிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அங்கிரஸ், ப்ருகு, மனு போன்ற முன்னோர்களை மனித குலத்தின் மூதாதையர்களாக அவர்கள் பெரிதும் மதித்தார்கள். தாய் தந்தையர், தாத்தா பாட்டி இவர்களுக்கு சிராத்தம் செய்வது அல்லது வேறு ஏதேனும் வகையி்ல் வணங்குவது என்பது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். உறவினர்கள் இறந்தால் வருந்தினார்கள். அக்னியே, எங்கள் சோகத்தை மாற்று என்று வேண்டினார்கள். அருஞ்செயல்கள் செய்து புகழ் பெற்று உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் வீற்றிருக்கும் அமரத்வத்தை லட்சியமாகக் கொண்டார்கள். அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார்கள். பலர் மர்த்யராகவே இறந்தனர். சிலர் நரர் என்ற நிலைக்கும், சிலர் ரிஷி நிலைக்கும் உயர்ந்தனர். சிலர் மகோனர்களாயினர். மிகக் குறைந்த சிலரே சூரிகளாயினர். அதிலும் மிகச் சிலரே தேவ நிலையை அடைய முடியும் என்பதை உணர்ந்திருந்தனர்.

    சிராத்தம் செய்வது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை என்றால் அது வேத விரோதமானதா?

    அல்ல. முன்னோரை வணங்கும் வழக்கத்தை ரிக் வேதம் ஏற்படுத்தி உள்ளது. மனு, அங்கிரஸ் போன்றோர் வணங்கப்படுகின்றனர். இப்படித் தான் வணங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. சிரத்தையின் உயர்வு பற்றிப் பேசுகிறது வேதம். அந்த சிரத்தை ஏற்படவேண்டும் என்பதற்காக, வேத மந்திரங்களைக் கூறி முன்னோர்களை வழிபடுவது வேத சம்மதமானதே.

    கோயில் வழிபாடு வேதத்தில் சொல்லப்படவில்லையே, அது வேத சம்மதமானதா?

    பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதையும் அதை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம் என்பதையும் வேதம் ஏற்றுக் கொள்கிறது. வேத காலப் பிரதான வழிபாட்டு முறை யக்ஞம் என்றாலும் யக்ஞம் மட்டுமே வழிபாட்டு முறை என்று வேதம் முடிவு கட்டி விடவில்லை. யக்ஞம் இல்லாத பிரார்த்தனையும் ஏற்புடையதே என்றும் கூறுகிறது. ஆகவே எந்த வழிபாட்டு முறையும் வேத சம்மதமானதே. நமக்கு மேலான சக்தி ஒன்று உண்டு என்பதை உணர்ந்து செய்யப்படும் எச்செயலும் யக்ஞமாகவே கருதப்படும்.

    வேதம் கற்காமல் பஜனை போன்றவற்றில் ஈடுபடலாமா?

    தவறில்லை. நாம ஜபத்தின் சிறப்பு பற்றி வேதம் புகழ்ந்து கூறுகிறது. இறைவனின் பல பெயர்களைப் பல விதமாக, அர்ச்சனையாகவோ, நாமாவளியாகவோ, பாட்டாகவோ எப்படிப் பேசினாலும் அது வேத சம்மதமானதே.

    தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுக்கலாமா?

    மாமிச உணவு சாப்பிடுபவர்கள் கொடுக்கலாம். வேதத்தில் ஆடு, மாடு, குதிரை பலி கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உள்ளன. புதிய மந்திரம் இயற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் ரிஷிகள், உயிர்க் கொலையையும், யக்ஞங்களையும் நீக்கி பிரார்த்தனை ஒன்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர் என்பதையும் பார்க்கிறோம். புதிய ரிஷிகள் பழைய யக்ஞ முறைகளைக் கண்டிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. பின்னர் யஜுர் வேத காலத்தில் மிருக பலியுடன் கூடிய யாகங்கள் பெருகியதையும் பார்க்கிறோம். புத்த சமண மதங்களின் பிரசாரத்தால் இந்து சமயத்தில் பலி இடுதல் குறைந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது. இது காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது. அதனால் அவரவர் வழக்கப்படி செய்து கொள்வதை வேதம் தடுக்கவில்லை.

    மாமிச உணவு சாப்பிடலாமா?

    வேத ரிஷிகள் காலத்தில் மாமிச உணவைச் சாப்பிடுவது தவறாகக் கருதப்படவில்லை. எனவே இன்று மாமிசம் உண்பவர்களை நாம் வேத விரோதிகளாகக் கருதித் தாழ்வாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் வேதத்திலேயே உயிர்களைக் கொல்லாதீர்கள் என்ற கருத்தும் காணப்படுவதால், வேதம் தொகுக்கப்படுவதற்கு முன்னமேயே மாமிச உணவுக்கு எதிரான கருத்தும் தோன்றி விட்டது என்பதை அறிகிறோம். ஆடை அணியாதிருந்த மனிதன் வளர்ச்சி பெற்று ஆடை அணியத் தொடங்கினான். அது போல, உணவு விஷயத்திலும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக மாமிசம் உண்பது மறையத் தொடங்கியது. சிந்தனை வளர்ச்சியில் நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து அவரவர் தத்தம் உணவுப் பழக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

    அஹம் ப்ரம்மாஸ்மி என்ற உபநிடதக் கருத்து ரிக் வேதத்தில் உள்ளதா?

    உள்ளது. த்ரஸதஸ்யு என்ற ரிஷி பரவச நிலையில் பாடிய ஒரு சூக்தத்தில் நானே வருணன், நானே இந்திரன் என்று பாடுகிறார். 4.42
    8.43.14 இல் ரிஷி தன்னை அக்னியுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
    3.26.7 இல் நானே அக்னி, நெய் எனது கண். அம்ருதம் எனது வாய். நான் வானை அளக்கும் சூரியன். நான் குறையாத வெப்பம். என் பெயர் ஹவிஸ் என்று எல்லாவற்றிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
    4.26.1-3 இல் நான் மனுவாக இருந்திருக்கிறேன். சூரியனாக, கக்ஷிவானாக, ரிஷியாக. நான் பூமியைக் கொடுத்தேன், மழையைக் கொடுத்தேன், ஆறுகளை ஓடச் செய்தேன். தேவர்கள் நான் சொன்னதைக் கேட்கிறார்கள். நான் இந்திரனாக இருந்து சம்பரனின் 99 கோட்டைகளை அழித்தேன் என்று சொல்லும் மந்திரம் அந்த ரிஷி நானே பரம்பொருள் என்னும் நிலையை அடைந்திருந்ததைக் காட்டுகிறது.

    (இது வரை பாமரன் படித்துத் தெரிந்து கொண்டது இவ்வளவு தான். ஆழ்ந்து படிக்கப் படிக்கப் புதிய கருத்துகள் தோன்றுகின்றன. அப்பொழுது இதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் திருத்தம் பெறலாம். வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் பலரை ஈடுபடுத்த இந்நூல் தூண்டும் என்றால் இதன் நோக்கம் நிறைவேறும்.)

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 53

    –சு. கோதண்டராமன்.

     

    வேதப் புதிர்கள் சில

     

    புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு வேதம் ஒரு வைரச் சுரங்கம். வேதத்தில் உள்ள நூற்றுக்கணக்கான புதிர்களில் சில மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன:-

    முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா- இது நீண்ட நாள் பிரச்சினை. வேதத்தில் உள்ள இது போன்ற ஒரு புதிர்- தக்ஷன் அதிதியிடமிருந்து பிறந்தான். அதிதி தக்ஷனிடமிருந்து பிறந்தாள். 10.72.4

    ஒரு கால் உள்ளவன் இரு காலனைத் தாண்டிப் போகிறான். இரு காலன் முக்காலனை வெல்கிறான். இரு காலன் கூப்பிட்டால் நான்கு காலன் வருகிறான். ஐங்காலர் நின்று பார்க்கின்றனர். 10.117.8

    சோமன் தோத்திரங்களால் தூண்டப்பட்டு ஏழு நதிகளை மகிழ்விக்கிறார். அவை ஒரு கண்ணை வளர்க்கின்றன. 9.9.4

    தனியாகச் சஞ்சரிக்கும் ஒருவர் ஆறு பாரங்களைச் சுமக்கிறார். பசுக்கள் உயர்ந்த உண்மையை அடைகின்றன. மூன்று உலகங்கள் மேலே உள்ளன. அவற்றில் ஒன்று தெரிகிறது, இரண்டு மறைந்துள்ளன. 3.56.2

    இந்த இனிய தலை நரைத்த புரோகிதருடைய மூன்று சகோதரர்களில் நடுவர் மின்னல். மூன்றாமவர் நெய் முதுகு உடையவர். இங்கு நான் ஏழு புத்திரர்களை உடைய தலைவனைப் பார்க்கிறேன். 1.164.1

    அவர்கள் ஒற்றைச் சக்கரம் உள்ள தேருக்கு ஏழு குதிரைகளை இணைத்தனர். ஏழு பெயருடையதை ஒரு குதிரை சுமந்து செல்கிறது. மூன்று அச்சுகளை உடைய அழியாத சக்கரம் அது. எல்லா உலகங்களும் அதில் நிலைபெற்றுள்ளன. 1.164.2

    மூன்று தாய்மார்களையும் மூன்று தந்தைகளையும் தனியே சுமக்கிறார் அவர். அவர்கள் அவரைத் துன்புறுத்துவதில்லை. வானின் உச்சியில் அவர்கள் பேசுகிறார்கள். எல்லோருக்கும் தெரிந்த பேச்சு, எவரையும் கட்டுப்படுத்தாத பேச்சு. 1.164.10

    இவர்கள் ஆண்கள் என்று சொன்னார்கள். ஆனால் இவர்கள் பெண்கள். கண்ணுள்ளவன் பார்க்கிறான். இல்லாதவன் அறியமாட்டான். அறிவாளியான பிள்ளை அறிவான். இதைப் புரிந்து கொண்டவன் தந்தையின் தந்தை ஆவான். 1.164.16

    அந்த மரத்தின் உச்சியில் அழகிய இறக்கையுள்ள பறவைகள் இனிமையை உண்கின்றன. அவை அங்கே தங்கி முட்டை இடுகின்றன. அந்தப் பழம் இனியது என்று சொல்கிறார்கள். தந்தையை அறியாதவன் அதை அறியமாட்டான். 1.164.22

    நான்கு கொண்டைகள் கொண்ட அழகிய இளம்பெண் நெய்யினால் பளபளக்கும் முகத்துடன் அறிவை அணிந்து கொள்கிறாள். அவளிடத்தில் வலிமையுள்ள பறவைகள் இரண்டு வந்து அமர்ந்தன. அங்கு தான் தேவர்கள் தங்கள் பங்கைப் பெற்றுக் கொள்கின்றனர். 10.114.3

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 52

    சு. கோதண்டராமன்.

    வேதப் பொன் மொழிகள் சில

     

    இயற்கை நியதி
    இயற்கை நியதியைப் புரிந்து கொள்வது எளிதல்ல. 6.9 இல் வரும் பின் வரும் மந்திரங்களைக் கவனியுங்கள்.
    நாளின் ஒரு பகுதி கறுப்பாகவும் மற்றொரு பகுதி வெள்ளையாகவும் உள்ளது. ஆடை போல் நெய்யப்பட்ட இந்தச் சிக்கலான அமைப்பில் எனக்கு நெடுக்கு நூலும் புரியவில்லை, குறுக்கு நூலும் தெரியவில்லை. தந்தை உதவி இல்லாமல் எந்த மகனாவது இதைப் புரிந்து கொள்ள முடியுமா? அழிவில்லாத இவ்வுலகத்தின் காப்பாளன் கீழிறங்கி வந்து தானே பார்ப்பதை எவன் அறிகிறானோ அவனுக்கே இந்த ரகசியம் தெரியும்.

    விதி
    நதிகள் தலைகீழாகப் பாய்கின்றன. புல் தின்னும் மிருகம் சிங்கத்தை எதிர்க்கிறது. நரி காட்டுப் பன்றியைக் குகையிலிருந்து துரத்துகிறது. இதன் மர்மம் என்ன? 10.28.4
    பிறந்திருக்கும் அனைவரும் தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்ட வழிகளிலே சென்று முன்னோர்கள் சென்ற இடத்தை அடைகிறார்கள். 10.14.2
    குதிரை நுகத்தடியில் கட்டுப்பட்டிருப்பதைப் போல நான் கட்டுப்பட்டிருப்பதை நன்கு அறிகிறேன். எங்களுக்கு எது நன்மை செய்யுமோ அதைச் சுமக்கிறேன். நான் இதிலிருந்து விடுபட விரும்பவில்லை. திரும்பிப் போகவும் விரும்பவில்லை. எல்லாம் அறிந்த தலைவன் எனக்கு வழி காட்டுவானாக 5.46.1

    வாழ்க்கை நிலையாமை
    மனிதரில் எவனும் தன் ஆயுளை அறியான். 7.23.2
    நேற்று இருந்தவன் இன்று இல்லை. தேவனின் அறிவைப் பாருங்கள்.10.55.5

    ஒன்று பரம்பொருள்
    அக்னி ஒன்றுதான். பல வகையாக மூட்டப்படுகிறது. சூரியன் ஒன்றுதான். பலவற்றின் மீதும் ஆட்சி செலுத்துகிறது. உஷை ஒன்றுதான். அனைத்தையும் ஒளியூட்டுகிறது. இருப்பது ஒன்றுதான் அனைத்துமாகப் பரவி நிற்கிறது. 8.58.2

    பக்தி
    அசையும் பொருள், அசையாப் பொருள் எல்லாவற்றிற்கும் தலைவனே, தெய்வீக ஒளியே, கன்றுக்குப் பால் சுரந்து நிற்கும் பசுப்போல உன்னை நினைந்து கதறுகிறேன். 7.22.32

    தேவர்களின் சிறப்பு
    ஆதித்யர்கள் பல கண் உள்ளவர்கள். மனதுக்குள் இருப்பதையும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் அருகில் இருந்தாலும், அறிவார்கள். 2.27.3
    தேவர்கள் எதைக் காக்கிறார்களோ அவை எல்லாம் நன்மையாகவே இருக்கும். 2.23.19
    தேவர்கள் விரும்பியது தான் நடக்கும். வேறு யாரும் அதை மாற்ற முடியாது. 8.28.4
    இந்திரன் கொடுக்க நினைப்பதை எவரும், தேவனோ, மனிதரோ, தடுக்க முடியாது. 8.14.4
    இந்திரனை முழுமையாகப் புகழ வல்லார் யார்? கால்களை மாற்றி மாற்றி வைத்து நடப்பது போல அவன் முன்னால் இருப்பவரைப் பின்னாலும் பின்னால் இருப்பவரை முன்னாலும் கொண்டு வைக்கிறான். 6.47.15
    அக்னியே, யார் உன்னிடம் பிரார்த்தனையுடன் வருகிறார்களோ, யக்ஞத்தின் தீவிரத்தையோ அல்லது துவக்கத்தையோ காட்டுகிறார்களோ அவருக்கு நீ வலிமையும் செல்வமும் தந்து காப்பாற்றுகிறாய். 6.15.11
    மாயையில் வல்லவர்களோ வலிமையில் மிக்கவர்களோ எல்லோரும் தேவர்களின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் ஆகவேண்டும். 3.56.1
    சூரிய கிரணங்கள் தலையிலிருந்து பாலைப் பொழிகின்றன. கால்களால் நீரைப் பருகுகின்றன. 1.164.7
    தேவர்கள் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பதில்லை. நாம் ஒன்றும் கொடுக்காமலே கொடுக்கிறார்கள். நமது நாட்களை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறார்கள். 5.49.3

    தெய்வ வணக்கத்தின் அவசியம்
    தேவர்களின் மனத்தை மகிழ்விப்பவன் அவ்வாறு மகிழ்விக்காதவனைத் தோற்கடிக்கிறான். 8.31.15
    பலஹீனமானவனாயினும் மனதைத் தூய்மையுடன் (சூரியனுடன்) இணைத்துக் கொண்டுவிட்டால் அது பயத்தால் நடுங்காது. 5.44.9
    நேர்மையைப் போற்றுபவன் பகைவரை வெல்வான். தேவரை வழிபடுபவன், வழிபடாதவரை வெல்வான். ஊக்கமுள்ளவன் வெல்லமுடியாத பகையையும் வெல்வான். யக்ஞம் செய்பவன் யக்ஞம் செய்யாதவனின் உணவை வெல்வான். 2.26.1

    நமஸ்காரத்தின் சிறப்பு
    நமஸ்காரம் வலிமையானது. நான் அதை மேற்கொண்டுள்ளேன். மண்ணையும் விண்ணையும் தாங்குவது நமஸ்காரம். தேவர்களுக்கு நமஸ்காரம். அது அவர்களை ஆள்கிறது. செய்த பாவங்களை நமஸ்காரம் போக்குகிறது. 6.51.8

    யக்ஞத்தின் சிறப்பு
    புத்தி உள்ளவன் யக்ஞம் செய்ய விரும்புகிறான், இல்லாதவன் மூழ்குகிறான். 9.64.21
    யக்ஞம் செய்பவனும், சோமம் பிழிந்து தருபவனும், தேவர்களை வணங்குபவனும் அழிவதில்லை. 8.31.16
    யக்ஞம் இந்திரனை வலுப்படுத்துகிறது. யக்ஞம் செய்பவன், வீட்டிலுள்ள நீர் தாகத்தைத் தணிப்பது போல, விருப்பம் நிறைவேறப் பெறுகிறான். பொய்யான மனதுடன் வஞ்சகமாக வழிபடுபவன், வழி தவறியவன் போல, நோக்கம் நிறைவேறாமல் போகிறான். 1.173.11

    பிரார்த்தனை
    ப்ரஹ்ம வர்ம மமாந்தரம். – பிரார்த்தனையே எனது கவசம். 6.75.19
    அக்னியே, நாங்கள் குதிரைகளாலோ அல்லது பிரார்த்தனைகளாலோ மற்ற ஜனங்களின் மீது எங்கள் வலிமையைப் புலப்படுத்துவோமாக.2.2.10

    சில பிரார்த்தனைகள்
    அச்வின்களே, எங்கள் வழிபாடு இனிமையும் உண்மையும் கலந்ததாக இருக்கட்டும். 1.22.3
    எங்கள் அறிவால் செல்வத்தை அடைய எங்களுக்கு உதவுக, இந்திரனே.8.4.15
    வருணா, நாங்கள் ஒளியை விட்டு விலகாதிருப்போமாக. 2.28.7
    ஸவிதாவின் சிறந்த ஒளியைப் போற்றுகிறோம். அவர் எங்களது அறிவினைத் தூண்டுவாராக. 3.62.10
    தேவர்களுக்கு நலம் செய்யும் தூய கண்ணாகிய சூரியன் உதிக்கிறான். நாங்கள் அவனை நூறாண்டு காலம் பார்த்திருப்போமாக. நூறாண்டு வாழ்வோமாக. 7.66.16
    சவிதாவே, கெட்டதெல்லாம் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடத்தில் தூண்டுக. 5.82.5
    துன்பங்களைப் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடம் தோற்றுவிப்பாயாக. 5.82.5

    குடும்ப ஒற்றுமை
    கணவனும் மனைவியும் சேர்ந்து ஒற்றுமையாகத் தேவர்களைப் பூஜிப்பதால் வரும் பலன்கள்- துன்பங்களிலிருந்து விடுதலை, எதிரிகளின் அழிவு, குழந்தைச் செல்வம், உணவு, வலிமை, புகழ், முழு ஆயுள், ஆனந்தம், தர்ம வழியில் நடத்தல், தெய்வ வழிபாடில்லாதவர் மீது வெற்றி. 8.31

    தவறுக்கு வருந்தல்
    பாவத்தின் காரணங்கள்- மது, கோபம், சூது, அறியாமை, கனவு, விதி 7.86.6
    மனித பலஹீனத்தால் நாங்கள் தவறு செய்கிறோம். அதற்காக எங்களைத் தண்டிக்காதே. 7.57.4

    அமரத்வம்
    நாம் அமரத்துவம் அடையவேண்டும் என்பதற்காகத் தேவர்கள் நமக்குப் பிரார்த்தனைகளை அமைத்திருக்கிறார்கள். 7.97.5

    பேச்சு
    கேள்வி கேட்பதிலோ, மீண்டும் மீண்டும் தெய்வத்தின் பெயரைக் கூறுவதிலோ, உரையாடலிலோ எவன் மகிழ்வதில்லையோ அவன் ஆபத்தானவன். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்று. 8.101.4
    பயனற்ற, அற்பத்தனமான, முடிவற்ற, குறைவான பேச்சினால் மக்கள் திருப்தி அடைவது இல்லை. 4.5.14

    உழைப்பின் சிறப்பு
    தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான். 8.47.6
    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். 4.33.11
    விழிப்புடன் இருப்பவனை ரிக், சாமம் புகழ்கின்றன. நான் உன் நண்பன் என்று சொல்லிக் கொண்டு சோமம் உடன் வசிக்கிறது. 5.44.14
    சுறுசுறுப்புள்ளவனே வெல்கிறான், வளம் பெறுகிறான். கருமிகளுக்கு தேவர்கள் உதவுவதில்லை. 7.32.9

    பரோபகாரத்தின் சிறப்பு
    ஒருவருக்கும் தீங்கு செய்யாமல், மக்களுக்கு நன்மை செய்பவன் தன் வலிமையினாலேயே வளர்கிறான். நல்ல பாதுகாப்பான வீட்டில் இருக்கிறான். 7.74.6

    தான மகிமை
    கடவுளை வணங்காத, தானம் செய்யாத ஆணை விட பெண் உறுதியானவள், மேலானவள். 5.61.6
    பெண் துன்பப்படுபவனையும், வறுமையாளனையும் எதையாவது விரும்புபவனையும் அறிந்து கொள்கிறாள். 5.61.7
    அக்னியே, பிறருக்குத் தானம் செய்பவர்கள் சௌகரியமாக வாழட்டும். 7.16.10
    அக்னியே, மற்றவர்களுக்கு மிகுதியாகத் தானம் செய்பவருக்கு மிகுதியாகச் செல்வத்தை அளிக்கவும். 6.10.5
    கொடையாளியான இந்திரன் பிறருக்குத் தானம் செய்பவரையே ஆசீர்வதிக்கிறார். 7.32.8
    பசியை மரணத்தின் காரணமாகத் தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாகச் சாப்பிட வசதி உள்ளவனுக்கும் மரணம் ஏற்படுகிறது. வள்ளல் மனம் கொண்டவனின் செல்வம் குறைவதில்லை. பிறருக்குக் கொடுக்காதவன் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.1
    செல்வமுள்ளவன் பசியுடன் யாசகர் வரும்போது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டுவிட்டால் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.2
    ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். 10.117.3
    உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. அவன் இருப்பிடம் வீடு அல்ல. அவனை விட்டு நீங்கி, கொடுக்கக் கூடிய அன்னியன் ஒருவனை நாடுக. 10.117.4
    பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். அவன் நீண்ட கால வாழ்வைச் சிந்திக்க வேண்டும். செல்வம் இன்று ஒருவனிடம் இருக்கும், நாளை இன்னொருவனிடம் இருக்கும். தேர்ச் சக்கரம் போல சுழலக் கூடியது இது. 10.117.5
    அளிக்கத் தெரியாத அறிவிலி அடைந்த உணவு அவனுக்கு அழிவு தரும். நண்பனுக்கு உணவளிக்காமல் தனித்து உண்பவன் தனித்துத் துன்பப் படுகிறான். 10.117.6
    கலப்பை தன் பாதையைக் கால்களால் கீறி உணவைத் தருகிறது. கொடையாளியான உறவினன் கொடுக்காதவனை விட மேலானவன். இந்த வேதக் கருத்தை சொல்பவன் சொல்லாதவனை விட மேலானவன். 10.117.7

    சூது
    சூதை நாடுபவனுடைய மனைவியைப் பிறர் அபகரிப்பர். அவனது பெற்றோரும், சகோதரர்களும், ‘இவனை எனக்குத் தெரியாது. கட்டி இழுத்துச் செல்லுங்கள்’ என்பர். 10.34.4
    சூதாட்டக் காய்கள் கொக்கி போல் இழுப்பவை, துன்புறுத்துபவை. ஆரம்பத்தில் சிறு லாபங்களைத் தரும். முடிவில் அழித்து விடும். அவை தேன் தடவிய கொலையாளிகள். 10.34.7
    சூதாட்டக் காய்கள் கீழே உள்ளன, ஆனால் அவை நமக்கு மேலே ஏறி விடுகின்றன. கையில்லாத அவை கையுள்ளவர்களை வெல்கின்றன. குளிர்ச்சியாக இருந்து நம்மைத் தகிக்கின்றன.10.34.9
    சூதாடுபவனுடைய மனைவி துன்புறுகிறாள். கண்டபடி அலையும் அவனுக்காகத் தாய் வருந்துகிறாள். கடனாளியாகிறான். பயப்படுகிறான். பணத்தைத் தேடி இரவில் மற்றவர் வீட்டுக்குத் திருடப் போகிறான். 10.34.10
    சூதாடுபவன் மற்றவர்களின் சீரான குடும்பத்தையும் அவர்களின் அன்பான மனைவியையும் பார்த்துப் பொருமுகிறான். காலையில் குதிரை ஏறிப் போனவன் மதியத்தில் வெய்யிலில் அலைகிறான். 10.34.11
    சூதாடாதீர்கள். வேளாண்மையில் ஈடுபடுங்கள். அதில் வரும் செல்வத்தில் மகிழ்ச்சி அடையுங்கள். மனைவி, மாடுகள் போன்ற எல்லாச் செல்வங்களும் அதில் உண்டு. சவிதா இதை எனக்குச் சொன்னார். 10.34.13

    மனம்
    மக்கள் பார்ப்பதற்காக ஒரு நிலையான ஜோதி அமைந்துள்ளது. எல்லாத் தேவர்களும் அந்த ஒரே லட்சியத்தை நோக்கிச் செல்கின்றனர். என் காதுகள் அதை நோக்கித் திரும்பி உள்ளன. என் கண்கள் அதையே பார்க்கின்றன. பறக்கும் பொருள்களிலே மனம் தான் மிக வேகமானது. என் மனம் அதை நோக்கிச் செல்கிறது. நான் அதை எப்படி அறிவேன், எப்படிச் சொல்வேன்? 6.9.5
    குதிரையை வழிநடத்துவது கடிவாளக் கயிறு. அதை வழி நடத்துவது மனது. 6.75.6

    உலகியல்
    சொந்தப் பிள்ளையே சிறந்தவன். மற்றவர் பிள்ளை பிள்ளை ஆகமாட்டான். 7.4.7
    வீடு தான் சஞ்சரிக்கும் எல்லாப் பிராணிகளின் விருப்பமாகும். 2.38.6
    ஒன்று போல இருக்கும் இரு கைகளும் செயல் திறனில் வேறுபடுகின்றன. ஒரே நேரத்தில் ஈன்ற இரு பசுக்கள் ஒரே அளவு பால் தருவதில்லை. இரட்டையர்கள் கூட திறமையில் வேறுபடுகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் வள்ளல் தன்மையில் ஒரே மாதிரி இருப்பதில்லை. 10.117.9
    ஊருக்குப் புதியவன் தெரிந்தவனிடம் வழி கேட்கிறான். சரியான நபரால் வழி காட்டப்பட்டு அவன் தொடர்ந்து பயணிக்கிறான். உண்மையில் இது தான் கல்வியின் சிறப்பு. கற்றவன் நேராகச் செல்லும் வழியை அறிந்து கொள்கிறான். 10.32.7, 9.70.9
    ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம். நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக. 2,33.2

    பக்தர்கள் பல வகை
    வலிமையுள்ளவன் பகனிடம் பாதுகாப்பை நாடுகிறான். வலிமையற்றவன் ரத்னத்தை நாடுகிறான். 7.38.6
    ரிஷிகள் உதவிக்காக வேண்டுகின்றனர். புரோகிதர்கள் உணவுக்காக வேண்டுகின்றனர். 7.94.5
    பக்தர்கள் சோமனைப் போற்றுகிறார்கள், பேரறிஞர்கள் யக்ஞம் செய்ய விரும்புகிறார்கள், விபரீத புத்தி உள்ளவர்கள் அமிழ்ந்து போகிறார்கள். 9.64.21
    நரர்கள் போரில் வெல்லவும் புத்திர பாக்கியம் பெறவும் விரும்புகிறார்கள். விப்ரர்கள் அறிவைப் பெற விரும்புகிறார்கள். 1.8.6

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 51

    சு. கோதண்டராமன்.

    ஓம்

    619px-Rigveda_MS2097

    வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. இறைவனுக்கு எந்த மந்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்தாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. பிற்கால வேத இலக்கியத்தில் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரம் ரிக் ஸம்ஹிதையில் காணப்படவில்லை என்று பார்த்தோம். இது இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

    பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தாய் வேதமாகிய ரிக் ஸம்ஹிதையின் கருத்துக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை வேதமாகக் கருதப்படும்.

    ஓங்காரம் வேதத்துக்கு ஏற்புடையதா என்று பார்ப்போம். ஓங்காரத்தின் பொருள் என்ன?

    ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

    இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

    ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

    புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

    பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”

    ரிக் ஸம்ஹிதை புதுமையை ஆதரிக்கிறதா? ஆம்.

    சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையை விரும்புவார்கள். எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறையாகப் பார்ப்பது போல ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ரிஷிகள் அது போல அக்னி எரியும் அழகை ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்த்துப் பரவசப்பட்டு வர்ணித்தார்கள் என்பதை முன்பு பார்த்தோம்.

    வைகறைப் பொழுதைப் புகழ்ந்து ரிஷி பாடுகிறார். இதுவரை எத்தனையோ வைகறைகளைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறார் அவர். அது தான் பார்த்தாயிற்றே, இன்றைக்கும் அதே மாதிரித் தானே இருக்கப் போகிறது என்று அவர்கள் அலுப்பு அடையவில்லை. இன்றைய வைகறை இதற்கு முன்பாக வந்த மற்ற வைகறைகளை விட அழகானது என்று தினமும் சொல்கிறார்.1.123.10 ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகு தோன்றுகிறது அவருக்கு.

    ஒரு பிரபலமான மந்திரம் இது. நவோ நவோ பவதி என்று தொடங்குவது. இதில் ரிஷி தினமும் சந்திரனின் வடிவம் மாறுவதைக் கண்டு சந்திரன் தினமும் புதிதாகப் பிறப்பதாகக் கூறி பரவசப்படுகிறார்.

    நவோ நவோ பவதி ஜாயமானோ அஹ்னாம் கேதுருஷஸா மேத்யக்ரம், பாகம் தேவேப்யோ விததாத்யாயன் ப்ர சந்தரமாஸ் திரதே தீர்கமாயு: 10.85.19

    எனவே வேத ரிஷிகளுக்குப் புதுமையைக் கண்டு ஆனந்தம் ஏற்படுகிறதே அன்றி அலுப்பு ஏற்படுவது இல்லை.

    வேத ரிஷிகள் பல இடங்களில் நான் இந்தப் புதிய தோத்திரம் இயற்றியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். தேவர்களை வழிபட முந்தைய ரிஷிகள் செய்த மந்திரங்கள் போதும் என்று அவர்கள் இருந்து விடவில்லை. புதிய மந்திரங்களைப் படைக்கிறார்கள்.

    ரிக் ஸம்ஹிதையிலேயே, முந்திய ரிஷிகளின் கருத்துக்கு மாறுபட்ட புதிய கருத்துகள் காணப்படுகின்றன என்று பார்த்தோம். யக்ஞம் செய்தால் தான் தேவ நிலையை அடையலாம் என்று ஒரு கருத்தும் காணப்படுகிறது. ரிபு சகோதரர்கள் யக்ஞம் என்று எதுவும் செய்யவில்லை. சமீகள் மூலமாகவே யக்ஞத்தின் பலனை அடைந்தார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பசுக்களைக் கொன்று வேள்வி நடத்திய காலத்தில் பசுக்களைக் கொல்லாதீர்கள் என்ற புதிய கருத்தும் எழுகிறது. இந்தப் புதுமையை மக்கள் எதிர்க்கவில்லை. வேதத்தில் அந்தக் கருத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

    வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 50

    சு. கோதண்டராமன்.

     

    ருத்ரம்

    619px-Rigveda_MS2097

    இந்த நூலில் ரிக் ஸம்ஹிதையின் கருத்துகளைப் பற்றி மட்டும் பார்த்தோம். வேதத்தின் மற்ற பகுதிகளான யஜுர், சாமம், அதர்வணம், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியன பொய்யா?

    ஆதியில் தோன்றிய வேதமான ரிக் ஸம்ஹிதையின் மையக் கருத்துக்கு இணக்கமாக இருப்பது பாமர மனிதனின் சொல்லாக இருந்தாலும் அது வேதமே என்பது பாரதியின் கருத்து.

    வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த
    மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்.

    வேத சாரம் என்ன? மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம் –
    பிரபஞ்சத்தை இயக்கும் நியதி ஒன்று உள்ளது. ருதம் என்பதும் தர்மம் என்பதும் வ்ரதம் என்பதும் அதுவே. அதை இயக்கும் சக்தியே பரம்பொருள். அதை எப்பெயரிட்டும் அழைக்கலாம். எந்த முறையிலும் வழிபடலாம். அது நம்மை விட மேலானது என்ற உணர்வோடு கூடிய பணிவு மனதில் இருத்தல் வேண்டும்.

    நியதிப்படியே பிரபஞ்சத்தில் எல்லாம் நடைபெறுகிறது. மனித நியதியாவது- மேலோரைப் பணிதலும், கீழோரைக் காத்தலும் ஆகும். இதுவே செயலாகப் பரிணமிக்கும்போது யக்ஞம் ஆகும். இந்த நியதியை மீறுவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும். துன்பம் நீங்க தெய்வத்தைச் சரணடைவது தவிர வேறு வழி இல்லை.

    யக்ஞமும் சமீ என்ற அருஞ்செயலுக்கான உழைப்பும் எல்லா நலன்களையும் தரும். இறுதி லட்சியமாகிய ஒளியை, அதாவது தெய்வ நிலையை, அடைவதும் அதனால் சாத்தியமாகும்.

    வேதத்தின் இந்த மையக் கருத்துக்கு உடன்பாடாக உள்ளவை உண்மையான வேதங்கள். வேதம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் இதற்கு மாறான கருத்தைக் கூறினால் அவை பொய் வேதங்களாகும்.

    ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி இதுவே மேலான தெய்வம் என்று சொல்லும் நூல் வேதம். இது தவிர மற்றவை எல்லாம் தெய்வமல்ல என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

    இந்த வழிபாட்டுமுறை சிறந்தது என்று ஏதேனும் ஒரு முறையைச் சுட்டிக் காட்டும் நூல் வேதம். மற்ற முறைகள் எல்லாம் உங்களை நரகத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

    மனிதனின் இறுதி லட்சியம் தர்மத்தை அனுசரித்து, கடுமையாக உழைத்து, ரிஷி, மகோனர், சூரி நிலைகளைக் கடந்து ஒளி நிலையை அடைவது என்று கூறுவது வேதம். உண்டு உடுத்து உறங்கி, பிறர் துன்பம் பற்றிக் கவலைப்படாமல் தந்நலமே பெரிதாகக் கருதி உயிர் வாழ்வதுதான் மனித வாழ்வு எனப் போதிக்கும் நூல் பொய் வேதம்.

    இனி இந்தக் கண்ணோட்டத்தில் யஜுர்வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியை ஆராய்வோம்.

    ருத்ரம் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்ளுமுன் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்ற தலைப்பில் சொல்லப்பட்ட ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு-வருவோம்.

    ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
    1. கடந்த காலமாகவும் வருங்காலமாகவும் காலம் கடந்து நிற்றல்,
    2. விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
    3. சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
    4. புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

    இதே கருத்தை ருத்ரம் தனக்கே உரிய வழியில் சொல்கிறது. இங்கு பரம்பொருளுக்கு ருத்ரன் என்று பெயர் அளிக்கப்படுகிறது.

    ருத்ரன் காலம் கடந்தவர் என்பது அழியாதவர்(விக்ஷீணக), பவ: (ஆதிமூலம்), முன்னே பிறந்தவர் (பூர்வஜ) பின்னே பிறந்தவர் (அபரஜ)என்ற சொற்களால் குறிப்பிடப்படுகிறது.

    இடம் கடந்தவர் என்பது பல வகையாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் இருக்கும் இடங்களாகக் கூறப்படுபவை- ஆழமான மடு, ஆற்றுக் கரை, உப்பரிகை, களம், களர்நிலம், குறுகிய பாதை, பெரும்பாதை, சுக்கான் பூமி, சுனை நீர், புல்தரை, பயிர்நிலம், மணல் திட்டு, பெருவெள்ளம், இன்னும் பல.

    மந்திரியாகவும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் சபையினராகவும் அவர் இருக்கிறார். தச்சர், குயவர், கருமார் போன்ற வடிவிலும் அவர் உள்ளார். நல்லவர்களாக மட்டுமல்ல, தீயவராகவும் அவர் உள்ளார். திருடர்களில் பல வகையாகவும் ஏமாற்றுபவர்களாகவும் அவரே காட்சி தருகிறார். ஒருவராக மட்டுமல்ல, பலராகவும் காட்சி தருகிறார். உட்கார்ந்திருப்பவர்கள், நிற்பவர்கள், வழிநடப்பவர்கள், விரைந்து செல்பவர்கள், படுத்திருப்பவர்கள், தூங்குபவர்கள், விழித்திருப்பவர்கள், உரக்கக் கூவுபவர் என்று பல நிலை மனிதர்களாகவும் அவர் உள்ளார். மனிதராக மட்டுமல்ல, குதிரை, நாய் முதலான மிருகங்களாகவும் அவர் உள்ளார்.

    உயிரற்ற பொருட்களும் அவரே- மின்னல், மலை, மழை, மழையின்மை, மாட்டுக் கொட்டகை, தீவு, கட்டில், வீடு, இளம்புல், காய்ந்த சருகு, குகை, காட்டுமரம், குளம், ஒலி, எதிரொலி, மேகம், தேர், மரம், முரசு, முரசுக்குச்சி, முள்காடு, செடி கொடி, வீட்டுப் பொருள், காற்று, புழுதி, தூசி, இன்ன பிற.

    அனைத்தையும் தோற்றுவித்தவர் என்பது பவ என்னும் பெயரால் விளக்கப்படுகிறது.

    அவர் நம்மனோரால் புரிந்துகொள்ளப்பட முடியாதவர் என்பது நாம் முரணாகக் கருதுபவை எல்லாம் அவரிடத்தில் அழகாகப் பொருந்தி இருப்பதிலிருந்து தெரிகிறது. பெரியவர் (மஹத்), சிறியவர் (க்ஷுல்லக), உயரமானவர் (ப்ருஹத்), குட்டையானவர் (ஹ்ரஸ்வ), மகிழ்ச்சி தருபவர் (சம்பு), அழவைப்பவர் (க்ரந்தயத்), கருத்த கழுத்தர் (நீலக்ரீவ), வெண் கழுத்தர் (சிதிகண்ட), சடையர் (கபர்தீ), மொட்டையர் (வ்யுப்தகேச), காய்ந்ததில் உள்ளவர் (சுஷ்க்ய), பச்சையான பொருட்களில் உள்ளவர் (ஹரித்ய), சிவப்பு நிறத்தர் (அருண), மஞ்சள் நிறத்தர் (ஸஸ்பிஞ்சர) என்று அவர் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவர்.

    மைபடிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னினல்லான்
    ஒப்புடையனல்லன், ஒருவனல்லன், ஓரூரனல்லன், ஒருவன் இல்லி,
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும், அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
    இப்படியன் இத்திறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே.
    என்று அப்பர் உரைத்தது இதைத்தான்.

    ருத்ரத்தின் சில தனித் தன்மைகளையும் பார்ப்போம். யஜுர் வேதம் தோன்றிய காலத்தில் அரசனது நிலப்பரப்பு பெருகியது. அவனது வேலைகளும் பொறுப்புகளும் பெருகின. அவனுக்கு ஆலோசனை சொல்ல மந்திரிகளும் ஆலோசனை சபையினரும் ஏற்பட்டுவிட்டார்கள். இந்த மாற்றங்கள் ருத்ரத்தில் காட்டப்படுகின்றன. ருத்ரன் மந்திரியாகவும் சபையினராகவும் காட்சி தருகிறார்.

    ருத்ரத்தின் மற்றொரு தனித்தன்மை- இதில் இறைவனின் கோப முகம் நன்றாகக் காட்டப்படுகிறது. இந்திரன் முதலானோரின் பெருவீரமும் எதிரிகளை அழிக்கும் வலிமையும் பல இடங்களில் பேசப்படுவது போல ருத்ரனும் நல்லோர்களின் தலைவராக இருந்து அவர்களின் எதிரிகளை அழிப்பதற்கு எல்லா ஆயுதங்களையும் தாங்கி எப்போதும் ஆயத்தமாக உள்ளார். 273 போற்றிகளில் 51 இத்தகைய படை வலிமையைப் பறைசாற்றுபவை தாம். இந்த வேறுபாடுகள் அடிப்படைக் கொள்கைக்கு மாறானவை அல்ல.

    இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. பவஸ்ய ஹேதி (பிறப்பை அறுக்கும் ஆயுதம்) என்று அவர் வர்ணிக்கப்படுகிறார். பிறப்பு என்பது இழிவானது என்ற கருத்து ரிக் வேதத்தில் காணப்படவில்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்றாகச் சுவைத்து அனுபவித்தனர். நீண்ட ஆயுள் வேண்டினர். ஆனால், மரணத்துக்கு அஞ்சவில்லை. இறந்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. எங்கும் பிறப்பு ஒரு சுமை என்று யாரும் கருதியதாகத் தெரியவில்லை. பிறப்பை அறுக்க வேண்டும், மீண்டும் பிறவாத நிலையை அடையவேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக யஜுர் வேதத்தில் தான் பார்க்கிறோம். அந்த வகையில் இது ஆதி வேதத்தின் மையக் கருத்திலிருந்து முரண்படுகிறது எனலாம்.

    தமிழ் போன்ற பிற மொழிகளில் தோன்றிய தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களும் ஆதி வேதத்தின் கருத்தைக் கூறும் அளவுக்கு வேதம் என்ற பெயருக்குத் தகுதி உடையன.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 49

    –சு. கோதண்டராமன்.

     

    வேதம் அபௌருஷேயமா?

    619px-Rigveda_MS2097

     

    வேதம் அபௌருஷேயம் (மனிதரால் இயற்றப்படாதது) என்பது ஒரு நம்பிக்கை. வேத மந்திரங்களின் பொருளை ஒரு முறையாவது படித்துப் பார்த்தவர்கள் அது மனிதரால்தான் இயற்றப்பட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள். “ப்ரஹ்ம அகாரி”- “நான் இந்த பிரார்த்தனையை இயற்றியிருக்கிறேன்” என்ற தொடர் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. (உதாரணம் 4.6.11, 4.16.20, 21) எனவே வேதம் ரிஷிகளால் இயற்றப்பட்டதுதான்.

    ஆனால் வேதம் அபௌருஷேயம் என்பதை மூட நம்பிக்கை என்றும் சொல்ல முடியாது. வேதப் பாடல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று முன் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சில பாடல்கள் சாதாரணப் புலமை நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மேலும் சில பேரருள் நிலையில் பாடப்பட்டவை. சில, தன்னையே பரம்பொருளாக உணரும் அத்வைத நிலையில் பாடப்படவை.

    உதாரணமாக, ஆபோஹிஷ்டா மயோபுவ: என்ற மந்திரத்தைப் பார்ப்போம். 10.9.1 முதல் பாடலில், தண்ணீரே மகிழ்ச்சி தருகிறீர்கள் என்று கூறும்போது ரிஷி சாதாரணப் புலமை நிலையில் இருக்கிறார். தாய் போல என்னை நேசிக்கிறீர்கள். பாவத்தைப் போக்கி எனக்குக் குழந்தைப் பேற்றை அளிக்கும் உங்களிடம் நாங்கள் விரைந்து வருகிறோம். தெய்விகமான தண்ணீர் எங்களது வழிபாட்டுக்கும் குடிப்பதற்கும் இனியதாக இருக்கட்டும் எங்களைச் சுற்றி ஓடட்டும், நலம் தரட்டும். விலை மதிப்புள்ள பொருட்களின் ராணியே, மனிதரைக் கட்டுப்படுத்துபவர்களே, எங்களுக்கு மருந்துகள் தருக….. என்று இவ்வாறு பேசும்போது அவர் நீரைத் தெய்வமாகக் கருதுகிறார். இது அருள் நிலை.

    தண்ணீர் எப்படி மனிதர்களை நேசிக்கும், அது எப்படி மனிதரைக் கட்டுப்படுத்தும் என்று கேட்கும் பகுத்தறிவு வாதிகளால் இந்த அருள் நிலை வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது.

    அருட்செல்வம் மிகுந்த தண்ணீரே, எல்லாச் செல்வங்களும் உங்கள் கையில். நற்செயல்களும் அமரத்துவமும் கொண்டு தருபவர்கள் நீங்களே (10.30.12) என்று சொல்லும்போது அவர்கள் நீரை அமரத்துவம் அளிக்க வல்ல பரம்பொருளாகவே கருதுகிறார்கள்.

    இதற்கு மேற்பட்டதான நான்காவது நிலையில், காற்றும் புனலும் கடலுமே நான் என்று கூறிய பாரதி போலத் தன்னை எல்லாவற்றுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் ரிஷி. நானே அக்னி, நானே ஹவிஸ் என்று கூறும் 3.26.7 போன்ற பாடல்களும் சில வேதத்தில் உண்டு.

    இத்தகைய அருள் நிலைகளில் தோன்றிய பாடல்களைத் தெய்வ அருளால் தோன்றிய பாடல்கள் என்று கூறுவது உபசார வழக்கு. நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகனின் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அல்ல என்று வள்ளலார் கூறுவதை ஒப்பிட்டுப் பார்க்க.

    மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி என்று பாரதி கூறியதையும் நோக்குக.

    இத்தகைய அருட்கவிகள் கோடியில் ஒருவர் எப்பொழுதாவது தானே பிறப்பர். எனவே அவர்களது கவிதைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பிய மக்களால் இவை மனப்பாடம் செய்யப்பட்டன. சிலர் எழுதியும் வைத்திருக்கலாம்.

    காலப்போக்கில் இவற்றில் பாடபேதங்கள் தோன்றின. காரணம் மனிதர்களின் இயல்பான மறதி தான். ஏதோ ஒரு எழுத்தோ, சொல்லோ மறந்துவிட்டால் அதை வேறு ஒன்றைக் கொண்டு நிரப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர் என்று தெரிகிறது. உதாரணமாக, கீழ்க் கண்டவற்றை ஒப்பிடுக.
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜ: ரிக் 1.18.1
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜம் தைத்திரீய ஸம்ஹிதை 1.5.6
    கடைசியில் விசர்க்கத்திற்குப் பதிலாக ‘ம்’ வருகிறது.

    கீழ்க் கண்டதையும் ஒப்பிடுக.
    உத்வயம் தமஸஸ்பரி ஜ்யோதி: பச்யந்த: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – ரிக் 1.50.10
    உத்வயம் தமஸஸ்பரி பச்யந்த: ஜ்யோதி: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – தை.ஸம் 4.1.7
    இதில் இரு வார்த்தைகள் முன் பின்னாக இடம் மாறியுள்ளன.

    இந்த மாற்றங்கள் வேண்டுமென்று செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்டதாகத் தான் தெரிகிறது. இது போன்று நிறைய உள்ளன.

    தான் குருவிடமிருந்து கற்றுக் கொண்டதோடு கூட தன் சொந்தக் கவிதைகளையும் சேர்த்துத் தன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வழக்கமும் சிலருக்கு இருந்திருக்கும். நாளடைவில் இத்தகைய பாடபேதங்கள் அளவில் பெருகிய நிலையில் அவரவரும் தத்தம் பாடமே உண்மையான பாடம் என்று வாதிட்டிருப்பர். எதையும் தள்ள முடியாது. அந்த நிலையில் தான் பாடபேதங்களைப் பிரித்துத் தனிப் பெயரிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவம் தான் என்ற போதிலும் பல பாட பேதங்கள் இருந்ததால் சாம வேதம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டது. வேள்விக்கான மந்திரங்களும் உரைநடைப் பகுதிகளும் கலந்த பாடபேதம் யஜுர்வேதமாகப் பெயரிடப்பட்டது. இதை ஒரு தனி மனிதர் செய்திருந்தால் அது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குமா என்பதும் நாடு முழுவதும் பரவி இருக்குமா என்பதும் சந்தேகமே. நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒன்று கூடி இதைச் செய்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைவராக வியாசர் இருந்திருப்பார்.

    இனி மேலும் இத்தகைய பாடபேதங்கள் ஏற்படக் கூடாது என்ற எண்ணம் அந்த அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்காகத் தான் ஸ்வர முறையையும் க்ரமம், பதம், ஜடா, கனம் போன்ற பாட முறைகளையும் ஏற்படுத்தி வார்த்தைகள் இடம் மாறாதபடியும் உரு மாறாதபடியும் ஏற்பாடு செய்தனர். வேதத்தை எழுதிப் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் அப்பொழுது தான் ஏற்பட்டிருக்க வேண்டும். வேதம் ஈச்வரனின் மூச்சுக் காற்று என்ற நம்பிக்கையையும் அப்பொழுது அவர்கள் பரப்பி இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் வேதங்களை உரு மாறாமல் இன்று வரை காப்பாற்றி வந்திருக்கிறது. வேதக் கல்வி சிரத்தையுடன் கற்பிக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாக அமைந்து. வேதக் கல்வி தந்த சிரத்தை காரணமாக, பாரத சமுதாயம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டது.

    இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்னே வேதத்தில் ஏற்பட்ட இடைச் செருகல்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் விட்டிருக்க வேண்டும். அதனால் தான் வேதத்தின் சில பகுதிகள் மையக் கருத்துக்கு மாறான வகையில் செல்கின்றன. பிற்காலத்தில் வேத இலக்கியம், தர்ம சாஸ்திரம், புராணம் என்ற பெயரில் எழுந்த இலக்கியங்களில் சில இந்த மையக் கருத்துக்கு மாறானதாகச் செல்கின்றன. பாரதி அவற்றைத் தான் பொய் வேதங்கள் என்கிறார்.

    வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
    கோத்தபொய் வேதங்களும் –
    அவள்புனைந் தாள்; …… பாரதி

     

     

     

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 48

    சு. கோதண்டராமன்.

    வேதம் – மனித குல வரலாறு

    619px-Rigveda_MS2097

    வேதம் அநாதி, அதாவது அது உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே இருக்கிறது. வேதத்தை ஒரு நூல் என்று கருதினால் அதை அநாதி என்று கூற முடியாது. மனித இனம் தோன்றி நாகரிகம் வளர்ந்து மொழி வளர்ந்து அதற்கு இலக்கணம் ஏற்பட்ட பிறகு தான் வேதம் இயற்றப்பட்டது.

    ஆனால் வேறு ஒரு வகையில் வேதத்தை அநாதி என்று கூறலாம். இது அநாதி காலத்தில் பிரபஞ்சம் தோன்றியதை விவரிக்கிறது. மனித குலம் ஏற்பட்டு நாகரிகம் வளராத காலத்தைக் குறிப்பிடுகிறது. மனிதனுக்குத் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிய நிலையைக் கூறுகிறது. வழிபாட்டு முறை ஏற்பட்ட காலத்தைத் தெரிவிக்கிறது. எனவே வேதத்தைப் பிரபஞ்ச வரலாற்றுச் சுவடி என்று கூறலாம். விரிவாகப் பார்ப்போம்.

    ரிக் 10 வது மண்டலம் 129வது சூக்தம் நாஸதீய சூக்தம் எனப்படுகிறது. அதில் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எப்படி இருந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் பெருவெடிப்புக் கொள்கையை (big bang theory) ரிஷிகள் தங்கள் உள்ளுணர்வினால் அறிந்து சொன்னது நமக்குப் பெரு வியப்பைத் தருகிறது. அங்கு தெளிவில்லாத இருளான சூன்யம் மட்டுமே இருந்தது என்கிறார்கள்.

    அப்பொழுது இருப்பும் இல்லை. இல்லாமையும் இல்லை. காற்று இல்லை, வானமும் இல்லை. எது எதை மூடியிருந்தது? எங்கே மூடியிருந்தது? ஆழம் காண முடியாத நீர் இருந்ததா?

    மரணம் இல்லை, மரணமின்மை இல்லை. இரவையும் பகலையும் பிரிப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. மூச்சில்லாத ஒன்று தன் சொந்த வலிமையில் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தது. அது தவிர வேறு ஒன்றும் இல்லை.

    இருட்டு இருந்தது. அது இருளால் மூடப்பட்டிருந்தது. எல்லாமே இனம் புரியாத அந்தகாரம். இருந்ததெல்லாம் சூனியம். எதற்கும் உருவமில்லை. தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.

    அதன் பின் இச்சை பிறந்தது. அதுவே மனதின் முதல் விதை. தங்கள் இதயத்திற்குள் தேடிய ரிஷிகள் ஸத்துக்கும் அஸத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டார்கள்.

    ஒளி பக்கவாட்டில் பரவியது. அதற்குக் கீழே என்ன இருந்தது? மேலே என்ன இருந்தது? வலிமையுள்ள அவர்கள் தோற்றுவிப்போர் ஆயினர். சுதந்திரச் செயல் கீழேயும் சக்தி மேலேயும் இருந்தது.

