Tag: நிர்மலா ராகவன்

  • நலம் .. நலமறிய ஆவல் … (35)

    நிர்மலா ராகவன்

    பெண்ணியம் என்பது

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2

    `பெண்ணியம் என்றால் என்ன?’ என்று தமிழ்நாட்டிலுள்ள ஒரு கல்லூரி மாணவன் கேட்டான்.

    `அது என்ன இல்லை என்பதைச் சொல்கிறேன்,’ என்றுவிட்டு, `ஆண்கள் ப்ரா அணிகிறார்களா? நாங்கள் மட்டும் எதற்கு அணியவேண்டும் என்று உள்ளாடையைக் கொளுத்துவது பெண்ணியம் இல்லை!’ என்று நான் கூறியதும், அந்த `கெட்ட’ வார்த்தையைக் கேட்டோ, என்னவோ, அரங்கத்திலிருந்த எல்லா இளவயதினரும் உரக்கச் சிரித்தார்கள்.

    ஆண்களும் பெண்களும் சமூகத்தில், கல்வியில், பொருளாதாரத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பெண்ணியம்.

    பெண்ணியவாதியான ஒரு பெண், ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்பவள், ஆண்களை வெறுக்கிறாள் என்று அர்த்தமில்லை. தன்னை மதித்து நடக்கும் ஆண்களிடம் நட்பாகப் பழகுவாள். தானும் ஒரு பொருட்டுதான் என்று எண்ணி, பிறர் தன்னை நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவ்வளவுதான்.

    `நாங்கள் பெண்ணியவாதிகள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை!’ என்ற மமதையுடன் சிகரெட் புகைப்பதும், விஸ்கி குடிப்பதும், பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும்தான் சுதந்திரம் என்று முதலில் நினைப்பவர்கள்கூட முப்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டால், ஒரு வெறுமையை உணர்கிறார்கள்.

    `ஆண்கள் இல்லாமலே நாங்கள் வாழ்ந்து காட்ட முடியும்!’ என்ற சவால் அர்த்தமற்றது. ஏதோ காரணத்திற்காகத்தானே இருபாலரும் இவ்வுலகில் பிறந்திருக்கிறார்கள்?

    நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட பல பெண்கள், “சிறு வயதில், ஆசிரியை அடித்தார், `நன்றாகப் படி!’ என்று. குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் அப்பா கோபித்தார். படிப்பு, போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் அம்மா மகிழ்ந்தாள். ஆனால், அவர்கள் சொற்படியெல்லாம் கேட்டு, மிக நன்றாகப் படித்து, ஆண்களுக்குச் சரிசமமாக பெரிய உத்தியோகம் அமைந்தாலும், சுதந்திரமாக இருந்தால் பழிச்சொல் வருகிறதே!” என்று என்னிடம் அரற்றியிருக்கிறார்கள்.

    சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை உண்டே!

    கதை: ஒரு பெண்ணியவாதியுடன் நெடுநேரம்

    என்னுடன் பள்ளியில் படித்த கஸ்தூரி மேற்கூறியபடி — மனம் போனபடியெல்லாம் — நடந்தபோது, நெருங்கிய உறவினர்கள்கூட அவளைத் தம் வீட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதித்தார்கள். தந்தையோ, அவளுடன் பேசுவதையே விட்டார். அவருடைய உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாய் மட்டும் அன்பாக இருந்தாள்.

    எனக்குத் திருமணமானபின் அவளைச் சந்தித்து நெடுநேரம் அவள் வாழ்க்கைமுறையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஆரம்பப்பள்ளியிலிருந்தே இருவருக்கும் பழக்கம். அவள் சொல்வதையெல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, `என்றாவது உன் கதையை எழுதுவேன்!’ என்றதும், பலக்கச் சிரித்தாள்.

    `உன்னிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தோன்றுகிறது!’ என்றவளிடம், `உன் அம்மாவுக்கு உன் நடத்தையால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை யோசித்தாயா?’ என்று கேட்டேன்.

    `வாய்ப்பு இருந்திருந்தால், அம்மாவும் இப்படித்தான் நடந்திருப்பார்கள்!’ என்றாள் கஸ்தூரி, அலட்சியமாக.

    உயர்கல்வி மற்றும் உத்தியோக நிமித்தம் தனித்து வாழும் வாய்ப்பு கிடைத்தால் யார் குறுக்கீடும் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றெண்ணும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சமூகத்தின் எதிர்ப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

    `எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த ஆண்கள் கல்யாணமாகி, தம் மனைவியுடன் எங்காவது செல்லும்போது நான் எதிர்ப்பட்டால், தெரியாதமாதிரி நடப்பார்கள். அது ஏன்?’ என்று கேட்டாள் கஸ்தூரி.

    நான் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் ஆண். சற்று முன்னேபின்னே நடக்க அவர்களுக்குச் சமூக அங்கீகாரம் இருக்கிறது. ஆனால், `சுதந்திரம்’ என்ற மயக்கத்துடன் ஒரு பெண் தான்தோன்றித்தனமாக நடக்கத் துணிந்தால், அவளுக்குத்தான் அவப்பெயர்.

    பெண்களை மதியுங்கள்

    ஒரு பெண் எப்படி நடக்கவேண்டும் என்று யார் யார் தீர்மானிக்கிறார்கள்?

    பதில்: சமூகத்தை ஒட்டி நடக்கும் குடும்பத்துப் பெரியவர்கள், இலக்கியம் மற்றும் திரைப்படங்கள்.

    பெரும்பாலான தமிழ்ப்படங்களில் அப்பா என்பவர் மகனைக் கரித்துக் கொண்டிருப்பார். அம்மா பின்னால் சோகமாக நின்று, அவனுக்குப் பரிவாள். ஏனெனில் அவன் ஆண்மகன். அவனைப் பெற்றெடுத்ததால் சமூகத்தில் அவளுடைய மதிப்பும் உயர்ந்துவிட்டது என எண்ணுகிறாள்.

    அந்த மகனுக்குக் கல்யாண வயது வரும்போது, தனக்கு வாய்ப்பவளும் தன் தாய்போல் தன்னை எந்த நிலையிலும் ஆதரிப்பவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுகிறது. அதற்கு அவனுக்கு அடங்கியவளாக இருக்கவேண்டும்.

    பொதுவாக, ஆண்கள் எப்படி நடக்கவேண்டும் என்று அவர்களுக்கு இன்னொரு விதமாகவும் கற்பிக்கப்படுகிறது. `பொம்பளைமாதிரி அழாதே!’ என்று ஒரு சிறுவனைக் கண்டிக்கும்போது, பெண்களைவிட தான் உயர்த்தி என்று அவன் எண்ண வழிகோலுகிறோம்.

    அதனாலேயே தங்களைவிட அதிகமான தன்னம்பிக்கையோ, அறிவுத்திறனோ ஒரு பெண்ணுக்கு இருந்தால், `இனிமே நாங்கதான் புடவை கட்டிக்கணும்!’ என்று அயர்வார்கள் சிலர். பெண்களின் உயர்வு அவர்களை அச்சவைக்கும், குறுகவைக்கும், தன்மையா?

    கதை: தேவை –_கல்யாணம்

    வினுதா கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தவள். அவளுடைய படிப்பைவிட உயர்ந்த கல்வி கற்றிருந்த மணமகன் அமைவது கடினமாகப்போக, தனக்கும் திருமணம் என்று ஒன்று நடக்குமா!’ என்ற ஏக்கம் பிறந்திருக்க வேண்டும்.

    இறுதியில் ஒருவர் அமைந்தார் — அவள் தன் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். பெண் என்றால் இல்லற வாழ்க்கை, குழந்தைகள், சமையல் என்று தன் தாயைப் பார்த்துக் கற்றிருந்தவளுக்கு அது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. மகிழ்ச்சியுடன் உடன்பட்டாள்.
    `நான் சம்பாதிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லே. அவரே கைநிறையச் சம்பாதிக்கிறார்!’ என்று பெருமை பேசிக்கொண்டாள்.

    செக்கு மாடு

    திருமணமானபின்னரும் நான் வேலைக்குப் போகிறேன் என்று நான் சொல்லக் கேட்ட ஒரு முதியவள், `ஆக, ஒன் ஆத்துக்காரர் சம்பாதிச்சு ஒனக்கு சாப்பாடு போடலே?’ என்று கேட்டாள், கேலியாக.

    இவர்களைப் போன்றவர்களுக்கு, எந்த ஒரு தேவைக்கும் ஆணின் கையை எதிர்பார்ப்பது பெருமை; அதனாலேயே உயர்கல்வி பெண்களுக்குக் கூடாத ஒன்று. ஏனெனில் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து, `உரிமை’ என்று ஏடாகூடமாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சமூகத்தில் இதுவரை கடைப்பிடித்தது எல்லாவற்றிற்கும் அர்த்தம் இல்லாது போய்விடுமே!

    பெண்கள் வீட்டிலேயே இருந்த காலத்தில், தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் கணவனை எதிர்பார்த்திருந்ததால், முடிந்ததோ, இல்லையோ, எல்லா வேலைகளையும் தாமே செய்தார்கள்.

    அவர்களிலும் சிந்திக்க அஞ்சாத ஓரிருவர், `இது என்ன வாழ்க்கை! எல்லா நாட்களும் ஒரேபோல!’ என்று அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், `இப்படித்தான் நடக்க வேண்டும்,’ என்ற கட்டாயம் இருந்ததால், சுயவிருப்பம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிற்று. தனித்துவம் என்ற வார்த்தைக்கே அவர்கள் அகராதியில் இடமில்லை. புதுமையாகச் சிந்தித்தால் பழி வருமோ என்ற அச்சம் வேறு. அப்படி நடந்துவந்த ஒரு பெண்மணி கூறினார், `நாங்க செக்கு மாடு மாதிரி ஒரே இடத்திலே சுத்திச் சுத்தி வரோம்!’

    பெண்ணிய ஆண்கள்

    `நாள்பூராவும் வேலை செய்துவிட்டு வந்து எனக்கு அசதியா இருக்கு,’ என்று மனைவி கூற, அன்றையிலிருந்து துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போடுவதைத் தன் வழக்கமாக ஏற்றார் கணவர். குழந்தை வளர்ப்பிலும் மகிழ்ச்சி கொண்டார். `பெண்டாட்டி தாசன்!’ என்று பிறர் கேலி செய்தார்கள். அவர்கள் புரியாதவர்கள். எப்போதும் பெண்களைவிட உயர்ந்த நிலையிலேயே இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஆண்களின் நிம்மதியைத்தான் பறித்துவிடாதா?

    இருவரும் உயரலாம்

    வாழ்க்கை என்னும் தராசில், ஆணோ, பெண்ணோ கீழேயே இருக்க நேர்ந்தால், அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? இல்லை, `நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?’ என்று ஆராயும் துணிவுதான் அவர்களிடம் இருக்க முடியுமா? `நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லை?’ என்று அடிக்கடி பிறரிடம் கேட்பார்கள் இவர்கள்.

    `நீயும் மேலே வா!’ என்று ஒரு பெண்ணை, அவள் மனைவியோ, மகளோ, முன்னுக்கு வர வழிவகுக்கும்போது உடன் இருக்கும் ஆணும் உயர்கிறான்.

    இதிலும் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. அவனிடமிருந்து மாறுபட்டிருக்கும் பிறர், `பெண்களுக்கு ரொம்ப இடம் கொடுத்தால், தலைக்குமேல் ஏறுவார்கள்!’ என்று பயமுறுத்துவார்கள்.

    யோசித்தால், இதுவும் உண்மைதான் என்றே தோன்றுகிறது. அபூர்வமாகத் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளால், பிற பெண்களிலிருந்து அவள் வித்தியாசப்பட்டிருப்பதால், அவளுடைய சுயமதிப்பு கூடிவிட, எல்லோர்மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கிறாள்.

    ஆனால், அவ்வப்போது அப்பெண்கள் செய்வது ஏதாவது ஏன் சரியில்லை என்று சொன்னால், சிந்தித்து, தம் தவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (34)

    நிர்மலா ராகவன்

    சமமாக நடத்த முடியுமா?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2
    சில பெற்றோர் , `நான் என் குழந்தைகள் மூவரையும் சமமாக நடத்துகிறேன்!’ என்று பெருமையாகக் கூறுவது நடக்காத காரியம். ஏனெனில், முதலாவதாகப் பிறந்த குழந்தையின் குணாதிசயங்கள் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளிடமிருந்து வேறுபடும். இது இயற்கை நியதி. அத்துடன், வயதுக்குத் தகுந்தாற்போல் திறமைகளும் இருக்குமே! இவர்கள் அனைவரையும் சமமாக நடத்த எப்படி முடியும்?

    வயதுக்கேற்ற வேலை

    ஒரு குடும்பத்தில் குழந்தைகளை நடத்துவது — வீட்டு வேலையோ, பாராட்டோ, தண்டனையோ –அவரவர் வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி இருக்கவேண்டும். உதாரணமாக, எட்டு வயதான மகன் தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது அவன் வேலை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவனுடைய மூன்று வயது தம்பிக்கோ, தங்கைக்கோ அது கடினமான வேலை. அதற்குப் பதிலாக, அவர்களால் எளிதில் செய்யக்கூடிய வேலைகளைக் கொடுத்தால், அவர்களுக்கும் சுயமதிப்பு பெருகும்.

    `அப்படி என்ன வேலை இருக்கிறது?’ என்கிறீர்களா? காலணிகளை வரிசையாக அடுக்கிவைப்பது, சப்பாத்தி, தோசை போன்றவற்றை ஒரு தட்டில் போட்டு அவர்களிடம் கொடுத்து, பிறருக்குப் `பரிமாற’ச் செய்வது இப்படி எதையாவது கொடுத்தால், மிகப் பெருமையுடன் செய்வார்கள். `எவ்வளவு சமர்த்தா வேலை செய்யறது, பார்!’ என்று பாராட்டிவைத்தால், எந்த வயதிலும் பொறுப்பு, வேலை என்றால் அஞ்சி ஓடமாட்டார்கள்.

    பாராட்டால் மனவலிமை

    வயதுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லாத பொறுப்புகளைச் சிறுவர்களுக்குக் கொடுக்கும்போது தவறுகள் நிகழலாம். தவற்றைப் பெரிதுபண்ணாது, அல்லது குற்றம் சாட்டாது, அடுத்த முறை அதே காரியத்தை எப்படிச் செய்தால் சரியாக அமையும் என்று விளக்கினால், தவறோ, ஏமாற்றமோ விளைந்தால் தாங்கும் மனவலிமை வரும். பொறுப்பாக முனைந்து செய்ததற்காகப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

    பாரபட்சம் ஏன்?

    ஆண், பெண் என்ற பாரபட்சம் காட்டாமல் வளர்த்தல் அவர்களுடைய பிற்காலத்திற்கு நல்லது.
    பல இல்லங்களில், `என்ன இருந்தாலும், நீ ஒரு பொண்ணு! ஒன் தம்பி ஆம்பளை! அவனோட நீ போட்டி போடலாமா?’ என்று கூறிக் கூறியே பெண் குழந்தைகளை வளர்த்துவிடுகிறார்கள்.

    இதனால், தாங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மை பெண்கள் மனதில் சிறுவயதிலேயே விதைக்கப்பட்டு விடுகிறது. துணிச்சலாக எந்தக் காரியத்தைச் செய்யவும் தயங்கி, `இப்படிச் செய்வதால் நமக்கு அவப்பெயர் வந்துவிடுமோ?’ என்று யோசிக்க முனைகிறார்கள்.

    வேறு சில இல்லங்களில் இதற்கு நேர் எதிரிடையான வளர்ப்புமுறை. `சில காலம்தான் நம்முடன் இருக்கப்போகிறாள். கல்யாணமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமோ!’ என்று, பெண்களுக்கு நிறைய சுதந்திரமும் சலுகையும் கொடுத்து வளர்ப்பார்கள்.

    ஆனால், திருமணமானபின்னரும் அவள் விரும்பியதெல்லாம் கிடைக்கும், அவளது தனித்துவத்திற்கு மதிப்பு கிடைக்கும் என்பது உறுதியில்லை.

    பிறர் பாராட்டியபோது பல வெற்றிகளைப் பெற்றவள், இப்போது அடுக்கடுக்காக தோல்வியைச் சந்திக்கிறாள். அப்போது, `பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தோமே! இப்போது என்ன ஆகிவிட்டது?’ என்ற குழப்பமும் வருத்தமும்தான் மிஞ்சும். இளம் வயதில் குடும்பத்தினர் அளித்த துணிவு கைகொடுக்க, மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது.

    வேலையில் என்ன வேற்றுமை?

    `இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை’ என்ற பாகுபாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல. இருவருமே கல்வி பயில்கிறார்கள், வெளிவேலைக்குப் போகிறார்கள். ஆகையால், சிறுவயதிலிருந்தே எளிதான வீட்டுக்காரியங்களில் இருபாலரையும் ஈடுபடுத்தினால், அவர்கள் சுதந்திரமாக வாழப் பழகிக்கொள்வார்கள்.

    சில சமயம், `நான்தான் வேலைக்காரியா?’ என்று முரண்டு செய்வார்கள் சிறுவர்கள்.
    `நான்தானே தினமும் சமைக்கிறேன்! நான் என்ன, சமையல்காரியா?’ என்று கேட்டு அவர்களைச் சிரிக்க வைத்துவிட்டு, `நம் வீட்டில் வேலை செய்தால் அதில் தவறோ, கேவலமோ இல்லை,’ என்று புரிய வைக்கலாம்.

    இதனாலெல்லாம் பெரியவர்கள் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு நன்மையாகத்தான் முடியும்.

    கதை 1

    எங்கள் குடும்ப நண்பரான இஸ்மாயில் குழந்தை வளர்ப்பை மனைவிடம் விட்டிருந்தார். அசிரத்தையால் அல்ல; அது அவளுடைய பொறுப்பு, நாம் குறுக்கிடுவது நாகரீகமாகாது என்ற பெரிய மனதுடன்.

    இஸ்மாயில் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. மனைவியோ அதிகம் படிப்போ, குழந்தைகளின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ளும் திறமையோ இல்லாதவள். `என் குழந்தைகளெல்லாம் ரொம்ப வீக்!’ என்று, என்னைப் பார்க்கும்போதெல்லாம் அரற்றுவார் நண்பர்.

    `எதை ஆரம்பித்தாலும் பாதியில் விட்டுவிடுகிறான்!’ என்று பதினேழு வயதான கைருல்லை என்னிடம் அனுப்பினார். ஏதாவது வேலை கொடுத்தால், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துகொள்வான். ஈராண்டுகள் அவனுக்குப் பாடங்களைப் போதிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு.
    கைருல் ஒரு வழியாக பள்ளி இறுதியாண்டுப் படிப்பை முடித்ததும், `அவனுக்கு படிப்பில் கொஞ்சங்கூட பிடிப்பில்லை. சித்திரம் வரைய மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல திறமையும் இருக்கிறது. அத்துறையில் ஈடுபடுத்தினால், நன்றாக முன்னுக்கு வருவான்,’ என்றேன். என் வார்த்தைகளை மதித்து, மகனை ஃபிரான்சு நாட்டிற்கு அனுப்பினார், அத்துறையில் சிறக்க.

    துணிச்சலான பெண்கள்

    நான் பார்த்தவரை, தற்காப்புப் பயிற்சியைப் பயின்ற பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

    கதை 2

    எனது பதின்ம வயது மாணவிகளில் ஒருத்தியான ராபியா பிற பெண்களைவிட வெளிப்படையாகப் பேசுவாள். பிற பெண்கள் தம் உடலைக் குறித்து வீண் வெட்கம் கொள்வது ஏன் என்று என்னுடன் கலந்து பேசியிருக்கிறாள். அவள் சிலாட் (SILAT) என்னும் தற்காப்புக்கலையில் சிறந்தவள் என்று பிறகு அறிந்தேன்.

    இம்மாதிரிப் பெண்கள் நளினமாக, ஒரு காலின் முன்னால் இன்னொன்றை வைத்து, நடக்கமாட்டார்கள். தம் வயதொத்த பையன்களுடன் சரிசமமாகப் பழகுவார்கள். இதனால் எல்லாம் பிற பெண்களின் கேலிக்கு ஆளானாலும், அதைப் பொருட்படுத்தமாட்டார்கள்.

    கதை 3

    சுயநம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப்பெண் உயர்கல்வி கற்று, ஓர் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள்.

    அவளைவிட அனுபவம் முதிர்ந்த சீனப்பெண்மணி, “இந்தமாதிரி ஆடைகளையெல்லாம் நீ உடுத்தி வரக்கூடாது!” என்று கண்டித்தாள்.

    “நான் அணிந்திருப்பது பஞ்சாபி ஆடை. இந்தியப் பாரம்பரிய உடை. இது தவறு என்று எழுதப்பட்ட ஏதாவது சட்டம் இங்கு இருக்கிறதா? எனக்கு அதைக் காட்டு!” என்று கேட்க, மற்றவள் வாயடைத்துப்போனாளாம்.

    இச்செய்தி பிற இந்தியப் பெண்களிடம் பரவ, வழக்கமாக குட்டைப்பாவாடையோ, கவுனோ அணிபவர்கள் அதன்பின், `சௌகரியமாக இருக்கிறது!’ என்று ஸல்வார், சூடிதார் போன்ற உடைகளை அதிகம் வாங்கி அலுவலகத்திற்கு அணிந்துவந்தார்களாம்!

    பெண்களை வதைக்கும் ஆண்கள்

    ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டால், எதையோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோல் நினைத்துக்கொள்ளும் தாய்மார்கள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டித்து வளர்க்கமாட்டார்கள்.

    வேறு சில பெற்றோர் குழந்தை வளர்ப்பில் அசிரத்தையாக இருந்துவிடுகிறார்கள்.
    இப்படி வளர்க்கப்பட்டவர்கள் தாம் என்ன செய்தாலும் சரிதான் என்ற மனப்போக்குடன் வளர்வதால், பெண்களை வம்புக்கு இழுக்கிறார்கள். அல்லது, பாலியல் ரீதியில் வதை செய்யத் துணிகிறார்கள்.

    கதை 4

    பதினான்கு வயதான மாணவர்கள் தம் நீலப்படப் பழக்கத்தை (!) என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, வகுப்பில் மாணவர் தலைவன் மட்டும் ஏனோ அவைகளைப் பார்க்க விரும்புவதில்லை என்று அதிசயப்பட்டார்கள். அவனை அழைத்து விசாரித்தேன்.

    `எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன!’ என்றான்.

    நான் முகமலர்ச்சியுடன், `உனக்கு உன் தாயை ரொம்பப் பிடிக்குமோ?’ என்று கேட்டேன்.
    ஒரு தாய் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால், எந்தப் பிள்ளையும் கெட்டுப்போகமாட்டான்.

    கதை 5

    மலேசியாவில், விவாகரத்து சம்பந்தமான புள்ளி விவரங்களைச் சேகரிக்கவென சம்பந்தப்பட்ட அரசாங்கத்துறைக்குச் சென்றிருந்தேன்.

    அங்கு வேலை செய்த ஒரு மலாய்ப்பெண், `நானும்தான் வேலைக்குப் போகிறேன். ஆனால், வீட்டுக்கு வந்ததும், சமையல், துணி தோய்த்தல், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொடுத்தல் — இவை எல்லாவற்றையும் நானேதான் செய்யவேண்டும். என் கணவரோ, டி.வி பார்ப்பார். இல்லாவிட்டால், தினசரியில் மூழ்கிவிடுவார்,’ என்று என்னிடம் பொரிந்தாள். அப்படியும் மனம் ஆறாது, `அதுதான் என் கணவர்!’ என்றாள் அழுத்தமாக.

    `எல்லாக் கணவன்மார்களும் அதே லட்சணம்தான்!’ என்றாள் பக்கத்திலிருந்தவள், நிராசையுடன் கூடிய பெருமூச்சுடன்.

    இப்படிப்பட்ட மனக்கசப்புடன் இருக்கும் பெண்ணிடம் அவள் கணவன் எப்படி அன்பை எதிர்பார்க்க முடியும்?

    இனி பேச என்ன இருக்கிறது!

    பல இல்லங்களில் முப்பது, நாற்பது வருட இல்லற வாழ்க்கைக்குப்பின், கணவனோ, மனைவியோ, `நாங்க ரெண்டு பேரும் அதிகமா பேசிக்கிறதே கிடையாது!’ என்று சொல்லிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது.

    உடலுறவுக்கும், பிள்ளை பெறுவதற்கும்தானா திருமண பந்தம்?

    பெண்களை மதிக்கக் கற்றவர்கள் மனைவியை உற்ற தோழியாக நடத்துவதால், வயதானபின்னரும் அவர்களால் கலந்து பேச முடிகிறது. மனைவியின் வேலைப்பளுவைப் புரிந்து அதைக் குறைக்க தம்மால் ஆனதைச் செய்கிறார்கள். வீட்டுவேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் விரும்பிப் பங்கெடுக்கிறார்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைப்பற்றிப் பேசினால்தானே உறவு பலப்படும்?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (33)

    சகோதரச் சண்டைகள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

    கல்யாணமாகியிருந்த ஓர் இளம்பெண்ணிடம், `உன் சிறுவயதில் நடந்ததில் ஏதாவது ஒன்று மீண்டும் நடக்காதா என்று நீ ஆசைப்படுவது எது?’ என்று கேட்டேன்.

    யோசிக்காது வந்தது அவள் பதில்: `என் அண்ணனுடன் பிடித்த சண்டைகள்!’ பிறகு, சற்று ஏக்கத்துடன் தொடர்ந்தாள் `இப்போது சண்டையே போட மாட்டேன் என்கிறான். விட்டுக்கொடுத்து விடுகிறான்!’
    கூடப்பிறந்தவர்களுடன் சண்டை போடாத குழந்தை இருக்கிறதா? சந்தேகம்தான்.

    போட்டி

    பெற்றோரின் அன்பில் தனக்குப் போட்டியாக வந்துவிட்டதே என்று மூத்தவனும், `நான்தான் அம்மா வயத்திலேருந்து முதல்லே வந்திருக்கணும். அண்ணாவுக்குத்தான் எல்லாம் நிறையக் கிடைக்கிறது!’ என்று சிறியவனும் பொருமுகிறார்கள்.

    கதை: கத்திச்சண்டை

    சிறு குழந்தைகள் சண்டை போடுவதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. நீண்ட காம்பைக்கொண்ட ஒரு பழுத்த இலையை கத்தியாகவே பாவித்து அதற்காகச் சண்டை போடுவார்கள்.

    `இது என் இலை! நான்தானே பறித்தேன்? என்னுடையதுதான்!’

    `நான்தான் முதலில் பார்த்தேன்? எனக்குத்தான் சொந்தம்!’

    இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு இளம் தாய் முழிப்பாள். “இப்படி எல்லாவற்றிற்கும் சண்டைதான்! இரண்டுபேருமே குழந்தைகள்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடிக்கவும் மனம் வரவில்லை,” என்றாள். “`உனக்கும் ஒரு கத்தி பறித்து தருகிறேன்,’ என்று சிறியவனைச் சமாதானப்படுத்தினால் தீர்ந்தது கதை!” என்றேன் சிரிப்புடன்.

    அவளும் சிரித்தாள். “அவ்வளவுதானா?”

    சிறிது நேரத்தில் இரு சிறுவர்களும் முதலில் போட்ட வாய்ச்சண்டையை மறந்து, `கத்திச்சண்டையில்’ தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் வாயிலிருந்தும், அடித்தொண்டையிலிருந்தும் கார்ட்டூன் படங்களில் பார்த்திருந்த ஒலிகள் எழும்பிக்கொண்டிருந்தன! கத்தி உடையும்வரை அவர்கள் விளையாட்டு நீடித்தது. சிறிது நேரம் கழித்து, வேறு எதற்காவது சண்டை போடுவார்கள்.

    இப்படிச் சமாதானம் செய்யாமல், `அவன் சின்னவன்! அவனோடு உனக்கென்ன சண்டை? அழவிடாதே. குடு!’ என்று தாய் கூறியிருந்தால், அம்மாவுக்கு என்னைவிட தம்பிதான் உயர்த்தி என்ற எண்ணம் எழும் மூத்தவனுக்கு.

    இளையவனோ, அம்மா தன்பக்கம்தான் பேசுவாள், எது வேண்டுமானாலும் அழுது சாதிக்கலாம் என்று எண்ணிவிடுவான்.

    ஐந்து வயதுக்குள் பிறருடன் பழகும் தன்மை புரியாததால் சண்டை வருகிறது. குடும்பத்தினர் அவர்களது சண்டையில் குறுக்கிட்டு தக்கபடி வழிநடத்தாவிட்டால், அப்போது எழும் மனக்கசப்பு எல்லா வயதிலும் நிலைத்திருக்கும்.

    என்னையும் கவனியேன்!

    குடும்பத்தில் கடைக்குட்டி தாயிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுபோல்தான், நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தையும். அதன் அண்ணனோ, அக்காளோ தனக்கும் தாயின் பிரத்தியேக கவனிப்பு கிடைக்கவேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக்கொள்வார்கள். இது நல்லதல்ல. ஒரு தாய் எல்லாக் குழந்தைகளையும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி கவனித்துத்தான் ஆகவேண்டும்.

    அம்மாவின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பவும் சில குழந்தைகள் சண்டையில் ஈடுபடலாம். அம்மாதிரித் தருணங்களில், அவர்களைக் கவனிக்காது விடுவதுதான் சரி.

    தன் ஒவ்வொரு நிமிடத்தையும் குழந்தைகளுக்காகவே செலவழிக்க நேரிட்டால், தாய்க்குத்தான் நிம்மதி பறிபோய், மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். (இதேபோல், வீட்டில் போதிய கவனிப்பு இல்லாத சிறுமிகள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையின் கவனத்தைப் பெறவேண்டி, வேண்டுமென்றே ஏதாவது தவறிழைப்பார்கள். அவர்களைக் கவனிக்காமல், அலட்சியப்படுத்துவதுதான் அவர்களுக்கு அளிக்கக்கூடிய பெரிய தண்டனை).

    இது உன் வேலை!

    சற்றுப் பெரியவர்களாக ஆனதும், வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது சண்டைக்கு முக்கியமான காரணமாக அமையும். இதைத் தவிர்க்க, காலையில் ஒருவர், மாலையில் ஒருவர், அல்லது வாரத்தில் சில நாட்கள் ஒருவருக்கு என்றெல்லாம் பகிர்ந்துவிடலாம். வயதுக்கு ஏற்றபடி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலையை அவரவர்தான் தவறாது செய்ய வேண்டும் என்று வகுத்துவிட்டால், முணுமுணுக்காமல் செய்வார்கள்.

    வசவு கற்றுக்கொடுப்பது

    ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால், அவர்களைப்போல் நடக்கத்தானே குழந்தைகளும் கற்பார்கள்? இதற்குத்தான் பெரியவர்கள் பேசும்போது குழந்தைகள் அங்கு இருக்கக்கூடாது என்று விலக்கி வைப்பது. வயதுக்கு மீறிய வளர்ச்சி வேண்டாமே!

    திரைப்படங்களைப் பார்த்தும் வேண்டாத வசவுகளைக் கற்கிறார்கள் குழந்தைகள்.

    நானும் அப்படித்தான்.

    சொந்தக்கதை

    நான் சிறியவளாக இருந்தபோது பார்த்த படங்களில், வில்லன் தன் மனைவியைத் திட்டுவான். (கெட்டவன் என்றால் துளிக்கூட நல்ல குணம் இருக்கக்கூடாது என்பது திரைப்பட விதி). `பாவி, துரோகி, சண்டாளி, நயவஞ்சகி,’ என்று அடுக்கிக்கொண்டே போவான். ஒவ்வொரு சொல்லுக்கு அடுத்தும், `நானா!’ என்று நெஞ்சில் கைவைத்து அதிர்பவள்தான் நல்ல மனைவி.

    இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லாப் படங்களிலும் இதே வரிசையில், இதே வார்த்தைகள்தாம் வரும்.

    எங்கள் வீட்டில் இந்தமாதிரி வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்கப்படாததால், இப்புதிய வார்த்தைகளை ஆர்வத்துடன் கற்றேன். எப்போது, எவ்வாறு உபயோகிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

    எட்டு வயதுக்குட்பட்ட எனக்கும், என் தங்கைக்கும் சண்டை வரும்போது, நான் `பாவி!’ என்று ஆரம்பிக்க, அவள் அடுத்த வார்த்தையைப் பிரயோகிப்பாள். இருவருக்கும் எதற்கும் அர்த்தம் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, அவற்றை உச்சரிக்கும்போதே பலம் பெருகி, எதிராளியை வீழ்த்திவிட்டதுபோல் உணர்வோம். முடிந்தவரை உரக்கக் கத்துவோம் — அம்மா, `ஏய்! என்ன அசிங்கம் இது?’ என்று எங்கிருந்தாவது குரல் கொடுக்கும்வரை.

    இரண்டுபேரும் ஒரே சமயத்தில் ஒற்றுமையாகி, `ஒண்ணுமில்லேம்மா,’ என்று குரல் கொடுப்போம். ஒருவரையொருவர் பார்த்துப் பெருமையுடன் சிரித்துக்கொள்வோம்.

    பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட, அவ்வார்த்தைகள் மனதில் பதிந்துவிட்டன. எதற்குச் சண்டை போட்டோம் என்று நினைவில்லை.

    சமீபத்தில் ஏதோ அரதல் பழசான படத்தில் வில்லன், `பாவி!’ என்று ஆரம்பிக்க, நான் மகிழ்ச்சியுடன், மீதி வார்த்தைகளைப் பூர்த்தி செய்தேன்! வீட்டில் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

    சண்டை அவசியம்

    சகோதர சகோதரிகள் சண்டை போடுவது பிற்கால வாழ்க்கைக்கு அவசியம். எப்படி என்கிறீர்களா?
    பிறரது எண்ணப்போக்கைப் புரிந்துகொண்டு, அனுசரணையாக நடந்துகொள்ளவும், நல்லவிதமாகப் பழகவும் சிறுவயதில் நாம் போடும் சண்டைகள் உதவுகின்றன.

    `இந்தப் பொம்மையை நீ வெச்சுக்கோ, அதை நான் எடுத்துக்கறேன்,’ என்று சமாதானம் பேசும் குழந்தை தகறாறின்போது பேச்சுவார்த்தை நடத்தக் கற்கிறது. முரட்டுத்தனமாக நடப்பது நன்மையில் முடிவதில்லை என்று புரிந்து, அதை அடக்கிக்கொள்ள முயல்கிறது.

    எப்போதும் சிறிய மகனையோ, மகளையோ பெரிய குழந்தைக்கு எதிராக ஆதரித்துப் பேசும் தாய் தன்னையுமறியது அதற்குக் கேடு விளைவிக்கிறாள்.

    எல்லாருமே எப்போதுமே விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்களா, என்ன! சண்டை போடவும் தைரியம் இல்லாது, சமாளிக்கும் வழியும் புரியாது விழிப்பார்கள் அப்படி வளர்க்கப்பட்ட சிலர்.

    `என்னையும் அடிச்சு வளர்த்திருக்கணும்!’ என்று தாயிடமே குறைகூறுவார்கள்.

    வேறு சிலர் எல்லாவற்றிற்கும் பிறருடன் சண்டை போடுவார்கள்.

    கதை: வளர்ந்த செல்லக்குழந்தை

    என்னுடன் உத்தியோகம் பார்த்த ஓர் ஆசிரியை விஞ்ஞானப் பாடத்தை என்னுடன் பகிர்ந்து கற்பித்தாள். நான் பௌதிகம் மற்றும் ரசாயனம் மட்டும்.

    ஒரு பரீட்சைக்கு, `நீ உன் பாடத்தில் கேள்வித்தாளை அமைக்க வேண்டுமாம். உன்னிடம் தெரிவிக்கும்படி தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்,’ என்று நான் அவளிடம் கூறினேன்.

    `நான் பண்ணமாட்டேன், போ! நீ என்ன சொல்வது?’ என்று அவள் முரண்டுசெய்தது பிற ஆசிரியர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

    எனக்கோ ஒரே எரிச்சல். `என்னவோ பண்ணிக்கொள்!’ என்றேன்.

    அவள் போய் தலைமை ஆசிரியரைச் சந்தித்தாள். அவர் என்ன `டோஸ்’ விட்டாரோ!

    தோல்வியடைந்தவள்போல் முகத்தை வைத்துக்கொண்டு, `சரி. நானே செய்யறேன்!’ என்று என்னிடம் வந்து கூறினாள், எனக்காக ஏதோ பெரிய தியாகம் செய்வதுபோல. நான் எதுவும் பேசவில்லை.

    அவள் அப்பால் சென்றதும், `இவளுக்கு ஆறு அண்ணன்மார்கள். இவள் ஒருத்திதான் பெண். வீட்டில் செல்லக்குழந்தையாக இருந்திருக்கலாம். அதற்காக எப்போதுமே எல்லாருமே அருமையாக நடத்தவேண்டும் என்றால் நடக்கிற காரியமா?’ என்றார் முதிர்ச்சியுடைய ஆசிரியை ஒருவர். அதை ஒப்புக்கொண்டு, எல்லாரும் நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம்.

    உங்கள் குழந்தைகள் சண்டை போடுகிறார்களா? ஒருவர் பக்கமும் சாயாமல், அவர்களை ரசியுங்கள். அடிதடியில் இறங்கினால் மட்டும் குறுக்கிடலாம். தானே பெரியவர்களானதும், ஒற்றுமையாகிவிடுவார்கள். அப்போது அவர்கள் போட்ட சண்டைகளையெல்லாம் நினைவுகூர்ந்து சிரிக்கலாம். அவர்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள், `எவ்வளவு வேடிக்கை! இப்போ சண்டையே போடறதில்லையே!’ என்று ஏங்கும் அளவுக்கு!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (32)

    நிர்மலா ராகவன்

    போட்டி பொறாமை ஏன்?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1
    `வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்! உன்னை யாரும் முந்த விடாதே!’

    பள்ளிக்கூட நாட்களில் அனேக குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் அளிக்கும் அறிவுரை. அதற்கு முன்னரே, குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், `உன் தம்பி பார், எவ்வளவு சமர்த்தாக இருக்கிறான்! நீயும் இருக்கிறாயே, அசடு!’ என்றெல்லாம் பேசி, அந்த அறியாப் பருவத்திலேயே போட்டி மனப்பான்மையை விதைத்து விடுகிறார்கள்.

    `நானும் ஏன் தம்பிமாதிரி இல்லை?’ என்ற ஏக்கமானது தான் ஏதோ விதத்தில் மட்டமானவன் என்ற எண்ணத்தை நிலைக்கச் செய்துவிடுகிறது. தன்னைவிட அம்மாவின் மதிப்பில் உயர்ந்திருக்கும் தம்பிமேல் பொறாமை வருகிறது. அவனுடன் போட்டி போட்டு எப்படியாவது அவனை வீழ்த்த நினக்கிறான். தெரியாத்தனமாக விதைக்கப்பட்ட இக்குணம் ஒருவனுடன் சேர்ந்து வளர்கிறது.

    கதை: தம்பி வேண்டாம்

    இடைநிலைப்பள்ளியில் என்னுடன் படித்த ஒரு பெண் தன்னை யாரும் எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது, எல்லாப் பரீட்சைகளிலும் தான்தான் வகுப்பில் முதலாக வரவேண்டும் என்ற துடிப்பு மிக்கவளாக இருந்தாள். தப்பித் தவறி நான் முதலாவதாக வந்துவிட்டால், ஒரு மாதம் என்னுடன் பேசமாட்டாள்!

    சிறு வயதிலேயே அப்பெண்ணை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, அவளுடைய தம்பியைத் தம்முடன் வைத்துக்கொண்டார்கள் பெற்றோர். தந்தைக்கு அடிக்கடி வேலை மாற்றம், அதனால்தான் இந்த ஏற்பாடு என்பதை அவளுக்குப் புரியவைக்கவில்லை. பெற்றோருக்கு உகந்த பிள்ளையாய் பிறந்துவிட்ட தம்பிமேல் பொறாமை கிளர்ந்தது.

    இக்குணம் வெறியாகவே மாறி, அவள் அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாதபடி செய்துவிட்டது. `தோல்வி’ என்றாலே பயம் என்ற நிலையில், படிப்பில், குடும்ப வாழ்க்கையில், உத்தியோகத்தில், பிறரை வென்றால்தான் மகிழ்ச்சி என்று பழகிக்கொண்டுவிட்டாள். `நான் எல்லோரையும்விடச் சிறப்பாக இருக்கிறேன், பார்த்தீர்களா?’ என்ற தற்பெருமை கூடியது.

    அவள் பெரிய படிப்புப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்தாள். அதன்பின்னரும், கணவருடன் ஒத்துப்போகாமல், பிரிந்து வாழ, `இவளுக்கு யாருடனும் ஒத்துப்போக முடியவில்லை. ஏன்தான் இப்படி எல்லாருடனும் சண்டை போடுகிறாளோ!’ என்று அவளுடைய தாய் வருத்தத்துடன் என் தாயிடம் தெரிவித்தாள்.

    பிறருடைய ஒத்துழைப்பு ஒருவர் முன்னுக்கு வருவதற்கு அவசியம் தேவை. இது புரியாது, அல்லது ஒப்பாது, போட்டி மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்குத் தனிமைதான் நிலையானது.

    பிறரிடம் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்கள் எக்காலத்திலும் தம்மை மிஞ்ச மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் இவர்களுக்கு. மற்ற எல்லோரிடமும் காட்டம்தான்.

    எவ்வளவு பட்டங்கள் வாங்கினால்தான் என்ன! உண்மையான கல்வி என்பது போட்டி மனப்பான்மை நீங்கியபின்தான் என்கிறார் ஒரு தத்துவஞானி.

    ஒருவர் நல்லவிதமாக வளர்வதற்கு முதலில் பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் தேவை. பிறகு, ஆசிரியர்களின் கனிவு. `எனக்குத் தெரிந்ததை எல்லாம் உனக்குச் சொல்லித்தர மாட்டேன்!’ என்றிருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் போட்டிபோடும் அற்பங்கள் என்பேன்.

    சிலரது போட்டி மனப்பான்மை தம்மைவிடச் சிறப்பாக இருக்கும் பிறர்மேல் பொறாமையாக வெளிப்படும்.

    கதை: மகனால் தாய்க்கு வந்த சோதனை

    ஆசிரியர்களின் பொது அறையில் ஓய்வாக இருக்கும்போது நாங்கள் எங்கள் குடும்ப விவகாரங்களை அலசிக்கொண்டிருப்போம். என்னுடைய சக ஆசிரியை மிஸஸ் ஃபூ நான் சாதாரணமாக ஏதாவது என் குழந்தைகளைப்பற்றிப் பேசினால்கூட பொறாமையுடன் வெறித்தது எனக்குக் குழப்பத்தை விளைவித்தது.

    நாலைந்து வருடங்களுக்குப்பின், தானே என்னிடம் அவளுடைய மகனுக்கு ஆடிசம் என்ற நோய் என்று தெரிவித்தாள். `முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்களைப்போல் அப்படியே நடித்துக் காட்டுவான்,’ என்று சற்று பெருமையுடன் கூற ஆரம்பித்தவள், `இப்போது அதுவும் மறந்துவிட்டது!’ என்றாள் சோகமாக.

    பிறருடைய கண்களைப் பார்த்துப் பேசாது, தானே ஏதேதோ பேசிக்கொண்டு, `நெருப்பு சுடும்’ என்று பலமுறை கூறினாலும் புரிந்துகொள்ள முடியாத தன் மகனைப்பற்றி தானும் எதுவும் பேசமுடியவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு என்று புரிந்துகொண்டேன்.

    `எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆயிற்று?’ என்று கேட்டாள் என்னை.

    `எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது. உன் மகன் அவனைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்? நாம் எந்த ஜன்மத்திலோ செய்த பாபச் சுமையை இப்படி ஒரு பிறவி எடுத்துக் கழிக்கிறோம்,’ என்றுவிட்டு, நம் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொள்கிறோமோ என்று வெட்கி, `இது நான் எங்கோ படித்தது,’ என்று சப்பைக்கட்டு கட்டினேன்.

    `ஓ! இது எனக்கான தண்டனை! அப்படித்தானே?’ என்றாள், சற்றுத் தெளிவுடன். அதன்பின் என்னுடன் போட்டி கிடையாது. உற்ற தோழிகளானோம்.

    கதை: பேச்சில் போட்டி

    கடந்த ஆண்டு கோலாலம்பூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நான் உரையாற்றியபோது, என் எழுத்துலக அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதுதான் தலைப்பு: என் எழுத்துலக அனுபவங்கள்.

    முடிந்ததும், `எவ்வளவு உற்சாகமாகப் பேசினாங்க! இன்னொரு கைதட்டல் குடுங்க,’ என்று அவையிலிருந்த ஒரு பெண்மணி கூற, அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

    சற்றுப்பொறுத்து நான் சிலருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, உரையாற்றிய இன்னொரு பெண்மணி என்னைத் தேடி வந்தாள். “என்ன, நிர்மலா! சும்மா சிரிச்சுச் சிரிச்சுப் பேசிட்டீங்களே! FACTS இல்லே!” என்றாள். இவள் பல வருடங்களாக எதற்காகவாவது என்னைத் தாக்கி வருபவள்.

    அழகிலோ, அறிவிலோ, தைரியத்திலோ, அல்லது செல்வத்திலோ, பொதுவாக ஏதாவது ஒரு விதத்தில் பிறரைவிடக் குறைந்திருக்கிறோமே என்றெண்ணி மறுகுபவர்கள் அந்த விஷயத்தில் தம்மைவிட உயர்ந்திருக்கிறார்கள் என்று நினைப்பவர்கள்மேல் பொறாமை கொள்கிறார்கள். அவர்களுடன் போட்டி போடும் அளவுக்குத் திறமையோ, தைரியமோ இல்லாவிட்டாலும், அவர்களைச் சற்றேனும் கீழே இறக்க முயற்சிக்கிறார்கள்.

    இது புரிந்திருந்ததால், “உங்களிடம், `எத்தனை தன்னம்பிக்கை உங்களுக்கு!’ என்று யாராவது பாராட்டினார்களா? ஆட்டோகிராஃப் கேட்டார்களா? `எங்களுடன் போட்டோ எடுத்துக்கறீங்களா?’ என்று வந்து, வந்து கேட்டார்களா? இதெல்லாம் எனக்கு நடந்தது!” என்றேன், அமைதியான குரலில்.
    அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பாராது, `நேரமாயிடுச்சு!’ என்று ஓடியேவிட்டாள்!

    என் திறமையில் நானே சந்தேகம் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் பேசியது புரிந்ததால்தான் பதிலடி கொடுத்தேன். இது திமிரில்லை. தற்காப்பு.

    தன்னம்பிக்கை என்பது..

    ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ திறமை ஒளிந்திருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, அதையே பலமாக்கிக்கொண்டால் பிறருடன் போட்டி போடத் தோன்றாது. பிறர் தன்னைப்பற்றிக் குற்றமாகப் பேசுவதையும் அலட்சியம் செய்ய முடியும்.

    இத்தன்மை ஒருவரது உடல் மொழியிலேயே தெரியும். முதுகெலும்பும் தலையும் நிமிர்ந்திருக்கும். `அவனுக்கு முதுகெலும்பே கிடையாது!’ என்று கோழைகளை வர்ணிப்பது இதனால்தான்.

    பலவீனமே பலமாய்

    தன்னம்பிக்கை என்பது கர்வப்படுவதிலோ, பெருமை பேசுதலிலோ இல்லை. தன் பலத்தைப் புரிந்து, பலவீனத்தையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளுதல்.

    உதாரணம்: மாணவர்கள் அடங்காது, வகுப்பில் இரைச்சல் போட்டால் ஆசிரியை தானும் அவர்களுக்கு ஏற்றாற்போல் இரைந்து பாடம் நடத்தாது, குரலை இன்னும் அடக்கிக்கொள்கிறாள்.

    `கேட்கவில்லை!’ என்று அலறுபவர்களிடம், `உங்களுக்குப் பாடம் கற்க வேண்டுமென்றால் கவனியுங்கள்!’ என்று கூறினால் பலனிருக்கும். அடிவாங்கியவர்கள்போல் மௌனமாகிவிடுவார்கள்.
    இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் … (31)

    நிர்மலா ராகவன்

    முதியோரும் சந்ததியினரும்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1

    `என் பெற்றோர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்!’ என்பவர்களைக் கொடுமைக்காரர்களாகச் சித்தரிக்கின்றன கதைகள்.

    அவர்கள் இப்படிச் சொல்வது, `நானும் என் குடும்பத்தினரும் சுதந்திரமாக, அவர்கள் தொணதொணப்பில்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்!’ என்று பிறர் அர்த்தம் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.

    மாறும் காலம்

    நூற்றிருபது ஆண்டுகளுக்குமுன்தான் மனிதனின் சராசரி வயதே நாற்பதுதானாமே! அப்போது இந்த பிரச்னைகள் இருந்திருக்காது.

    இக்காலத்திலோ, வயதானவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், இளமையிலிருந்த உடல் வலு, ஆரோக்கியம், ஞாபகசக்தி போன்றவை கணிசமாகக் குறைந்துவிடுகின்றன. அப்போது அவர்களுக்குப் பெருமையளித்தவைகளை இழந்துவிட, அதிர்ச்சியடைகிறார்கள். பிறர் தங்களைக் குறைவாக எடைபோட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம் அதிகாரத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள்.

    காலம் மாறிக்கொண்டிருக்கிறது, நம்மால் மாற முடிகிறதோ, இல்லையோ, நம் சந்ததியினர் அதற்கேற்ப நடந்துகொண்டால்தான் அவர்கள் வயதையொத்த பிறருடன் இணைய முடியும் என்பதை முதியோர் புரிந்துகொண்டால் பிரச்னையே எழாது.

    எது முக்கியம்?

    இன்றைய இளைய தலைமுறைக்கு உறவுகளைவிட நண்பர்கள் முக்கியமாகிவிட்டது. உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருக்கும், முகம் அறியாதவர்களுடனும் CHAT செய்வதில் (அரட்டை அடிப்பதில்) ஓர் ஆனந்தம்.

    `இதே ஊரிலிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு வருஷத்துக்கு ஒரு முறைகூடப் போகாமல், அப்படி என்னதான் கம்யூட்டரோ, ராத்திரி பகலா!’ என்று ஒரு பாட்டி அலுத்துக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.

    உறவினர் தாம் செய்வது எல்லாவற்றிலும் குறை காண்கிறார்கள். நண்பர்கள் என்றால், தாம் எது செய்தாலும் ஆதரித்து, பாராட்டுபவர்கள் என்று தோன்றிப்போகும் இளவயதினருக்கு. நண்பர்களும் இந்த மனப்பான்மைக்குத் தூபம் போடுவார்கள். (`எங்க வீட்டிலேயும் இப்படித்தான்! இந்த வயசானவங்களுக்கே MANNERS கிடையாது. MISBEHAVE பண்ணுவாங்க!’).

    `நல்லது’ என்று எண்ணி ஏதாவது சொல்வது ஒருவருக்குக் கெட்ட பெயர்தான் வாங்கிக்கொடுக்கும். குடும்பத்தில் பிறர் செய்வதில் குறுக்கிடாமல் இருக்கும்வரைதான் எவருக்கும் மரியாதை நிலைக்கும்.

    என் அனுபவம்

    `எங்கள் காலத்தில், அந்தந்த வாரப் பாடத்தை சனி ஞாயிறுகளில் படிப்போம்,’ என்று ஒரு முறை நான் என் வகுப்பில் சொல்லப்போக, ஒரு மாணவி, `உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.

    படிப்பதைவிட, படித்து முன்னுக்கு வருவதைவிட, பொழுதுபோக்கு முக்கியம் என்று ஆகிவிட்டது. அறிவுரையை `தொணதொணப்பு’ என்று எண்ணி எதிர்த்துப் பேசுபவர்களை, `எப்படியோ தொலையுங்கள்!’ என்று விட வேண்டியதுதான்.

    கூட்டுக்குடும்பமா?

    ஒருவர் வாழ்வில் இன்னொருவர் குறுக்கிடுவது கசப்பை விளைவிக்கும். அவரவர் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றபடி நடக்கும் சுதந்திரம் இருந்தால்தான், குடும்பத்தில் அமைதி நிலவும்.

    கதை:

    போன தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்மணி பெரிய நகரங்களில் வாழ்ந்து, மெத்தப் படித்தவள். கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டாள். மாமியார் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களது கெடுபிடியால் அதிர்ந்துபோனாள். இருப்பினும், `பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள். அப்போதுதான் பிறந்த வீட்டுக்குப் பெருமை!’ என்ற தாய் சொல்லைத் தட்டாது வாழ்ந்தாள்.

    அவளே மாமியாராக ஆனபின், அதே மரியாதையை தன் மகன்களின் மனைவிகளிடமிருந்து எதிர்பார்த்தாள். அவர்கள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ அவளை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தனிக்குடித்தனம் போனபின்னரும், `அறிவுரை கூறாமல் எப்படி!’ என்று விடாப்பிடியாக அவர்கள் செய்வதில் குறுக்கிட ஆரம்பித்தாள். அவர்கள் மாறுவதாக இல்லை. அவளுக்குத்தான் கெட்ட பெயர், ஓயாது அதிகாரம் செய்கிறவள் என்று. தன் இளமைக் காலத்தில் பொறுக்க முடியாததை எல்லாம் பொறுத்துப்போனோமே, இப்போது ஏன் இளவயதினர் அப்படி இல்லை என்ற குழப்பம்தான் மிச்சம்.

    வயதேற ஏற

    சிறு வயதில் பாட்டி தாத்தாவின்மேல் பேரக்குழந்தைகள் பாசம் வைத்திருக்கலாம். ஆனாலும், பதின்ம வயதில் அவர்களுடைய `நச்சரிப்பை’ ஏற்க முடியாது, எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள்.

    இதைத் தவிர்க்க, பேரன் பேத்திகளின் அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டலாம் — அளவோடு. முதியவர்கள் தமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சுவாரசியமாக, கதைபோல் சொல்வது நல்லது.

    உதாரணம்: என் மூத்த மாமாவின் மனைவிக்குக் கல்யாணத்தின்போது ஐந்து வயது! இது நடந்து நூறு வருடங்கள் ஆனபோதும், இன்று கேட்பதற்கு வியப்பாக இருக்கிறதல்லவா? (இதற்குத்தான் அந்தக் காலத்தில் உணவருந்தும்போதும், உறங்க வைக்கும்போதும் கதை சொல்லும் வழக்கம் வைத்திருந்தார்களோ?).

    கதை கேட்ட சுவாரசியத்தில், தம்மையுமறியாமல், தம்மைப் பாதித்தவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள் சிறுவர்கள். மௌனமாகக் கேட்டுக்கொண்டால், அவர்களது மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அறிவுரையை நாடும் அளவுக்கு நட்புணர்வு மிகும்.

    நமக்கென ஒரு பொழுதுபோக்கு

    படிப்பது, இசையை ரசித்துக் கேட்பது, நண்பர்களுடன் உரையாடுவது, கணினி, தொலைகாட்சி — இப்படி எதையாவது தேர்ந்தெடுத்துக்கொண்டால், தினமும் நம் பொழுது இனிமையாகக் கழியும். பிறரது போக்கில் குற்றம் கண்டுபிடிக்க அவகாசமோ, அவசியமோ இராது.

    ஆனால், மற்றவர் மெச்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தவிர்ப்பது நல்லது. நமக்குப் பிடித்ததைச் செய்தால்தானே நிறைவு கிட்டும்?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (30)

    நிர்மலா ராகவன்

    நீங்கள் கர்வியா, பயந்தாங்கொள்ளியா?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d
    தானே தன்னைப்பற்றிக் குறைவாக ஏதாவது கூறினால், அது அடக்கத்தின் அறிகுறி என்று பலரும் நினைக்கிறார்கள்.

    “நான் ஒரு பயந்தாங்கொள்ளி!” என்று என் சக ஆசிரியை ஒருத்தி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

    இதில் என்ன விபரீதம் என்றால், நாளடைவில், நாம் சொல்வதை நாமே நம்பிவிடுகிறோம். நம் உள்மனம் நாம் சொல்வதை ஆராயச் சக்தி இல்லாது, அப்படியே ஏற்று விடுவதால் வருவது இந்த அபாயம்.
    குறை தம்மேல்தான் என்று உணராது, தம்மைப்போல் இல்லாது, வெற்றிப்பாதையில் பீடு நடைபோடும் பிறரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பலன்?

    எடுத்த எந்தக் காரியத்திலும் வெற்றி பெறும் துணிவு சிலருக்கு மட்டும் எப்படிப் பிறக்கிறது என்று ஆராய்வோமா?

    இயற்கையாக அமையாவிட்டாலும், இது அமைத்துக்கொள்ள முடிவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    என் மாணவி ஒருத்தி பெரிய பரீட்சை எழுதி, சுமாராகத் தேர்ச்சி பெற்றதும், “Well, I tried my best!” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.

    எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் படிப்பில் போதிய அக்கறை செலுத்தாது இருந்தது எனக்குத் தெரியும். அவளுடைய best என்னவென்று அவள் முயற்சிகூட செய்து பார்க்கவில்லை, பாவம்!

    என் சீன மாணவிகள் என்னிடம் கேட்பார்கள், “இரவில் எத்தனை நேரம் தொலைகாட்சியில் திரைப்படங்கள் பார்த்தாலும் சலிப்பதில்லை. கண்விழித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், பாட புத்தகங்களை எடுத்தால் மட்டும் உடனே தூக்கம் வருகிறதே! ஏன், டீச்சர்?” என்று.

    தெரியாமலா, தொலைகாட்சிக்கு `முட்டாள்களின் பெட்டி’ (IDIOT BOX) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

    பார்ப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது நல்லது என்று யாரோ முடிவு செய்கிறார்கள். நாமும் அதிகம் யோசியாது, சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பார்க்கிறோம். பார்ப்பது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பரீட்சையா எழுதப்போகிறோம்! மூளைக்கு அதிக வேலை கொடுக்காததால், ரசிக்கும்படி இருக்கிறது என்றெல்லாம்தான் தோன்றிப்போகிறது ரசிகர்களுக்கு.
    பாட புத்தகங்களானால், அதில் ரசிக்கும்படியாக எதுவும் இருக்காது. மூளைக்கு வேலை கொடுப்பதென்றாலே சிரமம்தான். உடனடியாக என்ன ஆதாயம் கிடைக்கிறது என்றும் யோசனை போகும்.

    ஒரு காரியத்தைச் செய்தால் உடனடியாக ஏதாவது நன்மையோ, இன்பமோ கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் முன்னுக்கு வரமுடியாது.

    குழந்தைகளுக்கு இது புரியாததால்தான் முதல் சில வருடங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக அடம் பிடிக்கிறார்கள். விளையாட்டில்தான் அவர்கள் மனம் போகும்.

    ஆனால் எப்போதுமே அப்படி இருக்க முடியுமா? எந்தத் துறையாக இருந்தாலும், பணமோ, புகழோ கிடைக்க பொறுமையும் நம்பிக்கையுமாகக் காத்திருக்கும் மனப்பான்மை அவசியம்.

    கதை எழுதுவதை எடுத்துக்கொள்ளுங்கள்.

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் நன்றாக எழுதிவிட முடியாது. அம்மொழியில் பல ரகப் புத்தகங்களையும் படித்தால்தானே எழுதுவது செம்மையாக இருக்கும்? அதுபோல், நிறைய உபயோகமான விஷயங்களையும், நற்பெயர் வாங்கிய கதாசிரியர்களின் படைப்புகளையும் பிரயத்தனப்பட்டு படித்தால் தரம் உயர வாய்ப்பிருக்கிறது.

    எழுதியதைப் பலமுறை திருத்தவும் தயாராக இருக்கவேண்டும். `ஐயோ! இவ்வளவு மட்டமாக எழுதிவிட்டேனே!’ என்று மனம் தளரக்கூடாது. நம் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத்து வடிவில் கொண்டுவருவதற்குப் நீண்ட கால அனுபவம் தேவை.

    என் சொந்தக் கதை (பொறுத்தருள்க!): எட்டு வயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற பேராவல் எழுந்தது எனக்குள்.

    பத்து வயதிலிருந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால், எனக்கே புரிந்தது நான் எழுதியது அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை, எந்தப் பத்திரிகையும் ஏற்காது என்று.

    `நன்றாக இல்லை என்றால் ஏன் எழுதுகிறாய்?’ என்று என் தாய் கேட்டார்.

    `யோசிக்கிறபோது நன்றாக இருக்கிறது. எழுதியவுடன் ஏனோ அப்படி இல்லை!’ என்றேன் குழப்பத்துடன்.

    இருந்தபோதும், மனம் தளராமல் எழுதினேன், `வேலையற்ற வேலை! இந்த எழுத்தா நாளைக்கு உனக்கு சோறு போடப் போகிறது?’ என்ற பிறரின் கேலியை அலட்சியம் செய்து.

    யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முனைந்து செய்தால் வெற்றி கிடைப்பது உறுதி. சில எழுத்தாளர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்கூட அங்கீகாரம் கிடைக்கலாம். அது அவர்களது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு.

    ஒரு பெரிய பெட்டி நிறைய நான் எழுதியவைகள் நிறைந்தன. `குப்பை’ என்று பிறர் கருதினார்கள். அது நான் அடைந்த பயிற்சி என்று பின்பு புரிந்தது.

    பல வருடங்கள் கழித்து என் கதை ஒன்று பிரசுரமாகியது. அதன்பின், ஆங்கில நாவல்கள் நிறையப் படித்தேன். இன்னும் படிக்கிறேன். (`பெரியவர்கள் கதையைப் படிக்கக்கூடாது!’ என்று அம்மா கண்டித்துச் சொன்னதிலிருந்தே தமிழில் நிறையப் படிக்க ஆரம்பித்திருந்தேன்).

    ஐந்தாண்டுகள் கழிந்ததும், சிறுகதை, நாடகப் போட்டிகளில் பரிசு!

    நாற்பது வயதில், `ஆங்கிலத்திலும் எழுதிப் பார்க்கலாமே!’ என்ற யோசனை வந்தது. ஆனால் எழுதியது எனக்கே திருப்தி அளிக்கவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்தேன்.
    பிறரது கதைகளில் வர்ணனையைப் படிக்க பொறுமையில்லாது, உரையாடலுக்கு தாவுகிறவள் நான். என் பாணி கரு, நாடகம் (PLOT AND DRAMA) என்று முடிவு செய்துகொண்டேன். எழுத முடிந்தது.

    நான் ஆங்கிலச் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றது கண்டு என் பெற்றோருக்குக் கொள்ளைப் பெருமை.

    `நீ! ஆங்கிலத்தில் எழுதுகிறாயா! என்னால் நம்பவே முடியவில்லை. I CAN’T GET OVER IT!’ என்று பலமுறை கூறிய என் வயதொத்த உறவினர்களையும், உடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியைகளையும் அலட்சியம் செய்தேன்.

    `எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’

    `நீங்கள் மத்திம வர்க்கத்தினரைப்பற்றியே நிறைய எழுதுகிறீர்கள். படிப்பவர்களுக்கு போரடித்துவிடும்!’

    `ஒரு வேளை, நாம் எழுதுவதெல்லாம் குப்பைதானோ?’ என்ற சந்தேகத்தை என்னுள் புகுத்தப் பார்த்தவர்கள் பலர்.

    என்னைப் பாதித்தவற்றை, தெரிந்தவற்றை, எனக்குப் பிடித்தவகையில் எழுதுகிறேன். அதை ஏற்று, பிரசுரம் செய்கிறார்கள். இது போதாதா என்று இப்படியெல்லாம் பேசுகிறவர்களை அலட்சியம் செய்துவிட்டேன். நாம் எழுதுவது எந்த வகையிலாவது பிறரைத் தாக்கினால், அதுவே நாம் அடையும் வெற்றிதான்.

    நாம் எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றபின்னும், `என்ன கிழித்துவிட்டாள்!’ என்று புறம் பேசுகிறவர்கள் பொறாமையால் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் தோல்வி அடைவது என்னவோ நாம்தான். நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறவர்களை `நண்பர்கள்’ என்று கருதி ஏமாறாமல் இருப்பதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை.

    `நம்மை இவள் அலட்சியப்படுத்துகிறாளே!’ என்ற ஆத்திரத்தில், `கர்வி’ என்று பிறரிடம் அவதூறு பேசுவார்கள். பேசிவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (29)

    நிர்மலா ராகவன்

    பயிரை மேய்ந்த வேலி

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

    “அந்தப் பெண்ணின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட குரல் ஆசிரியர்களின் பொது அறையில் என்னெதிரில் வந்து அமர்ந்திருந்தவருடையது. ஐம்பதுக்கு மேற்பட்ட வயதையே தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பதினான்கு வயது மாணவிகளைத் தம் இச்சைக்குப் பணிய வைக்கத் தயங்காதவர் அவர்.

    `வதைக்கு உள்ளானால், உடனே எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிறரிடம் அதைப் பகிர்ந்துகொண்டு, அதை நிறுத்தும் வழியைப் பார்க்கவேண்டும்!’ என்று நான் வகுப்பில் எப்போதோ கூறியதை நினைவு வைத்துக்கொண்டு, இரண்டு மாணவிகள் என்னிடம் அவருடைய லீலைகளைத் தெரிவித்திருந்தனர்.

    நான் பள்ளிக்கூடத்தின் மேலிடத்துக்குப் புகார் செய்ததை அறிந்து, என்னை வசப்படுத்திக்கொள்ள நினைத்திருப்பார்!

    தான் செய்த தவறு சரிதான் என்று என்னை நம்ப வைக்க முயற்சி செய்கிறாரா? எனக்கு ஆத்திரம் பெருகியது. விருட்டென எழுந்து அப்பால் சென்றேன்.

    “இவள் மிகவும் ANTI-SOCIAL! பிறருடன் கலகலப்பாகப் பழகத் தெரியவில்லை,” என்று என்னைப்பற்றிய குற்றச்சாட்டை ஒருத்தியிடம் கூறியிருக்கிறார். எல்லாம், அது என் காதில் விழுந்து, நான் இளகிவிடுவேனோ என்ற நப்பாசைதான்!

    “இந்தமாதிரி மனிதரை என் நண்பர் என்று கூறிக்கொள்வதைவிட, நான் உம்மணாமூஞ்சியாகவே இருந்துவிட்டுப்போகிறேன்!” என்றேன், அலட்சியமாக.

    தான் செய்வது காதில் விழுந்தாலும், மற்றவர்கள், `பெண்கள் விரும்பித்தானே இப்படி செய்கிறார்!’ என்று அவரை ஆதரிக்க, அவர் வேறு பல முயற்சிகளைக் கையாண்டார். தினமும் ஏதாவது கேக் வகைகளோ, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களோ வாங்கிவந்து, தலைமை ஆசிரியையிடம் கொடுத்து, எல்லா ஆசிரியர்களுக்கும் விநியோகிக்கச் செய்வார்.

    என் முறை வந்ததும், நான் அதை வாங்க மறுத்துவிடுவேன். வற்புறுத்துவார்கள், ஒவ்வொரு நாளும். என் பதில் என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கும்: `NO THANKS’.

    விளையாட்டுத் தினத்தன்று மாணவ மாணவிகளுக்குப் பரிசுப்பொருட்கள் வாங்க நிறைய காசு கொடுத்தார். அது போதாதா, பிறரது கணிப்பில் அவர் உயர!

    அந்த சமயம், `பாலியல் வதை’ என்ற தலைப்பில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதாக அறிவித்திருந்தார்கள். ஒரு தினசரியின் சார்பில் நான் கலந்துகொண்டேன்.

    `ஒரு மாணவி தான் வதைப்படும்போது, அதை பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ தெரிவிக்க வேண்டும்,’ என்றாள் நிகழ்ச்சியை நடத்துபவள்.

    “ஆசிரியரே வதைத்தால்?’ என்னையுமறியாமல் என் குரல் எழும்பியது.

    என் குரலுக்கென ஒரு தனி மூளை உண்டு. பல சந்தர்ப்பங்களில், நானே எதிர்பாராமல், அது ஆக்ரோஷமாகக் கிளம்பிவிடும்.

    ஒரு பிடி கிடைத்த மகிழ்ச்சியுடன், என்னை நிறையக் கேள்வி கேட்டாள். பலமான வற்புறுத்தலுக்குப் பிறகு, எந்த மாநிலம் என்று மட்டும் சொன்னேன்.

    அடுத்த நாளே ஆரம்பித்தது தலைவலி. மேலதிகாரிகள் என்னை விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள்.
    “எதற்காக இப்படிச் செய்தீர்கள்?”

    “என் பேரக்குழந்தைகளுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடம் என்பது ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்!”

    “நல்லவேளை, என் குழந்தைகள் இருவரும் ஆண்கள்!” என்றான் ஒரு மடையன்.

    “இதைக் கேளுங்கள்!” என்று ஆரம்பித்து, எங்கள் பள்ளியில் ஒரு பையனிடம் மாடிப்படியிலேயே முறைகேடாக ஒரு தாற்காலிக ஆசிரியர் நடந்துகொண்டதை நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன்.
    அவர்கள் பதறிப்போனார்கள். உண்மையிலேயே எனக்கு அந்த ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. என்னிடம் கூறியதோ ஒரு ஆண். அவரையும் நான் விட்டுக்கொடுக்கவில்லை.

    “தொலைகாட்சிக்கு ஏன் போனீர்கள்? யாரிடமாவது சொல்லியிருக்கலாமே!”

    “பள்ளிக்கூடத்தில் இதுபற்றி நான் பலமுறை புகார் கொடுத்தும், ஒருவரும் எதுவும் செய்யவில்லை. அந்த மனிதருக்குப் பயந்து, சில பெண்கள் பள்ளிக்கூடத்துக்கே வருவதில்லை!” என்று பொங்கினேன். “ஆசிரியர் ஒருவர் அதெப்படி ஒரு பெண்ணைத் தனியாக அழைத்துப்போய், தகாத முறையில் நடக்கலாம்?”

    அவர்கள் சற்று அயர்ந்து போனார்கள்.

    “நீங்களும்தான் இப்போது தனியாக எங்கள் இருவருடன் இருக்கிறீர்கள்!” என்றான் இன்னொரு மடையன்.

    “நான் இங்கு — தலைமை ஆசிரியையின் அறைக்கு — வந்திருப்பது எல்லாருக்கும் தெரியும்,” என்று பதிலடி கொடுத்தேன்.

    அவர்கள் கேள்விக்கணையால் என்னை துளைத்ததைப் பொறுக்க முடியாது, “இங்கு தப்பு செய்தது நான் இல்லையே! என்னை ஏன் இப்படிப் போட்டு வாட்டுகிறீர்கள்?” என்றேன்.

    “எங்கள் கலாசாரத்தில் இதெல்லாம் தப்பே இல்லை, தெரியுமா?” என்றபோது, நான் பதிலே சொல்லவில்லை. வெறித்தபடியிருந்தேன்.

    சம்பந்தப்பட்ட ஆசிரியரும் பெண்ணும் ஓரினம். நான் வேற்றினத்தவள். அதுதான் அவர்களுக்கு ஆத்திரம், `இவள் என்ன நம்மைக் காட்டிக்கொடுப்பது?’ என்று.

    நடந்தது தப்புதான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், பிரச்னையே இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டுவிட்டால், அதற்கான தீர்வைத் தேடவேண்டாமே!

    (அதுவரை பள்ளிக்கூடங்களில் இம்மாதிரியான செக்ஸ் வதை நடப்பதாக எவரும் வெளியில் சொல்லவில்லை. இப்போது, இருபத்து ஐந்து வருடங்களுக்குப்பின், அம்மாதிரிக் குற்றம் புரியும் ஆசிரியர்களை வேறொரு பள்ளிக்கு மாற்றம் செய்தால் போதாது, எங்காவது அலுவலகத்தில் மேசைமுன் உட்காரும் வேலை கொடுத்துவிடலாம் என்று யோசிக்கிறார்கள்).

    அவர்கள் சற்று திக்குமுக்காடிவிட்டு, “ம்.. அவரையும் விசாரிப்போம்,” என்றார்கள். ஸ்ருதி இறங்கியிருந்தது.

    அதன்பின் அந்தக் கபட ஆசிரியரை இன்னும் அதிகமாக வறுத்தெடுத்து, அவரது காலம் முடிவதற்குள், ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.

    அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் நடுங்கினார். எனக்கு நிறைவாக இருந்தது.

    அவரது சொரூபம் புரியாத மாணவர்கள், ஒரு காரை மலர்களால் அலங்கரித்து, மேளதாளத்துடன் தடபுடலாக அவரை வழியனுப்பினார்களாம். இதுவும் நான் கேள்விப்பட்டதுதான். என்னைத்தான் வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து விட்டிருந்தார்களே!

    குற்றம் செய்தவர்கள் தப்பிக்க, தட்டிக் கேட்பவர்களைப் படாத பாடு படுத்துகிறது அதிகார வர்க்கம்.
    இதனால்தான், `மற்றவர்கள் எப்படியோ தொலைகிறார்கள்! நாம் நன்றாக இருந்தால் சரி!’ என்று பலரும் அசிரத்தையாக இருக்கிறார்கள்.

    பிறகு, `இது கலிகாலம்! அதனால்தான் உலகம் ஒரேயடியாக சீர்கெட்டுக் கிடக்கிறது!’ என்று எதையோ பழிப்பார்கள், தாமும் இவ்வுலகத்தின் ஓர் அங்கம்தான் என்பது புரியாது.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (28)

    நிர்மலா ராகவன்

    பிறரைச் சமாளிப்பது

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1-1

    `என்கீழ் வேலை செய்பவருக்கு அசாத்தியக் கோபம் வருகிறது. கோபம் வந்தால், நாற்காலியைத் தூக்கி எதிரிலிருப்பவர்மேல் எறிகிறார். எதுவும் தன் தவறு என்று ஒத்துக்கொள்ளாது, பிறர்மீது பழி போட்டுவிடுகிறார். அவரைக் கண்டாலே எல்லாரும் ஒதுங்கிப் போகிறார்கள்,’ என்று பலவாறாக அரற்றிய மிஸ் லீ ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிப்பவள். அறுபது வயதுக்கு மேல் இருக்கும்.

    `நான் எத்தனையோ புத்தி சொல்லிப் பார்த்துவிட்டேன். நீங்கள் பேசிப் பாருங்களேன். உங்கள் மொழியைப் பேசுவதால் நீங்கள் சொல்வதைக் கேட்பார்!’ என்றாள்.
    உடனே அவர் அழைக்கப்பட்டார்.

    `உன் விரல்களைப் பிடித்துப் பார்த்து, REFLEXOLOGY வழி உனக்கு என்ன கோளாறு என்று கண்டுபிடித்துவிடுவார்,’ என்று என்னை மணிமாறனுக்கு அறிமுகப்படுத்தினார் மிஸ் லீ.

    அவரது விரல்கள் ஓயாத தலைவலி, காது வலி, வயிற்றுக்கோளாறு என்று பல உபாதைகளைத் தெரிவித்தன.

    “என் மனைவி எல்லாவற்றிலும் தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைக்கிறாள்,” என்று மனைவிமேல் பழி சுமத்தி, தப்பித்துக்கொள்ளப் பார்த்தார் அந்த கேமரன் மலைவாசி.

    கோலாலம்பூரிலிருந்து சுமார் மூன்று மணிநேரப் பயணித்தால் கேமரன் மலையை அடையலாம். நூற்று நாற்பது ஆண்டுகளுக்குமுன் CAMERON என்பவர் கண்டுபிடித்து, ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. இப்போது, ஒரு மணி நேரம், வளைவுகள் கொண்ட பாதையில் கார்களும் லாரிகளும் போனவண்ணமிருக்கும்.

    இம்மலைத்தலம் கடல் மட்டத்திற்குமேல் 1,500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. தேயிலைத் தோட்டம் பிரசித்தமானது. காய்கறிகள், மலர்கள் (முக்கியமாக, ரோஜா, சாமந்தி) மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் அங்கிருந்து சிங்கப்பூர், தாய்வான், ஹாங்காங் மற்றும் மலேசியா முழுவதிற்கும் அனுப்பப்படுகின்றன.

    பெங்களூரில் வயதானவர்கள் சாயங்கால வேளைகளில் உலவப் போகும்போது, காதில் பஞ்சை வைத்துக்கொண்டு, கழுத்தைச் சுற்றி கம்பளித்துணி போர்த்திக் கொண்டிருப்பார்கள். அப்போதுதான் குளிர் தாக்காதாம். கடும்குளிரில் அலைவதால், கேமரன் மலையில் பலருக்கும் காது வலி. (இந்த எளிமையான பஞ்சு வைத்தியத்தைச் சொல்லிக் கொடுத்தேன்).

    வயிற்றில் எரிச்சல் என்று இதயப் பரிசோதனைக்குப் போனதாகத் தெரிவித்தார் மணிமாறன். `வேளாவேளைக்குச் சாப்பிட மறந்துவிடுகிறது,’ என்றார், சற்று வெட்கத்துடன். `அடிக்கடி கோபம் வருகிறது,’ என்றும் ஒத்துக்கொண்டார்.
    “எதற்கு கோபப்படுவீர்கள்?”
    “வேறு ஒரு இடத்திலும் நான் வேலை பார்க்கிறேன். அங்கு நானும் என் கீழிருக்கும் பத்தொன்பது பேரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்போம். ஆனால் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்து, எங்களைப்பற்றிப் பிறரிடம் அவதூறாகப் பேசுவாள் சீனச்சி. அதனால் அடுத்த முறை ஏனோதானோ என்று வேலை செய்வார்கள் அவர்கள்,” என்று சொல்லும்போதே அவர் முகத்தில் ஆத்திரம்.
    “வயதானவளா?”
    ஆமென்றதும், “கிழவி மூளைகெட்டு என்னவோ பேசுதுன்னு விடுங்க,” என்று நான் சொன்னதும் சிரித்தார்.

    நாம் எல்லாரையும் எப்போதும் சந்தோஷப்படுத்த முடியாது. இது புரியாது, பிறர் நம்மை என்ன சொல்லிவிடுவார்களோ என்று பயந்து, பயந்து நம் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் யோசித்துச் செய்தால், நம் நிம்மதிதான் கெடும். நாம் தெரிந்தே பிறருக்குக் கெடுதல் செய்யாதவரை எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

    “அவளுக்கு நீங்கள் செய்வதுபோல் கடுமையான வேலைகளைச் செய்ய முடியாது. வயிற்றெரிச்சலுடன் ஏதோ பேசுகிறாள் என்று உங்கள் ஆட்களிடம் சொல்லிச் சமாதானப்படுத்துங்கள்! தான்தான் மேலதிகாரி என்ற அதிகாரத்தைக் காட்டிக்கொள்ள காரணமில்லாமல் குறை கண்டுபிடிப்பார்கள் சில பேர்!”

    பிறர்மீது நாம் கோபம் கொண்டால், அவர்களுக்கு அதனால் பாதிப்பு எதுவும் கிடையாது. நம் உடல்நிலைதான் கெடும். ரத்த அழுத்தம், மைக்ரெய்ன் தலைவலி, கால்வலி என்று திண்டாட நேரிடும்.

    சிறிது நேரம் பேசியவுடன், “நீங்க ரொம்ப குண்டு. பத்து கிலோ குறைக்கலாம்,” என்றேன் உரிமையுடன்.

    “மனைவி எல்லாத்திலேயும் தேங்காய்ப்பால் போடறாங்க. சாப்பாடு நல்லா இருக்கேன்னு திரும்பத் திரும்பப் போட்டுக்கிட்டு சாப்பிடறேன்,” என்றார்.

    அவர் மனைவி சமையலில் கெட்டிக்காரி. அதுவே தொழிலும்கூட.

    “தேங்காய்ப்பால்,” என்று மீண்டும் ஆரம்பித்தவரிடம், “ஒங்க மனைவிகிட்டேயும் ஒரு வார்த்தை சொல்றேன்,” என, தன் மனைவியையும், இரு குழந்தைகளையும் அழைத்து வந்தார். வீடு அருகில்தான் இருந்தது.

    “எல்லாரும் குண்டு!” என்றேன், என்னையுமறியாமல். அவர்கள் கோபிக்கவில்லை. பத்து வயதான மகனும், சற்றே பெரியவளான மகளும் மட்டும் நெளிந்தார்கள்.

    “என்னைப் பத்து கிலோ குறைக்கலாம்னு சொன்னாங்க!” என்று மணிமாறன் தன் மனைவியிடம் பெருமையாகத் தெரிவிக்க, “நான் எவ்வளவு குறைக்கணும், ஆன்ட்டி?” என்று ஆவலுடன் கேட்டாள் சுபலட்சுமி.
    அவளை நிற்கச் சொல்லி, மேலும் கீழுமாகப் பார்த்தேன். “பதினைந்து!” என்று நிர்தாட்சணியமாகக் கூறிவிட்டு, “ஒரு மாசம் சமையலில் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டாம். குடிநீரில் ஒரு பிடி சீரகம் போட்டுக் கொதிக்க விட்டு, அதையே குடித்துவந்தால் கொழுப்பு குறையும்.

    “கேமரன் மலையில் காய்கறிகளுக்குப் பஞ்சமில்லைதான் அதற்காக, நிறைய சாப்பாடு போட்டால்தான் குழந்தைகளின்மீது நமக்கு அளவுகடந்த அன்பு என்றில்லை,” என்று கண்டித்தேன்.

    “CHIA SEEDS என்று கடுகு போலிருக்கும் விதைகளில் கால் தேக்கரண்டியை முதல் நாளே ஒரு கோப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் குடியுங்கள். நான் அப்படித்தான் ஊளைச்சதையைக் குறைத்தேன் ,” என்று அடுக்கினேன்.

    இந்த விதைகளில் இரண்டு மேசைக்கரண்டி அளவு நீரில் ஊறவைத்துப் பருகி, போருக்குப் போவார்களாம் பண்டைக்கால மெக்சிகோ வீரர்கள். இதில் புரோதம் முதலான பலவித சத்துக்களும் அடங்கியிருப்பதால், பசி எடுக்காது. களைப்பும் இருக்காது. (`மத்தியானம் தூங்கக்கூட முடியவில்லை!’ என்று ஒரு தூக்கப்பிரியை என்னிடம் புலம்பினார்!).

    “என்னங்க! என்னமோ சொல்றாங்களே, அதை இன்னிக்கே வாங்கிட்டு வாங்க,” என்று கணவனைக் கெஞ்சினாள் மனைவி.

    சிறிது நேரத்துக்குள் ஒரு பாக்கெட் சியா விதைகளுடன் வந்தார் மனிதர்.

    உடல் பருமனாகவோ, நிமிர்ந்து நடப்பதைப்பற்றி நாம் அலட்சியமாகவோ இருந்தால், கூன் விழும். என்னதான் தற்காப்பு கலைகளும் நாட்டியமும் பயின்றாலும், குனிந்து நிமிருவது, வளைவது எல்லாம் கடினம்தானே?

    கடும் உழைப்பாளியும், தன்கீழ் வேலை பார்ப்பவர்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டவளுமான மிஸ்.லீ தன் தலையில் ஒரு தடிமனான புத்தகத்தை வைத்து நடந்து காட்டினாள். அவர்களால் முடியவில்லை. பக்கவாட்டில் ஆடியது உடல்.

    கண்டிப்பாகப் பேசியதற்கு ஈடு செய்வதுபோல், “நான் அடுத்த முறை வரும்போது, அழகா இளைச்சிருக்கணும்,” என்றேன். ஆனால் குரலில் என்னவோ விளையாட்டுத்தனமான மிரட்டல்.

    “இவங்க தினமும் தேங்காய்ப்பால்..,” என்று ஆரம்பித்தவரிடம் கண்ணைக்காட்டித் தடுத்துவிட்டு, “எந்தக் குடும்பத்திலே புருஷன் மனைவிக்குள்ளே சண்டை இல்லே? ஒங்க சண்டையை வீட்டிலே வெச்சுக்குங்க,” என்றேன்.

    குழந்தைகள் சிரித்தார்கள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (27)

    நிர்மலா ராகவன்

    அநாவசிய பயம்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1

    சமீபத்தில் நவராத்திரி விழா ஒன்,றில் என்னிடம், `உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்ற கோரிக்கை விடுத்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு தயக்கத்துடன், “எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறது!” என்று கூறிய லேகா நாற்பது வயதுகூட நிரம்பாதவள்.

    “என்ன பயம்?” என்று கேட்டேன். அன்று அவளுடைய பத்து வயது மகள் நாட்டியம் ஆடுவதாக இருந்தது.

    “அவளுக்கு ஒப்பனை செய்வதில் ஏதாவது கோளாறு ஆகிவிடுமோ என்றுதான்!” என்றாள்.

    அவளுடைய முன்கதை தெரிந்திருந்ததால், `இதற்கெல்லாம் ஒரு பயமா!’ என்று சிரிக்கத் தோன்றவில்லை.

    வெளிநாட்டில் இருந்த ஒருவருக்கு மலேசியாவிலிருந்த லேகாவை மணமுடித்திருந்தனர் அவள் பெற்றோர். தட்டிக் கேட்க யாருமில்லாததாலோ, என்னவோ, அவளை வதைத்தார் கணவர். அவர் அகால மரணம் எய்தியதும், மாமியார் பலவாறாக வதைக்க ஆரம்பித்தாள். அவளை உயிருடன் கொளுத்த முயன்றாளாம். எப்படியோ தப்பித்து, மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு வந்து அடைக்கலம் புகுந்தாள்.

    ஆனால் அங்கேயும் நிம்மதி கிடைக்கவில்லை. `கல்யாணமான பெண், கணவன் இருக்கிறானோ, இல்லையோ, அவன் வீட்டில்தான் நிரந்தரமாக இருக்க வேண்டும்,’ என்ற பத்தாம்பசலிக் கொள்கை கொண்டவர்கள் அவளுடைய பெற்றோர். `சுயநலம் பிடித்தவள்! உன் தங்கையின் நிலையை யோசித்துப் பார்த்தாயா?’ என்று ஓயாது பழித்தாள் தாய்.

    சமீபத்தில் லேகாவின் தங்கைக்குக் கல்யாணம் நடந்தது. அதில் பிறருடன் கலந்துகொள்ள அவளுக்கு அனுமதி இல்லையென்று பலவாறாக இழித்துப் பேசினார்கள். அழுவதைத் தவிர லேகாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

    என் சிறுவயதில், விதவையான பாடகிகளை கல்யாணக் கச்சேரிகளுக்கு அழைக்கத் தயங்குவார்கள் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். விதவைப்பெண்ணைப் பார்த்தால், மணப்பெண்ணின் மனம், `நாமும் அதுபோல் ஆகிவிடுவோமோ!’ என்று கவலைப்படுமாம். ஏன், லேகாவின் தங்கைக்கு தன் அக்காள் விதவை என்ற உண்மை முதல்நாள் தெரியாதா?

    லேகா வருந்துவதைப் பார்த்து, அவள் மகளுக்கு ஆத்திரம். அப்பெண்ணை நாட்டியம் ஆடும்படி கேட்டபோது, `முதலில் எங்கம்மாவை மரியாதையாக நடத்துங்கள்!’ என்று திட்டவட்டமாகக் கூறினாளாம். லேகா பெருமிதத்துடன் தெரிவித்தாள்.

    சொந்தக் குடும்பத்திலேயே மதிப்பும் மரியாதையும் கிடைக்காத ஒருத்தி வீண் குழப்பத்துக்கும் பயத்துக்கும் ஆளாகுவதில் என்ன ஆச்சரியம்? அந்தப் பயத்தை தன்னை நல்லபடியாக நடத்தாத தாயுடன் எப்படிப் பகிர்ந்துகொள்ள முடியும்?

    “பாதி சமயம், நம் பயம் வீண்தான்,” என்று அவளுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தேன். “ஒப்பனை சரியாக இல்லாவிட்டால் என்ன குடி முழுகிவிடப் போகிறது! நடன ஆசிரியை சரி செய்து விட்டுப்போகிறாள்!” என்றுவிட்டு, “ஆனால், உன் பயம் அதுவல்ல. நீ அனுபவித்த துயரங்களும் துன்பங்களும் உன்னை இன்னும் ஆட்டுவிக்கின்றன,” என்று நான் சொல்லிக்கொண்டே போனபோது, அவள் வருத்தத்துடன் தலையசைத்தாள்.

    “பரீட்சைக்குப் போகுமுன் ஒரு மாணவி பயப்படுவதுபோல்தான் இது. நன்றாகப் படித்திருப்பாள். இருந்தும், நாம் படித்ததெல்லாம் கேள்வித்தாளில் வருமோ, அல்லது படித்ததை மறந்துவிடுவோமோ என்ற வேண்டாத பயமெல்லாம் வரும். கடைசியில் பார்த்தால், நன்றாகவே எழுதி, நல்லபடியாக தேர்ச்சியும் பெற்றிருப்பாள். அவள் பயந்ததெல்லாம் வீண். அநாவசியமாக பயப்படுவதால், நம் சக்திதான் விரயமாகி, உடல்நிலை கெடுவதுதான் நடக்கும்!”

    ஒருவர் குழப்பத்துடன் இருக்கும்போது, சம்பந்தமில்லாத வேறு ஒருவரின் நிலையைச் சொல்லும்போது சிறிது ஆறுதல் அடைகிறார்கள், நாம் மட்டும் தனியாக இல்லை என்ற நிதரிசனம் புரிந்து.

    லேகாவின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. “நீங்கள் பரீட்சையைப்பற்றிச் சொன்னது ரொம்ப சரி, ஆன்ட்டி,” என்று சிரித்தாள்.

    ஏதாவது செய்ய ஆரம்பிக்குமுன்னரே, `நம் முயற்சியில் தோல்வி அடைந்துவிடுவோமோ!’ என்று அஞ்சுபவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

    புதிதாக எதையாவது செய்ய ஆரம்பிக்கும்போது அச்சம் ஏற்படுவது சகஜம். ஆனால், அதையும் மீறி, அந்தச் செயலைச் செய்தால் நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    ஒரு காரியத்தில் வெற்றி பெற்றவர்கள் அடுக்கடுக்காக வெற்றி பெறுவது இந்த மனப்போக்கினால்தான். இவர்களுக்கு தோல்வியும் அடுத்து என்ன செய்யக்கூடாது என்ற பாடத்தைப் புகட்டும். தோல்வியால் மனம் தளர்வது கிடையாது. அதில் அவமானம் இருப்பதாகவும் இவர்கள் கருதுவதில்லை.

    கதை: என்னுடன் வேலை பார்த்த மேரியை அவள் தாய் பொத்திப் பொத்தி வளர்த்தாளாம். கணவரையும், இன்னொரு மகளையும் போர்க்காலத்தில் பறிகொடுத்திருந்த அத்தாய் செய்தது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அதன் எதிர்விளைவாக, மேரிக்கு தன்னம்பிக்கை குன்றிவிட்டது. ஏதாவது தப்பு செய்துவிடுவோமோ என்று பயந்துகொண்டே இருந்ததில், மிக மிக நிதானமாகத்தான் எதையும் செய்வாள்.

    `எப்போது மேரி டீச்சர் பாடம் நடத்தினாலும், எங்களுக்குத் தூக்கம் தூக்கமாக வருகிறதே, என்?’ என்று சில மாணவிகள் என்னிடம் கேட்டபோது, என்னால் அவர்களுக்குப் பதிலளிக்க முடியவில்லை.

    கதை: ஒரு முறை, ஆசிரியர் தினத்திற்காக நான் எழுதித் தயாரித்த நாடகத்தில் நடிக்க மேரியை அழைத்தேன்.

    `சர்ச்சில் நான்தான் பியானோ வாசிப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பேதிதான்!’ என்றாள்,பரிதாபமாக. `எனக்கு மேடை ஏறுவது என்றால் கொள்ளைப்பயம். வயிற்றுப்போக்கு வந்துவிடும்!’ என்று தாழ்மையுடன் மறுத்தாள்.

    என்னைப் போன்ற சில `துணிந்தகட்டை’களுடன் நாடகத்தை ஒப்பேற்றினேன் – உங்களுக்கு மாணவிகள் செய்யும் எதனால் கோபம் வருகிறதோ, அந்த மாணவியாக மாறி நடியுங்கள். மனம் லேசாகிவிடும்!’ என்று ஆசை காட்டி.

    ஒரு மாணவி வகுப்பில் காலைப் பரத்திக்கொண்டு உட்கார்ந்திருக்க, அவளைக் கண்டித்தபோது, `நான் ஷார்ட்ஸ் போட்டிருக்கிறேன். பாருங்கள்,’ என்று குட்டைப்பாவாடையைத் தூக்கிக் காட்டியதோடு நில்லாமல், ஒரு சுற்று வேறு சுற்றினாளாம். வேறொரு ஆசிரியை அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தை விவரிக்க, அப்பாத்திரம் நாடகத்துக்கு நல்ல நகைச்சுவையைக் கொடுக்கும் என்று தீர்மானித்தேன்.

    `நீங்களும், உங்கள் யோசனையும்! இந்தமாதிரி பாத்திரத்தில் நடிக்க யார் முன்வருவார்கள்!’ என்று சக ஆசிரியை ஒருத்தி கேலி செய்ய, நான் அவளையே உற்றுப் பார்த்தேன்.

    `நீங்களா!’ என்று பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

    நாடகம் முடிந்ததும், `நான் ஒரு ஒரு வருடத்தில் இவ்வளவு சிரித்ததில்லை,’ என்று ஓர் ஆசிரியை பாராட்டினாள். (அது பெண்கள் பள்ளிக்கூடம்).

    இதை எதற்கு விவரிக்கிறேன் என்றால், `நாம் செய்வது கேலிக்கூத்தாக ஆகிவிடுமோ?’ என்று பயந்திருந்தால், அப்படி ஒரு பாத்திரத்தை நான் ஏற்றிருக்க முடியாது. பிறர் சிரித்தால், அது என்னைப் பார்த்தல்ல என்று புரிந்திருந்தேன்.

    `நம்மைப்போன்ற ஒரு மாணவி அப்படிச் செய்தபோது, நமக்கு ஏன் அதிர்ச்சி ஏற்படவில்லை?’ என்று அவர்களை யோசிக்க வைத்தது அந்த நாடகம்.

    `மதிப்புக்குரிய ஆசிரியை இப்படியெல்லாம் நடிக்கலாமா?’ என்று யாரும் முகம் சுளிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தாலும், அந்த ஒருவருக்காக நான் மனம் தளர்ந்திருக்க மாட்டேன்.

    பிறர் நம்மைப் பாராட்டுவார்களா, பழிப்பார்களா என்று சந்தேகப்பட்டபடி ஒரு காரியத்தில் ஈடுபட்டால், அரைமனதாகத்தான் இருக்கும் நமது பங்களிப்பு. ஏனோ வெற்றி கிடைக்கவில்லையே என்று அப்புறம் ஏங்குவது வீண்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (26)

    நிர்மலா ராகவன்

    பிறரைப் புரிந்துகொள்ள..

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1

    கமலஹாசன் மிக நல்ல நடிகர் என்கிறோமே, ஏன்?

    நடிகை ராதிகா ஒரு மேடையில், `இவர் காதல் காட்சிகளில் நடிக்கும்போது, ஒவ்வொரு நடிகைக்கும், `இவருக்குத்தான் நம்மேல் எவ்வளவு காதல்!’ என்கிற பெருமிதம் ஏற்படும். ஆனால், `இப்போதுதான் புரிகிறது. ஓர் எருமையை இவர்முன் நிறுத்தினாலும், அப்படித்தான் பார்ப்பார்!’ என்றாரே, பார்க்க வேண்டும்! நடிகருக்கே சிரிப்பு வந்துவிட்டது.

    உணர்ச்சிகளை மாறிமாறிக் காட்டினால், நடிப்போ, நாட்டியமோ, பாத்திரங்களின் நுட்பமான உணர்வுகள் பார்ப்பவர்களைப் போய்ச்சேரும்.

    வட நாட்டு நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும்போது, மொழியின் ஆழத்தை உணர்வதில்லை. அதனால் எந்த தருணத்தில் என்ன பாவம் காட்டவேண்டும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அர்த்தத்தையெல்லாம் எதற்குப் புரிந்துகொள்ள வேண்டும், நம் உடலழகே போதாதா என்று மெத்தனமாக அவர்கள் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. சமயாசந்தர்ப்பம் புரியாது சிரித்து வைக்கிறார்கள். (கஷ்டம்!)

    இயக்குனர் `சிரி’ என்கிற போதெல்லாம் சிரித்துவைத்தால் மட்டும் போதுமா? சிரிப்பில்தான் எவ்வளவு விதங்கள்! ஒரு குழந்தையைப் பார்த்து கண்களில் கனிவுடன் சிரிப்பது, கேலிச்சிரிப்பு, பிறர் நம்மை புகழும்போது வரும் பூரிப்புடன் கூடிய புன்னகை — இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மொழியோ, கதையில் குறிப்பிட்ட சந்தர்ப்பமோ புரியாதவர்கள் ஒரே மாதிரி சிரித்து வைப்பார்கள். இதனால்தான் இவர்களது நடிப்பு எடுபடுவதில்லை. சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.

    மொழி தெரியாவிட்டாலும், சில நடிகர்களும் நடிகையர்களும் ஒரு காட்சியின் ஆழத்தைப் பிறர் விளக்கப் புரிந்துகொண்டு, தம் தனித்துவத்திற்கேற்ப தேவையான உணர்ச்சிகளை தம் உடலாலும் முகத்தாலும் காட்டுவதும் உண்டு. (அப்பாடா!) எதிர்நீச்சல் படத்தில் வரும் கதாநாயகியின் தந்தை ஷரத் லோஹிதாஷ்வா, கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இருவரும் மராத்தி மொழியினராம். சொந்தக் குரலில் பேசாவிட்டாலும், தம் உணர்ச்சிகளைக் காட்ட மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை என்பது பாராட்டுக்குரியது.

    பரதநாட்டியம் என்ற வார்த்தையின் முதல் எழுத்திலேயே `பாவம்’ என்றிருக்கிறது. பார்ப்பவரைப் பரவசப்படுத்த பாடல் வரிகளுக்கேற்ற உடலசைவு மட்டும் போதாது. என்ன ஆடுகிறோம் என்று புரிந்துகொண்டதற்கு அடையாளமாக நவரஸங்களையும் கொட்டும் முகபாவங்கள், அங்க அசைவுகள் ஆகியவை நாட்டியத்திற்கும் இன்றியமையாதவை.

    தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், அல்லது அதில் நன்கு உரையாடத் தெரிந்திருந்தாலும், எல்லாருமே தாம் ஆடும் பாடலைப் புரிந்துகொண்டு, முகபாவங்கள் காட்டுவர் என்று கூற முடியாது.

    சிறு பெண்கள் நடனமாடும்போது, முதல் சில வருடங்கள் சற்று பயந்தாற்போல் இருப்பார்கள். அடிக்கடி தாயின் பக்கம் கண்கள் அலையும். அவர்கள் ஆடி முடிந்ததும், `சிரிச்சபடி ஆடணும்!’ என்று ஆசிரியையும், அம்மாவும் கூறுவார்கள். கோரிக்கை மிரட்டலாகவோ, கொஞ்சலாகவோ வரக்கூடும். `சரிதான்,’ என்று அவர்களும் சிரித்த முகத்துடன் ஆட சில வருடங்கள் பிடிக்கும். ஆனால் அது போதாது.

    ஏன், அதுதான் பிறர் சொல்வதைக் கேட்டு, சிரித்தபடி ஆடுகிறார்களே என்கிறீர்களா?
    பாடல் முழுவதும் முகம் விகசித்தபடி இருக்கும்.

    இப்படி ஆடிய ஒரு பெண்ணிடம் நான் கேட்டேன், `ஏம்மா? `புலித்தோலை அணிந்த சிவன்’ என்னும் இடத்தில், நீ சிரித்தாயே! புலி சிரித்து பார்த்திருக்கிறாயா?’

    துர்கை அம்மனுக்கு அப்பெயர் வரக் காரணமாக இருந்த கதை: துர்க்காமா என்ற அசுரன் பல காலம் தவம் இருந்து, பிரம்மா அவன்முன் தோன்றியதும், `ஒரு வரம் வேண்டும்!’ என்று கேட்கிறான்.

    எப்படிக் கேட்பான்?

    ஒருவரை நாம் ஏதாவது வேண்டும்போது, மரியாதையாகக் கேட்போம். இல்லையா?

    சுயமரியாதையின்றி, குறுகிய காலத்தில் எதையும் சாதிக்க விரும்பும் காரியவாதிகள் கூனிக் குறுகுவார்கள். கூழைக் கும்பிடு போடுவார்கள். பல்லிளிப்பார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும், நினைத்தது நடந்துவிட்டால், அதற்குப்பின் எதிரிலிருப்பவரை மறந்துவிடுவோம், அலட்சியமாகப் பார்ப்போம் என்று. அந்த பொய்மை கண் சட்டென ஒரு பக்கம் அலைவதில் தெரியும். நினைத்தது கிடைத்தவுடன், உடல் நிமிர்ந்து, அதிலிருந்து ஒரு அலட்சியம் வெளிப்படும். இரண்டு வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படும்போது, இவ்வளவையும் காட்டினால் பார்ப்பவரையும் அந்த உணர்ச்சி தொற்றிக்கொள்ளும்.

    துர்க்காமா பெற்ற வரத்தால் அகிலமே அவன் கைக்குள் வர, கொடுமைகள் பல புரிகிறான். நீர் வற்றிப்போய், மக்கள் அம்மனிடம் முறையிடுகிறார்கள்.

    தண்ணீர் கிடைக்காது வாடும் உயிரினங்களின் துயரம் அவர்கள் முகத்தில். `எங்களுக்கு வேறு வழியே இல்லை!’ என்ற கெஞ்சல். `ஏதாவது செய்யேன்!’ என்ற ஏக்கம்.

    அம்மனுக்கோ முதலில் ஆத்திரம், கேடுகெட்டவனுக்கெல்லாம் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான் என்பதுபோல். மக்களின் பரிதவிப்பைக் கண்டு இரக்கம், கருணை முகத்தில். அவள் நீரைச் சொரியும்போது, தான் பெற்ற மகவிற்கு அமுதூட்டும் அன்னையைப்போல அன்பு.

    இறுதியில், துர்க்காமாவிடமிருந்து வேதங்களை மீட்டு, அவனையும் அழித்ததால் துர்கா என்ற பெயர் பெறுகிறாள்.

    நடிகர்கள, நடனமணிகள் மட்டுமின்றி, எழுத்தாளர்களும் தாம் சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகவே மாறிவிட வேண்டும். இதைத்தான் GETTING INTO THE SKIN OF OTHERS என்கிறார்கள். இம்முறையால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.

    பாலித் தீவில் தியானத்தால் இதைச் சாதிக்கிறார்கள். ஒரு நடனத்தில், (தேங்காய் உருமட்டையால்) கொழுந்து விட்டு எறியும் தீயை குதிரையாக மாறி, வெறுங்காலாலேயே அணைக்கிறார்கள். மயிர்க்கூச்செறிய வைக்கும் இடம் அது.

    இன்னொரு நடனத்தில் இருபது நிமிடங்கள் போர்வீரர்கள் `இறந்து’ விடுவார்கள். எந்தவித அசைவும் கிடையாது. மூச்சுவிடுவதற்கு அடையாளமாக அவர்கள் மார்பும் ஏறி இறங்கவில்லை. பார்த்தவர்கள் பயந்தேவிட்டோம். பிறகு, எதுவுமே நடவாததுபோல் அவர்கள் எழுந்தபோதுதான் எங்களுக்கு மூச்சு வந்தது.

    நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களின் தலைவரிடம் அணுகி விசாரித்தேன். அப்போதுதான் சொன்னார், `நாங்கள் தியானத்தால் எந்த மிருகமாகவும், மூச்சற்றவர்கள்போலும் மாறமுடியும்,’ என்று.

    இதையெல்லாம் புரிந்துகொள்ள அதிக வயது ஆகியிருக்க வேண்டும் என்பதில்லை. தியானம் மட்டுமின்றி, நிறையக் கதைகள் படித்து, கதாபாத்திரங்களுடன் நம்மைப் பொருத்திக்கொள்ள முயல வேண்டும். பேசுவதைக் குறைத்து, பிறரைக் கூர்ந்து கவனித்தால், பல்வேறு குணாதிசயங்கள் புலப்படும்.

    உற்று உற்றுப் பாருங்கள், அவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளியும்வரை. மனிதர்களின் மனப்போக்கு, வக்கிரங்கள் புரியும்.

    அதன்பின், பிறர் தாமே வலிய வந்து தம் கதைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கருவிற்காக நாம் அலைய வேண்டியதில்லை.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 25

    நிர்மலா ராகவன்

    உற்று உற்றுப் பார்க்கிறார்களே!

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

    “ஏன் சில ஆண்கள் எங்களை உற்று உற்றுப் பார்க்கிறார்கள்?” என்று என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் சந்தேகம் கேட்டாள். “ஆனால் சீனர்கள் அப்படிப் பார்ப்பதில்லை,” என்றபோது, சிறிது மகிழ்ச்சி அந்த பதின்ம வயதுப் பெண்ணின் முகத்தில்.

    பதிலளிக்க ஒரு சீன மாணவியை அழைத்தேன். “It is silly!” என்று முகத்தைச் சுளித்தாள்.
    இன்னொரு பெண் சேர்ந்துகொண்டாள்: “இவர்களுக்குப் பயந்து உடலைக் குறுக்கிக்கொண்டு நடப்பதில், இடுப்பு வலிக்கிறது, டீச்சர்!”

    மலேசியாவில் குட்டையான ஜட்டி போன்ற ஆடையை அணியும் சீனப்பெண்களை எங்கும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். குளிர் நாட்டிலிருந்து வந்ததால் அவர்களுக்கு பூமத்திய ரேகை அருகிலிருக்கும் இந்நாட்டின் வெப்பத்தைத் தாங்கமுடியாது. `வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாக நான் செய்வது ஷார்ட்ஸ் அணவதுதான்!’ என்று என் சக ஆசிரியைகள் பேசிக்கொள்வார்கள். வேலைக்கு கவுன், குட்டைப் பாவாடை என்று அணிவார்கள்.

    மலாய்க்காரப் பெண்களோ குதிகால்வரை தொங்கும் ஆடை, தலைமுடியை மறைக்க ஒன்று என்று அணிவார்கள். என்கூட வேலை பார்த்த ஒரு பெண்மணி மதத்தைப் போதித்தவள். “உன்னிடம் ஒரு விஷயம் கூறுகிறேன், நிர்மலா,” என்று ஆரம்பித்தாள். “ஒரு பெண்ணின் மணிக்கட்டையும், குதிகாலையும் ஆண்கள் பார்த்துவிட்டால், அவளுடைய உடலிச்சையை அவர்களால் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றாள். அவள் எப்போதும் காலுறை, கையுறை அணிந்திருப்பாள்.

    எனது புடவை பிளவுஸின்கீழ் வெளிப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு, மூன்று அங்குல முதுகுப் பகுதியைப் பார்த்துவிட்டு, “அது எப்படி நீங்கள் உடலின் நடுப்பாகத்தைக் காட்டுகிறீர்கள்?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் இன்னொருத்தி.

    “அது அப்படித்தான்!” என்றேன் அலட்சியமாக.

    ஒரு சீனத்தோழி என் முதுகில் கிள்ளிப்பார்த்தாள். எனக்கு உறைக்கவில்லை என்பதில் அவளுக்கு ஆச்சரியம்.

    ஐரோப்பாவில் சில நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. ஸ்வீடனில் NUDIST CAMP என்ற பகுதியைப்பற்றி IRVING WALLACE என்ற ஆசிரியர் எழுதியிருந்த ஒரு ஆங்கில நாவல் படித்திருந்தேன். அதில், கதாநாயகனின் குறிப்புப்படி, எந்தவித காம இச்சையும் தோன்றவில்லையாம். ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்து, அவர்கள் ஒவ்வோர் ஆடையாக அணியும்போதுதான் மனதில் கிளர்ச்சி ஏற்பட்டதாம்.

    பெண்கள் தம் உடலை மூடி மறைக்க வேண்டும் என்று விதித்தவர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும். `இதெல்லாம் இயற்கைதான்!’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாததால், ‘நம் மனம் இப்படி அலைபாய்கிறதே!’ என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, அந்தக் `கேவலமான’ இச்சையைத் தோற்றுவித்த பெண்களின்மேல் ஆத்திரம் கொண்டு, அவர்களைக் கட்டுப்படுத்தக் கையாளும் உபாயம் என்றே தோன்றுகிறது.

    கதை: ஒருவர் தாம் பெற்ற மகள்களின் உடை விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். சற்று மெல்லிய துணியை பதினெட்டு வயதான அவர்கள் வாங்கி வந்தபோது, `இதுவா!’ என்று அவர் முகத்தைச் சுளித்தாராம். உடனே அவர்கள் கடைக்குத் திரும்பப் போய், மிகக் கனமான துணியை வாங்கினர், புடவைக்கு ஏற்ற பிளவுஸ் தைக்க. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்த செய்தி இது. தந்தை நம் பாதுகாப்பில் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாரே என்ற பெருமையில் விளைந்த மகிழ்ச்சி அது. இந்த மனிதர் மகள் வயதை ஒத்த பெண்களுடன் தகாத முறையில் பழகுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வட, தென்னிந்தியக் கோயில்களில் பெண்களின் மார்புச்சேலை சற்று முன்னேபின்னே இருந்தாலும், முதுகில் (MIDRIFF) ஓரடி தெரிந்தாலும், எந்த ஆணும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கவனித்திருக்கிறேன். கோயிலுக்கு வருவது கடவுளைக் கும்பிட்டுச் செல்ல; பிறரைக் கவனித்து, வம்பு பேச அல்ல என்று புரிந்திருப்பார்கள்.

    இப்போதெல்லாம் மலேசிய நகர்ப்புறங்களில், ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகி அணிவதுபோல் பாதி அல்லது முழுமையான முதுகை வெளிக்காட்டும் பிளவுஸ் அணிவது இளம்பெண்களிடம் நாகரிகமாக ஆகிவருகிறது.

    `இது அசிங்கம்!’ என்று ஆர்ப்பரிப்பவர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களா, அல்லது `அவரவர் செய்வது அவரவருக்குச் சரி’ என்ற பெருந்தன்மை இல்லாதவர்களா?

    ஒருவேளை, எப்போதும், எதற்கும் பிறரைப்பற்றி எதிர்மறையாகவே பேசி, தம் உயர்வையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக்கொள்ள நினைப்பவர்களோ?

    தொடருவோம்

    Share
  • நேற்றைய நிழல்

    நிர்மலா ராகவன்

    “ஏதாவது கடுதாசி வந்திருக்கா?”

    சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தெரிவிப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார்.

    “ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம்.

    அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!”

    “என்னாவாம்?”

    “யாருக்குப் புரியுது மலாயில எழுதினா!”

    அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு கோபம் வந்தது. அதற்குப் பதில் எழுதித் தொலைக்கவேண்டுமே என்ற கவலை எழ, மனைவிமேல் பாய்ந்தார். “விநாயகம் ஒழுங்கா பள்ளிக்கூடம் போறதில்ல? மூணு நாளா வரல்லேன்னு எழுதியிருக்காங்களே!”

    அவளுக்கும் கோபம் எழுந்தது. தான் என்ன மற்ற மாற்றாந்தாய்கள் மாதிரியா!

    “தினமும் காலையில அஞ்சு மணிக்கே எழுந்து, கஷ்டப்பட்டு பலகாரம் பண்ணி அவன் கையில குடுத்து அனுப்பறேன் நான்! புத்தகப்பையை எடுத்துக்கிட்டு, ஆறரை மணி பஸ்ஸுக்குப் போயிடுவான். நீங்க வேணுமானா, அவனையே கேட்டுப் பாருங்க!” வீராவேசமாக ஆரம்பித்தவளின் குரல் அடைத்தது. அழுதுவிடுவாளோ என்று பயந்தார் குஞ்சிதபாதம்.

    ஆறு வயது மகனான விநாயகத்துடன் அவர் திகைத்துப்போய் நின்றிருந்தபோது, அவருடைய வாழ்வைப் பங்கு போட்டுக்கொள்ள துணிந்து வந்தவள் திலகம். அவளுடைய ஏழ்மையும், குள்ளமும், குண்டுமான உருவமும் அவரைப் பாதிக்கவில்லை. மாறாக, குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் கையில் விட்டுவிட்டு, தன் உத்தியோகம் உண்டு, வீட்டில் தொலைகாட்சி உண்டு என்று நிம்மதியாகக் காலத்தைக் கழித்தார்.

    அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தான் விநாயகம், தன்னைப்பற்றி ஒரு பூகம்பமே உருவாகிக் கொண்டிருப்பதை உணராது.

    பதினாறு வயதாகியும், பன்னிரண்டு வயதே மதிக்கத்தக்க தோற்றம். ஏனோ தானோ என்றிருக்கும் தந்தை, `கண்டிப்பு` என்ற பெயா¢ல் சதா சுடுசொற்களை வீசும் சின்னம்மா, தன் நினைவில் இல்லாத, ஆனால் பிறர் நினைவுபடுத்துக்கொண்டே இருக்கும், தாய் — இவர்களில் யாரால் அவனுடைய வளர்ச்சி பாதிக்கப் பட்டதோ!

    வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி அடையவில்லையே என்ற தாபம் ஒரு புறம்; உடல் வளராமலேயே நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மற்றொரு புறம். அதோடு, தான் யாருக்கும் வேண்டாதவனாக குறித்தும் அவனுக்கு கலக்கம் உண்டாயிற்று.

    பள்ளிக்கூடத்துக் கட்டுப்பாடுகள், கொள்கைகள் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை முளைக்க ஆரம்பித்தது.

    தான் ஒழுங்காக இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கமானது கெட்டலையும்போது பக்கபலமாக நண்பர்கள் இருக்கிறார்களே என்ற திருப்தியில் மறைந்தது.

    எப்படியோ இவ்வளவு நாட்களும் யார் கண்ணிலும் படாமல் தப்பியாயிற்று என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தவன், தந்தை கையிலிருந்த கடிதத்தை அவன்மீது வீசி எறிந்து, கூடவே, “ஏண்டா? இதுக்கு என்னா அர்த்தம்னு கேக்கறேன்!” என்று ஒரு அதட்டலும் போட்டதும், திகைத்துப் போனான்.

    ஒரு கணம்தான். குறுக்கு வழியிலேயே போய் பழகிய மூளை அப்போது அவனைக் கைவிடவில்லை. “சின்னம்மாவையே கேட்டுக்குங்கப்பா, நான் பள்ளிக்கூடம் போகாம வீட்டிலேயே இருந்திருக்கேனா அப்படின்னு!” திமிராகப் பேசினான்.

    “ஒழுங்காப் போயிருந்தா, இந்த கடுதாசி எப்படி வந்திச்சு?” மலேசிய அரசாங்கப் பள்ளிகளின் விதிமுறைப்படி, தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பள்ளிக்குச் செல்லாவிட்டால், வீட்டுக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள்.

    அயரவில்லை விநாயகம். “டீச்சர் என் பேரைக் கூப்பிடறப்போ, நான் பதில் சொன்னது கேக்காட்டி, `ஆப்ஸெண்ட்` போட்டிருப்பாங்க!” என்று ஒரேயடியாக அளந்தான்.

    “எதுக்கு மனசுக்குள்ளே முனகிக்கிறியாம்? உரக்க பதில் சொல்றது!”

    “மத்தவங்க பேசறதால, என் குரல் அவங்களுக்குக் கேக்கல போலயிருக்கு! இனிமே ஜாக்கிரதையா இருக்கேம்பா!” என்று இரு பொருள்பட பேசினான் விநாயகம். இனிமேல் மாட்டிக்கொள்ளக்கூடாது. அதிகப்படி இரண்டு நாட்கள்தாம் மட்டம் போடலாம்.

    குஞ்சிதபாதத்திற்கு அலுப்பு தட்டியது. மகன் சொல்வது உண்மையோ, பொய்யோ, அதை நம்பினால் நிம்மதி என்று தோன்ற, “சரி, போ. இன்னொரு தடவை இந்தமாதிரி ஏதாவது வந்திச்சோ, முதுகுத்தோலை உரிச்சுடுவேன்!” என்று எச்சரித்துவிட்டு, அந்த சமாசாரத்தை அப்போதே மறந்துவிட்டவராக, தொலைகாட்சியை முடுக்கினார்.

    ஏதோ ஆங்கிலப்படம். கதாநாயகனுக்கு ஆறு பிள்ளைகள். அவளுக்கு நான்கு. இருவரும் விவாகரத்து ஆனவர்கள். காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். மொத்தம் பத்து குழந்தைகள்!

    அவருக்கு ஆச்சா¢யமாக இருந்தது. ஒரு மகனை வைத்தே தன்னால் சமாளிக்க முடியவில்லையே, அது எப்படி இந்தக் குடும்பத்தில் எல்லாரும் சிரிப்பும், கேலியுமாக வளைய வருகிறார்கள்?

    நடப்பதையே காட்டினால், எவன் படம் பார்ப்பான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது.

    சில மாதங்கள் கழிந்தன.

    குஞ்சிதபாதத்திடம் ஒரு கடிதத்தை நீட்டிய விநாயகம், “அப்பா! வர்ற ஞாயித்துக்கிழமை எங்க பள்ளிக்கூடத்தில பி டி ஏ (PTA) மீட்டிங்காம். நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லச் சொன்னாங்க டீச்சர். என்னையும் கூட வரச்சொன்னாங்க” என்றான், சற்றே பயந்தபடி.

    “அது என்னடா கஷ்டகாலம்?” டீச்சர் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற கவலையில் கேள்வி தானாக வந்தது.

    “பெற்றோர் ஆசிரியர் சங்கம். அதாவது, மாணவர்களோட அப்பாவோ, அம்மாவோ டீச்சர்ஸை பாத்துப் பேசறது”.

    “ஓ! அப்போ, மத்த அப்பாவும் வருவாங்க, இல்லே?” தான் மட்டும் தனியாகப் போய் நின்று, உதவாக்கரையான மகனைப் பெற்றதற்கு பேச்சு வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்ற நினைப்பில் சற்று நிம்மதி பிறந்தது.

    பள்ளி வளாகத்துள் நுழையும்போது, குஞ்சிதபாதத்திற்குத் தயக்கம் ஏற்பட்டது. அவருக்குப் பின்னால் தன் சிறிய உருவத்தை மறைத்துக்கொள்ள முயன்றபடி, “அதோ வர்றாங்களே, அவங்கதான் எங்க டீச்சர்,” என்று கிசுகிசுத்தான் விநாயகம்.

    குதிகாலில் சுமார் நான்கு அங்குலம் நீண்ட காலணிகளும், உச்சந்தலையில் போடப்பட்டிருந்த கொண்டையும் அவளை அசாதாரணமான உயரமாகக் காட்டின. உடலைத் தழுவிய மெல்லிய , ஜப்பான் நாட்டு நைலக்ஸ் புடவை, நீல வண்ணத்தில். அதே நிறத்தில் நீண்டு தொங்கிய காதணிகள், கண்ணாடி வளையல்கள். கைக்கடிகாரத்தின் பிளாஸ்டிக் பட்டை மற்றும் நகப்பூச்சும்கூட நீலம்!

    `அலங்காரத்தில செலுத்தற கவனத்தை பிள்ளைங்க முன்னேற்றத்திலேயும் காட்டினா தேவலே!` என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் குஞ்சிதபாதம். `இவ்வளவு அழகா டிரெஸ் பண்ணிக்கிட்டா, வயசுப் பசங்க டீச்சரைத்தானே கவனிப்பாங்க! அவங்க படிச்சுக் குடுக்கறதிலே கவனம் போகுமா?` என்ற கவலையும் பிறந்தது.

    ஆசிரியர்களின் நடையுடை பாவனை அவர்கள் போதிக்கும் பாடங்களில் மாணவர்களுக்குத் தனி ஆர்வத்தை உண்டாக்கும் என்பதெல்லாம் குஞ்சிதபாதத்தின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அவர் என்ன, கல்லூரியிலா படித்திருந்தார் சமூக இயல் தெரிய!

    “அப்பா! இவங்கதான் எங்க டீச்சர், மிஸஸ் பாணி,” என்ற மகனின் குரல் கேட்டு, தம் எண்ணங்களிலிருந்து விடுபட்டார் குஞ்சிதபாதம். “எங்கப்பா, டீச்சர்!”

    மிஸஸ் பாணி புன்னகையுடன் தலையைத் தாழ்த்தினாள், அந்த அறிமுகத்தை ஏற்கும் விதத்தில்.

    “ஒங்களை இதுக்கு முன்னே பாத்ததில்லேன்னு நினைக்கிறேன்!” உருவத்திலிருந்த அழகு குரலில் இல்லை.

    `பாவம்! பிள்ளைங்களோட கத்திக் கத்தி, தொண்டை வரண்டுபோச்சு டீச்சரம்மாவுக்கு!` என்று பரிதாபப் பட்டுக்கொண்டார் குஞ்சிதபாதம்.

    “ரெண்டு நாள் முந்திதான் இவன் வந்து சொன்னான்..,” என்று மென்று விழுங்கினார்.

    “இந்தத் தடவை சொல்லாட்டி, நானே நேரிலே ஒங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு மிரட்டி அனுப்பினேன். ஒரு தடவைகூட விநாயகம் ஒங்ககிட்டே லெட்டரை ஒங்ககிட்டே குடுக்கலியா?”

    “ஏண்டா டேய்!” மகன்மேல் பாய்ந்தார் தந்தை.

    இப்படி ஒரு நோ¢டைத் தாக்குதலை எதிர்பார்த்திராத பையன் மிரண்டே போனான்.

    அவனைப் பார்த்து முறுவலித்தாள் ஆசிரியை. அவளுடைய உத்தியோகத்தில் இந்தமாதிரி எத்தனை அப்பாக்களைச் சந்தித்திருக்கிறாள்!

    “வாங்க. அப்படிப்போய் ஒக்காந்துக்கிட்டு பேசலாம்,” என்று நடந்தவள் பின்னால் பலியாடுகள்போல் இரு ஆண்களும் நடந்தனர்.

    “விநாயகம் ஒரு மாசத்தில ரெண்டு, மூணு நாள் கூட ஸ்கூலுக்கு வரதில்லே. அதுக்காக ஒங்களுக்கு எத்தனை லெட்டர் போட்டேன்! நீங்க ஏன் ஸார் எந்த ஆக்ஷனும் எடுக்கலே?”

    டீச்சரின் குற்றச்சாட்டைச் செவிமடுத்த குஞ்சிதபாதம் திகைத்துப் போனார். அவருக்கு ஒரே ஒரு கடிதம்தானே வந்தது? தன் உடலைக் குறுக்கியபடி பக்கத்தில் நின்றிருந்த மகனை நோக்கித் திரும்பினார். கையும் களவுமாகப் பிடிபட்டு, திருடனைப்போல் அவன் விழித்ததைப் பார்த்து அவருக்கு உண்மை புலனாகியது. தபால்காரரை மடக்கி, தனக்கு வரும் கடிதங்களை பாதி வழியிலேயே பெற்றுக் கொண்டிருக்கிறான்!

    டீச்சர் தன்பாட்டில் தொடர்ந்தாள்: “விநாயகத்தோட படிப்பு மட்டுமில்ல, உடம்பும் ரொம்ப இளைச்சிருக்கு, பாத்தீங்க இல்ல?”

    “அதுக்கு என்னங்க டீச்சர் பண்றது? காலையில போனா, ராத்திரி ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வரான். இங்க தினமும் ஹாக்கி, ·புட்பால் எல்லாம் விளையாடறானாமில்ல!” என்றார் அப்பாவியாக.

    ஆசிரியை பெரிதாக நகைத்தாள். “விளையாடறானா? பாடம் படிக்கவே கிளாசுக்கு வராதவன் விளையாட மட்டும் ஸ்கூலுக்கு வர்றானா? அவன் சொன்னா, நீங்களும் நம்பிடறதா?”

    குஞ்சிதபாதத்துக்கு அவமானம் தாங்கவில்லை.

    அடுத்த கேள்வி பிறந்தது.”ஒங்க மனைவிக்கும், ஒங்களுக்கும் இடையே எந்த மாதிரி உறவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

    என்னென்னவோ கேட்கிறாளே என்று அருவருப்படைந்தார் குஞ்சிதபாதம்.

    அவருடைய எண்ணப்போக்கு முகத்திலும் பிரதிபலிக்க, புன்னகையுடன் விளக்கினாள் மிஸஸ் பாணி. “அதாவது, நீங்க ரெண்டுபேரும் குழந்தைகளோட நலனைப்பத்தி அக்கறையோட சேர்ந்து விவாதிப்பீங்களா? பெத்த பிள்ளைகளோட சேர்ந்து பொழுதைக் கழிக்க விரும்பறீங்களா? இதைத்தான் கேக்கறேன்”.

    எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறாள் என்பது விளங்காது, பதில்சொல்லத் தொ¢யாது விழித்தார் குஞ்சிதபாதம்.

    அவருடைய மௌனத்தை விநாயகம்தான் கலைத்தான், கணீரென்ற குரலில். “எனக்கு அம்மா கிடையாது, டீச்சர். சின்னம்மாதான் இருக்காங்க”.

    மென்று விழுங்கியபடி, ” ஆமாம். என் ரெண்டாந்தாரம்,” என்று சேர்ந்துகொண்டார் குஞ்சிதபாதம்.

    ஏதோ புரிந்தவள்போல் தலையை ஆட்டினாள் மிஸஸ் பாணி. “ஓ! முதல் மனைவி இறந்தபிறகு, விநாயகத்தை வளர்க்க இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டீங்கன்னு சொல்லுங்க!”

    விநாயகத்திற்கு திடீரென்று ஆவேசம் பிறந்தது. “எங்கம்மா செத்துப் போகலே, டீச்சர். யாரோடேயோ ஓடிப் போயிட்டாங்க. அவங்க எங்க குடும்பத்துக்கு உண்டாக்கிட்டுப் போயிருக்கிற களங்கத்தைத் துடைக்க முடியலியே என்கிற ஆத்திரத்திலே என்மேலே வஞ்சம் தீர்த்துக்கிறாங்க இவங்க எல்லாரும்!” பெரிய குரலில் அலறிவிட்டு, சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். ஆண்டாண்டு காலமாகத் தன்னையுமறியாமல் தேக்கி வைத்திருந்த துயரம் எல்லாம் வெளிக் கிளம்பியது.

    என்றோ சிறுவனாக இருந்தபோது நடந்ததை அப்படியே விட்டிருந்தால், அவனுக்கு மறந்து போயிருக்கக்கூடும்.

    ஆனால், அது மனதில் என்றும் நிலைத்திருப்பது அவனுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று எண்ணியவள்போல, திலகம் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாரிடமும் தம்பட்டம் அடிப்பாள்: `விநாயகம் என் சொந்தப் பிள்ளைன்னுதான் எல்லாருமே நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அவன் எங்க வீட்டுக்காரரோட மூத்த சம்சாரத்துக்குப் பிறந்தவன்`. இந்த இடத்தில் சற்று நிதானித்து, கேட்பவர்களை யோசிக்கவைப்பாள். `அந்தச் சிறுக்கி எவனோடேயோ ஓடிப் போயிட்டா. இவரு, பாவம், மானி. சாது. மகனை வளர்க்க என்னைக் கட்டிக்கிட்டார்!` என்று நீட்டி முழக்கி, இன்னொருத்தியின் மகனைப் பேணும் தன் நல்ல குணத்தையும், மூத்தவளுடைய தரக்குறைவான நடத்தையையும் ஒப்பிட்டுக் காட்டுவாள்.

    அதையே திரும்பத் திரும்பக் கேட்கும்போதெல்லாம் விநாயகத்தின் மனம் கொந்தளிக்கும். அப்படிப்பட்ட ஒரு தாய்க்குப் பிறந்த தான் மட்டும் ஒழுக்கமானவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம்தான் அவனிடம் தலைதூக்கியது.

    தன் இருப்பிடத்திலிருந்து எழுந்த ஆசிரியை, மாணவனின் மனக்குமுறலைப் புரிந்துகொண்டவளாய், ஆறுதல் அளிக்கும் வகையில் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

    விம்மலுக்கிடையே தொடர்ந்தான்: “எங்கம்மா செய்த காரியத்துக்கு நானா டீச்சர் பிணை? நீங்கதான் பாக்கறீங்களே! இந்தமாதிரி பாசமே இல்லாத, அக்கறை காட்டாத ஒருத்தரோட வாழ முடியாம அவங்க போனதில என்ன தப்பு? அவங்க நல்ல காலம் போயிட்டாங்க. என்னால முடியலியே! “

    குஞ்சிதபாதம் விக்கித்துப் போனார். மகன் ஒரு முட்டாள், கீழ்ப்படியாதவன் என்றுதான் அதுவரை நினைத்திருந்தார். ஆனால், அவனுடைய குற்றச்சாட்டுகளைக் கேட்டபின், தன்மீதே அவருக்குச் சந்தேகம் பிறந்தது.

    எப்போது மாறினான் இப்படி ஒரு உணர்ச்சிக் குவியலாக?

    எவ்வளவு காலமாக இத்துணை ஏக்கத்தையும் சுமந்து வந்திருக்கிறானோ என்ற எண்ணம் உரைக்க, தன்னையுமறியாமல் மகன்மேல் பாசம் சுரந்தது.

    “கண்ட வழியிலே போறதாச் சொன்னியே, விநாயகம்! சிகரெட்டா?”

    கொஞ்சம் தயங்கிவிட்டு, கண்ணைத் துடைத்தபடி, `ஆமாம்` என்பதுபோல் தலையாட்டினான்.

    “டாடா? (DADAH?)

    போதைப் பழக்கம் கிடையாது என்று தலையசைப்பிலேயே மறுத்தான்.

    சற்றுமுன் நெகிழ்ந்திருந்த குஞ்சிதபாதத்தின் மனம் மீண்டும் கல்லாகியது. சின்னப் பையன், பிறர் எதிரில் தன்னை என்ன பேச்சு பேசிவிட்டான், என்னவோ, எல்லாமே தன் குற்றம் என்பதுபோல்!

    ஆத்திரத்தில் அறிவிழந்தார். மகனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

    “என்னடா சொல்றே? இந்த வயசிலே சிகரெட் பிடிக்கிறியா, காலிப் பயலே! வெக்கமா இல்லே, டீச்சர் எதிரிலேயே ஒத்துக்கிட?”

    துடிக்கும் உதடுகளுடன், தலையைச் சற்றே சாய்த்தபடி ஆங்காரத்துடன் அவரை முறைத்துப் பார்த்தான் மகன்.

    நிலைமையை மிஸஸ் பாணி தன் வழியில் சமாளிக்கப் பார்த்தாள். “நீ கொஞ்சம் வெளியே இரு, விநாயகம். நான் அப்பாவோட தனியா பேசணும்”.

    உதடுகளைப் பிதுக்கியபடி அவன் அசையாது நின்றிருந்தான். வேறு வழியின்றி, அவன் எதிரிலேயே அவன் மனநிலைமையை அலசினாள். “புகை பிடிக்கிறதில்லேன்னு இவன் பொய் சொல்லி இருக்கலாம். ஆனா, இவன் அப்படிச் செய்யல. ஏன் தெரியுமா?”

    தந்தை, மகன் இருவருமே உன்னிப்பாகக் கவனித்தனர், தலையைச் சாய்த்தபடி.

    “தான் கெட்டுப் போறதை தன்னாலதான் தவிர்க்க முடியலே. மத்தவங்களாவது தன்னை நல்வழிப்படுத்த மாட்டாங்களான்னு ஏங்கிப் போயிட்டான்”.

    விநாயகத்திடமிருந்து ஒரு பெரிய விம்மல் வெளிப்பட்டது.

    “அதனாலதான் உண்மையை ஒத்துக்கிட்டான். அதுவே நல்ல ஆரம்பம்தான். என்ன சொல்றீங்க?”

    அந்த அழகிய உடலுக்குள் அறிவு மட்டுமின்றி, அளவற்ற அன்பும் இருப்பது புலன்பட, குஞ்சிதபாதம் மனம் நெகிழ்ந்து கையைக் கூப்பினார்.

    “நம்ப நாட்டிலே பெரும்பான்மையானவங்க பள்ளிக்கூடத்துக்குப் போற வயசுப் பிள்ளைங்கதான். இவங்களை முன்னுக்குக் கொண்டு வந்தாத்தானே நாளைக்கு நாடு உருப்படும்?” அரசியல்வாதிபோல் ஏதேதோ சொல்கிறாளே என்ற அலுப்பு ஏற்பட்டது எதிரிலிருந்தவருக்கு.

    “பிள்ளைங்களை ஒழுங்கு படுத்தறது ஆசிரியர்கள் பொறுப்பு மட்டும்தான் என்கிறமாதிரி நடந்துக்கிறவங்கதான் இங்க அதிகம்,” என்று மேலும் சொன்னாள்.

    குஞ்சிதபாதம் நெளிந்தார்.

    “அடடே! நீங்க வித்தியாசமா எடுத்துக்கிட்டீங்களா? பொதுவாச் சொன்னேன். தனித்தனியா நாம்ப எதுவும் செய்ய முடியாது. ஆனா, பெத்தவங்களும், ஆசிரியர்களும் ஒண்ணு சேர்ந்தா..!”

    தான் செய்யும் தொழிலில் கிடைக்கும் சம்பளத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்கேற்ப வேலை செய்யாது, அதன் மூலகாரணத்தையும், சிறப்பையும் அறிந்து நடக்கும் இவளைப்போல் எத்தனைபேர் இருப்பார்கள் என்று யோசித்தார் குஞ்சிதபாதம்.

    “ஒரு பையனுக்கு அப்பாதான் வழிகாட்டி. அவனோட சின்னம்மா நல்ல எண்ணத்தோட கண்டிச்சாலும், `பெத்த தாயா இருந்தா இப்படி தன் மனம் நோக ஏசுவாளா?`ன்னு நினைச்சு வருந்தலாம். அதுவே நீங்க உரிமையோட கண்டிச்சா, அப்பாவுக்குத்தான் நம்பமேல எவ்வளவு அக்கறைன்னு புரிஞ்சு ஆனந்தப்படுவான். ஒங்க அன்பையும், ஆதரவையும் எப்படியாவது அடையணும்னுதான் அவன் எதை எதையோ தேடிப் போயிருக்கான். நல்ல வேளை, சிகரெட்டோட போச்சு!”

    பள்ளிக்கூட வளாகத்திலிருந்து வெளியே நடக்கும்போது, கோயிலுக்குப் போய்விட்டு வந்த நிறைவு இருவரிடமும்.

    “என்னங்க, ஒன்பது மணிக்கே படுத்துட்டீங்க? சீரியல் பாக்கலே?”

    “அது கிடக்கு! நம்ப மகன் அடுத்த வருஷம் சீனியர் (பள்ளி இறுதியாண்டு) எடுக்கிறானே! இப்பவே பிடிச்சு படிக்கவேணாம்? சும்மா டிவி போட்டா, அதிலதான் அவன் மனசு போகும்!”

    மகன்மேல் அவருக்குப் புதிதாகத் தோன்றியிருந்த கரிசனம் திலகத்திற்குப் புதிராக இருந்தாலும், அவளுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 24

    நிர்மலா ராகவன்

    பொறுத்துப்போகவேண்டுமா, ஏன்?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d
    சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், `எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16).

    இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம்.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், `பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, — இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே!

    சுருங்கச் சொன்னால், கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, `நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள்.

    ஒரு முதிய மாது, `நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! `முண்டை’ என்று அவர் திட்டினாருடி!’ என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (`கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?)

    `அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில் நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள்.

    அவள் சொன்னதுபோல், வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்துத்தான் நம்பிக்கையோடு பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ?

    ஆனால் எல்லாப் பெண்களுமா இப்படி இருக்கிறார்கள்!

    கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை.
    ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல.

    கதை: சுகன்யாவின் தாய் இப்படித்தான்.

    தந்தையோ குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார்.

    அவரைக் கண்டு நொந்துபோய், `எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல் பொறுத்துப்போனாள்.

    இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து, `அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழ்கிறாள்.

    காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், `பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள்.

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள்.

    `தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன்.

    `நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து.

    `ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன்.

    ‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது.

    இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது.

    வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), `நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்!

    உலகில் எட்டு சதவிகிதத்தினர், `அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள்.

    எதுதான் நல்ல தாம்பத்தியம்?

    மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது. குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், `உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, `பெண்ணின் வேலை’, `ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்வது, ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற தன்மைகள் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும்.

    அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள்.

    இருவரில் ஒருவராவது, `நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார்.

    பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும்.

    தொடருவோம்

    Share
  • அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்

    நிர்மலா ராகவன்

    “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)! கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது சங்கீதாவுக்கு.

    சிறகு முளைக்குமுன் பறக்க ஆசைப்பட்டு, கூட்டிலிருந்து தரையில் விழுந்து, பூனை வாயில் மாட்டிக்கொள்ளும் பறவைக் குஞ்சுபோல்தான் இவளும்!

    இவளுடைய நல்ல காலம், உடலெல்லாம் குருதியாக, நிலைகுலைந்த ஒற்றை ஆடையுடன் இலக்கின்றி தெருவில் ஓடிக்கொண்டிருந்தவளை காவல் துறையினர் பார்க்க நேரிட்டது.

    பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அவ்விடம் கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்தது. பெரிய வளாகத்துக்குப் பொருத்தமில்லாத சிறு வீடு. ஆனால், தனி வீடு.

    வாசலில் பெரிய மரம் ஒன்றின்கீழ் பிள்ளையார் வீற்றிருந்தார். மூன்றடி உயரத்தில் கம்பீரமான, கருங்கல் பிள்ளையார். இப்பெண்கள் திருந்தி, நல்வாழ்வு வாழவென அவரவர் மதப்படி பூசை நடத்துகிறார்கள்.

    “எங்கப்பா ரொம்ப மட்டம்! அம்மா — அதைவிட!” தானே தெரிவித்தாள் காளி, தான் சீரழிந்ததை நியாயப்படுத்துவதுபோல்.

    கற்பு வன்முறையில் சூறையாடப்பட்டிருந்த பெண்கள் திக்பிரமையாக நிற்பார்கள், அல்லது ஒரேயடியாக அழுது புலம்புவார்கள் என்றெல்லாம்தான் சங்கீதா படித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண்ணோ, தனக்கு நடந்தது சாதாரணமாக எல்லாரும் அனுபவிப்பதுதான் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறாள்!

    “நான் இப்படித்தான் போவேன்னு எனக்குப் பன்னண்டு வயசிலேயே தெரியும்,” என்று தொடர்ந்தாள் காளி. “ஒருக்கா பக்கத்து வீட்டிலே எங்கம்மாவையும், அந்த வீட்டு ஆம்பளையையும் பாயில ஒண்ணா பாத்தேனா? அப்பவே தோணிப்போச்சு, இந்தமாதிரி அம்மாவுக்குப் பொறந்த நாம்பளும் கெட்டுத்தான் போவோம்னு!”

    `சேற்றில் செந்தாமரை பூப்பதில்லையா?’ என்று இவளிடம் காலங்கடந்து கேட்டு என்ன பயன்! பெருமூச்சை அடக்கிக்கொண்டு, அவள் சொல்லிக்கொண்டே போனதைக் கேட்கத் தயாரானாள் சங்கீதா.

    “எங்கப்பா வெஷம் கலந்த சம்சுத் தண்ணியைக் குடிச்சுட்டு, உசிரை விட்டாரு. `சனியன் விட்டுச்சு’ன்னு, தெகிரியமா அம்மா அநியாயம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதைப் பொறுக்கமுடியாம, பக்கத்து வீட்டு சொர்ணாக்கா அவங்க சோத்துக் கையை அதோ, இங்க வெட்டிட்டாங்க!” முழங்கைக்குக் கீழே காட்டினாள்.

    சங்கீதா மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். இவ்வளவு பயங்கரமான நிகழ்வுகளை இந்தப் பெண்ணால் எப்படி உணர்ச்சியற்ற குரலில் சொல்ல முடிகிறது? ஒரு வேளை, இந்தச் சின்ன வயதுக்குள் அளவுக்கு மீறிய துன்பத்தை அனுபவித்ததால், உணர்வுகள் மரத்துப்போய்விட்டனவோ!

    மரத்தடி பிள்ளையாருக்கு ஆராதனையாகக் காட்டப்படும் கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொள்வதற்குப் பதில், அதை அவசரமாக எடுத்து, வாயில் போட்டுக்கொள்வாளாமே காளி!

    `அது ஒரு வித போதை! இவளுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது!’ என்றாள் மிஸ்.யியோ.

    அப்பழக்கத்தால்தான் எதையும் அசாதாரணமாக ஏற்க முடிகிறதோ இவளால்?
    கதை நாராசமாக இருந்தது. ஆனால், வித்தியாசமான ஒன்றைக் கேட்கத்தானே இத்தனை பிரயாசைப்பட்டு, விசேட அனுமதி வாங்கி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்!

    “அப்புறம்?” என்று ஊக்கினாள்.

    “கை போனதும், அம்மா செஞ்சுக்கிட்டிருந்த தோட்ட (ரப்பர் எஸ்டேட்) வேலையும் போயிடுச்சு. எங்க மாமா வந்து, எங்க ரெண்டு பேத்தையும் டவுனுக்குக் கூட்டிட்டு வந்துட்டாரு!”

    அடுத்து, அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்ததைப்பற்றிச் சொல்லும்போது, காளியின் முகத்தில் சிறிது பிரகாசம் தோன்றியதைக் கவனித்தாள் சங்கீதா.

    அந்த வயதில் தான் எந்தக் கவலையும் இல்லாது, பள்ளிக்கூடம், நீச்சல், சினிமா, பாட்டு கிளாஸ் என்று உல்லாசமாக வாழ்வைக் கழித்தது நினைவில் எழுகையில், சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

    ஓர் ஆன்மா இவ்வுலகில் பிறக்குமுன், தான் சேரவேண்டிய அன்னையைத் தேடுமாம். அதனால்தான், இயற்கையிலேயே

    பெற்றோரின் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள் சில குழந்தைகள்.

    காளியின் ஆன்மா எதற்காக இப்படிப்பட்ட பெற்றோரைத் தெரிவு செய்தது? மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்ற ஆசை ஒன்றே பிரதானமாக இருக்க, எதுவுமே யோசிக்காது, கிடைத்த கருவுக்குள் அவசரமாகப் புகுந்துகொள்ளும் கோடானுகோடி உயிர்களுள் அவளுடையதும் ஒன்றோ?

    சற்றுமுன் மலர்ந்திருந்த காளியின் முகம் மீண்டும் வாடியது. “அம்மாவும் மாமாவும் எப்பவும் என்னை ஏசிக்கிட்டே இருப்பாங்க. வேலை முடிஞ்சதும், நான் பஸ் பிடிச்சு, வீட்டுக்கு வரணும். அன்னாடம், மாமா வாசல்லேயே நின்னுக்கிட்டு, `எவனோடடி கும்மாளம் போட்டுட்டு வர்றே?’ன்னு கத்துவாரு!” குரல் விம்மியது.

    “நீ எல்லாரோடேயும் கலகலப்பா பழகுவியா?” நாமும் ஏதாவது கேட்டால்தானே இவள் தொடர்ந்து பேசுவாள் என்று ஏதோ கேட்டுவைத்தாள் சங்கீதா.

    “ஊகும், எனக்கு ரொம்ப பயம்! யார்கூடவும் பேசமாட்டேன்!”

    “பின்னே.. ஏன் ஒங்க மாமா அப்படி..?”

    “அதான் எனக்கும் தெரியல. வீட்டுக்கு ஏன் வர்றோம்னு இருக்கும்”.

    `அந்த மாமாப்பயலுக்கு இந்த அறியாப் பெண்மீது ஒரு கண்ணாக இருக்குமோ?’ என்று சங்கீதாவின் எண்ணம் ஓடிற்று.

    “எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு பாத்தா, அதுக்கும் பயம்! அப்பதான் ஆன்ட்டியைப் பாத்தேன்!” காளியின் முகத்தில் ஒரு சிறு ஒளிக்கீறல்.

    `ஐயோ!’ என்றது சங்கீதாவின் உட்குரல்.

    “தினமும் பஸ் ஸ்டாப்புக்கு வருவாங்க. என்மேல ரொம்ப இஷ்டம் அவங்களுக்கு. ரிப்பன், மணிமாலை எல்லாம் வாங்கிக் குடுப்பாங்க!”

    அவள் கூறாமலேயே மேலே என்ன நடந்திருக்கும் என்று சங்கீதாவால் ஊகிக்க முடிந்தது. முன்பின் தெரியாதவள் ஒரு பருவப்பெண்மீது பரிவு காட்டுவது — தனக்கே இரையாகப்போகும் ஆட்டுக்கு இரை போடும் கரிசனம்தான்.

    “ஆன்ட்டிக்கு என் வயசில ஒரு பொம்பளைப்புள்ள இருந்து, செத்துப்போச்சாம். அதான் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஆசை ஆசையா பேசுவாங்க. என்னைப் பாக்கிறப்போ எல்லாம், `எங்க வீட்டுக்கே வந்துடேன்’னு கூப்பிடுவாங்க. அம்மாகிட்டேயும், மாமாகிட்டேயும் ஏச்சுப்பேச்சு கேக்கறதுக்கு, இந்த ஆன்ட்டிகூடப் போனா, நல்லாயிருக்கும்னு தோணிச்சு. ஒரு நாள், வேலைக்குப் போகாம, அவங்ககூடப் போயிட்டேன்!” காளி சிரித்தாள், அபூர்வமாக. “ஆன்ட்டி வீட்டில நல்லா இருந்திச்சு”.
    சங்கீதா மௌனமாக இருந்தாள். இந்தப் பெண்ணா வாயே திறக்காது என்றாள் இல்லத்தலைவி?!

    “பேப்பர்ல என்னோட போட்டோ போட்டு, `காணும்’னு விளம்பரம் குடுத்தாங்க எங்க வீட்டில. ஆன்ட்டிதான் காட்டினாங்க. `என்னை அங்க அனுப்பிடாதீங்க, ஆன்ட்டி’ன்னு அழுதேன். நான் இல்லாம, அம்மாவுக்கும், மாமாவுக்கும் ஏச ஆள் கிடைக்கலபோல!”என்று வெறுப்பைக் கொட்டியவள், “ஆன்ட்டி வீட்டில ஏதாவது சாப்பிடக் குடுத்துக்கிட்டே இருப்பாங்க,” என்றாள், முகமலர்ச்சியுடன்.

    `அதில்தான் போதை மருந்து கலந்திருப்பார்களோ?’

    “எப்பவும் யாராச்சும் என்கூடவே..!”

    தப்பித்துப் போகாமலிருக்க காவல்! இதுகூடப் புரியாமல், இந்த அப்பாவிப்பெண் சந்தோஷப்படுகிறாள்!

    அடைத்துக்கொண்ட குரலைக் கனைத்துச் சரிசெய்ய முயன்று, தோல்வியுற்றவளாக, “எப்படி இங்கே வந்தே?” என்று கேட்டாள் சங்கீதா.

    “நாலுபேர் ஒத்தர் மாத்தி ஒத்தரா என்மேல விழுந்தாங்களா..?”

    “ஆன்ட்டி வீட்டிலேயா?”

    “இல்ல. அங்க நெறைய்..ய மரங்க இருந்திச்சு,” என்றுதான் காளிக்குச் சொல்லத் தெரிந்தது. “நானும் அந்த தடியன்களோட சண்டை போட்டுப் பாத்தேன். முடியல. கத்த பயம். ஒருத்தன் கத்தியைக் காட்டிக்கிட்டு நின்னான்!” பயத்தில் இப்போதும் அவள் உடல் நடுங்கியது. “அப்புறமா, கைலியை எம்மேல தூக்கிப் போட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க. நானும் ஒரு பெரிய தெருவில ஓடினேன். போலீஸ் என்னைப் பிடிச்சு, சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. நான் சொல்லல”. தான் மறக்க முயல்வதையே எல்லாரும் ஏனோ கேட்கிறார்களே என்ற பரிதவிப்பு அவளுடைய பேச்சின் வேகத்தில் தெரிந்தது.

    மூச்சுவிடாமல் பேசிவிட்டு, சற்று நிறுத்தினாள். “ஆன்ட்டிதான் இங்க வந்து என்னைப் பாக்கறாங்க!”

    “இங்கேயும் வர்றாங்களா!”

    அவளடைந்த அதிர்ச்சி புரியாது, காளி உற்சாகமாகத் தலையாட்டினாள். “கேட்டுக்குள்ளே யாரையும் விடமாட்டாங்க. அதனால, நான் ஆசுபத்திரிக்கு காடியில போறப்போ, அவங்க தெருவுக்கு அந்தப் பக்கம் நின்னுக்கிட்டு கையாட்டுவாங்க!”

    ஒருவர் மனந்திறந்து பேசும்போது அவரது போக்கிற்கே விட்டுவிட வேண்டும், நம் விருப்பு வெறுப்பை அவர்மீது திணிக்கக்கூடாது என்ற மனோதத்துவ நியதியை தாற்காலிகமாக மறந்தாள் சங்கீதா. “அவங்களை நம்பிப் போனதால, நீ பட்டதெல்லாம் போதாதா? இன்னும் என்ன, ஆன்ட்டி?” என்று படபடத்தாள். “அங்கே ஏன் போறே?”

    “வேற எங்கே போறது! அவங்களுக்கு எம்மேல ரொம்ப இஷ்டம்!” மீண்டும் அதையே சொன்னாள்.

    “ஐயோ, வேணாம்மா!” தன்னை மறந்து கத்தினாள் சங்கீதா. “ஒங்கம்மாகிட்ட போ!”

    “அங்க எதுக்குப் போறது? அம்மாவுக்கு ஏசத்தான் தெரியும்!” என்று ஆங்காரமாகச் சொன்னவளின் குரல் தழதழத்தது. “இனிமே என்னை யார் கட்டிக்குவாங்க? இந்த ஒடம்பு இருக்கிறவரைக்கும் ஆன்ட்டிக்கு ஒழைச்சுப் போட்டுட்டுப் போறேன்!” தான் செய்யபோவது என்ன தொழில் என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது வேதனையாக இருந்தது சங்கீதாவுக்கு.

    “ஒன் பிள்ளை?”

    “அந்தச் சனியனை யார்கிட்டயோ குடுத்துட்டாங்க!”

    அந்த இல்லத்தின் வெளியே காரைச் செலுத்திக்கொண்டு போகையில், சங்கீதாவின் மனம் கனத்திருந்தது.

    தன் முதல் பிரசவம் ஆகுமுன்னரே எவ்வளவு எதிர்பார்ப்புடன் தானும், கணவரும் குழந்தைக்கு வேண்டிய தொட்டில், சட்டைகள் என்று பார்த்துப் பார்த்து வாங்கினோம்!
    காளி ஏன் இப்படி?

    தாய்ப்பாசம் தெரியாது வளர்ந்திருந்ததால், தன் குழந்தைமீது அன்பு சுரக்கவில்லையோ?

    அல்லது, அதற்கு உயிர் கொடுத்த, முகம் தெரியாத காமுகன்மேல் கொண்ட வெறுப்பு அவளை இப்படிப் பேசவைக்கிறதோ என்று யோசித்தாள் சங்கீதா.

    தான் உருவான சூழ்நிலையில் அன்போ, இன்பமோ இல்லாது பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியோடு வளருமோ?

    பெற்ற தாய்க்கே வேண்டாதவனாக, தன்மேலேயே வெறுப்புகொண்டு..! இன்னொரு கர்ணனா?

    பிறந்தது பெண்ணாக இருந்தால், காளி செய்ததுபோல், தான் வழிதவறிப் போவதை நியாயப்படுத்துமோ?

    பிறப்பின் அதிர்ச்சியை, பரம்பரைக் குணத்தை, வளர்ப்பால் மாற்றி அமைக்க முடியுமா?

    ஓயாத எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்பட்டவளாக, இரண்டு தவறான திருப்பங்களுக்குப்பின் சங்கீதா வீடு திரும்பினாள்.

    தோட்டத்தைக் கொத்திக்கொண்டிருந்த கணவர், அவளை வரவேற்கும் விதமாக, “தீபாவளி இதழுக்குக் கேட்டிருக்காங்கன்னு யாரையோ பேட்டி எடுக்கப் போனியே! கதை கிடைச்சுதா?”என்று கேட்டார்.

    காளியின் கதையைச் சீரணிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்று தோன்ற, அசுவாரசியமாகச் சூள் கொட்டிவிட்டு, உள்ளே போனாள் சங்கீதா.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. (23)

    நிர்மலா ராகவன்

    நாமகரணங்கள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2-1-1
    கதை 1: `டார்லிங்!’

    புதிதாக மணமானவர்கள் இப்போது தம் கணவரையோ, மனைவியையோ விளிக்கும் விதம் இது என்றுதான் நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவரை இப்படி அழைப்பது கண்டு வியந்து போனேன், `ஆகா! கல்யாணமாகி பத்து வருடங்களுக்குப் பின்னரும் இவளுக்கு இவ்வளவு காதலா!’ என்று.

    ஒரு நாள் இருவரும் ஏதோ வாக்குவாதம். இறுதியில், அதற்கு மேலும் பொறுக்க முடியாத மனைவி, “ஷட் அப், டார்லிங்!” என்றாளே பார்க்க வேண்டும்! எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவளைப் பொறுத்தவரை, டார்லிங் என்பது அவருடைய பெயர். அவ்வளவுதான். அச்சொல்லில் அன்பு கிடையாது.

    கதை 2:  துர்கா இதற்கு நேர் எதிரிடை.  அவளுக்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தவர் அவளது கணவர். எல்லாவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையானவர். அவள் அவருடன் பேசுவதையே விட்டுவிட்டாள். ஆனால் அவர்மேலிருந்த ஆத்திரத்தை மகன்மேல் காட்டினாள். மகனுக்கு என்ன பெயர் வைத்தார்களோ, அவனை `துடைப்பக்கட்டை’ என்றுதான் அழைப்பாள். அவனுடைய அக்காள்மேல் எந்த வருத்தமுமில்லை துர்காவுக்கு. ஏனெனில் அவளும் தன்னைப்போல் ஒரு பெண். அப்பாவைப்போல் நடக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது.

    தாயின் நம்பிக்கை பொய்க்கவில்லை. மகள் ஓரளவு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்தாள். மகனுக்கோ, `நான் உதவாக்கரை!’ என்ற எண்ணத்தை பெற்ற தாயே சிறுவயதிலிருந்தே மனதில் பதிய வைத்திருந்ததால், படிப்பும் ஏறவில்லை. மதுவுக்கு அடிமையானான். ஆறு மாதங்கள் ஏதாவது வேலை செய்து, கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும், வேலையை விட்டுவிடுவான். பகலில் அக்கம்பக்கத்தினருக்கு உதவியாக ஏதாவது செய்வான். `சாயங்கால வேளைகளில் அவனுடைய போக்கே மாறிவிடும்,’ என்கிறார்கள் அவனுடைய அண்டைஅயலார். நான் பார்த்தபோது, சாதுவாக, தன்னம்பிக்கை குன்றியவனாக காணப்பட்டான். அவனுடைய கதையைக் கேட்க பரிதாபமாக இருந்தது.

    ஏதோ காரணத்தால் மனத்துக்குப் பிடிக்காத மணாளனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் பெண்கள் தம் விதியையே நினைத்து மருகி, அந்த நிராசையை பெற்ற பிள்ளைகளின்மேல் காட்டினால், வாழையடி வாழையாக குடும்பம் உருப்படாமல்தான் போகும். பெற்றவர்களில் ஒருவர் ஆதரவாக இருந்தால்கூட பிள்ளைகள் நல்ல விதமாக வளர வாய்ப்பிருக்கிறதே!

    கதை 3: பதினைந்து வயதான லேகாவிற்குத் தான் புத்திசாலி என்பதில் கொள்ளைப் பெருமை. அவள் வளர்க்கும் நாய்க்கோ, அறிவு குறைவாகத்தான் இருந்தது என்று அவளுக்கு இளக்காரம். தினமும் உலாவ அந்த நாயை அழைத்துச் செல்வாள். அதுவோ, நாயின் குணப்படி அங்கும் இங்கும் எதையோ தேடி அலையும்.

    `இடியட்!’ என்று உரக்கக் கத்தி, அதன் கழுத்துப்பட்டியில் பொருத்தப்பட்டிருந்த சங்கிலியை இழுப்பாள். சிறிது நேரத்திற்குப்பின், இதே நிகழ்ச்சி தொடரும்.

    தினமும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை.

    “பாவம்! அதை ஏன் அப்படிக் கூப்பிடறே?” என்று லேகாவைக் கேட்டேன். நாய்க்கு ஆங்கிலமோ, இடியட் என்ற வார்த்தைக்கு அர்த்தமோ தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும், கூப்பிடும் தொனி புரியாதா, என்ன!

    “இது சொன்னாலே கேக்கறதில்லே!” என்றாள்.

    “அதுக்கு அவ்வளவுதான் தெரியும். ஒன் நாய்க்குப் பேர் கிடையாதா? அதைச் சொல்லிக் கூப்பிடு,” என்றதும், எதுவும் பேசாது நடையைக் கட்டினாள்.

    பொதுவாக எல்லா மிருகங்களின்மேலும் உயிராக இருக்கும் ஒரு பையன் அவர்கள் வீட்டுக்குத் தினமும் போவான். அதே நாய் அவன் முகத்தை நக்கிக் கொஞ்சுகிறது என்று அவ்வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

    `குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பதில், `மிருகங்களும்’ என்று சேர்த்துக்கொள்ளலாம்.

    கதை 4: மலேசியாவில் ஒரு சிற்றூரில் அமைந்திருந்த மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தேன். இருபது வயதை எட்டியிராத `தமிழன்’ எல்லா மிருகங்களையும் அன்புடன் அழைத்து, பரிவுடன் நடத்துவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

    “உனக்கு மிருகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமா?” என்று அநாவசியமான கேள்வி ஒன்றைக் கேட்டேன்.

    “சின்ன வயசிலேருந்தே அப்படித்தான், ஆன்ட்டி,” என்று ஒத்துக்கொண்டவன், “எல்லாரும் என்னைப் பைத்தியம்கிறாங்க. அதான் வீட்டுக்கே போறதில்லே. இங்கேயே தங்கிடறேன்!” என்றான், வருத்தத்துடன்.

    “நீ ரொம்ப நல்லவன். இப்படி இருக்கறதுதான் சரி. மாறிடாதே!” என்றேன்.

    “இதுங்களையும் சாமிதானே படைச்சார்?” என்று அவன் கேட்டதில் தான் செய்வதன் நியாயத்தை ஏன் பிறர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற குழப்பம் வெளிப்பட்டது.
    அவன் ஞானி என்றுதான் எனக்குத் தோன்றியது.

    பெற்ற பிள்ளைகளை ஒரு தாய் இழிவாக நடத்துவதையோ, தன் `செல்லப் பிராணி’யை ஒரு பெண் கண்டபடி திட்டுவதையோ பொறுக்கும் உலகம் மனித நேயத்துடன் நடக்கும் ஒருவனை `பைத்தியம்’ என்கிறது!

    இது மோசமான உலகமா, இல்லை உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் உலகமா?

    தொடருவோம்

    Share