பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: புலத்தகத்துப் புள்அரைக்கால் விற்பேம் எனல்
செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவுந் தாம்படார் – எய்த
நலத்தகத் தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
புள்அரைக்கால் விற்பேம் எனல்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவும் தாம் படார் எய்த
நல தக தம்மை புகழ்தல் புலத்தகத்து
புள் அரைக்கால் விற்பேம் எனல்
பொருள் விளக்கம்:
செய்த செயலின் பலன் சிறிதளவும் கைக்குக்கிட்டாது, (அவ்வாறு அவர் சொன்னபடி) செய்து முடிக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையும் பிறருக்கு அவரிடம் இருக்காது, தன்னல நோக்கோடு தற்புகழ்ச்சி பேசுபவரின் பேச்சானது, (தனது கைவசம் இல்லாது) வயலில் உள்ள பறவையை அரைக்கால் பொன்னிற்கு விற்பேன் என்று கூறும் வீண்பெருமை பேச்சிற்கு ஒப்பானது
பழமொழி சொல்லும் பாடம்: தன்னால் செய்ய இயலாத காரியத்தைச் செய்வேன் என்று கூறும் வாய்ச்சொல் வீரராக தற்பெருமை பேசுதல் நல்லதல்ல.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (குறள்: 664)
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்பது குறள் கூறும் பாடம். அதையுணர்ந்து வெற்றுப்பெருமை பேசாது செயலில் இறங்குவதே ஒருவருக்கு மதிப்பைத் தரும் என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது.