Tag: பழமொழி கூறும் பாடம்

  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து

     

    உரிமைதனிற் றம்மோ டுழந்தமை கண்டு
    பிரிவின்றிப் போற்றப் படுவார் – திரிவின்றித்
    தாம்பெற் றதனா லுவவார் பெரிதகழிற்
    பாம்புகாண் பாரு முடைத்து.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
    பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
    தாம் பெற்றதனால் உவவார்; பெரிது அகழின்,
    பாம்பு காண்பாரும் உடைத்து.

    பொருள் விளக்கம்:
    உரிமையோடு (நண்பர் ஒருவர் தனது துன்பத்திலும்) தன்னோடு வருந்தியதைப் பார்த்து, வேறுபாடு காட்டாது அவரால் பாதுகாக்கப்பட்டவர், நண்பரால் கிடைத்த உதவியை ஏற்று மனவருத்தமின்றி அதனால் நிறைவடைவார். (அவ்வாறு செய்யாமல், அதிக உதவி எதிர்பார்த்தால்) பெரிதும் ஆழமாகத் தோண்டும் பொழுது பாம்பையும் காண நேரலாம் (பேராசையால் பெரும் இழப்பை அடைவது போல, தொல்லை தருவதைத் தாளாது நண்பரும் சீற்றம் அடையக்கூடும்)

    பழமொழி சொல்லும் பாடம்: கிடைத்த உதவியில் மனநிறைவு கொள்வது சிறந்த நட்பின் பண்பாகும். பேராசை கொண்டு அதிக உதவி எதிர்பார்த்தால் பெரும் இழப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனையொத்த வழக்குகளாக, ‘புதையல் விரும்பித் தோண்டும் பொழுது பூதம் புறப்பட்டது’ என்றும், ‘எலி பிடிக்கும் எண்ணத்தில் புற்றினைத் தோண்ட பாம்பு கிளம்பியது’ என்றும் கூறும் வழக்கங்களும் உள்ளன. இக்கருத்தை விளக்கும் குறள்,

    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும். (குறள்: 700)

    பலநாள் பழகிய நட்பு என்று உரிமை எடுத்துக் கொண்டு, முறையற்ற செயலைச் செய்தால், அது அந்த நட்பிற்கு கேடு விளைவிக்கும் என்று கூறுகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்

     

     

    உற்றா லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான்
    மற்றவற் கொன்னாரோ டொன்றுமோ? – தெற்ற
    முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
    இரண்டே றொருதுறையுள் நீர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
    மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
    முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
    இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்.

    பொருள் விளக்கம்:
    ஒரு துன்பம் தனது தலைவருக்கு நேரிடுமானால் தனது உடலையே கொடுக்கும் வீரர் ஒருவர், மாற்றானாகிய எதிரியுடன் சென்று சேர்வாரா? (அவ்வாறு செய்ய விரும்ப மாட்டார்). தெளிவாக தம்முள் முரண்பாடுகள் கொண்ட வலிமையுள்ளவர் ஒன்றுபடுவரோ? மாறுபாடுகள் கொண்ட எருதுகள் இரண்டு இணைந்து ஒரே துறையில் நீர் உண்ணுவதில்லை (அவ்வாறே, தனது மன்னனிடம் மாறாத அன்பு கொண்ட வீரரும் பகைவனுடன் சேர விரும்ப மாட்டார்)

    பழமொழி சொல்லும் பாடம்: அரசைக் காக்கும் பொறுப்புள்ள வீரர் பகைவருடன் சென்று சேர்ந்து தனது நாட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்ப மாட்டார். வீரரின் இத்தகைய பண்பினை, இத்தகைய வீரர்கள் கொண்ட படையினை விவரிக்கும் வள்ளுவர்,

    அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை. (குறள்: 764)

    போரில் அழிவின்றியும், பகைவரின் வஞ்சத்திற்கு இறையாகாமலும்(அறைபோகாதாகி), தலைமுறை தலைமுறையாக அச்சம் தவிர்த்து வீரத்துடன் போரிடும் படையையே சிறந்த படை என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: தனிமரம் காடாத லில்

     

    எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
    கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
    நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
    தனிமரம் காடாத லில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     
    பதம் பிரித்து:
    எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
    கதித்துக் களையின் முதிராது தீர்த்து,
    நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீர
    தனி மரம் காடு ஆவது இல்.

    பொருள் விளக்கம்:
    எதிர்த்திடும் பகைவரின் பகைமையை அது தோன்றும் பொழுதிலேயே, விரைந்து நீக்கிப் பகை முற்றவிடாமல் அழித்து, தன்னை விரும்புமாறு பகைவரின் நண்பர்களையும் தம் வசப்படுத்திவிட்டால், தனித்திருக்கும் மரம் காடாகாது அல்லவா (அவ்வாறாகத் தனித்துவிடப்பட்ட பகைவர் தீமை செய்ய இயலாத வகையில் வலுவிழப்பார்)

    பழமொழி சொல்லும் பாடம்:
    பகைவரை வளரவிடாது, அவர் கொண்ட பகைமையை முளையிலேயே கிள்ளி பகையை அடியோடு அழித்துவிட வேண்டும். பகையை வளர விடாது வேரறுக்க வேண்டும் என்ற கருத்தினை வள்ளுவர்,

    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து. (குறள்: 879)

    முள் மரத்தை அது சிறிய செடியாக இருக்கும் பொழுதே வளரவிடாமல் அழித்துவிடவேண்டு. வளரவிட்டு அதை அழிக்க முற்பட்டால் அழிப்பவர் கையை பதம் பார்த்துவிடும் என்று, பகையை அழிக்கும் வழியைக் காட்டுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: செய்கொன்றான் உண்கென்னு மாறு

     

    வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
    பெற்றிலே மென்பது பேதைமையே – மற்றதனை
    எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
    செய்கென்றான் உண்கென்னு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால், ‘யாம் ஒன்றும்
    பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை
    எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
    ‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு.

    பொருள் விளக்கம்:
    வெற்றியைத் தரும் வேலினை ஏந்திய மன்னவன் ஆணை இட்டால், நான் அதனைச் செயல் படுத்தும் திறனைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லி மறுப்பது அறியாமையாகும். அவ்வாறின்றி அச்செயலை வருத்தமுறாமல் செய்க. அவ்வாறாகச் செய்தால், செய்க இச்செயலை என்ற மன்னவனின் கட்டளை உணவு உண்பதற்கு வழிவகுத்ததை ஒத்ததாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தனக்குத் திறமையில்லை என்று வருத்தம் கொள்ளது, அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை மறுக்காது நிறைவேற்றுவது, பசியின்றி வாழும் வகையில் ஒருவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். நம்மால் இது இயலாது என்று மனந்தளராது காரியமாற்றுவதால் விளையும் நன்மையைக் குறிக்கும் குறள்,

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

    நமக்குக் கடினமான செயல் இது என்று மனச்சோர்வு கொள்ளாது, முயன்று செயலாற்றினால், அதன் விளைவு பெருமை தரத் தக்க வகையில் அமையும் என்று விளக்குகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: செய்தானை ஒவ்வாத பாவையோ இல்

     

    செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
    பயிரறு பக்கத்தார் கொள்வர் – துகிர்புரையும்
    செவ்வாய் முறுவனற் சின்மொழியாய்! செய்தானை
    ஒவ்வாத பாவையோ வில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
    பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
    செவ்வாய் முறுவல் நல் சில் மொழியாய்!-செய்தானை
    ஒவ்வாத பாவையோ இல்.

    பொருள் விளக்கம்:
    குற்றமற்ற செங்கோலை ஏந்திய, சினம் கொண்ட மன்னவன் இழைக்கும் தீமைக்கு, குற்றமற்ற, அருகில் உள்ள அமைச்சர்களே பொறுப்பாவார்கள். பவளம் போன்ற செவ்விதழ் கொண்ட வாயில் புன்முறுவல் துலங்க இனிய சில மொழிகளைக் கூறும் பெண்ணே, (இது எவ்வாறெனில்) ஓவியர் தம் மனது விரும்பாத ஓவியத்தை வரைவதில்லை அன்றோ.

    பழமொழி சொல்லும் பாடம்:  ஓவியர் விரும்பியது போலவே அவர் தனது ஓவியப்பாவையை வரைவார், அது போல அமைச்சர் வழி நடத்துவதற்கு ஏற்பவே அரசனின் செயல்கள் அமையும். எனவே, அரசன் செய்யும் தீங்குகளுக்கு அருகிருந்து அவனை இடித்துரைத்துத் திருத்த வேண்டிய அமைச்சர்களே பொறுப்பாவார். அறிவுரை கூறவேண்டியவர் கடமையைப் பற்றிக் கூறும் வள்ளுவர்,

    அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன். (குறள்: 638)

    அறிஞர் சொல்லும் அறிவுரையையும் கேட்காத, சொந்த அறிவும் இல்லாத மன்னவனுக்கு, உடனிருக்கும் அமைச்சரே நல்வழி காட்டி அறிவுறுத்தக் கடமைப் பட்டவர் என்று கூறுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: முறைமைக்கு மூப்பிளமை இல்

     

    சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
    காலை கழிந்ததன் பின்றையு – மேலைக்
    கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
    முறைமைக்கு மூப்பிளமை யில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
    காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
    கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
    முறைமைக்கு மூப்பு இளமை இல்.

    பொருள் விளக்கம்:
    மிகவும் முயன்று மறைத்துப் பேசி, அறிவுடையார் இது குற்றமன்று என்றாலும், காலம் கடந்த பின்னரும், முன்னர் பசுவின் கன்றைக் கொன்றவனை, அவனது தந்தையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான், (எனவே) நீதி வழங்க முதுமையடைந்தவர் இவர், இளமையானவர் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை.

    சிலப்பதிகாரம், புறநானூறு, பழமொழி, மூவருலா, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மனுநீதிச்சோழனின் கதை இப்பாடலில் எடுத்தாளப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்த மனுதீதிச்சோழன் கதையினை அடிப்படையாகக் கொண்டு அரசனின் செங்கோன்மை நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. “முறைமைக்கு மூப்பு இளமை இல்” என்பதற்கு விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள் வெவ்வேறு முறைகளிலும் விளக்கமளித்துள்ளார்கள்.

    கன்றை இழந்த பசு ஒன்று நீதி வேண்டி ஆராய்ச்சிமணியினை அடிக்க, அதன் காரணத்தை விசாரித்து, அந்தப் பசுவின் கன்றின் மீது தேரோட்டிக் கொன்றவன் தனது மகன் என அறிகிறான் அரசன். அமைச்சர்கள் தங்களது நாவன்மையால் அது குற்றமல்ல என மறுக்க முற்படுகிறார்கள். அவர்கள் அரசன் ஆணையை ஏற்று இளவரசனைத் தேர்க்காலில் ஏற்ற மறுத்துப் பின்வாங்கினாலும், அரசன் பசுவுக்கு நீதிவழங்கும் பொருட்டு, கன்றினைக் கொன்ற தனது மகனின் மீது தானே தேரோட்டி பசுவுக்கு நீதி வழங்கினான்.
    நீதி வழங்கும்பொழுது குற்றவாளி ஓர் இளவயதினன் என்பதற்காகக் கருணை காட்டவில்லை என்ற வகையிலும் விளக்கமளிக்கப்படுகிறது.

    மாற்று விளக்கமாகக் கூறப்படுவது பசு ஆராய்ச்சிமணி அடித்து நீதி கேட்டதைப் பற்றிய கதைக் கருத்தை முன் வைக்கவில்லை. இளவரசன் கன்றினைத் தேரேற்றிக் கொன்றதைக் கற்றறிந்த அமைச்சர்கள் பலவாறு பேசி மறைத்துவிடுகிறார்கள். பின்னொருநாளில் அரசனுக்குத் தனது மகன் இழைத்த குற்றம் தெரிய வருகிறது. காலம் கடந்துவிட்டாலும் முன்னாளில் தனது மகன் செய்த குற்றத்திற்காக, அவன் மீது தேரேற்றி தண்டனை வழங்குகிறான் மன்னவன். காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்படுகிறது.
    காலம் கடந்துவிட்டாலும் குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற விளக்கமும் அளிக்கப்படுகிறது.

    பழமொழி சொல்லும் பாடம்: முதியவர்  அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல. குற்றம் செய்தவர் யார் என அவர் பின்புலம் கண்டு மயங்காது, நடுவுநிலை தவறாது நீதி வாங்க வேண்டுமென்பதை வள்ளுவர்,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

    நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நடுவுநிலைமை கொண்டு வழங்கப்படுவதே நேர்மையான தீர்ப்பாகும். எனவே,

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

    என்ற குறள் விளக்குவது போல எப்பக்கமும் சாயாமல், நடுவுநிலை தவறாது, துலாக்கோல் போல சீர்தூக்கிப் பார்த்து நியாயம் வழங்குவதே நேர்மையான சான்றோருக்கு அழகு.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: அறிவினை ஊழே அடும்

     

    சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
    பட்ட விருத்தம் பலவானால், – பட்ட
    பொறியின் வகைய கருமம் அதனால்
    அறிவினை ஊழே அடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
    பட்ட விருத்தம் பலவானால், பட்ட
    பொறியின் வகைய கருமம், அதனால்,-
    அறிவினை ஊழே அடும்.

    பொருள் விளக்கம்:
    குறிப்பிட்டுச் சொல்லப்படும் பெரிய அறிஞர்கள் இடத்திலும் உள்ள குற்றங்கள் பலவாக இருக்குமானால், (அது அவர்களது) முன்வினைப்பயன் செய்த செயலாகும். ஆகையினால் அறிவினை விதி அழித்து பேதைமையாக்கும்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    பேரறிவு கொண்டோரும் விதியின் காரணத்தால் மதியிழந்து குற்றம் செய்வார்கள். விநாச காலே விபரீத புத்தி என்பது வடமொழி கூறும் வழக்கு. ஒருவர் கெடும் நேரம் காலம் வந்தால் மதிக்கெட்டு குற்றமிழைத்து அழிந்து போவார்கள். பிறர் போற்றும் அறிஞர்களும் தவறு செய்வதற்கு அவர்களது தலையெழுத்தே காரணம், விதியின் வழி அவர்களது மதி சென்றது என்பதைத் திருக்குறள்,

    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை. (குறள்: 372)

    ஒருவர் சிறுமைப்பட வேண்டிய விதியிருந்தால் அவர்கள் அறிவழிந்து போவார்கள், அதுவே அவர்கள் சிறப்படைய வேண்டிய நேரமாக இருக்குமானால் அறிவாற்றலால் உயர்வடைவர் என்று விளக்குகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு

     

    தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
    நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் – இன்னொலிநீர்
    கன்மேல் இலங்கு மலைநாட! மாக்காய்த்துத்
    தன்மேல் குணில்கொள்ளு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
    நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
    கல் மேல் இலங்கும் மலை நாட!-மாக் காய்த்துத்
    தன்மேல் குணில் கொள்ளுமாறு.

    பொருள் விளக்கம்:
    பழமையான நூல்பல கற்பதால் மேன்மைதரும் துணிவு ஒன்றும் பெறாதவர், நன்மை தரும் வகையில் மாண்பு கொண்ட செல்வம் பெறுவாரெனில்; இனிமையான ஓசையுடன் நீரானது கற்பாறைகள் மேல் பாயும் அருவிகள் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, (அவரது நிலையானது) மாமரம் செழித்து காய்கள் பல கொண்டதால் தன்மேல் கல்லெறி படுவது போன்ற நிலையாக அமைந்துவிடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: கல்வியறிவு பெறாத ஒருவர் முயன்று செல்வம் பல சேர்த்தாலும், அதனைக் காப்பாற்றும் வழி அறியாததால், பிறர் அவரது செல்வதை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் நிலையில் தள்ளப்படுவார் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வியறிவற்ற காரணத்தால், தான் பெற்ற செல்வதைத் தேவையுள்ளவர் நன்மை பெரும் வகையில் பயன்படுத்தத் தெரியாத, ஈகையின் மேன்மையை உணராத ஒருவரின் செல்வம், அவருக்கும் பலனின்றி பிறகு தீயார் கொள்ளை கொள்ளும் நிலையை அடையும் என்றும் பொருள் கொள்ளலாம்.

    எனவே பொதுவாகக் கொள்வோமானால், அறிவின்மை காரணமாக செல்வதை எவ்வாறு பாதுகாப்பது என்றோ; அல்லது எவ்வாறு தனக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையில் நன்முறையில் செலவழிப்பது என்றோ அறியாத ஒருவரின் செல்வம், அவருக்குப் பலன் தராமல் தீயவர் கைப்பற்றும் நிலையை அடையும். அறிவில்லாதவர் பெற்ற செல்வமானது, காய்த்த மரம் கல்லடி பட்டு துன்பம் பெறுவது போல அவருக்கும் அவரது பொருளுக்கும் துன்பத்தையே விளைவிக்கும், இக்கருத்தைக் குறள்,

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு. (குறள்: 408)

    அறிவற்றோர் பெற்ற செல்வம், கற்றறிந்த நல்லவர் ஒருவரை வருத்தும் வறுமையை விடவும் பெரிதும் துன்பம் தருவதாகும் என்று கூறுகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: இறந்தது பேர்த்தறிவார் இல்

     

    மறந்தானுந் தாமுடைய தாம்போற்றி னல்லாற்
    சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
    கறங்குநீர் காலலைக்குங் கானலஞ் சேர்ப்ப!
    விறந்தது பேர்த்தறிவா ரில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
    சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
    கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
    இறந்தது பேர்த்து அறிவார் இல்.

    பொருள் விளக்கம்:
    மறந்தும், (அறிவுடையவர்) தனது பொருளை தானே போற்றிப் பாதுகாப்பதைச் செய்யாமல், சிறந்த உறவினர் இவரென்று தகுதியற்ற ஒருவரிடம் ஒப்படைக்க மாட்டார். ஒலிக்கும் அலைகள் கொண்ட நீர்நிலைகளும், அதன்கண் அழகிய சோலைகளும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, கைநீங்கிய பொருளை மீட்டுத் தருவதை அறிந்தவர் இல்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: நம்பிக்கைக்குரியவர் இவரென்ற எண்ணத்தில் பிறரிடம் தமது பொருளை ஒப்படைக்காமல் தாமே பாதுகாப்பதுதான் அறிவுடையவர் செயலாகும். நமது கையை விட்டு நீங்கிய பொருள் மீண்டும் கிடைக்கலாம் என்பதை உறுதியாகக் கூற இயலாது. நல்லவர் இவரென்று நம்பிச் செய்வதிலும் பிழை நேரக்கூடும் என்பதை வள்ளுவர்,

    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

    ஒருவருடைய பண்புகளை தெளிவாக அறியாமல், நல்ல செயல் என்று எண்ணிச் செய்யும் செயலிலும் பிழைகள் நேரும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: கடலுள்ளும் காண்பவே நன்கு

    ஒல்லாத வின்றி உடையார் கருமங்கள்
    நல்லவாய் நாடி நடக்குமாம் – இல்லார்க்
    கிடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
    கடலுள்ளும் காண்பவே நன்கு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஒல்லாத இன்றி, உடையார் கருமங்கள்
    நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
    இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!
    கடலுள்ளும் காண்பவே, நன்கு.

    பொருள் விளக்கம்:
    இயலாமல் போனது என்று (தடையேதும்) இல்லாமல், செல்வந்தரின் காரியங்கள் நல்ல முறையில் இனிதே நடந்தேறும். பொருள் இல்லாதவருடைய செயல்கள் துன்பமாகவே முடியும். சிறந்த நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, (பொருள் உள்ளவர்) கடல்தாண்டி சென்றாலும் காரியத்தில் நன்கு வெற்றி காண்பார்.

    பழமொழி சொல்லும் பாடம்: பொருள் உடையவர் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நன்கே முடியும். காரியத்தின் வெற்றி தோல்விக்கு பொருளாதார நிலை காரணமாக அமைகிறது. இதனையே வள்ளுவர்,

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று. (குறள்: 753)

    பொருள் என்ற அணையாவிளக்கைப் பெற்றிருப்பவரால், எந்த தேசத்திற்குச் சென்றாலும் இருள் என்ற துன்பத்தை பொருளால் விரட்டி வெற்றி காண முடியும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: யாரானும் சொற் சோராதாரோ இலர்

    நற்பால கற்றாரு நாடாது சொல்லுவ
    ரிற்பால ரல்லா ரியல்பின்மை நோவதென்?
    கற்பா லிலங்கருவி நாடமற் றியாரானுஞ்
    சொற்சோர் விலாதாரோ வில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     
    பதம் பிரித்து:
    நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்;
    இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?
    கற்பால் இலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
    சொல் சோர்விலாதாரோ இல்.

    பொருள் விளக்கம்:
    நல்ல குடியில் பிறந்த கற்றறிந்தவரும் (சில நேரங்களில்) ஆராயாமல் தவறானவற்றைச் சொல்வதுண்டு; (அவ்வாறிருக்க) நற்குடியில் பிறவாதவர் அவரது இயல்பாக இன்னாதவை கூறுவதை எண்ணி வருந்துவதில் என்ன பயன்? மலைப்பாறைகளின் இடையே வீழும் அருவி உள்ள நாட்டைச் சேர்ந்தவரே! யாராக இருப்பினும் சொல் குற்றம் செய்யாதவர் இல்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: நற்குடியில் பிறந்த, நற்பண்புகள் கொண்ட கற்றறிந்த சான்றோரும் கூட சிலநேரங்களில் கூறத் தகாத தவறான சொற்களை சிந்தித்துப் பார்க்காமல் சொல்லிவிடுவதுண்டு. இக்கருத்தை வள்ளுவர்,

    அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு. (குறள்: 503)

    அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த, குற்றமற்ற ஆன்றோரை ஆராய்ந்து பார்த்தால், அவர்களிடமும் அறியாமை என்ற குற்றம் இருப்பது தெரியவரும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: பறைக்கண் கடிப்பிடு மாறு

    வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப,
    உள்ளமாண் பில்லா ஒருவரைத் – தெள்ளி
    மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்,
    பறைக்கண் கடிப்பிடு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
    உள்ளம் மாண்பு இல்லா ஒருவரைத் தெள்ளி,
    மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்-
    பறைக்கண் கடிப்பு இடுமாறு.

    பொருள் விளக்கம்:
    (அளவிட இயலாத, மிகுந்த) வெள்ளம் போன்ற நற்பண்புகள் யாவும் கொண்ட உறவினர்கள் இருந்திட, உள்ளத்தில் நற்பண்பு இல்லாத ஒருவரும் உடனிருந்தால், தெளிவாக ஆராய்ந்து, மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைப் பேசும்பொழுது பிரித்து, அவரை வெளியேற்றத் தவறினால், அது (தமுக்கு அடிப்பது போல) பறையின் மேல் சிறுதடி கொண்டு அடிப்பதாகும் (தகவலை அக்கயவர் பரப்பிவிடுவார்).

    பழமொழி சொல்லும் பாடம்: மறைக்கப்படவேண்டியவற்றைப் பேசும்பொழுது, இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத குணமுள்ளவரை விலக்காவிட்டால், தமுக்கடிபடிப்பது போல அவரே இரகசியத்தைப் பரப்பிவிடுவார். இதனைக் குறள்,

    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள்: 1076)

    தாம் அறிந்த இரகசியங்களை வலியச் சென்று பிறருக்குப் பரப்பிவிடும் கயவரை, செய்தி அறிவிக்க அடிக்கப்படும் பறைக்கு ஒப்பானவர் என்று கூறுகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: உண்ணோட் டகலுடைப்பார்

     

    தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
    தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் – டேமாப்ப
    முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
    யுண்ணோட் டகலுடைப் பார்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப்பட்டாரைத்
    தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
    முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
    உண் ஓட்டு அகல் உடைப்பார்.

    பொருள் விளக்கம்:
    தனது சொந்த முயற்சியில் வாழும் திறனற்றவர், தான் வாழ உதவி அடைக்கலம் தருபவரையும் தீயவைக் கூறி பகைத்துக்கொண்டு, (அதனால் தனக்கு ஊறு ஏற்படலாம் என அஞ்சி) பாதுகாப்பிற்காக முன்னரே தப்பியோடி விடுபவர், பகைமை கருதி பயந்து ஓடுபவர், தான் பிச்சை பெற்று உண்ண உதவிய மண்கலத்தை உடைத்தவர் (போன்ற அறிவிலியாவார்)

    பழமொழி சொல்லும் பாடம்:
    தனக்கு வாழ்வாதாரமாக இருப்பவரைப் பகைத்துக் கொள்பவர் அறிவற்றவர். தனக்கு வாழ ஆதரவு தருபவரை தீயவை கூறி பகைத்துக் கொள்ளும் அறிவற்றவரை திருவள்ளுவர் பேதைமை நிறைந்தவர் என்று கூறுகிறார்,

    பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
    ஊதியம் போக விடல். (குறள்: 831)

    அறிவற்ற செயல் என்பது எது என்றால், தனக்குத் தீமை தருவதைக் கையாண்டு நன்மையைத் தொலைத்துவிடுவதாகும் என்பது குறள் அறிவுறுத்தும் அறவுரை.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: இளையோனே யாயினும் மூத்தானே யாடுமகன்

    கற்றதொன் றின்றி விடினும் கருமத்தை
    அற்ற முடிப்பான் அறிவுடையான்: – உற்றியம்பும்
    நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையானே யாயினும்
    மூத்தானே யாடு மகன்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
    அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
    நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும்,
    மூத்தானே, ஆடு மகன்.

    பொருள் விளக்கம்:
    முறையான கல்வியறிவைப் பெற்றிராவிட்டாலும், செய்ய வேண்டிய செயலைச் சோம்பலின்றி செய்து முடிப்பவர்தான் அறிவுடையவர் ஆவார். நிறைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளப் பெருக்கெடுத்த நீர்நிலைகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, இளவயதினராக இருப்பினும் முதிர்ச்சி அடைந்தவராகவே கருதப்படுவார் சிறப்பாகச் செயலாற்றுபவர்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    கல்வியறிவு இல்லாதிருப்பினும் திறம்படச் செயலாற்றுபவரே அறிவுடையவர் எனக் கருதப்படுவார். ஏற்றுக் கொண்ட செயலை முடிக்கும் பொருட்டு இடைவிடாது நல்ல முயற்சி செய்யும் ஆள்வினை உடையவரே அறிவுடையவர் என்பதை வள்ளுவர்,

    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி. (குறள்: 618)

    செய்யவேண்டிய சூழ்நிலையோ வாய்ப்போ இல்லாதிருப்பது ஒரு குறையல்ல, ஆனால் அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமையே ஒருவருக்குப் பெரும்பழியைத் தரும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கணையிலும் கூரியவாம் கண்

    யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித்
    தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் – ஆம்பல்
    மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
    கணையிலுங் கூரியவாம் கண்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
    தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
    மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
    கணையிலும் கூரியவாம் கண்.

    பொருள் விளக்கம்:
    நாம் தீமைகள் செய்ததை மலை மறைத்தது விட்டது (போன்று அவை மறைவில் உள்ளது) என்று நினைக்கும் தீயவர், தங்கள் தீச்செயல் விளைவு பற்றிய தெளிவற்றவர். ஆம்பல் மலர்கள் மணவிழா இல்லங்களில் மணம் பரப்பிட, மிகுத்த அலைகளையுடைய நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, அம்பையும் விடக் கூர்மையானவை கண்கள் (அவை குற்றத்தைக் கண்டுவிடும் என அறிக).

    பழமொழி சொல்லும் பாடம்:
    பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அவரது முகத்தைக் கொண்டே கூரிய பார்வை கொண்டவர் உணர்ந்து விடுவார். குற்றங்களை அத்தகையவரிடம் இருந்து மறைக்க இயலாது. இக்கருத்தை வள்ளுவர்,

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற. (குறள்: 710)

    நுட்பமான அறிவுடையோர் எனப்படுபவர், பிறர் மனக்கருத்தை அளக்கப் பயன்படும் கருவி அவரது கண்களைப் போன்றல்லாது வேறொன்று இல்லை என்கிறார். மேலும்,

    குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண். (குறள்: 705)

    ஒருவரது அகத்தில் உள்ளதை அவரது முகமே காட்டிக் கொடுத்துவிடும் என்கின்றபோது, அந்த முகக்குறிப்பை உணர்ந்து கொள்ள இயலாத கண்கள் இருந்தென்ன பயன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

    Share