Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(142)

    செண்பக ஜெகதீசன்

    இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும். 
    (திருக்குறள்: 1040 – உழவு)      

    புதுக் கவிதையில்…

    எதுவுமில்லை என்றுசொல்லி
    எதுவும் செய்யாமல்
    சோம்பியிருப்பவனைப் பார்த்து
    விளைநிலம் என்னும் நல்லவள்,
    சிரிப்பாள்-
    தரிசாய் இருந்து…! 

    குறும்பாவில்…

    இல்லை எதுவுமென்னும் சோம்பேறியைப் பார்த்து,
    நல்லவளாம் விளைநிலம் ஏளனமாய்
    நகைப்பாள் தரிசாய்க் கிடந்து…!
     

    மரபுக் கவிதையில்…

    நிலத்தில் வேலை செய்யாமல்
        –நித்தம் சோம்பலில் இருந்துவிட்டு,
    நலமே வாழ்வில் இல்லையெனும்
         –நல்லது தெரியா சோம்பேறி
    நிலையைப் பார்த்து நகைத்திடுவாள்
         –நிலமெனும் நல்ல பெண்ணவளும்,
    மலடாய் ஒன்றும் விளையாத
         –மண்ணாம் தரிசு முகத்தாலே…! 

    லிமரைக்கூ…

    நிலத்திலிறங்கி செய்வதில்லை வேலை,
    இல்லையெனுமிச் சோம்பேறியைப் பார்த்து நகைத்தே
    காட்டுவாள் நிலமகள் தரிசுமுகமாம் பாலை…!
     

    கிராமிய பாணியில்…

    பாடுபடு பாடுபடு
    நெலத்தில எறங்கிப் பாடுபடு,
    சும்மாயிருந்து ஒறங்காத
    சோம்பப்பட்டு அழியாத…
    சோம்பேறியா இருந்துப்புட்டு
    இல்லயிண்ணு அழுதாலே,
    அவனப்பாத்து நல்லவளாம்
    மண்ணுமாதா சிரிப்பாளே
    மனம்போலச் சிரிப்பாளே…
    அதால,
    பாடுபடு பாடுபடு
    நெலத்தில எறங்கிப் பாடுபடு,
    சும்மாயிருந்து ஒறங்காத
    சோம்பப்பட்டு அழியாத…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(141)

     –செண்பக ஜெகதீசன்

     

    காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும்

    நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

           –திருக்குறள் –1251(நிறையழிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    நிறை என்னும்

    கதவை அடைத்து,

    நாணமாம் தாழ்ப்பாள் போட்டு

    பாதுகாத்தாலும்,

    காமமெனும் கோடரி

    உடைத்துவிடும்…!

     

    குறும்பாவில்…

     

    கற்புக் கதவடைத்து நாணத்தாழ்ப்பாள்

    போட்டாலும் நிற்காது,   

    காமமாம் கோடரி உடைத்துவிடும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    கற்பெனும் வலிய கதவடைத்து

         காட்டும் நாணமாம் தாழ்ப்பாளைப்

    பொற்புடன் போட்டுப் பூட்டிடினும்

       போதா ததற்குப் பாதுகாப்பு,

    அற்பமாய்த் தோன்றிடும் காமமெனும்

      ஆயுதம் கோடரி தாக்கிவிட்டால்,

    சொற்பமும் மீதி இல்லாமலே

      சுக்கு நூறாய் உடைந்திடுமே…!

     

    லிமரைக்கூ…

     

    நாணத்தாழ்ப்பாள் கற்புக்கதவை அடைக்கும்,     

    போதாது போதாது இதற்கிந்த பாதுகாப்பு,        

    காமமெனும் கோடரியதை உடைக்கும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    பொல்லாதது பொல்லாதது

    காமம் ரெம்பப் பொல்லாதது..

     

    வெக்கத் தாப்பாளப் போட்டேதான்

    கற்புக் கதவ

    பூட்டிவச்சாலும் பாதுகாப்பில்ல

    பெருசா பாதுகாப்பில்ல..

     

    காமக் கோடாலிவச்சி

    வெட்டுனாலே ஒடஞ்சிபோவும்

    துண்டுதுண்டா ஒடஞ்சிபோவும்..

     

    அதால,

    பொல்லாதது பொல்லாதது

    காமம் ரெம்பப் பொல்லாதது…!

     

    செண்பக ஜெகதீசன்

    Share
  • குறளின் கதிர்களாய்…(140)

    -செண்பக ஜெகதீசன்

    அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.     (திருக்குறள் -168: அழுக்காறாமை)

    புதுக் கவிதையில்…

    பொறாமை என்பது
    பெரும் பாவி,
    அது
    சேர்ந்தவரின்
    செல்வத்தையெல்லாம் அழித்து,
    செலுத்தி அவரைத் தீயவழியில்
    சேர்த்துவிடும் கொடுநரகில்!

    குறும்பாவில்…

    பொறாமைக் குணம் பெரும்பாவியாய்ப்
    போக்கடித்துச் செல்வத்தை, சேர்ந்தவர்க்குத்
    தீய வழிகாட்டித் தீர்த்துக்கட்டிவிடும்!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வினிலே
         -மற்றவர் மீது பொறாமையென்பது,
    கண்ணிய மில்லாப் பாவியாகிக்
         -கொண்டவன் சேர்த்த செல்வத்தையே
    மண்ணும் கூட மிஞ்சாமல்
         -முழுதும் அழித்தே அவன்வாடத்
    திண்ணமாய்த் தீவழி செலுத்தியேதான்
          -தள்ளிடும் கொடிய நரகினுக்கே!

    லிமரைக்கூ…

    செல்வத்தையே இல்லாமல் தீர்க்கும்,
    பொறாமைக்குணம் பெரும்பாவியாய் ஒருவனைத்
    தீயோனாக்கிக் கொடுநரகத்தில் சேர்க்கும்!

    கிராமிய பாணியில்…

    பாவிபாவி பெரும்பாவி
    பொறாமகொணமொரு பெரும்பாவி,
    அது
    பொறாமவுள்ளவன் சேத்துவச்ச
    பொருளயெல்லாம் அழிச்சிப்புடும்… 

    அதோட அவன உட்டுடாது,
    கெட்டவழில அவனத்தள்ளி
    கேடுகெட்ட நரகத்துக்கே
    கூட்டிக்கொண்டு உட்டுடுமே… 

    அதால,
    பாவிபாவி பெரும்பாவி
    பொறாமகொணமொரு பெரும்பாவி!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(139)

    செண்பக ஜெகதீசன்

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.  (திருக்குறள் -71: அன்புடைமை) 

    புதுக் கவிதையில்…

    அடைத்திடும் தாழ்ப்பாளில்லை
    அன்புக்கு,
    அன்புகொண்டோரின் துன்பங்கண்டு
    உடைத்துவரும் கண்ணீரே
    ஊரறியக் காட்டிவிடும்
    உள்ளத்து அன்பை…! 

    குறும்பாவில்… 

    அன்பை அடைத்திடத் தாழ்ப்பாளில்லை,
    அதுவாய் வெளிவரும் கண்ணீராய்
    அன்புகொண்டோரின் துன்பம் கண்டு…! 

    மரபுக் கவிதையில்… 

    அன்பை அடைத்துத் தடுத்திடவே
      -அடைக்கும் தாழ்ப்பாள் ஏதுமில்லை,
    அன்பு கொண்டோர் வாழ்வினிலே
      -அடையும் துன்பம் தனைக்கண்டே,
    இன்னல் இவர்க்கே வந்ததுபோல்
      -இளகிடும் இவர்தம் கண்ணீரே
    அன்பு நிறைந்த இதயம்தனை
      -அகிலம் அறியக் காட்டிடுமே…! 

    லிமரைக்கூ…

    அன்படைக்கத் தாழ்ப்பாளில்லைத் தடையாய்,
    அன்புடையோர் துன்பங்கண்டு கண்ணீர் பெருகிவரும்
    தண்ணீர் திறந்துவிட்ட மடையாய்…! 

    கிராமிய பாணியில்…

    பூட்டுமில்ல தாப்பாயில்ல
    பொங்கிவாற அன்படைக்க,
    முடியாது முடியாது அடச்சிவைக்க முடியாது
    அன்பத்தான் அடக்கிவைக்க முடியாது… 

    காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்குமே
    கண்ணீரே காட்டிக்குடுக்குமே,
    அடுத்தவங்க துன்பங்கண்டு
    அன்போட
    அழுதகண்ணீரே காட்டிக்குடுக்குமே,
    அன்பத்தான் காட்டிக்குடுக்குமே… 

    அதால,
    முடியாது முடியாது அடச்சிவைக்க முடியாது
    அன்பத்தான் அடக்கிவைக்க முடியாது…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(138)

    செண்பக ஜெகதீசன்

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு.    (திருக்குறள் -786: நட்பு) 

    புதுக் கவிதையில்…

    உள்ளத்தில் கள்ளம்வைத்து,
    உதட்டில் புன்னகை மலரக்
    கொள்வதல்ல
    உண்மை நட்பு…
    அன்புகொண்ட உளத்துடன்
    அகம் மகிழக் கொள்வதுதான்
    அசல் நட்பு…! 

    குறும்பாவில்…

    மலர்ந்த முகம்மட்டும் காட்டி
    வருவதல்ல உண்மை நட்பு,
    அன்பொடு அகமகிழ வருவதுதான் அது…! 

    மரபுக் கவிதையில்…

    உள்ளத் துள்ளதை மறைத்தேதான்
         –உதட்டில் காட்டிடும் புன்னகையால்
    கொள்ளும் உறவு நட்பல்ல!
       –காட்டும் வேடம் சிறப்பல்ல,
    பிள்ளை போலவே அன்புகொண்டு
      –பெரிதும் உள்ளம் உவகையுற
    கள்ள மில்லா மனத்துடனே
    –காட்டும் உண்மை நட்பதுவே…! 

    லிமரைக்கூ…

    நட்பல்ல நகைமுகத்தால் நடிப்பது,
    உள்ளே பகையின்றிக் கொள்ளும் நட்புதான்
    உண்மை இதயத் துடிப்பது…! 

    கிராமிய பாணியில்…

    நட்புயில்ல நட்புயில்ல
    நெஞ்சத்தில வஞ்சகமா
    நல்லாச்சிரிச்சி பழகுறது
    நட்புயில்ல நல்ல நட்புயில்ல… 

    கொஞ்சங்கூடக் கள்ளங்கபடமில்லாம
    நெஞ்சிநெறஞ்ச அன்போட
    நெறஞ்சமனசாப் பழகுற
    நட்புதானே நல்லநட்பு… 

    நட்பாயிரு நட்பாயிரு
    நெறஞ்ச அன்போட நட்பாயிரு!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(137)

    செண்பக ஜெகதீசன்

    இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்     
    கெடுப்பார் இலானுங் கெடும்.     திருக்குறள் -448: பெரியாரைத் துணைக்கோடல்) 

    புதுக் கவிதையில்…

    தவறும்போது
    தட்டிக் கேட்கும்
    தக்க பெரியோர்
    துணையற்ற மன்னனுக்கு,
    கெடுக்கும் பகைவரின்றியே
    கேடு வரும்! 

    குறும்பாவில்…

    இடித்துரைத்துத் திருத்திடத் துணையாயப்
    பெரியோரில்லா மன்னன்,
    பகைவரின்றியே பெரிதும் கெடுவான்! 

    மரபுக் கவிதையில்…

    தவறிடும் போதெலாம் எடுத்துரைத்தே
         –தட்டிக் கேட்கும் பெரியோரை
    அவைதனில் அறிவுத் துணையாக
         –அமைத்துக் கொள்ளா மன்னவரும்,
    புவியதன் வாழ்வில் பொறாமையுடன்
         –பொருதிட நிற்கும் பகைவர்கள்
    எவரு மின்றியே கெட்டிடுவார்
          –எல்லா மிழந்து நிற்பாரே! 

    லிமரைக்கூ…

    இடித்துரைக்கும் பெரியோரென்றும் துணையே,
    இல்லையெனில் மன்னவரும் கெடுவர்
    எதிரியின்றியே,
    இல்லையென்றும் பெரியோருறவுக் கிணையே! 

    கிராமிய பாணியில்…

    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்,
    தவறுசெஞ்சா தட்டிக்கேக்கும்
    பெரியவங்க தொணவேணும்… 

    தொணயிதுபோல் இல்லயிண்ணா
    தொலஞ்சிபோவான் ராசாவுமே,
    கெடுக்கவரும் எதிரியில்லாமலே
    கெட்டுப்போவான் ராசாவுமே… 

    அதால,
    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(136)

    -செண்பக ஜெகதீசன்

    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.    (திருக்குறள்-471:வலியறிதல்) 

    புதுக் கவிதையில்…

    தன் வலிமை,
    எதிராளியின் வலிமை
    இயற்றும் செயலின் வலிமை,
    இருவருக்கும் துணைநிற்போர் வலிமை
    எல்லாமறிந்து செயல்பட்டால்,
    இல்லையென்றும் தோல்வி…! 

    குறும்பாவில்…

    செயல் வலிமை, சேர்ந்தோர் வலிமை,
    தன் வலிமை, எதிரி வலிமை
    தெரிந்து செயல்படின் வெற்றியே…! 

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலைச் செய்யுமுன்னே
         –செயலின் வலிமை அறியவேண்டும்,
    செய்வோர் தம்வலி அறிவதோடு
       –செயலில் எதிரி வலிமையையும்
    மெய்யாய்த் தெரிந்து கொள்ளவேண்டும்,
         –மேலும் இவர்கள் இருவருக்கும்
    மெய்த்துணை வலிமையும் அறிந்தபின்னே
    –முயன்றால் செயல்தரும் முழுவெற்றியே…! 

    லிமரைக்கூ…

    தெரிந்திடு தெளிவாய்ச் செயலைப் பற்றியே,
    தன்வலிமை, எதிரியுடன், இருவர்க்கும் துணைவலிமை
    எல்லாமறிந்து செயல்பட்டால் எதிலும் வெற்றியே…! 

    கிராமிய பாணியில்…

    செயல்படு செயல்படு
    செயலத்தெரிஞ்சி செயல்படு,
    தனக்கவலிமயும் எதிரிவலிமயும்
    தெரிஞ்சபின்னே செயல்படு…
    ரெண்டுபேருக்கும் தொணயாத்தான்
    வாறவர்வலிமயும் அறிஞ்சபின்னே
    எறங்கி நீயும் செயல்படு
    எதுலயும்செயிக்கலாம் செயல்படு…
    செயல்படு செயல்படு
    செயலத்தெரிஞ்சி செயல்படு,
    வலிமயறிஞ்சிச் செயல்படு…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(135)

    செண்பக ஜெகதீசன்

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து            
    மாண்ட வுஞற்றி லவர்.   (திருக்குறள்-607: மடியின்மை)

     புதுக் கவிதையில்…

    சோம்பலில் சுகம் கண்டு,
    செய்யும் கடமையில்
    முயற்சியற்றவர்கள்,
    பிறர்
    இடித்துரைக்கும்
    இழிசொல் கேட்கும் நிலையடைவர்…! 

    குறும்பாவில்…

    செயலில் முயற்சியிலாது
    சோம்பியிருப்போர், பிறர்
    இடித்துரைக்கும் இழிசொல் கேட்பர்…! 

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலில் முயற்சியின்றிச்
    -சோம்பல் தன்னில் சுகங்காணும்
    பொய்யாம் வாழ்வை வாழ்வோர்கள்,
    -புவியில் வாழும் காலமட்டும்
    மெய்யாய் மற்றோர் இடித்துரைத்தே
    -மிகவும் கொடிதாய் இழிசொல்லைப்
    பெய்யும் மழைபோல் பேசுகின்ற
    -பாழாம் நிலையை அடைவாரே…! 

    லிமரைக்கூ…

    சோம்பலில்லா முயற்சிவேண்டும் செயலில்,
    இடித்துரைப்பார் பலரும், சோம்பியிருப்போர்
    இன்னலுறுவர் இழிசொல்லாம் புயலில்…! 

    கிராமிய பாணியில்…

    சோம்பல்படாத சோம்பல்படாத
    செய்யும்செயலுல சோம்பல்படாத,
    செய்யணும்செய்யணும் செயலச்செய்யணும்
    முயற்சியோடச் செயலச்செய்யணும்…
    சோம்பலால செயலச்செய்யாதவன்
    எல்லாருக்கும் எளச்சவனாவான்,
    ஏளனப்பேச்சிக்கு ஆளாவான்
    ஏல்லாருக்கும் கீழாவான்… 

    அதால,
    சோம்பல்படாத சோம்பல்படாத
    செய்யும்செயலுல சோம்பல்படாத…! 

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(134)

    செண்பக ஜெகதீசன்

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
    (திருக்குறள்-51வாழ்க்கைத்துணைநலம்) 

    புதுக் கவிதையில்…

    மனையறம் போற்றிடும்
    மாண்பினளாய்,
    மணாளன் வருவாய்க்கேற்றவாறு
    மணவாழ்வு அமைத்துக்கொள்பவள்தான்,
    மெய்யான வாழ்க்கைத்துணை…! 

    குறும்பாவில்…

    மனையற மாண்புடனே
    கணவன் வருவாயறிந்து வாழ்பவளே,
    உறவாம் வாழ்க்கைத்துணை…! 

    மரபுக் கவிதையில்…

    மனையறம் நன்றாய்த் தெரிந்துகொண்டே
         -மாண்புடன் வாழும் மனையாளாய்,
    அனைவரும் மெச்சும் வகையினிலே
       -அன்பொடு ஆருயிர்க் கணவனவன்
    தனையும் பேணியவன் வருவாய்க்குத்
      –தக்க வாறு வாழ்பவளே
    நினைக்கப் படுவாள் நீணிலத்தில்
       -நிறைந்த வாழ்க்கைத் துணையெனவே…! 

    லிமரைக்கூ…

    மனையறம் நன்றாய்த் தெரிந்து
    வாழ்பவள்நல் வாழ்க்கைத்துணை, அவள் நடந்தால்,
    கணவனின் வருவாயைப் புரிந்து…! 

    கிராமிய பாணியில்…

    வாழ்க்கத்தொண வாழ்க்கத்தொண
    மனைவிதானே வாழ்க்கத்தொண,
    குடும்பநலம் தெரிஞ்சிக்கிட்டு
    வாழ்பவதான் வாழ்க்கத்தொணயாவா
    நல்ல வாழ்க்கத்தொணயாவா… 

    அதுலயும்,
    புருசங்காரன் வருமானத்தப்
    புருஞ்சிக்கிட்டு அதுக்கேற்ப
    வாழுறவதான் வாழ்க்கத்தொண,
    மிகநல்ல வாழ்க்கத்தொண… 

    வாழ்க்கத்தொண வாழ்க்கத்தொண
    நல்ல
    மனைவிதானே வாழ்க்கத்தொண…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(133)

    செண்பக ஜெகதீசன்

    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின். (திருக்குறள்-162: அழுக்காறாமை) 

    புதுக் கவிதையில்…

    பிறரிடம்
    பொறாமை கொள்ளாதவனுக்கு,
    அதைவிடப்
    பேறெதுவும் பெரிதாகயில்லை…! 

    குறும்பாவில்…

    அடுத்தவரிடம் அழுக்காறில்லாத பண்பு
    ஒருவனுக்கு,
    பேறுகளிலெல்லாம் பெரும்பேறு…! 

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வினிலே
    மற்றவர் மீது பொறாமையின்றிக்
    கண்ணிய மாக வாழ்வோர்கள்
    காணற் குரிய பேறுகளில்,
    புண்ணிய மான வாழ்விதுபோல்
    போற்றுதற் கேற்ற பேறதுவாய்
    எண்ணித் தேடினும் பெரிதாக
    எதுவு மில்லை அறிவீரே…! 

    லிமரைக்கூ…

    அழுக்காறில்லா வாழ்வுபெரும் பேறு,
    அடுத்தவர்மீது பொறாமைகொள்ளா வாழ்விதற்கும்
    பெரிதாய்ப் பேறேயில்லை வேறு…! 

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    அடுத்தவர்மேல பொறாமகொள்ளாத… 

    பொறாயில்லாதவன் வாழ்க்கதான்
    ஒலகத்தில பெரிய பாக்கியம்,
    எங்க தேடுனாலும் எப்புடித்தேடுனாலும்
    இதவிடப் பெரிய பாக்கியமில்ல,
    இதுக்கு ஒசந்த பாக்கியமுமில்ல… 

    அதால,
    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    அடுத்தவர்மேல பொறாமகொள்ளாத…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(132)

    செண்பக ஜெகதீசன்

     

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்          

    மேற்சென் றிடித்தற் பொருட்டு.   

           –திருக்குறள் –784(நட்பு)

     

    புதுக் கவிதையில்…

    சிரித்து விளையாடுவதல்ல

    சிறந்த நட்பு,

    தவறான வழிசெல்லும் நண்பனைத்

    திருத்திட

    தட்டிக்கேட்டு சரிசெய்வதே…!

     

    குறும்பாவில்…

    சிரிப்பதற்கல்ல நட்பு

    சீராக்கிட,

    தவறும் நண்பனைத் தட்டிக்கேட்டு…!

     

    மரபுக் கவிதையில்…

    என்றும் நல்ல நட்பென்பது

         எதற்கும் சிரித்து விளையாடும்

    ஒன்றும் உதவா உறவல்ல

       ஓசைச் சிரிப்பில் பயனில்லை,

    சென்றிடும் நட்புப் பாதையிலே

      செயலில் தவறிடும் நண்பனைத்தான்

    அன்புடன் இடித்துத் திருத்துவதே

      ஆக்க மான நட்பாமே…!

     

    லிமரைக்கூ…

    நட்பல்ல வீணாய்ச் சிரிப்பது

    தவறும் நண்பர் திருந்திட இடித்துரைப்பதே

    நட்பெனும் பெயரைத் தரிப்பது…!

     

    கிராமிய பாணியில்…

    நல்லதில்ல நல்லதில்ல

    நட்பதுதான் நல்லதில்ல,

    சிரிச்சிப்பேசி நேரம்போக்கும்

    நட்பதுதான் நல்லதில்ல..

     

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நம்பிக்கையான நட்பிதுதான்,

    கெட்டவழில நண்பன்போனா

    கேட்டுத் திருத்துற

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நம்பிக்கையான நட்பிதுதான்,

    உண்மயான நட்பிதுதான்…!

    Share
  • குறளின் கதிர்களாய் (131)

    செண்பக ஜெகதீசன்

     

    விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்         

    கற்றாரோ டேனை யவர்.   

                   -திருக்குறள் -410(கல்லாமை)

     

    புதுக் கவிதையில்…

    அறிவுதரும் நூல்பல

    கற்றவரேர்டு

    கல்லாதவரை ஒப்பிடுகையில்,

    கல்லாதவர்

    விலங்குகளுக்கும் மாந்தர்களுக்குமுள்ள

    வேறுபாட்டை உடையோரே…!

     

    குறும்பாவில்…

    கல்லாதவரை அறிவுநூல் பலவும்

    கற்றவரோடு ஒப்பிடுகையில்,  

    விலங்குக்கும் மனிதருக்குமுள்ள வேறுபாடுதான்…!

     

    மரபுக் கவிதையில்…

    அறிவைத் தந்திடும் நூல்பலவும்

    ஆர்வ முடனே கற்றவரை,

    நெறிமுறை யில்லாக் கல்லாரொடு

    நேர்மை யாக ஒப்பிட்டால்,

    அறிந்து கொள்வாய் உண்மைதனை

    ஐந்தே அறிவுடை விலங்குகட்கும்

    அறிவது ஆறுடை மாந்தருக்கும்

    அளவி லுள்ள வேறுபாடே…!

     

    லிமரைக்கூ…

    கல்லாதவரை நூல்கற்றோருடன் ஒப்பிடு

    காண்பாய் விங்குகட்கும் மனிதருக்குமுள்ள வேறுபாடு,  

    உண்மைதான் யிதுவெனச் செப்பிடு…!

     

    கிராமிய பாணியில்…

    படிக்கணும்படிக்கணும் நல்லாப்படிக்கணும்

    பகுத்தறிவு வளர நல்லாப்படிக்கணும்..

     

    கல்வி அறிவு இல்லாதவனுக்கும்

    பலபல நூலப் படிச்சவனுக்கும்

    இதுதான்பாரு வித்தியாசம்..

    அஞ்சறிவு மிருகத்துக்கும்

    ஆறறிவு மனுசனுக்குமுள்ள வித்தியாசந்நதான்..

     

    அதால,

    படிக்கணும்படிக்கணும் நல்லாப்படிக்கணும்

    பகுத்தறிவு வளர நல்லாப்படிக்கணும்,

    பொல்லாதது பொல்லாதது

    கல்லாம பொல்லாதது…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(130)

     

    செண்பக ஜெகதீசன்

     

    செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து         

    மில்லதனின் தீய பிற.  

         -திருக்குறள் -302(வெகுளாமை)

     

    புதுக் கவிதையில்…

    தம்மில் வலியோரிடம்

    கொண்டகோபம்,

    செல்லாது போகும்

    சேர்க்கும் தீமையையே..

     

    எளியோரிடத்து கோபம்

    எதையும் தராது,

    தீமை ஒன்றைத் தவிர…!

     

    குறும்பாவில்…

    செல்லாத இடத்து கோபந்தரும்

    தீமையே, செல்லும் எளியோரிடத்து,

    தருமது தீமையன்றி வேறிலையே…!

     

    மரபுக் கவிதையில்…

    வலியோர் தம்மிடம் சினங்கொண்டால்

         விரைவில் வந்திடும் தீமையதே,

    பலிக்கா தவரிடம் கொண்டகோபம்

       பலனாய்த் தருமே பெருந்துன்பம்,

    பலிக்குமென் றெண்ணிக் கோபமதை

       பலமிலா எளியோர் தம்மிடத்தில்

    செலுத்தும் மாந்தர் தமக்குத்தான்

      சேரும் தீமை எல்லாமே…!

     

    லிமரைக்கூ…

    வலியோரிடம் கோபம் செல்லாதது

    தீமையது, தராதே தீமையன்றி வேறெதுவும்

    எளியோரிடம் கோபம் பொல்லாதது…!

     

    கிராமிய பாணியில்…

    செல்லாது செல்லாது கோவஞ்செல்லாது

    வலியவங்கிட்ட கோவஞ்செல்லாது,

    கோவப்பட்டா உடமாட்டான்

    கொடுந்தீங்கு ஒனக்குவரும்..

     

    எளியவங்கிட்ட கோவப்பட்டா

    எளிசாப்போவுமுண்ணு எண்ணாத,

    தெளிவாநீயும் தெரிஞ்சிக்க

    தீமயத்தவுர எதுவும் வராதே…

     

    அதால

    கோவப்படாத கோவப்படாத

    யாருகிட்டயும் கோவப்படாத…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(129)

    செண்பக ஜெகதீசன்

     

    மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்        

    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 

         -திருக்குறள் -134(ஒழுக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

    கற்ற வேதத்தை அந்தணர்

    மறந்திடினும்,

    கற்றிடலாம் மீண்டும்,

    ஆனால் அவர்தம்

    குல ஒழுக்கம் கெட்டால்,

    கெட்டிடும் எல்லாமே…!

     

    குறும்பாவில்…

    மறந்திட்டாலும் வேதத்தை

    மீண்டும் கற்றிடும் அந்தணர்,

    கெடுவர் குலவொழுக்கம் குறைந்தால் …!

     

    மரபுக் கவிதையில்…

    வேதம் ஓதிடும் வேதியர்க்கு

         வேதம் மறந்தே போனாலும்

    வேதனை யேதும் வாராது

       ஓதிட மீண்டும் கற்றிடலாம்,

    பாதக மாகிக் கெட்டழிவார்

      பரிவுடன் அவர்தம் முன்னோர்கள்

    பாது காத்த குலவொழுக்கப்

       பண்பு தன்னை மறந்தாலே…!

     

    லிமரைக்கூ…

    மறந்தாலும் கற்றிடலாம் வேதம்,

    அந்தணாளர் மறந்திட்டால் குலவொழுக்கம்

    அடைவார் வாழ்வில்பெரும் சேதம்…!

     

    கிராமிய பாணியில்…

    பாதிப்பில்ல பாதிப்பில்ல

    அய்யருக்குப் பாதிப்பில்ல,

    மந்திரந்தான் மறந்துபோனாலும்

    முழுசா பெரிய பாதிப்பில்ல,

    மறுபடி பாத்துப் படிச்சிக்கலாம்..

     

    ஆனா

    கெட்டுப்போவும் கெட்டுப்போவும்

    வாழ்க்கயெல்லாங் கெட்டுப்போவும்

    அவுரு

    கொலத்து ஒழுக்கம் கொறஞ்சிபோனா,

    கெட்டுப்போவும் கெட்டுப்போவும்

    எல்ல்லாமே கெட்டுப்போவும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(128)

    செண்பக ஜெகதீசன்

     

     

    வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்       

    குறியெதிர்ப்பை நீர துடைத்து.

         -திருக்குறள் -221(ஈகை)

     

    புதுக் கவிதையில்…

     

    ஏதுமில்லா வறியவர்க்கவர்

    இதயங் குளிர

    இயன்றவரைக் கொடுப்பதுதான்

    ஈகை..

     

    இது தவிர

    ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம்

    ஈகையாகாது,

    அவரிடம்

    ஏதோ ஒன்றை

    ஏதிர்பார்த்துச் செய்வதேயாகும்…!

     

    குறும்பாவில்…

     

    இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை,

    ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம்

    எதையோ எதிர்பார்த்துக் கொடுப்பதே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    இல்லை யென்று வருவோர்க்கே

         இருப்பதை மனதுடன் கொடுப்பதுதான்

    நல்ல செயலாம் ஈகையென்பதால்

      நாளும் இதனைச் செய்வீரே,

    அல்லா தோர்க்குக் கொடுப்பதெல்லாம்

       அவரிடம் எதையோ எதிர்பார்க்கும்

    பொல்லாச் செயலாய் போய்விடுமே,

      புரிந்து கொள்வீர் மானிடரே…!

     

    லிமரைக்கூ…

     

    ஈகையென்பது இல்லாதவர்க்குக் கொடுப்பதே,

    மற்றவர்களுக்குக் கொடுப்பது அவரிகளிடம் எதையோ

    எதிர்பார்க்கும் அவப்பெயரை எடுப்பதே…!

     

    கிராமிய பாணியில்…

     

    குடுத்து ஒதவணும் குடுத்து ஒதவணும்

    கைநெறயக் குடுத்து ஒதவணும்,

    இல்லயெண்ணு வருவோர்க்கு

    இருக்கிறதக் குடுத்து ஒதவணும்

    இதுக்குப்பேருதான் ஈக..

     

    இதவுட்டு

    இருக்கவுனுக்கே குடுத்தியண்ணா

    ஈகயில்ல அது ஈகயில்ல,

    எதயெதயோ அவங்கிட்ட எதிர்பாக்கிற

    ஈனச்செயலாப் பேயிருமே..

     

    அதால,

    குடுத்து ஒதவணும் குடுத்து ஒதவணும்

    இல்லயெண்ணு வருவோர்க்கு

    இருக்கிறதக் குடுத்து ஒதவணும்…!

     

    செண்பக ஜெகதீசன்

     

     

     

     

     

     

     

     

     

     

    Share