வளவன் கனவு-5
சு.கோதண்டராமன்
களப்பிரர்
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே
-சம்பந்தர்
கி.பி. 250 முதல் 575 வரை உள்ள காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. அப்பொழுது தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கக் கூடிய கல்வெட்டுகளோ, பட்டயங்களோ, இலக்கியங்களோ இல்லை. கருநாடகத்திலிருந்து களப்பிரர் என்னும் கூட்டத்தார் படையெடுத்து வந்து சேர சோழ பாண்டிய அரசர்களை வென்று அடிமைப்படுத்தினர் என்பது மட்டு்ம் தெரிகிறது.
அப்பொழுது சோழ நாட்டின் நிலப்பரப்பு பெரிதாக இருந்தது. சோழன் மீண்டும் வலிமை பெறக் கூடாது என்பதற்காக அந்நாட்டின் பல பகுதிகளைக் களப்பிரர்கள் பல குறுநில மன்னர்களுக்குப் பிரித்துக் கொடுத்துக் கப்பம் கட்டம் செய்தனர். கரிகால் சோழன் தலைநகராகக் கொண்டு ஆண்ட உறையூர் சோழர்கள் கையை விட்டுப் போய் விட்டது. தஞ்சாவூருக்குக் கிழக்கே உள்ள சிறு பகுதி மட்டும் சோழநாடு என்ற பெயருடன் இருந்தது. எனவே சோழர்கள் தங்கள் குல முன்னோனான மனுநீதிச் சோழன் ஆண்ட ஆரூரைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்தன. சோழநாடு முழுமையையும் மீட்டுப் பழைய பெருமையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.
சிறு பகுதியாக இருந்தாலும் காவிரியால் வளம் பெற்ற சோழநாட்டில் செல்வத்திற்குக் குறைவில்லை. ஒரு பெரிய படை திரட்டிக் குறுநில மன்னர்களைத் தன் வசப்படுத்திக் களப்பிரர்களிடமிருந்து விடுதலை பெறத் தேவையான செல்வம் சோழ மன்னர்களிடம் இருந்தது. ஆனால் அதற்குத் தேவையான மக்கள் ஒத்துழைப்பு இல்லை.
சமண சாக்கிய சமயங்கள் தமிழ்நாட்டில் நுழைந்து கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. துவக்க காலத்தில் அவை மகாவீரர், புத்தரின் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றுவோரைக் கொண்டிருந்தன. கடவுள் என்று ஒன்று உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவை உண்மை, அகிம்சை, பேராசையின்மை, புலனடக்கம், கள்ளுண்ணாமை ஆகியவற்றைப் பரப்பி மக்களைப் பண்படுத்தின. இவ்வுலகில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் மறு பிறவி இல்லாத நிலையான முத்தியை அடையலாம் என்று போதித்தன. சமண சாக்கியத் துறவிகளை மக்கள் போற்றி ஆதரித்தனர்.
நாத்திகத்தையும் அறநெறியையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது பண்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம். பெரும்பாலான மக்களை அறநெறியில் நிலைக்கச் செய்வது இறைவன் தண்டிப்பான் என்ற அச்சம்தான். அச்சமே கீழ்களது ஆசாரம் என்றார் வள்ளுவரும்.
சில நூற்றாண்டுகளுக்குப் பின் நாளடைவில் மக்களுக்கு அறநெறி நாட்டம் குறைந்தது. கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு முத்தி என்ற நிலை உண்டு என்பதிலும் சந்தேகம் வந்தது. இருக்கிறதோ இல்லையோ என்று ஐயத்திற்குள்ளான மறு உலகுக்காக இன்று நம்மை நாம் ஏன் வருத்திக் கொள்ள வேண்டும், இன்றைய ஆசையை இன்றே நிறைவேற்றிக் கொள்வோம் என்று எண்ணம் ஓங்கியது.
மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே ஒழுக்கம் தவறி வாழத் தலைப்பட்டனர். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து வாழ்வதும், ஆடையின்றித் திரிவதும், குளிக்காமல், பல் துலக்காமல் உண்பதும், தவம் என்ற பெயரில் போதை தரும் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர்.
புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் இத்தகைய நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டனர். இந்தக் கலாசாரம் பரவியதால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொண்டது.
அறநெறியைக் கடைப்பிடித்த சமணர்களும் இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தியதால் போர் புரியும் மனப்போக்கு மக்களிடையே இல்லாமல் போயிற்று. இதனால் வீரமுள்ள ஒரு படையை உருவாக்குவது என்பது மன்னர்களுக்கு இயலவில்லை. தமிழ் மன்னர்கள் களப்பிரர்களிடம் அடிமைப்படுவதற்குக் காரணமான இப்பண்பு அவர்கள் மீண்டும் தலைதூக்குதலையும் தடுத்துக் கொண்டிருந்தது.
முந்திய காலங்களில் சோழியப் பிராமணர்கள் இறை உணர்வையும் அற உணர்வையும் போதித்து மக்களை நல்வழிப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போதோ, பிராமணர்களிலேயே பலர் சமண சாக்கிய சமயத்தைத் தழுவினர். எஞ்சி இருந்தவர்கள் சிறுபான்மையர் ஆகிவிட்டபடியால் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் உண்டு தன் வழிபாடு உண்டு என்று இருந்தனர்.
எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. இதை முதலில் உணர்ந்தவர்கள் சோழர்கள்தாம். பல்லவ, பாண்டிய மன்னர்களில் சிலர் சமணத்தைத் தழுவியிருந்தனர். ஆனால் சோழர்கள் சமணத்தின் சிறந்த பண்புகளைப் போற்றினாலும் கூட முழுமையாகச் சமணத்துக்கு மாறாமல் தங்கள் பழைய சமயக் கொள்கையில் உறுதியாக நின்றனர்.
அம்மையாரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த செந்தீ வளவனுக்குச் சோழநாட்டை மீண்டும் பெருமையுறச் செய்வதற்கான வழி அதில் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது.
செந்தீ வளவன் அம்மையாரின் பாடல்களை முழுவதும் கேட்டார். அவற்றின் இலக்கியச் சுவையை ரசித்தார். ஆழ்ந்த பக்திச் சுவையை மெச்சினார். ஆனால் அம்மையார் குறிப்பிடும் தெய்வம், பனித்த சடையும் பால் வெண்ணீறும் அணிந்த தெய்வம் எது என்பது அவருக்குத் தெரியவில்லை. மாரியம்மன், ஐயனார் போன்ற தொல் பழம் கிராமியத் தெய்வமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. அதை வேதநாயகன் என்று அம்மையார் குறிப்பிடுகிறார். அவர் அறிந்தவரை வேதத்தில் சுடுகாட்டில் நடனமாடும் தெய்வம் எதுவும் இல்லை. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வர வர மிகுந்து வந்தது.
அறிவானும் தானே அறிவிப்பான் தானே என்று அம்மையார் கூறுவது போல, அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை மனதில் ஏற்படுத்திய இறைவனே அறிவிப்பானாகவும் வந்து உபதேசம் செய்வார் என்று வளவன் நம்பினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
தொடரும்
அருமையான ஆராய்ச்சியின் விளைவான பொருள் செறிந்த எழுத்து. அடுத்த அத்தியாயங்களுக்கான ஆவலை வளர்க்கின்றது. மிக்க நன்றி. மேலும் விரிவாக எழுதுங்கள்.
”…அறிவானும் தானே அறிவிப்பான் தானே என்று அம்மையார் கூறுவது போல, அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை மனதில் ஏற்படுத்திய இறைவனே அறிவிப்பானாகவும் வந்து உபதேசம் செய்வார் என்று வளவன் நம்பினார்..” அருமை… தொடர்வேன்
“……..பெயரில் போதை தரும் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான….”
சமணத் தத்துவத்தில் கள்ளுண்ணாமை யும் உண்டு அய்யா???