புதிய வானம், புதிய பூமி

சு.கோதண்டராமன்

நர்மதாயை நமப் ப்ராத: நர்மதாயை நமோநிசி

நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹி மாம் விஷஸர்ப்பத:

-வடமர்களின்  சந்தியாவந்தன மந்திரம்

(நர்மதையே உன்னைப் பகலும் இரவும் வணங்குகிறேன். விஷப்பாம்புகளிடமிருந்து என்னைக் காப்பாயாக.)

vallavan kanavu

ஒவ்வொரு படகிலும் இருந்த மக்கள் நர்மதை நதியின் இரு கரையிலும் உள்ள பல வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்.  அவர்கள் கற்ற வேதமும், சோழ மன்னனின் அழைப்பும் அவர்களை இன்று இணைத்திருக்கிறது. அவர்கள் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

எல்லோரும் வெளிப்பார்வைக்கு உற்சாகமாகத் தோன்றினாலும் அனைவர் மனதிலும் உள்ளூர ஒரு அச்சம் இருந்து வந்தது. ‘புதிய தேசத்துக்குப் போகிறோம். அது எப்படி இருக்குமோ, தெரியவில்லை. அங்கு மலையே இல்லையாம், கங்கைக்கரை போல சமதரையாக இருக்குமாம். அங்குள்ள தட்ப வெப்பம் வித்தியாசமாக இருக்குமாம். குளிரும் குறைவு, வெய்யிலும் குறைவு என்கிறார்கள். மழைக்காலத்தில் மழை பெய்யாமல் சரத் காலத்தில் பெய்யுமாம். காவிரியில் சில மாதங்கள் தான் தண்ணீர் ஓடுமாம். தண்ணீருக்குக் கஷ்டப்பட வேண்டி இருக்குமோ’ என்றெல்லாம் பல வகையான சந்தேகங்கள்.

‘எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ளலாம். மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு நம்மை அழைக்க வந்தவர்களைப் பார்த்தால் நல்ல மனிதர்களாகத்தான் தெரிகிறது. சோழ தேசத்தில் எல்லோரும் அப்படியே இருப்பார்களா? சரி, பசுபதிநாதனும் நர்மதை நதியும் நமக்கு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் துணை இருப்பார்கள். அவர்களிடம் பாரத்தை ஒப்படைத்து விட்டுக் கவலையற்று இருப்போம்’ என்று சமாதானம் செய்து கொண்டார்கள்.

‘பிறந்த மண், உறவினர்கள், பழகிய மனிதர்கள் இவர்களைப் பிரிவது தான் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது? ஒரு தேசத்தின் நன்மைக்காக ஒரு ஊரையே பலியிடலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இங்கு நாம் சோழ தேசத்தின் நன்மைக்காகச் செல்கிறோம். பிறந்த மண், உறவினர் என்ற அற்ப ஆசைகளைப் பலியிடத் தான் வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டார்கள்.

‘நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நமக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் நம் சௌக்கியத்தை மட்டும் பார்த்தால் போதுமா? லோகக்ஷேமம் தானே பிராமணனின் தர்மமாகச் சொல்லப்பட்டிருக்கிறது? சோழ தேசத்தைப் புனருத்தாரணம் செய்ய நம் உதவி தேவை என்று சொல்லும் போது என் சௌக்கியம் தான் பெரிது என்று சொல்ல முடியுமா?

‘சோழதேச அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி அவந்தி அரசர் பறையறைந்து அறிவிக்கும்போது பல நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தார். வேதம் கற்காதவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுள்ளவர்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் வரக்கூடாது என்று விதித்திருந்தார்கள். ஒரு தாய்க்கு ஒரு மகனாக இருப்பவர்களும், மூத்த மகனாக இருப்பவர்களும் பெற்றோரை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்றும் கூறினார்கள். இதில் ஒரு சிலர்தான் தேற முடியும். அவர்களும் தன் சொந்த சௌக்கியத்தைக் காரணம் காட்டி வரவில்லை என்றால் அது தர்மமாகாது.

‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வேலி நிலம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேலி என்றால் எவ்வளவு பெரியது என்று தெரியவில்லை. ஜீவனத்துக்குத் தேவையானது கொடுப்பார்கள் என்று நம்பலாம். அங்கு சோழ தேசத்தில் விவசாயம் செய்வது மிகச் சுலபமாம். மண் மிருதுவாக இருக்குமாம். மலைப் பிரதேசம் போலக் கடினமான தரை இல்லையாம். அந்த விவசாயம் கூட நாம் செய்ய வேண்டியது இல்லையாம். யாரோ பயிரிடுவார்கள், பாடுபடுவார்கள். விளைவில் ஆறில் ஒரு பகுதி நமக்கு வந்துவிடுமாம். வேதத்தை ஓதிக்கொண்டும் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் இருப்பது தான் நமது வேலை என்கிறார்கள். பார்ப்போம். துணிந்து வந்துவிட்டோம். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம். எல்லோரையும் காப்பாற்றும் ஈசன் நம்மை மட்டும் காக்காமல் இருந்து விடுவானா’ என்று பேசிக் கொண்டார்கள்.

ஒவ்வொரு படகிலும் ஒரு சோழியப் பிராமணர் இருந்தார். நயினார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள் அவர்கள். கார்வான் பிராமணர்கள் தாங்கள் போய்ச் சேரும் இடம் பற்றிப் பல கேள்விகள் அவர்களிடம் கேட்டவண்ணம் இருந்தனர். அவர்களும் இவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி சோழ நாட்டின் பெருமைகளை எடுத்துக் கூறி வந்தனர்.

“புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலை வேண்டாம். தமிழ் மக்கள் விருந்தோம்பும் பண்பு உள்ளவர்கள். உங்களை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள்.”

“புதிய இடங்களுக்குப் போய்க் குடி அமர்வது எங்கள் சமூகத்திற்குப் புதியது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர்கள் மிச்ர (எகிப்து) தேசத்தில் நீலநதிக்கரையில் வாழ்ந்தவர்கள். அங்கு ஏற்பட்ட ஒரு கலவரத்தின் விளைவாக நாங்கள் கடல் கடந்து கொங்கணக் கடற்கரையில் குடியேறினோம். அங்கு நாங்கள் வேதம் கற்றுக் கொண்டோம். அது முதல் நாங்கள் சித்த பாவனர்கள் (தூய்மையான மனம் உடையவர்கள்) என்று அழைக்கப்பட்டோம். மீன் பிடித்தல் எங்களது குலத் தொழில். 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு சமணம் பரவிய போது மக்கள் மீன் உண்பதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். எங்கள் தொழிலுக்கு ஆதரவில்லாமல் போயிற்று. எனவே எங்கள் முன்னோர்கள் உள்நாட்டில் பற்பல வேலைகளில் அமர்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் வேதம் ஓதுதலைத் தொழிலாகக் கொண்டார்கள். அவர்களை நர்மதை நதிக்கரையில் குடியேற்றி உஜ்ஜயினி அரசர் ஆதரித்தார். இப்பொழுதும் அந்த வேதம்தான் எங்களைச் சோழநாட்டுக்கு அழைத்துப் போகிறது. எல்லாச் சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுக்கும் பண்பு எங்களிடம் உண்டு. அதனால்தான் இந்தக் குடியேற்றத்துக்குச் சம்மதித்தோம். சரி, உங்கள் பூர்விகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

“நாங்கள் சோழியப் பிராமணர். சோழநாட்டின் பூர்விகக் குடிகள். பாண்டிய நாட்டிலும்  எங்களவர்கள் உண்டு. எங்களில் பல குழுக்கள் உண்டு. செந்தூர் என்னுமிடத்தில் திருசுதந்திரர் என்றும் மதுரையில் பட்டர் என்றும் ஆனைக்காவில் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் என்றும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயர் உண்டு. சோழர் தலைநகரமான ஆரூர்ப்பகுதியில் வாழ்பவர்களில் நயினார், பிரமராயர் என்று இரு குழுக்கள் உண்டு. பிரமராயர்கள் பெரும்பாலும் அரசுப் பதவிகளில் இருப்பார்கள். நான் நயினார் குலத்தைச் சேர்ந்தவன். கோயில், விண்ணகரங்களில் பூஜை செய்வது தான் எங்களுக்கு முக்கிய தொழில்.”

“கோயில் என்றால் என்ன? விண்ணகரம் என்றால் என்ன?”

“விஷ்ணுவை வழிபடும் இடத்துக்கு விண்ணகரம் என்று பெயர். காளி, மாரியம்மன் போன்ற கிராமிய தெய்வங்களை வழிபடும் இடத்துக்குப் பொது இல் என்று பெயர். வீரர்கள் இறந்தால் அங்கு ஒரு கல் நட்டு வருஷத்துக்கு ஒரு முறை பூஜை செய்வார்கள். அரசர் இறந்தால் அவர் நினைவாக நடப்பட்ட கல்லைச் சுற்றிச் சுவர் எடுத்து மேல் கூரை அமைப்போம். இது கோ இல், அதாவது, அரசரின் வீடு எனப்படும். இந்த நடு கல்லிற்குத் தினமும் எண்ணெய் தடவி நீர், பால் அபிஷேகம் செய்து உணவு படைப்பது வழக்கம்.”

“சோழநாட்டின் நீர்வளம் பற்றிச் சொல்லுங்கள்.”

“அங்கு உங்கள் ஊரில் வர்ஷ ருதுவில் மழை பெய்வது போல குடகு நாட்டிலும் பெய்யும். அது எங்கள் காவிரியில் வெள்ளத்தைக் கொண்டுவரும். அது முடிந்தவுடன் சரத் ருதுவில் எங்களுக்கு மழைக் காலம். ஆகவே எங்கள் நீர் வளத்துக்குப் பஞ்சம் இல்லை. காவிரி கொண்டுவரும் வண்டல் மண் எங்கள் வயல்களில் எல்லாம் படிந்து அதை வளப்படுத்துகிறது. சிறு முயற்சியிலேயே ஏராளமாக விளையும்.  உணவுக்குப் பஞ்சமே இல்லை. சோழநாடு சோறுடைத்து என்றும் சோற்றால் மடை அடைக்கும் சோழ நாடு என்றும் சொல்வார்கள்.”

“உங்கள் நாட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள்? நாங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது  எப்படி?”

    “நாங்கள் பேசுவது தமிழ். அது தவிர அங்கு ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். முற்காலத்தில் வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர்கள் ஸம்ஸ்கிருதமும் பிராகிருதமும் மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இணைப்பு மொழியாக இருந்தது ஸம்ஸ்கிருதம்தான். முன்பு அறிஞர்கள் மத்தியில் மட்டும் இருந்த ஸம்ஸ்கிருதம், சமணம் பரவியதால் இப்பொழுது சாதாரண ஜனங்கள் வரை பரவி விட்டது. எனவே நீங்கள் என்னுடன் பேசும் ஸம்ஸ்கிருதத்தைக் கொண்டே சமாளித்துக் கொள்ளலாம். விரைவில் தமிழ் கற்றுக் கொள்ளவும் முடியும்.”

கேட்ட விஷயமாக இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேட்பதில் அலுப்பு ஏற்படவில்லை. இதுவரை பார்த்திராத ஒரு புதிய வானம் புதிய பூமியைப் பற்றிய மனச் சித்திரம் முழுமையாகும் வரை இந்த மாதிரியான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்றன.

சினோரிலிருந்து பாருகச்சம் துறைமுகம் ஐந்து காத தூரம். எதிர்த்துச் செல்லும் போது இதே தூரத்துக்கு மூன்று நாள் ஆயிற்று. இப்பொழுது நீரின் போக்கில் வந்ததால் ஒரே நாளில் பாருகச்சம் வந்துவிட்டன படகுகள். இரவு அங்கே தங்கினார்கள்.

இனி கடல் பயணம் தான். படகின் பாய்கள் விரிக்கப்பட்டன. காற்று சாதகமாக இருந்தது. கரையை ஒட்டியே பயணம் செய்தனர். பகல் முழுவதும் பயணம். மாலையில் நீர் வசதி உள்ள இடத்தில் தங்கி உணவு சமைத்து உண்டு, உறங்கி, மறுநாள் விடியற்காலையில் எழுந்து ஆண்கள் அனுஷ்டானங்களைச் செய்ய, பெண்கள் அன்றைய பகலுக்கான உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டனர். உணவும் நீரும் படகில் ஏற்றப்பட்டன. மீண்டும் பகல் முழுவதும் பயணம். இப்படி ஒரு மாதம் போக வேண்டும்.

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "வளவன் கனவு – 2"

  1. முதலாவதும் இரண்டாவதும் வாசித்துள்ளேன் 
    மிக நன்றாகச் செல்கிறது- தொடருவேன்.
    சிறப்புற அமைய இறையாசி நிறையட்டும்.

  2. நன்றாகச் செல்கிறது தாத்தா…

    களப்பிரர் காலம் பற்றி என்றதும் ஆர்வம் அதிகமாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.