சு. கோதண்டராமன்.

 

என்னதான் இருக்கிறது வேதத்தில்

இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி இது. கடந்த ஓராண்டு காலமாக இதைப் படித்து வந்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், குறிப்பாக, இதைப் பெரிய வாசகர் வட்டத்துக்கு வாரம் தோறும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை விரும்பி மேற்கொண்டு நிறைவேற்றிய திருமதி தேமொழிக்கும் என் நன்றிகள்.

இந்நூல் புத்தக வடிவில் வெளிவருகிறது. கிழக்கு பதிப்பகத்தார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கிழக்கு பதிப்பகம் வெளியிடும் என் நூலின் பெயர்:

“வேதம் – சந்தேகங்களும் விளக்கங்களும்”

மே இரண்டாவது வாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். விலை ரூ. 175. பிரதி வேண்டுவோர் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

                   போன்- 9445 97 97 97, 94459 01234

*************************************************************************************

சந்தேகம் தீர்ந்தது

[ நிறைவுப் பகுதி ]

முன்னுரையில் பாமரனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் பார்த்தோம். அவற்றிற்கு அவன் பெற்ற விடைகளை இங்கு பார்ப்போம்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

வேதத்தில் உருவச் சிலைகளை வைத்து வழிபடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி சொல்வது போல தெய்வத்தை நேரே கண்டு தொழும் வழக்கம் தான் இருந்திருக்கிறது. அந்தத் தெய்வங்கள் ரிஷிகளின் கண்ணுக்குப் புலனாயினர். தேவர்கள் ஒளிமயமாக இருந்தார்கள். அவர்கள் தங்க ரதத்தில் ஏறி வந்தார்கள். அவர்களுக்கு கை கால்கள் இருந்தன. தாடி மீசைகள் கூட இருந்தது சொல்லப்படுகிறது. தெய்வத்தை நம் மனக்கண் முன் நிறுத்தும் முயற்சியாக உருவச் சிலைகளைப் பயன்படுத்தல் வேத சம்மதமானதே. இந்தத் தேவர்களுக்கெல்லாம் அப்பால் உள்ள பரம்பொருளோ உருவமற்று, குணமற்று, பெயரற்று ஸத் (இருக்கிறது) என்னும் சொல்லால் மட்டுமே குறிப்பிடப்படுவதையும் காண்கிறோம். எனவே உருவமற்ற பரம்பொருளை மனதால் தியானிப்பதும் வேத சம்மதமானதே.

முத்தி என்பது எது?

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு வித புருஷார்த்தங்கள் ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவதும் அங்கு இல்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். இயற்கை அழகை ரசித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் சமூகத்திலும் ஏழைகள் இருந்தார்கள், தீமை செய்பவர்கள் இருந்தார்கள், தர்ம சிந்தனை இல்லாமல் கறாரான வணிகத் தனத்துடன் நடந்து கொண்டவர்களும் இருந்தார்கள். குடும்பத்தைக் கவனிக்காத சூதாடிகள் இருந்தார்கள். குற்றவாளிகள் இருந்தார்கள், பகைவர்கள் இருந்தார்கள், போர்கள் நடந்தன. இதனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

வாழ்க்கையின் லட்சியமாக அவர்கள் கருதியது அமரத்வம் அடைவதைத்தான். அமரத்வம் என்பது உடல் சாகாமல் வாழ்வது அல்ல. உடலுக்கு நூறாண்டு வேண்டிய அவர்கள் தன் குழந்தை, பேரக்குழந்தைகள் மூலம் வம்சம் விருத்தி அடைவதை அமரத்துவமாகக் கருதினர். சோமத்தை அருந்தி காலம் கடந்த நிலையில் திளைப்பதை தற்காலிக அமரத்துவ அனுபவமாகக் கருதினர். அருஞ் செயல்கள் செய்து அதனால் வரும் புகழ் மூலம் என்றென்றும் வருங்கால சந்ததியினர் மனதில் இடம் பிடிக்கும் அமரத்துவமே அவர்களது வாழ்வின் மிகப் பெரும் குறிக்கோள். இயற்கை நியதிப்படி வாழ்வதும் தேவர்களை வணங்குவதும் உணவு முதலான உலகியல் வசதிகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல. ஒளி உலகை அடைந்து ஒளிமயமாகச் சூரியன் போல, இந்திரன் போல, அக்னி போலப் புகழுடன் விளங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முக்கிய பிரார்த்தனை.

முழு முதல் கடவுள் எது?

வேதத்தில் பல வகையான தேவர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்களில் அம்சன் போன்ற சிலர் ரிக் வேத காலத்திலேயே செல்வாக்கு இழந்த நிலையில் காணப்படுகின்றனர். அக்னி தேவர்களுக்குள்ளே மிக இளையவர் என்று போற்றப்படுகிறார். அவர் அக்காலத்தில் புதிதாக ஏற்பட்ட தெய்வமாக இருக்கலாம். தேவ நிலையை அடைவது மனித வாழ்வின் குறிக்கோள் என நிர்ணயித்துள்ள வேதம் காலம் தோறும் புதுப் புது தெய்வங்கள் தோன்றுவதற்கும் இடம் அளிக்கிறது. அவரவர் விருப்பமான தெய்வத்தை வழிபடலாம். இந்தப் பெயர்கள் உருவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரம்பொருள் உள்ளது என்பதையும் வேதம் எல்லா இடங்களிலும் நினைவூட்டுகிறது. என் தெய்வம் சிறந்தது, இதுவே பரம்பொருள் என்று பேசுவது தவறு இல்லை. உன் தெய்வம் மட்டமானது என்று கூறுவது வேதத்திற்கு உகப்பானது அல்ல.

சிவன் மேலானவரா, விஷ்ணு மேலானவரா?

இருப்பது ஒன்று. அதைப் பலரும் பல விதமாகப் பேசுகின்றனர். ஒருவர் சிவன் என்று அழைக்கிறார். மற்றவர் விஷ்ணு என்கிறார். எப்படிப் பெயரிட்டாலும் அது அந்த ஒன்றையே குறிக்கும். காடன், மாடன், காட்டேரி என்று அழைத்தாலும் அது பரம்பொருளே. யெஹோவா, அல்லா என்று அழைக்கப்படுவதும் அதே பரம்பொருள் தான்.

இறப்புக்குப் பின் என்ன?

இறப்புக்குப் பின் என்ன ஆகிறது என்ற கவலை ஸம்ஹிதை இயற்றிய ரிஷிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அங்கிரஸ், ப்ருகு, மனு போன்ற முன்னோர்களை மனித குலத்தின் மூதாதையர்களாக அவர்கள் பெரிதும் மதித்தார்கள். தாய் தந்தையர், தாத்தா பாட்டி இவர்களுக்கு சிராத்தம் செய்வது அல்லது வேறு ஏதேனும் வகையி்ல் வணங்குவது என்பது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். உறவினர்கள் இறந்தால் வருந்தினார்கள். அக்னியே, எங்கள் சோகத்தை மாற்று என்று வேண்டினார்கள். அருஞ்செயல்கள் செய்து புகழ் பெற்று உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் வீற்றிருக்கும் அமரத்வத்தை லட்சியமாகக் கொண்டார்கள். அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார்கள். பலர் மர்த்யராகவே இறந்தனர். சிலர் நரர் என்ற நிலைக்கும், சிலர் ரிஷி நிலைக்கும் உயர்ந்தனர். சிலர் மகோனர்களாயினர். மிகக் குறைந்த சிலரே சூரிகளாயினர். அதிலும் மிகச் சிலரே தேவ நிலையை அடைய முடியும் என்பதை உணர்ந்திருந்தனர்.

சிராத்தம் செய்வது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை என்றால் அது வேத விரோதமானதா?

அல்ல. முன்னோரை வணங்கும் வழக்கத்தை ரிக் வேதம் ஏற்படுத்தி உள்ளது. மனு, அங்கிரஸ் போன்றோர் வணங்கப்படுகின்றனர். இப்படித் தான் வணங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. சிரத்தையின் உயர்வு பற்றிப் பேசுகிறது வேதம். அந்த சிரத்தை ஏற்படவேண்டும் என்பதற்காக, வேத மந்திரங்களைக் கூறி முன்னோர்களை வழிபடுவது வேத சம்மதமானதே.

கோயில் வழிபாடு வேதத்தில் சொல்லப்படவில்லையே, அது வேத சம்மதமானதா?

பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதையும் அதை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம் என்பதையும் வேதம் ஏற்றுக் கொள்கிறது. வேத காலப் பிரதான வழிபாட்டு முறை யக்ஞம் என்றாலும் யக்ஞம் மட்டுமே வழிபாட்டு முறை என்று வேதம் முடிவு கட்டி விடவில்லை. யக்ஞம் இல்லாத பிரார்த்தனையும் ஏற்புடையதே என்றும் கூறுகிறது. ஆகவே எந்த வழிபாட்டு முறையும் வேத சம்மதமானதே. நமக்கு மேலான சக்தி ஒன்று உண்டு என்பதை உணர்ந்து செய்யப்படும் எச்செயலும் யக்ஞமாகவே கருதப்படும்.

வேதம் கற்காமல் பஜனை போன்றவற்றில் ஈடுபடலாமா?

தவறில்லை. நாம ஜபத்தின் சிறப்பு பற்றி வேதம் புகழ்ந்து கூறுகிறது. இறைவனின் பல பெயர்களைப் பல விதமாக, அர்ச்சனையாகவோ, நாமாவளியாகவோ, பாட்டாகவோ எப்படிப் பேசினாலும் அது வேத சம்மதமானதே.

தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுக்கலாமா?

மாமிச உணவு சாப்பிடுபவர்கள் கொடுக்கலாம். வேதத்தில் ஆடு, மாடு, குதிரை பலி கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உள்ளன. புதிய மந்திரம் இயற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் ரிஷிகள், உயிர்க் கொலையையும், யக்ஞங்களையும் நீக்கி பிரார்த்தனை ஒன்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர் என்பதையும் பார்க்கிறோம். புதிய ரிஷிகள் பழைய யக்ஞ முறைகளைக் கண்டிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. பின்னர் யஜுர் வேத காலத்தில் மிருக பலியுடன் கூடிய யாகங்கள் பெருகியதையும் பார்க்கிறோம். புத்த சமண மதங்களின் பிரசாரத்தால் இந்து சமயத்தில் பலி இடுதல் குறைந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது. இது காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது. அதனால் அவரவர் வழக்கப்படி செய்து கொள்வதை வேதம் தடுக்கவில்லை.

மாமிச உணவு சாப்பிடலாமா?

வேத ரிஷிகள் காலத்தில் மாமிச உணவைச் சாப்பிடுவது தவறாகக் கருதப்படவில்லை. எனவே இன்று மாமிசம் உண்பவர்களை நாம் வேத விரோதிகளாகக் கருதித் தாழ்வாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் வேதத்திலேயே உயிர்களைக் கொல்லாதீர்கள் என்ற கருத்தும் காணப்படுவதால், வேதம் தொகுக்கப்படுவதற்கு முன்னமேயே மாமிச உணவுக்கு எதிரான கருத்தும் தோன்றி விட்டது என்பதை அறிகிறோம். ஆடை அணியாதிருந்த மனிதன் வளர்ச்சி பெற்று ஆடை அணியத் தொடங்கினான். அது போல, உணவு விஷயத்திலும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக மாமிசம் உண்பது மறையத் தொடங்கியது. சிந்தனை வளர்ச்சியில் நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து அவரவர் தத்தம் உணவுப் பழக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

அஹம் ப்ரம்மாஸ்மி என்ற உபநிடதக் கருத்து ரிக் வேதத்தில் உள்ளதா?

உள்ளது. த்ரஸதஸ்யு என்ற ரிஷி பரவச நிலையில் பாடிய ஒரு சூக்தத்தில் நானே வருணன், நானே இந்திரன் என்று பாடுகிறார். 4.42
8.43.14 இல் ரிஷி தன்னை அக்னியுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
3.26.7 இல் நானே அக்னி, நெய் எனது கண். அம்ருதம் எனது வாய். நான் வானை அளக்கும் சூரியன். நான் குறையாத வெப்பம். என் பெயர் ஹவிஸ் என்று எல்லாவற்றிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
4.26.1-3 இல் நான் மனுவாக இருந்திருக்கிறேன். சூரியனாக, கக்ஷிவானாக, ரிஷியாக. நான் பூமியைக் கொடுத்தேன், மழையைக் கொடுத்தேன், ஆறுகளை ஓடச் செய்தேன். தேவர்கள் நான் சொன்னதைக் கேட்கிறார்கள். நான் இந்திரனாக இருந்து சம்பரனின் 99 கோட்டைகளை அழித்தேன் என்று சொல்லும் மந்திரம் அந்த ரிஷி நானே பரம்பொருள் என்னும் நிலையை அடைந்திருந்ததைக் காட்டுகிறது.

(இது வரை பாமரன் படித்துத் தெரிந்து கொண்டது இவ்வளவு தான். ஆழ்ந்து படிக்கப் படிக்கப் புதிய கருத்துகள் தோன்றுகின்றன. அப்பொழுது இதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் திருத்தம் பெறலாம். வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் பலரை ஈடுபடுத்த இந்நூல் தூண்டும் என்றால் இதன் நோக்கம் நிறைவேறும்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *