என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 50

1

சு. கோதண்டராமன்.

 

ருத்ரம்

619px-Rigveda_MS2097

இந்த நூலில் ரிக் ஸம்ஹிதையின் கருத்துகளைப் பற்றி மட்டும் பார்த்தோம். வேதத்தின் மற்ற பகுதிகளான யஜுர், சாமம், அதர்வணம், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியன பொய்யா?

ஆதியில் தோன்றிய வேதமான ரிக் ஸம்ஹிதையின் மையக் கருத்துக்கு இணக்கமாக இருப்பது பாமர மனிதனின் சொல்லாக இருந்தாலும் அது வேதமே என்பது பாரதியின் கருத்து.

வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்.

வேத சாரம் என்ன? மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம் –
பிரபஞ்சத்தை இயக்கும் நியதி ஒன்று உள்ளது. ருதம் என்பதும் தர்மம் என்பதும் வ்ரதம் என்பதும் அதுவே. அதை இயக்கும் சக்தியே பரம்பொருள். அதை எப்பெயரிட்டும் அழைக்கலாம். எந்த முறையிலும் வழிபடலாம். அது நம்மை விட மேலானது என்ற உணர்வோடு கூடிய பணிவு மனதில் இருத்தல் வேண்டும்.

நியதிப்படியே பிரபஞ்சத்தில் எல்லாம் நடைபெறுகிறது. மனித நியதியாவது- மேலோரைப் பணிதலும், கீழோரைக் காத்தலும் ஆகும். இதுவே செயலாகப் பரிணமிக்கும்போது யக்ஞம் ஆகும். இந்த நியதியை மீறுவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும். துன்பம் நீங்க தெய்வத்தைச் சரணடைவது தவிர வேறு வழி இல்லை.

யக்ஞமும் சமீ என்ற அருஞ்செயலுக்கான உழைப்பும் எல்லா நலன்களையும் தரும். இறுதி லட்சியமாகிய ஒளியை, அதாவது தெய்வ நிலையை, அடைவதும் அதனால் சாத்தியமாகும்.

வேதத்தின் இந்த மையக் கருத்துக்கு உடன்பாடாக உள்ளவை உண்மையான வேதங்கள். வேதம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் இதற்கு மாறான கருத்தைக் கூறினால் அவை பொய் வேதங்களாகும்.

ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி இதுவே மேலான தெய்வம் என்று சொல்லும் நூல் வேதம். இது தவிர மற்றவை எல்லாம் தெய்வமல்ல என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

இந்த வழிபாட்டுமுறை சிறந்தது என்று ஏதேனும் ஒரு முறையைச் சுட்டிக் காட்டும் நூல் வேதம். மற்ற முறைகள் எல்லாம் உங்களை நரகத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

மனிதனின் இறுதி லட்சியம் தர்மத்தை அனுசரித்து, கடுமையாக உழைத்து, ரிஷி, மகோனர், சூரி நிலைகளைக் கடந்து ஒளி நிலையை அடைவது என்று கூறுவது வேதம். உண்டு உடுத்து உறங்கி, பிறர் துன்பம் பற்றிக் கவலைப்படாமல் தந்நலமே பெரிதாகக் கருதி உயிர் வாழ்வதுதான் மனித வாழ்வு எனப் போதிக்கும் நூல் பொய் வேதம்.

இனி இந்தக் கண்ணோட்டத்தில் யஜுர்வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியை ஆராய்வோம்.

ருத்ரம் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்ளுமுன் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்ற தலைப்பில் சொல்லப்பட்ட ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு-வருவோம்.

ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
1. கடந்த காலமாகவும் வருங்காலமாகவும் காலம் கடந்து நிற்றல்,
2. விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
3. சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
4. புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

இதே கருத்தை ருத்ரம் தனக்கே உரிய வழியில் சொல்கிறது. இங்கு பரம்பொருளுக்கு ருத்ரன் என்று பெயர் அளிக்கப்படுகிறது.

ருத்ரன் காலம் கடந்தவர் என்பது அழியாதவர்(விக்ஷீணக), பவ: (ஆதிமூலம்), முன்னே பிறந்தவர் (பூர்வஜ) பின்னே பிறந்தவர் (அபரஜ)என்ற சொற்களால் குறிப்பிடப்படுகிறது.

இடம் கடந்தவர் என்பது பல வகையாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் இருக்கும் இடங்களாகக் கூறப்படுபவை- ஆழமான மடு, ஆற்றுக் கரை, உப்பரிகை, களம், களர்நிலம், குறுகிய பாதை, பெரும்பாதை, சுக்கான் பூமி, சுனை நீர், புல்தரை, பயிர்நிலம், மணல் திட்டு, பெருவெள்ளம், இன்னும் பல.

மந்திரியாகவும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் சபையினராகவும் அவர் இருக்கிறார். தச்சர், குயவர், கருமார் போன்ற வடிவிலும் அவர் உள்ளார். நல்லவர்களாக மட்டுமல்ல, தீயவராகவும் அவர் உள்ளார். திருடர்களில் பல வகையாகவும் ஏமாற்றுபவர்களாகவும் அவரே காட்சி தருகிறார். ஒருவராக மட்டுமல்ல, பலராகவும் காட்சி தருகிறார். உட்கார்ந்திருப்பவர்கள், நிற்பவர்கள், வழிநடப்பவர்கள், விரைந்து செல்பவர்கள், படுத்திருப்பவர்கள், தூங்குபவர்கள், விழித்திருப்பவர்கள், உரக்கக் கூவுபவர் என்று பல நிலை மனிதர்களாகவும் அவர் உள்ளார். மனிதராக மட்டுமல்ல, குதிரை, நாய் முதலான மிருகங்களாகவும் அவர் உள்ளார்.

உயிரற்ற பொருட்களும் அவரே- மின்னல், மலை, மழை, மழையின்மை, மாட்டுக் கொட்டகை, தீவு, கட்டில், வீடு, இளம்புல், காய்ந்த சருகு, குகை, காட்டுமரம், குளம், ஒலி, எதிரொலி, மேகம், தேர், மரம், முரசு, முரசுக்குச்சி, முள்காடு, செடி கொடி, வீட்டுப் பொருள், காற்று, புழுதி, தூசி, இன்ன பிற.

அனைத்தையும் தோற்றுவித்தவர் என்பது பவ என்னும் பெயரால் விளக்கப்படுகிறது.

அவர் நம்மனோரால் புரிந்துகொள்ளப்பட முடியாதவர் என்பது நாம் முரணாகக் கருதுபவை எல்லாம் அவரிடத்தில் அழகாகப் பொருந்தி இருப்பதிலிருந்து தெரிகிறது. பெரியவர் (மஹத்), சிறியவர் (க்ஷுல்லக), உயரமானவர் (ப்ருஹத்), குட்டையானவர் (ஹ்ரஸ்வ), மகிழ்ச்சி தருபவர் (சம்பு), அழவைப்பவர் (க்ரந்தயத்), கருத்த கழுத்தர் (நீலக்ரீவ), வெண் கழுத்தர் (சிதிகண்ட), சடையர் (கபர்தீ), மொட்டையர் (வ்யுப்தகேச), காய்ந்ததில் உள்ளவர் (சுஷ்க்ய), பச்சையான பொருட்களில் உள்ளவர் (ஹரித்ய), சிவப்பு நிறத்தர் (அருண), மஞ்சள் நிறத்தர் (ஸஸ்பிஞ்சர) என்று அவர் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவர்.

மைபடிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னினல்லான்
ஒப்புடையனல்லன், ஒருவனல்லன், ஓரூரனல்லன், ஒருவன் இல்லி,
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும், அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இத்திறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே.
என்று அப்பர் உரைத்தது இதைத்தான்.

ருத்ரத்தின் சில தனித் தன்மைகளையும் பார்ப்போம். யஜுர் வேதம் தோன்றிய காலத்தில் அரசனது நிலப்பரப்பு பெருகியது. அவனது வேலைகளும் பொறுப்புகளும் பெருகின. அவனுக்கு ஆலோசனை சொல்ல மந்திரிகளும் ஆலோசனை சபையினரும் ஏற்பட்டுவிட்டார்கள். இந்த மாற்றங்கள் ருத்ரத்தில் காட்டப்படுகின்றன. ருத்ரன் மந்திரியாகவும் சபையினராகவும் காட்சி தருகிறார்.

ருத்ரத்தின் மற்றொரு தனித்தன்மை- இதில் இறைவனின் கோப முகம் நன்றாகக் காட்டப்படுகிறது. இந்திரன் முதலானோரின் பெருவீரமும் எதிரிகளை அழிக்கும் வலிமையும் பல இடங்களில் பேசப்படுவது போல ருத்ரனும் நல்லோர்களின் தலைவராக இருந்து அவர்களின் எதிரிகளை அழிப்பதற்கு எல்லா ஆயுதங்களையும் தாங்கி எப்போதும் ஆயத்தமாக உள்ளார். 273 போற்றிகளில் 51 இத்தகைய படை வலிமையைப் பறைசாற்றுபவை தாம். இந்த வேறுபாடுகள் அடிப்படைக் கொள்கைக்கு மாறானவை அல்ல.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. பவஸ்ய ஹேதி (பிறப்பை அறுக்கும் ஆயுதம்) என்று அவர் வர்ணிக்கப்படுகிறார். பிறப்பு என்பது இழிவானது என்ற கருத்து ரிக் வேதத்தில் காணப்படவில்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்றாகச் சுவைத்து அனுபவித்தனர். நீண்ட ஆயுள் வேண்டினர். ஆனால், மரணத்துக்கு அஞ்சவில்லை. இறந்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. எங்கும் பிறப்பு ஒரு சுமை என்று யாரும் கருதியதாகத் தெரியவில்லை. பிறப்பை அறுக்க வேண்டும், மீண்டும் பிறவாத நிலையை அடையவேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக யஜுர் வேதத்தில் தான் பார்க்கிறோம். அந்த வகையில் இது ஆதி வேதத்தின் மையக் கருத்திலிருந்து முரண்படுகிறது எனலாம்.

தமிழ் போன்ற பிற மொழிகளில் தோன்றிய தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களும் ஆதி வேதத்தின் கருத்தைக் கூறும் அளவுக்கு வேதம் என்ற பெயருக்குத் தகுதி உடையன.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 50

  1. மதிப்பிற்குரிய ஐயா,

    எத்துணை எளிமையாக எது உண்மை வேதம், எது பொய் வேதம் எனவும், ருத்ரன் என்பவர் யார் எனவும் விளக்கப் பட்டுள்ளது. இவற்றை அறிந்து படிக்கும்போது உடல் சிலிர்க்கின்றது. நாம் முன்னோர்கள் வைத்துச் சென்றுள்ள பொக்கிஷங்களை மிக அழகாக, எளிமையாக, என்னைப் போன்றோரும் புரிந்து கொண்டு போற்றும் வண்ணம் எழுதியருளினமைக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *