பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்
கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்துமேற் கொண்டவ ரேய வினையை
மடித்தொழிதல் என்னுண்டாம் மாணிழாய்! கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டு அவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்.
பொருள் விளக்கம்:
கொடி பறக்கும் வலிமை பொருந்திய தேரினை கொண்ட மன்னவனின் தயவில், அவனது பொருளைக் கொண்டு தங்களது வாழ்வை நடத்தும் நிலையில் உள்ளவர், மன்னர் ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்து அதைச் செய்துமுடிக்க இட்ட கட்டளையை, தனது சோம்பலின் காரணமாக விரைவாகச் செய்யாமல் போவதால் என்ன பயன் உண்டாகும்? மாட்சிமை பொருந்திய அணிகலன்களை அணிந்தவரே, கள்ளைக் குடித்தபின்னர் துவண்டிருப்பவர் ஒருவரும் கிடையாது (கள் தரும் போதையினால் குடித்தவர் துணிகரச் செயல்களையும் செய்தல் போல அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை செயல்படுத்துவீராக).
பழமொழி சொல்லும் பாடம்: அதிகாரமுடையோர் இடும் கட்டளையை அவரை அண்டிப் பிழைப்போர் சோம்பலின்றி விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டும். இப்பழமொழியின் சுட்டும் அதிகாரம் உடையவரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை வள்ளுவர்,
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. (குறள்: 693)
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம் பங்கில் குற்றங்கள் நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அப்படி நேர்ந்து விட்டால், பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல என்ற குறள் வழி விளக்குகிறார்.