இன்பமே எந்நாளும் துன்பமில்லை

சு. கோதண்டராமன்.

 

SHIVA_CHAKRA_by_VISHNU108ஒரு துன்பமில்லாத வாழ்வுதான் எல்லோரும் விரும்புகிறோம், ஆனால் யாரும் அப்படி வாழ முடிவதில்லை. துன்பத்துக்குக் காரணம் என்ன? ஆசையே என்று சமண சாக்கிய சமயங்கள் கூறுகின்றன. சமணத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த நாவுக்கரசர் ஆசைகளை முற்றிலுமாக ஒழித்துத் தானே துறவியாக வாழ்ந்தார்? அவருக்கு ஏன் சூலை நோய் ஏற்பட்டது? இது போன்ற விளக்கம் சொல்ல முடியாத துன்பங்களுக்குக் காரணம் முன்வினை என்கின்றன அச்சமயங்கள்.

நமக்கு வரும் துன்பங்களை இரு வகையாகப் பிரிக்கலாம்- நிகழ்காலத் துன்பங்கள், வருங்காலத் துன்பங்கள். நாளைய துன்பங்களின் நினைவே நடுங்க வைக்கிறது. அதைத் தான் அச்சம் என்கிறோம். நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் நாள் முழுவதும் ஆயுள் முழுவதும் எதாவது ஒன்றுக்கு அஞ்சித்தான் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அரசன் தீயநெறியில் நடப்பவனாக இருந்தால் அவன் கொடுக்கவிருக்கும் தண்டனைக்கு அஞ்சி, உயிர் போய்விடுமோ என்று அஞ்சி நாமும் பொய்மை ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் விளைவாக நரகத்தில் இடர்ப்பட வேண்டியுள்ளது.

அச்சமும் இன்பமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆயிரம் இன்பங்களுக்கு நடுவில் இருத்தி வைத்தாலும் எதிரில் அச்சம் தரும் பொருள் ஒன்று இருந்து விட்டால் அந்த இன்பங்களை அனுபவிக்க முடியுமா? எனவே துன்பத்தோடு கூட அச்சத்தையும் ஒழிக்க வேண்டும்.

முன் வினைப்பயனாக விளைந்த துன்பங்களை நீக்குவது எப்படி? அவற்றை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று சமணம் சொல்கிறது. அவற்றிலிருந்து தப்பிக்க முயன்றால் மீண்டும் பிறந்து அனுபவிக்க நேரிடும். இந்தப் பிறவியிலேயே அனுபவித்துவிட்டால் மறுபிறவி இல்லாமல் போகும்.

சமணத்துறவி நாவுக்கரசருக்குச் சூலை நோய் ஏற்பட்டது. அனுபவித்தால் தீர்ந்துவிடும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு அதை ஏற்றுக் கொண்டார். நோய் தீர்வதற்குப் பதிலாக, வர வர மிகுதிப்பட்டது. அவரால் தாங்க முடியவில்லை, கதறத் தொடங்கினார். தன் சகோதரியின் ஆலோசனையின் பேரில் சிவனைத் தஞ்சம் அடைந்தார். அதிகை வீரட்டானப் பெருமானிடம் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர், சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் என்று முறையிட்டார். நோய் நீங்கியது. அவர் ஒரு புதிய உண்மையைக் கண்டறிந்தார். துன்பம் நீங்க, ஆசையை ஒழித்தால் மட்டும் போதாது, ஆலமர் செல்வனிடம் முழுமையாகச் சரண் அடையவும் வேண்டும்.

ஆசையும் முன்வினையுமே துன்பத்துக்குக் காரணம் என்ற கொள்கையைச் சமண சாக்கியங்களிலிருந்து ஏற்றுக் கொண்ட சைவம் துன்பத்திலிருந்து விடுபட ஒரு தீர்வையும் அளித்தது.

நாவுக்கரசர் சமணம் விட்டுச் சைவத்திற்கு வந்து சேர்ந்தார். சமண குருமார்கள் அரசனிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தினர். அரசனின் பகைமை தொடர்ந்து துன்பம் தந்தது. நஞ்சு ஊட்டப்பட்டார், நீற்றறையில் தள்ளப்பட்டார், கடலில் தள்ளப்பட்டார். அவர் அஞ்சவும் இல்லை, துன்பப்படவும் இல்லை. உயிர் போவதைப் பற்றி அஞ்சுபவர்கள் தாம் அரசனுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும். இவருக்கோ நரகம் பற்றிய அச்சம் கூட இல்லை. எதற்கும் அச்சம் இல்லாததால் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்தப் பிணியும் நம்மைப் பிணிக்காது, இன்பமாக வாழ்வோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று முழங்கினார்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

தனக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதையும் அடுத்த பகுதியில் கூறுகிறார். அரசர்க்கெல்லாம் பேரரசனான சங்கரனுக்கு அடிமையாகத் தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டார் அவர். அவர் யாருக்கு, எதற்கு அஞ்ச வேண்டும்?

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

இந்த அச்சமின்மை அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் தொனித்தாலும் சில பாடல்களில் அது தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,திருநீறும், பிறையும், புலித்தோல் ஆடையும், பவளம் போன்ற நிறமும், காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், கெடில ஆற்று நீரும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியவர்கள் நாம். ஆதலின் நமக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை.

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

தனக்கு இன்றும் அச்சமில்லை, தன்னை அச்சுறுத்தக்கூடிய பொருள் நாளையும் தோன்றாது என்ற உறுதியைப் புலப்படுத்தி இப்படிப் பத்துப் பாடல்கள் பாடுகிறார்.

சிவபெருமானிடத்தில் சரணடைய வேண்டுமென்றால் உலகாயத இன்பங்களில் பற்று விட வேண்டும். தன் இடையில் கட்டிய கந்தல் தவிர வேறு எதையும் உடமையாகக் கொள்ளமல், கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் தூங்கியவர் அவர். என்னைக் காப்பது அவன் கடன், இறை பணி செய்வது என் கடன் என்று வாழ்ந்தவர். அவருடைய கீழ்வரும் பாடலைப் பாருங்கள். அம்பலங்களில் பாய் முதலியன இன்றி பூமி மேலேயே படுத்துக் கிடக்கிறார். இவரது பொறுப்பைச் சிவன் ஏற்றுக் கொண்டுவிட்டான். இவர் ஏன் பணக்காரர்களைத் துதி பாடி வாழவேண்டும்?

புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
உடன்கிடந்தாற் புரட்டாள் பொய்யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்
சொற் கேட்கக் கடவோமோ துரிசற்றோமே.

இதன் எதிரொலியைச் சங்கரரின் பஜகோவிந்தத்தில் கேட்கிறோம்.

ஸுரமந்திர தருமூலநிவாஸ: சய்யா பூதலமஜினம் வாஸ: I
ஸர்வபரிக்ரஹ போக த்யாக: கஸ்ய ஸுகம் நகரோதி விராக: II

கோயில் வாசலிலோ, மரத்தடியிலோ தங்கி, தரையில் படுத்து, மான் தோலை உடுத்தி, எல்லா சுகானுபவத்தையும் துறந்து வைராக்கியத்துடனிருப்பது அனைவருக்குமே சுகம்தானே!

சிவனுக்கு மீளா ஆளாக ஆகிவிட்டதால் அவருக்கு வருங்காலத் துன்பமாகிய அச்சம் நீங்கியது மட்டுமல்ல, நிகழ்காலத் துன்பங்களும் நீங்கிவிட்டன. கடந்த பிறவியில் செய்த வினைகளும் செயலிழந்து போய்விட்டன என்கிறார்.

அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லையில்லதோர் அடிமை பூண்டேனுக்கே.

படம் உதவி: http://ledi-arafely.blogspot.com/2012/04/blog-post_6249.html

About சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க