    இதை உண்மையில் அறிந்தோர் யார்? இதைக் கூறவல்லோர் யார்? எங்கிருந்து அது தோன்றியது? எங்கிருந்து இந்த சிருஷ்டி வந்தது? தேவர்கள் சிருஷ்டிக்குப் பின் தோன்றியவர்கள். எனவே அவர்களாலும் இதைச் சொல்ல முடியாது.

    படைப்பின் முதல்வனாகிய அவன் எல்லாவற்றையும் படைத்தானா? அல்லது அவன் படைக்கவில்லையா? அவனது கண் எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. அவனும் அறிவானோ மாட்டானோ?

    (இருள் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் படிப்படியாக விரிவடைகிறது. ஒரு காலத்தில் மீண்டும் சுருங்கத் தொடங்கி மீண்டும் இருள் புள்ளி நிலையை அடைகிறது. இவ்வாறு மாறி மாறி விரிதலும் சுருங்குதலும் ஏற்படுவதை வேத இலக்கியம் கூறுவதாக விவேகானந்தர் கூறுகிறார். ரிக் வேதத்தில் அவ்வாறு இருப்பதாக என் கண்ணில் படவில்லை.)

    பெரு வெடிப்புக்குப் பிறகு எல்லாமே விரைவில் நடந்தேறின. நிலம் உண்டாயிற்று. உயிரினங்கள் தாவரங்கள் தோன்றின. மனிதன் தோன்றினான். மனிதன் மிருகங்களைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தான். இந்நிலையில் அவனது வாழ்வில் பெரும் மாறுதலைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனிதன் தீயைக் கண்டுபிடித்த அந்த நிகழ்ச்சி மனித குல வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல். அது பற்றி வேதம், மாதரிச்வான் என்னும் காற்று ப்ருகுவிடம் அக்னியைக் கொண்டு வந்து கொடுத்தது, ப்ருகவர்கள் மரக் கட்டைகளைக் கொண்டு தீ மூட்டத் துவங்கினர் என்று கூறுவதிலிருந்து கீழ்க்கண்டவாறு நடந்திருக்கலாம் என ஊகிக்கலாம்.

    கற்களை எறிந்து மிருகங்களை வீழ்த்தும் அறிவில் மட்டுமே மிருகங்களிலிருந்து மனிதன் வேறுபட்டிருந்த காலம் அது. வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

    அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதர்க்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

    தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

    மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான்.

    பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

    கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

    த்வஷ்டா என்பவர் மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். ரிபு சகோதரர்கள் அதைச் சீர்திருத்தி மெல்லிய ஆனால் உறுதியான மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தனர். வேதத்தில் இவர்கள் போற்றுதலுடன் நினைக்கப்படுகின்றனர்.

    மனித குல வரலாற்றின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியில் அங்கிரஸ் மற்றும் அவரது கூட்டத்தினர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

    அங்கிரஸ் காலத்துக்கு முன்னரே மனிதர்கள் இயற்கையை உற்று நோக்கி அதில் ஒரு ஒழுங்கு முறை இருப்பதையும், மனிதனுக்கென்று ஒரு ருதம் இருப்பதையும் அறிந்து கொண்டனர். அங்கிரஸும் அந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றி நடந்தார். ஆனால் அவரது சிந்தனை இதைத் தாண்டி அப்பால் சென்றது. இந்த ஒழுங்கு முறையை ஏற்படுத்தி இயக்கிக் கொண்டு இருப்பது யார் எனச் சிந்தனை செய்தார். அவரது கூட்டத்தினர் இரு பிரிவாகப் பிரிந்து ஆராய்ந்தனர். பல மாதங்கள் தவம் செய்தனர். ஒரு கூட்டம் ஒன்பது மாத முடிவில் கண்டு பிடித்த உண்மையை மற்றொரு கூட்டம் பத்து மாதத்தில் தெரிந்து கொண்டது. அவர்கள் என்ன தெரிந்து கொண்டார்கள்?

    ருதத்தை இயக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதற்கு தோற்றம் இறுதி இல்லை என்பது தான் அவர்கள் கண்ட உண்மை. அது என்றைக்கும் இருப்பது என்னும் பொருளில் அதற்கு ஸத் என்று பெயரிட்டனர். இப்படியாக அவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைந்தனர். அந்த ஸத்யத்தை வழிபட்டால் ஆனந்தம், கால உணர்வற்ற அமரத்துவ நிலை கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டனர். அதைச் சாமானிய மனிதர்கள் அடைய முடியாது தடுக்கும் தீய சக்தி எது என்பதையும் அவர்கள் அறிந்தனர்.

    நமக்கு உரிமையான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியாமல் யாரோ திருடிக் கொண்டு போய்விடுகிறார்களே எனச் சிந்தித்தனர். கடைசியில் நம்முடைய மனம் தான் நமக்கு எதிரி. நம்முடைய மனதில் உள்ள பகைவர்களை அழித்தால் ஆனந்தமாகிய பசுக்கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என அறிந்தார்கள். அந்த ஸத்தியத்தைத் தியானம் செய்யுங்கள் என்று சொன்னது அங்கிரஸ் கூட்டத்தினர் மனித குலத்துக்குச் செய்த ஒரு பேருபகாரம். வழிபாட்டின் சிறப்பை முதன் முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அங்கிரஸ்கள் என்கிறது வேதம். 10.67.2

    கண்ணுக்குத் தெரியாத ஸத்தியத்தைத் தியானம் செய் என்றால் அது எல்லோராலும் சாத்தியமா? அந்த நிலையில் தான் மனிதர்களுக்குத் தெய்வத்தைத் தொழுவதற்கான ஒரு எளிய முறையைக் கண்டுபிடித்த அதர்வன் தோன்றினார். அவர் தான் யக்ஞம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர். அக்னியைக் கண்ணால் பார்க்கலாம். மற்ற தேவர்களைக் கண்ணால் காண முடியாது. எனவே மற்ற தேவர்களுக்கான உணவை அக்னியில் சேர்த்து விடுங்கள். அவர் அதை அந்தந்தத் தேவர்களிடம் சேர்த்து விடுவார் என்று சொன்னார். தேவர்கள் பலரானாலும் எல்லோரும் ஒரே ஸத்யத்தின் பிரதிநிதிகள் தானே. அதனால் ஸத்தியத்தைத் தொழ விரும்பினால் உங்களுக்குப் பிடித்த தேவருக்கு அக்னி மூலமாக அவியுணவைக் கொடுத்து வழிபடுங்கள் என்று விளக்கினார். வேள்வி பிறந்தது.

    ப்ருகு, அங்கிரஸ், அதர்வன் ஆகிய இந்த முப்பெரும் மனித குல முன்னோர்களும் வேதத்தில் பல இடங்களில் போற்றப்பட்டு இன்றும் நம்மால் நன்றியுடன் நினைவு கூரப்படுகிறார்கள்.

    தர்ப்பணத்தின்போது இரண்டாவது ரிக்காகச் சொல்லப்படும் மந்திரம் இதற்கு ஓர் உதாரணம்.

    எங்கள் முன்னோர்களாகிய, ஒன்பது மாதம் தவம் செய்த அங்கிரஸ்கள், அதர்வாணர்கள், ப்ருகுக்கள் ஸோமபானம் தந்து வழிபடுவதற்கு உரியவர்கள். போற்றத் தகுந்த அவர்களது நல்லாசிகளில் நாம் வாழ்வோமாக. 10.14.6

    அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் யக்ஞியானாம் அபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம: 10.14.6

    இவ்வாறு பிரபஞ்சத் தோற்றம், தீயைக் கண்டுபிடித்தது, பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தது, வேள்வி மூலம் வழிபடும் முறையை ஏற்படுத்தியது ஆகிய மனித நாகரிக வளர்ச்சியின் சில முக்கிய மைல் கற்களைத் தொட்டுக் காட்டும் வேதத்தை மனித குல வரலாற்றுச் சுவடி என்று சொல்வது பொருத்தமே.

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share