சு.கோதண்டராமன்

vallavan kanavu

புதிய பாடல் புதிய தெய்வம்

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து

கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து பேசி

மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்

பிறவாமைக் காக்கும் பிரான்

-அம்மையார்.

சோழ மன்னர் செந்தீ வளவன் கொலு மண்டபத்தில் வந்து அமர்ந்தார். அவர் முகம் கவலைக் குறியைக் காட்டியது. தலைமை அமைச்சர் அச்சுதப் பிரமராயரை நோக்கி, “பிரமராயரே, நம் மனிதர்கள் நர்மதைக்கரைக்குப் போய் மூன்று மாதம் ஆகிறது. இன்னும் வரவில்லை, அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லையே” என்றார்.

“வந்துவிடுவார்கள் மன்னா. கவலை வேண்டாம். எப்படியும் போக ஒரு மாதம், வர ஒரு மாதம் ஆகும். மேலும் ஆங்கிரஸ பிரமராயர் போன காரியத்தைச் செவ்வனே முடித்துக்கொண்டுதானே வரவேண்டும். நாடுவிட்டு நாடு குடியேறுவது என்பது எளிதான செயல் அல்லவே? அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் யோசனை செய்து சம்மதித்தபின் அவர்களை ஒன்று கூட்டிக் கொண்டு வரவேண்டும். இதற்கு நான்கு மாத காலம் ஆகும். நேற்று வந்த ஒற்றர் செய்தியின்படி, வர விரும்புபவர்கள் அனைவரும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அதாவது முந்தாநாள், கார்வான் நகரில் கூட வேண்டும் என்று ஆங்கிரஸர் அறிவித்து இருக்கிறார். நேற்று புறப்பட்டிருப்பார்கள். இன்று கடல் பயணத்தைத் தொடங்கியிருப்பார்கள்.”

“நம் அமைச்சர் ஆங்கிரஸரின் திறமையில் நமக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் நீண்ட கடற்பயணம் ஆயிற்றே, புயல் போன்ற இயற்கை உற்பாதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்பது தான் நம் கவலைக்குக் காரணம்.”

“நம் மாலுமிகள் திறமையானவர்கள். எந்தப் புயல் வெள்ளமானாலும் பாதுகாப்பாகப் படகைச் செலுத்துவதில் வல்லவர்கள். மேலும் இது புயல் வீசும் காலமும் அல்ல. கடுங்கோடை. இன்னும் ஒரு மாதம் போனால் மேற்குப் பகுதிகளில் பெரு மழை தொடங்கிவிடும். அதற்குள் அவர்கள் வந்து விடுவார்கள். லகுலீசர் காப்பார். கவலை வேண்டாம் மன்னா.”

லகுலீசர் பெயரைக் கேட்டவுடன் அரசரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு நாள். அரசர் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது ஒரு புலவர் வந்தார். வழக்கம்போல மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வதற்காக வருவோரில் ஒருவர் என்று  நினைத்த மன்னருக்கு அவர் பேசிய முதல் சொல்லே அதிர்ச்சியைத் தந்தது.

“மன்னா, இப்பொழுது நான் சொல்லப் போகும் பாடல் உங்களைப் புகழ்ந்து பாடப்பட்டதும் அல்ல, என்னால் இயற்றப்பட்டதும் அல்ல. மேலும் நான் பரிசு பெறவும் வரவில்லை. மன்னர் தயவால் என்னுடைய நிலம் எனக்குப் போதுமான வருவாய் தருகிறது.  பாடலைப் படிக்கவா?”

“படியும்.”

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல்சிவந்த வாறோகழலாடப்

பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

தீயாடு வாய்இதனைச் செப்பு.        

சுடலையில் தீயின் நடுவே கையில் தீயேந்தி நடனமாடுபவனைப் பார்த்துப் புலவர் கேட்கிறார், “உன் கையின் சிவப்பு நிறத்தால் தீ சிவந்ததா அல்லது அத்தீயினால் உன் கை சிவந்ததா ?

“அடடா, என்ன கற்பனை நயம்! மேலே படியும்.”

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

வேலையே போன்றிலங்கும் வெண்ணீறுமாலையின்

தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு

வீங்கிருளே போலும் மிடறு.

    காலை நேரத்துச் சிவந்த வானம் அவனது திருமேனிக்கும், உச்சி வேளை வெண்ணிற வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறைகின்ற ஞாயிற்றின் கதிர்கள் அவனது விரிந்த சடைக்கும், கருத்த இரவு அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின.

“ஆஹா, என்ன சிறப்பான உவமை! மேலே படியும்.”

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ

மருளின் மணிநீலம் என்கோஅருளெமக்கு

நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்

ஒன்றுடையாய் கண்டத் தொளி.

இறைவா, உன் கண்டத்தில் உள்ள ஒளி பொருந்திய கருமைக்கு உவமையாக எதைக் கூறுவேன்? இருளையா, மாமேகத்தையா, நீல மணியையா ?

“என்கோ, என்கோ என்ற தொடர் என்னை எங்கோ உயர்த்திச் செல்கிறது. என்ன அழகான சொல் பிரயோகம்! இன்னும் இருக்கிறதா?”

“நிறைய உள்ளது மன்னா. சொற்சுவை மட்டுமல்ல. இறைவனிடத்து அவர் காட்டும் அன்புச் சுவையும் சிறப்புடைத்து. இதைக் கேளுங்கள்.”

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறிபணியா ரேனும்சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்

கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

    என் துன்பத்தை அவர் தீர்க்காவிட்டாலும், என் மேல் இரக்கம் கொள்ளாவிட்டாலும், நான் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும் எலும்பு மாலை அணிந்து, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் கொண்ட அன்பு மாறாது.                                                                     

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்பவர்ச்சடைமேல்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

    நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் அவ்வப் பிறவிகளிலும், தன் நீண்ட சடையில் பிளவுபட்ட திங்களைச் சூடிய பெம்மானுக்கே அடிமையராய் வாழ்வோம். அவரல்லாத பிறர்க்கு ஒருபோதும் ஆளாக மாட்டோம்.                                                              

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்

காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்

வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது

கில்லேன மாஎன்றான் கீழ்.

 

    வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானைச் சோதிப்பதற்கு மாலவனும் பன்றி உருவெடுத்து கீழே தோண்டிச் சென்று ‘என்னால் முடியவில்லை அம்மா’ என்றான்.

“புலவரே, இந்தப் பாடல்களில் போற்றப்பட்டுள்ள தெய்வம் யார் என்று தெரியவில்லையே. அவர் வேதத்துக்கு ஆதியன் என்று பேசப்பட்டாலும் அவர் வேத தெய்வமாகவும் தெரியவில்லை. கிராமியத் தெய்வமாகவும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் அந்தத் தெய்வத்தின் மேல் புலவர் செலுத்தும் அன்பு மிக ஆழ்ந்தது, உறுதியானது. இதை இயற்றியவர் யார்? இது போன்று இன்னும் எத்தனை பாடல்கள் உள்ளன?”

“மன்னா, இது என் தந்தையார் எழுதி வைத்த சுவடி. அவர் என் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார். இந்தச் சுவடி என் வீட்டுப் பரணில் இருந்தது. இது பேயார் என்ற ஒரு பெண்பால் புலவர் இயற்றியது என்று என் தாய் சொல்லி அறிந்தேன்.  படித்துப் பார்த்ததில் சிறப்பாக இருக்கவே, சிறப்புடைய பொருள்கள் அரசர்க்கே உரியன என்ற வழக்குப்படி சமூகத்தில் இதைத் தெரிவிக்க வந்தேன். மொத்தம் 143 பாடல்கள் உள்ளன. இது எந்தத் தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை நான் அறியவில்லை.”

“புலவரே, நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்கள். முழுவதையும் படித்துக் காட்டிவிட்டுப் போகலாம். அமைச்சரே, இந்தப் பாடலை நீர் கேட்டிருக்கிறீரா, இதை எழுதியது யார் தெரியுமா?”

“பேயார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரைக்காலைச் சேர்ந்தவர். அவர் ஏதோ பேய் பிடித்த பெண் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் இவ்வளவு அழகிய பாடல்களை இயற்றியிருப்பார் என்று நான் இதுவரையில் அறியவில்லை.”

“அமைச்சரே, அவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லும்.”

“உத்தரவு மன்னா.”

    புலவர் அமைச்சர் காட்டிய விடுதியில் தங்கினார். அரசருக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து பாடல்களைப் படித்துப் பொருள் கூறி வந்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வளவன் கனவு-3

  1. மதிப்பிற்குரிய ஐயா,
    அற்புதமான எழுத்து. இது உண்மையா கற்பனையா இரண்டும் கலந்த புனைகதையோ- என்னவானால் என்ன? மிக அருமையாக, அழகாக மென்தமிழில் நடை பயில்கிறது. சிவபிரான் பற்றிய பாடல்களைத் தாங்கள் தந்துள்ளதும், அதைக் கதையில் பொருத்தியுள்ள விதமும் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டன.
    தங்களுக்கு ஆடவல்லான் எல்ல நலன்களையும் அளிக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன். மேலும் தொடரும் அத்தியாயங்களைப் படிக்க ஆவலாக உள்ளேன்.
    வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *