புலவர் இரா.  இராமமூர்த்தி.

 

 

”நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.” (783)

என்னும் திருக்குறளின்படி , நம் வாழ்வில் ஒருமுறை படித்த நூலை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நம் தனிப்பட்ட, மற்றும் சமுதாய வளர்ச்சிக் கேற்பப் புதிய புதிய பொருள்களைத் தந்து மகிழ்விக்கிறது. அதனால்தான் நாம் இளமையில், பள்ளி வகுப்புக்களில் அன்று படித்த பாடத்தின் இன்றைய பயன்பாடு நமக்கு உதவுகிறது. அன்று கற்ற நூலின் அனுபவப் பாடம் இன்று நமது உள்ளார்ந்த ஆன்மிகப் பயிற்சிக்கு உறுதுணை ஆகிறது.

”இதன் விளக்கத்தை வல்லார்வாய்க் கேட்டறிக”, என்ற உரையாசிரியர்களின் கருத்து, அந்த நூலை மீண்டும் கற்றறிந்த நூல்வல்லார் ஒருவருடன் இணைந்து மீண்டும் பயில வேண்டும் என்பதை நிறுவுகிறது. அவ்வகையில் ஆன்மிக அனுபவங்களை – சிலவகை தியானம், யோகம், ஆகியவற்றை- தக்க வழிகாட்டி- குரு , ஒருவரிடம் முறையாகக் கற்றுப் பயிலவேண்டும் என்று தத்துவ நூல்கள் வலியுறுத்துகின்றன! இதனை,

”உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்;
கடையரே கல்லா தவர்”(395)

என்ற குறட் பாவும் வலியுறுத்துகிறது. இல்லார் உடையார் முன் சென்று, நின்று, வேண்டிப் பெறுவதுபோல் ஆசிரியரிடம் சென்று நின்று, பலமுறை வேண்டி வேண்டி, அறிவைப் பெற வேண்டும் என்பது இதன் பொருள்.

”பொங்கரில் நுழைந்து வாவி
          புகுந்து பங்கயம் துழாவிப்
பைங்கடி மயிலை முல்லை
          மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணம்கூட் டுண்டு
          குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேறும்
          அறிவன்போல் இயங்கும் அன்றே!”

என்ற திருவிளையாடற் புராணப் பாடல் அறிவைத் தேடுபவன் எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் முயன்று அங்கங்கே தேவைப்பட்ட அறிவைப் பெறுகிறான் என்பதை, வீசும் காற்றை உவமையாக வைத்து விளக்குகிறார் (இதன் விளக்கத்தை வேறொரு கட்டுரையில் எழுதவிருக்கிறேன்!).

பலமுறை படித்துப் பொருள் புரிந்து கொள்ள முயற்சி செய்த போதெல்லாம் திருக்குறளின் பொருள் புதுப்புதுப் பொலிவுடன் வளர்வதைக் கண்டுள்ளேன்! அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை வருகிறது. தக்கவர் ஒருவரிடம் ஒரு திருக்குறளின் பொருளைக் கேட்டறிந்து, மிக்க மகிழ்ச்சி யடைந்து இதனை எழுதுகிறேன்!

”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா வுயிரும் தொழும்” (260)

என்பதே அத்திருக்குறள்! இந்தக் குறட்பாவுக்குப் பொருள்காண முற்பட்டால், உயிர்களைக் கொல்லாதவனையும், அவற்றின் புலாலை உண்ணமாட்டேன் என்று மறுத்தவனையும், அதாவது உயிரிரக்கம் காட்டுபவனையும், புலால் மறுத்தவனையும், எல்லாவுயிரும் கைகூப்பித்தொழும் என்று பொருள் அமைகிறது! இதில், ‘எல்லாவுயிரும்’ என்ற தொடர் எந்தெந்த உயிர்களைக் குறிக்கிறது? விலங்குகளைக் கொன்று தின்பதுதானே புலாலுண்ணுதல்? விலங்குகளைக் கொல்லாமல், அவற்றைச் சமைத்துத் தின்னாமல் இருப்பவனை விலங்குகள் எவ்வாறு கைகூப்பித் தொழும்? அவ்வாறு தொழும் செயலை எல்லாவுயிர்களும் செய்யுமா? என்ற வினாக்கள் எனக்குள் எழுந்தன! ”இதற்குத் தக்க விளக்கம் தேடினேன்” என்று கவிமாமணி இலந்தை இராமசாமியிடம் கேட்டேன்! உடனே அதற்குத் தகுந்த விளக்கத்தை அவர் அளித்தார்! அவருக்கு என் நன்றியைப் புலப்படுத்துவது என் கடமை! திரு. இராமசாமி, கைகூப்பி’ என்பதை ” எல்லாவுயிரும்” என்ற தொடரில் இணைத்து ஏன் தடுமாறுகிறீர்கள்?

புலாலைக் கைகூப்பி மறுத்தானை என்று அமைத்துக் கொள்ளுங்கள்! பொதுவாக எதனையும் வேண்டவே வேண்டாம் என்று மறுப்பவர், இருகரமும் கூப்பி , ‘எனக்கு இது வேண்டா!’ என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் என்றுதான் கூறுவர். அவ்வகையில் புலாலுணவு வேண்டாதவர் ”இது வேண்டா’ என்று கூறும்போது பணிவுடன் கைகூப்புவதுதானே வழக்கம்? ஆகவே கொல்லானை, புலாலைக் கைகூப்பி மறுத்தானை எல்லாவுயிரும் தொழும் என்று அமைத்துக் கொள்ள வேண்டும்! இங்கே எல்லாவுயிரும் என்ற தொடர் ‘எல்லாச் சான்றோரும்’ என்ற பொருளில் மனிதவுயிர்களை மட்டுமே சிறப்பிக்கும்! ”மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்” (457) என்ற குறட்பாவிலும், ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல (1012) என்ற குறட்பாவிலும், ”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு, என்ற குறட்பாவிலும் உயிர்கள் உயர்திணை மக்களையே குறித்தது!

இவ்வகையில் திருக்குறளுக்குப் புதிய பொருள் காண்கிறோம். இன்னும் காண்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *