குறளின் கதிர்களாய்…(133)
–செண்பக ஜெகதீசன்
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (திருக்குறள்-162: அழுக்காறாமை)
புதுக் கவிதையில்…
பிறரிடம்
பொறாமை கொள்ளாதவனுக்கு,
அதைவிடப்
பேறெதுவும் பெரிதாகயில்லை…!
குறும்பாவில்…
அடுத்தவரிடம் அழுக்காறில்லாத பண்பு
ஒருவனுக்கு,
பேறுகளிலெல்லாம் பெரும்பேறு…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மனித வாழ்வினிலே
மற்றவர் மீது பொறாமையின்றிக்
கண்ணிய மாக வாழ்வோர்கள்
காணற் குரிய பேறுகளில்,
புண்ணிய மான வாழ்விதுபோல்
போற்றுதற் கேற்ற பேறதுவாய்
எண்ணித் தேடினும் பெரிதாக
எதுவு மில்லை அறிவீரே…!
லிமரைக்கூ…
அழுக்காறில்லா வாழ்வுபெரும் பேறு,
அடுத்தவர்மீது பொறாமைகொள்ளா வாழ்விதற்கும்
பெரிதாய்ப் பேறேயில்லை வேறு…!
கிராமிய பாணியில்…
கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
அடுத்தவர்மேல பொறாமகொள்ளாத…
பொறாயில்லாதவன் வாழ்க்கதான்
ஒலகத்தில பெரிய பாக்கியம்,
எங்க தேடுனாலும் எப்புடித்தேடுனாலும்
இதவிடப் பெரிய பாக்கியமில்ல,
இதுக்கு ஒசந்த பாக்கியமுமில்ல…
அதால,
கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
அடுத்தவர்மேல பொறாமகொள்ளாத…!